31 Jul 2026

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

2.79 கோடி ஜி.எஸ்.டியும் ஏரி வேலையும்!

உலகத்தில் பலவிதமான அதிசயங்கள் நடப்பதுண்டு. எகிப்து பிரமிடு, தாஜ்மஹால் எல்லாம் பழைய கதை.

நம் ஊரில் நடக்கும் நவீன அதிசயம் என்னவென்றால், ஏரி வேலைக்குச் செல்லும் ருக்மணி அம்மணி என்பவருக்கு 2.79 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக வணிகவரித் துறை அன்போடு நோட்டீஸ் அனுப்பியிருப்பதுதான்!

பாவம் ருக்மணி. 125 நாள் வேலைத் திட்டத்தில் வெயிலில் நின்று மண்ணள்ளிப் போட்டு, அதில் வரும் சொற்பக் கூலியை வாங்கலாம் என்று வங்கிக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே இருந்த வங்கி மேலாளர், “அம்மா! நீங்க சாதாரண ஆள் இல்லை! ஆர்.எம். டிரேடர்ஸ் முதலாளி! நீங்க ஜி.எஸ்.டி கட்டாம இரண்டரை கோடி ரூபாய்க்கு மேல வரி ஏய்ப்பு பண்ணியிருக்கீங்க. அதான் உங்க அக்கவுண்ட்டை லாக் பண்ணிட்டோம் என்று குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

இதில் நாம் வியக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.

நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் எங்கே வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நமது புலனாய்வுத் துறை, ஏரி வேலைக்குச் செல்லும் ஓர் ஏழைப் பெண்ணைக் கச்சிதமாகக் கண்டுபிடித்துவிட்டது!

“யாரை வேணா விட்டுடுவோம். ஆனா இந்த 125 நாள் வேலைக்குப் போறவங்களை விடமாட்டோம் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியைப் பார்த்து கார்ப்பரேட் முதலாளிகளே கண்ணீர் வடிக்கிறார்கள்.

இது ஒரு புறம். ஏரி வேலைக்குக் கொண்டு செல்லும் வட்டசட்டி, மண்வெட்டிதான் அந்த நிறுவனத்தின் மூலதனம் போலிருக்கிறது!

அப்புறம், 125 நாள் வேலைத் திட்டத்தில் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு கோடிகளில் டிரேடிங் செய்யும் இந்த பிசினஸ் டெக்னிக் எந்த ஐ.ஐ.எம் மேனேஜ்மென்ட் புத்தகத்திலும் இல்லை.

வழக்கமாகக் கடன் கேட்டுப் போனால், "ஆதார் கார்டு நகல் தெளிவா இல்லை, நாளைக்கு வாங்க" என்று அலைக்கழிக்கும் வங்கிகள், இவ்வளவு பெரிய விவகாரத்தில் மட்டும் எவ்வளவு சுறுசுறுப்பு! "உங்க கணக்கில் வந்த 125 நாள் சம்பளத்தைக் கொடுக்க முடியாது. ஏன்னா நீங்க பில்லியனர் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்கள்.

யாரோ ஒரு மிஸ்டர் டெக்னிக்கல் திருடன், அப்பாவி ருக்மணியின் ஆதார், பான் கார்டைத் திருடி ஆர்.எம். டிரேடர்ஸ் ஆரம்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறான் என்பது சின்னக் குழந்தைக்குக் கூடப் புரியும். ஆனால், சிஸ்டத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு மட்டும் அது புரியவே புரியாது!

ஏழைக்கு வந்தால் நோட்டீஸ். கோடீஸ்வரனுக்கு வந்தால் வெய்வர்.

எது எப்படியோ. இனிமேல் 125 நாள் வேலைக்குச் செல்லும் பெண்கள், கையில் மண்வெட்டியோடு ஜி.எஸ்.டி பைல் பையையும் கூடவே எடுத்துச் செல்வது நல்லது. நாடாளும் மாடல்கள் வாழ்க!

*****

குளவியின் நஞ்சும் ஜெயமோகனின் கைராசியும்!

குளவியின் நஞ்சும் ஜெயமோகனின் கைராசியும்!

ஒருவர் பேருந்தில் நடத்துநரிடம் கெட்ட வார்த்தை வாங்கி, மேலதிகாரியிடம் கோப்பை வீசியெறிந்துவிட்டு ஓடிவந்து, பின் சினிமாவுக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததற்குப் பின்னால் பிரபஞ்சத்தின் பேரறிவு செயல்பட்டிருக்கிறது என்று சொல்வதை விடத் தற்காப்புப் புனைவு வேறு எதுவும் இருக்க முடியாது.

ஜெயமோகன் தன்னுடைய இந்த "மேகங்களின் குரல்" கட்டுரையில் வழக்கம்போலத் தனது சுயசரிதையை ஒரு வேதாந்த தரிசனமாக மாற்றுவதற்குத் தேவைக்கதிகமான கவித்துவப் பிரயத்தனங்களைச் செய்திருக்கிறார்.

இக்கட்டுரையின் மீதான விமர்சனத்தை நாம் மூன்று தளங்களில் அணுகலாம்.

முதலில், பேருந்து நெரிசலின் புழுக்கத்தில் ஏற்பட்ட கோபத்தையும், BSNL அலுவலகத்தின் வேலைப்பளு தந்த எரிச்சலையும் கட்டுப்படுத்த முடியாமல் அலுவலகக் கோப்பை மேஜையில் தூக்கி வீசிவிட்டு ஓடிவந்த நிகழ்வு என்பது ஒரு சாதாரண மனிதனின் பலவீனம் அல்லது நிதானமின்மை. ஆனால், அதை ஒப்புக்கொள்வதற்கு மனித மனம் அஞ்சுகிறது.

உடனே, அதற்கு லோகிததாஸ் வந்ததையும், இயக்குநர் பாலா அழைத்ததையும் இணைத்து "இது பிரபஞ்சத்தின் திட்டமிடப்பட்ட தர்க்க ஒழுங்கு" என்று சொல்வது ஒரு சுவாரஸ்யமான மாயை.

தன் கோபத்தையும் அவசர முடிவையும் நியாயப்படுத்த, பிரபஞ்சத்தையே துணைக்கு அழைப்பது ஜெயமோகனுக்கே உரிய வலுவான தற்பெருமை.

நடத்துநர் திட்டாவிட்டால் சினிமாவுக்கு வந்திருக்க மாட்டாராம்! அப்படியானால் அந்த நடத்துநரின் வசைபாடல் பிரபஞ்சத்தின் ஈக்‌ஷதே வழிகாட்டுதலா? என்னவொரு போலித் தர்க்கம்!

இரண்டாவதாக, லியால் வாட்சனின் Lifetide புத்தகத்திலிருந்து அவர் எடுத்தாளும் குளவி – புழு உவமை சுவாரஸ்யமானது; ஆனால், அது பரிணாம வளர்ச்சியைப் பற்றிய தவறான புரிதலின் வெளிப்பாடு.

இயற்கையின் கோடிக்கணக்கான ஆண்டுகளின் ‘முயன்று தவறுதல்’ என்ற தேர்ச்சி முறையை ஒரே நாளில் குளவிக்கு வந்த யோசனை போலச் சித்தரிப்பது அறிவியல் பூர்வமானது அல்ல.

அறிவியலின் விளிம்புநிலை யூகங்களை எடுத்துக்கொண்டு, அதைத் தன் வேதாந்தக் கோட்பாடுகளுக்குப் பலவந்தமாகப் பொருத்துவது தமிழ் எழுத்தாளர்களின் பழைய நோய். ஜெயமோகன் அதை மிகவும் நேர்த்தியாக, வாசிப்பவரை மயக்கும் நடையில் செய்கிறார்.

மூன்றாவதாக, கட்டுரையின் இறுதியில் வரும் ஈக்‌ஷதே அதாவது, அது சிந்திக்கிறது என்ற பிரம்மசூத்திரத்தின் மேற்கோள், கட்டுரையை ஒரு தத்துவார்த்த உச்சத்திற்குக் கொண்டு செல்வதாகக் காட்டிக்கொள்கிறது.

எறும்பு தீனியைப் பார்ப்பதும், குளவி நஞ்சைச் செலுத்துவதும், இவர் BSNL வேலையை விட்டுவிட்டு நான் கடவுள் படத்திற்குத் திரைக்கதை எழுத வந்ததும் ஒரே பிரபஞ்சத் திட்டத்தின் பகுதிகளாம்!

இதில் உள்ள நகைமுரண் என்னவென்றால், "அந்தத் திட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது, அதை ஊகிப்பவன் பேதை" என்று சொல்லிவிட்டே, முழு கட்டுரையும் அந்தப் பிரபஞ்சத் திட்டத்தைத் தான் ஊகித்து உணர்ந்துவிட்டது போலவே எழுதி முடித்துள்ளார்.

ஒரு படைப்பாளி தன் வாழ்க்கையின் தற்செயல்கள் மீது ஒரு புனைவுத் தன்மையை  ஏற்றிப் பார்ப்பதில் தவறில்லை. அது வாசகனுக்கு வாசிப்பு இன்பத்தைத் தருகிறது.

ஆனால், தன் வாழ்வின் ஒவ்வொரு சிறு சம்பவத்தின் பின்னாலும் ஒரு மகா பிரபஞ்சப் பேரறிவு நின்று இயங்குகிறது என்று நம்புவதும், அதை மற்றவர்களை நம்பச் சொல்வதும் தன்முனைப்பின் உச்சக்கட்டம்.

சுருக்கமாகச் சொன்னால், இது பிரபஞ்சம் ஈக்‌ஷதே செய்ததன் விளைவல்ல; ஜெயமோகன் தன் சொந்த வாழ்க்கையைத் தானே ஒரு மெகா சினிமாத் திரைக்கதையாக மாற்றி யோசித்ததன் விளைவு!

*****

30 Jul 2026

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

செஞ்சுரி அடிக்க காத்திருக்கும் ரூபாய்!

இந்தியப் பொருளாதாரம் என்பது ஒரு விசித்திரமான யோக நிலை. நாம் உலகின் அதிவேகப் பொருளாதார சக்தி, என்று உரக்கக் கத்தும்போது, இந்திய ரூபாய் மட்டும் தனியாக மூலையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து, மெல்லத் தன் மதிப்பைக் குறைத்துக் கொண்டே கீழே இறங்கும்.

அதாவது, வளர்ச்சி மேலே போகிறது; ரூபாய் கீழே போகிறது. இரண்டுமே இயக்கம்தான். இயக்கம்தான் வாழ்வு!

1971 இல் ஒரு டாலரின் விலை 7 ரூபாய் 50 காசுகள். இன்று அதே டாலரின் விலை 97 ரூபாய்!

இது வீழ்ச்சி அல்ல; இது பற்றுறுத்தல். டாலர் என்ற மாயையைத் துரத்தத் துரத்த, அது நம்மை விட்டு விலகிச் செல்கிறது. கச்சா எண்ணெய், தங்கம், ராணுவத் தளவாடங்கள் என உலக ஆசைகளில் நாம் மூழ்க மூழ்க, டாலர் தன் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் எவ்வளவு தான் இறக்குமதி செய்தாலும், நம் தாகம் தணிவதில்லை.

ரூபாய் மதிப்பு சரிவதால் கவலைப்பட என்ன இருக்கிறது? அதில் எத்தனை ஆனந்தங்ககள் ஒளிந்திருக்கின்றன தெரியுமா?

முதலில் அதனால் ஏற்றுமதியாளருக்கு ஆனந்தம். ரூபாய் உடைந்தால் ஏற்றுமதி கூடும்.

இரண்டாவதாக அந்நிய முதலீட்டாளருக்கு ஆனந்தம். வெளிநாட்டினருக்கு இந்தியா மலிவான சொர்க்கமாக மாறும்.

மூன்றாவதாக வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியக் குடும்பங்களின் ஆனந்தம். வெளிநாட்டில் வேர்வை சிந்தி ஒரு டாலர் அனுப்பும் மகனால், ஊரில் இருக்கும் தாய் 97 ரூபாயைப் பெற்று மகிழ்வாள்.

அதாவது, நமது நாணயத்தின் வீழ்ச்சியே, சில குடும்பங்களின் எழுச்சி! என்னவொரு மகத்தான சமநிலை பாருங்கள்.

ஈரான் மீது தாக்குதல் நடக்கிறது; கச்சா எண்ணெய் விலை ஏறுகிறது; நமது வர்த்தகப் பற்றாக்குறை 12 லட்சம் கோடியைத் தொடுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 23 பில்லியன் டாலர்களை மூட்டை முடிச்சோடு எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

சீனாவின் யுவான் வலுவடைகிறது. மலேசியாவின் ரிங்கிட் நிமிர்ந்து நிற்கிறது. சிங்கப்பூர், தன் டாலரை உயர்த்துகிறது. ஆனால், இந்திய ரூபாய்?

பொருளாதாரம் செழிப்பாக இருக்கிறது, ஆனால் ரூபாய் ஏன் விழுகிறது? என்ற கேள்விக்கு, நம்மிடம் அமைதியே பதிலாய் இருக்கிறது. மௌனத்தை விடச் சிறந்த தத்துவம் வேறு என்ன இருக்க முடியும்?

பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள், ரூபாய் மதிப்பு விரைவில் செஞ்சுரி அடிக்கும் என்று.

அச்சப்படத் தேவையில்லை. 100 என்பது ஒரு முழுமை. ஒரு சதம். 97 இல் நிற்பதை விட 100 இல் நிற்பது கணக்கு வைப்பதற்கு மிகவும் சுலபமானது அல்லவா?

700 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இருப்பு வைத்துள்ளோம். ஆனால், அதுவும் நமக்கு முழுமையான அமைதியைத் தரவில்லை. ஏனெனில், உண்மையான அமைதி இருப்பில் இல்லை; இறக்குமதியைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்கி, நாம் சுயமாக நிமிர்ந்து நிற்பதில்தான் இருக்கிறது.

உற்பத்திச் செலவு குறைவாக உள்ள நம் நாட்டில், உற்பத்தியைப் பெருக்காமல் இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பது, கையில் அமுதத்தைச் வைத்துக்கொண்டு பக்கத்து வீட்டில் பிச்சை கேட்பதற்குச் சமம்.

ரூபாயின் மதிப்பு உயர்ந்தால்தான் தேசத்தின் மதிப்பு உயரும். இல்லையேல், நாம் டாலருக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும் பக்தர்களாகவே எஞ்சியிருப்போம்!

நாம் எப்படி இருக்கப் போகிறோம்?

அந்த ஆண்டவருக்கே வெளிச்சம்!

*****

29 Jul 2026

18 டோக்கன்களும் 3 முட்டை மண்டைகளும்!

18 டோக்கன்களும் 3 முட்டை மண்டைகளும்!

மனிதகுலம் எத்தனையோ நோய்களைக் கண்டு அஞ்சியிருக்கிறது. ஆனால், தலைமுடி வழியாக ஒரு புதிய வினோத நோய் பரவுகிறது என்றும், அதற்குத் தடுப்பூசியை விடத் துரிதமான தீர்வு மொட்டை என்றும் கேள்விப்பட்டபோது, நமது சமூகத்தின் அறிவார்ந்த அஸ்திவாரம் எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரங்கேறியிருக்கும் இந்தச் சம்பவம், மனித நம்பிக்கையின் உச்சத்தையும், அதே நேரத்தில் இலவச அரசு உதவித்தொகை என்ற வார்த்தைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் தெய்வீகச் சக்தியையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

சம்பவம் என்ன என்கிறீர்களா?

அரியலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற 39 வயது வாலிபருக்கு இன்ஸ்டாகிராம் பார்த்துப் பார்த்துப் சலிப்பு தட்டியிருக்கிறது. உடனே, யாரையாவது ஏமாற்றி விளையாடலாம் என்ற மேன்மையான எண்ணத்துடன் தற்செயலாகச் சில எண்களை அழுத்தவே, அது ஆத்தூரில் உள்ள ஒரு பெண்ணுக்குச் சென்றிருக்கிறது.

விளையாட்டு நபர் வீசிய தூண்டில் சாதாரணமானதல்ல. அவர் பேசியது இதுதான், "கொரோனா போல தலைமுடி வழியா நோய் பரவுதுங்க. வெளிநாட்டுல எல்லாரும் மொட்டை அடிச்சிக்கிறாங்க. நம்ம அரசாங்கமும் நோயைத் தடுக்க மொட்டை அடிக்கிற பெண்களுக்கு 15,000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு 45,000 ரூபாய் தருது. உங்க ஏரியாவுக்கு மொத்தம் 18 டோக்கன்தான் இருக்கு!"

இங்கே கவனிக்க வேண்டியது அந்த 18 டோக்கன் என்கிற மார்க்கெட்டிங் தந்திரம்தான். விலைமதிப்பற்ற எதுவுமே கைநழுவி விடக்கூடாது என்ற மனித மனத்தின் பதற்றத்தை அந்த நபர் மிகச்சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதோடு, வாட்ஸ் அப்பில் 500 ரூபாய் கட்டுக்களின் படத்தையும், யாரோ மொட்டை அடித்த படத்தையும் அனுப்பியவுடன், அறிவியல் ஆய்வுகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது அந்தத் தாள்களின் ஒளி.

அறிவியல் ரீதியாக இது சாத்தியமா? மருத்துவத்துறை என்ன சொல்கிறது? என்றெல்லாம் சிந்திக்க நேரமேது?

பதினைந்தாயிரம் ரூபாய் கைநழுவிப்போய்விடுமே என்ற பதற்றத்தில், சித்ரா, ராமாயி, காவேரி ஆகிய மூன்று பாட்டிகளும் சலூன் கடைக்கு விரைந்து, தங்கள் கூந்தலைத் தியாகம் செய்து தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர்.

காரியம் முடிந்தது.

அடுத்தது என்ன?

பணம் வாங்க வேண்டியதுதானே!

அந்த மூன்று முட்டை மண்டைகளும் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற போதே அந்த மகா உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அங்கே இருந்த அதிகாரிகளுக்குத் தலைசுற்றியிருக்கும்.

"அரசாங்கம் மொட்டை அடிக்கப் பணம் தருகிறதா? அதுவும் 15,000 ரூபாயா?" என்று அவர்கள் திகைத்துப் போய் நிற்க, "டோக்கன் 18 இல் நாங்களும் ஒருத்தருங்க!" என்று இந்த பாட்டிகள் நின்ற காட்சியை நினைத்துப் பார்த்தால், நம் நாட்டின் நிர்வாக அமைப்புக்கே ஒரு புதிய அத்தியாயம் எழுதத் தோன்றும்.

ஒருவேளை அரசாங்கம் உண்மையில் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருந்தால் கூட, இவ்வளவு வேகமாக மக்கள் பயன்பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்து அலுத்துப்போய், சும்மா டயல் செய்து ஓர் ஊரையே மொட்டை அடிக்க வைத்த அந்தச் சதீஷ்குமாரை காவல்துறை கைது செய்துவிட்டது. "சும்மா விளையாட்டா பேசுனேங்க" என்று அவர் கொடுத்த வாக்குமூலம், இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மிகப்பெரிய விபரீதத்தைச் சிரிப்போடு வெளிப்படுத்துகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, செல்போனில் உலகமே கைமுட்டியில் இருக்கிறது. ஆனால், "தலைமுடியில் நோய் வருது, மொட்டை அடிச்சா 15,000 ரூபாய்" என்ற ஒரே ஒரு போன்கால், பல தசாப்த கால மனித அனுபவத்தையும், பகுத்தறிவையும் சலூன் கடை வாசல் வரை மிக எளிதாக அழைத்துச் சென்று விடுகிறது.

இனியாவது மக்கள் உணர வேண்டும். இலவசமாக அரசாங்கம் தரும் எதையும் நம்பலாம், ஆனால் தலைமுடியைக் கொடுத்துவிட்டு தாலுகா அலுவலகத்தில் காசு வாங்கலாம் என்று சொல்வதை மட்டும் நம்பவே கூடாது.

போன முடி திரும்ப வந்துவிடும்; ஆனால் அந்த 15,000 ரூபாய் ஆசையில் போன தலைமுடி? அது ஒரு காலத்தின் வரலாற்றுச் சுவடு!

*****

புதியது விற்பனைக்கு இல்லை!

புதியது விற்பனைக்கு இல்லை!

திருத்துறைப்பூண்டி, ஏஆர்வி திருமண மண்டபத்தில் நடந்த நெல் திருவிழா 2026 ஐ எழுதியப் பிறகு அத்தனை போன் கால்கள். அட இந்த வலைப்பூவைக் கூட இத்தனை பேர் படிக்கிறார்களா என்று ஒரே ஆச்சரியம்தான் போங்கள்.

மனிதர்கள் எழுத்தைப் பற்றியெல்லாம் போன் போட்டு பேசுவதைக் கேட்க நான் தமிழ்நாட்டில் இருக்கிறேனா, இங்கிலாந்து அல்லது ஜெர்மனியில் இருக்கிறேனா என்று மயக்கம் வராத குறைதான்.

அதென்னய்யா நெல் திருவிழாவை எழுதிய நீர் (வாட்டர் அல்ல), புத்தகத் திருவிழாவை எழுதாமல் விட்டீர் என்று செல்லமான மிரட்டல்கள் அந்தப் போன் கால்களில் ஏராளம்.

ஏனிந்தப் பாவம் எனக்கு? அநாவசியமாக மற்றவர்களின் மிரட்டல்களுக்கு நான் ஏன் ஆளாக வேண்டும்?

ஆனால், காலம் கடந்து விட்டதே!

காலம் கடந்து விட்டது என்றாலும், மதிய சாப்பாட்டை மூன்று மணிக்கேனும் சாப்பிடாமலா இருக்கிறோம்? கல்யாணமோ, சாவோ பிறகு போய் விசாரித்துக் கொள்வதில்லையா? காலம் ஒரு பிரச்சனையே இல்லை என்றார்கள் போன் காலர்கள்.

*

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம்.

மங்கள் வரதர் மஹால்.

குளிர் இல்லாத, ஆனால் காற்றில் இலக்கியவாதிகள் எப்போதோ விட்டுச் சென்ற பெருமூச்சுகள் மட்டுமே அடர்த்தியாக உறைந்திருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை.

மக்களுக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் செத்துப்போய்விட்டது என்பதை நிரூபிப்பதைப் போல, அந்த மாலை நேரத்திலும் அந்தப் பேச்சு அரங்கு காலியாகக் கிடந்தது. மனிதர்களை விட அதிக எண்ணிக்கையில் ஈக்கள் பறந்துகொண்டிருந்தன.

புத்தகக் காட்சி நடக்கும் அந்த மஹாலுக்குள் ஜன நடமாட்டத்தைக் காண்பது, அத்தி பூத்தாற்போல அல்ல, அத்தியே இல்லாத மரத்தில் பழம் காய்ப்பது போல அரிதாக இருந்தது.

பதிப்பகத்தார்கள் தங்களுடைய கடைகளுக்கு முன்னால், வியாபாரம் இல்லாத விரக்தியில், ஈக்களைக் கூட விரட்டச் சோம்பல்பட்டுக்கொண்டு டிஜிட்டல் இந்தியாவின் அடுத்தகட்டப் பரிணாமமாகச் செல்போன்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

விகடபாரதி ஒரு தீவிரமான ஆராய்ச்சியாளனைப் போல ஒவ்வொரு அரங்காக ஏறி இறங்கி, உலாவிக் கொண்டிருந்தான். அவனுக்குள் ஓர் ஆராய்ச்சி அரிப்பு எடுத்திருந்தது. தன் கையில் இருந்த குறிப்பேட்டில், மக்கள் அதிகம் விரும்பும் புத்தகம் என்று தமிழில் எழுதி, கீழே பிராக்கெட்டில் பீப்பிள் மோஸ்ட் வான்டட் புக்  என்று ஆங்கிலத்திலும் குறித்துக்கொண்டான். அந்த ஆங்கிலக் குறிப்பு அவனுக்கு ஒரு கௌரவத்தைக் கொடுத்தது.

வார நாட்களில் சீருடையில் அழைத்து வரப்பட்ட பள்ளிச் சிறுவர்கள், "டேய், அந்த காமிக்ஸ் அட்டையைப் பாருடா!" என்று கத்த, அவர்களை அழைத்து வந்த ஆசிரியரோ, "புத்தகத்தைத் தொட்டுப் பார்க்காதே, அழுக்காயிடும்" என்று மிரட்டி, தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பின் முன்னுரையை வாசித்துக்கொண்டிருந்தார். சிறுவர்கள் ஏதோ ஒரு கடையில், முகப்பில் கிடந்த பத்தே நாட்களில் ஆங்கிலம் பேசுவது எப்படி? புத்தகத்தை வாங்கி பையில் திணித்துக் கொண்டார்கள்.

பெரியவர்களும் வந்திருந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வீட்டில் படிக்காமல் வைத்திருக்கும் அதே பாரதியார் கவிதைகள் புத்தகத்தை, இப்போதும் அட்டைப் படம் மாறியிருக்கிறதா என்று திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு, தமிழ் வாழ்க என்று மனதுக்குள் வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.

விகடபாரதி தன் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்தினான்.

ஆங்கிலப் புத்தகப் பிரிவில் கொஞ்சம் மனிதர்கள். அநேகமாக அவர்கள் மத்திய பல்கலைக்கழக மாணவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில எழுத்தாளர்கள் எப்படியோ புத்தகம் போட்டு விற்றுத் தள்ளி விடுகிறார்கள். தமிழ்ப் பக்கமோ பயங்கரமான அமைதி.

இருந்தாலும் அதே பரமார்த்த குரு, அக்பர் பீர்பால், முல்லா, பஞ்ச தந்திரம் மற்றும் தெனாலிராமன். அதற்குப் பக்கத்தில் கல்கி, சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, சமையல் குறிப்புகள், ஜாதகம் பார்ப்பது எப்படி? சில பதிப்பகத்தார்கள் திருக்குறள், ஆத்திசூடி மற்றும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளையுத் ஆங்கில அகராதிகளையும் பளபள அட்டையில் போட்டு புது அலையை உருவாக்கி விட்ட திருப்தியில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

விகடபாரதியின் மண்டைக்குள் பளிச் என்று ஒரு ஞானோதயம் உதித்தது.

"ஏன் இந்தப் புத்தகக் கண்காட்சியில் புதிய நூல்களுக்குப் பஞ்சம்?" என்று அவன் மனம் கொந்தளித்தது.

வீடு வந்தவன், சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களை எடுத்து ஆங்காங்கே படித்தான். "அடடே! இந்தப் புத்தகக் காட்சிக்குப் போன புத்தகக் காட்சி பரவாயில்லை. போனதற்கு அதற்கும் போனது பரவாயில்லை." என்று பழைய நினைவுகளில் மூழ்கினான்.

மறுநாள் காலை.

விகடபாரதி ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பூர்வமான முடிவை எடுத்தான். "தமிழ் புத்தகங்களை நானே மீட்டெடுக்கிறேன்!" என்று, தன் வங்கியிலிருந்த மிச்சமீதிப் பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு, "இதுவரை வாங்காத புதிய தமிழ் புத்தகங்களை மட்டுமே வாங்குவேன்" என்ற புனித லட்சியத்தோடு மீண்டும் அதே அரங்கிற்குள் காலடி எடுத்து வைத்தான்.

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான். "ஐயா, போன புத்தகக் காட்சியில் இல்லாத புதிய தமிழ்ப் புத்தகம் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டான்.

ஒரு பதிப்பகத்தார் அவனை ஏற இறங்கப் பார்த்து, "தம்பி, இது தீவிர இலக்கியக் கடை. புது புக்கையெல்லாம் நாங்க புத்தகம் போடுறதில்ல. வாழ்க்கையோட கோர முகத்தை, துயரத்தைப் பிரதிபலிக்குறதுதான் இலக்கியம். வேணும்னா போன புத்தகக் காட்சியிலிருந்து இந்தப் புத்தக்காட்சி வரை விற்காத இந்தச் சவப்பெட்டியின் அழுகை நாவலை வாங்குங்க," என்றார்.

ஐந்து மணி நேரத் தீவிரமான, உயிரைக் கொடுக்கும் தேடலுக்குப் பிறகு, விகடபாரதி வாங்கிய மொத்தப் புத்தகங்களின் எண்ணிக்கை, பூஜ்ஜியம்.

உடலும் மனமும் சோர்ந்து, "தமிழ்நாட்டில் புதிய புத்தகங்களுக்கான தேவை செத்தே போய்விட்டது" என்ற இரங்கல் செய்தியை மனதுக்குள் எழுதியபடி வெளியிலிருந்த சிற்றுண்டி கடை பக்கம் வந்தான். அங்கே பயங்கரக் கூட்டம். புத்தகத் திருவிழா சோடை போனாலும் சிற்றுண்டித் திருவிழா சோடை போகவில்லை.

அங்கே, ஒரு பிரபல பதிப்பகத்தின் உரிமையாளர். அவர் கடைசியாக வெளியிட்ட புத்தகம், துயரங்களின் பள்ளத்தாக்கில் என் கண்ணீர். அவர் பெஞ்சில் உட்கார்ந்து, தன் தொப்பை குலுங்க, வாய்விட்டு, கண்ணீரே வரும் அளவுக்குச் சிரித்துக் ஆனந்தித்துக் கொண்டிருந்தார்!

விகடபாரதி திடுக்கிட்டான்.

ஓடிச் சென்று அவர் பாதங்களுக்கு அருகில் நிற்பது போல நின்று, "ஐயா! இலக்கியப் பெருந்தகையே! எந்தப் புதிய புத்தகத்தைப் படித்து இப்படி மெய்மறந்து ஆனந்திக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்கள், என் தமிழ்ச் சமூகம் பிழைத்துப் போகட்டும்!" என்று உணர்ச்சிவசப்பட்டுக் கேட்டான்.

அந்தப் பதிப்பகத்தார் தன் செல்போன் திரையை விகடபாரதியின் முகத்திற்கு நேரே நீட்டினார்.

அதில், வடிவேலுவை வைத்துச் செய்யப்பட்ட அட்டகாச மீம் ஒன்று. அவர் ஆனந்தத்ததை அடக்க முடியாமல் சொன்னார், "யோவ் தம்பி! யாருய்யா நீ? புத்தகக் கண்காட்சியில போய் யாராச்சும் புது புத்தகத்தைத் தேடுவாங்களா? புதுசுங்கறது இப்போல்லாம் வாட்ஸ்அப் மீம்ஸ்லேயும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்லயும் மட்டுமே இருக்க வேண்டிய விஷயம்! புத்தகத்துல பழசும் அரதப் பழசும் மட்டும்தான் இருக்கணும். போய் வேலையைப் பாருய்யா!"

விகடபாரதி கையில் வைத்திருந்த குறிப்பேட்டை மெல்லக் கீழே போட்டான்.

அரங்கின் வாசலில் இருந்த, வாசிப்பு மனிதனை உன்னதப்படுத்துகிறது என்ற பேனர், காற்றில் படபடவென அடித்துக்கொண்டு, அவனைச் செவுட்டு இழுப்பாக இழுப்பது போல இருந்தது!

*****

28 Jul 2026

இருட்டும் கட்டணமும் – ஓர் ஒப்பியல் ஆய்வு!

இருட்டும் கட்டணமும் – ஓர் ஒப்பியல் ஆய்வு!

மனிதன் நாகரிகமடைவதற்கு முன்பாக இருட்டைக் கண்டு பயந்தான்; நாகரிகமடைந்த பிறகு மின்சாரத்தைக் கண்டு பயப்படுகிறான்.

அன்றைக்கு இருட்டுக்குள்ளே பேய் இருக்கும் என்று நம்பினான். இன்றைக்கு மின்சாரப் பெட்டிக்குள்ளே மீட்டர் ஓடும் வேகம் பார்த்து, அதற்குள்ளும் ஏதோ ஒரு பேய் ஒளிந்திருக்கிறதோ என்று அஞ்சுகிறான்.

இருட்டு என்பது இயற்கையானது. அதை விரட்டுவதற்கு மின்சாரத்தைக் கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம். ஆனால், அந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து, அதை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பி வைப்பது மனிதனின் அதிபுத்திசாலித்தனம்.

இருளைக் கண்டு அஞ்சுபவன் மனிதன்; மின்கட்டணத்தைக் கண்டு அஞ்சுபவன் குடும்பஸ்தன்.

மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில், இரவில் வெளிச்சம் பெற தீப்பந்தங்களையும் விளக்குகளையும் பயன்படுத்தினார்கள். அதற்கு எண்ணெய் செலவானது. எண்ணெய் தீர்ந்து போனால் வெளிச்சம் போய்விடும்.

இன்றோ, கட்டணம் செலுத்தத் தவறினால் வெளிச்சம் போய்விடும். ஆக, காலம் மாறினாலும் செலவு குறைந்தால் வெளிச்சம் போகும் என்ற நியதி மட்டும் மாறவே இல்லை.

தாமஸ் அல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தபோது, உலகம் இருளிலிருந்து விடுதலையடைந்தது என்று பெருமூச்சு விட்டது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த வெளிச்சத்தை அளக்க மீட்டர் என்ற பொறி பொருத்தப்பட்டது.

மின்சார மீட்டர் என்பது ஒரு விசித்திரமான இயந்திரம். நாம் வீட்டில் இல்லாதபோதும் அது ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது.

மின் கட்டணத்துக்கு அமோக ஆதரவளிக்கும் வஸ்துகள் அகஸ்மாஸ்தாக ஒவ்வொரு வீடுகளிலும் உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்க்க வேண்டுமானால்…

குளிர்சாதனப் பெட்டி என்பது நாம் அறையைக் குளிர்விக்க பயன்படுத்துவது; ஆனால் கட்டணம் வரும்போது அது நம்மை வேர்க்க வைக்கிறது.

மின்விசிறி என்பது காற்றைத் தருவது போலத் தோன்றும், ஆனால் உண்மையில் அது மின்கட்டணத்துக்கான ரூபாய் தாள்களை உருவியெடுத்து நம் பையைத்தான் லேசாக்குகிறது.

தொலைக்காட்சி என்பது நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறதோ இல்லையோ, மீட்டரின் சுழற்சியை வேகப்படுத்துகிறது.

ஆக மொத்தத்தில், பழங்காலத்தில் இருட்டில் நடமாடப் பயந்த மனிதன், இன்றைக்கு மின்சாரப் பெட்டியின் அருகே செல்லவே பயப்படுகிறான்.

இருட்டு மனிதனின் கண் பார்வையை மட்டுமே பாதித்தது; ஆனால் மின்கட்டணமோ மனிதனின் நிம்மதியையே பாதிக்கிறது.

இருட்டு என்பது ஒரு தற்காலிகமான நிலை. சூரியன் வந்தால் அது போய்விடும். ஆனால் மின்கட்டணம் என்பது ஒரு நிலையான பிரமை; சூரிய ஒளி மின்னோட்டமாக மாறினாலும், அதற்கும் ஏதேனும் ஒரு வகையில் கட்டணம் வந்துவிடுகிறது.

எனவே, இருட்டைப் பார்த்து பயந்த மனிதன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தான். மின்கட்டணத்தைப் பார்த்து பயப்படும் மனிதன், அடுத்து எதைக் கண்டுபிடிப்பான் என்பதுதான் தற்போதைய கேள்வி!

இந்த ஆய்வு உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் இது போல இன்னும் பல ஆய்வுகள் செய்ய ஆவலோடு இருக்கிறேன். உங்கள் திருப்தியை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். ஆனால், அதற்குக் கொஞ்சம் மின்சாரம் செலவாகும்.

*****

ரிப்பர் சந்திரனும், தத்துவக் குசுமாஞ்சலியும்!

ரிப்பர் சந்திரனும், தத்துவக் குசுமாஞ்சலியும்!

இன்று நாம் பார்க்கப்போவது ஜெயமோகனின் ஒரு தத்துவார்த்தக் கொலைக் காவியம். பொதுவாக ஒரு சீரியல் கில்லரைப் பற்றிப் பேசினால் க்ரைம் த்ரில்லர் பாணியில் ரத்தம், சதை, போலீஸ் சேஸிங் என்றுதான் போவார்கள். ஆனால், ஜெயமோகனோ, ஓட்டு வீட்டின் ஓட்டை வழியாக உள்ளே புகுந்த ஒரு கொடூரத் திருடனை, அப்படியே மெல்லத் தூக்கிச் சென்று பீகாரில் கி.பி 975 இல் பிறந்த உதயணரின் நியாய குசுமாஞ்சலி தத்துவத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார் பாருங்கள். அங்கேதான் அவர் நிற்கிறார்!

சந்திரனின் கொலை பாணி ரொம்பவே நுட்பமானதாம். கழுத்துக்குப் பின்னால், முகுளத்துடன் மூளை இணையும் புள்ளியில் கீழிருந்து மேல் நோக்கி ஒரே அடி. அடிபட்டவர் முனகக்கூட மாட்டாராம். பக்கத்தில் தூங்குபவருக்கும் கேட்காதாம்.

அடடே, என்ன ஒரு புரொபஷனலிசம்! இதைக் கேட்கும்போது நமக்குக் கொலைகாரன் மேல் கோபம் வரவேண்டுமா, அல்லது அவனுடைய அனாடமி  அறிவைப் பார்த்து வியந்து மெடிக்கல் கவுன்சில் விருது கொடுக்க வேண்டுமா என்றே தெரியவில்லை.

சந்திரனுக்குப் படிப்பறிவு இல்லை, அவனுக்கு லண்டன் ஜாக் தி ரிப்பர் பற்றித் தெரிய வாய்ப்பில்லை, ஆனாலும் வரலாறு அவர்கள் இருவரையும் இணைத்துவிட்டது என்கிறார் ஜெமோ.

உலகத்தில் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுப் படித்து, பிஎச்.டி வாங்கி, வெளிநாடு போய் வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பிடிக்கப் போராடுகிறார்கள். ஆனால், இந்தச் சந்திரன் நீலேஸ்வரத்தில் பிறந்து, கர்நாடகாவில் திம்மையாவிடம் இன்டர்ன்ஷிப் முடித்து, இரும்புக்கம்பியைத் தூக்கிய ஒரே காரணத்திற்காகப் பிரிட்டன் ஜாக்குடன் க்ளோபல் கொலாபரேஷன் செய்துகொண்டான் பாருங்கள்.  அதுதான் ரியல் திறமை!

காந்தியவாதியும் அறிஞருமான சுகுமார் அழீக்கோடு, சந்திரனுக்குக் கருணை காட்டலாம் என்ற நல்ல எண்ணத்தோடு சிறைக்குப் போகிறார். “நீ பெண்களைக் கொடுமைப்படுத்தினாய் அல்லவா?” என்று கேட்க, சந்திரன் அரைக்கணம் புன்னகைக்கிறான். அவ்வளவுதான். அழீக்கோடு நடுங்கி, கைகூப்பி ஓடியே வந்துவிட்டார்.

ஒரு சீரியல் கில்லரிடம் போய் “நீ தப்பு பண்ணினேதானே?” என்று கேட்டால், அவன் என்ன “ஆமாங்கய்யா, தப்புதான்” என்று அழுதுகொண்டா இருப்பான்? அவன் லேசாகச் சிரித்ததற்கே நம் அறிவுஜீவி நடுங்கி ஓடிவந்துவிட்டார் என்றால், இவர்களெல்லாம் எப்படித்தான் உலக தத்துவங்களை அலசி ஆராய்கிறார்களோ? அந்தச் சிரிப்புக்கு பின்னால் இருந்த நெக்ரோபிலியா மேட்டரை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டைப் பார்த்துப் புரிந்துகொண்ட பிறகுதான், ஊரே விவாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

சிறை அதிகாரி சொல்கிறார், “அவனுக்கு அழிவில்தான் இன்பம். ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஒரு வீட்டில் ஒன்றுமே கிடைக்காமல் திரும்பியிருக்கிறான். கொல்லாதே என்று அவனிடம் சொல்வது, நீ மகிழ்ச்சியாக இருக்காதே என்று சொல்வது போல.”

அடப்பாவிகளா! திருடப் போன இடத்தில் காசு, பணம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஐந்து பேரைக் கொன்ற மனநிறைவோடு திரும்பியிருக்கிறான் அந்த உத்தமன். அவனுடைய ஹேப்பினஸ்ஸில் நாம் தலையிடக் கூடாதாம். என்ன ஒரு மனிதநேயம்!

கதை இங்கேயே முடிந்திருந்தால் அது வெறும் க்ரைம் நியூஸ். ஆனால், ஜெமோ ஆற்றூர் ரவிவர்மாவுடன் மாலையில் வாக்கிங் போகும்போது, “மனிதன் எப்படி இரக்கமில்லாமல் இருக்க முடியும்?” என்று கேட்கிறார். அதற்கு ஆற்றூர், “சம்ஹார பாவம் கடவுளின் இயல்பு, அவனில் அது மட்டும்தான் இருந்தது என்கிறார்.

அதற்கடுத்த சில வருடங்களில் ஜெமோ நியாய குசுமாஞ்சலி படிக்கிறார்.

அப்போது ஜெமோவுக்குப் பல தரிசனங்கள் ஏற்படுகின்றன.

 உலகில் பூகம்பம், பேரழிவு நடப்பதால்தான் கடவுள் பிரபஞ்ச பேராற்றலாக இருப்பதாக அர்த்தமாகிறதாம்.

நாம் மாத்திரை சாப்பிட்டு கோடிக்கணக்கான பாக்டீரியாக்களைக் கொல்வதில்லையா? புலி மானைக் கொல்வதில்லையா? எனவே, சந்திரனுக்குள் இருந்த குரூரமும் அந்தப் பிரபஞ்ச அழிவுச் சக்தியின் ஒரு பகுதிதான் என்று தரிசனம் காண்கிறார் ஜெமோ.

என்ன ஒரு கனெக்சன்! காய்ச்சலுக்கு நாம் போடும் பாராசிட்டமால் மாத்திரையையும், காட்டில் மான் வேட்டையாடும் புலியையும், நள்ளிரவில் ஏழைகளின் ஓட்டைப் பிரித்து மண்டையை உடைக்கும் ரிப்பர் சந்திரனையும் ஒரே தராசில் வைத்து, அதற்கு சம்ஹார பாவம் என்று லேபிள் ஒட்டி, பிரபஞ்சப் பேராற்றலின் மகா பிளான் என்று விளக்கியிருக்கிறார் பாருங்கள். அங்கேதான் தத்துவம் நம்மைத் தலைசுற்ற வைக்கிறது!

இனிமேல் யாராவது வீட்டில் திருட வந்தாலோ அல்லது தலையில் அடிக்க வந்தாலோ, நாம் பதற்றப்படக் கூடாது. “அப்படியே நில்லுங்கள் சகோதரரே, நீங்கள் செய்வது பிரபஞ்சத்தின் ஆக்கவிசைக்கு எதிரான அழிவுவிசை . நீங்கள் வெறும் கரும்பாறை, எல்லாப் பக்கமும் மூடியிருப்பவர். உங்கள் மகிழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை. அடித்துவிட்டுப் போங்கள்!” என்று தத்துவார்த்தமாகச் சரணடைந்துவிட வேண்டும் போல!

கடைசியாக அந்தச் சிறை அதிகாரி சந்திரனிடம் பேசிவிட்டு, ஏதோ இருட்டு தெய்வத்தைப் பார்த்தது போல நடுங்கிக்கொண்டே நேராகக் கோயிலுக்குப் போய் கும்பிட்டுவிட்டுத் தூங்கப் போனாராம்.

நாமும் இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு, “ஒரு சீரியல் கில்லரின் கொடூர புன்னகைக்குள்ளும், பிணத்துடன் உடலுறவு கொள்ளும் வக்கிரத்துக்குள்ளும் இப்படியொரு வேதாந்த தத்துவ தரிசனம் ஒளிந்திருக்கிறதா?” என்று வியந்து, நேராகக் கணினியை மூடிவிட்டு கடவுளே, என்னை இந்தத் தத்துவவாதிகளிடமிருந்து காப்பாற்று என்று கும்பிட வேண்டியதுதான்!

*****

27 Jul 2026

ஊன் சோற்று மனிதர்கள்!

ஊன் சோற்று மனிதர்கள்!

நாகேசுவரனுக்குள் அதிர்வு ஏற்பட்டது, ஒரு பூகம்பத்தின் ரிக்டர் அளவில் இல்லை; பழைய சோற்றில் ஊறுகாய் விழுந்தால் ஏற்படும் ஒரு சிறிய கிளர்ச்சி போல.

சின்ன கடைத் தெருக் கோடியில் ஒரு புது பிரியாணி கடை.

சங்க காலத்தில் போருக்குப் போன வீரன் ஊன் சோறு தின்றானாம். நெய்யும் மசாலாவும் மணக்க அதை உண்டானாம். அதைத்தான் இப்போது பிரியாணி என்கிறார்கள்.

பிரியான் என்றால் பாரசீகத்தில் வறுப்பது என்று அர்த்தமாம். முகலாயர்களும் நிஜாம்களும் தம் வயிற்றுப் பெருக்கத்திற்காகக் கண்டுபிடித்த அந்த பிலாப், இன்று நாகேசுவரனின் தெருவையே ஆக்கிரமித்திருந்தது.

தமிழ்நாடே பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு பிரியாணி தின்கிறதாம். இதில் தெருவோரக் கடைகள் மட்டுமே ஏழாயிரத்து ஐந்நூறு கோடியைச் சுருட்டுகின்றனவாம்.

மக்களுக்கு உணவின் மீதிருக்கும் மோகமா, அல்லது தம் அந்தஸ்தைக் காட்டிக்கொள்ளும் வெறியா? நாகேசுவரனுக்குள் தத்துவார்த்தமான கேள்விகள். காதணி விழா முதல் காரிய கருமாதி வரை இப்போது பிரியாணிதான் பிரதானம்.

அன்று மாலை. தெருவோரக் கடைக்காரன் தாண்டவராயன் தம் பிரியாணி பானையைத் திறந்தான்.

வாசனை நாகேசுவரனின் மூக்கைத் துளைத்தது. ஆனால், அந்த வாசனையின் அடிவயிற்றில் ஏதோ ஒரு அழுகல் மணம் ஒளிந்திருப்பதாக அவருக்குப் பட்டது. வடமாநிலத்து ரயில்களில் பனிக்கட்டிக்குள் அடைக்கப்பட்டு, உற்பத்தித் தேதியே இல்லாமல் வரும் ஆட்டிறைச்சிகள். மதுரையில் ஏதோ ஒரு ஹோட்டலில் 1200 கிலோ கெட்டுப்போன இறைச்சியைக் கைப்பற்றினார்களாம்.

மனிதர்கள் இறைச்சியை உண்கிறார்களா, அல்லது இறைச்சி மனிதர்களை உண்கிறதா? நாகேசுவரனுக்குள் மீண்டும் ஒரு தத்துவம்.

நாகேசுவரனின் தம்பி கணேசன் தினமும் பிரியாணி தின்பவன்.

"ஏன்டா, டால்டாவும் டிரான்ஸ்பேட்டும் உன் ரத்தக் குழாய அடைச்சு, மாரடைப்பு வந்தாத்தான் அடங்குவியா? தினமும் எதையாவது தின்னுட்டு வாந்தி, பேதின்னு கிடப்பியா?" என்றார் நாகேசுவரன்.

"அண்ணே, ருசிண்ணே. அந்த வாசனையண்ணே!" என்றான் கணேசன், தன் அறியாமையை ரசித்தபடி.

"ருசி இல்லைடா அது. உன்னைக் கொல்லும் விஷம்! அளவுக்கு மீறினா அஜீரணம், சர்க்கரை நோய், இதய நோய்னு வரிசையா வரும். போன வருஷத்துல மட்டும் அஞ்சு பேர் கெட்டுப்போன கறியைத் தின்னு செத்துப் போயிருக்காங்க. ஐந்நூறு பேருக்கு மேல ஆஸ்பத்திரியில கிடந்திருக்காங்க!"

தமிழகம் முழுக்க பல லட்சம் கடைகள். முப்பத்தெட்டாயிரம் கடைகளில் சோதனையிட்டு, அய்யாயிரம் கிலோ அழுகிய கறியைப் பிடித்து, ஒன்னரை கோடி ரூபாய் அபராதம் போட்டாலும், தாண்டவராயன்களும் பெரிய முதலாளிகளும் மாறுவதாயில்லை.

நாகேசுவரன் தன் சட்டைக் பையிலிருந்த சுருங்கிய காகிதத்தை எடுத்தார். அதில் ஒரு எண் குறிக்கப்பட்டிருந்தது. உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண். புகார் அளிக்கலாம் என்று போட்டிருந்தது.

அவர் போனை எடுத்தார். எண்ணைத் தட்டச்சினார். அப்புறம் என்ன நினைத்தாரோ, விரல்கள் தங்கிவிட்டன.

சுற்றிலும் பார்த்தார். தாண்டவராயன் கடையில் பிரியாணி வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த மனிதர்களின் முகங்களில் பசியை விட, ஏதோ ஒரு விவரிக்க முடியாத அவசரம் தெரிந்தது. அவர்கள் எதை உண்கிறோம் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை; நாவிற்குத் தரும் அந்த சில நிமிடக் கிளர்ச்சிதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.

நாகேசுவரன் பெருமூச்சுடன் போனை வைத்தார்.

தொலைவில் பிரியாணி பானையின் மூடி திறக்கப்படும் சத்தம் கேட்டது. புகை மண்டலத்திற்குள் மனிதர்கள் தம் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் மறந்து மூழ்கிக் கொண்டிருந்தார்கள். நாகேசுவரனும் தன் மீதமிருந்த ஆயுளை எண்ணியபடி அமைதியாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

*****

ஒரு ஸ்டார்ட் அப்பின் முடிவு!

ஒரு ஸ்டார்ட் அப்பின் முடிவு!

அந்த அறையில் ஏசி 16 டிகிரியில் ஓடிக் கொண்டிருந்தது. நடுவே, மேஜையின் மேல் இரண்டு லேப்டாப்கள்.

கார்ப்பரேட் உடையில் அமர்ந்திருந்த அரவிந்த் சுப்பிரமணியம், தனது காபி கப்பை உதட்டுக்குக் கொண்டு சென்றபடி எதிரே அமர்ந்திருந்த முனியசாமியைப் பார்த்தார்.

முனியசாமி சிவகாசி ஸ்டார்ட் அப்பின் புதுவரவு. அவரது தாத்தா அச்சுக்கூடங்களில் ஈயம் கோர்த்தவர்; அப்பா பட்டாசு ஆலைகளில் மருந்து கலந்தவர். முனியசாமி ஒரு படி மேலே போய், செயற்கை நுண்ணறிவு மூலம் சுயம்பாக வெடிக்கும் பட்டாசு அல்காரிதம் ஒன்றைக் கண்டுபிடித்திருந்தார்.

"பாருங்க முனியசாமி!" அரவிந்த் குரலைத் தாழ்த்தி, ஒரு குருவைப் போலப் பேசத் தொடங்கினார். "உங்ககிட்ட ஐடியா இருக்கு. சிவகாசியோட பாரம்பரிய உழைப்பு இருக்கு. ஆனா, முதலீட்டு ஞானம்? அது உங்ககிட்ட இல்லை. செபி பதிவு பெற்ற பண்டுகள்ல 12 லட்சம் கோடி சும்மா சுத்திட்டு இருக்கு. ஆனா தமிழ்நாட்டுல ஒரே ஒரு யூனிகார்ன்தான் வந்துருக்கு. ஏன் தெரியுமா?"

முனியசாமி பயபக்தியுடன் கேட்டார், "ஏன் சார்?"

"ஏன்னா, உங்களுக்கு பேலன்ஸ் ஷீட் போடத் தெரியல. ரிசர்வ் வங்கியோட எப்.டி.ஐ வழிகாட்டுதல் தெரியல. சிலிக்கான் வேலியிலயும், சிங்கப்பூர்லயும் இருக்கிற நம்ம தமிழ் பணக்காரங்களோட பணத்தைக் கொண்டு வரத் தெரியல! உங்களுக்கு ஒரு வழிகாட்டி தேவை!"

அரவிந்த் பேசி முடித்தபோது, முனியசாமியின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. "சார்! நீங்கதான் என் வழிகாட்டி. நீங்க சொல்ற மாதிரி என் கம்பெனியக் கட்டமைச்சு, செபி விதிகளுக்கு உட்பட்டு, அந்த 12 லட்சம் கோடியில ஒரு 100 கோடியை வாங்கித் தாங்க சார்! சிவகாசியைச் சிலிக்கான் வேலியா மாத்துறேன்!" என்றார்.

அரவிந்த் சுப்பிரமணியத்துக்குக் கண்கள் வேர்த்தன.

*

அடுத்த மூன்று மாதங்கள் சூப்பர் கம்ப்யூட்டர் வேகத்தில் ஓடின.

அரவிந்த் தீவிரமாக உழைத்தார். முனியசாமியின் நிறுவனத்திற்குப் புதுப் புது ஆடிட்டர்களை வரவழைத்தார். செபி விதிகளின்படி கணக்குகளைச் சீரமைத்தார். சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் ஜூம் மீட்டிங் போட்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் சிக்கலான விதிகளை எளிமைப்படுத்திக் காட்டி, முதலீட்டை உறுதி செய்தார். முனியசாமியை ஒரு யூனிகார்ன் நிறுவனத்தின் சி.இ.ஓவாகவே மாற்றிவிட்டார்.

அனைத்து சட்டப்பூர்வ ஒப்பந்தங்களும் தயார். செபி அங்கீகரித்த பண்டிலிருந்து 100 கோடி ரூபாய் முனியசாமியின் ஸ்டார்ட் அப் வங்கிக் கணக்கிற்கு மாற வேண்டிய இறுதி நாள் வந்தது.

*

அரசு அமைப்பின் குளிரூட்டப்பட்ட மாநாட்டு அரங்கில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், செபி அதிகாரிகள், அரவிந்த் மற்றும் முனியசாமி அனைவரும் கூடி இருந்தனர்.

அரவிந்த் பெருமிதத்தோடு முனியசாமியைப் பார்த்துச் சொன்னார், "முனியசாமி, அந்த டிஜிட்டல் கையெழுத்தைப் போடுங்க. தமிழகத்தின் அடுத்த யூனிகார்ன் பிறந்துருச்சு!"

முனியசாமி லேப்டாப் திரையைப் பார்த்தார். பேனா போன்ற ஸ்டைலஸைக் கையில் எடுத்தார். பிறகு திடீரென நிறுத்தினார்.

அறையில் அமைதி நிலவியது. "என்ன முனியசாமி, என்ன ஆச்சு?" என்றார் அரவிந்த் பதற்றத்துடன்.

முனியசாமி நிதானமாக லேப்டாப்பை மூடினார். அரவிந்தைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் கார்ப்பரேட் நளினம் இல்லை; முதலாளிகளின் பரம்பரைத் தந்திரம் மட்டுமே இருந்தது.

"அரவிந்த் சார். இவ்வளவு நாள் நீங்க சொன்ன சட்ட விதிமுறைகள், செபி கைடுலைன்ஸ், பேலன்ஸ் ஷீட் ஸ்ட்ரக்சர் எல்லாத்தையும் ரொம்ப தெளிவா எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ். ஆனா, இந்த 100 கோடி முதலீட்டுக்கு கையெழுத்துப் போட்டா, என் கம்பெனியோட நாற்பது சதவீத பங்கை அந்த பண்டுக்கு எழுதித் தரணும். கரெக்ட்டா?"

"ஆமா முனியசாமி, அதான் வழக்கம்." என்றார் அரவிந்த்.

"அங்கதான் சார் நீங்க தப்புப் பண்றீங்க!" என்றார் முனியசாமி.

மடியிலிருந்த தனது பழைய டைரியை எடுத்த முனியசாமி தொடர்ந்தார், "நீங்க சொன்ன மாதிரி நம்ம தமிழ்நாட்டுல முதலீட்டு ஞானம் கம்மிதான். ஆனா, வார்த்தைக்கு மதிப்பளிச்சு கோடி ரூபாயைக் கடனாத் தர்ற கரூர் கைத்தறி வியாபாரிகளும், கூட்டு முதலீடு பண்ற திருப்பூர் நெசவாளர்களும் என் சொந்த மாமா, மச்சாங்காரனுங்க சார்!"

அரவிந்த் அதிர்ச்சியில் உறைந்தார்.

"நீங்க கம்பெனியை எப்படி லீகலா கட்டமைக்கணும்னு கத்துக் கொடுத்த அந்த மூணு மாசத்துல. என் மாமாக்கள், மச்சான்கள் 50 பேரை வச்சு ஒரு சீட்டுக்கட்டு கூட்டியே உங்களோட செபி, கிபியை விடக் கம்மி வட்டிக்கு 100 கோடியை ரொக்கமா ரெடி பண்ணிட்டேன் சார்! கம்பெனி பங்கையும் யாருக்கும் தரத் தேவையில்ல!"

முனியசாமி அரவிந்தின் தோளைத் தட்டினார்.

"செபி சட்டதிட்டம் தெரியாம இருந்ததுதான் சார் எங்களுக்குப் பிரச்சனை. அதைத்தான் நீங்க சூப்பரா கத்துக் கொடுத்துட்டீங்களே! வட்டிக்கு ஆள் புடிக்கிறது எங்க பரம்பரை ரத்தம் சார். வர்றேன்!"

முனியசாமி லேப்டாப்பைத் தூக்கிக் கொண்டு மாநாட்டு அரங்கிலிருந்து வெளியேற, அரவிந்தின் கையிலிருந்த காபி கப் அப்படியே உறைந்து போயிருந்தது!

*****

ஜனநாயகன் – தியேட்டரில் ஒரு தேர்தல்!

ஜனநாயகன் – தியேட்டரில் ஒரு தேர்தல்!

தமிழ் சினிமாவில் அரசியல்வாதியாக மாறுவதற்கும், சினிமாவில் அரசியல் பேசுவதற்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இரண்டுக்குமே கொஞ்சம் கைத்தட்டல், நாலு டைமிங் வசனங்கள், அப்புறம் ஒரு பழைய பாட்டு ரீமிக்ஸ் இருந்தால் போதும். ஜனநாயகன் படமும் அந்த மரபை மிக நேர்த்தியாகப் பின்பற்றுகிறது.

மலைக் கிராமத்தில் பிறந்து, படிப்பால் உயர்ந்து, செய்யாத குற்றத்துக்குச் சிறைக்குப் போய், கடைசியில் அதே சிறைக்கே பாதுகாவலராகவும் வரும் விசித்திரமான காவல்துறை அதிகாரிதான் படத்தின் நாயகன்.

இதற்கு இடையில் கதையின் ஒரு பாத்திரம் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகி, வழக்கம் போல ஒரு விபத்தில் இறந்து போகிறது. போவதற்கு முன்னால் அந்தப் பாத்திரம், "என் மகளை ராணுவத்தில் சேர்த்துவிடு" என்று நாயகனிடம் ஒரு கோரிக்கை வைக்கிறது. நாயகனும் ஒரு டியூஷன் வாத்தியார் போல அந்த மகள் பாத்திரத்துக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார்.

இன்னொரு பக்கம், ஆப்பிரிக்காவில் பல கொலைகளைச் செய்து அந்த நாட்டையே சுடுகாடாக்கிய வில்லன், இந்தியக் கடற்படையைத் தாக்கி நாட்டிற்குள் நுழையச் சதி செய்கிறார். இந்தச் சூழலில், வில்லன் பாத்திரத்திடம் தெரிந்தோ தெரியாமலோ மாட்டிச் சீரழியும் மகள் பாத்திரத்தைக் காப்பாற்ற நாயகன் மீண்டும் ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார்.

அதென்னவோ இந்தப் படத்திலும் வில்லன்களுக்கு எப்போதும் ஹீரோவின் ஆட்களைத் தவிர வேறு யாரையுமே கொல்லத் தோன்றுவதில்லை!

வில்லன் கூட்டமெல்லாம் நாயகனுக்கு பில்டப் கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் நடந்து கொள்கிறார்கள். எதிரே நிற்கும் வில்லன்களே "அவன் சாதாரண ஆள் இல்லப்பா!" என்று பேசிப் பேசி நாயகனை உயர்த்தும் பழைய தொண்ணூறுகளின் தமிழ் சினிமா பார்முலா இதில் இன்னும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது.

நவீன தமிழ் சமூகம் தனது பிம்பங்களை உருவாக்கிக் கொள்வதும், பிறகு அதே பிம்பங்களின் காலடியில் விழுந்து வணங்குவதும் ஒரு விசித்திரமான ஆட்டம். ஜனநாயகன் திரைப்படமும் இந்த ஆட்டத்தின் ஒரு பிரம்மாண்டமான தொடர்ச்சிதான். இங்கே சினிமா என்பது கலை வடிவமாக இல்லாமல், ஓர் அரசியல் பிரசாரத்தின் வண்ணமயமான சுவரொட்டியாகத் தன் உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது

படத்தின் இயக்குநர் மக்களின் நலன் பேணாத சர்வதேச முதலாளித்துவத்தையும், வாக்காளர் மற்றும் அரசியல்வாதி இடையிலான நுகர்வு உறவையும் தொட்டுப் பேச முற்படுகிறார். ஆனால், அது காட்சிகளாக உருப்பெறாமல் பெரும்பாலும் நீண்ட வசனப் பிரசங்கங்களாக மட்டுமே எஞ்சிநிற்கிறது. சிந்தனைகளை உரையாடலாக மாற்றுவதற்கும், மேடைப் பேச்சை திரையில் ஒப்பிப்பதற்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டை படம் பல இடங்களில் கடந்துவிடுகிறது.

தெலுங்கின் பகவந்த் கேசரி கதையின் விதையை எடுத்துக்கொண்டு, அதன் மேல் அரசியல், சமூகப் பிரச்சினைகள், பெண் பாதுகாப்பு, எமோஷன், ஆக்‌ஷன் என பல வண்ணப் பூச்சுகளைப் பூசியிருக்கிறார் இதன் இயக்குநர்.

ஜனநாயகன் என்பது சினிமா என்ற கலை வடிவத்தின் வழியாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதா என்றால் சந்தேகம்தான். ஆனால், ஓர் அரசியல் நகர்வாகவும், ரசிகர்களின் உணர்ச்சிப் பெருக்கைத் மூலதனமாகக் கொண்ட நுகர்வுப் பண்டமாகவும் தன் இலக்கைக் கச்சிதமாக அடைந்துவிடுகிறது!

திரையரங்கின் இருளுக்குள் நுழையும் போது, நாம் ஒரு கதையைக் கேட்கப் போகிறோமா அல்லது ஒரு பிம்பத்தின் ஊர்வலத்தைப் பார்க்கப் போகிறோமா என்ற கேள்வி எழுந்தால், அதற்கு ஜனநாயகன் அந்த இரண்டாம் தேர்வைத்தான் தன் தோள்களில் பலவந்தமாகச் சுமந்து நிற்கிறது.

ஒரு கலைஞன் தன் கலைக்கு உண்மையாக இருக்கும் வரைதான் அவன் விஸ்வரூபம் எடுக்கிறான். ஆனால், கலை ஒரு மனிதனின் பிம்பத்தைக் கட்டமைக்கும் ஏவலாளாக மாறும் போது, அங்கே கலை மெல்ல மெல்ல மௌனமாகி விடுகிறது.

நாம் கொண்டாட்டங்களை விரும்புபவர்கள். நமக்கு நிஜங்களை விட, நிஜங்களைப் போலக் காட்டப்படும் பிரமைகள்தாம் உற்சாகம் அளிக்கின்றன. ஜனநாயகன் ரசிகர்களுக்கான கொண்டாட்ட அரங்கைத் திறந்து வைக்கிறது; ஆனால், திரை அணைந்த பிறகு வீட்டிற்கு உடன் வர வேண்டிய ஆழமான மனித அனுபவத்தை அது தர மறுக்கிறது.

*****

26 Jul 2026

மேஜைக்கடியில் காந்தி!

மேஜைக்கடியில் காந்தி!

நகராட்சியின் இரும்பு நாற்காலிக்கு வாதநோய் வந்து பல வருடங்களாகிவிட்டன. வெயில் தாங்காமல் அது ஈனஸ்வரத்தில் முனகியபோதெல்லாம், "நான் இருக்கேன்டி செல்லம்" என்று ராமலிங்கம் தன் பிட்டத்தால் அதை அணைத்துக் கொண்டார்.

அவர் மேஜையில் இருந்த மனுக்களுக்கு அடியில் எப்போதும் ஓர் ஐந்நூறு ரூபாய் தாள் அரைப் பிரசவ நிலையில் தலைநீட்டிக்கொண்டிருக்கும். ராமலிங்கம் அதைத் தொடுவதும், விரல்கள் பட்டுப்போன பூச்சிகளைப் போலப் பின்வாங்குவதும் கடந்த இருபது வருடங்களாக நடக்கும் ஒரு சின்னஞ்சிறு நாடகம்.

உள்ளே நுழைந்தார் தலைமை எழுத்தர் சபாபதி. அவர் குரலில் எப்போதும் ஒரு கிலோ வனஸ்பதி தடவியிருக்கும்.

"என்ன யோசனை ராமலிங்கம்?"

"இல்லை சபாபதி. சமூகத்தில் தெருவில் திருடுபவனை அடித்துத் துவைக்கிறார்கள். கோடிகளில் சுருட்டுபவனுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?"

சபாபதி லேசாகச் சிரித்தார். "திருடுறவனுக்கு அதிகாரப் பின்புலம் இல்லை ராமலிங்கம். ஊழல் பண்றவனுக்கு அதிகாரம் இருக்கு. அதிகாரத்தைப் பார்த்துக் கும்பிடு போடுவது நம் டி.என்.ஏவிலேயே ஊறிப்போன ஜீன். பெண்டாட்டி, பிள்ளை குட்டி என்று சுயநலம் இருக்கும் வரை எந்த நாயாலும் இந்த பயத்தை ஒழிக்க முடியாது."

"ஆனால், பயம் நிலையானது இல்லையே?" என்றார் ராமலிங்கம், ஒரு தத்துவ ஞானியின் போஸைக் கஷ்டப்பட்டு வரவழைத்தபடி.

*

அன்று மாலை ஊரின் மைதானத்தில் ஒரு ரட்சகன் தோன்றியிருந்தார்.

"யார் லஞ்சம் கேட்டாலும் செருப்பைக் கழற்றி, மன்னிக்கவும், தர முடியாது என்று துணிச்சலாகச் சொல்லுங்கள்! அரசாங்கம் உங்களுடையது, நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்!"

மேடையில் ஒலித்த அந்த புதிய அதிகாரத்தின் குரல், அங்கிருந்த இளைஞர்களின் கண்களில் உடனே ஏதோ ஓர் எக்ஸ்ட்ரா வெளிச்சத்தை ஏற்றிவைத்தது. ராமலிங்கத்தின் மகன் கார்த்திக், தன் கைபேசியில் அதை நேரலையாகப் பதிவிட்டு, உலகெங்கும் உள்ள தன் நண்பர்களுக்குப் பகிர்ந்து, தனக்கான லைக்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிற்கு வந்ததும் கார்த்திக் வீராப்பு பேசினான். "அப்பா, இது வெறும் பேச்சு இல்லை. மேலிருக்கிற அதிகார மரத்தின் ஆணிவேரையே வெட்டப் போகிறார்கள். இனிமேல் நாங்களும் சும்மா இருக்கப்போவதில்லை. பல கோடி கண்கள் கண்காணிப்பில் இறங்கும்!"

ராமலிங்கம் பதில் பேசாமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். காலத்தின் நதியில் ஏதாவது புதுக் குப்பை மிதந்து வருகிறதா என்று பார்க்கத் தானும் தயார் என்பது போல ஒரு மெல்லிய நம்பிக்கை அவர் மனதிலும் துளிர்த்தது.

*

அடுத்த நாள் காலை.

நகராட்சி அலுவலகம்.

அதே வாதநோய் நாற்காலி.

மேஜை மீது அதே மனு.

அடியில் அதே ஐந்நூறு ரூபாய்.

மனுவைக் கொண்டு வந்தவர் லேசாகக் கண் சிமிட்டி, "கொஞ்சம் சீக்கிரம் முடியுங்களேன்" என்றார்.

நேற்றைய மேடைப் பேச்சும், மகனின் வீராப்பும் ராமலிங்கத்தின் மனக்கண் முன் கவாத்து அடித்தன.

ராமலிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்தார். காந்தியைப் போலத் தன் முதுகெலும்பை நேராக்கினார். அந்த ஐந்நூறு ரூபாய் தாளை அப்படியே எடுத்தார். நபரிடம் திருப்பிக் கொடுத்து, "லஞ்சம் கொடுக்காதீர்கள். இது உங்கள் உரிமை!" என்றார்.

அந்த மனிதர் திகைக்கவில்லை. அதற்குப் பதிலாக, "யோக்கிய சிகாமணி. சரி, அப்ப வேலையப் பாருங்க" என்று லேசான எள்ளலுடன் சிரித்துவிட்டுத் தாளைப் பையில் போட்டுக் கொண்டு நகர்ந்தார்.

*

மதியம் இரண்டு மணி.

சபாபதி ஒரு காகிதத்தோடு வந்தார். "ராமலிங்கம், உங்களை உடனடியா பி பிரிவுக்கு மாத்தியாச்சு. அங்கே பழைய கிழிஞ்ச கோப்புகளைக் தூசி தட்டி அடுக்குற வேலை."

ராமலிங்கம் அதிர்ச்சியடைந்தார். "ஏன் சபாபதி? நான் என் கடமையைத்தானே செய்தேன்?"

சபாபதி பரிதாபமாகப் பார்த்தார். "காலையில உன்கிட்ட காசு கொடுத்தாரே. அவரு நேத்து மேடையில் பேசினாரே ஒரு ரட்சகன், அவரோட சொந்த மச்சான். லஞ்சம் வாங்காதேன்னு மேடையில் பேசறது மக்களுக்குத் தர்ற ஒருவித போதை மருந்து ராமலிங்கம். ஆனா அந்த சிம்மாசனத்தைச் சற்றே அசைக்கப் பார்த்தாலும், அதே கைதான் வந்து உன் தலையில் அடிக்கும்."

*

மாலை வீட்டில் கார்த்திக் சோகமயமாய் உட்கார்ந்திருந்தான்.

"என்னப்பா ஆச்சு? உங்களை ஆபீஸ்ல மிரட்டுனாங்களாமே? நான் சோஷியல் மீடியால போஸ்ட் போடலாம்னு பார்த்தா, நம்ம ஏரியா இளைஞர் மன்றத்துல இருந்து போன் பண்ணி இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனை, பேசாம இருங்கன்னு சொல்றாங்க அப்பா. போன் பண்ணது வேற யாரும் இல்லை, நேத்து என் கூடவே வந்து கைதட்டுன என் நண்பன்தான்," என்றான். அவனது குரலில் நேற்றிருந்த புரட்சி வடிந்து, ஒருவித அச்சு பிசகாத பயம் எட்டிப்பார்த்திருந்தது.

ராமலிங்கம் மெல்ல நடந்து சென்று ஜன்னல் அருகில் நின்றார். தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்தார். காலியாக இருந்தது.

நாளை மீண்டும் அதே இரும்பு நாற்காலியில் அமர்ந்து, மனுக்களின் அடியில் எட்டிப் பார்க்கும் ஐந்நூறு ரூபாய் தாள்களை எவ்வித சலனமுமின்றி, நாகரிகமாகப் பெறத் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை அவர் மனம் மெதுவாகப் புரிந்துகொண்டது.

இருள் முழுமையாக நகரைச் சூழ்ந்துகொண்டது வழக்கம்போல.

*****