31 Mar 2019

படிப்புத் தொழிற்சாலைகள்



செய்யு - 41
            கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க வேண்டுமே என்ற பழமொழி தனக்காவே உருவாக்கப்பட்டது போல விகடுவுக்குத் தோன்றியது. ஆண்டியப்பராம் சிவபெருமானே நினைத்தாலும் பூசாரி விபூதி அடித்தால்தான் உண்டு. கடவுளுக்கு எல்லாரும் சமம் என்று சொன்னாலும் பூசாரிக்கு யார் இதைச் சொல்வது? கடவுளா மனிதர்களை நிர்வாகம் செய்கிறார்? மனிதர்கள்தான் கடவுளை நிர்வாகம் செய்கிறார்கள்.
            கோயிலில் விபூதி, குங்குமம் கொடுக்காததை "நமக்கு கோயில்ல துன்னூரு கொடுக்கல! நம்மய துலுக்கமாரு வூட்டுப் புள்ளன்னு சொல்லிட்டாங்க!" என்று நெடுநாட்கள் வரை பலரிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான் விகடு. வடவாதிக்குப் போன போது இதைச் சாமியாத்தாவிடமும் சொன்னான் விகடு. "அடப் போடா இவனே! நம்மள வுட எவம்டா வேணும் உமக்கு துன்னூரு அடிக்க?" என்று சொல்லி விபூதியை அள்ளி விகடுவின் முகத்தில் விசிறி அடித்து நெற்றியில் பூசி விட்டது சாமியாத்தா. "யாத்தே நீ இப்படிப் பண்றதுக்கு அந்த பூசாரிமாரு துன்னூரு கொடுக்காம இருந்ததே பரவால்ல!" என்று எரிச்சல் அடைந்தன் விகடு.
            பூசாரி கொடுக்காமல் போன விபூதியின் தாக்கம் வெள்ளிக் கிழமைகளில் விகடுவைக் கோயிலுக்குப் போக விடாமல் செய்தது. அவன் பிரகாரத்தின் வெளியிலேயே நின்று கொள்வான். மற்ற பிள்ளைகள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு வருவார்கள். யாராவது வற்புறுத்திக் கூப்பிடுவார்கள். "வேண்டாம்ப்பா! நம்மள துலுக்கமாரு வூட்டுப் புள்ளம்பாங்க. துன்னூரு கொடுக்க மாட்டாங்க!" என்றான்.
            ஹாஸ்டலில் ஞாயிற்றுக் கிழமை எல்லா பிள்ளைகளும் துணிகளைத் துவைத்துக் கொண்டிந்தார்கள். அவரவர் கொடிகளில் துணிகளைக் காயப் போட அவரவர்களுக்கு இடம் கிடைக்காது என்பது அந்த நாளின் விசேசம். யார் முதலில் துவைத்துக் கொண்டு வருகிறார்களோ அவர்கள் இஷ்டத்துக்குக் காயப்போட்டு இருப்பார்கள். இதனால் சனிக்கிழமை சாயுங்காலமே கட்டிய துணிக்கயிறுகளை அவிழ்த்து வாளியில் போட்டுக் கொள்வார்கள் பிள்ளைகள். காயப்போடும் போது கொடிகளைக் கட்டிக் கொண்டு காயப் போடுவார்கள்.
            ஞாயிற்றுக் கிழமைகளின் காலைச் சாப்பாடு அரிசி உப்புமா. அதற்குப் பொட்டுக்கடலைச் சட்டினி ஊற்றுவார்கள். பிள்ளைகளுக்கு உப்புமாவும் சட்டினியும் பிடிக்காது. மற்ற நாட்களில் முதல் ஆளாக சாப்பிட நிற்கும் பிள்ளைகள் அன்று ஒரு நாள் மட்டும் கடைசியாகச் சாப்பிடுவதை விரும்புவார்கள். கடைசிச் சாப்பாட்டுக்கு அடிதடியும் நடக்கும். அப்படி அடிதடி நடக்கும் அளவுக்கு அரிசி உப்புமாவில், அதுவும் பிடிக்காத அரிசி உப்புமாவில் அப்படி என்ன இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். பிள்ளைகளுக்கு அரிசி உப்புமாதான் பிடிக்காது. அதன் அடியில் இருக்கும் காந்தலாய்ப் பிடித்துப் போன உப்புமா பிள்ளைகளுக்கு அவ்வளவு பிடிக்கும். அந்தப் பிடித்தம்தான் அடித்துப் பிடித்துக் கொண்டு கடைசி உப்புமாவைச் சாப்பிடச் செய்தது. பழுப்பு நிறத்தில் பட்டை பட்டையாய் காந்தலாக உரித்துக் கொண்டு வரும் அதைச் சாப்பிட பிள்ளைகள் போட்டிப் போட்டுக் கொண்டு நேரத்தைக் கடத்திக் கொண்டு நிற்பார்கள். சில பிள்ளைகள் ஞாயிற்றுக் கிழமை உப்புமாவுக்காக ரகசியமாக சீனி எடுத்து வைத்திருப்பார்கள். அந்த வாய்ப்பு ஸ்டோர் ரூமுக்குப் போய் மளிகை சாமான்கள், காய்கறிகள் எடுத்துக் கொடுக்கும் பிள்ளைகளுக்குத்தான் கிடைக்கும். வார்டன் ஸ்டோர் ரூமின் வெளியில் நின்று கொண்டு அன்றன்றைக்குத் தேவையான காய்கறிகள், சாமான்களை எடுத்து வரச் சொல்வார். காய்கறி, சாமான்களை வாங்கி வந்து உள்ளே வைக்கும் போதும் அப்படித்தான். பிள்ளைகள்தான் கொண்டு போய் வைப்பார்கள். அந்த நேரத்தில் ஆட்டையைப் போடும் சீனியைத்தான் உப்புமாவுக்குத் தொட்டுக் கொள்வார்கள். இதனால் ஸ்டோர் ரூமுக்குள் பொருள் வைக்க எடுக்க பிள்ளைகளுக்குள் ஒரு போட்டியே நடக்கும். அப்படிப் போக முடியாத பிள்ளைகள் உள்ளே வழக்கமாகப் போகும் பிள்ளைகளிடம் நெருக்கமான சிநேகிதம் வைத்துக் கொள்வார்கள். எல்லாம் ஞாயிற்றுக்கிழமை அரிசி உப்புமாவுக்கான சீனிக்காகத்தான்.
            ராமராஜூக்கு விகடுவின் மேல் தனிப்பிரியம் இருந்தது. அவன்தான் ஞாயிற்றுக் கிழமை அடித்துப் பிடித்துக் கொண்டு போய் உள்ளே நுழைந்து காந்தலான அரிசி உப்புமாவோடு வெளியே வருவான். ஸ்டோர் ரூமில் பொருட்களை உள்ளே வைத்து எடுப்பதற்கும் முதல் ஆளாய் நின்று சாதித்து விடுவான். அவன் தயவால் ஞாயிறுதோறும் காந்தலா உப்புமாவும், சீனியும் சாப்பிடும் பெரும் பாக்கியம் விகடவுக்குக் கிடைத்தது. பதிலுக்கு விகடுவுடம் பாடம் தொடர்பான சந்தேகங்களை எப்போதாவது கேட்பான் ராமராஜ். படிக்கும் நேரங்களில் அவன் விகடுவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பான். புத்தகத்தைக் கையில் எடுத்ததும் அவனுக்கு தூக்கம் வந்து விடும். வார்டன் வரும் நேரங்களில் அவனை உஷார்படுத்தி விட வேண்டும். காந்தல் உப்புமாகவுக்காவும், சீனிக்காகவும் விகடு அந்த உதவியைச் செய்து கொண்டிருந்தான்.
            ஆறாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் பலதரப்பட்ட பிள்ளைகள் இருந்தாலும் ஹாஸ்டல் அதன் வழக்கமான கலகலப்பிலிருந்தும், உற்சாகத்திலிருந்தும் விலகி இருந்தது. சதா சர்வகாலமும் ஹாஸ்டலில் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. படிக்காமல் ஏமாற்றுவது தெரிந்தால் அதற்கென தனித் தண்டனைகள் வகுக்கப்பட்டு அமலில் இருந்தன. பொதுவாக தவறுக்கான எல்லா தண்டனைகளிலும் அடி முதல் அம்சம். மனம் நொந்து போகும் வகையில் அசிங்கப்படுத்துவது இரண்டாவது அம்சம். பெற்றோர்களுக்கு கடிதம் எழுதப்படும் என்று மிரட்டப்படுவது மூன்றாவது அம்சம். கடிதம் எழுதுவதோடு விட்டு விட மாட்டார்கள். பெற்றோர்களை ஒரு குறிப்பிட்ட நாளில் வரச் சொல்லி அவர் கூனிக் குறுகிப் போகும் அளவுக்குப் பிள்ளைகளை வைத்துக் கொண்டே பேசினார்கள். தண்டனைகளுக்குப் பயப்படாத பிள்ளைகள் கூட இந்த விசயத்துக்கு யோசித்தார்கள். "நம்மால நம்ம அப்பா அம்மா இங்க வந்து அசிங்கப்பட்டுடக் கூடாது!" என்று பெரியமனுசத்தனமாக யோசித்தார்கள்.
            விகடுவின் மனதில் ஹாஸ்டலுக்கு வந்த நாளில் இருந்தே அந்தக் கேள்வி இருந்தது. "படிப்புங்றது மனுஷங்களுக்காவா? படிப்புக்காவ மனுஷங்களா?" என்பதே அந்தக் கேள்வி. அந்தக் கேள்வியை ஒருமுறை அவன் தைரியமாக வார்டனிடம் கேட்டுப் பார்த்தான். வார்டன் திகைத்தார். அப்புறம் அவனை முறைத்தார். குரலை கடுமையாக்கிக் கொண்டு, "படிச்சத்தான் சமுதாயத்துல மனுஷனா மதிப்பாங்க! ன்னா புரிஞ்சுதா?" என்றார்.
            அந்த ஹாஸ்டலில் பிள்ளைகள் தயாரிக்கப்பட்டார்கள். பத்தாம் வகுப்பு என்றால் நானூறு மார்க்கு மேல் வாங்கும் பிள்ளைகள், நானூற்று ஐம்பதுக்கு மேல் வாங்கும் பிள்ளைகள், ப்ளஸ்டூ என்றால் ஆயிரத்துக்கு மேல் வாங்கும் பிள்ளைகள், ஆயிரத்து நூறுக்கு மேல் வாங்கும் பிள்ளைகள் என்று தயாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். இந்த வகைமைக்குள் பிள்ளைகள் வந்து விட வேண்டும். வரா விட்டால் வர வைத்தார்கள். தயாரிப்புகள் எங்கே நடக்கும்? தொழிற்சாலைகளில்தானே. அந்த வகையில் பார்க்கும் போது ஹாஸ்டல் படிப்புத் தொழிற்சாலையாகத்தான் இருந்தது.
            பிள்ளைகளின் இயல்பான ஆர்வங்கள், இயற்கையான விருப்பங்கள் இவைகளுக்கான வாய்ப்பு எதுவும் அங்கு இல்லை. எந்நேரமும் படித்துக் கொண்டிருந்தால் பிரச்சனையில்லை. அப்படிப் படிக்காவிட்டால் அப்படி படிக்க வைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தார்கள்.
            ஒரே எண்ணத்தை மீண்டும் மீண்டும் விதைக்க விதைக்க அது அப்படியே பதிவாகி அந்த எண்ணத்தின் படி செயல்படும் ரோபோக்கள் போல் பிள்ளைகள் ஆகி விட வேண்டும் என்று ஹாஸ்டலில் எதிர்பார்த்தார்கள்.  இப்போது சொன்ன இது மிகவும் சரியான வாக்கியம். மனிதர்கள் ரோபோக்கள் போல ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள்தான் மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அனைத்து அமைப்புகளிலும் இருக்கிறது. மனிதர்கள் தனித்துவத்தோடு இருப்பதைப் பார்த்தால் மனிதர்கள் அச்சமடைகிறார்கள். ரோபோக்களை உருவாக்கும் விதிகளிலிருந்து இது மாறுபட்டிருக்கிறதே என்று ஆவேசம் கொள்கிறார்கள்.
            மனிதர்களின் ஆசையைக் கொண்டே மனிதர்கள் ரோபோக்களாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஹாஸ்டல் நிர்வாகிகள் அப்படித்தான் பேசினார்கள். "எங்களுக்கு ன்னா சார் வந்துருக்கு? இப்படி ஒரு ஹாஸ்டலை நடத்தி என்னாகப் போகுது சொல்லுங்க? வேறு எதுலயாவது மொதல்லப் போட்டா இத வுட பத்து மடங்கா சம்பாதிச்சுடுவோம். நாலு புள்ளிங்க படிச்சு நம்ம ஹாஸ்டல்லேர்ந்து பெரும் வேலய்க்குப் போன அது நமக்குதான பெரும. அந்த ஒண்ணுக்குதாம் பல்ல கடிச்சிட்டு நடத்திகிட்டு இருக்கோம்!" என்பார்கள். இதைக் கேட்கும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள்.
            உண்மையில் பிள்ளைகள் மற்றும் பெண்களை வைத்து நடத்தும் ஹாஸ்டல் என்பது நவீன உறிஞ்சல் வியாபாரமன்றி வேறென்னவாக இருக்கும்? பிள்ளைகள் மற்றும் பெண்களைக் கட்டுப்படுத்துவது எளிது. எதிர்த்துப் பேச மாட்டார்கள். இவைகள்தான் விதி என்று சொன்னால் அதை ஏற்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது அவர்களுக்கு? அவர்களை எவ்வளவு சுரண்டினாலும் அதைச் சொல்வதற்கான தைரியமும், சொற்களும் அவர்களுக்கு எங்கிருந்து வரப் போகிறது? சாதாரண மிரட்டலுக்கே கண்களைக் கசக்கிக் கொண்டு காலில் விழுந்து விடுவார்கள். அவர்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்து எப்படி வேண்டுமானாலும் ஒடித்து முறித்து விட முடியும். அப்படி ஒடித்து முடிப்பதைக் கூட அவர்களின் நல்லதுக்காகத்தான் என்று சப்பைக் கட்டு கட்ட முடியும்.
            பிள்ளைகள் மற்றும் பெண்கள் குறித்த பெரும் அச்சத்தில் இருக்கும் இந்த சமுதாயத்திடம் அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பற்றி என்ன பேச முடியும்? அவர்களின் உரிமைகளைப் பேசினால் அதுதான் அவர்களின் ஆபத்து என்பார்கள். அவர்களின் சுதந்திரம் பற்றிப் பேசினால் அதுதான் அவர்களுக்கான மாபெரும் அச்சுறுத்தல் என்பார்கள். அவர்களுக்கான உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கி விட்டால் இவர்கள் தங்களின் அதிகாரங்களையும், அத்துமீறல்களையும் யாரிடம் கொண்டு செலுத்துவார்கள்?
            எப்படிப் பார்த்தாலும் ஹாஸ்டல் என்பது தன்னளவில் ஒரு சிறைச்சாலை. பாதுகாப்பு என்பதை அழகிய தோரணமாகத் தொங்க விட்டுக் காட்டி அதை உலகின் சரியான இடம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறார்கள்.
            இந்த விசயம் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ கிராமத்துத் தாய்மார்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் அதிகமாக சேட்டைத்தனமும், குறும்புத்தனமும் செய்யும் பிள்ளைகளை இப்படித்தான் மிரட்டுவார்கள், "ரொம்ப துடுக்குத்தனம் பண்ணிட்டிருந்தீன்னா ஆஸ்டல்ல கொண்டு போட்டுருவேம் பாத்துக்கோ!"
*****

காமராஜர் ஆட்சி & ஓட்டுக்கு நோட்டு


காமராஜர் ஆட்சி & ஓட்டுக்கு நோட்டு
காமராஜர் ஆட்சியை அமைப்போம்! நல்லது! இவ்வளவு பினாமிகளை வைத்துக் கொண்டு எப்படி அமைக்கப் போகிறீர்களோ?! பாவந்தான் நீங்கள்!
*****
நாட்டில் வருமான வரித்துறை இருக்கிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு இருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டாகி விட்டது என்று சொல்லப்படுகிறது. சோதனைகளின் போது இவ்வளவு பணம் எப்படிதான் பிடிபடுகிறதோ? என்று ஆச்சரியப்பட்டால், "அடப் போங்கம்பி! பிடிபடாத பணம் உங்களுக்குத் தெரியாதம்பி!" என்கிறார்கள் பழம் தின்று கொட்டைப் போட்டதாகச் சொல்லப்படும் ஊரு பெருசுமாருக.
*****
இந்தத் தேர்தலில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ரொம்ப கம்மியில்ல. இந்தக் கொழுத்தும் வெயிலில் பெண்கள் பிரச்சாரத்துக்காக அலைந்து கஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
*****
எவ்வளவு பணம் தந்தா எங்க சின்னத்துக்கு ஓட்டுப் போடுவீங்க? என்று கேட்கிறார்கள். நீங்களே சொல்லுங்கள்! அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரியாமல் எப்படிக் கேட்பது?
*****
ப்பவே ஓட்டுப் போட உப்புமா போட்டுருக்காங்க. ரெண்டு ரூவா காசுல்லாம் கொடுத்துருக்காங்க. இப்போ பிரியாணி, ஐநூறு ஆயிரம்னு ஆயிடுச்சு. வருங்காலத்துல பீட்சா, பர்க்கரு, ஆன்லைன் பேமேண்ட்னு ஆயிடலாம்!
*****
எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் கவனித்தீர்களா! தமிழை அலுவல் மொழியாக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அது இருக்கட்டும். முடிஞ்சா முதலில் தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா பள்ளிகளிலும் தமிழைப் பாட மொழியாக ஆக்குங்கப்பா!
*****

30 Mar 2019

துலுக்கமாரு வூட்டுப் புள்ள



செய்யு - 40
            நரிவலத்தின் அடையாளங்களில் ஆண்டியப்பர் கோயில் முக்கியமானது. சனியின் பார்வையில் ஈசனார் ஆண்டியின் கோலம் கொண்டு அலைய நேர்ந்த காலம் ஒன்று இருந்ததாம். பல இடங்களில் அலைந்த ஈசனார் சனி பார்வை முடிந்து இங்குதான் கோயில் கொண்டாராம். அதனால் சனி தோஷம், சனி பார்வை உள்ளவர்கள் என்று பலரும் நேர்ந்து கொண்டும், நேர்த்திக்கடன் செய்யவும் நரிவலத்துக்கு வந்த வண்ணம் இருப்பர்.
            சிற்றிலக்கியக் காலத்தில் ஆண்டியப்பர் மேல் தெய்வசிகாமணிப் புலவர் (இவர் நரிவலத்தில் வாழ்ந்தவர்) என்பவர் ஆண்டியப்பரை நினைந்து மனமுருகி விருத்தப்பாக்களால் ஆன பாடலை மனமுருகி பாடியிருக்கிறார். அவரது குரல் சினிமா படங்களில் எதிரொலிக் குரல் கேட்பது போல கோயிலைத் தாண்டியும் ஊர் முழுவதும் எதிரொலித்திருக்கிறது. அவரது பாடலில் உருகிய கரும்புக்காட்டு நரி ஒன்று கோயிலைச் சுற்றி சுற்றி வந்திருக்கிறது. அந்தப் பாடலைக் கேட்ட பின் அந்த நரி கரும்புக்காட்டுக்குத் திரும்பாமல் ரொம்ப காலத்துக்கு கோயிலிலேயே இருந்ததாம். ஆண்டியப்பர் கோயில் அமைந்த ஊரில் கோயிலைச் சுற்றி நரி வலம் வந்ததால் ஊருக்கு நரிவலம் என பெயர் ஏற்பட்டதாக ஊரில் பேசிக் கொள்வார்கள்.
            பெரும்பாலான சிவன் கோயில்களைப் போன்றுதான் நரிவலம் கோயிலும் இருந்தது. கோயிலைச் சுற்றிப் பெரிய மதில். நந்தி, கொடி மரம் என்று கடந்து உள்ளே சென்றால் வலது பக்கம் நவகிரகங்கள் இருந்தது. இடது பக்கத்தின் வழியே சுற்றிச் சென்றால் தென்மேற்கு மூலையில் பிள்ளையார் சந்நிதி, வடமேற்கு மூலையில் முருகன் சந்நிதி. இவர்கள் இருவருக்கும் இடையில் அறுபத்து மூன்று நாயன்மார்கள். தெற்குப் பக்கத்தில் கோயில் பொருட்களும், கோயிலுக்கு வரும் நெல்லைச் சேமித்து வைக்கும் பத்தாயமும் இருந்தது. அந்தப் பத்தாயத்திலிருந்து எதிராகப் பார்த்தால் சிறிய சந்நிதியில் தெட்சிணாமூர்த்தி சந்நிதி இருந்தது. முருகன் சந்நிதியிலிருந்து நேராக வந்தால் வடகிழக்கு மூலைக்குச் சற்று முன்னதாக பள்ளியறை. அதைத் தொடர்ந்து நடராசர் திருமஞ்சன சந்நிதி.
            இந்த பள்ளியறை என்பதை வைத்து கழிவறையோடு தொடர்புபடுத்தி நரிவலம் பள்ளியில் வேலை பார்த்த தமிழாசிரியர் ஒருவர் கவிதைப்புத்தகம் எழுதியிருந்தார். அந்தக் கவிதைப் புத்தகத்தில் கோயிலில் பள்ளியறைக் கூட இருக்கிறது, கழிவறை இல்லையே என்ற தனது புரட்சிகரமான கருத்தை அவர் தெரிவித்திருந்தார். அவர் மிகச் சிறந்த பக்திமான். இருந்தாலும் இப்படி கவிதை எழுதியிருக்கிறாரே என்று அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கேள்விக்கு அவர் பதிலும் சொன்னார், "புதுக்கவிதை என்பது புரட்சிகரமானது. புரட்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிப்பதே புதுக்கவிதை" என்று. அவரது கவிதைப்புத்தகம் வெளிவந்து நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலிருக்கும். அந்தக் கவிதைப்புத்தகம் நரிவலம் கோயிலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நரிவலம் கோயிலில் கழிவறை இல்லை. இப்போது கட்டியிருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை. விகடு படிப்பு முடிந்து நரிவலத்திலிருந்து வரும் வரையில் கழிவறைக் கட்டப்படவில்லை.
            ஹாஸ்டலிலிருந்து பிள்ளைகள் புறப்படும் போது ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் எல்லாவற்றையும் முடித்து விட்டுக் கிளம்பி விட வேண்டும் என்பார் வார்டன். "அங்க வந்து நின்னுகிட்டு ஒண்ணுக்கு ரெண்டுக்குன்னு நின்னுகிட்டு கோயில சுத்தி எங்கயாவது போயி அசிங்கபடுத்திட்டு வாரக் கூடாது! இப்படிதாங் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கோயிலுக்குப் போயிட்டு வாரப்ப நாடிமுத்துக்கு வெளிக்கி வந்து அசிங்கமாப்போயிடுச்சு!" என்று இதைப் பற்றி அவர் ஒவ்வொரு முறை கிளம்புவதற்கு முன் திருவாய் மலர்ந்தருளும் போது நாடிமுத்து தலைகுனிந்து கொள்வான். வார்டனே சொல்லி விட்டதால் அப்படி ஓர் அசிங்கம் தமக்கு வந்து விடக் கூடாது என்பதில் ஒவ்வொரு பிள்ளைகளும் கவனமாக இருப்பார்கள். வெள்ளிக்கிழமை கோயிலுக்கு என்றால் பள்ளி விட்டு வந்ததும் எல்லா பிள்ளைகளும் கழிவறையில் நின்று தங்கள் காரியத்தைக் கனகச்சிதமாக முடித்துக் கொண்டு இருப்பார்கள்.
            அப்படியே கிளம்பு கோயிலுக்கு கோயிலுக்குள் நுழைந்து நேராகப் பார்த்தால் ஆண்டியப்பர் லிங்க வடிவில் காட்சி தருவார். அதற்கு இடது பக்க பிரகாரத்தில் சாமி புறப்பாட்டுக்காகச் செல்லும் ஆண்டியப்பரின் மனித வடிவக் கோலம். வலது பக்கம் தெற்குப் பார்த்தாற் போல உமையாம்பிகைச் சந்நிதி.
             வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் ஹாஸ்டல் பிள்ளைகளை ஆண்டியப்பர் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்கள். பத்தி, சூடம் கொளுத்துபவர்கள், நெய்விளக்குப் போட விரும்புவர்கள் முதல் நாளே வார்டனிடம் அது குறித்து சொல்லி விட்டால் வாங்கிக் கொடுத்து விடுவார்.
            வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு மேல் ‍தெய்வசிகாமணிப் புலவர் (நரிவலத்தில் வாழ்ந்தர்) இயற்றிய விருத்தப்பாக்களை தேவாரம் பாடுவதைப் போல பாடி அதற்கு ஒருவர் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க சுற்றி ஆண்களும் பெண்களுமாக இருபது முப்பது பேர் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு விருப்பம் இருந்தால் அதைக் கேட்கலாம். எந்தப் பிள்ளைகள் கேட்பார்கள்? எல்லா பிள்ளைகளும் சாமியைக் கும்பிட்டோமோ, சுற்றி விளையாட ஆரம்பித்தோமா என்று இருப்பார்கள். ஓடி பிடித்து, கண்ணாம்மூச்சி, ஒளிஞ்சாம்பிடிச்சி என்று சிறுபிள்ளை விளையாட்டுகளை ஒரு ரவுண்டு கட்டி விளையாடி விடுவார்கள். ஹாஸ்டலிலும் இதுதான் விளையாட்டு. ஓட்டுக்கட்டத்தைச் சுற்றி ஓடுவார்கள். அங்கேயேும் இதே கண்ணாமூச்சி, ஒளிஞ்சாம்பிடிச்சிதான். இருந்தாலும் கோயிலில் விளையாடுவது தனி ரசனையாக இருக்கும். அதற்கு இறைவனே திருவிளையாடல் விளையாடியது காரணமாக இருக்குமோ என்னவோ!
            விகடு முதல்முறை ஆண்டியப்பரைத் தரிசிக்கப் போன போதே அவருக்கும் அவனுக்கும் பிணக்கு ஆரம்பமாகி விட்டது.
            ஹாஸ்டல் பிள்ளைகள் கலர் கைலிகளைக் கட்டக் கூடாது என்பதற்காக வேட்டியை மூட்டி வெள்ளை கைலியாகக் கட்ட வேண்டும் என்பார்கள். விகடுவும் அப்படித்தான் வெள்ளைக்கைலி கட்டியிருந்தான். நல்ல நெடுநெடுவென்ற உயரத்தில் நல்ல சிவப்பு நிறத்தில் வேறு இருந்தான். பார்ப்பதற்கு அப்படியே பாய்மார் வீட்டுப் பிள்ளையைப் போன்ற தோற்றம் இருந்தது.
            ஆண்டியப்பருக்கு கற்பூரம் காட்டி விட்டு  ஐயர்மார் சாமி கும்பிட்டவர்களுக்கு விபூதியும், குங்குமமும் கொடுத்துக் கொண்டிருந்தார். விகடுவும் அந்த வரிசையில் நின்றிருந்தான். விகடுவைப் பார்த்த ஐயர்மார், "துலுக்க வூட்டுப் புள்ளகல்லாம் வந்து கைநீட்டி நிக்குதுங்களே!" என்று விபூதி, குங்குமம் கொடுக்காமலே போய் விட்டார். விகடுவுக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது. முகம் சுண்டிப் போய் விட்டது. பக்கத்தில் நின்றிருந்த ராமராஜ் தன் கையில் இருந்த விபூதி, குங்குமத்தை நீட்டினான். விகடு அவன் கையைத் தட்டி விட்டு வேக வேகமாக வெளியே வந்தான். அவனுக்கு வெளியில் நின்றிருந்த வார்டனை அழைத்து வந்து தான் துலுக்கமார் வூட்டுப் பிள்ளை இல்லை என்பதை அந்த ஐயர்மாருக்கு நிரூபிக்க வேண்டும் போலிருந்தது.
            விகடு வேக வேகமாக வருவரைப் பார்த்த வார்டன், "சாமி கும்பிட்டுட்டு ஒரு வெளயாட்டப் போட்டுட்டுதானடா வருவீங்க. இன்னிக்கு ன்னா இவ்ளோ சீக்கிரம்?" என்றார்.
            "ஐயர்மாரு நமக்கு துன்னூரும், குங்குமமும் கொடுக்கல!" என்றான் விகடு.
            ஏன் என்பது போல அவர் விகடுவைப் பார்த்தார்.
            "நம்மள துலுக்கமாரு வூட்டுப் புள்ளன்னு நெனைக்கிறாரு. நீங்கதாங் வந்துச் சொல்லணும்!" என்றான் விகடு பரிதாபமாக.
            "அப்படியா சங்கதி! நீ பாக்குறதுக்கு அப்படிதாங் இருக்குறே!" என்று சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தார். சிரித்ததோடு இல்லாமல் பக்கத்தில் நின்ற அவருக்குத் தெரிந்த ரெண்டு மூன்று பேர்களை அழைத்து இந்தச் செய்தியைச் சொல்லி இன்னும் பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். விகடுவுக்கு இந்த விசயத்தை வார்டனின் போய் ஏன் சொன்னோம் என்று தோன்றியது. அவன் மிகுந்த பரிதாபகரமாக நின்றான்.
            வார்டன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று சிரிப்பை நிறுத்திக் கொண்டு, "நீ உள்ளப் போ. நாம் வந்து சொல்றம்!" என்றார்.
            விகடு கோயிலுக்குள் வந்து வார்டன் வந்து சொல்கிறாரா என எதிர்பார்த்தான். வார்டன் உள்ளே வரவுமில்லை. வந்து சொல்லவுமில்லை.
*****

முற்றாதப் பழம்



தா
இருப்பதைக் கொடுத்து
ஏதேனும் வாங்கிப் போ என்பவனே
பசி இருக்கிறது
வைத்துக் கொண்டு ஏதேனும் தா
*****
மற்றும் ஒரு முறை
மற்றும் ஒரு முறை
எப்போது நினைப்பேன் என்று
நினைவுக்கும் தெரியாது
மற்றும் ஒரு முறை
நினைத்தால்
உன்னை வந்து பார்க்கிறேன்
*****
ஒரு காசு புன்னகை
ஞ்சு ரூபாய் ரோஜாவுக்கு
ஒரு
சின்ன புன்னகை
கம்மியென்றால் ஒன்று கொடு
அதிகம் என்றால் இரண்டு கொடு
*****
முற்றாதப் பழம்
முற்றாதப் பழம் ஒன்று
எப்போதும்
உன்னிடம் இருக்கிறது
முத்தம்
*****

29 Mar 2019

கைப்பற்றப்படாத பணம்



செய்யு - 39
            தன்னுடைய பெட்டி பணங்காய்ச்சிப் பெட்டியா? என்று விகடுவுக்குச் சந்தேகம் வந்தது. வைத்தது எதுவோ அது பெட்டியில் இருந்தால் இப்படியா யோசிக்கத் தோன்றும். வைக்காத ஒன்று வைத்தது போல பெட்டியில் இருந்தால் இப்படித்தான் அது சம்பந்தம் இல்லாமல் யோசிக்க வைக்கும் போலிருந்தது.
            அடுத்தடுத்த ஞாயிற்றுக் கிழமைச் சோதனைகளில் பெட்டியில் பணம் இருந்து பிடிபடுவது போல விகடுவுக்குத் தொடர்ச்சியாக கனவுகள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கனவுகளிலிருந்து விடுபட அவனுக்கு நெடுநாட்கள் ஆனது. மறைந்திருக்கும் உண்மைகளை மனம் கனவுகள் வழி அவிழ்க்கப் பார்க்கிறதோ என்னவோ!
            அப்படித்தான் ஹாஸ்டலில் சோதனை நடக்கிறது. விகடுவின் பெட்டி முழுவதும் பணமாக இருக்கிறது. இந்த முறை, "ஏதடா இவ்வளவு பணம்?" என்று கேட்டு வார்டன் சார் விகடுவைக் குச்சியால் அடிக்கிறார். "அதானே! எது இவ்வளோ பணம்?" என்று சொல்லியபடியே மயங்கிச் சரிகிறான் விகடு. விகடு மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் ஹாஸ்டல் பிள்ளைகள் எல்லாரும் கோரஸாக, "நாங்க ல்லாரும் எங்க பணத்த விகடுவோட பெட்டியில வெச்சோம்!" என்று சொல்லி அழுகிறார்கள். வார்டன் சார் விகடுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பப் பார்க்கிறார். விகடுவால் மயக்கம் தெளிந்து எளிய முடியவில்லை. அவனது கை, கால்கள் அசைக்க முடியாதபடி பூமியோடு பூமியாக ஒட்டப்பட்டது போல இருக்கிறது. கண்களைத் திறக்க முடியவில்லை. கண்கள் முழுவதும் நட்சத்திரங்களாக மின்னுகின்றன. எங்கும் வெளிச்சம். ஒரே வெளிச்சம். கண்ணில் தெரிவது அந்த வெளிச்சம் மட்டுமே. விகடுவின் உடல் முழுவதும் வியர்த்து விட்டது. அவன் கனவிலிருந்து முழித்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. விடிவதற்கு நேரம் இருந்தது. சுற்றிலும் பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுந்து உட்கார்ந்து கொண்டான். அதன் பின் அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.
            அதிகாலை ஐந்து மணிக்கு ஹாஸ்டலில் பிள்ளைகளை எழுப்பி விடுவார்கள். அதுவரை அவனுக்குத் தூக்கம் வரவில்லை. பல் துலக்கி விட்டு, கை கால் அலம்பிக் கொண்டு படிக்க உட்கார வேண்டும். ஹாஸ்டலில் ஒரு தாத்தா இருந்தார். அவர்தான் காவலாளி. முடியெல்லாம் நரைத்து இடுப்பில் கைலியும், மேலுக்குச்  டீ சர்ட்டுமாக இருப்பார். ஐந்து மணிக்கு எல்லாம் சத்தம் போட்டு எல்லாரையும் எழுப்புவார். பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்டூ படிக்கும் பிள்ளைகள் அதற்கு முன்பாகவே எழுந்து உட்கார்ந்து கொண்டு படித்துக் கொண்டிருப்பார்கள். மற்ற வகுப்புப் பிள்ளைகளை எழுப்பி விட்டாலும் எழும்ப மாட்டார்கள். எழுந்து உட்காருபவர்களும் படிக்கின்ற பாவணையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
             இதில் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புப் படிக்கும் பிள்ளைகள் பாவமாக உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் முகத்தின் மழலை கூட மாறாதது போல இருக்கும். அவர்களால் முழிக்க முடியாது. அவர்களையெல்லாம் ஏன் கொண்டு வந்து ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறார்கள்? பிள்ளைகளுக்காக இருந்த படிப்பை, படிப்புக்காகப் பிள்ளைகள் என்று மாற்றி விட்டிருக்கிறார்களோ என்னவோ! அந்த மாற்றம்தான் ஆறாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை ஹாஸ்டலில் கொண்டு வந்து சேர்க்கக் காரணமோ என்னவோ!
            விகடுவுக்குத் தன் கனவு பற்றி யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றியது. யாரிடம் சொல்வது? ப்ளஸ் ஒன் படிப்பதில் அவனையோத்த பிள்ளைகள் ஏழு பேர் இருந்தார்கள். அதில் பரமானந்தம் மட்டும் அவனைப் போல் மேத்ஸ் குரூப். பக்கிரிசாமி பயிர் பாதுகாப்பியல் எனும் வெக்கேஷனல் குரூப். அருட்செல்வம், வணங்காமுடி, மணவழகன் மூவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப். நடராசனும், செளந்தரும் சயின்ஸ் குரூப்.
            எல்லாரும் எழுந்து உட்கார்ந்து கொண்டு படிப்பது போன்ற பாவணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் அந்த நேரத்தில் படிக்கப் பிடிக்கவில்லை. அதற்காகப் படிக்காமல் இருக்க முடியாது. வார்டன் சார் திடீர் விசிட்டுகள் வரக் கூடும். அப்படி வரும் போது படிக்காமல் இருந்தால் அடியிலிருந்து தப்ப முடியாது.
            நடந்த சம்பவம் பற்றி பலரும் பலவிதமாக விகடுவுக்கு ஆறுதல் சொல்லி விட்டார்கள். மறுபடியும் அது பற்றிச் சொன்னால் கேட்பவர்கள் சிரித்து விடுவார்களோ என்ற தயக்கமும் விகடுவுக்கு இருந்தது.  அவன் பெட்டியைத் திறந்து எதையோ தேடுவதைப் போல் பணம் ஏதும் தன் பெட்டியில் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டான். பிறகு பெட்டியை மூடி உடனே பூட்டைப் போட்டுக் கொண்டான். பள்ளிக்கூடம் வந்து பெட்டியைத் திறக்கும் பிள்ளைகள் தூங்கப் போகும் போதுதான் பெட்டிக்குப் பூட்டு போடுவார்கள். அதுவும் தங்கள் பெட்டிக்கு எதிரே படுத்திருக்கும் பிள்ளைகள் அதையும் போட மாட்டார்கள். பள்ளிக்கூடம் கிளம்பும் போது மட்டும்தான் பூட்டுப் போடுவார்கள். விகடு பெட்டியைத் திறந்து மூடினாலே பூட்டுதான். இதையும் மற்றப் பிள்ளைகள் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.
            "நாங்கலாம் எதையும் உங்க பொட்டிலேர்ந்து தூக்கிட மாட்டோம்ணா!" என்பார்கள் பிள்ளைகள்.
            "தூக்குனாத்தான் பரவாயில்லயே. யாராச்சும் ல்லாத நேரமா பாத்து பொட்டில பணத்தப் போட்டுடுவாங்கன்னு யோசனயா யிருக்கு!" என்பான் விகடு.
            "பாத்தீங்களாடா அண்ணாவோட அதிர்ஷ்டத்த! ல்லாரு பொட்டியிலயும் காசு காணாத்தான் போவும். அண்ணாவோட பொட்டியிலத்தான்டா காசு மூடியப் பிய்ச்சுட்டுக் கொட்டுது!" என்று அதற்கும் ஹோவென்று சிரிப்புதான்.
            இந்தச் சிரிப்புக்கு யோசித்துதான் சொல்வதைத் தள்ளிப் போட்டான் விகடு. அவன் தள்ளிப் போடப் போட கனவுகள் தூங்க விடாமல் மொய்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கனவுகள் வந்து அவன் விழித்துக் கொண்டான்.
            விடை தெரியாத ஒரு நிகழ்வுக்காக மனம் இப்படியா கனவுகளாய்ப் போட்டு குழப்பிக் கொள்ளும்? ஒரு நாள் கனவில் ஹாஸ்டல் வார்டனே விகடுவுக்குத் தெரியாமல் அவனுடைய பெட்டியில் பணம் வைத்தார். வார்டன் சார் எதற்கு விகடுவின் பெட்டியில் பணம் வைக்க வேண்டும்? விகடுவை அவருக்குப் பிடிக்கவில்லை போலும். ஒவ்வொரு நாள் கனவிலும் ஹாஸ்டலில் இருந்த ஒவ்வொருவரும் அவனது பெட்டியில் பணம் வைத்துக் கொண்டிருந்தார்கள். சில நாட்களில் அவர்கள் வைக்கும் பணம் பெட்டியை மீறி மூட முடியாத அளவுக்குப் புடைத்துக் கொண்டிருந்தது. பெட்டிக்குள் பணத்தை வைக்க முடியாமல் அந்த ஹாஸ்டல் முழுவதும் பணத்தால் அடுக்கி முடித்து விடுகிறார்கள். அப்போதும் முடியாமல் ஹாஸ்டலுக்கு வெளியேயும் அடுக்குகிறார்கள். ம்ஹூம். முடியவில்லை. பணக்கட்டுகள் அடுக்க முடியாமல் ரோடு, பள்ளிக்கூடம் என நீண்டு நரிவலம் முழுவதும் அடுக்குகிறார்கள். அடுக்கிக் கொண்டே போகிறார்கள். அப்படியே அடுக்கிக் கொண்டே வந்து விகடுவுன் திட்டையில் இருக்கும் வீடு வரைக்கும் வந்து விடுகிறார்கள். இப்போது வீட்டுக்கும் ஹாஸ்டலுக்கும் ஒரு பணத்தொடர்ச்சி வந்து விடுகிறதா? இதைச் சுட்டிக் காட்டி உன் வீட்டிலிருந்துதான் பணம் வந்திருக்கிறது. நீதான் பணத்தை எடுத்து வந்தாய் என்று சொல்லி விகடுவைக் குற்றம் சொல்கிறார்கள். இப்படிச் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் விகடுவின் கனவுக்குள் வந்து அவனுடைய பெட்டிக்கள் பணம் வைப்பவர்கள், பணத்தை அடுக்கிக் கொண்டிருப்பவர்கள் கணக்கற்றவர்களாய் நீண்டு கொண்டிருந்தார்கள். விகடு இதுவரை பார்த்திராத அவன் அறியாத மனிதர்கள் கூட வந்து அவனது கனவில் பணம் வைப்பதை கர்ம சிரத்தையோடு செய்து கொண்டிருந்தார்கள். அவன் அவர்களைப் பார்த்து கனவில் சத்தம் போட்டான், "ஏம் இப்படி ல்லாரும் நம்மோட பெட்டியிலயே பணத்தை வய்க்குறீங்க?" என்று. காலாண்டு பரீட்சை லீவுக்கு வீட்டுக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன் அவனது பெட்டியில் அம்மாவும், செய்யுவும் கூட வந்து பணத்தை வைத்தார்கள்.
            அதுவரை அந்தக் கனவு சங்கதிகளை யாரிடம் சொல்வது என்று தவித்த விகடு காலாண்டு லீவுக்கு வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடமும், செய்யுவிடமும் கூறினான். அம்மாவும், செய்யுவும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.
            "இப்படி நீங்க சிரிக்குற மாரி ஹாஸ்டல்லயும் சிரிச்சிடுவாங்களோன்னுதான் நாம்ம யார்கிட்டயும் சொல்லல தெரியுமா?" என்றான் விகடு.
            "நாம்ம அதுக்காகச் சிரிக்கலடா!" என்றது அம்மா.
            "அப்புறம் ஏஞ் சிரிச்சீங்க?"
            "மொத தடவயா பிரிஞ்சி ஆஸ்டலுக்குப் போறீல்ல. கைகாசு செலவுக்கு திடீர்னு வேணுன்னா ன்னா பண்ணுவே? அதாங் பொட்டிக்குள்ளாற பேப்பருக்குள்ள மறச்சு அம்பது ரூவாயை வெச்சன்! நீ எப்பயாவது பாத்து எடுத்து வெச்சிப்பன்னு நெனச்சேம். நீ இப்படி மாட்டிப்பேன்னும், கனா கனாவா கண்டுட்டு இருப்பேன்னு ஆருக்குத் தெரியும்?" என்றது அம்மா.
            "அம்மா அம்பது ரூவா வெச்சுச்சா. நாம்ம அஞ்சு ரூவா வச்சன்!" என்றாள் செய்யு.
*****

சு. தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்டுத்துறை - நாவல் அறிமுகம்




ஆறுகாட்டுத்துறை நாவல் - ஆற்று காட்ட முடியாத வாழ்வின் சுழல்
            நம் இந்தியச் சமூகத்தில் பல தாரங்களை மணந்து கொண்ட அரசர்கள் இருந்திருக்கிறார்கள். குடிமக்களிலும் இரு தாரங்களைக் கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு மட்டுமே இருந்த அச்சலுகைப் பெண்களுக்குக் இருந்தது கிடையாது.
            பெண்களைப் பொருத்தவரையில் காலம் காலமாக இச்சமூகத்தில் ஒரு கணவனுடன்தான் வாழ்ந்திருக்கிறார்கள். கணவன் இறந்தால் சிதையில் வீழ்ந்து இறக்கும் சதி எனும் வழக்கம் நிலவிய சமூகத்திலும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கணவன் இறந்த பின் வெள்ளாடை உடுத்தி, மொட்டையடித்து அமங்கலியாகவும் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அரிதாக கணவன் இறந்த பின் மறுமணம் செய்து கொண்டு வாழ்ந்த பெண்களும் ஒரு சில சமூகங்களில் இருந்திருக்கிறார்கள்.
            ஒரு பெண்ணுக்கு இரண்டாவது கணவன் என்பது முதல் கணவனின் இறப்பின் காரணமாக மறுமணத்தின் மூலமே பெண்களுக்குச் சாத்தியம். ஆணுக்கு முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே இரண்டாவது மனைவி சாத்தியமாவது போல பெண்ணுக்கு இரண்டாவது கணவன் சாத்தியமில்லை.
            ஓர் ஆணுக்கு இரண்டு மனைவிகள் வாய்க்கும் போது அவர்கள் எப்படியோ ஒத்து வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே ஒரு பெண்ணுக்கு அப்படி நேர்ந்து விடும் போது ஆண்களால் அப்படி வாழ்ந்து விட முடிவதில்லை.
            சூழ்நிலையோ சந்தர்ப்பவசமோ ஒரு பெண்ணுக்கு இரண்டு கணவனைத் தந்து விடும் போது ஒரு பெண்ணின் நிலை எப்படி இருக்கும்? ஆறுகாட்டுத்துறை நாவலில் சு. தமிழ்ச்செல்வி காட்டுவது அப்படி ஒரு பெண்ணின் நிலைதான்.
            சு. தமிழ்ச்செல்வியின் இரண்டாவது நாவலான அளம் நாவலுக்கு நேர் எதிரான நாவல் என்று ஆறுகாட்டுத்துறை நாவலைச் சொல்லலாம்.
            அளம் நாவலில் பொருள் தேட விட்டுப் பிரிந்த கணவனுக்காக சுந்தராம்பாள் காலம் முழுதும் காத்திருக்கிறாள். ஆறுகாட்டுத்துறை நாவலில் சமுத்திரவல்லி கடலில் சென்ற கணவனுக்காகக் காத்திருந்து சொந்தபந்தம் மற்றும் ஊராரின் நெருக்குதலால் கணவனின் தம்பியை மணந்து கொள்கிறாள்.
            அளம் நாவல் கட்டிய கணவன் இல்லாமல் சுந்தராம்பாள் படும் பாடுகளைப் பேசுகிறது என்றால், ஆறுகாட்டுத்துறை நாவல் அண்ணன், தம்பி இருவரையும் கட்டிக் கொண்டதால் சமுத்திரவல்லி படும் பாடுகளைப் பேசுகிறது.
            சமுத்திரவல்லி ஊர் நாட்டாரின் மகள். சமுத்திரவல்லி காதலித்து மணந்து கொண்ட காதல் கணவன் சாமுவேல். சாமுவேலுக்காக தன் குடும்பத்தை விட்டு வந்து விடுகிறாள் சமுத்திரவல்லி. நாட்டாரின் மகளை மணந்து கொண்டதால் சாமுவேலிடம் ஊர் கொஞ்சம் விலக்கம் காட்டுகிறதே அன்றி சாமுவேலை ஒதுக்கி வைக்கவில்லை. அப்படி ஊரே ஒரு மாதிரியாக சாமுவேலை விலக்கி வைத்தது மாதிரி நடந்து கொண்டாலும் ஆறுகாட்டுத்துறையின் சுப்பு சாமுவேலின் பக்கம் நிற்கிறார். சாமுவேலுக்கு அந்த விலக்கம் பிடிக்கவில்லை. எல்லாம் சமுத்திரவல்லி தன்னைக் காதலித்ததால் நேர்ந்தது என நினைக்கிறான். நாட்டார் சாமுவேலோடு பேசுவதில்லையே தவிர அவருடைய படகில் வேலை பார்ப்பதையோ, சம்பாதிப்பதையோ அவர் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.
            சமுத்திரவல்லிக்குப் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சாமுவேல் எதிர்பார்க்கிறான். பெண் குழந்தைப் பிறந்ததைக் கேள்விப்படும் சாமுவேல் மகளின் முகத்தைக் கூட பார்க்காமல் கடலில் மனம் போனபடி போய் கச்சல் பகுதியில் மாட்டிக் கொள்கிறான். அவன் திரும்புவதற்கு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
            கணவன் போன ஏக்கத்தோடு இருக்கும் சமுத்திரவல்லி சாமுவேலின் தம்பி அருள்தாசுக்காக பாடுபடுகிறாள். அவன் படிப்பதற்காக நாட்டாரின் மகளாக இருந்தும் மீன் விற்கச் செல்கிறாள், மரம் வெட்டச் செல்கிறாள், கருவாடு போட்டு வியாபாரம் செய்கிறாள்.
            தனக்காக இவ்வளவு கஷ்டப்படும் அண்ணிக்காகவும், குழந்தைக்காகவும் அண்ணியையே மணக்கத் தீர்மானிக்கிறான் அருள்தாஸ்.
            ஆறுகாட்டுத்துறையில் முதல் கணவன் இறந்தாலோ அல்லது கைவிட்டாலோ பெண்கள் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருப்பதால் நாட்டாரும், ஊரும் இதற்குச் சம்மதிக்கிறார்கள். அருள்தாசுக்கும், சமுத்திரவல்லிக்கும் மகன் பிறக்கிறான்.
            யாரும் எதிர்பாராத வகையில் ஆறு ஆண்டுகள் கழித்து சாமுவேல் வருகிறான். விஷயம் அறிந்து சாமுவேல் அருள்தாஸைக் கொன்று விடும் நோக்கோடு துரத்துகிறான். அருள்தாஸ் தப்பி ஓடி விடுகிறான்.
            அதற்குப் பிறகு சாமுவேல் இஷ்டத்துக்கு கட்டுமரத்தில் கடலுக்குப் போவதும், வருவதுமாக இருக்கிறான்.
            அதே ஆறுகாட்டுத்துறையில் இரண்டு பெண்களைக் கட்டிக் கொண்டு சுமூகமாக வாழும் ஆண்களைப் போல் இரண்டு ஆண்களைக் கட்டிய தானும் வாழ்ந்து விட முடியாதா என்று ஏங்குகிறாள் சமுத்திரவல்லி. அதற்கு தம்பி அருள்தாஸ் ஒத்து வந்தாலும் அண்ணன் சாமுவேல் ஒத்து வர வேண்டுமே!
            சாமுவேல் சமுத்திரவல்லியையும், தன் தம்பியையும் நினைத்து நினைத்துப் பொருமுகிறான். இருவரையும் கொன்று போட்டாலும் தன் ஆத்திரம் தீராது என்று எண்ணி எண்ணி நெஞ்சுக்குள் வேகிறான்.
            அப்படிப்பட்ட சாமுவேல்தான் திடீரென்று மன்மத நாடகம் நடைபெறும் அந்த மூன்றாம் நாள் இரவில் சமுத்திரவல்லியோடு அன்பாகப் பேசுகிறான். நடந்ததை மறந்து விட்டு புது வாழ்வு வாழ்வோம் என்கிறான். தங்கள் காதல் தொடங்கியக் காலத்திலும் காதலர்களாய் கட்டுமரத்தில் கடலுக்குச் சென்று வந்ததைப் போல கடலில் சென்று வருவோமா என்று கேட்கிறான். சமுத்திரவல்லியும் சம்மதிக்கிறாள். இருவரும் கட்டுமரத்தில் செல்கிறார்கள். சமுத்திரவல்லி தன்னை மறந்து படுத்துக் கிடக்கிறாள். சாமுவேல் அவளை எழுப்பி விடும் இடத்தில் கட்டுமரம் நடுக்கடலில் பாறைச்சுழல்கள் உருவாகும்இடத்தில் நிற்கிறது.
            சாமுவேல் சமுத்திரவல்லியை பாறைச்சுழலில் தள்ளி விடுவதற்காக அழைத்து வந்திருப்பது சமுத்திரவல்லிக்குத் தெரிகிறது. சமுத்திரவல்லி சாமுவேலோடு போராடுகிறாள். சாமுவேல் சமுத்திரவல்லியைக் கடலில் தள்ளி விடுவதில் குறியாக இருக்கிறான்.
            எதிர்பாராமல் வரும் அலைச்சுழலில் சமுத்திரவல்லியைத் தள்ளி விட நினைத்த சாமுவேல் நிலைதடுமாறி விழுந்து பாறைச்சுழலில் சிக்கிக் கொள்கிறான். சமுத்திரவல்லி உயிர் பிழைக்கிறாள்.
            பழிவாங்கும் நோக்கோடு யார் கடலில் இறங்கினாலும் கடல் அவர்களைப் பழிவாங்கி விடுகிறது. சாமுவேல் அப்படித்தான் கடலால் பழிவாங்கப்படுவதாக நாவலை வாசிக்கையில் ஒரு தோற்றம் உண்டாகிறது. அதுவும் இல்லாமல் சமுத்திரவல்லியை கடலின் மகளாகத்தான் ஆறுகாட்டுத்துறை மக்கள் பார்க்கிறார்கள். தன் மகளைக் கொல்ல நினைத்தவனைப் பார்த்துக் கொண்டு கடல்தாய் சும்மா இருந்து விடுவாளா? அலையாய் ஆக்ரோஷமாய்ச் சீறி சாமுவேலை பாறைச்சுழலுக்குள் தள்ளி கடல்தாய் தள்ளி விடுவதாகவும் சாமுவேலின் மரணம் குறித்து மற்றொரு தோற்றமும் நாவலை வாசிக்கையில் உணர முடியும்.
            ஓர் ஆண் இரண்டு பெண்டாட்டிகளோடு வாழும் போது, ஒரு பெண் இரண்டு கணவர்களோடு வாழ முடியாமல் போகும் அவலத்தைச் சித்திரமாக்கும் வகையில் சு.தமிழ்ச்செல்வி இந்நாவலை எழுதியிருக்கிறார்.
            சமுத்திரவல்லி கடல்தாயின் கருணை உள்ளத்தோடு இருக்கிறாள். அந்தக் கருணைக்கும் சமுத்திரவல்லியின் அன்புக்கும் பொருத்தமற்றவனாய் இருக்கும் சாமுவேல் அந்தப் பொருத்தமற்றத் தன்மையாலே வீழ்ந்து போகிறான்.
            பெண்களின் மகத்தான அன்பு சூழ்ந்த இந்த உலகில் அவர்களின் அன்பை முழுமையாகப் புரிந்து கொள்ளும் போது ஏற்படும் மாற்றம்தான் எவ்வளவு உன்னதமாக இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் நிராகரித்துப் போகும் போது வாழ்வுதான் எவ்வளவு கருணையற்றதாக மாறி தவிக்க விடுகிறது.
            சாமுவேலும், அருள்தாசும் இரண்டு ஆண்களின் இருவேறு மனநிலைகள் என்ற பார்த்தாலும் சரிதான் அல்லது ஒரே ஆணின் இருவேறு மனநிலைகள் என்று பார்த்தாலும் சரிதான் சாமுவேலாக இருக்கும் மனசு ஒரு பெண்ணின் மனதை எப்படிக் காயப்படுத்துகிறது என்பதையும், அருள்தாஸாக இருக்கும் மனது அதற்கு எப்படி மருந்திடுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
            இந்த உலகம் பேரன்பின் பெருவலியைச் சுமந்தபடி சுழன்று கொண்டிருக்கிறது. அந்த பேரன்பைப் புரிந்து கொள்ள ஒரு பெரிய மனம் வேண்டியிருக்கிறது. அந்த பெரிய மனதைப் புரிந்து கொள்ளாதவர்களை தனது சுழலில் இழுத்துக் கொள்ள வாழ்க்கையின் பாறைச் சுழல்கள் காத்திருக்கின்றன.
            என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம் என்கிறார் வள்ளுவர். அதாவது அன்பில்லாதவர்களை ஏதோ செய்ய அறம் காத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார் வள்ளுவர். அதே நேரத்தில் அன்புடையவர்களை ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியும் காப்பாற்ற தயாராக இருக்கிறது கடல் என்கிறார் சு.தமிழ்ச்செல்வி.
            இனி,
            எவ்வளவோ பேருக்கு வழிகாட்டிய ஆறுகாட்டுத்துறை சமுத்திரவல்லிக்கு வழிகாட்டாமலா போய் விடும். தன் மகளுக்காக வாழத் துடிக்கும் கடலின் மகளான அவளை சமுத்திரத்தாய் வாழ விடாமலா செய்து விடப் போகிறாள்!
            சமுத்திரவல்லி தப்பி கரை சேர்வதுடன் முடிகிறது நாவல்.
            அன்பு எப்படியோ கரை சேர்த்து விடுகிறது வாழ்க்கையை!
            அது இல்லாதவர்கள் கரை சேர முடியாமல் சுழலில் சிக்கி தம்மை இழந்து விடுகிறார்கள் சாமுவேலைப் போல!
*****

28 Mar 2019

பெட்டிக்குள் பணம்



செய்யு - 38
            ஹாஸ்டலில் சேர்ந்த முதல் ஞாயிறன்று நடந்த பெட்டிச் சோதனையை விகடுவால் மறக்க முடியாது. எல்லா பிள்ளைகளும் ஹாஸ்டலின் கீற்றுக் கொட்டகையில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டார்கள்.
            "யாராவது பணங் காசு வெச்சிருந்தா எடுத்துக் கொடுத்துடலாம். தண்டன கெடயாது. சோதனயில அகப்பட்டுச்சுன்னா அப்புறம் பாத்துக்குங்க. ரிப்போட்டாயிடும்! ன்னா யாரும் பணங் காசு ஏதும் வெச்சிருக்கீங்களா?" என்றார் ஹாஸ்டல் வார்டன்.
            பிள்ளைகள் அமைதியாக இருந்தார்கள்.
            "ன்னா பதிலே வர மாட்டேங்குது? வெச்சிருக்கீங்களா? இல்லையா?" என்று அழுத்தம் கொடுத்துக் கேட்டார் ஒருமுறை.
            "ல்லே சார்!" என்று எல்லா பிள்ளைகளும் தலையாட்டினார்கள். விகடுவும் அப்படியே தலையாட்டி ல்லே சார் சொன்னான்.
            "சோதன ஆரம்பிக்கப் போவுது. ல்லாரும் உக்காந்த இடத்துலயே உக்காந்து இருக்கணும். யாரும் அந்தாண்ட இந்தாண்ட நகர்றது, உள்ள எட்டிப் பாக்குறது ம்ஹூம் ஆமாம் பாத்துக்குங்க!" கையில் கம்பை உயர்த்திப் பிடித்தபடி இதைச் சொன்ன வார்டன் சொல்லி முடித்ததும் கம்பைத் தாழ்த்திக் கொண்டார்.
            ஹாஸ்டல் வார்டன் நல்ல சிவப்பு. கட்டையாக இருந்தார். எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்தார். அவர் வார்டனாகவும், அத்துடன் நரிவலம் பள்ளியில் க்ளார்க்காகவும் இருந்தார். அவர் பெயர் முருகு சுந்தரம். பிள்ளைகள் அவரை வார்டன் சார் என்பார்கள்.
            ஹாஸ்டல் வார்டன் தனக்குத் தகுந்த மாதிரி மூன்று பிள்ளைகளைத் தேர்ந்து கொண்டார். ஹாஸ்டலின் வரவேற்புக் கூடத்தின் இடது புறம் இருந்த அறையில் ப்ளஸ்டூ பிள்ளைகளும், வலது புறம் இருந்த அறையில் பத்தாம் வகுப்புப் பிள்ளைகளும் இருந்தார்கள். மற்ற வகுப்பில் படித்த பிள்ளைகள் அனைவரும் நடுக்கூடத்தில் இருந்தார்கள். ப்ளஸ்டூ பிள்ளைகள் இருந்த அறையிலிருந்து சோதனை ஆரம்பித்தது.
            உட்கார்ந்திருந்த பிள்ளைகளில் இரண்டு மூன்று பேரிடம் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் தாங்கள் பணத்தைப் பெட்டியில் வைத்திருப்பதாகவும், எப்படியும் சோதனையில் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் குசுகுசுவென்று பயந்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். போனமுறை நடந்த சோதனையில் கண்டுபிடிக்க முடியாததைப் பற்றியும் பேசி ஆறுதலும் அடைந்து கொண்டார்கள்.
            ஹாஸ்டலில் தகரப் பெட்டிகள் வைத்திருந்த பிள்ளைகளே அதிகம். ஒரு சில பிள்ளைகளே சூட்கேஸ் வைத்திருந்தார்கள். தகரப் பெட்டிக்குள் நான்கைந்து பழைய செய்தித்தாள்களைப் பரப்பி விட்டு அதற்குள்தான் தங்களது ஆடைகள், புத்தகங்கள், நோட்டுகள், சோப்பு, சீப்பு வகையறாக்களை அந்தப் பெட்டிக்குள் கச்சிதமாக வைத்திருந்தார்கள். தகரப் பெட்டிக்குள் பரப்பியிருக்கும் செய்தித்தாள்களுள் சாமர்த்தியமாக யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பணத்தை வைத்திருப்பார்கள். சோதனையின் போது மொத்தப் பெட்டியையுமே அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுத்து கலைத்துப் போட்டு விடுவார்கள். சோதனை முடிந்த பிறகு பிள்ளைகள் கலைத்துப் போட்டப் பொருட்களையெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பழம் செய்தித்தாள்களும் பணம் வைத்திருந்தால் எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள்.
            தகரப் பெட்டியின் உள்ளே தகரத்தில் சில இடங்களில் இடுக்குகள் இருக்கும். அங்கே பணத்தை ஒளித்து வைப்பவர்களும் உண்டு. அதையும் சோதனையின் போது கவனமாக டார்ச்லைட் வரை அடித்துப் பார்ப்பார்கள். சில பிள்ளைகள் புத்தகம், நோட்டுகளில் பக்கங்களுக்கு இடையில் மறைத்து வைத்திருப்பார்கள். அதனால் அனைத்து வகைப் புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தையும் விசிறியடித்துப் பார்ப்பார்கள். சில பிள்ளைகள் நோட்டுப் புத்தங்களுக்கு அட்டை போட்டிருப்பார்கள். அந்த அட்டையையும் பிரித்துப் பார்ப்பார்கள். பணத்தை உள்ளே வைத்து வெளியே அட்டைப் போட்டிருக்கிறார்களா என்பதைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வார்கள்.
            துணிகளுக்கு இடையில் பணம் இருக்கலாம் என்று துணிகளையும் எடுத்து கலைத்துப் போட்டு விடுவார்கள். மடித்து வைத்து இருக்கும் துணிகளில் பேண்ட் பாக்கெட்டுகள் வரை சோதனை போடுவார்கள். பவுடர் டப்பா மூடியைத் திறந்து அதற்குள் பவுடரோடு பவுடராக பணத்தை வைத்து மாட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதால் பவுடர் டப்பாவைத் திறந்து பார்த்து வரை சோதனை போடுவார்கள்.
            இன்றைய சோதனையில் யாரும் மாட்ட மாட்டார்கள் என்றே எல்லா பிள்ளைகளும் நினைத்தார்கள். வழக்கமாக இந்தச் சோதனையில் மாட்டும் பிள்ளை ராமராஜ்தான். அந்தப் பிள்ளை மிக அமைதியாக உட்கார்ந்திருந்தான். அந்தப் பிள்ளை ஒன்பதாம் வகுப்பு. எல்லாரும் ராமரா‍ஜைத்தான் பார்த்தார்கள். "யப்பா! ன்னால்ல அடி வாங்க முடியதுப்பா! நாம்ம ஒண்ணும் பணமும் வெச்சில்ல. காசும் வெச்சில்ல. நாம்ம மட்டுவம்னு மட்டும் கனவுல நெனக்காதீங்க! யாரும் வெச்சிருந்தா இப்போ கூட ஒண்ணுமில்ல. வார்டன் சார்ட்ட சொல்லிடுங்கப்பா! யாராச்சும் மாட்டுனீங்கன்னா நாம்ம தொணய இருப்போம்னு நெனச்சீங்கன்னா ஏமாந்துடுவீங்க ஆமா! எங்கிட்ட ஒண்ணுமேயில்ல பாருங்க!" என்றான்.
            ராமராஜ் சொன்னது உண்மை. அன்று அவன் மாட்டவில்லை. சொல்லப் போனால் சோதனையில் யாரும் மாட்டவில்லை ஒரே ஒரு ஆளைத் தவிர.
            "இன்னிக்கு ஒருத்தம்தான் மாட்டியிருக்கான்!" என்ற வார்டன் சொன்னதும் அந்த ஒருவன் யார் என்று தெரிந்து கொள்ள எல்லா பிள்ளைகளும் ஆர்வமானார்கள். விகடவுக்கும் அவன் யார் என்று அறிய ரொம்ப ஆவலாக இருந்தான். ஆனால் நிலைமையப் பாருங்கள், சோதனையின் முடிவில் பணம் வைத்திருந்த அந்த ஒரு ஆள் விகடு என அறிவிக்கப்பட்ட போது விகடுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
            எல்லாரும் உள்ளே அனுப்பப்பட்டார்கள். விகடு வார்டன் அறைக்கு அழைக்கப்பட்டான். விகடுவின் உடல் நடுங்கியது. அவனறிந்த வகையில் இதுபோன்ற தவறுகளில் மாட்டிக் கொண்டதில்லை. தன் பெட்டியில் எப்படி பணம் வந்தது? என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
            வார்டன் அறை திண்ணையின் இடது பக்கம் இருந்தது. அதை அறை என்று சொல்ல முடியாது. ஒரு தடுப்பு. பரீட்சை அட்டை இருக்கும் இல்லையா அந்த அட்டையால் அறை போன்ற தடுப்பை உருவாக்கியிருந்தார்கள்.
            "நாம்மதான் சொன்னோம்ல! பணம் வெச்சிருந்தா கொடுத்துடுலாம்னு. எப்படி ஒம் பொட்டியில பணம் இருந்துச்சு. ஐம்பத்து அஞ்சு ரூவா இருக்கு. எப்படி வந்துச்சு?" வார்டனின் குரலில் காட்டம் தெரிந்தது.
            விகடுவுக்கு என்ன பதில் சொல்வது என்பது புரியாமல் தடுமாறியபடி நின்றான். அவனுக்கு மயக்கம் வந்து விடும் போலிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. வார்டன் அதை நன்றாகக் கவனித்தார். இப்படி நம்முடைய பெட்டியில் நாம் பணம் வைக்காமல் தானாக பணம் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். அது இப்படி ஒரு சூழ்நிலையிலா வர வேண்டும்?
            வார்டன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரது அறையை விட்டு வெளியே போனார்.
            "டேய் பசங்களா? யாராச்சும் பணம் வெச்சிருந்து மாட்டிப்பீங்கன்னு பயந்துகிட்டு இவனோட பெட்டியில வெச்சீங்களா? இருந்தா சொல்லிடுங்க. ஒண்ணுஞ் செய்யல. பணத்த அவனோட அக்கெளண்ட்ல வெச்சுருக்கேன். இல்லேன்னா ஒம்மளோட பணம் போயிடும். இவனோட அக்கெளண்ட்ல சேத்துடுவேங் பாத்துக்கோங்க." சொல்லிவிட்டு சில நிமிடங்கள் காத்திருந்தார். யாரும் தன்னுடைய பணம் என்று சொல்ல முன்வரவில்லை.
            வார்டன் அறைக்குள் வந்தார். விகடுவைப் பார்த்தார். அவன் முகம் இருண்டிருந்தது. "திஸ் இஸ் பர்ஸ்ட் டயம். நெக்ஸ்ட் டயம்னா ன்னா பண்ணுவன்னு நமக்கே தெரியாது! கரெக்டா இருந்துக்கோ! கெளம்பு" என்றார்.
            விகடு அவரது அந்தச் சின்ன அறையை விட்டு வெளியே வந்தான். நடுக்கூடத்துக்கு இவனுடைய பெட்டி இருந்த இடத்துக்கு வரும் வரையில் எல்லா பிள்ளைகளும் அவரவர் பெட்டிகளில் கலைந்து கிடந்ததை எடுத்து அடுக்கியபடி இவனையே பார்த்தார்கள். இவனது பெட்டியின் பக்கத்தில் இருந்த இடது பெட்டிக்காரன் சுபலேஷ், "வருத்தப்படாதீங்கண்ண. நம்ம பயலுவோல்ல யாரோத்தான் உங்க பொட்டியில வெச்சுருப்பாணுங்க. நம்ம வார்டன் சார் எல்லாத்தயும் கண்டுபிடிச்சிடுவாரு. அம்பத்தஞ்சு ரூவால்ல போயிருக்கு. இன்னும் ரெண்டு மூணு நாளுல்ல பாருங்க. எவனாது சொல்லிட்டு அவர்ட்ட அடிவாங்குவானுங்கோ பாருங்க!" என்று ஆறுதலாகச் சொன்னான். இவனது பெட்டிக்கு வலது பக்கத்துப் பெட்டிக்காரனாய் இருந்த சாகுலும் அதையேத்தான் சொன்னான். கலைந்து கிடந்த எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு வந்த அனைவரும் விகடுவுக்கு அதையேச் சொன்னனர். விகடுவும் அவர்கள் சொன்னபடி இரண்டு மூன்று நாட்களில் யாராவது அப்படிச் சொல்லி தன்னை நிரபராதி என்று நிரூபிப்பார்கள் என்று எதிர்பார்த்தான். அப்படி யாரும் அவனை நிரபராதி என நிரூபிக்கவில்லை.
            பல நாட்கள் தன்னுடைய பெட்டியில் பணம் எப்படி வந்தது என விகடு யோசித்துக் கொண்டே இருந்தான். மறுபடியும் தன்னுடைய பெட்டியில் இது மாதிரி பணம் வந்து விடுமோ என்று அவன் அடிக்கடி பெட்டியைச் சுயசோதனைப் போட ஆரம்பித்தான்.
*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...