Showing posts with label Geometry of selfishness. Show all posts
Showing posts with label Geometry of selfishness. Show all posts

3 Feb 2026

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

சுயநலத்தின் ஜியோமெட்ரி!

உலகத்தில் உழைக்கிறவன் கதி அவ்வளவுதான். அவன் பிழைக்கத் தெரியாதவன், அப்படியே உழைத்துக் கொண்டே கிடக்கட்டும் என்று முடிவு கட்டிவிடுகிறார்கள். மனிதர்களின் சுயநலம் இருக்கிறதே, அது ஒரு தனி டிசைன்!

சரி, நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? கூடாது. லாஜிக் பார்க்காமல், நியாய, தர்மங்கள் பார்க்காமல் அந்தந்த நிமிடம் மனதில் என்ன 'ரா-வாக' (Raw) தோன்றுகிறதோ, அப்படி வாழ வேண்டும். அவ்வப்போது மனதை 'ரீ-சார்ஜ்' செய்து கொள்ளாவிட்டால், மனப்புழுக்கம் ஏறிவிடும். அந்த இறுக்கம் இருக்கிறதே, அது ஒரு சைலண்ட் கில்லர். எப்பேர்ப்பட்ட மனுஷனையும் அப்படியே சாய்த்துவிடும்.

இந்த மனிதர்கள் படுத்தும் பாடுகளில் சில சமயம் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருக்க வேண்டியதாகி விடுகிறது. மூளைக்குச் செல்லும் சிக்னல்கள் கட் ஆனது போல் ஒரு உணர்வு. யாரோ கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால், யாரைக் கேட்டாலும் என் கைகளில் கயிறு இல்லையே என்பார்கள்.  சுற்றிலும் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது. நாம் அவர்களுக்குப் பிடித்த மாதிரி ஆக்சன் செய்ய வேண்டும்.

ஆனால், ஒரு பயலாவது நாம் என்ன நினைக்கிறோம் என்று யோசிப்பதில்லை. சுயநலம்தான் இயல்பானது இல்லையா?

இவர்களிடம் போய் தர்மத்தைக் கேட்டால் அதற்கு ஒரு பில் போட்டு அதை கேட்டவர்களுக்கே பார்சல் பண்ணி வைப்பார்கள்.

இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால், அவர்களின் கையில் இருக்கும் ரிமோட் கன்ட்ரோலுக்கு ஆடும் ரோபோட்டாக நம்மை எதிர்பார்க்கிறார்கள். இவர்களுக்குத் தேவையெல்லாம் இவர்களுக்குத் தகுந்தாற்போல நடிக்கும் நடிகர்கள்தான், நல்ல மனிதர்கள் இல்லை.

நம்மை வரைபடத்தில் அடைத்து விட்டு, நம் சிறகுகளின் நீளத்தை அளக்கப் பார்ப்பவர்கள் நம்மை மியூசியத்தில் அடைக்கப் பார்க்கிறார்கள். அங்கு நாம் பலராலும் பார்க்கப்படுவோம் என்பது உண்மைதான். நம்மால் வெளியுலகைப் பார்க்க முடியாது. யாரும் நம்மைக் காட்சிப்படுத்த வேண்டாம். அப்படி நம்மை காட்சிப்படுத்துகிறேன் என்பவர்களுக்காக உழைத்துக் கொட்டவும் வேண்டாம்.

அவ்வபோது இவர்களைக் கோபிக்கவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டுப் போய் விடுவேன் என்று பாச்சா காட்டவும் தயங்கக் கூடாது. இவர்களை விட்டு விட்டு இவர்கள் கண்ணில் படாமல் சில நாட்கள் காணாமல் போவதும் தவறு கிடையாது.

இந்த மனிதர்கள் மத்தியில் இந்த மனம் என்பது ஒரு பிரஷர் குக்கர் போன்றது. அவ்வபோது சிறு சிறு சந்தோசங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் டமால் ஆகி விடும். அவ்வபோது இவர்களை நையாண்டி செய்ய யோசிக்காதீர்கள். அப்படிச் செய்யாவிட்டால் இவர்கள் உங்களைப் போண்டியாக்கிக் கோவணாண்டி ஆக்கி விடுவார்கள்.

*****