30 Aug 2019

சுத்தம் சோறு போடும் என்பதன் உண்மைப் பொருள்



            "சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. சுத்தமாக இருந்தால் சோற்றைப் போட்டுத் உண்ணலாம். இல்லாது போனால் அந்த அசுத்தம் தரும் நோயில் கஞ்சியைக் குடித்துதான் உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டி வரும். சுத்தத்துக்கும் சோற்றுக்கும் உள்ள தொடர்பு இது. அந்தக் காலத்தில் அப்படித்தான் கஞ்சி என்பது மருந்து ஆகாரம் மற்றும் பத்திய ஆகாரம். பெரும்பான்மையான நோய்கள் அசுத்தத்தோடு தொடர்புடையது என்பது தொடர்ந்து வரும் ஒரு வகை பாரம்பரிய மருத்துவ அறிவு.
            சுத்தமாக வைத்திருப்பதற்கு ஒரு மெனக்கெடல் தேவையாக இருக்கிறது. வீடு, வாசல் இவைகளைப் பெண்கள் காலையும் மாலையும் கூட்டிப் பெருக்குவதன் மூலம் ஒரு சுத்தத்தை உண்டாக்கி விடுகிறார்கள். அவர்களே சத்தம் போட்டும் சண்டை போட்டும் குளிக்க வைத்தும், பல் துலக்க வைத்தும், நகங்களை வெட்ட வைத்தும், துணி மணிகளைத் துவைத்துப் போட வைத்தும் ஒரு வித சுத்த ஒழுங்கை உண்டு பண்ணி விடுகிறார்கள்.
            சுத்தம் என்பது அத்தோடு நின்று விடுகின்ற ஒன்றா என்றால் அதுதான் இல்லை. நாம் பயன்படுத்துகின்ற அத்தனைப் பொருட்களோடு அது தொடர்புடையதாக இருப்பதுதான் புதிய சிக்கலை உண்டு பண்ணுகிறது. நாம் அப்படிப் பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களையும் சுத்தம் பண்ண ஆரம்பித்தால் வாழ்நாளின் அனைத்து நாட்களும் அதிலே செலவாகிப் போகும்.
            வீட்டிலே மேலே சுழலும் மின்விசிறியை ஓர் உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் அதில் பத்தை பத்தையாக அழுக்கு அப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறது. அவ்வளவு அழுக்கோடு அது சுழன்று காற்றை விசிறியடிப்பதுதான் என்னைக் கேட்டால் உலகின் ஒன்பதாவது அதிசயம்.
            வீட்டில் கார் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதில் படிந்திருக்கும் அழுக்கில் வித விதமான நவீன ஓவியங்களை வரைந்து பார்த்து விடலாம். இதற்குப் பயந்து கொண்டே கார் வாங்காமல் இருக்கும் ஆசாமிகளில் நானும் ஒருவனாக இருக்கிறேன்.
            குறிப்பாக இரு சக்கர வாகனம் இருக்கிறதே அதை நான் துடைப்பதே இல்லை. ஏறி உட்கார்ந்து இறங்குவதில் ஒரு வாறாக அதன் இருக்கை மற்றும் ஆடைகள் படும் இடத்தில் அந்த இடங்கள் சுத்தமாகி விடுகின்றன. மற்ற இடங்களைப் பார்த்தால் வாந்திதான் எடுக்க வேண்டும் என்பதால் நான் பார்ப்பது இல்லை. வாகனத்தை எடுத்தால் சாலையைப் பார்த்து ஓட்டுவதோடு சரி. வண்டியைச் சுற்றி அதிகம் பார்ப்பதில்லை. குறிப்பாக நண்பர்கள் குழாம் இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தாமல் நீண்ட தூரத்துக்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து சென்றுதான் அவர்களைச் சந்திக்கச் செல்கிறேன். வண்டியில் வந்தேன் என்று தெரிந்தால் நான் வண்டி வைத்திருக்கும் சோபையைப் பார்ப்பதற்கென்றே கண்காட்சியில் கூடி விடுவதை விட போல கூடி கமெண்ட்டுகள் எனும் கருத்துரைகளைக் காற்று மண்டலத்தில் கலந்து விடுகிறார்கள். அது போன்ற நேரங்களில் துடைப்பதும் கழுவுவதும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொள்கிறேன்.
            வண்டித் தூய்மையைப் பொருத்தமட்டில் இதற்காக ஒவ்வொரு மழையைத்தான் நான் நம்பிப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். மழை பெய்தால் போதும் வண்டியை மழையில் நிறுத்தி விட்டு, நான் ஒதுங்கிக் கொள்வது. வண்டி நனைந்தால் அதற்கு ஜலதோஷம் பிடிக்காது. நாம் நனைந்தால் அப்படியா? அதனால் வண்டிக்கு மட்டும் மழையை ரசிக்கும், மழையில் நனையும் பாக்கியத்தைத் தந்து விட்டு ஒதுங்கிக் கொள்வது. மழை நின்ற பின்புதான் எடுத்து உள்ளே போடுவது. வண்டியை அப்போது பார்க்க வேண்டுமே புத்தம் புதிதாக வாங்கியது போல பளபளவென இருக்கும்.
            இதற்கு நேர்மாறாக நம் கோசிகாமணி நண்பர். வண்டியைப் பெயிண்டு போகும் அளவுக்கு துடைத்து பளபளவென வைத்திருக்கிறார். இதற்காகவே காலையில் ஒரு மணி நேரம் ஒதுக்குவதாகச் சொல்கிறார். வேட்டியை அவிழ்த்து விட்டு பட்டாப்பட்டி கால்சட்டையோடும், கை வைத்த பனியனோடும் வீட்டில் சேர்ந்திருக்கும் பழந்துணிகளையெல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு வண்டியின் ஒவ்வொரு உதிரி பாகத்திலும் துணியை விட்டு முன்னே பின்னே இழுத்து, தேய்த்துத் துடைத்து அவர் பண்ணுகிற வேலையைப் பார்த்தால் ஒரு சாகசக்காரனின் வேலையைப் போல இருக்கும். முடிவில் அவர் வியர்த்து விறுவிறுத்து நிற்கும் கோலத்தைப் பார்க்க வேண்டுமே! இதுதான் தான் செய்யும் உடற்பயிற்சி என்று வேறு முடிவில் பீத்திக் கொள்கிறார். இதனாலேயே அவர் வீட்டிற்குக் காலையில் போகும் பழக்கத்தை நிறுத்திக் கொண்டு வருடக் கணக்காகி விட்டது.
            வீட்டில் இருக்கும் அலமாரிகள், நிலைப்பேழைகள், பாத்திரப் பண்டங்கள் இவைகளில் படியும் தூசியையும் அழுக்கையும் சொல்லி மாளாது. ஆயுத பூசை, புரட்டாசி விரதம், போகிப் பொங்கல், சித்திரையின் தொடக்க நாள் என்று வந்தால் அந்தப் பொருட்களையெல்லாம் எடுத்துப் போட்டு இடுப்பெலும்பை, முதுகெலும்பை முறித்து விடுகிறார்கள் மற்றும் கழற்றி விடுகிறார்கள்.
            தொலைக்காட்சி, மாவரைக்கும் இயந்திரம், சட்டினி அரைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம், கணினி இவைகளும் இப்போது இந்தத் தூய்மை செய்யும் பட்டியலில் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
            குறிப்பாகக் கணினியைப் பற்றிச் சொல்வதென்றால் நண்பர்கள்தான் அதைப் பார்க்கும் போது பழைய துணியை எடுத்து தலையில் அடித்துக் கொண்டாவது சுத்தம் செய்து தருகிறார்கள். இப்படி அழுக்காய் வைத்துக் கொள்வதில் அப்படி என்ன ஆனந்தம் என்று கேவலப்படுத்துவதைப் போல ஒரு கேள்வியையும் கேட்டு வைத்துப் போகிறார்கள்.
            செல்பேசியைப் பற்றிச் சொல்வதற்கில்லை. அதில் போட்டிருக்கும் உறையில் அரை கிலோ அழுக்காவது பற்றியிருக்கும். அதை தண்ணீரில் தூக்கிப் போட்டு டிடர்ஜெண்டில் போட்டு சுத்தம் செய்யக் கூடாது என்று அதற்கென்று சில முறைகளைச் சொல்கிறார்கள். அதெல்லாம் நமக்கு ஒத்து வருமா என்ன?
            நாம் பயன்படுத்தும் பணத்தைப் பற்றி ஒரு கட்டுரை படித்ததில் உலகத்தில் அதிக கிருமிகள் இருக்கும் பொருளில் முதன்மையான இடத்தில் அதுதான் இருப்பதைத் தெரிந்து நான் அதிர்ச்சியடையவில்லை.  இந்தப் பணத்தை நான் கையால் பயன்படுத்தியது குறைவு. வீட்டுச் செலவு என்றால் வீட்டில் இருப்பவர்கள் அதைச் செய்கிறார்கள். வெளியில் எங்கேயாவது சென்றால் மனைவி பணச் செலவைப் பார்த்துக் கொள்வார். ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் எண்ணத் தெரியாமல் அறுபது ரூபாயாகக் கொடுக்கும் ஆள் என்பதால் நம்மை நம்பிப் பணத்தைக் கொடுப்பதற்குப் பொதுவாக எல்லாரும் யோசிப்பதால் அதிலிருந்து தப்பித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களோடு சென்றால் அவர்கள்தான் முழுச் செலவையும் செய்கிறார்கள். ஒரு பாதுகாப்புக்காக பையில் வழக்கமாக வைத்திருக்கும் ஒரு நூறு ரூபாய் நோட்டும், ஐநூறு ரூபாய் நோட்டும் அப்படியே காலம் காலமாக இருக்கின்றன. அதை நான் எடுத்து நீட்டுவதற்குள் நண்பர்கள் எடுத்து நீட்டி விடுகிறார்கள் என்பதுதான் அதன் பின்னுள்ள விசயம். 
            நிறையப் பொருட்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதன் பின்னணியில் 'சுத்தம் சோறு‍ போடும்' என்ற மொழியே காரணமாக இருக்கலாம். சோறு என்பது நமக்குத்தானே தேவை. ஆதலால் நாம் சுத்தமாக இருந்து நமக்குச் சோறு கிடைத்தால் போதும். அந்தப் பொருட்களுக்கு என்ன சோறு‍ தேவையா? ஆகவே அவை அசுத்தமாக இருந்து அதற்கு சோறு கிடைக்காவிட்டாலும்பரவாயில்லை என்பது பிற பொருள் ஓம்பாத ஒரு வகை அலட்சிய மனப்பான்மைதான். அதற்காக அந்தப் பொருட்களிடம் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்.
*****

2 comments:

  1. இந்த கட்டுரையைப் படித்தபின் அது சொல்வது என்னவென்றால் பொருட்களைப் பயன் படுத்தலாம் ஆனால் அவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலாது என்பது தான் ! அதாவது சுற்றுப் புறங்களை பயன் படுத்துவோம் ஆனால் சுத்தமாக வைத்துக்கொள்ள மாட்டோம் என்றுதான் புரிந்து கொள்ளவேண்டுயுள்ளது ! என்ன ஒரு சுயநலமான நோக்கு !

    ReplyDelete
  2. உடல் என்பது கோயில் அதன் உள்ளே கடவுள், கட உள் உள்ளார். ஆகவே கோயிலையும் அதன் சுற்றுப் புறங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்வதைப்போல உள்ளத் தூய்மைக்கு உடலையும் அதன் சுற்றுப் புறங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வது தான் உள்ளத் தூய்மைக்கு அடிப்படை எனபது தான் எனது புரிதல் !

    ReplyDelete

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...