30 Apr 2026

பெண்கள் - ஆட்ட நாயகிகள்!

பெண்கள் - ஆட்ட நாயகிகள்!

சமீபத்திய தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டது. வாக்குப்பதிவு 85 சதவீதம். 2011 இல் வெறும் 78 சதவீதத்தோடு போதும் என்று நிறுத்திக்கொண்டவர்கள், 15 வருடம் கழித்து இப்போது செஞ்சுரி அடிக்காத குறையாக ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

அதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், இளம் வாக்காளர்களின் எழுச்சி அதாவது முதல்முறை விரலில் மை வைக்கும் ஆர்வம் எனப் பல காரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், எல்லாவற்றையும் விட முக்கியமானது, பூத்களில் நின்ற பெண்களின் கூட்டம்.

வாக்காளர் பட்டியலில் 1000 ஆண்களுக்கு 1,044 பெண்கள் இருக்கிறார்கள். அதாவது, கவனிப்பாரற்றுப் போகும் ஆண்களை விட பெண்கள் தான் இங்கே அதிகம். இதுதான் பெண்களைத் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியிருக்கிறது. இதற்காகவே அரசியல் கட்சிகள் அவர்கள் பின்னால் அலைகின்றன.

இதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. ஆண்கள் பொதுவாக, நான் இந்தக் கட்சிப் பரம்பரை என்று ஒரு லேபிளை ஒட்டிக்கொண்டு அலைவார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல. அவர்கள் ஒரு ப்ரீ ஏஜென்ட் போலச் செயல்படுகிறார்கள்.

முன்னெல்லாம் கிராமங்களில் யாருக்கு ஓட்டுப் போடணும்? என்று பெண்கள் தங்கள் கணவரிடமோ, அண்ணனிடமோ அனுமதி கேட்பதுண்டு. ஆனால் இப்போது அந்த சீனெல்லாம் பழைய படத்தோடு முடிந்துவிட்டது.

2014 இல் நடந்த ஒரு ஆய்விலேயே 70 சதவீதப் பெண்கள், நான் யாரையும் கேட்டு ஓட்டுப் போடுவதில்லை, என்று சொல்லிவிட்டார்கள்.

இந்தச் சட்டசபைத் தமிழகத் தேர்தலில், தகுதி பெற்ற 2.93 கோடி பெண் வாக்காளர்களில் 2.51 கோடி பேர், அதாவது 85 சதவீதம் ஆஜராகிவிட்டார்கள்.

பாவம் ஆண்கள், 2.80 கோடியில் 2.34 கோடி பேர்தான் அதாவது 83 சதவீதம்தான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள்.

ஆண்களை விட பெண்கள் வேகமாக முடிவெடுக்கிறார்கள், வரிசையில் நின்று நேரத்தையும் வீணடிப்பதில்லை.

1962இல் வெறும் 48 சதவீதப் பெண்கள் தான் வீட்டை விட்டு வெளியே வந்து ஓட்டுப் போட்டார்கள். ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் 65.72 சதவீத பெண்கள் ஓட்டுப் போட்டு, ஆண்களை அதாவது 65.55 சதவீதத்தை ஓவர்டேக் செய்துவிட்டார்கள்.

50 ஆண்டுகளில் ஆண்களின் ஆர்வம் 7 சதவீதம்தான் கூடியிருக்கிறது, பெண்களுக்கோ 27 சதவீதம் எகிறியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கும் இது புரிந்துவிட்டது. அதனால்தான் இப்போது வரும் தேர்தல் அறிக்கைகளில், அக்காக்களுக்கு இது, தங்கச்சிகளுக்கு அது, எனப் பெண்களைக் கவரும் திட்டங்கள் மழையாகப் பொழிகின்றன.

இனி வரும் காலங்களில் பெண்கள் ஒரு தனித்த வாக்கு வங்கி. அவர்கள் எதை எதிர்பார்த்து ஓட்டுப் போடுகிறார்கள் என்பது ஆண்களின் நோக்கத்திலிருந்து மாறுபடுகிறது. அதனால்தான் கேஸ் சிலிண்டர், மகளிர் உதவித்தொகை எனப் பெண்களைக் குறிவைத்த ஸ்கீம்கள் தேர்தல் அறிக்கைகளில் வரிசையாக வருகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், தேர்தலில் யார் ஜெயிக்க வேண்டும், எவ்வளவு வித்தியாசத்தில் தோற்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் மாஸ்டர் கீ இப்போது பெண்களிடம் இருக்கிறது. ஆண்கள் சும்மா கூட்டத்தில் கோஷம் போட மட்டுமே மிச்சமிருக்கிறார்கள்!

*****

எக்சிட் போல் கணிப்புகள் – தமிழ்நாட்டின் நிலை என்ன?

எக்சிட் போல் கணிப்புகள் – தமிழ்நாட்டின் நிலை என்ன?

தமிழகத்தில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் என்றும், கேரளாவில் கை சின்னம் கைகொடுக்கும் என்றும், வங்காளத்தில் தாமரை மலர்ந்து ஆக்கிரமிக்கும் என்றும் ஜோசியர்கள், அதாகப்பட்டது, அந்த எக்ஸிட் போல் நடத்தும் மேதாவிகள் ஆரூடம் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் நான்கு முனை போட்டி என்கிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, புதுவரவான சினிமா கட்சி, அப்புறம் எப்போதுமே இருக்கும் தம்பிமார்கள் கட்சி. இதில் திமுக கூட்டணிதான் பெரியப்பா என்று பெரும்பாலான கணிப்புகள் சொல்கின்றன. சில கணிப்புகள் அதிமுகவுக்கு விசில் அடிக்கின்றன. விசிலுக்கும் ஒரு கணிப்பு இலைக்குள் தாமரையை மலர வைக்கிறது. யாருக்கு எத்தனை சீட் என்பதில் கணிப்புகளுக்கிடையே இருக்கும் வித்தியாசம், ஒரு சராசரி மனிதனின் சம்பளத்திற்கும் செலவிற்கும் இருக்கும் வித்தியாசத்தை விட அதிகம்.

கேரளாவில் இடதுசாரிகள் பத்து வருடங்களாகச் செய்த புரட்சி போதும் என்று மக்கள் கை சின்னத்திற்கு மாற முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் தீதிக்கும் மோடிக்கும் நடந்த மல்யுத்தத்தில், இம்முறை தாமரை இலை தட்டிப் பறிக்கும் என்கிறார்கள்.

அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பழைய பஞ்சாங்கமே தொடருமாம்.

நாங்கள் இனி சும்மா கை தட்ட மாட்டோம், மேடையிலும் ஏறி அமருவோம், என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதாவது, இனி நாங்கள் வெறும் கூட்டணி அல்ல, அதிகாரப் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இது எனக்கும் ஒரு லட்டு வேணும் என்று அடம் பிடிக்கும் குழந்தையின் ஆசையைப் போன்றதா அல்லது நியாயமான கோரிக்கையா என்பதை காலம் மற்றும் ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும்.

எக்சிட் போல் கணிப்புகளின் தரவுப் பட்டியல்களைப் பார்க்கும் போது, அவை குழப்பங்களின் தொகுப்பு போல இருக்கிறது. இருந்தாலும் குழப்பங்களுக்கு மத்தியில் அவற்றைத் தொகுத்தால் முன்னிலை கணிப்பு எப்படி இருக்கிறது என்றால்,

தமிழ்நாட்டில் +120 இடங்களோடு திமுக ஆட்சியைப் பிடிக்கலாம்.

கேரளாவில் +70 இடங்களோடு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கலாம்.

மேற்குவங்கத்தில் +140 இடங்களோடு பாஜக ஆட்சியைப் பிடிக்கலாம்.

புதுச்சேரியில் +16 இடங்களோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கலாம்.

ஆனால், உண்மை நிலவரம்?

மே 4ஆம் தேதி வாக்குப்பெட்டிகள் திறக்கப்படும். அன்றுதான் தெரியும், கணிப்புகள் எல்லாம் புள்ளிவிவரப் புதிர்களா அல்லது புருடாக்களா என்று.

அதுவரை தலைவர்கள் அனைவரும் நாங்களே வெல்வோம் என்று கேமரா முன்னால் தியானம் செய்வார்கள்.

மக்கள்?

அவர்கள் எப்போதும் போலவே விரைவில் பெட்ரோல் – டீசல் – சிலிண்டர் விலை உயர்வுக்காகக் காத்திருப்பார்கள்.

*****

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பரந்தாமன் நிலத்தை விற்றார். கையில் வந்தது இருபது லட்சம்.

பணம் கையில் இருந்தால் சில அரிப்புகளைத் தரும். கையை நனைக்காமல் ஏதாவது வங்கியில் போடுங்கள், என்றார் அர்ச்சுனன்.

பரந்தாமனுக்கு அறுபது வயது.

அஞ்சலகத்தில் சீனியர் சிட்டிசன் ஸ்கீம் இருக்கிறது. அரசாங்கப் பாதுகாப்பு. நிம்மதியாகத் தூங்கலாம், என்று சரியாக வழிகாட்டினார் அர்ச்சுனன். அத்தோடு நில்லாமல், அதற்குத் தேவையான படிவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனார்.

பரந்தாமன் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை. ஒரு தத்துவ ஞானியைப் போல அர்ச்சுனனைப் பார்த்தார்.

தம்பி, போஸ்ட் ஆபீஸில் என்ன வட்டி தருவார்கள்? எட்டணா, பத்தணா. நான் ஒருத்தரைப் பார்த்தேன். அஞ்சலக வட்டி மாதிரி ரெண்டு மடங்கு தர்றேன்னு சொல்லிட்டார். பணத்தைக் கொடுத்துட்டேன், என்றார்.

யார் அவர்? என்றார் அர்ச்சுனன்.

பெரிய மனிதர். நெற்றியில் பட்டை, கையில் ஜபமாலை. அவர் முகத்தைப் பார்த்தாலே திருட்டுத்தனம் தெரியாது, என்றார் பரந்தாமன்.

அர்ச்சுனன் கொண்டு போன படிவங்களைச் சுருட்டிப் பையில் வைத்தார். கவனமாக இருங்கள், என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பேராசைக்காரர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் எப்போதும் கேட்கப்படாத வானொலி நிலையங்களைப் போன்றவை.

சில நாட்களில் அந்தச் சுவாரசியச் செய்தி வந்தது.

அந்த ஜபமாலை மனிதர் வீட்டைத் தூர்வாரத் தேவையில்லை என்று முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக வீட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிட்டார். ஊரில் பாதிப் பேருக்கு இப்போதுதான் ரத்த அழுத்தம் எகிறியிருக்கிறது.

பரந்தாமன் இப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏமாத்திட்டுப் போயிட்டானே தம்பி, என்று அர்ச்சுனுனைப் பார்த்துப் புலம்பினார்.

அவர் ஏமாற்றவில்லை சார். நீங்கள் ஏமாறத் தயாராக இருந்தீர்கள், அவர் உங்களுக்கு உதவினார், என்று சொல்ல நினைத்தார் அர்ச்சுனன், ஆனால், சொல்லவில்லை.

இதிலிருந்து சகலமானவர்களும் அறிந்து கொள்ள சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

அரசாங்கத்தை விட ஒரு தனி நபர் அதிக வட்டி தருகிறார் என்றால், அவர் ஒன்று பணம் அச்சிடும் இயந்திரம் வைத்திருக்க வேண்டும் அல்லது அவருக்கு உங்கள் பணத்தை அமுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணத்தை இழப்பது எளிது. ஆனால் இழந்த பிறகு வரும் அறிவு இருக்கிறதே, அது மிகவும் விலை உயர்ந்தது.இந்தக் கதையில் சரியாக இருபது லட்சம் ரூபாய். இந்தத் தொகையானது கதைக்கு கதை மாறுபடும்.

வங்கி அல்லது அஞ்சலகம் தரும் வட்டி என்பது ஒரு கணக்கு. யாராவது அதற்கு மேல் டபுள் தருகிறேன் என்று சொன்னால், அது கணக்கல்ல, அது ஒரு தூண்டில். தூண்டிலில் சிக்கினால் செத்தான் சேகரு மொமன்ட்தான்.

பரந்தாமன் போன்றோர் அறுபது வயதில் முதலீடு செய்ய வேண்டியது பணத்தை மட்டுமல்ல, கொஞ்சம் நிதானத்தையும்தான். கொஞ்சம் ஆசைப்பட்டாலும் லபக்தான். அதிகம் ஆசைப்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத நபரிடம் பணத்தைக் கொடுப்பது, பசித்திருக்கும் ஓநாயிடம் ஆட்டுக்குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்லச் சொல்வதற்குச் சமம். அது மாதிரியான ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடும் பழக்கங்கள் வேண்டவே வேண்டாம்.

ஸோ, இதிலிருந்து அறியப்பட வேண்டிய நீதி என்னவென்றால், அதிக வட்டிக்கு ஆசைப்படுபவன், ஒருநாள் தன் அசலையே வட்டியாகக் கொடுத்துவிட்டுத் தெருவில் நிற்பான்.

அதிக வட்டி தரும் ஆசாமி எங்கே இருக்கிறார் என்று தேடுவதை விட, உங்கள் பணம் எங்கே பாதுகாப்பாக இருக்கும் என்று தேடுவதே புத்திசாலித்தனம். இல்லையெனில், வட்டியும் வராது, வாங்கியவனும் திரும்புவதில்லை.

முதலீடு என்பது முட்டையிடும் கோழியை வாங்குவது போல. யாராவது, உன் கோழி தங்க முட்டை போடும், என்று சொன்னால், கோழியையும் தூக்கிக்கொண்டு அவர் ஓடப்போகிறார் என்று அர்த்தம். புரிந்து கொள்ளுங்கள். உடனே விழித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் விசயம்.

*****

29 Apr 2026

கோர்ட், கேஸ் மற்றும் சில கிரிமினல் மேட்டர்கள்!

கோர்ட், கேஸ் மற்றும் சில கிரிமினல் மேட்டர்கள்!

ஊர் ஊருக்குக் கோர்ட்டுகள் இருக்கின்றன. அங்கே ஆயிரக்கணக்கான கேஸ்கள் விசாரணை என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கூண்டுக்குள் நிற்கும் குற்றவாளிகள் ஏதோ நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ் பார்ப்பது போல மிக அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

வெளியே பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கதையை ரத்தமும் கண்ணீருமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் அவர்கள் தாய்மொழியிலேயே நடந்தாலும், கூண்டுக்குள் இருப்பவருக்கு இது புரியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

அதாவது, அய்யோ, தப்பு பண்ணிட்டோமே! என்று அவர் உள்ளம் பதறுகிறதா? அந்தத் தண்டனையைத் தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறாரா? சான்ஸே இல்லை.

நீதிபதி சட்டப் புத்தகத்தைப் புரட்டி, உனக்கு இத்தனை வருஷம் ஜெயில், என்று தீர்ப்புச் சொன்னால், அவ்வளவுதானே? ஓகே டன். என்று ஒரு தினுசான அலட்சியத்தோடு கூண்டை விட்டு இறங்குகிறார்கள் குற்றவாளிகள். இவர்களை எந்தச் சட்டம் திருத்தும்?

தெரியாம பண்ணிட்டேன், என்று உருகுவதெல்லாம் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலம். இப்போது, தெரிஞ்சுதான் பண்ணேன், என்ன இப்போ? என்று மார்தட்டுகிறார்கள். தண்டனை என்னவென்று கூகுள் செய்து பார்த்துவிட்டு, அதற்குத் தயாராகிவிட்டே கிரைம் செய்கிறார்கள்.

கல்வி அறிவே இல்லாதவரை விடுங்கள், நன்றாகப் படித்துப் பெரிய பதவியில் இருப்பவர்களும் பக்கா பிளானிங் போட்டுத் திருடுகிறார்கள். மாட்டிக்கொள்ளாத வரை நான் யோக்கியன் என்பதுதான் இன்றைய எஜுகேஷன் சிஸ்டம் கற்றுக்கொடுத்த பாடமோ என்னவோ! கடிக்க வரும் நாய், முட்டும் காளை, மதம் பிடித்த யானை இவற்றுக்கும் இவர்களுக்கும் உருவத்தைத் தவிர வேறு என்ன பெரிய வித்தியாசம்?

யாரையும் பழிவாங்குவது சட்டத்தின் நோக்கம் இல்லை. குற்றவாளிகளை ஒழிப்பதை விட, குற்றத்தை ஒழிப்பதுதான் அதன் ஐடியா. ஆனால், குற்றவாளிகள் ஓவர் நைட்டில் உருவாவதில்லை. சின்ன வயதில் மனதில் விழுந்த காயங்களும், வடுக்களும்தான் பின்னாளில் முள் மரமாக வளர்கின்றன.

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்பது பழைய பாட்டு. ஆனால், உண்மை அதுதான். பொறாமை, ஆசை, கோபம் ஆகிய இந்த வாசல்கள் வழியாகத்தான் குற்றங்கள் நுழைகின்றன.

காந்தி தாத்தா குற்றங்களைத் தடுக்க மூன்று வழிகளைச் சொன்னார். முதலாமவது போலீஸிடம் சொல்வது, இரண்டாமவது சும்மா இருப்பது, மூன்றாமவது சத்தியாகிரகம்.

காந்தியைப் பொறுத்தவரை குற்றம் என்பது ஒரு வியாதி. குற்றவாளி ஒரு நோயாளி. நோய்க்கு மருந்து தர வேண்டுமே தவிர, அடி வெளுக்கக் கூடாது. நோய்நாடி நோய்முதல் நாடி என்றார் வள்ளுவர். அதைத்தான் காந்தியும் வழிமொழிகிறார்.

திருடனுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்கிறார் காந்தி. தேவைக்கு அதிகமாகச் சேர்த்து வைப்பதே ஒரு வகை திருட்டுதான். பாக்கெட் திருடன் மாட்டிக்கொண்டு தண்டனை பெறுகிறான், பெரிய பணக்காரத் திருடன் மாட்டிக்கொள்ளாமல் சமூக மரியாதையைப் பெறுகிறான். அவ்வளவுதான் டிபரன்ஸ்.

அறிஞர்கள் பார்வையில் நல்ல நாட்டில் குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்களை அன்பால் திருத்த வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், எல்லாரும் அன்பாக இருந்தால், கோர்ட்டும் கிடையாது, கூண்டும் கிடையாது. அப்படி ஒரு சொர்க்கத்தை இங்கே கிரியேட் பண்ண முடியாதா என்ன? முடியாது என்பதுதான் எதார்த்தம், இருந்தாலும் முயற்சிப்பதில் என்ன தப்பு?

*****

ரோபோக்களும், நாமும், சில கவலைகளும்!

ரோபோக்களும், நாமும், சில கவலைகளும்!

உலகம் முழுக்க இயந்திரங்கள் ஊடுருவிவிட்டன. இந்தியாவில் வேகம் குறைவு என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் இங்கேயும் சூடு பிடித்துவிட்டது.

எதை எடுத்தாலும் ஒரு மெஷின். துணி துவைக்க, காசு எண்ண, பார்கோடு படிக்க என எங்கு பார்த்தாலும் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கலந்த மனிதர்களின் ராஜ்யம்.

முன்பெல்லாம் மனிதர்கள் மூளையை உபயோகிக்காமல் சில வேலைகளைச் செய்வார்கள். இப்போதும் பலர் அப்படித்தான் செய்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட மெக்கானிக்கல் வேலைகளை இனி மனிதர்கள் செய்யத் தேவையில்லை. அந்த இடத்தைப் பிடிப்பதற்கு ரோபோக்கள் வந்துவிட்டன.

ஆட்கள் தேவையில்லை, அவற்றுக்கு ஓவர் டைம் சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை, தொழிற்சங்கம் ஆரம்பிக்க மாட்டார்கள். அசுர வேகத்தில் வேலை செய்கின்றன. ரோபோக்களைப் பற்றி இப்படி பிள்ளைத்தமிழே எழுதி விட்டார்கள்.

பல கார் கம்பெனிகளில் உதவியாளர்கள் இப்போது வீட்டின் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கார் தயாரிப்பு முழுவதும் ரோபோக்கள் கைவசம்.

ஒரு தனியார் வங்கி 1200 கேள்விகளுக்குப் பதில் சொல்லும் ஒரு ரோபோவை களம் இறக்கியிருக்கிறது. ஒரு சராசரி மனிதர் தன் வாழ்நாளில் மனைவியிடம் கேட்கும் கேள்விகளே ஐம்பதைத் தாண்டாது. ஆனால், இந்த ரோபோ இவ்வளவு பதில் சொல்கிறதாம்.

கடைகளுக்குப் போய் பொருள் வாங்குவதெல்லாம் பழைய பேஷன். இப்போது அமேசானும், பிளிப்கார்ட்டும் உங்கள் விரல் நுனியில். காசு கொடுக்க வங்கிக்குப் போக வேண்டியதில்லை. மொபைலில் தட்டினால் சோலி முடிந்தது.

ஏன், திருட்டைப் பிடிக்கக் கூட நாய்களை விட சிசிடிவி கேமராக்கள்தான் இப்போது விசுவாசமாக இருக்கின்றன.

இன்னும் கொஞ்ச நாட்களில் ஹோட்டலில் சர்வர் தம்பிக்கு பதிலாக ஒரு தட்டுத் தடுமாறும் அல்லது சாப்பாடு பரிமாறும் ரோபோ வந்து நிற்கும்.

பெட்ரோல் போட ஆள் இருக்காது. டைம் ஆகிறது, சட்டென்று பெட்ரோலைப் பிடி, காரியத்தை முடி என்று ரோபோ கத்தக் கூடும்.

துணிக்கடையில் துணியை அணிந்து பார்க்கத் தேவையில்லை. ஒரு பட்டனைத் தட்டினால் அந்தச் சட்டையில் நீங்கள் எவ்வளவு அழகாக அல்லது அசிங்கமாக இருப்பீர்கள் என்று திரையிலேயே காட்டிவிடும்.

வெளிநாடுகளில் ரோபோ குரு என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். பையனுக்கு உடம்பு சரியில்லை என்றால், அவனுக்குப் பதில் அந்த ரோபோ பள்ளிக்குச் செல்லுமாம்.

அதாகப்பட்டது, பையன் வீட்டில் படுத்துக்கொண்டு கேம் விளையாடுவான், ரோபோ அங்கே போய் பாடம் கவனிக்கும். என்ன ஓர் அற்புதமான கல்விமுறை! அதுமட்டுமல்ல, சீக்கிரம் ஆசிரியர்களுக்குப் பதில் ரோபோக்களே பாடம் நடத்தும்.

கையில் கட்டியிருக்கும் வாட்ச் இப்போது ஒரு டாக்டர் போலப் பேசுகிறது. நீ இவ்வளவு நடந்திருக்கிறாய், உன் ரத்த அழுத்தம் இவ்வளவு, என்று மிரட்டுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது. பழைய திறமைகள் இனி செல்லாக் காசு. நீங்கள் படித்த படிப்புக்கும் இனி வரும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது.

மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாறாவிட்டால், பழைய இரும்புச் சாமான்கள் விற்கும் கடையில் நாமும் ஒரு மூலையில் கிடக்க வேண்டியிருக்கும்.

புதுத் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது இப்போது பிழைப்புக்கு மட்டுமல்ல, இருப்புக்கே அவசியம்.

ரோபோக்கள் வரட்டும், செயற்கை நுண்ணறிவு மிரட்டட்டும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சிந்திக்கும் வேலையை மெஷின்கள் இன்னும் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை அல்லது அவை நம்மை விட புத்திசாலித்தனமாகச் சிந்திக்கின்றன என்ற நிலையில் இருக்கின்றன. அதனால் நாமும் கொஞ்சம் நுட்பமாகச் சிந்திக்கப் பழகுவோம்.

தொழில்நுட்பம் என்பது ஓர் ஓடும் ரயில். அதில் ஏறி அமர்ந்தால் பயணம். நான் ஏற மாட்டேன், தண்டவாளத்திலேயே நிற்பேன் என்றால் மரணம். முடிவு உங்கள் கையில்.

*****

28 Apr 2026

தோல்வி உணர்விலிருந்தும் குற்ற உணர்விலிருந்தும் எப்படித் தப்பிப்பது?

தோல்வி உணர்விலிருந்தும் குற்ற உணர்விலிருந்தும்

எப்படித் தப்பிப்பது?

வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான கேம். இங்கே ஒரு விஷயத்தை நீங்கள் எவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தோற்றுவிடுவோமோ என்கிற பயம் உங்கள் பிடரியைப் பிடித்து உலுக்கும்.

குறிப்பாக, இந்த நல்ல பிள்ளைகள் இருக்கிறார்களே, அவர்களுக்குத்தான் பெரிய பிரச்சினை. அவர்கள் நினைத்தபடி காரியம் நடக்கவில்லை என்றால், உலகத்துக்கே துரோகம் செய்துவிட்டது போல ஒரு குற்ற உணர்வு வந்துவிடும். இந்தத் தண்ணீரிலிருந்து தப்பிக்க தர்க்கம் என்கிற கரையைப் பிடிக்க வேண்டும். இல்லையென்றால் மூழ்கிவிடுவீர்கள்.

ப்ளான் சொதப்பினால், நான் ஒரு ஏமாற்றுக்காரன், என்று உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். சில நேரங்களில் ரிசல்ட் வரத் தாமதமாகும். அதற்காக முயற்சி செய்யவில்லை என்று அர்த்தமில்லை. நான் ட்ரை பண்ணினேன், ஆனால் சிச்சுவேஷன் சரி இல்லை, என்று ஒப்புக்கொள்வதுதான் கெத்து. முயற்சி செய்யாமல் இருப்பதுதான் உண்மையான ஏமாற்றுத்தனம்.

சரி, வெளியில் இருக்கும் தடைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடலாம். உள்ளே இருக்கும் சத்தங்களை என்ன செய்வது?

அங்கேதான் சார்லஸ் டார்வினின் கதை வருகிறது. மனுஷன் தன் கண்டுபிடிப்பை வெளியிட்டால் ஊர் என்ன சொல்லும், குடும்பம் என்ன சொல்லும் என்று பயந்து இருபது வருஷம் பொத்திக்கொண்டு இருந்தார். கடைசியில் உண்மையைச் சொன்ன பிறகுதான் அவருக்கு, அப்பாடா என்று இருந்தது.

எதார்த்தத்தையும், உங்கள் உண்மையையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் மட்டுமே தூக்கம் வரும். அடுத்தவன் என்ன நினைப்பான்? என்பது கற்பனை பயம். நான் யார்? என்பதுதான் ஒரிஜினல் தரிசனம்.

இன்றைய கார்ப்பரேட் உலகிலோ அல்லது குடும்பத்திலோ ஒரு விரிசல் வரும்போது, கொஞ்சம் சுயபரிசோதனை செய்யுங்கள். நான் சோம்பேறியாக இருந்தேனா? சூழலைக் கணிக்கத் தவறிவிட்டேனா? என் நேர்மை இப்போதும் அப்படியே இருக்கிறதா? இதெல்லாம் சில சுயபரிசோதனைக்கான வினாக்கள். வினாக்களை எழுப்பி விடை காண முயற்சித்தால் உங்களுக்கே உண்மை புரியும்.

வெற்றி என்பது உலகத்துக்கான ஸ்கேல். முயற்சி என்பது உங்கள் ஆன்மாவுக்கான ஸ்கேல். ஒரு சின்ன சறுக்கல் உங்கள் மொத்த வாழ்க்கையையும் டிசைன் செய்ய நீங்கள் அனுமதிக்கக் கூடாது.

விசயம் இதுதான். குற்ற உணர்வு எனும் கடலில் இருந்து தர்க்கம் எனும் பாலத்தில் ஏறித் தப்பித்துவிடுங்கள். ஆனால், பாலம் தாண்டிய பிறகு எங்கே போக வேண்டும் என்பதை உங்கள் மன உறுதிதான் முடிவு செய்ய வேண்டும்.

ஒரு கைவினைஞன் தன் வேலையைப் பழகுவது போல, உங்கள் எமோஷன்களைக் கையாளவும் நீங்கள் பிராக்டிஸ் செய்ய வேண்டும்.

உங்களுக்குக் கனிவான இதயம் இருக்கலாம், ஆனால் அது எப்போது எதை உதறித் தள்ள வேண்டும் என்கிற துணிச்சலான பேலன்ஸையும் கொண்டிருக்க வேண்டும். அந்த அறிவு வந்துவிட்டால், தோல்வி என்பது வெறும் ஏணிதான்.

தெளிவான சிந்தனை உங்களைக் காப்பாற்றும். அந்தச் சிந்தனைக்கும் அப்பால் உள்ள வெளி உங்களை மகத்தான மனிதனாக மாற்றும். அட்லீஸ்ட் மாற்ற முயற்சிக்கும்!

*****

ரத்தமும் லூடோவும் - ஒரு நவீனக் கொலைக் குறிப்பு!

ரத்தமும் லூடோவும் - ஒரு நவீனக் கொலைக் குறிப்பு!

டெல்லி என்பது காற்றால் மட்டுமே ஆனதல்ல, அது தற்செயல்களின் குப்பையும்கூட. அங்குள்ள கைலாஷ் ஹில்ஸில் ஒரு ஐ.ஆர்.எஸ். அதிகாரி வசிக்கிறார். அவருக்கு ஒரு மகள் இருந்தார்.

அந்த மகள் ஐஐடியில் படித்துவிட்டு, தேசத்தின் மிக உயரிய அதிகாரிகளாகப் போகிறவர்கள் எழுதும் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அதே தேசத்தின் அடிமட்டத்தில் ராகுல் மீனா என்ற 19 வயது இளைஞன் லூடோ விளையாடிக்கொண்டிருந்தான்.

ராகுல் மீனா ஒரு பல்துறை வித்தகன். பொய் சொல்லுதல், ஆன்லைன் சூதாட்டம், போலிச் சாவிகள் தயாரித்தல் என அவனிடம் பல திறமைகள் இருந்தன. ஒரு சிபாரிசின் பேரில் அந்த அதிகாரியின் வீட்டிலேயே வேலைக்கும் சேர்ந்தான்.

ஆனால், அவனது ஆன்லைன் லூடோ விளையாட்டு மோகம் அவனைத் துரத்தியது. அதற்கு வேண்டிய பணத்திற்காக அங்கங்கே கை வைத்தான். அதிகாரி அவனை வேலையை விட்டுத் துரத்தினார்.

அன்று இரவு ஒரு மணி இருக்கும். ராகுல் ராஜஸ்தானின் ஒரு மலைப்பகுதியில் பதுங்கியிருந்தான். அதற்கு சற்று முன்புதான் தன் நண்பனின் மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, ஒரு செல்போன் சார்ஜரைப் பிடுங்கிக்கொண்டு தப்பியிருந்தான். அவனுக்குத் தர்மசங்கடங்கள் குறைவு.

அதிகாலை ஐந்து மணி அளவில் ஒரு சைக்கிள், ஒரு வாடகை வண்டி மற்றும் சில ஏமாற்றங்களுக்குப் பிறகு டெல்லி கைலாஷ் ஹில்ஸ் வந்தடைந்தான்.

அந்த அதிகாரியும் அவர் மனைவியும் உடல் ஆரோக்கியம் தேடி ஜிம்முக்குச் சென்றனர். ராகுல் தன்னிடம் இருந்த போலிச் சாவியால் அந்த அதிகாரி வீட்டின் கதவைத் திறந்தான். இப்போது ஆரோக்கியம் வீட்டிற்குள் நுழையவில்லை, ராகுல் நுழைந்தான்.

மாடியில் படித்துக்கொண்டிருந்த அந்த அதிகாரியின் பெண்ணிடம் ராகுல் கேட்டது பணம். அவள் சொன்னது வெளியே போ.

விவாதம் நீடிக்கவில்லை. தான் திருடி வந்திருந்த அதே செல்போன் சார்ஜர் ஒயரால் அவளது கழுத்தை நெரித்தான். டேபிள் லேம்ப்பால் தாக்கினான். ரத்தம் தரையில் படர்ந்தது. அந்தப் பெண் மயங்கினாள்.

உயிரியல் விதிகளின்படி ஒரு பொருள் மயக்கமடைந்தால் எதிர்ப்பைக் கைவிடும். ராகுல் அந்த ரத்தக் கறைகளுக்கு நடுவே அவளை வன்கொடுமை செய்தான்.

பிறகு மீண்டும் கழுத்தை நெரித்து, அவளது குடிமைப்பணி கனவுகளை நிரந்தரமாகத் துண்டித்தான்.

அடுத்ததாக அவனுக்குப் பணம் தேவைப்பட்டது. பிணத்தின் கைரேகையைக் கொண்டு லாக்கரைத் திறக்க முயன்றான். ஆனால், ரத்தக் கறை படிந்த விரல்களுக்கு நவீனத் தொழில்நுட்பம் ஒத்துழைக்க மறுத்தது.

விரக்தியில் லாக்கரை உடைத்தான். இரண்டு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளுடன், வேறொரு உடையை மாற்றிக்கொண்டு வெளியேறினான்.

ஒரு பழைய வேலையாளின் நேர்த்தியுடன் வெளியே போகும் போது அவன் சிசிடிவி கேமராவிற்கு ஒரு போஸ் கொடுக்கத் தவறவில்லை.

கடைசியில் கிளைமாக்ஸ் இப்படி அமைந்தது.

போலீசார் அவனைத் துவாரகாவில் ஒரு ஹோட்டலில் வைத்துப் பிடித்தனர். அவன் கொள்ளையடித்த பணத்தில் 7,000 ரூபாயைச் செலவு செய்திருந்தான். ஒருவேளை ஆன்லைன் லூடோவில் மீண்டும் தோற்றிருக்கக்கூடும்.

மருத்துவர்கள் உடலைப் பரிசோதித்துவிட்டு, அந்தப் பெண் வலியின் கொடூரம் தாங்காமல் இறந்திருக்கிறார் என்றார்கள்.

டெல்லி அதிர்ச்சியில் உறைந்தது. ஆனால் ராகுல் மீனாவைப் பொறுத்தவரை, இது ஒரு தவறான காய நகர்த்தல், அவ்வளவுதான்.

அடுத்த நான்கு நாட்களுக்கு அவன் போலீஸ் காவலில் இருப்பான். அநேகமாக அங்கே லூடோ விளையாட அனுமதி இருக்காது.

*****

27 Apr 2026

இப்படியும் ஒரு சாதனை!

இப்படியும் ஒரு சாதனை!

சித்திரை மாதம் வந்துவிட்டாலே சூரியன் தன் முழு விஸ்வரூபத்தை நம் தலைக்கு நேர் மேலே காட்டத் தொடங்கிவிடுகிறான்.

விளைவு?

தமிழ்நாட்டின் மின் தேவை புதிய உச்சத்தைத் தொட்டுவிடுகிறது. ஏப்ரல் 25ஆம் தேதி இரவு, 21,060 மெகாவாட் மின்சாரம் செலவாகியிருக்கிறது.

இது ஒரு சாதனை என்கிறார்கள். பொதுவாகச் சாதனைகளைத் தடகள மைதானத்தில்தான் பார்ப்போம். இப்போது மீட்டர் பெட்டிகளிலேயே பார்க்க முடிகிறது.

வழக்கமாக மதிய நேரத்தில்தான் மின்சாரம் அதிகம் செலவாகும் என்பார்கள். ஆனால், இப்போது இரவு 10.30 மணிக்கு உச்சம் தொடுகிறது.

காரணம் மிக எளிது. வெக்கை தாங்காமல் மக்கள் தங்கள் ஏர் கண்டிஷனர்களை வெறித்தனமாக ஆன் செய்கிறார்கள்.

ஏசி என்பது இப்போது ஆடம்பரமல்ல, அது ஒரு உயிர் காக்கும் மருந்து போல ஆகிவிட்டது.

அன்று ஒரு நாள் மட்டும் மாநிலத்தின் மொத்த மின் நுகர்வு 462.38 மில்லியன் யூனிட்டுகள்.

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சொந்தமாகத் தயாரித்தது வெறும் 77 மில்லியன் யூனிட்கள்தான்.

மீதியுள்ள பெரும்பகுதியை மத்திய அரசு, அண்டை மாநிலங்கள், மற்றும் மின் சந்தைகளில் இருந்து கடன் வாங்கியே சமாளித்திருக்கிறார்கள்.

மின்சாரத் துறை அதிகாரிகள் பெருமையாகச் சொல்கிறார்கள், எந்தத் தட்டுப்பாடும் இல்லாமல் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டோம் என்று.

ஆனால், அதே சமயம் கொளத்தூர், அண்ணாநகர், வானகரம் பக்கம் போய்க் கேட்டால், அங்கிருக்கும் மக்கள் இருட்டில் அமர்ந்து விசிறியால் விசிறிக்கொண்டே அதிகாரிகளை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.

மின்தடை பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், அதற்கென ஒரு கிளிஷே பதில் வைத்திருக்கிறார்கள். மின்சாரத்துக்குத் தட்டுப்பாடு இல்லைங்க, லோக்கல் ட்ரான்ஸ்பார்மர்ல பழுது, ஒயர்ல சின்ன பிரச்சினை என்பார்கள். அதாவது, கடையிலே சரக்கு இருக்கிறது, ஆனால் அதைக் கொண்டு வரும் பையில் ஓட்டை என்கிறார்கள்.

ஒன்று மட்டும் நிஜம். சூரியன் சுட்டெரிக்கச் சுட்டெரிக்க, மின்சார வாரியத்தின் கணக்கும், நம் வீட்டு கரண்ட் பில்லும் போட்டிப் போட்டுக்கொண்டு எகிறப்போகின்றன.

அடுத்த முறை நீங்கள் ஏசி ரிமோட்டை அழுத்தும்போது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு சாதனைப் பதிவுக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்தப் பெருமைக்காகவாவது மின்வெட்டு நேரத்தில் வரும் வியர்வையைத் துடைத்துக்கொள்ளுங்கள்.

வாழ்க கோடை!

வளர்க ஏசி பயன்பாடு! அதாகப்பட்டது, மின்சாரம் இருந்தால் மட்டும்!

*****

குண்டர்களும் நரகக் குழிகளும் – ஒரு ட்ரம்ப் புராணம்!

குண்டர்களும் நரகக் குழிகளும் – ஒரு ட்ரம்ப் புராணம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு விசித்திரமான மனிதர். அவரது கைபேசியும், அதில் அவர் பகிரும் பதிவுகளும் வானிலை அறிக்கையை விடவும் கணிக்க முடியாதவை.

அமெரிக்காவில் மைக்கேல் சேவேஜ் என்றொரு வானொலி வர்ணனையாளர் இருக்கிறார். இவர் சத்தமாகப் பேசுவதையே தொழிலாகக் கொண்டவர்.

அவர் இந்தியா மற்றும் சீனாவைப் பற்றி சில அழகிய கருத்துகளை உதிர்த்திருந்தார். அதை ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார்.

சேவேஜின் கவிதை வரிகள் சில,

இந்தியாவும் சீனாவும் வெறும் நாடுகள் அல்ல, அவை நரகக் குழிகள்.

அந்த நரகக் குழிகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகிறவர்கள், சரியாக ஒன்பதாவது மாதத்தில் அங்கு இறங்கி, குழந்தையைப் பெற்று, அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையை பார்சல் வாங்குகிறார்கள்.

பிறகு, மொத்தக் குடும்பத்தையும் நரகக் குழிகளிலிருந்து அமெரிக்காவுக்கு இழுத்துக் கொள்கிறார்கள்.

சேவேஜின் பார்வையில், அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் வெறும் மென்பொருள் வல்லுநர்கள் அல்ல, அவர்கள் கைகளில் லேப்டாப் வைத்திருக்கும் குண்டர்கள்.

அவர்கள் ஒரு மாஃபியா போலச் செயல்பட்டு, அமெரிக்க வளங்களைச் சுரண்டி, அமெரிக்கர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துகிறார்களாம்.

ஒரு லேப்டாப்பை வைத்துக் கொண்டு எப்படி ஒரு நாட்டைச் சுரண்ட முடியும் என்ற தொழில்நுட்ப ரகசியத்தை அவர் சொல்லவில்லை.

வழக்கம்போல, இந்தப் பதிவைப் பகிர்ந்துவிட்டு உலகம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய பிறகு, ட்ரம்ப் மெதுவாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

இந்தியா ஒரு சிறந்த நாடு, எனது நல்ல நண்பராகிய மோடியால் ஆளப்படும் நாடு என்று டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக ஒரு ஐஸ் வைத்தார்.

அரசியலில் ஒருவரை நரகக் குழி என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே சிறந்த நண்பர் என்று அழைப்பதில் இருக்கும் கலை நயம் வியக்கத்தக்கது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரணதீர் ஜெய்ஸ்வாலிடம் கேட்டபோது, அவர் மிகவும் நிதானமாகப் பதிலளித்தார்.

அந்தத் தகவல்கள் தவறானவை, தரமற்ற சிந்தனை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.

அதாவது, யாரோ எதையோ உளறுகிறார்கள், அதற்கு நாங்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? என்கிற ரீதியில் அந்தப் பதில் இருந்தது.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கக் குடியுரிமைச் சட்டத்திற்கும், ட்ரம்ப்பின் தேர்தல் பிரசாரத்திற்கும் இடையில் இந்தியா ஒரு கால்பந்தாக மாறி இருக்கிறது.

நரகக் குழியில் இருந்து கொண்டு லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் இந்தியக் குண்டர்களுக்கு இது ஒன்றும் புதிய செய்தியல்ல.

டிரம்ப் இருக்கும் வரை இது போன்ற செய்திகள் தொடர்கதையாக அல்லது கதைகளாகத்தான் இருக்கும்.

நாம் கதை அல்லது கதைகளைக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். டிரம்ப் ஒரு நல்ல கதை சொல்லி.

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்… என்று தொடங்கும் கதைகளில், இவை ஒரு ராஜாவே சொல்லும் கதைகள்.

*****

புத்தகங்களை ஏன் கொண்டாட வேண்டும்?

புத்தகங்களை ஏன் கொண்டாட வேண்டும்?

புத்தகம் என்பது புதிய உலகங்களுக்கான நுழைவாயில் என்கிறார்கள். அதாவது, நிஜ உலகில் போக்குவரத்து நெரிசலிலும், வரி வரிசையிலும் சிக்கிக்கொள்ளாமல், காசே செலவில்லாமல் வேறொரு இடத்திற்கு எஸ்கேப் ஆக உதவும் ஒரு சட்டவிரோதமில்லாத வழி இது.

ஒரு புத்தகம் என்பது வெறும் காகிதக் கட்டு அல்ல, அது மனிதக் கற்பனை செய்துகொண்ட உச்சகட்ட அறிவின் தொகுப்பு.

யுனெஸ்கோகாரர்கள் ஏப்ரல் 23 ஆம் தேதியை உலகப் புத்தக தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். அன்று நமக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாள் ஆகி விட்டது.

ஏன் அந்தத் தேதி? 1616 இல் ஷேக்ஸ்பியர், செர்வாண்டஸ் போன்ற ஜாம்பவான்கள் இறந்த அதே நாளில்தான் பல எழுத்தாளர்கள் பிறந்தும் இருக்கிறார்கள். இயற்கையின் விசித்திரமான பேலன்சிங் இது.

ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் ஒரு படி மேலே போய், இந்த ஏப்ரல் 23 இல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ரோஜா மலரைப் பரிமாறிக்கொண்டார்களாம். ரோஜாவைப் பரிமாறிக்கொண்டால் மட்டும் போதாது, அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரிகளையும் கொஞ்சம் உள்ளே ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் சூட்சுமம்.

உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன், என்றார் சாக்ரடீஸ்.

நீ படிக்கும் புத்தகத்தைச் சொல், நீ யார் என்று சொல்கிறேன், என்றார் ஜேம்ஸ் ஆலன்.

இன்றைய நிலவரப்படி பலரிடம் இதைக் கேட்டால், அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் திரையைக் காட்டி, நான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கிறேன் அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கிறேன், என்றுதான் சொல்வார்கள்.

பாவம் நூலகங்கள். ஆயிரக்கணக்கான அறிஞர்களைத் தன்னுள் ஒளித்து வைத்துக்கொண்டு, தெருவோரம் கவனிக்கப்படாத ஓர் அருங்காட்சியகத்தைப் போலக் காத்திருக்கின்றன.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் நூலகம் கட்டுவேன் என்றாராம் காந்தி. இன்று ஒரு கோடி கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு எந்த ஓடிடி சந்தாவை வாங்கலாம் என்று யோசிக்கும் தலைமுறையில் நாம் இருக்கிறோம்.

புத்தகங்கள் நெருக்கடியான காலங்களில் ஆறுதல் தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படும் அந்த வெறுமை இருக்கிறதே, அது ஒரு காதலியின் பிரிவை விடக் கொடியது.

வாசிப்பானது உங்கள் சொற்களஞ்சியத்தை இது விரிவுபடுத்தும். அதன் பிறகு நீங்கள் சாதாரண மனிதர்களிடம் பேசும்போது, அவர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்களை ஒரு அறிவாளி என்று நீங்களே நம்ப வைத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசாகப் பொம்மைகளைத் தந்து அவர்களை மொக்கையாக்காதீர்கள். புத்தகங்களைத் தாருங்கள். பாரதிதாசன் சொன்னது போல, நாளை நாட்டை ஆளப்போகிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் சரியாக ஆள வேண்டும் என்றால், முதலில் அவர்கள் கையில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும், ரிமோட் கண்ட்ரோல் அல்ல.

ஓடும் நீர்தான் தூய்மையாக இருக்கும், எரியும் விளக்குதான் அதாகப்பட்டது மெழுகுவர்த்தி, அகல் வகையறாக்கள்தான் இன்னொன்றை ஏற்றி வைக்கும். மின்சார பல்புகளை இதனுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல், வாசிக்கும் மூளைதான் துருப்பிடிக்காமல் இருக்கும். எனவே, புத்தகங்களை வாங்குங்கள், 10 சதவீத தள்ளுபடி வேறு இருக்கிறது.  

படித்துவிட்டு அப்படியே அலமாரியில் அடுக்கி வைக்காமல், காகித வாசத்தை சுவாசித்து, அதில் இருக்கும் கிறுக்குத்தனங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

இதற்கு மேலும் என்னால் வாசிக்க முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தின் அட்டையையாவது தொட்டுப் பார்க்கவும்!

*****