Showing posts with label அவசரக் குடுக்கை. Show all posts
Showing posts with label அவசரக் குடுக்கை. Show all posts

4 Aug 2026

மெய்யறிதலின் புதிர்வெளியும் சில அவசரக் குடுக்கைத்தனங்களும்!

மெய்யறிதலின் புதிர்வெளியும் சில அவசரக் குடுக்கைத்தனங்களும்!

கார் பயணத்தில் தொடங்கும் ஜெயமோகனின் கட்டுரை, மனித மண்டையோட்டைக் கிழித்துக்கொண்டு போய், இறுதியில் பிரபஞ்சத்தின் பெருவெளியில் போய் நிறைகிறது. ஜெயமோகன் பாணி உரைநடையின் அசாத்திய வசீகரத்தையும், அதே சமயம் அதில் ஒளிந்திருக்கும் சின்னச் சின்னத் தர்க்கக் கோளாறுகளையும் ஒருசேரத் தரிசிக்க ‘மேகங்களின் குரல்’ தொடர் கட்டுரையின் ‘புத்திக்கும் அப்பால்…’ என்ற இக்கட்டுரை ஒரு நல்ல வாய்ப்பு.

அறையில் அமர்ந்து பேசினால் "அன்றாட விஷயங்கள்" மட்டுமே பேசப்படுமாம்; காரில் வேகமாகப் போனால் "புற உலகம் இல்லாமல் ஆகி, உரையாடல் கூர் கொள்ளுமாம்".

என்ன ஓர் அழகான கற்பனை! பொதுவாகக் கார் பயணங்களில் "அடுத்த டோல் பிளாசா எப்போ வரும்?", "டீ குடிக்க வண்டி நிறுத்துவோமா?" என்று பேசிக்கொண்டு போவதுதான் நம் ஊர் வழக்கம். ஆனால், எழுத்தாளரின் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டும் கார் கதவு சாத்தப்பட்டதும் ஆளுக்கொரு தத்துவப் பொட்டலத்தைப் பிரித்து வைக்கிறார்கள் போலிருக்கிறது. என்னவோ போங்கள், காரில் போனால் மட்டுமே தீவிரம் கூடும் என்றால், நம்மூர் டிராபிக் ஜாமில் சிக்குபவர்கள் எல்லாம் எப்போதுதான் மெய்ஞானம் அடையப் போகிறார்களோ தெரியவில்லை!

விபத்தில் சிக்கிய தோழியின் அனுபவ விவரிப்பு பகுதி மிக அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது, ஒரு சிறுகதைக்குரிய அடர்த்தியோடு. ஆனால், அங்கேயும் ஒரு கிண்டலான நண்பர் கேட்கிறார், "கண்ணாடிதான் பறந்துபோயிருக்குமே, அப்புறம் எப்படி கூழாங்கல் முதற்கொண்டு துல்லியமாகத் தெரிந்தது?"

நியாயமான கேள்விதான்! அதற்கு எழுத்தாளர் சொல்லும் பதில் என்னவென்றால், "மூளைக்குத் தேவைப்பட்டால் ஒலியைக் காட்சியாகவும், காட்சியை மணமாகவும் மாற்றிக்கொள்ளும்!"

சுவாரஸ்யமான வாதம். ஆனால், பார்வை போன பிறகு மூளை கண்ணாடி வேலையைத் தானே பார்த்துக்கொள்ளும் என்றால், அப்புறம் எதற்கு அந்த அம்மா தடிமனான கண்ணாடி போட்டுக்கொண்டு திரிய வேண்டும்? மூளையின் இந்த அசாத்திய திறமையை ஏன் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை என்ற கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை.

பீனியாஸ் கேஜின் மண்டையோட்டுக்குள் கடப்பாரை புகுந்து சென்ற கதை, நரம்பியலில் ஒரு புகழ்பெற்ற சம்பவம். அதை மிக அழகாக விவரித்துவிட்டு, 'Brain அல்ல, Braining' என்று ஆலிவர் சாக்ஸையும் துணைக்கு அழைத்து வருகிறார் ஜெ.மோ. இதுவரைக்கும் அறிவியல் ரொம்பவே சுவாரஸ்யமாகவும் அழகாகவும் போகிறது.

ஆனால், அதற்குப் பிறகுதான் எழுத்தாளர் தனது வழக்கமான செம்பைச் செருகுகிறார்.

"நான் வேதாந்தி. என் பாதை தூய அறிவின் பாதை. அறிவியலுக்கு அப்பால் யோசிப்பதில்லை" என்று சுய சான்றிதழ் கொடுத்துக்கொண்டே, அடுத்த அடியை அப்படியே அறிவியல் எல்லைக்கு வெளியே எடுத்து வைக்கிறார்.

கேஜின் சிதைந்த மூளை தன்னைத்தானே சரிசெய்துகொண்டது உயிரியலின் அசாத்தியமான ஒரு தன்னமைவு இயக்கம்.

ஆனால், அதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், "அப்படிச் செய்ய வைத்தது எது? அதுதான் அது!" என்று ஒரே தாவலாகக் கீதையின் புத்தே பரதஸ்து சஹ் என்பதற்குள் போய் விழுந்துவிடுகிறார்.

அறிவியல் இன்னும் ஒரு கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை என்றால், "அடடா, அங்கேதான் மெய்ஞானம் ஒளிந்திருக்கிறது!" என்று உடனடியாகப் பிரகடனம் செய்துவிடுவது நம்மூர் வேதாந்திகளுக்கு கைவந்த கலை. அறிவியலின் இடைவெளியில் ஆன்மிகக் கொடியை நட்டு வைக்கும் இந்த அவசரம் இருக்கிறதே, அதுதான் சுவாரஸ்யமானது!

ஒன்றை ஒத்துக்கொண்டாக வேண்டும். கட்டுரை வாசிக்க மிகச் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், "நான் தூய அறிவியல் வழியில் சிந்திக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே, அறிவியலின் தோள் மீது ஏறி நின்று வேதாந்தக் கொடி பிடிக்கும் இந்த நுட்பமான போலித் தருக்கம்தான் இதில் வேடிக்கையான விஷயம்.

சுருக்கமாகச் சொன்னால், இக்கட்டுரை ஓர் அரிய அனுபவப் பதிவு; சுவாரஸ்யமான அறிவியல் விவாதம். ஆனால், இறுதியில் எழுத்தாளர் அடையும் அந்த வேதாந்த முடிவு என்பது தூய அறிவின் பாதை' அல்ல; அது அவருடைய சொந்த ஆன்மிக விருப்பம் மட்டுமே!

*****