Showing posts with label தூங்க விடாத பேதை. Show all posts
Showing posts with label தூங்க விடாத பேதை. Show all posts

4 Oct 2026

தூங்க மறுக்கும் கண்களும் தூங்க விடாத பேதையும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 56

தூங்க மறுக்கும் கண்களும் தூங்க விடாத பேதையும்!

நள்ளிரவு இரண்டு மணி.

அந்தக் குளிர்பதன அறைக்குள் குளிர்ச்சி பதினெட்டிலும், அவன் மூளையில் சூடு நூறு டிகிரி செல்சியஸிலும் இருந்தன.

ஊரே தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவன் தூங்கவில்லை, தூங்க முடியவில்லை. அந்தப் பேதை அவனின் கண்களைத் தூங்க விடவில்லை.

அவன் திறன்பேசியைத் திறந்தான். அவளுடைய வாட்ஸ்அப்பின் கடைசி பார்வை நேற்று எனக் காட்டியது. நீல நிற சரிகுறி தெரிவதற்கான அம்சம் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவளுடைய கடைசித் தடம் அதுதான். அதே நேரத்தில் அவளது இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டும் துடிப்பாக இருந்தது.

சங்க காலத்தில் தமிழகத்தில் ஒரு காதல் வழக்கம் உண்டு. அதுதான் மடலூர்தல். ஒரு வகையில் பார்த்தால் லூசுத்தனத்தின் உச்சம். ஆனால், காதலில் தர்க்கம் பார்க்க முடியாது என்று அன்று வள்ளுவர் சொன்னதை, இன்று அவன் நேரடியாக உணர்ந்தான்.

வள்ளுவரின் அந்தக் குறள் அவன் மண்டைக்குள் ரம்பம் போட்டு ஓடிக்கொண்டிருந்தது.

"மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்கென் கண்."                       (குறள், 1136)

அந்தப் பேதைக்காக, தூங்க மறுக்கும் அவன் கண்கள். நள்ளிரவிலும் கூட ஊரே சிரிக்க முக்கியச் சாலையில் மானம் கெட்டு நிற்பதை அதாவது, மடலூர்தலைச் சதா இந்த மனம் யோசிக்கிறதே  என்று அவனுக்குள் ஒரே கொந்தளிப்பாக இருந்தது.

அவன் தன் அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, மடிக்கணினியின் நீல வெளிச்சத்தில் தன் திட்டத்தைத் தொடங்கினான்.

முதல் திட்டத்தின்படி அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு ஒரு மின்னஞ்சல் எழுதுவது. அதாகப்பட்டது, "ஐயா, உங்கள் நிறுவனத்தின் தரவகப் பொறியாளர் மீது நான் தீவிரக் காதலில் இருக்கிறேன். அவளை என்னைத் திருமணம் செய்ய அனுமதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று. ஆனால் இது தொண்ணூறுகளின் சினிமா போல அல்லவா இருக்கிறது என்று தோன்றவே, வேண்டாம் என்று தோன்றியது அவனுக்கு.

உடனே இரண்டாவதாக இன்னொரு திட்டத்தை யோசித்தான். இன்ஸ்டாகிராமில் ஒரு நேரலை செய்வது. அதாகப்பட்டது, "இந்த இரவு நேரத்தில் தூங்காமல் தவிக்கும் ஒருவனின் தற்கொலை அல்ல. காதலின் இறுதி அறிவிப்பு!"  என்று. ஆனால் இது மிகையான நாடகத்தனம் கொண்டதாக அல்லவா இருக்கிறது. ஆகவே இதுவும் வேண்டாம் என்று தோன்றியது அவனுக்கு. ஆனாலும் அவனது கைகள் அவனையும் அறியாமல் அவளைப் பற்றிய ஓர் அறிவிப்பு நிலையைத் தட்டி விட்டது.

மூன்றாவது நேரடியாகக் களத்தில் இறங்குவது என்று யோசனை தோன்றவே, அவன்  மடலேறி ஊருக்குள் போவதற்குப் பதிலாக, அவளுடைய அடுக்குமாடிக் கட்டிடத்தின் நுழைவாயில் கதவிற்கு முன்பாக தனது மகிழ்வுந்தை நிறுத்தி விட்டு அவசரகால விளக்கை எரியவிட்டான். அவனது கணக்குப்படி இது நவீன மடலூர்தல்.

அவளது அடுக்குமாடிக் கட்டிடத்தின் பால்கனி இருட்டாக இருந்தது. நான்காம் மாடி. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தன. உள்ளே அவள் இப்போது நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கலாம். அல்லது இன்ஸ்டாவில் முன்பிருந்த அதே துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கலாம்.

அவன் மகிழ்வுந்திலிருந்து இறங்கினான். இரவுக்காலவர் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார்.

அவனது கால் சிராய்க்குள் இருந்த திறன்பேசி அதிர்ந்தது. அவளிடமிருந்துதான் இருக்கும் என்று ஒரு மில்லி விநாடி இதயத்துடிப்பு கூடியது. திரையைப் பார்த்தான்.

வோடோபோனின் தரவு எச்சரிக்கை ஒளிர்ந்தது. உங்கள் 1.5 ஜிபி டேட்டா காலாவதியாகப் போகிறது.

அவனுக்கு சிரிப்பு வந்தது. வாழ்க்கையும் அப்படித்தான். எதை எதிர்பார்க்கிறோமோ அது கடைசி வரை வராது; எதிர்பாராதது மட்டும் சரியாக வந்து விழும்.

அவன் மெதுவாக மின்தூக்கி மூலம் அவள் இருக்கும் நான்காவது மாடிக்குச் சென்றான். ஒரு வகையில் பார்த்தால், பனைமடலில் ஏறி ஊருக்கு நடுவே நிற்பதை விட, நள்ளிரவில் காதலியின் வீட்டு வாசல் முன்பு நிற்பது நவீன காலத்தின் மிக ஆபத்தான, ஆனால் வலிமையான மடலூர்தல்!

அவன் அவள் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தப் போனான். அப்பொழுது அவனுக்குள் ஒரு சின்ன பயம் மின்னல் போல வெட்டியது. "ஒருவேளை அவள் என்னை காவல் துறையிடம் பிடித்துக் கொடுத்துவிட்டால் என்னாவது? கௌரவம் என்னாவது? எதிர்காலம் என்னாவது?"

அதே நொடி, அவள் வீட்டு வாசல் கதவு திறந்தது.

அங்கே கையில் திறன்பேசியுடன் நின்றுகொண்டிருந்தாள் அவள். அவள் கண்களிலும் தூக்கமின்மையின் வறட்சி இருந்தது. அவள் அவனைப் பார்த்து ஆச்சரியப்படக் கூட இல்லை; மாறாக ஒரு மெல்லிய புன்னகை.

"தெரியும். நீதான் இந்த நேரத்துல இங்க வருவேன்னு தெரியும்" என்றாள் சாதாரணமாக.

அவன் திகைத்தான். "உனக்கு எப்படித் தெரியும்?"

"நானும் இன்ஸ்டாகிராமில் உன் நடவடிக்கையைப் பார்த்துட்டு இருந்தேன். நள்ளிரவு ரெண்டு மணிக்கு ஒருத்தன் தர்க்கப்பூர்வமா யோசிச்சு என்னைப் பத்தி ஸ்டேட்டஸ் போட்டா, அது காதலா இல்ல கோபமான்னு எனக்குத் தெரியாதா?"

அவன் பெருமூச்சு விட்டான்.

நவீன காலத்திலும் மடலூர்தல் பனைமடலில் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு வடிவில் இருக்கத்தான் செய்கிறது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****