29 Jun 2021

மனப்போக்கின் மகத்துவம்

மனப்போக்கின் மகத்துவம்

எஸ்.கே. தான் வகிக்கும் பதவியை நினைத்த போது தன்னுடைய பதவியை நல்லதொரு பதவியாகக் குறிப்பிட முடியாது என்பது புரிந்தது. கீழே பணியாற்றும் நபர்கள் மிகவும் சுயநலம் மிகுந்தவர்களாகவும் மிகவும் அல்பத்தனம் மிகுந்தவர்களாகவும் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. அவர்களைச் சமாளிப்பது எப்போதும் எஸ்.கே.வுக்கு மிகுந்த சவால் மிகுந்ததாக இருந்திருக்கிறது.

பொதுவாகத் தலைமைப்பதவியில் இருப்பவர்கள் அதிகமாகப் பேசக் கூடாது என்றும் அதுதான் அந்தத் தலைமைப்பதவிக்கு அழகானது என்றும் எஸ்.கே. பலர் சொல்ல கேட்டிருக்கிறார். ஆனால் எஸ்.கே. அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகத் தினமும் பேசுயிருக்கிறார். பேசப் பேச என்னவாகிறது என்றால் எஸ்.கே. தன் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் எஸ்.கே. என்ன செய்ய வேண்டும் என்றால் பேச பேச கேட்டுக் கொண்டே இருந்திருக்க வேண்டும். எதிரில் இருப்பவர்களை அதிகமாகப் பேச விட அப்போதுதான் அவர்கள் அதிகமாகக் களைத்துப் போவார்கள். ஆனால் என்ன நிகழ்கிறது என்றால் எஸ்.கே. அதிகமாகப் பேசி அவர்களை விட அதிகமாகக் களைத்துப் போகிறார்.

பேச்சினால் உண்டாகும் தவறுகள் ஆரம்ப காலத்தில் தவிர்க்க முடியாது. நிறையப் பிழைகள் நேரிடத்தான் செய்கிறது. போகப் போகத்தான் இதெல்லாம் சரியாகிறது. அதுவரை இதைத் தவிர்க்க முடியாது என்பது எஸ்.கே.வுக்கும் புரிகிறது. இதெல்லாம் அனுபவங்கள்தான், அதாவது உத்தேசத் தீர்வுகள்தான் என்பதும் எஸ்.கே.வுக்குத் தெரிகிறது.

எப்படிப் பார்த்தாலும் சில நிகழ்வுகளில் கீழே இருப்பவர்களைச் சமாதானம் செய்வது போல வார்த்தைகளை விடக் கூடாது என்பது எஸ்.கே.வின் அபிப்ராயங்களில் ஒன்று. அதாவது எப்போதும் எங்கேயும் யாரையும் சமாதானம் செய்வது போலவோ, திருப்தி செய்வது போலவே வார்த்தைகளை விட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் அவர்.

எது சரியோ அதைப் பற்றி மட்டுமே பேச வேண்டும். சரி அல்லாதவைகள் பற்றிப் பேசவே கூடாது. இந்த இடம்தான் எஸ்.கே. மாட்டிக் கொள்ளும் இடம். அதாவது சரி அல்லாதவைகளைப் பற்றிப் பேசும் அந்த இடத்தைத்தான் பிடித்துக் கொள்வார்கள். ஆக எது சரியானதோ அதை மட்டும் பேச வேண்டும் என்பது எஸ்.கே.வின் அனுபவம் தந்தப் பாடம். எஸ்.கே. தவறாகக் கூட சிலவற்றில் காரியம் சாதித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்துவது என்பதை எஸ்.கே. தன்னைத் தானே பலகீனப்படுத்திக் கொள்வது போலத்தான். அது போன்ற தவற்றை இனிமேல் செய்யக் கூடாது என்று எஸ்.கே. நினைத்துக் கொள்வார்.

எஸ்.கே. பணி செய்த நாட்களுக்கு ஊதியம் பெறுவதைச் செய்யக் கூடாத குற்றத்தைச் செய்வதைப் போல நினைப்பார். ஆனால் அவருக்குக் கீழே உள்ளவர்கள் எப்படித்தான் கூச்ச நாச்சமில்லாமல் பணிக்கு வராமலேயே ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதை ஒரு உரிமை போலக் கேட்கிறார்கள் என்று யோசித்து எஸ்.கே. அசந்துப் போவார்.  அதை விட மோசமாக பணிக்கு வராமல் ஊதியம் பெறுவதை நியாயப்படுத்தி வேறு பேசுவார்கள். அதுவும் மிக நீண்ட நேரத்துக்கு எஸ்.கே. என்னவோ தப்பு செய்வது போலவும் அவர்கள் என்னவோ மிக நியாயத்தோடும் தர்மத்தோடும் அதைக் கேட்பது போலவும் பேசுவார்கள்.

கயவர்கள் எப்போதும் கயவர்கள்தான் என்று எஸ்.கே. நினைத்துக் கொள்வார். அவர்கள் அவர்களின் சுயநலத்தையும் ஆதாயத்தையும்தான் நியாயம் என்று பேசத்தான் செய்வார்கள். மற்றவர்களின் நியாய தர்மங்கள் எல்லாம் அவர்களுக்கு அநியாயமாகத்தான் படும். அவர்களிடம் போய் வேறு எதையும் பேச முடியாது. பேசவும் வேண்டியதில்லை. அமைதியாக இருந்து விடுவதே அனைத்திற்குமான தீர்வு என்றும் நினைத்துக் கொள்வார். பொறுமையாக இருப்பதால், வேறு பல நல்ல தீர்வுகளும் தோன்றும் என்பதும் எஸ்.கே.வின் கருத்துகளில் ஒன்று. அப்போது பொறுமையான கருத்துகளுக்கு ஏற்ப தோன்றியதை அதற்கேற்றாற்போல் செயல்படுத்தலாம் என்பது எஸ்.கே.வின் நோக்குகளில் ஒன்று.

எஸ்.கே. பல நேரங்களில் இதுதான் தீர்வு, இதற்கு மேல் தீர்வில்லை என்ற நம்பிக்கையின்மையில் செயல்பட்டவர்தான். அப்போது அவர் நிறைய கோபப்பட்டிருக்கிறார். வெகுண்டெழுந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார். காலம் அவருக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அது தந்த பாடத்தின் அடிபப்டையில் எல்லாவற்றிற்கும் மேலும் தீர்வுகள் இருக்கிறதென்றால் எதற்குக் கவலை அடைய வேண்டும் அல்லது மன உளைச்சல் அடைய வேண்டும் அல்லது கோபமடைய வேண்டும் அல்லது வெகுண்டெழ வேண்டும் என்ற மனநிலையைத் தற்போது அடைந்திருக்கிறார். பொறுமையாக அதிர்ச்சியடையாமல் நிதானமாக இருக்க முடியுமானால் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்பதைத் தற்போது புரிந்து கொண்டிருக்கிறார். அது சரி, இதுவரை எஸ்.கே. எதிர்கொண்ட சூழ்நிலைகள் அனைத்தையும் அவர் சாமர்த்தியத்தால்தான் எதிர்கொண்டாரா என்ன? ஏதோ ஒரு சிலவற்றைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டிருப்பார். பலவற்றை அதன் போக்கில் அப்படியே ஏதோ எதிர்கொண்டிருப்பார். அப்படித்தான் முடியும் ஒரு சராசரியான மனிதருக்கு.

எஸ்.கே.வைப் பொருத்தவரையில் அவர் எப்போதும் சொல்வது இதைத்தான், “எல்லாவற்றையும் நான் மட்டுமே தீர்த்து விட முடியாது. அதற்காக அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியாது. அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வதால் மன உளைச்சல் அடைந்து கொண்டும் இருக்க முடியாது. பொறுமையாக இருப்பதன் மூலமாகத் தோன்றும் சரியான தீர்வை நோக்கி காத்திருப்பதைத் தவிர பிரமாதமான வழிகள் ஒன்றுமில்லை. காத்திருக்கும் நேரத்தில் ஏதோ ஒன்று மர்மமாக நடந்து எல்லாவற்றையும் எப்படியோ சரி செய்கிறது. அதற்காக நான் செயல்படாமல் இருக்கவோ, செயல்பாட்டைக் குறைத்துக் கொள்ளவோ முடியாது. அதற்கு வரும் இடையூறுகளையும் பிரச்சனைகளையும் பொறுமையாக இருக்கும் வழியில் மூலமாகத்தான் தீர்வு காண வேண்டும். எதிரான வழியில் சென்று எவ்வித தீர்வையும் கண்டு விட முடியாது.”

சமீப காலமாக எஸ்.கே. இப்படியும் ஒரு கருத்தை உதிர்த்துக் கொண்டு வருகிறார். அதாகப்பட்டது என்னவென்றால், ‘மனிதருக்கு மனிதர்கள் யாரும் பிரச்சனையில்லை. மனப்பார்வை பொதுவானதொரு பிரச்சனை. அதைச் சரி செய்துகொண்டால் போதும். பிரச்சனைகளுக்கான தீர்வு குபீர் என்று வந்து குதித்து விடும். அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் எதிர்கொண்டு விட முடியும். உண்மையில் எந்த ஒரு மனிதரிடமும் வேறு யாரும் பிரச்சனை செய்து விட முடியாது, அவர்தம் மனப்போக்கைத் தவிர. ஒருவரின் மனப்போக்குதான் அவரிடம் பல்வேறு ரூபங்களில் பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறது. அதைச் சரி செய்து கொண்டு விட்டால் உலகில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.’

*****

அலையென்பது கரைக்குள் அடைபட்ட கைதியன்றோ!

அலையென்பது கரைக்குள் அடைபட்ட கைதியன்றோ!

குளம்.

அலை அலையாக அலைகளை அனுப்பிக் கொண்டிருந்தது.

மனம்.

அதுவும் அப்படித்தான் செய்து கொண்டிருந்தது.

எஸ்.கே.வின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. சமயத்தில் கடல் அலைகள் போலவும், சமயத்தில் குளத்தில் எழும் அலைகள் போலவும் இருந்தது. ஒரே நேரத்தில் மனம் எப்படி கடலாகவும் குளமாகவும் மாறுகிறது என்று எஸ்.கே.வுக்குக் குழப்பமாக இருந்தது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எஸ்.கே.வின் மனம் இரண்டுமாக மாறிக் கொண்டு இருந்தது.

ஒன்று தவறு என்றோ அல்லது தேவையில்லை என்றோ தெரியும் போது அதை மனதைச் சமநிலைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு செய்யத் தேவையில்லையா என்ற அலை எழுந்த போது எஸ்.கே. குளத்தில் இறங்கிய எருமையைப் போல இருந்தார்.

யாரும் தனக்காக உதவப் போவதில்லை எனும் போது யாருக்காகவும் தான் உதவ வேண்டிய அவசியமில்லை என்று நினைத்த போது கடலில் சீறியெழும் சுறாவைப் போல வேகம் காட்டினார். 

“நான் என்ன நினைக்கிறேன் என்றால் பரிதாபத்தை உருவாக்கிக் கொண்டால் எப்படியும் தப்பித்துக் கொள்ளலாம் என்று. அந்தப் பரிதாபத்தை உருவாக்கிக் கொள்ளவே ஏதோ செய்கிறேன். ஆனால் பரிதாபப்படும் வண்ணம் இருப்பவர்களை வசமாக மாட்டி விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்ற உண்மையை நான் உணர மறுக்கிறேன். மற்றொன்று என்னவென்றால் என்னை நல்லவன் என்று காட்டிக் கொண்டால் நான் சொல்வதை நம்புவார்கள் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு நிலையை உருவாக்கிக் கொள்வது தேவை இல்லாதது. ஒவ்வொருவரும் அவரவர் மனம் சொல்வதைத்தான் நம்புவார்கள். அவர்களுக்குச் சாதகமாக இருப்பவர்களை அவர்களுடைய மனம் நல்லவன் என்றும் சாதகமாக இல்லாதவர்களைக் கெட்டவர்கள் என்றும் சொல்லும். என்னதான் முயற்சி செய்தாலும் அவரவர் மனதில் நினைப்பதை மாற்றுவது என்பது சுலபமானதன்று. விசயங்கள் இவ்வளவு இருக்கும் போது இவ்வளவையும் கோர்த்துச் சிந்திக்க வேண்டும். மனம் போன போக்கில் சிந்திக்கக் கூடாது. என்னுடைய பிரச்சனையே மனம் போன போக்கில் சிந்திப்பதுதான். மனம் போன போக்கில் சிந்திப்பதையும் அதில் திருப்தி காண்பதையும் நான் விரும்புகிறேன். இதனால்தான் நான் தடுமாறுகிறேன்.” எஸ்.கே. தனக்குத் தானே முனகிக் கொண்டார். அந்த முனகல் குளத்தில் அலைகளின் சத்தத்தைப் போல இருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளின் சத்தத்தைப் போல இல்லை.

வெகு சீக்கிரத்தில் கடல் அலைகளின் சீற்றம் எஸ்.கே.வின் மனதில் உண்டானது. அது சிறிது தணிந்தது போல தோன்றிய போது ஒரு தத்துவ ஞானியைப் போல சிந்திக்க ஆரம்பித்தார் எஸ்.கே. அவர் உபதேசிக்கும் ஞானியைப் போல சிந்திக்க ஆரம்பித்தார். தணிதலின் அழகு அது. அந்த அழகில் எஸ்.கே. பின்வரும் வார்த்தைகளாய் வழிந்தோடினார்.

            மனம் என்பதே மனிதன் உருவாக்கிக் கொள்வது. அதில் மனிதன் சிக்கித் தடுமாறுவதுதான் வேடிக்கை. ஆசையின் காரணமாகவும் அச்சத்தின் காரணமாகவும் இந்த வேடிக்கை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் முடிவு என்று அழுத்திப் பேசுவதால் தவறொன்றும் ஆகி விடப் போவதில்லை.

            மனிதரின் மனதைப் பல நேரங்களில் குற்றவுணர்ச்சி வாட்டுகிறது. அந்தக் குற்றவுணர்ச்சியின் காரணமாக ஏதேதோ சிந்தித்துத் தடுமாற வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அந்தக் குற்றவுணர்ச்சியால் வருத்திக் கொள்வதை ரத்தம் வழிய சொரிந்து கொண்டு சுகம் காண்பதைப் போல செய்து கொண்டிருக்கிறது மனம்.

            ஒரு வேண்டுதல் வைக்கப்படுகிறது என்றால் அதைச் செய்வதும் செய்யாததும் ஒருவரது முடிவுதான். ஒருவேளை வைக்கப்படும் வேண்டுதலை செய்யாமல் போனால் மற்றவர்கள் சம்பந்தப்பட்டவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தவறாக நினைத்து விடுவார்களோ? என்று நினைத்து தடுமாறினால் அது ஒரு வகை பயந்தாங்கொள்ளித்தனம். இந்தப் பயந்தாங்கொள்ளித்தனம் இருக்கும் வரையில் பிரச்சனைக்கு முடிவு கிடையாது. இந்தப் பயந்தாங்கொள்ளித்தனம் எப்படி உருவாகிறது என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மனம் முடிவு கட்டிக் கொள்ளும் கூண்டுக்குள் அடைபட்ட குறுகிய முடிவெடுக்கும் தன்மையால் உண்டாவது. குறுகிய முடிவுக்குள் உழலும் மனம் பயப்படுகிறது. அதை எப்படி வேண்டுமானாலும் சமாளித்துக் கொள்ளலாம், அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவுக்கு மனம் வந்து விட்டால் அதனுடைய பயம் ஓடி விடும். அதாவது வேறு வகையில் இதைச் சற்று மாற்றிச் சொன்னால் எது நடந்தாலும் அதை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டால் பயமானது ஓடி விடுகிறது. ஆக எதைப் பேசுவதற்கும் எதைச் செய்வதற்கும் கூச்சமோ தயக்கமோ இல்லையென்றால் பயமும் இல்லை. நியாயம், தர்மம் என்பதெல்லாம் கூண்டுக்குள் அடைப்பட்டுக் கொண்வனின் பேச்சாகப் போய் விடுகிறது. முதலில் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் இந்தக் கட்டுப்பெட்டித்தனத்தைத் தூக்கி எறிந்து விட வேண்டும்.

எது வசதியோ, எது சுகமோ அதைச் செய்யக் கூடாது. எது சரியோ அதைத்தான் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு ஏத்தப்படி பதில் சொல்ல முடியாதது ஒரு பிரச்சனையே அல்ல. சில நேரங்களில் ஏன் பல நேரங்களில் அவ்வாறு சொல்ல முடியாது என்பதுதான் எதார்த்தம். அதற்காகக் கலங்க வேண்டியதில்லை. பதில் சொல்ல முடியாத போது பவ்வியமாகப் புன்னகை பூத்த முகத்துடன் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றும் பெரிதாக யோசிக்கவோ, பிரயத்தனமோ பட வேண்டியதில்லை. புதிதாக ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிற நிலைமை வரும் போது பார்ப்போம் என்றோ பார்க்கலாம் என்று மட்டுமோ சொல்லி வைக்கலாம். வேறொன்றும் சொல்லத் தேவையில்லை. மிக எளிதான வழிமுறை இது.

மனதுக்கு என்ன பிரச்சனை என்றால் அந்தச் சூழ்நிலையைத் திறம்பட எதிர்கொள்ள தெரியவில்லை என்பதுதான். எதையும் திறம்பட எதிர்கொள்ள தேவையில்லை. ஒரு சூழலைச் சராசரியாக எதிர்கொண்டாலே போதுமானது. அதற்கு மேல் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.

மனம் போன போக்கிலான சுகத்தை மனிதர்கள் நாடிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகிக் கொண்டிருக்கிறது. இது ஒரு வகையால் பயத்தால் நேரிடும் பிரச்சனை.

எதாவது பிரச்சனை என்றால் மனிதர்கள் துணைக்கு வர மாட்டார்கள் என்று நினைத்து வருத்தப்பட முடியாது. ஏனென்றால் பிரச்சனை இல்லாமல் இருப்பதை விரும்புபவர்களிடம் போய் பிரச்சனைக்குத் துணை வர வேண்டும் என்று கேட்க முடியாது. அவர்களுக்கு அந்தச் சாதாரண பிரச்சனையானது அவர்களது பிரச்சனையாக இருப்பதால்தான் அதிலிருந்து மீள வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும் இந்தப் பிரச்சனையானது அவர்களது சோம்பேறித்தனத்தாலும் கடமையாற்றுவதிலிருந்து ஏமாற்றும் குணத்தாலும் உண்டானதாகக் கூட இருக்கலாம். அப்படி சோம்பேறித்தனமும் கடமையாற்றுவதிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்கள் அடுத்தவர்கள் பிரச்சனை என்றால் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி இருக்கவே நினைப்பார்கள். அது மனிதர்களது சுபாவம். மனிதர்களது சுபாவத்தை எடுத்துக் கொண்டால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு அவர்களது உதவி கிடைக்காமல் போனால் அதைப் பெரிதுப்படுத்தாமல் போய் விடுவது உத்தமம். அப்படித்தான் பல நேரங்களில் மனிதர்களுக்கு மற்றவர்களது உதவி கிடைக்காமல் போகும் அவர்களையும் அறியாமல் அதைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. அப்படித்தான் எல்லாவற்றிலும் நடக்கும். மேலும் உதவி என்று கேட்டுப் போனால் அறிவுரையைச் சொல்வார்களே தவிர உதவியைச் செய்ய மாட்டார்கள். உதவிக் கேட்கும் போது அதைச் செய்வதற்கான ஆற்றலும் துணிவும் அவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று சொல்லலாம். அதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்பது சிக்கலான விவாதத்திற்குரியது. உதவி கேட்டுச் சென்ற பல பொழுதுகளில் ஆற்றலும் துணிவும் இல்லாத மனிதர்களிடமே போய் நின்றிருக்கலாம். அதனால் எந்த உதவியும் கிடைக்காமல் போயிருக்கலாம். மனதுக்குப் பயமில்லை என்றால் யாரிடமும் அது உதவிக் கேட்காது. ஆனால் உதவிகள் தேடி வரும். வேண்டாம் என்றாலும் தேடி வரும். அது தைரியத்திற்கு வழங்கப்படும் பரிசு என்றும் சொல்லலாம்.

அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தாலும் எங்கே சென்று விட முடியும். குளத்திற்குக் கரை இருப்பதைப் போலக் கடலுக்கும் இருக்கிறது. அதன் கரை கண்ணுக்குள் அடங்காத வகையில் பெரிதாக இருக்கலாம். ஆனால் கடலுக்குக் கரை இருக்கிறது. கரையைத் தாண்டி எங்கேயும் சென்று விட முடியாது. ஆனால் அந்தக் கரைக்குள் எவ்வளவு வேண்டுமானாலும் ஆட்டம் போடலாம். துள்ளிக் குதிக்கலாம். கரையை உடைத்தும் பார்க்கலாம். எத்தனை காலம் உடைத்துக் கொண்டு வெளியேறிக் கொண்டு இருக்க முடியும்? கடல் என்றாலும் குளம் என்றாலும் இறுதியில் கரைக்குள் அடங்கித்தான் ஆக வேண்டும். எஸ்.கே.வின் சிந்தனைகள் ஒவ்வொன்றாக அடங்குவது போல பட்டது. என்னதான் அலைகள் என்றாலும் அது கரைக்குள் அடைபட்ட கைதிகள் அன்றி வேறில்லைதானே!

*****

27 Jun 2021

புளிப்புக்காரனின் ஒரு நாள் பொழுது

புளிப்புக்காரனின் ஒரு நாள் பொழுது

            பொதுவாகச் சாப்பாட்டைப் பொருத்த வரையில் எஸ்.கே. கோபப்படுவதில்லை. அன்று வந்து கோபத்தில் சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி எறிந்து விட்டார். சாப்பாடு தட்டுப் பறந்தது அவரது வாழ்க்கையில் அது முதல் முறை. வர வர சாப்பாடு எஸ்.கே.வுக்குப் புளிப்பாக மாறிக் கொண்டிருந்தது. அரைத்த மாவைப் புளிப்பதற்கு முன் கொடுத்தாலும் புளிக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தார். ஏன் எதைச் சாப்பிட்டாலும் அது தாங்க முடியாத புளிப்போடு மாற ஆரம்பிக்கிறது என்று புரியவில்லை. கைப்பிடி சர்க்கரையை அள்ளிக் கொடுத்தாலும் புளிக்கிறது என்று சொல்லாத குறையாக எஸ்.கே. ஆகிப் போனார்.

எவ்வளவோ முறை வீட்டில் சொல்லிப் பார்த்து விட்டார் எஸ்.கே. வீட்டில் கேட்பதாகத் தெரியவில்லை. அதற்காகக் குடிக்கின்ற தண்ணீர் வரை புளிக்கிறது என்று சொன்னார் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? நேற்று இரவு பிரிட்ஜைத் திறந்தால் அதற்குள் ஐந்தாறு ஐஸ்கிரீம்கள். குளிர்ச்சி என்றால் அப்படி ஒரு குளிர்ச்சி. எடுத்துக் கொஞ்சம் நாக்கில் வைத்துப் பார்த்தார். புளிப்பென்றால் புளிப்பு தாங்க முடியாத புளிப்பு. “ஐயோ! புளி… புளிப்பு!” என்று என்னவோ வீட்டில் பிசாசைப் பார்த்தது போன்று கத்தி விட்டார் எஸ்.கே. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வருவதற்குள் அத்தனை ஐஸ்கிரீம்களையும் கை அலம்பும் தொட்டியில் கொட்டித் தண்ணீரைத் திறந்து விட்டார். கழிவறைக்குள் செல்லும் மலத்தைப் போல் அத்தனையும் தொட்டியில் தண்ணீரின் ஊடாக ஓடி உள்ளே கலந்து ஓடிப் போனது. இப்படியாக ஐஸ்கிரீமைத் தூக்கிக் கை அலம்பும் தொட்டியில் போட்ட முதல் ஆளாக ஆனார் எஸ்.கே.

ஓடி வந்துப் பார்த்தவர்கள் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதற்குள் பிரிட்ஜ் உள்ளே இருந்த ஐஸ்கிரீமை விட மோசமாக உறைந்துப் போனார்கள். ஐஸ்கிரீம் போன இழப்பில் குழந்தை ஒன்று அழ ஆரம்பித்து விட்டது. அதை எப்படிச் சமாதானம் செய்வதென்று புரிவதற்குள் எஸ்.கே.வின் கோபத்தை எப்படித் தணிப்பது என்பது எல்லாருக்கும் குழப்பமாக இருந்தது.

எஸ்.கே. தன் பிரசங்கத்தை ஆரம்பித்திருந்தார்.

            “சோம்பேறிகளால் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடியாது. நீங்கள் அலுத்துக் கொண்டேதான் ஒவ்வொரு வேலையையும் செய்வீர்கள். அதற்காக எத்தனைப் பேரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது? வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் மாபெரும் சோம்பேறிகளாக ஆன பின் அவர்களிடம் எதையும் நான் எதிர்பார்க்க முடியாது. உணவை உருவாக்குவது என்பது மாபெரும் செயல். அச்செயலை வீட்டில் இருக்கும் சோம்பேறிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆமாம், எதிர்பார்க்க முடியாது. உணவைத் தூய்மையான பாத்திரத்தில் தயாரிக்க வேண்டும். அதை முறையாகச் சூடு செய்ய வேண்டும். போதுமான வெப்பத்தை அடைந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். இறக்கி வைத்ததை முறையாகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பூனையோ, நாயோ தின்னும்படி அஜாக்கிரதையாக விட்டு விடக் கூடாது. பாத்திரத்தை அலம்ப அலுப்புப்பட்டுக் கொண்டு அலம்பாத பாத்திரத்தில் சமைத்ததை எடுத்து வைத்து விடக் கூடாது. அதே பாத்திரத்தில் எடுத்து வைத்தால் ஒன்று புளிச்ச நாற்றம் தாங்க முடியாது அல்லது ஊளை நாற்றம் தாங்க முடியாது. இதுதான் பிரச்சனை. உணவைச் சமைத்தவுடன் எடுத்து வைத்து விட முடியாது. அது கொஞ்சமாக ஆறிய பின்தான் எடுத்து வைக்க முடியும். இதையெல்லாம் வேலை மெனக்கெட்டுப் பார்க்க வீட்டில் இருக்கும் சோம்பேறிகளுக்கு ஏலாது. அதற்காகச் சோம்பேறிகளே உங்கள் மேல் குறைபட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. நீங்கள் அப்படித்தான் என்பது தெரிந்த சேதியாகி விட்ட பிறகு உங்களை என்ன சொல்வது? உங்களை என்ன செய்வது? எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் சோம்பேறிகளைத் திருத்த முடியாது.”

            என்னடா எஸ்.கே. இப்படிப் பேசுகிறாரே என்று எல்லாருக்கும் குழப்பம். எஸ்.கே. பேசியதில் பொருள் பொதிந்த யாதோன்றும் இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் பொருள் பொதிந்த ஒன்றைப் பேசுவதாகக் கோர்வையாகப் பேசியிருந்தார் எஸ்.கே. அதெப்படி பொருளற்ற ஒன்றைப் பொருளுள்ளது போல எஸ்.கே.வால் பேச முடிகிறது என்று அது ஒரு புரியாத புதிராக நீள ஆரம்பித்தது.

            “இதற்காகக் கோபப்பட்டிருக்க வேண்டியதில்லை. அந்தக் கோபத்தில் சர்வ நாசம்தான் விளைகிறது. எந்தப் பயனும் விளைவதில்லை. வீட்டில் இருந்த ஐஸ்கிரீம் அனைத்தும் கெட்டதுதான் மிச்சம். அவர்கள் மேல் கோபம் வரக் கூடாது என்றால் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படித்தான் இருந்தேன் இவ்வளவு நாளும். ஆனால் ஏதோ ஒரு கோபத்தில் அப்படிச் செய்யும்படி ஆகி விட்டது.” எஸ்.கே.வின் உள்மனம் இப்படியும் நினைத்துக் கொண்டது.

            இவ்வளவு நடந்த பிறகும் தன்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது போனது எஸ்.கே.வுக்கு ஓர் அதிசயத்தைப் போன்று தோற்றமளித்தது. வீட்டில் இனி எதைச் சமைத்தாலும் அதைத் தூக்கிக் கீழே ஊற்ற வேண்டும் என்று ஆத்திரம் கொப்புளித்துக் கொண்டு வந்தது. அதை தன்னால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பது எஸ்.கே.வுக்குப் புரிந்தது. அதே நேரத்தில் இதில் இந்த அளவுக்குக் கோபம் கொள்ள என்ன இருக்கிறது என்றும் எஸ்.கே.வுக்குப் புரியவில்லை. எஸ்.கே.வின் கோபம் விண் விண் தெறித்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு என்ன செய்வது, என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக வெகு அமைதியாக எல்லாரும் கலைந்த போது எஸ்.கே.வுக்கு யார் மேல் கோபப்படுவது என்று தெரியவில்லை.

            எஸ்.கே. மறுபடியும் பிரிஜைத் திறந்து ஊறுகாய் பாட்டிலை எடுத்து நாக்கில் வைத்து ஓர் இழுப்பு இழுத்துப் பார்த்தார். துரதிர்ஷ்டவசமாக அது இனித்தது. ஏதோ நினைப்பில் ஜாம் பாட்டிலை எடுத்து வாயில் வைத்து விட்டோமோ என்று மறுபடியும் பார்த்த எஸ்.கே.வுக்கு அது ஊறுகாய் பாட்டில்தான் என்பது நன்றாகத் தெரிந்தது.

*****

மனச்சரக்கு ஒரு கால் கிலோ

மனச்சரக்கு ஒரு கால் கிலோ

எஸ்.கே. பத்து நாள்களுக்கு ஒருமுறை தேவையற்ற மன உளைச்சலில் சிக்கிக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏதாவது குழப்பம் ஆட்டிப் படைக்கிறது.

அவர் மனம் ஏன் உளைச்சலுக்குள் செல்ல வேண்டும்? வேண்டாம் என்றால் கேட்க கூடியதா மனம்? ஒரு பிரச்சனையைச் சுலபமாகத் தீர்க்கும் உத்தி எஸ்.கே.வின் மனதிடம் இருக்கிறதா என்றால் இல்லை. எல்லாவற்றையும் சுற்றி விட்டுக் குழப்பி விட்டு விடுகிறது. இதில் கேள்விப்படுகின்ற நமக்கே இவ்வளவு பிரச்சனை என்றால் எஸ்.கே.வுக்கு எப்படி இருக்கும்? எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

மற்றவர்களிடம் பேசி அதன் மூலம் மன அமைதி பெறலாம் என்று நினைக்கிறார் எஸ்.கே. அவர் வரையில் அது ஒத்து வராது. அவருக்கு சரக்குதான். சரக்கை அடிக்க அடிக்கத்தான் மன அமைதி.

எஸ்.கே.வின் மனம் அடுத்தது அடுத்தது என்று விரைந்து கொண்டே இருக்கிறது. அதற்கு எதிலும் ஆர்வம் இல்லை. அதன் காரணமாக ஏதோ எல்லாவற்றையும் முடித்தால் போதும் என்று நினைக்கிறது. குடிக்கின்ற சரக்கு அதற்கு நிரம்பவே துணை புரிகிறது.

இந்த மனம் ஏன் தேவையில்லாமல் குழப்பி எடுக்கிறது என்றே புரிவதில்லை எஸ்.கே.வுக்கு. சொல்வதையும் கேட்காது. ஆனால் சரக்கடித்தால் கேட்கத் தொடங்கி விடும்.

எஸ்.கே.வுக்கு மனம் சரியில்லை. மீண்டும் மீண்டும் உளைச்சலுக்குள் கொண்டு சென்றால் பாவம் எஸ்.கே. என்ன செய்வார்? சாதாரண நினைப்புக்கே இப்படி என்றால்... ஆழ்ந்து யோசித்தால் பைத்தியம் பிடித்தது போலாகி விடுகிறது எஸ்.கே.வுக்கு. சாதாரண யோசனையே முடியுமா என்ற அச்ச உணர்வு எஸ்.கே.வுக்கு ஏற்படுகிறது. இந்த அளவோடு மனதிலிருந்து வெளியேறிக் கொள்வதுதான் நல்லது என்று படுகிறது. ஆனால் அதற்கு அதில் வாய்ப்பில்லை. எஸ்.கே.வின் கர்மவினை அவ்வளவுதான் என்று ஏற்றுக் கொள்வதே இவ்விசயத்தில் நல்லது என்று படுகிறது. வேறு மனதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பிடிக்கவில்லை என்று விவாகரத்தா செய்ய முடியும்? அல்லது பிடிக்கவில்லை என்று தப்பித்தா ஓட முடியும்? வாய்ப்பில்லை. அதனோடு வாழ்ந்து அதனோடு சாவதைத் தவிர வேறு வழியில்லை.

மனதோடு வழக்குத் தொடுக்கலாம் என்றால்... இது போன்று வழக்குத் தொடுத்து அலுத்துப் போயிற்று. மனம் ஒன்றை முடிவு செய்து விட்டால், அதை யாரைக் கேட்டு முடிவு செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்காக முடிவெடுக்கும் அதிகாரத்தை யார் வழங்கியதோ? அப்படித்தான் மனதின் விசயத்தில் மனிதன் அமைதி பெறக் கூடாது என்று யாரோ சதி செய்து விட்டார்கள். அது அதுதான் அந்த அமைதி எஸ்.கே.வுக்குக் கிடைக்கவும் இல்லை. இதை எஸ்.கே. ஏற்றுக்கொள்ளாவிட்டால் வன்முறையில்தான் ஈடுபட வேண்டியிருக்கும். எதற்கு அந்த வன்முறை? ஒரு பாட்டில் சரக்கு வன்முறையை எப்படியோ தணித்து விடுகிறது. ஆனால் பலருக்கோ ஒரு பாட்டில் சரக்கில்தான் வன்முறையே துவங்குகிறது. அதுவும் ஏனென்று எஸ்.கே.வுக்குப் புரிவதில்லை. எஸ்.கே.வைப் பொருத்தமட்டில் வன்முறையைத் தணிக்கும் மகத்தான வடிவாகச் சரக்கைப் பார்க்கிறார்.

எல்லாவற்றையும் மாற்றி சும்மா விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக எஸ்.கே. அடிக்கடி சரக்கை நாடுகிறார். அவரை மனம் ஏமாற்றியிருக்கிறது. சரக்கு ஏமாற்றியதில்லை. எப்போதெல்லாம் அவர் மனநிலை அவருக்கு ஏற்றதாக இல்லையோ அப்போதெல்லாம் சரக்கைக் கொண்டு தனக்கு ஏற்றாற்போல் மாற்றியிருக்கிறார். சரக்கை அடித்தால் அவர் மட்டுமல்ல அவர் மனம் நிலைகுலைந்து போவது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேறு காரணங்களும் இருக்கக் கூடும். ஆனால் அது குறித்து அவ்வளவு துல்லியமாகத் தெரியவில்லை.

எஸ்.கே.வைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கு அற்றவர்களாக இருக்கிறார்கள். ஒன்றுக்கும் ஆவாத விசயங்களை ஆவது போல பேசி வெட்டிப் பொழுதைக் கழிப்பவர்களாக இருக்கிறார்கள். எஸ்.கே.வை உசுப்பி விட்டு அவர்கள் குளிர்காய்கிறார்கள். அதில் எஸ்.கே. மிகவும் ரணப்பட்டுப் போகிறார். ரணப்பட்டுப் போனால் என்ன? அதை ஆற்றும் மருந்ததாகச் சரக்கு இருக்கிறது.

மற்றவர்களிடம் அன்பாகப் பழகுவது, அறிவார்ந்த முயற்சியில் ஈடுபடுவது, கௌரவத்திற்காகக் கொஞ்சம் மெனக்கெடுவது, நியாயமாக நிற்க முனைவது என்று இவைகளில் எஸ்.கே. அனுபவித்த மன உளைச்சல் இருக்கிறதே! சொல்லி மாளாது.

உண்மையில் அன்பும் பண்பும் மாபெரும் மன உளைச்சலாக இருக்கும் என்பதால்தான் அது கைகூடுதல் ஆகாமல் தடையாகிறதா என்று கூட யோசித்திருக்கிறார் எஸ்.கே. அன்பிலிருந்து பிறக்கும் துரோகங்களும், பண்பிலிருந்து உண்டாகும் அடிமைத்தனமும் எஸ்.கே.வைக் களைத்துப் போகச் செய்து விட்டன.

தன் வாழ்வில் நற்பண்புகளுக்காக அன்றி வேறெதெற்கும் எஸ்.கே. அந்த அளவுக்கு மன உளைச்சலோடு போராடியதில்லை. கெட்டவனாக இருக்கும் போது கூட அவர் மனம் அவரைப் பாடாய்ப் படுத்துவதில்லை. உண்மையில் அது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. நல்லவனாய் மாற முயற்சித்தால் போதும் அதுவரை எங்கிருந்ததோ என்று தெரியாத மனம் எப்படியோ முன் வந்து விடுகிறது. கலவரத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகிறது.

எதிலும் மனம்தான் முக்கியம் என்று நினைக்கிறார் எஸ்.கே. மற்றவர்களின் வாய் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதனால் எந்தப் பயனும் இல்லை. வேறு வழியில்லை என்பதால் சுற்றி இருப்பவர்களின் அத்தனை பேச்சுகளையும் கேட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும். அவைகளுக்குப் பிரதிவினை ஆற்றாமல் இருப்பதுதான் உருப்படாத பேச்சுகளுக்கு கொடுக்கும் சரியான பதிலடி. இதில் கெட்டதை ஆற்றினால் பயந்து கொண்டு எதையும் பேச மாட்டார்கள். நல்லததை ஆற்றினால் அதற்கு ஆயிரத்தெட்டு விமர்சனத்தைப் புரிவார்கள். எப்படித்தான் அவ்வளவு விமர்சனங்களும் அவர்களது வாயிலிருந்து புறப்பட்டு வருகிறதோ? ஒவ்வொருவரின் மனமும் நல்லவற்றுக்குத்தான் எதிரியாக இருக்கிறது போலும்.

எஸ்.கே.வுக்கு எல்லாம் உளைச்சலின் வடிவாகத்தான் வருகிறது. அதுவே அவருக்கு ஏற்ற தலைச்சுழியாக இருக்கிறது. அதுவே அவருக்கான அமைப்பு முறையாக இருக்கட்டும் என்று நினைப்பதைத் தவிர சுற்றியுள்ளவர்களாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. சரக்கை அடிப்பதன் மூலம் இந்த உலகிலிருந்து தப்பி ஏதோ ஓர் உலகுக்குச் செல்கிறார். அந்த ஏதோ ஓர் உலகம்தான் சக மனிதர்களால் காப்பாற்ற முடியாத ஏதோ ஒன்று அவரைக் காப்பாற்றுகிறது. இந்த நிஜ உலகு அவரை அழிக்கவேச் செய்கிறது என்பது அவரது பொன்னான கருத்துகளில் ஒன்றாக ஆகி விட்டது.

மனதுக்குப் பிடிப்பது அறிவுக்குப் பிடிப்பதில்லை. அறிவுக்குப் பிடிப்பது மனதுக்குப் பிடிப்பதில்லை. மனதுக்கும் அறிவுக்கும் இடையில் இப்படித்தான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னப்படுபவன்தான் மனிதன், குறிப்பாக இந்த எஸ்.கே என்று அவர் பலமுறை கூறியிருக்கிறார்.

எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். சோர்ந்து போய் விடக் கூடாது. பிடிக்காத ஒன்றையேப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பதை விட பிடிக்கின்ற மற்றொன்றில் மனதை மாற்றிச் செலுத்தி இன்னொன்றில் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இயக்கம்தான் வாழ்க்கை. இப்படி எதையாவது உளறிக் கொண்டுதான் எஸ்.கே. தனது சரக்கு உலகில் ஆழ்ந்து இருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அதில் உண்மை இருப்பதாகவும் தோன்றும். மாயங்கள் ஒளிந்திருப்பதாகவும் தோன்றும். அது அவரவர் பார்வையைப் பொருத்தது.

பொதுவாக எஸ்.கே. குறிப்பிடும் போது வெளியில் தெரியாதவைகளைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என்பார். அதற்கு அவர் குறிப்பிடத்தக்க காரணத்தையும் சொல்வார். அதாகப்பட்டது, மரத்தின் வேர்கள் வெளியே தெரிவதில்லை. வேர்கள் தங்கள் பணியை ஆற்றாவிட்டால் வெளியில் தெரியும் மரத்தின் கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் என்று எதுவும் இல்லை. அதனால் வெளியில் தெரிபவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஏமாற்றம் அடைந்து விடக் கூடாது. ஏமாந்து விடவும் கூடாது. உள்ளார்ந்த விசயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த உள்ளார்ந்த விசயத்தை எஸ்.கே.விடம் நீருற்றிச் செழிக்க செய்வது எது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். உள்ளே அகவயத்தன்மையில் இருக்கும் மாயத்தன்மை புறவயத்தன்மையில் இருக்காது. அதனால் அதுவால் போதைத்தன்மையைக் கொடுக்கவும் முடியாது. அகவயத்தின் போதைத்தன்மையையும் அது உருவாக்கும் மாயத்தன்மையையும் என்னவென்று சொல்வது?

*****

26 Jun 2021

புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும்

புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும்

            அவ்வளவு கடுமையான மன உளைச்சலைச் சந்திப்பீர்கள் என்று நினைத்திருக்க மாட்டீர்கள். ஆனால் சந்திப்பீர்கள். அந்த மன உளைச்சல் எதிலிருந்து வந்தது என்று யோசிப்பீர்கள். உங்களால் சரியான ஒரு பதிலைக் கண்டறிய முடியாது. மன உளைச்சல் என்பது மிகச் சரியாக நடக்க வேண்டும் என்று உணர்விலிருந்து எழுந்ததா? அல்லது எல்லாரையும் மிகச் சரியாக மாற்ற வேண்டும் என்ற உணர்விலிருந்து எழுந்ததா? என்பது புரியாது.

            புரிந்து கொள்ளுதலும் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுதலும் ஒரு நல்ல வழிமுறை. மனதையும், உடலையும் பாதுகாக்க ஒரு வகையில் அது மிகச் சிறந்த வழிமுறை. யாரும் சொல்லிப் புரிந்து கொள்வதில்லை. அவர்களாகப் புரிந்து கொள்வதற்கான தேவைகள் உருவாக வேண்டும். இதை உணராமல் உளைச்சல் கொள்வது அதிகம் நிகழ்ந்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்குப் புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் தேவைப்படும். சொல்லப்படுகிற இந்த வழிமுறைக்குக் கூட அது பொருந்தும். புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் இல்லை என்றால் என்னதான் செய்து விட முடியும் சொல்லுங்கள்.

            மனிதர்களுக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு இடையேயான புரிதல்வேறுபாடுகள் எப்போதும் இருக்கும். அந்தப் புரிதல் வேறுபாடுகளைச் சமன்படுத்துவது சிக்கல் நிறைந்தது. ஓரளவுக்கு வெற்றி பெறலாம். முழுமையாக வெற்றிப் பெறுவதற்கு ஆயுள் போதாது.

            தயிர் ஏன் புளிக்கிறது? பாகற்காய் ஏன் கசக்கிறது? கரும்பு ஏன் இனிக்கிறது? பாக்கு ஏன் உவக்கிறது? உப்பு ஏன் கரிக்கிறது? இதைப் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் அவசியம். இதில் தேவையில்லாத மாற்றங்களைச் செய்வதற்குப் பதிலாக உங்களின் விருப்பமான சுவைக்கேற்ப நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதை மாற்றிக் கொள்ளலாம். அது மிக எளிமையாக இருக்கும்.

            உங்களை உங்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ள முடியாது. உங்கள் தவறு உங்களுக்குப் புரிந்தாலும் அதை உங்களால் நிறுத்திக் கொள்ள முடியாது. பிறகு இந்தப் புரிதலால் பயனென்ன என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவும், நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் அந்தப் புரிதல் தேவை. ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறது? ஏதோ ஒன்று ஏற்றுக் கொள்வதைத் தடுக்கிறது என்றால் உங்கள் புரிதலால் பயனில்லாமல் போகலாம். எங்கே புரிந்து கொள்ளுதலும் புரிந்து கொள்ளுதலை ஏற்றுக் கொள்ளுதலும் ஒருங்கே நிகழ்கிறதோ அங்கே மாற்றம் உடனடியாக நிகழ்கிறது.

            நீங்கள் நிறைய நூல்களை வாசிக்கலாம். வாசிப்பு புரிதலுக்கான புதிய வாசல்களைத் திறந்து விடுகிறது. உங்கள் புரிதல் மேம்பட வழிவகுக்கும். நீங்கள் வாசிப்பதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மாற்றம் நிகழும். இது அறிவியல் விதியைப் போன்றது.

            ஓய்வில்லாத அதீத ஒன்று உங்கள் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்றால் உங்கள் புரிதலில் ஏற்றுக் கொள்ளுதல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். இந்தத் தடுமாற்றம்  வாழ்க்கை மீதான எரிச்சலை அதிகப்படுத்திக் கொண்டு இருக்கும். வாழ்க்கையில் எதையும் எரிச்சல்படாமல் பார்ப்பது ஒரு கலை. அதற்கு நீங்கள் புரிதலை நேசிக்க வேண்டும். புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்வதன் பக்குவம் பெற வேண்டும்.

            மனக்குறை மனதை ஆட்டிப் படைக்கலாம். இப்பிடியெல்லாம் ஆகும் என்று தெரிந்தும் அதற்கேற்ற முன்னெச்சரிக்கையோடு விட்டேத்தியாக இருப்பதாக நினைக்கலாம். நாளடைவில் உங்கள் மனக்குறையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையும் உண்டாகலாம். எதிலும் ஓர் அங்கீகாரம் கிடைக்காதது போல உணரலாம். யாரும் உங்களை மதிக்காதது போல நினைக்கலாம். உங்கள் பேச்சு எங்கும் கவனிப்பு பெறாததாக எண்ணலாம். உங்களை நீங்களே மிகவும் தாழ்வாக கருதிக் கொள்ளலாம். எல்லாம் புரிதலில் ஏற்படும் குறைபாட்டைக் காட்ட கூடியவை. புரிதலில் உண்டாகும் பின்னடைவுக்கான அறிகுறிகளைக் காட்டுபவை.

            முன்பு உங்களுக்குக் கிடைத்த மரியாதை தற்போது கிடைக்காதது போல உணரலாம். வேறு யாருக்கோ முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கலாம். ஒவ்வொரு நிகழ்விலும் மிகச் சரியாக நடந்தும் நீங்கள் புறக்கணிக்கப்படுவதாக உங்களுக்குள் ஒரு சித்திரம் தோன்றலாம். எங்கு சென்றாலும் உங்களுக்கு அங்கு மதிப்பு இல்லாததாகக் கருதலாம். ஒன்றில் தொடர்வதா? வேண்டாமா? என்று கூட யோசித்து தடுமாறிக் கொண்டிருக்கலாம். அது குறித்து ஏதோ ஒரு சிறு புரிதல் உங்களுக்கு இல்லாமல் இருக்காது. நிச்சயம் இருக்கும். ஆனால் அதை ஏற்றக் கொள்வதில் தயக்கம் இருக்கும்.

            அநேகமாகப் புரிதலும் ஏற்றலும் இல்லாத மனநிலைக்கு எல்லாவற்றையும் விலக்கும் குணாதிசயம் இயல்பாக வந்து விடும். அந்த மனநிலைக்கு எதுவும் பிடித்தமானதாக இருக்காது. மிகவும் விரக்திக்கு உள்ளான வெறுப்பு மனநிலை இயல்பாக உண்டாகும். மனச்சோர்வு ஆட்டிப் படைக்க கூடும். சில நேரங்களில் மனஇறுக்கம் தாங்க முடியாமல் கூடப் போகலாம். மனம் போன போக்கில் எதையெதையோ செய்யலாம். முன்பு மனம் அமைதி அடைந்ததைப் போல தற்போது அமைதி அடையாது. நிலைமை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. நிச்சயமாக இப்போது அப்படி இல்லை. மிகவும் மோசமான ஒரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இதைப் பார்க்க பார்க்க எதற்கெடுத்தாலும் கோபம் பொத்துக் கொண்டு வரும். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டு விட நேரிடும். சரியாக இருக்க வேண்டியதில் கொஞ்சம் பிசகினாலும் கோபம் தலைவிரித்து ஆடத் தொடங்கி விடும். முன்பெல்லாம் அது கிடக்கிறது போ என்று அதைத் தூக்கிப் போட்டு விட்டு கடந்த நீங்கள் இப்போது அப்படி கடக்க முடியாமல் சிரமப்பட நேரிடலாம்.

            உங்களது வழக்கமான கடமைகளைச் செய்ய முடியாமல் தடுமாறலாம். வலிந்து செய்ய வேண்டிய பல காரியங்களில் ஒன்றும் செய்யாமல் இருக்கலாம். ஏதோ ஒரு அல்பத்தனமான உணர்வில் சிக்குண்டு நீங்கள் நிலைகுலையலாம். பொறுமையாக இதைப் புரிந்து கொள்ளுங்கள். மனதளவில் ஒன்றை ஏற்றுக் கொள்வதன் அதிசயத்தைச் சாதாரணமாகப் பார்க்காதீர்கள். அது குறைபாட்டை நிறைவு செய்கிறது. முழுமையை நோக்கி உங்களைத் தள்ளுகிறது. சரியான புரிதலை ஏற்றுக் கொள்வதன் அவசியத்தையும் ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும் அது சொல்கிறது. புரிந்து கொள்ளுதலும் ஏற்றுக் கொள்ளுதலும் மிகச் சிறந்த வழிமுறைகள் என்பதை ஒருமுறை அனுபவித்துப் பார்த்து விட்டால் அது அப்படித்தான் என்பது உங்களுக்குப் புலப்படும். தயவு செய்து இதை இதன் வழியாகப் புரிந்து கொள்ள முயலாதீர்கள். அதன் பயன்படாமல் போய் விடும். இதை உங்களது உள்ளார்ந்த அனுபவத்தின் மூலமாகப் புரிதலுக்கு உட்படுத்தி ஏற்றுக் கொள்ளுங்கள்.

            பயன்படா பொருளொன்றை வாங்கிப் போடுவதிலோ, வாங்கிய பொருளைப் பயன்படுத்தாமல் போடுவதிலோ என்ன இருக்கிறது? புரிதலுக்கும் ஏற்றுக் கொள்ளுதலுக்கும் இது பொருந்தும்.

*****

25 Jun 2021

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு உலகையும் சுற்றி வரும் மனம்

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு உலகையும் சுற்றி வரும் மனம்

            சூழ்நிலைகள் அவ்வளவு நெருக்கடியாக இருக்கிறதா, அல்லது தான் அப்படி உணர்கிறோமா என்று சந்தேகம் வந்து விட்டது எஸ்.கே.வுக்கு. இந்தச் சந்தேகம்தான் எஸ்.கே.வை இப்படிச் சிந்திக்க வைத்தது.

            “யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. அதிலிருந்து வெறுப்பு பிறக்கிறது. அதிலிருந்து கோபம் பிறக்கிறது. கோபம் கொஞ்சம் கொஞ்சமாக பகையை நோக்கி நகர்த்துகிறது.”

            ஒருவர் வேலையே செய்யவில்லையா? அதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவருடைய இயல்பு அதுதான் என்று அதை விட்டு விடுவதுதான் நல்லது என்று தோன்றியது எஸ்.கே.வுக்கு. இந்த உலகில் யாரும் திருந்துவதற்குத் தயாராக இல்லை எனும் போது அவர்களைத் திருத்தும் முயற்சி வீணாகி விடுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சுபாவத்துடன் வாழ படைக்கப்பட்டுள்ளான் எனும் போது யாருடைய சுபாவத்தையும் மாற்றுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை நினைத்த போது ஒரு சோர்வு வந்து ஆட்கொண்டது எஸ்.கே.வை.

            எடுத்துச் சொல்லி மனிதர்களை மாற்றுவது என்பது காலாவதியாகி விட்ட நுட்பமாகி விட்டது. யாரும் எதைச் சொல்லியும் திருந்தப் போவதில்லை எனும் போது எதையும் சொல்வது என்பது ஒரு பைத்தியகாரத்தனமான செயல்பாடாகி விட்டதாக நினைத்தார். ஆனால் இதில் நுட்பமாக சாதுர்யமாகப் பேசி நழுவிக் கொள்வது எக்காலத்துக்கும் பொருந்தும் முறையாக இருக்கிறது என்பதாகவும் நினைத்தார். அப்படித்தான் நழுவிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் என்றும் நினைத்தார். 

            ஒன்றை மாற்ற ஆரம்பித்தால் வரிசையாக எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதாக இருக்கிறது. அப்படி மாற்றுவது முன்னர் இருந்த நிலையை விட நல்ல நிலையைத் தருமா? தராதா? எனும் கேள்வி எழும் போது அதற்கு விடை காண்பதும் சிரமமாக இருந்தது எஸ்.கே.வுக்கு. பல நேரங்களில் மாற்ற நினைத்த மாற்றம் மோசமான பின்விளைவுகளை உருவாக்கி, அதை ஏன் மாற்ற நினைத்தோம் என்ற உணர்வையும் எஸ்.கே.வுக்கு உண்டாக்கி இருந்தது.

இது சரியா? அது சரியா? என்ற குழப்பத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருந்திருக்கலாமே என்ற உணர்வும் மேலிட்டு விடுகிறது எஸ்.கே.வுக்கு. ஆகவே எஸ்.கே. தனக்குத்தானே சொல்லிக் கொண்டார், “பொறுமையாக இரு. நிகழ வேண்டிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைத் தடுக்க யாராலும் முடியாது.”

            “ஆனாலும் மாற்றங்களை ஏன் வலிந்து உருவாக்க நினைக்கிறேன்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார் எஸ்.கே. ஆசைதான் காரணமோ அதற்கு? அப்படி ஆசைப்பட்டுத்தான் மாற்ற நினைக்கிறேனோ? அந்த ஆசையில்லா விட்டால் எதையும் மாற்ற வேண்டும் என்ற உணர்வு உண்டாகாதா? ஏன் ஆசைப்பட்டு அல்லோகலப்பட வேண்டும்? தேவை இல்லைதானே? ஆசைப்படா விட்டாலும் ஆசைப்பட நினைத்ததோ, நினைக்காததோ ஏதோ ஒன்று நடக்கத்தானே போகிறது? அதில் மாற்றமுண்டா என்ன? கேள்விகள் சுற்றிச் சுழன்றடிக்க ஆரம்பித்தன எஸ்.கே.வின் மனதுக்குள். கேள்விகள் ஒவ்வொன்றும் எஸ்.கே.வைப் பெருத்த மனஉளைச்சலை நோக்கிக் கொண்டு சென்றன.

            இந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும், மனச்சோர்விற்கும் ஆளாக வேண்டுமா? என்பது கூட ஒரு கேள்வியாக எஸ்.கே.வின் மனதில் தொக்கி நின்றது. வேலைகள் அதிகமாகும் போது அந்த வேலையிலிருந்து முடக்க மனம் செய்யும் தந்திரமோ இந்த உளைச்சலும் சோர்வும் என்று கூட யோசித்துப் பார்த்தார் எஸ்.கே.

உண்மையில் எஸ்.கே.வுக்கு வேலைகள் அதிகம். காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அவர் பல வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சொன்னால் நம்புவது சிரமம் என்றாலும் எஸ்.கே.வுக்கு உறங்குவதும் இப்போது ஒரு வேலையாக ஆகி விட்டது.

எல்லாம் ஒன்றிணைந்து உருக்குலைத்த போது எஸ்.கே. ஒரு கோபக்கார மனிதராக ஆகி விட்டார்.

            கோபம் என்பது ஒரு மனநிலை. அந்த நேரத்து மனநிலை. ஒரு தீவிரமான மனநிலை. பிறகு அது வடிந்துப் போய் தானா அப்படி நடந்து கொண்டோம் என்று யோசிக்க வைத்து விடுகிறது எஸ்.கே.வை. இதனைக் கருத்தில் கொண்டு கோபத்தையும் அடக்க முடிந்ததில்லை எஸ்.கே.வால். எந்த ஒன்றையும் அடங்கிப் போய் விடச் செய்திட முடியாது. அது மிக வீரியமாக வெளிப்பட்டு விடும் அபாயத்தை உருவாக்கி விட்டு விடுகிறது எஸ்.கே.வுக்கு.

            கோபம் வடிந்த நேரத்தில் ஏன் கோபப்பட்டோம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது எஸ்.கே.வுக்கு. கோபப்படாமல் இருந்திருக்க முடியுமா என்றும் யோசித்துப் பார்ப்பதுண்டு எஸ்.கே. அப்படி இருந்திருந்தால் ஒருவேளை எப்போதும் சந்தோஷமாக இருந்திருக்க முடியுமோ என்னவோ! ஒரு கோபம் தேவையில்லாத பல பிரச்சனைகளை உருவாக்கி துக்ககரமான காரியத்தை உண்டு பண்ணுவதில் துணையாக நின்று விடுகிறதே என்று பெருமூச்சொன்றை இழுத்து விட்டுக் கொண்டார் எஸ்.கே.

            எஸ்.கே.வுக்குப் பல நேரங்களில் எதற்காகக் கோபப்படுகிறோம் என்பதைக் கண்டறிவது கடினமாகி விடுகிறது. அந்த அளவுக்கு எஸ்.கே.வின் மனமானது பல விதமான உணர்வுகளால் அழுத்திப் பிடிக்கப்பட்டு பீடிக்கப்பட்டு இருக்கிறது. அழுத்தப்பட்ட உணர்வுகளுக்கு ஒரு வெளியேறும் வழியாக கோபம் மாறி விடுகிறது என்பதை எஸ்.கே. புரிந்து கொள்ளலாமல் இல்லை. ஆனால் எஸ்.கே.வுக்கு அதிலிருந்து விடுபடுவது பெரிய பாடாக உருமாறத் தொடங்கியிருந்தது.

            வர வர மனிதர்களின் மீதான மனிதர்களின் கோபம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது எஸ்.கே.வுக்கு. ஒருவர் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் இல்லை என்று எப்போது எஸ்.கே. நினைக்கத் தொடங்குகிறாரோ அப்போதே அவர் எஸ்.கே.வுக்குப் பிடிக்காமல் போயி விடுகிறார். அந்தப் பிடிக்காமல் போய் விடும் தன்மை வெறுப்பை மனதுக்குள் தூவ ஆரம்பித்து விடுகிறது. வெறுப்பு வளர வளர கோபமும் வளர ஆரம்பித்து விடுகிறது.

            இன்னொரு வகையில் வெறுப்பு என்பது வளர வைக்கப்படுகிறது. சுற்றியுள்ள மனிதர்கள் அதைத் திறம்பட வளர்த்தெடுக்க உதவுகிறார்கள். எதற்கெடுத்தாலும் அக்கம் பக்க்ததில் இருப்பவர்களைப் பற்றிக் குறை கூறி வெறுப்பை மனதுக்குள் வளர செய்யும் மனிதர்கள் சூழ்ந்து இருக்கிறர்கள். எப்போது பார்த்தாலும் மனிதர்களுக்கு மனிதர்களைப் பற்றிய குறைதான். ஒரு துரதிர்ஷ்டமான உண்மை என்னவென்றால் மனிதர்களுக்கு மனிதர்களைப் பிடிக்காது. அந்தப் பிடிக்காமையை எல்லாம் மனிதர்கள் வெறுப்பாக மனிதர்களின் காதில் ஊதித் தள்ளுகிறார்கள். எவ்வளவோ சொல்லிப் பார்க்கலாம். எதுவும் உதவுவதாகத் தெரியவில்லை. இப்போது எஸ்.கே. சோர்ந்துப் போய் விட்டார். தன்னால் செய்வதற்கு எதுவுமில்லை என்பது போல காணப்பட்டார். அத்துடன் மனிதர்கள் காதில் ஊதிய வெறுப்பு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார்.

            விடுபடுவதற்கான வேலையை எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாது என்பது புரிந்தது. அதது அதுவாக விடுவித்துக் கொள்ளும் என்ற நிலையை நோக்கி நகரும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எஸ்.கே. மிகவும் சலித்து வெறுத்துப் போன நிலையில் திரும்பவும் நம்பிக்கையை நோக்கி நகர ஆரம்பித்தார்  திரும்பவும் கோபம் கோள்ள, திரும்பவும் உளைச்சல் அடைய, திரும்பவும் சலித்து வெறுக்க, திரும்ப நம்பிக்கையை நோக்கி நகர.

பூமி மட்டுமா மனமும் தனக்குத்தானே சுழன்றுக் கொள்கிறது. தன்னைத் தானே சுழன்றுக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும் பூமியைப் போல தனக்குத் தானே சுழன்று கொள்ளும் மனம் உலகையும் சுற்றிக் கொள்கிறது.

*****

24 Jun 2021

வாழ்க்கையெனும் நெகிழ்ந்து நீளும் கலை

வாழ்க்கையெனும் நெகிழ்ந்து நீளும் கலை

வாழ்க்கைக் குறித்துச் சிந்திக்கும் போது வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தார் எஸ்.கே.

நல்லதோ,கெட்டதோ எல்லாம் வாழ்வதற்கான போராட்டம்தான் என்று பட்டது எஸ்.கே.வுக்கு. தன் வாழ்நாளில் எவ்வளவோ பார்த்து விட்டார். இந்த வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கு ஒற்றை வழி ஏதேனும் இருக்காதா என்று யோசித்துப் பார்த்தார்.

பல்வேறு வழிகளில் எதிர்கொள்ளும் வகையில் இருக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் எதிர்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்பது அவருக்குத் தெரிந்தது. ஆனால் அவர் கண்களுக்கு ஒரு வழியின் தன்மை புலப்பட்டது. அநேகமாக அந்தத் தன்மை பொறுமை எனப் புரிந்து கொண்டார். பொறுமையின் சக்தி எல்லலையற்றது. எல்லையற்ற சக்தியைப் பெற பொறுமையே வழி என்பதை அவர் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதுவரை செய்தவற்றை நினைத்த பார்த்த போது அதில் ஏதேனும் பொதுமை இருக்கிறதா என்று அலசிப் பார்த்தார். தனக்கு எப்பிடி வருகிறதோ அப்படித்தான் அவர் செய்திருக்கிறார். அதில் பணிவாக இருப்பது போல் ஒரு நடிப்பு தேவைப்பட்டிருப்பதை உணர்ந்தார்.

மனதில் தோன்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அவர் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கவில்லை. அப்படி வெற்றி பெற்றதற்கான மனநிறைவான நிகழ்வுகளும் அவருக்கு நிகழ்ந்ததில்லை. அநேகமாக அவர் தம் வாழ்நாளில் எதிர்பார்த்தபடி வாழ்ந்திருக்க முடிந்ததில்லை. வாழ்வு எதை கொண்டு வந்து நிறுத்துகிறதோ அதை எதிர்கொண்டபடி வாழ்ந்திருக்கிறார்.

மனதைப் பற்றி நினைத்த போது மனம் கொண்டு வந்து நிறுத்திய அத்தனை நினைப்புகளும் ஒரு மாயைப் போல எழுந்து அடங்கியது. நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மாயையை மனமானது கொண்டு வந்து நிறுத்தியதை நினைத்துப் பார்த்த போது அதன் பிரமாண்டத்தைக் கண்டு வியந்து போனார்.

மனதின் மாயையை நம்பி எதையும் செய்வதற்கில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது. செய்த அடுத்த நிமிடமே அந்த நினைப்பு வேறு மாதிரியாக மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்குள் எஸ்.கே. தன் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடந்திருந்தார்.

மாறும் நினைப்புகளுக்கு ஏற்றபடி மறுபடியும் திருப்திபடுத்தலைத் தொடர வேண்டியிருக்கும் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை அவரால் தவிர்க்க முடியவில்லை. மாற்றி மாற்றி எப்படிச் செய்தாலும் திருப்தி வராத, திருப்திக்குக் கொண்டு வர முடியாத நிலை அது. அதைப் பின்தொடர்வதில் அர்த்தமில்லை என்று புரிந்தாலும் பல ஆண்டுகளாக அவர் கடந்து வந்த வாழ்க்கை அது.

இப்போது இந்த நிலையில் எண்ணிப் பார்க்கும் போது தன் கையே தனக்கு உதவி என்பதை எண்ணிப் பார்த்து மலைத்துப் பார்க்கிறார். சாதாரண ஒரு கருத்துதான் அது. இளம் வயதில் அவர் கேள்விப்பட்ட கருத்தும் கூட. அந்தக் கருத்து அவர் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எல்லாரும் அவரைக் கைவிட்டுப் போய்க் கொண்டு இருக்க அந்தக் கருத்தின் அர்த்தம் அவருக்கு ஆழமாக விதையூன்றிய மரத்தைப் போல செழித்து அவர் ஆழ்மனதுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது. எதற்காகவும் யாரிடமும் சென்று பிச்சைக் கேட்டுக் கொண்டு நிற்க வேண்டியதில்லை என்பதன் உச்சமாக அது உருப்பெற்றுக் கொண்டிருந்தது.

எஸ்.கே. தனது சம்பாஷனைகளால் ஒரு விசயத்தைத் தெரிந்து கொண்டார். மனிதர்கள் மகத்தான ஏமாற்றுக்காரர்கள். ஒவ்வொருவருக்கும் ஏமாற்றுவது ஒரு பிடித்தமான விளையாட்டும் பொழுதுபோக்கும் ஆகும். ஏமாற்றுவதை ஒரு வேலையாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மனம் இருக்கிறதென்றால், எஸ்.கே.வுக்கும் ஒரு மனம் இருக்கத்தானே செய்யும். அனைவரும் தங்கள் தங்களின் மனதைப் பெரிதாகப் பினாத்துகிறார்கள். எஸ்.கே.வினுடைய மனதின் குரலைக் கேட்க மறுத்திருக்கிறார்கள். எஸ்.கே.வைக் குரலற்ற மனிதராகவும் நினைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் மனம் முக்கியம். மற்றவர்களுடைய மனம் அநாவசியம். ஒவ்வொருவரும் தாங்கள் பேசுவதை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இடையில் எஸ்.கே. பேசி விட முடியாது. எஸ்.கே.வைப் பேச விட்டதும் இல்லை. அவர் இடையில் ஒரு வார்த்தைப் பேசினால் கோபம் வந்து விடும். தன்னுடைய குரலையும் கொஞ்சம் கேளேன் என்று சொல்லிட முடியாது. ஆவேசமாகி விடுவார்கள்.

தான் எதைச் சொன்னாலும் அதை அப்படியே வேண்டுமென்றே மாற்றிச் செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்டவராக எஸ்.கே. இருந்தார். யாரிடம் எதைச் சொல்வது? என்னத்தைச் சொல்வது? ஒவ்வொருவரும் தங்களைத் தயாரித்துக் கொண்ட விதம் அப்பிடி. அதை எதுவும் செய்வதற்கில்லை. அது அப்படித்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியவராக இருந்தார்.

            யாரையும் எதையும் சொல்லித் திருத்தி விட முடிவதில்லை என்பது அவர் வாழ்வில் கண்ட ஒரு மோசமான பாடமாக அமைந்திருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம் உண்டாகி விட்டது. அந்த மனப்போக்கில் வாழ்வதுதான் அவர்களுக்குத் திருப்தியாக இருக்கிறது. அந்தத் திருப்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மற்றவர்களை என்ன செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அது வன்முறையாக இருந்தாலும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த வன்முறையை அவர்களின் தர்மம் என்று சொல்கிறார்கள். அவர்களின் வன்முறை என்று சொல்கின்ற அந்தத் தர்மத்தைப் பொறுத்துக் கொண்டுதான் வாழ வேண்டியதாக இருக்கிறது என்பதை வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக எஸ்.கே. ஏற்றக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

மனிதர்களைப் பற்றிப் பலவிதமான கருத்துகள் இருந்தாலும் மனிதர்களின் குழுமமான சமூகம் பற்றி ஒரு கருத்தும் எஸ்.கே.விடம் இருக்கிறது. அதன் சாராம்சம் இதுதான். சமூகம் என்று ஒன்று இல்லையென்றால் மனிதர்களிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றி விட முடியாது. பல மனிதர்கள் ஆசுவாசமாக இருப்பது சமூகம் என்ற அமைப்பு ஒன்று இருப்பதால்தான். சமூக அமைப்பு வேண்டாம் என்று இழுத்து மூடி விட்டால் மனிதர்களின் பாடு திண்டாட்டமாகி விடும். ஒரு மனிதரைச் சமாளிப்பது என்பது கூட சாமானியமானதன்று. சமூகங்கள் அதை எப்படியோ செய்கின்றன. ஏதோ ஒரு வகையில் சமூக அமைப்பு மனிதரைப் பயமுறுத்திக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

பாருங்கள் இதை இப்படி எழுத ஆரம்பித்து எப்படி நீளுகிறதென்று? இது இவ்வளவு நீண்டு செல்லும் என்று எஸ்.கே. கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அது பாட்டுக்கு நீண்டு கொண்டே செல்கிறது. இதை யாரும் நீட்டிக்கவில்லை. அதுவாக நீண்டு கொண்டு செல்கிறது. நீண்டு கொண்டு செல்வது அதன் சுபாவம். அந்த நீட்சியில் பயணித்துக் கொண்டு இருப்பது வாழ வேண்டியவர்கள் செய்ய வேண்டிய தவிர்க்க முடியாத வேலை என்பது எஸ்.கே.வுக்குத் தெரியும். நெகிழ்ந்தபடி வாழ்பவர்கள் எப்படியோ வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். அது முடியாதவர்கள் தீவிர மனநிலையோடு தமக்குத் தாமே விரோதமாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறார்கள் என்பது போலத்தான் எஸ்.கே.வுக்குத் தோன்றுகிறது.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...