Showing posts with label நள்ளிரவுப் பெருங்கடல். Show all posts
Showing posts with label நள்ளிரவுப் பெருங்கடல். Show all posts

12 Nov 2026

நள்ளிரவுப் பெருங்கடல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 87

நள்ளிரவுப் பெருங்கடல்

மணிக்கூண்டு சரியாக பன்னிரண்டு மணி அடித்துவிட்டது.

திருவாரூர் நகரம் முழுவதும் உறங்கி விட்டது.

ஆனால், அவள் மட்டும் விழித்திருந்தாள்.

அலைபேசித் திரை அவளது முகத்தில் நீல நிற நிலவொளியைப் போன்ற வெளிச்சத்தைப் பரப்பியது.

மணி சரியாக 00:02.

வாட்ஸ்அப் கடைசி பார்வை இரவு 11:45.

அவன் இப்போது இணைய இணைப்பில் இல்லை.

ஆனால், இன்றைக்கு வழமையான அந்தக் கோபமோ அல்லது அலுப்போ அவளிடம் இல்லை. மாறாக, நெஞ்சுக்குள் ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஏக்கம். காற்று கூட இல்லாமல் தவிக்கும் ஒரு மலரைப் போல அவனுக்காகத் தவித்துக்கொண்டிருந்தாள்.

கல்யாணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவனது மென்பொருள் நிறுவனம் அவனைக் கனடாவுக்குத் தூக்கி எறிந்துவிட்டது.

கால மண்டல இடைவெளி அவர்களைப் பழி தீர்த்தது. அங்கே பகல் என்றால் இங்கே நள்ளிரவு.

அவள் தனது மடிக்கணினியை மூடி விட்டு மேல் மாடத்துக்குச் சென்றாள். ஐந்தாவது மாடி. கீழேயுள்ள சாலையில் ஆங்காங்கே சில மகிழ்வுந்துகளின் சிவப்பு விளக்குகள் மங்கலாகத் தெரிந்தன. திருவாரூர் காற்றில் ஒருவிதக் குளிர்மை.

அவளுக்குத் திருவள்ளுவரின் அந்த வரிகள் சட்டென நினைவுக்கு வந்தது.

“காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.”                      (குறள், 1167)

என்னே ஓர் அற்புதமான வெளிப்பாடு! காமம் என்பது வெறும் தேகத்தின் தாக்கம் மட்டுமல்ல; அது காதலின் பேரலை. அந்தப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, கரை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தவிப்பது எப்பேர்பட்ட தனிமை. உலகம் முழுவதும் உறங்கும் இந்த நள்ளிரவு யாமத்திலும், அவனது நினைவுகளால் தூங்காமல் விழித்திருப்பது நான் மட்டுமே என்ற அந்தத் தனிமை இருக்கிறதே. அது காதலின் மறுபக்கம். சுகமான வலி!

அவளின் கைப்பேசி திடீரென அதிர்ந்தது. ஒரு நிமிடம் இதயம் தொண்டைக்குள் வந்து நின்றது.

அவனது பெயர் திரையில் மின்னி, வாட்ஸ்அப்பில் காணொளி அழைப்பைக் காட்டியது.

அவள் பதறிப்போய் கைவிரலால் இழுத்து அழைப்பை ஏற்றாள். திரையில் அவன் முகம் தோன்றியது. அங்கே மதிய நேரம் என்பதால், அவன் தனது அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தான்.

“இன்னைக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சு. வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களோடு கூட்டம் முடிஞ்சு வரதுக்குள்ள கண்ணைக் கட்டிடுச்சு. நீ இன்னும் தூங்கலையா?”

அந்தக் குரல். அட்லாண்டிக் கடலைக் கடந்து, பல ஆயிரம் மைல்களைத் தாண்டி, ஒளியிழை வடம் வழியே அவளது கண்களுக்குள் வந்து விழுந்த அந்தப் புன்னகை. அந்தத் தொலைதூரக் குரலிலும் அவளுக்கான காதலின் சூடு அப்படியே இருந்தது.

“நான் தூங்கல. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்.”

“எதுக்கு கண் விழிக்கிற? நான்தான் அப்புறம் கூப்பிடறேன்னு சொன்னேன்ல.”

“பேசாதீங்க. நீங்க அங்க இருக்க, நான் இங்க இருக்க, உங்களைத் தொட்டுப் பேச முடியலங்கிற கடுப்புல இருக்கேன். உங்களுக்கு என்ன நீங்க பாட்டுக்கு அங்க ஜாலியா காபி குடிச்சுட்டே பேசிடலாம்.” அவளது குரலில் செல்லமான சிணுங்கல் கலந்த கோபம் இருந்தது.

மறுமுனையில் அவன் மெலிதாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு திரையைத் தாண்டி வந்து அவளது கன்னத்தைத் தொட்டது போல் ஒரு பிரமை.

அவன் காபி கோப்பையை மேஜையில் வைக்கும் சத்தம் லேசாகக் கேட்டது.

“காபி கசக்குது. உன்னைப் பார்க்காம குடிக்கிறதால இருக்கலாம்.” என்றான் அவன், வழக்கமான தீவிர முகத்துடன்.

அவள் உடனே விட்டுக் கொடுக்கவில்லை. “பழைய வசனம். தயவுசெஞ்சு மாத்துங்க. அப்புறம், அந்தப் பக்கத்துல என்ன சத்தம்? யாராவது இருக்காங்களா?”

“கடிகாரம் டிக் டிக்னு ஓடுற சத்தம். வேற யாரு இருக்கப் போறாங்க?”

“உங்களுக்கு எம் மேல அலட்சியம் எப்பவுமே ஜாஸ்திதான். நான் நிஜமாவே தீவிரமா பேசிட்டு இருக்கேன். நீங்க கனடா போய் எத்தனை நாளாச்சு? எனக்கு என்னவோ நூறு வருஷம் மாதிரி இருக்கு.”

அவன் சற்று யோசித்தான். “காலம்ங்றது சார்புடையது. ஐன்ஸ்டீன் சொன்னது உனக்குத் தெரியும்தானே? நீ என் கூட இருக்கும்போது ஒரு மணி நேரம் கூட ஒரு நிமிஷம் மாதிரி ஓடிடும். நீ தூரத்தில் இருக்கும்போது ஒரு நிமிஷம் கூட ஒரு வருஷமா நீளும்.”

“போதும், போதும். உங்க ஐன்ஸ்டீன் கோட்பாட்டை அப்புறம் வச்சுக்கலாம். இன்னைக்குப் மதியம் என்ன சாப்பிட்டீங்க? சரியா சாப்பிட்டீங்களா, இல்ல காபியே கதின்னு இருந்துட்டு, சாப்பிட்டேன்னு சொல்லி ஏமாத்தப் போறீங்களா?”

“பின்ன என்ன பண்றது? இங்கே சமைக்க ஆளில்லை. நீதான் வர மாட்டேன்னுட்டியே.”

“நான் வர்றதா? நான் என்ன உங்க பயணப்பெட்டியா? கூட்டிட்டுப் போறதுக்கு. இங்க ஒவ்வொருத்தரும் உங்களைப் பத்திக் கேட்டுத் தர்ற மன உளைச்சல் இருக்கே. எனக்கு யாரைக் கண்டாலும் பிடிப்பதில்லை.”

“உனக்குத்தான் எல்லார் மேலும் கோபம். பால்காரன் மேல, காய்கறிக்காரன் மேல, மளிகைக்கடைக்காரன் மேல. இந்த மடிக்கணினி மேல. ஏன், என்கிட்டேயும் சேர்த்துதான்.”

அவள் அலைபேசியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். “ஆமாம். உங்க மேலதான் ரொம்பக் கோபம். திருவாரூருக்கும் டோராண்டோவுக்கும் உள்ள தூரம் பதின்மூணாயிரம் சொச்சம் கிலோமீட்டர். இந்தத் தூரத்தை எப்போதான் காலி பண்ணப் போறீங்க?”

“நிறுவனத்துல பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறு. அதுவரைக்கும் இந்த காணொளி அழைப்பு  மட்டும்தான் நமக்குத் துணை.”

அவள் பெருமூச்சு விட்டாள். அலைபேசியில் அவள் மூச்சு வாங்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“உனக்குத் தூக்கம் வருதா?” அவன் குரல் திடீரெனக் கனிந்தது.

“இல்லை. தூக்கம் வந்தாலும் வராது.”

“ஏன்?”

“நீங்க பேசி வெச்சதுக்கு அப்புறம்தான் வரும்.”

“அப்போ வெச்சிடவா?”

“வெச்சா மட்டும் வருமா என்ன?”

“நீந்தானே சொன்னே, நான் வெச்சா வந்திடும்னு.”

“அது நீங்க என் மேல கை வெச்சா, அப்புறம் வரும். அலைபேசியை வெச்சா இல்ல.”

“அச்சச்சோ! என் பொண்டாட்டிக்கு என் மேல அவ்வளவு பாசமா? கனடாவுல இருந்து வந்த உடனே மொதல்ல உன்னைத்தான் கவனிக்கப் போறேன், கொஞ்சம் காத்திரு பொண்டாட்டி.”

“பொய் சொல்லாதீங்க. மழுப்பாம சரியா சொல்லுங்க. எப்போ வருவீங்க நீங்க?”

“இன்னும் சரியா நாலு மாசம், பதினஞ்சு நாள், ஆறு மணி நேரம் இருக்கு!”

“இப்படியா சரியா கணக்கு சொல்றது?” அவள் கண்கள் குளமாகின. ஆனால் அந்தக் கண்ணீருக்குள் ஒரு பேரன்பு ஒளிந்திருந்தது.

“பின்ன என்ன? உன்னை விட்டுப் பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட என்னால முடியல. ஆனா, வேற வழி இல்ல. இந்தத் தவிப்பு இருக்கு பாரு. இதுதான் காதலை இன்னும் அழகாக்குது. நம்மளோட தூரம் நம்ம காதலைக் குறைச்சிடாது, இன்னும் கூட்டும்தான்.” அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சில் ஒரு மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுத்தன.

அவள் மேல்மாடச் சுவரில் சாய்ந்து கொண்டு, அலைபேசியைத் தன் இதயத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள்.

“யாமத்தும் யானே உளேன்.”

“ம்... என்ன சொன்ன?”

“ஒன்னுமில்ல. திருவள்ளுவர் என்கிட்ட பேசினார். காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் அப்படின்னு சொன்னார். நான் இங்கேந்து நீந்தி வரலாம்னாலும் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், அப்புறம் அட்லாண்டிக் பெருங்கடல்ன்னு நீந்திதான் வரணும். நீந்த நீந்த கரையைக் கண்டுபிடிக்கிறதே கஷ்டம்தான் இல்லையா?”

அவன் சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டுப் புன்னகைத்தான். “வள்ளுவர் சாரியாத்தான் சொல்லியிருக்கார். ஆனா கவலைப்படாதே. சீக்கிரமே அந்தக்கரையை நாம ஒண்ணா சேர்ந்து கண்டுபிடிப்போம்.”

“எப்படி நீங்களும் நீந்தி வரப் போறீங்களா?”

“இப்படியெல்லாம் ஆகும்ன்னு தெரியும். அதுக்குத்தான் நான் நீச்சலே கத்துக்கல.”

“கத்துக்கிட்டா மட்டும் நீந்தி வந்துடவாப் போறீங்க?”

“என்ன இப்படிச் சொல்லிப்புட்டே?”

“வேறெப்படிச் சொல்வதாம்? உங்களுக்கு வேலைதான் காதலி. பதவி உயர்வுதான் பொண்டாட்டி.”

அவன் ஒரு கணம் ஸ்தம்பித்துதான் போனான். மேற்கொண்டு என்ன பேசுவதென்று புரியாமல் குழம்பிப் போனான்.

நடு இரவின் அமைதியில், அத்திரை வழியே தெரிந்த அந்தப் பரிதாபமான அவனது முகத்தைப் பார்த்தபடியே அவள் நின்றாள்.

தனிமைதான், ஆனாலும் அந்தத் தனிமையில் அவனின் காதல் நிரம்பி வழிந்தது.

அவனது தவிப்பையும் பரிதாபமான முகத்தையும் பார்க்கையில் பெருவெள்ளத்தில் நீந்தினாலும், கரையானது பக்கம்தான், அதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது.

“சரி! நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க. நானும் போய்ப் படுக்கிறேன். கனவுல வந்து என்னைச் சந்திங்க.”

“கண்டிப்பா என் அன்பு பொண்டாட்டி.”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இப்போது அவளுக்குத் தூக்கம் வர மறுக்கவில்லை; மாறாக, அவனின் அடுத்த வருகைக்கான எதிர்பார்ப்பும், காதலின் ஆழமும் அவளை அரவணைத்துக் கொண்டது.

“யாமத்தும் யானே உளேன். உன்னோடு!” மனதுக்குள் முணுமுணுத்தவாறே அவள் கண்களை மூடிக்கொண்டாள். கரை காண முடியாத அந்தப் பெருங்கடல் விடியாத இரவைப் போல விரியத் தொடங்கியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****