Showing posts with label An Incomplete Life. Show all posts
Showing posts with label An Incomplete Life. Show all posts

11 Apr 2026

தி இன்கம்ப்ளீட் மேன் – ஒரு ரேமண்ட் டிராஜெடி!

தி இன்கம்ப்ளீட் மேன் – ஒரு ரேமண்ட் டிராஜெடி!

உலகிலேயே மிகச்சிறந்த சூட் தைப்பது எப்படி என்று தெரிந்த ஒரு மனிதனுக்கு, தன் வாழ்க்கையைச் சரியாகத் தைக்கத் தெரியாமல் போனதுதான் இந்தச் சதிக் காலத்தின் விசித்திரம்.

பொதுவாக, ஒருவன் ஸ்மார்ட்டாக நடந்தால் அவனை ரேமண்ட் மாடல் என்பார்கள். ஆனால், அந்த பிராண்டை உருவாக்கிய விஜய்வட் சிங்கானியாவோ, கடைசியில் மாடலாகக் கூட இருக்க முடியாமல், ஒரு வாடலாகி, பாடமாகிப்போனார்.

சிங்கானியா கட்டிய 37 மாடி ஜே.கே ஹவுஸ் மளிகைக்கடைப் பட்டியல் போல நீளமானது. 6,000 கோடி ரூபாய் அதன் மதிப்பு. அம்பானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் காஸ்ட்லி செங்கல் குவியல் அது.

ஆனால், 87 வயதில் அவர் கண்மூடியபோது, ஒரு வாடகை வீட்டில் பழைய பேன் காற்றில், ஏன்டா மகனுக்கு சொத்தை எழுதிக் கொடுத்தோம்? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆசாமி சாதாரணபட்ட ஆள் இல்லை.

லண்டனில் இருந்து அகமதாபாத்துக்கு அவரே பிளேனை ஓட்டி வந்தவர். ஓர் அசாத்திய விமானியும் கூட.

69,000 அடி உயரத்தில் பலூனில் பறந்து மேகங்களுக்கு ஹலோ சொன்னவர். ஒரு சாகசப் பிரியரும் கூட.

இந்திய விமானப்படையே இவரைப் பார்த்து சல்யூட் அடித்தது. அதெல்லாம் ஒரு காலம்.

ஆனால் பாவம், தரை இறங்கிய பிறகுதான் தெரிந்தது, ஆகாயத்தை விட தரை அதிக ஆபத்தானது என்று அவருக்குப் புரிந்தது.

இவருக்கு இரண்டு மகன்கள். பெரியவன் மதுபடி. இளையவன் கௌதம். சொத்துத் தகராறு வந்தபோது, விஜய்வட் தன் விவேகத்தைப் பயன்படுத்திப் பெரியவனைத் துரத்திவிட்டு, செல்லக் குட்டி கௌதமுக்கு மொத்தப் பங்குகளையும் 2015 இல் எழுதி வைத்தார்.

கம்ப்ளீட் மேன் பிராண்டை உருவாக்கியவர் செய்த இன்கம்ப்ளீட் காரியம் அது.

அதற்குப் பிறகு நடந்த கிளைமாக்ஸ்தான் கவனிக்கப்பட வேண்டியது.

சொத்து கைமாறியதும், பாசம் அவுட் ஆப் ஸ்டாக் ஆகிவிட்டது.

கௌதம் தன் தந்தையை நிறுவனத்தில் இருந்து துரத்தினார். அவர் கட்டிய மாளிகையிலிருந்தே அவரை வெளியேற்றினார்.

ஒரு காலத்தில் பத்மபூஷண் வாங்கிய கைகள், மகன் மீது வழக்குப் போட்டு கோர்ட் வாசலில் வக்கீல் நோட்டீஸைப் பிடித்துக் கொண்டு நின்றன.

விஜய்வட் தன் வாழ்க்கை வரலாற்றுக்கு அன் இன்கம்ப்ளீட் லைப் என்று பெயர் வைத்தார்.

பொருத்தமான தலைப்புதான்.

ஏனென்றால், ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்தில் பறந்தாலும், அவன் சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும்போது மட்டும் மூளையைக் கீழே இறக்கி வைத்துவிடுகிறான்.

உங்கள் பிள்ளைகள் மேல் உங்களுக்குப் பாசம் இருக்கலாம். ஆனால், உங்கள் சொத்துக்கள் மேல் உங்களுக்கு அதைவிட அதிகமான பக்தி இருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கம்ப்ளீட் மேன் ஆக வாழ்ந்தாலும், இன்கம்ப்ளீட்டாகத்தான் சாக வேண்டியிருக்கும்.

மறைந்த சிங்கானியாவுக்கு நம் அஞ்சலிகள்.

அவர் தைத்த சூட்கள் இன்னும் கம்பீரமாக இருக்கின்றன, அணிந்திருப்பவர்களின் பாக்கெட்டில் பணம் இருக்கும் வரை!

*****