Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

24 Jan 2025

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்!

அன்புக்காகத் துயருறுவதும் அன்பே

துயருறுவதைப் பார்க்க ஏலாது

யாருக்குப் பிடிக்கும் துயருற

துயரைச் சகித்தாலும் துயருறுவதைக் காணலும்

எவர்தான் விரும்புவார்

அன்பு கொண்டவர்களுக்கே தெரியும்

அன்புக்காகத் துயருறுவதும் அன்பே

அன்பைப் புரிந்து கொள்வது அசாத்தியம்

*****

சமரசத்திற்கான சிறு குறிப்பு

நீ அடுத்ததற்கு நகர்ந்தால்

அவர்களும் அடுத்ததற்கு நகர்வார்கள்

பயந்தால் அங்கேயே நிற்பாய்

அவர்களும் அங்கேயே நின்று

உனக்கெதிராகக் குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்

அங்கிருந்து ஒரு தாவலைச் செய்

குற்றப்பத்திரிகையை வீசி விட்டு

சமரசத்திற்குக் கொஞ்சம் இறங்கி வருவார்கள்

*****

10 Oct 2024

அன்புக்குத் தர வேண்டிய சுதந்திரம்

அன்புக்குத் தர வேண்டிய சுதந்திரம்

என்னுடைய மனதிலிருந்து விடுபடுவது

எனக்குக் கடினமாக இருக்கிறது

இப்படியே போய்க் கொண்டிருந்தால்

விரைவில் நான் சலித்து விடுவேன்

எப்போதும் உன்னிடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்

நான் நிச்சயம் அலுத்து விடுவேன்

எதற்கு நான் மாற வேண்டும்

ஏன் நான் மாற்ற வேண்டும்

மாற்ற வேண்டும் என்பது பிரச்சனை

அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்

உன்னை என்னை இந்த உலகை

அதனால் பிரச்சனை ஒன்றும் வந்து விடப் போவதில்லை

எப்போதும் மாற்றுவதா வேண்டாமா என்பதுதான் பிரச்சனை

அந்தப் பிரச்சனைக்குள் ஏன் போக வேண்டும்

இப்போது நான் எனக்குச் சலிப்பாக இருக்க மாட்டேன்

உனக்கு நான் அலுத்துப் போக மாட்டேன்

நீ நீயாக இருக்கப் போகிறாய்

நான் நானாக இருக்கப் போகிறேன்

எனக்கேற்ப நான் என்னையறியாமல்

மாறிக் கொள்வேன்

உனக்கேற்ப நீ உன்னையறியாமல்

மாறிக் கொள்வாய்

யாருக்காகவும் யாரும் மாறப் போவதில்லை

அவரவர் அவரவராக இருக்கையில்

சேர்ந்திருப்பதோ பிரிந்திருப்பதோ

யாருக்காகவும் யாரும் எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை

அவரவர் முடிவை அவரவர் எடுத்துக் கொள்வது

அன்புக்கு ஒவ்வொருவரும் தர வேண்டிய சுதந்திரம்

*****

2 Oct 2024

அன்பில் சுரக்கும் மனிதம்

அன்பில் சுரக்கும் மனிதம்

அடித்துக் கொண்டு சாவதற்கில்லை என்றால்

மனிதர்கள் எதற்காகப் பிறந்தார்கள்

படையெடுப்புகள் தாக்குதல்கள் குண்டு வெடிப்புகள்

குருஷேத்திரம் முதலாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் சிலுவைப் போர்கள்

ரஷ்யா உக்ரைன் போர் இஸ்ரேல் பாலஸ்தீனியப் போர்

இன்னும் எத்தனை எத்தனை போர்கள்

மனிதர்கள் அடித்துக் கொண்டு சாக

மனிதர்களால் சாகாமல் இருக்க முடியாதா

அடித்துக் கொள்ளாமல் இருக்க முடியாதா

சாவார்கள் பிறப்பார்கள் அடித்துக் கொள்வார்கள்

நிறைய போர்களைப் பார்ப்பார்கள்

நிறைய உருவாக்குவார்கள்

அடித்துக் கொள்ளும் விளையாட்டு

போரில் புரளும் பொழுதுபோக்கு

ஆசைத் தீனியின் அற்புத மர்மம்

நல்லவர்கள் தீயவர்களாகத் தீயவர்கள் நல்லவர்களாக

மாறுவார்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள்

கைகோர்ப்புகள் மாறும்

மாறி மாறி நடக்கும் சண்டைகள் போர்கள் உக்கிரங்கள்

நீங்கள் நாங்கள் எல்லாரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம்

இப்போது சேர்ந்திருப்போம் பிரிவுக்காகக் காத்திருப்போம்

இப்போது பிரிந்திருப்போம் பிரிவுக்காகக் காத்திருப்போம்

அது அவ்வபோது நடக்கும்

அவ்வபோது அன்பெனும் முலையிலும் பால் சுரக்கும்

மனிதம் வற்றிப் போகும் போது மானுடம் பசியாறிக் கொள்ள

*****