திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 46
கண்ணுக்குள் காதல் திரை!
இரவு.
மணி இரண்டு.
அவனுக்குப் புரியாத தொழில்நுட்பம் எதுவுமில்லை. ஆனால் அவனுக்குப் புரியாத ஒரே
விஷயம், இந்தத் தூக்கமின்மை.
அலைபேசி ரீங்காரமிட்டது.
"இன்னும் தூங்கலையா மிஸ்டர்?" மறுமுனையில் அவளின் குரல்.
"எப்படிக் கண்டுபிடிச்சே?"
"இதைக் கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனா வரணும்? ஒரு ரிங் கூட போகல. அதுக்குள்ளே
போனை எடுக்குறீன்னா தூங்கலைன்னுதான்னு அர்த்தம். எனக்கும் தூக்கம் வரல. உன்னை நினைச்சேன்."
"என்னை ஏன் இப்படி அடிக்கடி நினைச்சுப் பார்க்கிறே? நான் என்ன பத்தாம்
வகுப்பு தமிழ் பாடத்துல வர்ற மனப்பாட பாட்டா?"
"போடா லூசு! நீ என் கண் பாவைக்குள்ள உட்கார்ந்திருக்க. வெளியே போகவே மாட்டேங்கிற."
அவன் சிரித்தான். "என்னது? வைரஸ் மாதிரி என்ட்ரி ஆயிட்டேனா?"
"கிண்டல் பண்ணாத. சீரியஸா சொல்றேன். நீ என் கண்ணுக்குள்ளே இருக்கே. இமைச்சா,
நீ மறைஞ்சுடுவன்னு தோணுது. அதனால இமைக்காம உன்னையே அப்படியே பார்த்துட்டே இருக்கேன்.
கண்ணு எரியுது தெரியுமா?"
அவனுக்குப் புல்லரித்தது. இருந்தாலும், "பைத்தியம்! இமைக்காம இருந்தா கண்ணுல
இருக்கிற மாய்ஸ்சர் போய் கார்னியா ட்ரை ஆயிடும். ஐ டிராப்ஸ் போட்டுட்டுத் தூங்கு."
என்றான்.
"போச்சு! காதலிக்கும்போது போய் டாக்டர் மாதிரி மெடிக்கல் டேர்ம்ஸ் பேசாத."
"காதல்ங்கிறது கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் தாண்டி கண் பாதுகாப்பு வரைக்கும் வருது
பாரேன்."
"தெரியும். நீ ரொம்ப நுண்ணிய ஆள்டா. என் மனசுல, விழித்திரையில, எங்கு பார்த்தாலும்
நீதான். ஒரு மைக்ரோ செகண்ட் கூட உன்னை மிஸ் பண்ணக் கூடாதுனு தோணுது."
சட்டென்று என்ன சொல்வதென்று புரியாமல், அவனுடைய கண்கள் கலங்கின. அவனுக்கு வாயடைத்தது
போலாகி விட்டது. சில நிமிடம் மௌனம் அங்கே நிலை கொண்டது.
"சரி, இப்போ என்ன யோசிக்கிற?" என்றாள் அவள் அந்த மௌனத்தை உடைக்கும்
விதமாக.
"ஒன்னும் இல்ல. எனக்கு இப்போது எதுவுமே தோணல. கம்ப்ளீட்டா கிளியர் ஆயிட்டது
போல ஓர் உணர்வு."
"அப்படின்னா, உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கவா?"
"கேளு."
"இந்தக் குறள் படிச்சிருக்கீயா?
"கண்ணுள்ளின்
போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம்
காத லவர்." (குறள், 1126)
இதுக்கு என்ன அர்த்தம்னு நினைக்கிறே?"
அவன் சிரித்தான். "நீதான் ஆரம்பத்துலயே இலைமறை காயா சொல்லிட்டீயே. இதெல்லாம்
நைன்டிஸ் கிட்ஸ் கவிதை. அதாவது, நீ என் கண்ணுக்குள்ளேயே இருக்க. ஒரு நிமிஷம் கண்ணை
இமைச்சா கூட நீ டிஸ்டர்ப் ஆக மாட்டே. ஏன்னா நீ அவ்வளவு நுண்ணியவ, என் மனசுல ஊடுருவியவன்னு
அர்த்தம்."
"தப்பு. இதுக்கு அர்த்தம் வேற."
"என்னது?"
"இதுக்கு பேருதான் மிகை மெய்மை. அதாவது ஆக்மெண்டெட் ரியாலிட்டி."
அவளது அந்த விளக்கம் அவனை யோசிக்க வைத்தது.
அவள் தொடர்ந்தாள், "நம்ம கண்ணுல இருக்கே விழித்திரை. அந்த ரெட்டினாதான்.
உருவங்கள் வடிவங்களா அங்கேதான் பதிவு ஆகுது. காதலர் நம்ம கண்ணுக்குள்ள இருக்கார்னா,
அது ஹார்ட்வேர்ல பதிஞ்ச டேட்டா கிடையாது. அது ஒரு பெர்மனென்ட் மெமரி கான்செப்ட். நாம
கண்ணை இமைக்கும்போது மைக்ரோ செகண்ட் பிளாக் அவுட் ஆகுதுல்ல? அந்த நேரத்துல கூட அந்த
இமேஜ் பிரைன்ல ரீடெய்ன் ஆகணும். அதுதான் நுண்ணியர்ங்கறது. ரொம்ப மைனூட்டான டேட்டா லாஸ்
கூட இருக்கக் கூடாது!"
அவன் அவள் சொல்வதை ஆச்சரியமாகக் கேட்டான். அவன் கண்கள் இமைக்க மறந்தன. வாய்
மட்டும் "வள்ளுவரை எப்படி ஐடி பீல்டுக்குக் கொண்டு வரதுன்னு உன்னைப் பார்த்துதான்
கத்துக்கணும்." என்று மெல்ல முணுமுணுத்தது.
மறுமுனையில் அவள் மெல்லிய மூச்சுக்காற்று கேட்டது. அவளும் இன்னும் இமைக்கவில்லை.
"நீ இமைக்கலாம். உன் கண்ணுக்குள்ள இருக்குற எனக்கு எந்தப் பாதிப்பும் வராது."
என்றான் அவன் மெல்லிதாகச் சிரித்தபடி.
"அப்படியா! உனக்கும் அஃதே. நீயும் இமைச்சுக்கோ. உன் கண்ணுல இருக்குற எனக்கும்
எதுவும் ஆகாது. நான் பாதுகாப்பா இருப்பேன். வள்ளுவர்தான் காதலர்களை நுண்ணியர்கள்ன்னு
நானோ டெக்னாலஜி பார்ட்டிகள்களா மாத்திட்டாரே." என்றாள் அவளும் சிரித்தபடி.
அவ்வளவுதான் வள்ளுவரின் காதல் சூத்திரமும், அறிவியலின் தர்க்க சாத்திரமும் ஒரு
புள்ளியில் கலந்தது போன்ற நிசப்தம் இப்போது இருவரின் அறைகளையும் சூழ்ந்து கொண்டது.
- சூத்திரங்கள் தொடரும்!
*****
