Showing posts with label TNLA 2026 Scanning Report. Show all posts
Showing posts with label TNLA 2026 Scanning Report. Show all posts

26 Apr 2026

ஏப்ரல் 23 – ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!

ஏப்ரல் 23 – ஒரு ஸ்கேனிங் ரிப்போர்ட்!

ஏப்ரல் 23, 2026 இல் நடைபெற்ற இந்தச் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் 74 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 85% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

அதாவது, தமிழ்நாட்டில் இருக்கும் பத்து பேரில் எட்டு பேருக்கும் மேல் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்.

அப்படியானால், அந்த மீதி ஒன்றரை சொச்சம் பேரில் ஒருத்தர் சீரியல் கிளைமாக்ஸை மிஸ் பண்ண விரும்பாதவர், இன்னொருவர் அல்லது அந்த அரை சொச்சம் பேர் யாரென்றால், யார் வந்தால் என்ன? என்று தத்துவம் பேசுபவர்.

இந்தச் சாதனையைச் சாத்தியப்படுத்திய தேர்தல் ஆணையத்திற்கு முதலில் ஒரு ஓ போடலாம். அவர்கள் செய்த மேஜிக் இதுதான். எஸ்ஐஆர் (SIR), ஏதோ பள்ளிக்கூட வாத்தியார் பெயர் போல இருந்தாலும், இதன் புண்ணியத்தில் சுமார் ஒரு கோடிப் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். இதில் இறந்தவர்கள், ஊரை விட்டு ஓடியவர்கள், இரு ஊர்களில் அட்ரஸ் வைத்திருந்த டபுள் ஆக்டிங் பார்ட்டிகள் என அனைவரும் அடக்கம்.

பட்டியல் இளைத்ததால், வாக்குப் பதிவு சதவீதம் தானாகவே தடித்திருக்கிறது. உடல் எடையைக் குறைக்க முடியாமல் தவிப்பவர்கள், தராசின் எடையைக் குறைத்துக்கொள்ளும் ஒரு நுணுக்கமான உத்தி இது.

அடுத்துத் தேர்தல் கள நிலவரம் என்னவென்று பார்க்க வேண்டுமே.

இந்த முறை ஆட்டம் சீரியஸானது. திமுக, அதிமுக எனும் நித்தியக் கன்னிகளோடு, தம்பிகளின் அண்ணன் சீமானும், தளபதி விஜய்யும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.

மொத்தம் 4,023 வேட்பாளர்கள்!

இதில் எத்தனை பேருக்கு டெபாசிட் திரும்பக் கிடைக்கும் என்பது, எத்தனை பேருக்குத் தமிழ் சரியாகப் பேசத் தெரியும்? என்ற கேள்விக்கு நிகரானது.

இந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க, காலை 7 மணிக்கே மக்கள் குட் மார்னிங் சொல்லிவிட்டு வாக்குச்சாவடிக்கு வந்துவிட்டார்கள்.

தேர்தல் ஆணையம் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பர்சன்டேஜ் வெளியிட்டுக் கொண்டிருந்தது.

காலை 9 மணி அளவிலேயே காபி குடித்து விட்டு வாக்களிக்க வந்த வாக்காளர்களால் 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.  

9 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வெயிலைச் சபித்துக் கொண்டே வாக்காளர்கள் வந்த போதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.

அதன் பிறகு மாலை 6 மணி வரை ஆர அமர வாக்காளர்கள் வந்த போதும் சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகி விட்டன.

தமிழகத்தின் வெயிலுக்கும், ஜனநாயகத்தின் மீதான காதலுக்கும் நடக்கும் போராட்டத்தில், எப்போதும் ஜனநாயகமே ஜெயிக்கிறது அல்லது அந்த விரல் மை தரும் ஒரு கெத்து ஜெயிக்கிறது என்பது நிரூபணமாகி விட்டது.

தலைவர்கள் அனைவரும் முறைப்படி கடமையை ஆற்றினார்கள்.

முதல்வர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.

எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலேயே ஓட்டுப் போட்டார்.

விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார். அவர் நடையிலேயே ஒரு அரசியல் இருந்தது என்கிறார்கள் ரசிகர்கள்.  சீமானும் அங்கேயேதான்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 90 சதவீதம், திருச்சி கிழக்கில் 82 சதவீதம், ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 86 சதவீதம், எடப்பாடியார் தொகுதியில் 92 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

அதிகபட்சமாக கரூர் மக்கள் 92.62 சதவீதம் ஓட்டுப் போட்டு நாங்கதான் டாப் என நிரூபித்திருக்கிறார்கள்.

சென்னை 16 தொகுதிகளில் 84 சதவீதம் பதிவு.

மொத்தத்தில் 2021 தேர்தலை விட 12 சதவீதம் அதிகம்.

வாக்குப் பெட்டிகள் இப்போது 62 மையங்களில் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக இருக்கின்றன. மே 4 ஆம் தேதிதான் அந்த ரகசியப் பெட்டிகள் வாய் திறக்கும். அதுவரை அரசியல் கட்சியினர் நகம் கடித்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களாகிய நாம்?

நாம் எப்போதோ அடுத்த சீரியலுக்கும், அடுத்த ஐபிஎல் மேட்சுக்கும் நகர்ந்துவிட்டோம்.

மே 4 – அந்த ஒரு நாள் கொஞ்சம் சீரியலுக்கும் ஐபிஎல்லுக்கும் விடை கொடுப்போம். பிறகு மீண்டும் சீரியல், ஐபிஎல் முருங்கை மரத்தில் ஏறி விடுவோம்.

*****