Showing posts with label விகடபாரதி. Show all posts
Showing posts with label விகடபாரதி. Show all posts

5 Aug 2025

கௌரவம் (சிறுகதை) - விகடபாரதி

கௌரவம் (சிறுகதை)

-         விகடபாரதி

மனுஷனுக்குக் கௌரவம்தான் முக்கியம். ராமசாமி அடிக்கடி சொல்லும் வாசகம். மனிதர் அப்படித்தான் இன்னவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார். கருகருவென்று நாவல் பழ நிறம், கலையான முகம், கணீரென்ற பேச்சு, தீர்க்கமான வாதம் என்றால் அதுதான் ராமசாமி.

திருமுல்லைவாயில் கிராமத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே ஆள் ராமசாமிதான். விவசாயம் என்றால் விவசாயம் மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர். வேறு உபதொழில்கள் எதுவும் கிடையாது. விவசாய கிராமத்தில் விவசாயம் பலருக்கும் பக்க வாத்தியமாக ஆன போதும் ராமசாமி அதை இன்னும் விடாப்பிடியாக முக்கிய வாத்தியமாகவே வாசித்துக் கொண்டிருக்கிறார்.

ராமசாமியின் சகபாடி பாண்டிமுத்து நிலத்தை விற்று விட்டு டவுனில் ப்ளாட் வாங்கிப் போட்டு விட்டார். விவசாயமெல்லாம் நம்ம காலத்தோடு போகட்டும். டவுன்ல ப்ளாட்டை வாங்கிப் போட்டு, காம்ப்ளக்ஸைக் கட்டிப் போட்டா வாடகைக்கு வாடகையும் ஆச்சு, சொத்துக்கும் சொத்துமாச்சு, ரேட்டுக்கு ரேட்டும் ஆச்சு. இருபது வருஷசத்துக்கு மின்னாடி மச்சினன் சதுர அடி நாற்பது ரூபாய்ன்னு வாங்கிப் போட்ட எடம் இன்னிக்கு ஆயிரத்து எண்ணூறுக்குப் போவுது தெரியுமா என்று சகபாடி திருவாசகம் பாடிக் கொண்டுதான் இருக்கிறார். ராமசாமிக்கு நாலு காணி நிலத்தை விற்கும் மனசு வராமல் இருப்பதற்கு விவசாயம் அவரது கௌரவப் பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருப்பதற்கு அது மட்டுமே பிரதான காரணமாக இருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

ராமசாமியின் மனைவி சீதாலெட்சுமி செக்க செவேல் என்று இருப்பார். இந்த நவ்வாப் பழத்துக்கு அந்தச் செர்ரிப் பழத்தை எவ்வம்டா சோடி சேர்த்தது என்று ஊரே கிண்டல் அடிக்கும். கருப்பும் சிவப்பும் சேர்ந்து தமிழ்நாட்டை ஆண்டதைப் போல, கருப்பும் சிவப்புமாகச் சேர்ந்து ஊரை ஆளும் அற்புத சோடி. ஊரில் ஆதர்ச சோடி என்றால் அது அவர்கள் இருவரும்தான். ஆனாலும் காலங்கள் உருண்டோட சந்தர்ப்ப வசத்தாலோ, சங்கட வசத்தாலோ சீதாலெட்சுமிக்கு ராமசாமி மேல் மனத்தாங்கல் அதிகமாகிக் கொண்டே போனது.

ஊருல அவனவனும் புள்ளைங்களுக்கு டவுன்ல எடத்தை வாங்கிப் போட்டுச் சொத்து சேர்த்து வைக்க இந்த மனுஷன் மட்டும் இப்படி இருக்காரே என்பதுதான் சீதாலெட்சுமியின் மனத்தாங்கலுக்குக் காரணம். சீதாலெட்சுமி என்ன சொன்னாலும் கேட்கும் ராமசாமி இந்த ஓரு விசயத்தில் மட்டும் சரிதாம்டி பார்ப்போம் என்று சொன்னாரே தவிர, பிடி கொடுத்தபாடில்லை. ராமசாமிக்கு ஒரு குணம் உண்டு. சொன்னால் செய்து விடுவார். சரிதாம்டி பார்ப்போம் என்றால் அதைச் செய்ய முடியாது என்பது அவர் பாணியிலான அர்த்தம்.

இன்னும் பரம்பரையாக இருந்து வரும் நாட்டு ஓடு போட்ட வீட்டில்தான் வாசம். தெருவில் இருந்த அத்தனை வீடுகளும் மச்சு வீடுகளாகி விட்டன. சீதாலெட்சுமிக்கு அதுவும் தாங்கல். அதையும் சொல்லி சொல்லி பார்த்தார்.

இந்த ஊர்ல நேத்து வந்தவன், முந்தா நேத்து வந்தவனெல்லாம் மச்சு வீடு கட்டிப் போட்டானுங்க. இந்த ஊர்லேயே பரம்பரையா இருக்கோம்ங்ற வெட்டிக் கௌரவத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல. இந்த ஊரே மாறுனாலும் இந்த ஒத்தை வீடு மட்டும் மாறாது போலருக்கு. சீதாலெட்சுமி தினந்தோறும் பாராயணம் செய்து பார்த்தார்.

இப்படி ஒரு வீட்டை, இப்படி ஓர் அமைப்பை இனிமே எந்தக் காலத்திலாவது எவனாச்சும் கட்டிப்புட முடியுமா? எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்துல கட்டுனதுடி. அதெ இன்னும் புதுமை கொழையாம எப்படி வெச்சுருக்கேன் பாரு. இதெயெல்லாம் வெளிநாட்டுக்காரன் வந்து பார்த்தான்னா வெச்சுக்கோ, அப்படியே பேர்த்து எடுத்துட்டுப் போயி அங்க மியூசியத்துல வெச்சுக்கிறதுக்கு லட்சம் கோடி கொடுப்பான். நிலை கதவு ஒவ்வொண்ணுத்தையும் பாரு. இந்த மாதிரி தைக்க இப்போ எவன் இருக்கான் சொல்லு என்பார் ராமசாமி.

இந்த வெட்டி பந்தா வீணா போன குண்டானுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல என்று சமீப காலமாகத்தான் சீதாலெட்சுமியின் வாய் ராமசாமிக்கு எதிராக நீண்டது. இப்படி திடீரெனக் கிளம்பிய எதிர்ப்பேச்சில் அவருக்கு உள்ளூர வருத்தம் இருந்தது.

ராமசாமி சீதாலெட்சுமி தம்பதிக்கு ஒரே மகன். இவர்களின் பெயர் ராமன் சீதா என்று அமைந்த பேர் பொருத்தத்தைப் பார்த்து மகனுக்கு குகன் என்று பெயர் வைத்த புராணக் கதையைத் தாண்டி ராமசாமியின் தாத்தாவின் பெயரும் குகன் என்பதுதான் கேள்விப்படுபவர்கள் ஆச்சரியப்படும் செய்தி. மகனையும் தன்னைப் போல விவசாயியாகக் கொண்டு வந்து விட வேண்டும் என்று பேராசை ராமசாமிக்கு. அந்த ஆசைக்குக் குறுக்காகப் பையனை டாக்டராக்க வேண்டும், இன்ஜினியராக்க வேண்டும் என்றெல்லாம் சீதாலெட்சுமி குறுக்கே நின்றதில்லை. மகன் குகன்தான் விவசாய நிலம் பக்கமே எட்டிப் பார்க்காமல் அரையும் குறையுமாகப் படித்து எப்படியோ பாலிடெக்னிக்கில் சேர்ந்து இன்வெர்ட்டர், யுபிஎஸ் அமைத்துக் கொடுப்பது, கண்காணிப்பு கேமிரா பொருத்திக் கொடுப்பது என்று வியாபாரத்தை ஆரம்பித்துத் திருவாரூர் பக்கம் போனவன்தான், ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம் வீட்டுக்கு வருவான். தீபாவளி, பொங்கல் என்றால் வீட்டில் பார்க்கலாம். மற்றபடி மகன் என்ன பண்ணுகிறான், ஏது பண்ணுகிறான் என்றால், ஏதோ கரண்ட் போனா கரண்ட் கொடுக்குமாமுல்ல, வூட்டுல கேமிரா வெச்சு வூட்டுல இருக்குறவங்க வூட்டைப் பார்க்குறாங்களாமுல்ல அதெ பண்ணிட்டுத் திரியுறான் பய. ஏதோ கண்ட காவாளிகளோட சுத்தாம ஏதோ பொறுப்பா பார்த்துட்டு நாலு காசு சம்பாதிக்கிறானுன்னு நானும் அவனெ கண்டுக்கல என்பார் ராமசாமி.

வாழ்க்கையில் எல்லாமும் நல்லபடியாகவா போய்க் கொண்டிருக்கிறது? ராமசாமி மனசொடிந்து போகும் ஒரு நாள் வந்தது. மகன் குகன் வியாபாரத்தை விரிவு பண்ண வேண்டும் என்று நின்றான். பெரிசு பண்ணணும்ன்னா பண்ணு, அதுக்கு ஏம்டா எங்கிட்டெ வந்து நிற்கிறே என்றார் ராமசாமி. பணம் என்றான் மகன். அதாம் இவ்ளோ நாளு சம்பாதிச்சில்லே என்றார் ராமசாமி. அது பத்தாது என்றான் மகன்.

என்ன பத்தாது? நீ பண்ற யேவாரமெல்லாம் காலத்துக்கும் நிக்குமாடா? விவசாயம் இருக்கே, காலத்துக்கும் இதுதாம்டா நிக்கும். பண்ணதெல்லாம் போதும். எல்லாத்தையும் விட்டுட்டு வா. நாலு காணி நெலம் நாலு தலைமுறைக்கும் தூக்கி நிப்பாட்டும் என்றார் ராமசாமி.

அதற்கு மேல் ராமசாமியோடு மல்லுக்கட்ட மனமில்லாமல் மகன் சீதாலெட்சுமியிடம் போய் பத்து நிமிஷம் பேசினவன் வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்திக் கொண்டு அந்த வருஷத்துப் பொங்கலுக்கு வராமல் போன போது ராமசாமி உடைந்து உருக்குலைந்து போனார். ஆள் பார்ப்பதற்கு சுகர் கண்டு இளைத்தது போல ஆகி விட்டார். எவ்வளவோ வாழ்க்கையில் தாங்கியிருக்கிறார். அவரால் பொங்கலுக்குக் கூட மகன் வராமல் போனதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மேல் ராமசாமிக்கு மனதில் என்ன தோன்றியதோ அரைக்காணி நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு, மூன்றரை காணி நிலத்தை விற்றுக் கொண்டு போய் மகன் கையில் கொடுத்தார்.

மகன் வியாபாரத்தை விரிவு பண்ண கேட்டதாகத்தான் ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தார் ராமசாமி. அவர் பணம் கொடுத்து ஆறு மாதங்கள் கழித்த பின் மீண்டும் வீடு கட்ட தேவையென்று பணத்துக்காக வந்து நின்றபோதுதான் அப்பன் கொடுத்த காசில் பிள்ளை ப்ளாட் வாங்கிப் போட்ட விசயமே அவருக்குத் தெரிய வந்தது.

இதுக்கு மேல எங்கிட்டெ என்ன இருக்கு? எங்கிட்டெ ரெண்டு கிட்னியும் ஒம்மாகிட்டெ ரெண்டு கிட்னியும் இருக்கு. வேணும்னா அறுத்துக்கிட்டுப் போயி வித்து காசைத் தேத்திக்கோ என்றார் ராமசாமி தாளிக்கப்படும் கடுகைப் போல.

என்னவோ எம் பேர்ல டவுன்ல எடம் வாங்கிப் போட்ட மாரில்ல பேசுறீயளே? அம்மா பேர்லத்தான் வாங்கிருக்கேன் என்றான் மகன்.

எவ்வேம்கிட்டேடா காது குத்துறே? நெலம் கிரயம் பண்ணா ரீஸ்தர் பண்ணணும்ங்றது கூட தெரியாதுன்னு நெனைச்சுக்கிட்டுப் பேசுறீயா? எலேய் என்னடா நெனைச்சுக்கிட்டு இருக்கே? ஒங்கப்பன் என்ன கிறுக்கு முண்டம்ன்னே முடிவு பண்ணீட்டியோ? என்றார் ராமசாமி.

சீதாலெட்சுமி ஓடி வந்து, ஐயோ என்னை மன்னிச்சிடுங்க என்று ராமசாமியின் காலில் விழுந்தார். ராமசாமிக்கு விசயம் தெளிவாகத் தொடங்கியது. மகன் மேல் ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும், கல்யாணம் கட்டி வந்த நாளிலிருந்து பொண்டாட்டிக்காக புடவை துணி மணி தவிர, பொட்டுத் தங்கம் கூட வாங்கித் தராதது நினைவுக்கு வந்தது. பரவாயில்லை, நாம்ம பண்ணாட்டாலும் மவனாவது அவ்வே பேருல எடத்தை வாங்கிப் போட்ருக்கான் என்று மறுப்பக்கம் ஆத்திரத்திலும் கொஞ்சம் பெருமிதமாக இருந்தது.

விவசாய நெலத்தை வித்துப்புட்டு டவுன்ல எடம் வாங்கணும்ன்னு சொன்னா ஒத்துக்கிட மாட்டீங்கன்னுத்தான் யேவாரத்தை விரிவு பண்ணணும்ன்னு வாங்கி இப்படிப் பண்ணது. நம்ம பாண்டிமுத்து அண்ணன்தான் எடம் பார்த்து எல்லாம் முடிச்சது. இப்போ அந்த எடத்துலத்தான் பங்களா மாரி வீடு கட்டணும்ங்றான். வீடு கூட சீதாலெட்சுமி பேலஸ்ங்றான் மவன் என்றார் சீதாலெட்சுமி.

ஏய் சீத்தாலட்சுமி! எல்லாம் கூட்டுக் களவாணிங்களா? நீ கேட்டு, நான் பார்ப்போம்ன்னு சொன்னது இந்த ஒரு விசயந்தாம். அதெயும் காவாளித்தனமாக செஞ்சுப் போட்டீங்க இல்ல. எதாச்சும் பண்ணுங்க. இந்தப் பயெதான் யேவாரம் பண்ணானேன்னு. அதுல சேத்த காசெல்லாம் என்னவாச்சாம்? அதெ வெச்சு கட்டிப் போட வேண்டித்தானே சீத்தாலட்சுமி பேலஸை. அதுக்கு ஏம் எங் காலே நக்கிட்டு நிக்கிறான்? ராமசாமி ரொம்பவே காட்டமாகப் பேசினார்.

யேவாரத்துல சம்பாதிச்ச எண்பது லட்ச ரூபாய்ல வேலையெல்லாம் ஆயிட்டு இருக்குது. இன்னும் நாப்பது லட்ச ரூவா இருந்ததாத்தான் வேலை முடியுமாம். நாம்ம இந்தக் கிராமத்துல இருந்து இனுமே என்னா பண்ணா போறோம்? அதாங் இந்த வீட்டையும் அந்த அரைக்காணியும் நெலத்தையும் வித்துப்புட்டு மவனோடயே திருவாரூருக்குப் போவோம் என்றார் சீதலெட்சுமி.

பரம்பரை வீட்டை விற்கலாம். மறுபடியும் அப்படி ஒரு வீட்டைக் கட்டவும் முடியாது, வாங்கவும் முடியாது. ராமசாமி யோசித்தார். மனுஷனுக்குக் கௌரவம்தான் முக்கியமா என்ற கேள்வி திரும்ப திரும்ப மனதுக்குள் ரிப்பீட் மோட் அடித்துக் கொண்டிருந்தது.

இரண்டு நாட்களாக எதுவும் பேசாமல் இருந்தார் ராமசாமி. சீதாலெட்சுமி பேசுமாறு அழுது பார்த்தார், காலில் விழுந்து கெஞ்சி பார்த்தார். ஐந்தாவது நாள் வீட்டையும் நிலத்தையும் அடமானம் வைத்து நாற்பது லட்சத்தைப் புரட்டிக் கொடுத்தார் ராமசாமி.

புதுமனை புகுவிழாவோடு கல்யாணமுமாகப் பத்திரிகையை அச்சடித்துக் கொண்டு வந்து நின்றான் மகன். திருவாரூர் சுபரத்னா ஜூவல்லரியின் உரிமையாளர் கோவிந்தராஜூவின் மகள் சுபரத்னாவைக் கல்யாணம் செய்வதாகப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து கொண்டார் ராமசாமி. சீதாலெட்சுமிக்கு எல்லாவற்றிலும் பரிபூரண சம்மதம் இருந்தது. அவருக்கு முன்பே விசயம் தெரிந்திருந்தது ராமசாமிக்குத் தெரியாமல் இருந்தது. ராமசாமிக்குப் பேச்சு நின்று போயிருந்தது போயிருந்ததாகவே இருந்தது. யாருடனும் எதுவும் பேச முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். பாண்டிமுத்து கூட சமாதானம் செய்து பார்த்தார். சீதாலெட்சுமிக்கு அழுது அழுது கண்கள் வற்றிப் போனதுதான் மிச்சம். அப்பன் பேசாதது குறித்து மகனுக்கும் எந்த லஜ்ஜையும் இல்லாமல் காலமும் நாட்களும் மாதங்களுமாக உருண்டோடிக் கொண்டிருந்தது.

பேத்தி யோகரத்னா பிறந்த பிறகு கோவிந்தராஜூ விதித்த நிபந்தனையின் பேரில் அவரது மகளைத் திருமணம் செய்து கொள்ள மகன் பேலஸ் வீடு கட்டியதும், தற்போது அவர் சொல்வதன் பேரில் தஞ்சாவூரில் நகைக்கடை தொடங்க அங்கேயே குடியேறப் போவதும் மெல்ல மெல்லதான் சீதாலெட்சுமிக்குத் தெரிந்தது. இவ்ளோ வெவரமா காய் நகர்த்திருக்கானே மவன் என்ற லேசான கார்ப்புணர்வும் வந்தது. மனதுக்குள் கார்ப்பு வந்த பிறகு கேட்காமல் இருக்க முடியுமா?

இவ்ளோ பெரிய வீட்டுல நாங்க ரெண்டு பேரு மட்டும் எப்படிடா இருக்குறது? என்றார் சீதாலெட்சுமி.

யம்மா வீட்டை வாடவைக்கும் விட முடியாது. சும்மாவும் போட முடியாது. அதுக்காக இங்க நான் இருந்தா அங்க பிசினஸை டெவலப் பண்ணவும் முடியாது. அஞ்சு வருசம் பல்லைக் கடிச்சிட்டு இருங்க. அங்க பிசினஸை டெவலப் பண்ணிட்டா இங்க வந்துடுவேன். இங்க அடிக்கடி வந்துட்டுப் போயிட்டுதான் இருப்பேன் என்றான் மகன்.

நாங்களும் ஒங் கூடவே அங்க வந்திடறோம்டா என்றார் சீதாலெட்சுமி.

புரியாம பேசாதேம்மா. இம்மாம் பெரிய வீட்டுல இருக்க கசக்குதா என்றான் மகன்.

முதன் முதலாக சீதலெட்சுமிக்கு அந்த வீட்டில் இருக்க கசக்கத்தான் செய்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் மவனும் மருமவளும் பேத்தியும் கிளம்பிப் போய் வெறிச்சோடியிருந்த நாளில் ராமசாமி, சீத்தாலட்சுமி என்றார்.

சீதாலெட்சுமிக்கு நின்று போன உலகம் சுற்றுவது போல இருந்தது. ராமசாமியின் அருகில் வந்து நின்றார்.

நீங்க பேசிட்டீங்கத்தானே, எம் பேர்ர சொல்லிக் கூப்புட்டீங்கத்தானே என்றார் நடப்பதை நம்ப முடியாமல் சீதாலெட்சுமி ஒரு குழந்தையைப் போல.

எடமும் வீடும் ஒம் பேர்லத்தானே இருக்குது. கௌம்பு என்றார் ராமசாமி.

நான்கு கோடி ரூபாய் வீட்டை மூன்று கோடிக்கு விற்று முடித்து அடமானத்தில் இருந்த கிராமத்து வீட்டையும் அரைக்காணி நிலத்தையும் மீட்டவர் மிச்ச பணம் முழுவதையும் தன் பெயரில் பிக்சட் டெபாசிட் பண்ணிக் கொண்டு, திருமுல்லைவாயில் கிராமத்து வீட்டில் நடுக்கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவர் மனுஷனுக்குக் கௌரவம்தான் முக்கியம் என்றார். அவர் காலடியில் வந்தமர்ந்த சீதாலெட்சுமி அவர் கால்களைக் கட்டிக் கொண்டபடி வாஸ்தவம்தான் என்றார்.

*****

6 Jul 2025

திருவாரூரிலிருந்து கும்பகோணத்துக்கு (சிறுகதை) - விகடபாரதி

திருவாரூரிலிருந்து கும்பகோணத்துக்கு (சிறுகதை)

-         விகடபாரதி

கும்பகோணத்துக் கல்யாணத்துக்குக் கிளம்ப வேண்டும் என்ற பரபரப்பு ஒரு வாரத்துக்கு முன்பே தொற்றிக் கொண்டு விட்டது.

ஒந் தங்கச்சி வீட்டு மாமங்காரங் வீட்டுக் கல்யாணம் டேய். சரியா கல்யாணத்துக்குப் போகலேன்ன ஒந் தங்கச்சி, மச்சாங்காரங் எல்லாம் கோச்சுக்குவாங்க டேய். அவுங்க வேற குடும்பத்தோட காருல வந்து பத்திரிகெ வெச்சுட்டுப் போயிருக்காங்க டேய். இதுல கொஞ்சம் சூதானமா இருந்துக்கோணும் டேய் என்று அம்மா மூச்சுக்கு முந்நூறு முறை எதை எடுத்தாலும் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது.

வுட்டா ஒங்க அம்மா அனுமாரு சஞ்சீவி மலையைப் பேர்த்து எடுத்துத் தூக்கிட்டுப் போனது போல நம்ம வூட்டோ பேர்த்து எடுத்து நம்மள தூக்கிட்டுப் போய் கும்பகோணத்துல விட்டுடுவாங்கப் போலிருக்கு என்று மனைவி முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தாள்.

தீபாவளி முடிந்து நான்காவது நாள் கல்யாணத்தை வைத்திருந்தார்கள். தீபாவளி பரபரப்புடன் கல்யாண பரபரப்பும் இதனால் சேர்ந்து கொண்டது. என்னதான் இருந்தாலும் ஒந் தங்கச்சி வகையறா கல்யாணங்றதுல ஒங்கம்மா சும்மா இருக்குமா என்று மனைவி ஓரஞ்சாரமாய்ப் பேசினாலும் கல்யாணத்துக்கு எந்தப் புடவை கட்டுவது, எந்த நகையைப்போடுவது என்று அவளும் பரபரப்பாக இருந்தாள்.

அரசாங்கமும் தீபாவளியைப் பொதுமக்கள் நன்றாகக் கொண்டாட வேண்டும் என்று தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு வந்தது வசதியாகப் போயிருந்தது. திங்கட் கிழமை கல்யாணம் ஒரு வகையில் இதனால் ஆசுவாசமாகத்தான் இருந்தது.

கும்பகோணம் கல்யாணத்துக்குக் கிளம்புவது குறித்த திட்டங்களும் தயாராகத் தொடங்கின. கிராமத்திலிருந்து கிளம்புவதில் இருக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு திருவாரூரில் இருக்கும் சாந்தா சித்தி வீட்டிலிருந்து கிளம்புவது என்று தீர்மானமானது. ஞாயிற்றுக் கிழமை மதியமே சாப்பாட்டை முடித்துக் கொண்டு சாந்தா சித்தி வீட்டுக்குக் கிளம்பி விடுவது. ராத்திரி அங்கே தங்கி விட்டுக் காலையில் சாந்தா சித்தியையும் சித்தப்பாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விடுவது. இதுதான் திட்டம்.

சாந்தா சித்திக்கு இரண்டு பிள்ளைகள். இரண்டும் நன்றாகப் படித்து அமெரிக்காவில் வேலை கிடைத்துப் போய் விட்டன. இரண்டு பிள்ளைகளும் போன பிறகு சாந்தா சித்தியும் சித்தப்பாவும் திருவாரூர் வீட்டில் தனிமையில் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இருக்கும் மனக்குறையே அவர்களை யாரும் வந்து பார்ப்பதில்லை என்பதுதான். பெற்ற பிள்ளைகள் கூட அமெரிக்காவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோதான் வந்து பார்த்துக் கொண்டிருந்தன. சாந்தா சித்தியைப் பார்க்கும் போதெல்லாம் அது ஒவ்வொரு பிள்ளையும் வந்து போன தேதியை மணி நிமிட சுத்தத்தோடு சின்ன சின்ன சம்பவத்தையும் அவ்வளவு கச்சிதமாக நினைவில் வைத்துச் சொல்லும். அந்த அளவுக்கு அது பிள்ளைகளோ, உறவினர்களோ யாராவது வருவார்களா என்ற ஏங்கிப் போய் கிடந்தது. நல்லா படிக்க வெச்சா பிள்ளைங்களோட நல்லா இருக்கலாம்ன்னு நெனைச்சு பண்ணது. இப்போது பிள்ளைங்க மூலைக்கு ஒண்ணா கெடக்குது. நாங்க இங்க ஒரு மூலையிலகெடக்குறோம் என்று சாந்தா சித்தி ஏகத்துக்கும் பெருமூச்சு விடும்.

கும்பகோணம் கல்யாணத்துக்காக நாங்கள் எல்லாம் போய் சேர்ந்தது சாந்தா சித்திக்குத் தாங்க முடியாத சந்தோசத்தைக் கொடுத்தது. நாங்கள் எல்லாம் என்றால் நான், மனைவி, அம்மா, மகள் என நாங்கள் நான்கு பேரும். எங்களுக்குக் கல்யாண சாப்பாடு சாந்தா சித்தி வீட்டிலேயே ராத்திரியே ஆரம்பமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கு ரொம்ப தடபுடலாகச் சாப்பாட்டைச் செய்து வைத்திருந்தது சித்தி.

கல்யாணம் ஆறிலிருந்து ஏழரைக்குள். எப்படியும் கல்யாணத்துக்கு ஆறரைக்கு எல்லாம் போய் விட வேண்டும் என்று ராத்திரியே பேசிக் கொண்டோம். மழையும் அவ்வபோது விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது. சில நேரங்களில் ஒரு பாட்டம் கனமாகவும் அடித்துக் கொண்டிருந்தது. காலையில் எழுந்து கிளம்ப வேண்டுமே என்று மூன்று மணிக்கெல்லாம் அலாரம் வைத்துக் கொண்டோம். என்னதான் தூக்கமாக இருந்தாலும் எப்படியாவது எழுந்து கிளம்பி பஸ்ஸில் போகும் போது தூங்கிக் கொள்ளலாம் என்று சந்தோசமாக எல்லாம் பேசிக் கொண்டன. ஏம்டா பஸ்ல போயி சிரமப்பட்டுகிட்டு. ஒரு கார்ர வெச்சிக்கிட்டுப் போய்ட்டு வந்துடலாம்டா என்றார் சித்தப்பா.

எதுக்கு தேவையில்லாத செலவு? திருவாரூர்லேர்ந்து கும்பகோணத்துக்கு பஸ்ஸா இல்ல. கிராமத்துலேந்துன்னா கூட கார்ல போய்ட்டு வரலாம். டவுன்லேந்து டவுனுக்குப் போறதுக்கு என்ன காரு என்று அம்மா அந்த யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

காலையில் எப்படியும் கிளம்பி ஐந்து மணிக்கெல்லாம் பஸ்ஸைப்பிடித்து ஏறி உட்கார்ந்து விட வேண்டும் என்ற யோசனையானது டமாலாகி விட்டது. இந்தப் பெண்களானது பேசிக் கொண்டும் அலங்காரம் பண்ணிக் கொண்டும் கிளம்புவதில் ஆறு மணியாகி விட்டது.

ராத்திரி நல்ல மழை பெய்திருந்தது. பழைய பஸ் ஸ்டாண்டு பக்கம்தான். அங்கிருந்து பஸ் பிடித்து புதிய பஸ் ஸ்டாண்டுக்குப் போக வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் நடந்து போவதற்குள் பெரும்பாடாகி விட்டது. சாலையே சகதியாக இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வாகனங்கள் தண்ணீரை வேறு வாரி இறைத்துக் கொண்டபடி போய்க் கொண்டிருந்தன.

என்னடா இது? திருவாரூர்லேந்து கும்பகோணத்துக்குப் போறது கூட பெரிய காரியமில்லெ போலருக்கு. பஸ் ஸ்டாண்டு வரைக்கும் நடந்து போறது பெரிய பாடா இருக்கே? என்ற சாந்தா சித்தி அலுத்துக் கொண்டது.

மழை பேஞ்சா இப்படித்தான்டா. இந்த டவுன்ல அந்தாண்ட இந்தாண்ட நகர முடியாது. கிராமத்துல சேறுன்னா இந்த டவுன்ல இந்த சகதியும் சாக்கடையும். ஒரே அருவருப்புதான்டா போ. நான் இப்போல்லாம் மழை பேஞ்சா வேளியில கௌம்புறதே இல்லடா என்றார் சித்தப்பா.

அதெல்லாம் பார்த்தா ஆவுமா? நல்லது கெட்டது நாலும்தான் இருக்கும். நல்லது மட்டும்தான் இருக்கணும்னா எப்பூடி? கொஞ்சம் சிரமப்பட்டத்தான் நல்லது என்றது அம்மா. 

பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதனால் ஆங்காங்கே பணிகள் நடப்பதற்கேற்ப தகர சீட்டுகளை வைத்து அடைத்து வைத்திருந்தனர். மழை பெய்திருந்ததால் சாலை படுமோசமாகத் தண்ணீரும் சேருமாக இருந்தது. தாங்கள் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் அலங்காரத்துக்குச் சேதாரம் வந்து விடுமோ என்ற பயம் பெண்களுக்கு இருந்தது.

ஒரு ஆட்டோ பிடிச்சு வந்திருக்கலாம்ல அண்ணி என்றார் சித்தப்பா அம்மாவைப் பார்த்து.

ஆமாம். ஆட்டோ பிடிப்பாங்களாம் ஆட்டோ. இங்க இருக்குற பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோ பிடிச்சுத்தான் வருவாங்களா? அவன் வேற காத்தாலயே நூறு ரூபாய்க்கு அச்சாரம் போட்டுடுவான் என்றது அம்மா.

அதுக்குச் சொல்லல அண்ணி. இந்தத் தண்ணிக்கும் சேத்துக்கும்தான் சொல்றேன் என்றார் சித்தப்பா.

கொஞ்சம் வேட்டிய தூக்கிப் பிடிச்சிட்டு நடந்து வர்றீயளா? அதை விட்டுப்புட்டு ஆட்டோ பிடிக்குறேன்னுகிட்டு. திருவாரூர்லேந்து நாகப்பட்டினத்துல நடந்த கல்யாணத்துக்கு சைக்கிள்லேயே போனதெல்லாம் ஞாபவம் இல்லியா என்றது அம்மா.

அதெல்லாம் ஒரு காலம் அண்ணி. இப்போல்லாம் பஸ்ல, கார்ல போய்ட்டு வர்றதே முடிய மாட்டேங்குது. போய்ட்டு வந்தா ரெண்டு நாளைக்குப் படுத்துகிட வேண்டியதா இருக்கு.

பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டுக்கு நிறைய பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அம்மா மகளிர் பயணிக்க கட்டணமில்லாத பேருந்தாகப் பார்த்து ஏறச் சொன்னது. அண்ணி இன்னமும் மாறவே இல்ல என்றார் சித்தப்பா.

காசு இருக்குன்னா மடியில முடிஞ்சுக்கோங்க. வெட்டியா சிலவு பண்ணணும்னு அவசியம் இல்ல. இந்த பஸ்ல ஏறுனா ஒங்க ரெண்டு பேத்துக்கும் மட்டும் டிக்கெட் எடுத்தா போதும். எங்களுக்கு சிலவு கிடையாது என்றது அம்மா.

ஏன் நாங்க ரேண்டு பேரும் நடந்தே வந்துப்புடுறோமே என்றார் சித்தப்பா.

நடக்குறதுல என்ன கௌரவ குறைச்சல்ங்றேன். நேரம் மட்டும் இருந்துச்சுன்னா ஒங்களயெல்லாம் நடத்திக்கிட்டுத்தான் அழைச்சுக்கிட்டுப் போவேன் பாத்துங்க என்றது அம்மா.

அண்ணி பண்ணாலும் பண்ணுவாங்க என்றார் சித்தப்பா.

புது பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது மணி ஆறரை ஆகியிருந்தது. இந்த நேரத்துக்கு கல்யாணத்துக்கேப் போகணும்ன்னு பேசிட்டு இருந்தோம். இப்பத்தான் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட்லயே நிக்குறோம். ஒந் தங்கச்சி என்ன ஆட்டம் ஆடப் போறாளோ தெரியலையே என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் தங்கச்சியிடமிருந்து போன் வந்தது.

என்னடா அவதானே அடிக்குறா? குடவாசல்ல தாண்டிட்டோம்ன்னு சொல்லு. இல்லன்னா அவ வேற தாண்டிக் குதிப்பா என்றது அம்மா உஷாராக.

நான் போனை எடுத்ததும், அம்மா சொன்னதும் தங்கச்சிக்குக் கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னண்ணே இன்னும் சாந்தா சித்தி வீட்டை விட்டே கௌம்பியிருக்க மாட்டீங்களே என்றது தங்கச்சி.

வீட்டை விட்டுக் கௌம்பிட்டோம். திருவாரூரு பஸ் ஸ்டாண்ட்ல நிக்குறோம். எப்படியும் ஒரு மணி நேரத்துல வந்துட மாட்டோமா என்றேன்.

கல்யாணம் முடிஞ்சிடும்ண்ணே. அவரு வேற ஒங்களால டென்ஷனா நிக்குறாரு. எங்க போறதுன்னாலும் முங்கூட்டியே கௌப்பிக் கொண்டார மாட்டீயா? எந்த ஒறவுக்கார விசேஷசத்துக்காவது நீ சீக்கிரம் வந்திருக்கீயா? எல்லாத்துலயும் மச மசன்னுகிட்டு. சீக்கிரமா வந்து சேர்ற வழியப் பாரு என்றபடி கோபமாகப் போனை வைத்துவிட்டாள்.

ஒம் பாடுதாம்டா பாவம். நாந்தான் காரு வெச்சிக்கலாம்ன்னு சொன்னேன்ல. என்றது சாந்தா சித்தி.

ஏம் காசு நெறைய இருக்குங்கற திமிருல பேசுறீயா என்றது அம்மா.

இதுக்குதாம்டா நான் பேசாமலே வந்தேன் என்றது சாந்தா சித்தி. சாந்தா சித்தி இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த ரகசியம் இப்போதுதான் உடைந்தது.

கும்பகோணத்துக்கு பஸ் வந்து சேர்ந்த பாடில்லை. ஐந்தரை மணியிலிருந்து பஸ் வரவில்லை என்ற பேசிக் கொண்டிருந்தார்கள். பெருங்கூட்டம் ஒன்று கும்பகோணம் பஸ்சுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்துக்கு இரண்டு பஸ் கூட பத்தாது.

எல்லா பஸ்ஸையும் தீபாவளின்னு மெட்ராசுக்கு வுட்டுப்புட்டுனாவோ பாவிப் பயலுவோ! இவனுங்களுக்கு மெட்ராஸ்ல இருக்குறவனுங்களத்தான் மனுஷங்களா தெரியும். மத்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் மனுஷனாவே தெரியாது என்று ஒருவர் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

இந்தப் பகுதிக்கான அரசுப் பேருந்துகளின் மையமே கும்பகோணம் கோட்டம்தான். அந்தக் கும்பகோணத்துக்கு ஒண்ணே கால் மணி நேரமாக பஸ் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

ஆறே முக்காலுக்கு கும்பகோணத்துக்கு ஒரு பஸ் வந்தது. கூட்டம் திமுதிமுவென்று ஏறியது. அம்மா அந்தக் கூட்டதோடு கூட்டமாக ஏறச் சொன்னது. யக்கா நீ பேசாம இரு. இவ்ளோ கூட்டத்துலயெல்லாம் போவ முடியாது. அடுத்த பஸ்ல போகலாம் என்றது சாந்தா சித்தி. அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் எரிச்சலை வெளிக்காட்டாமல் பேசாமல் இருந்தது.

எலே அந்த மூலையில போயி நில்லுடா. பஸ் வர்றப்பவே ஸ்லோ பண்ணுவான். அப்படியே ஏறி ரெண்டு சீட்ல எடம் போட்டீன்னாத்தான் வர்ற பஸ்லயாவது போவலாம். இல்லன்னா உஞ் சித்தி அடுத்த பஸ்லயும் ஏற விட மாட்டா என்றது அம்மா.

நான் இடம் போடுவதற்கு வசதியாக பையிலிருந்து இரண்டு பெரிய துண்டுகளை எடுத்துக் கொண்டு அம்மா சொன்னா மூலையில் போய் நின்று கொண்டேன்.  ஏழு ஐந்துக்கு ஒரு தனியார் பேருந்து வந்த போது என்னைப் போல நின்று கொண்டிருந்த ஏழெட்டுப் பேர் ஓடும் பேருந்தில் ஏறி இடம் போட்டோம். இந்தப் பேருந்திலும் கூட்டம் திமுதிமு என்றுதான் ஏறியது.

57 + 2 பேர் பயணிப்பதற்கான பேருந்து அது என்பதை ஓட்டுநர் இருக்கைக்கு மேலே இருந்த தகவல் சொன்னது. கூட்டம் எப்படியும் 150 பேருக்கு மேல் இருக்கும். அதற்கு மேல் யாரையும் ஏற்ற முடியாது எனும் நிலையிலும் நடத்துநர் ஏறி நல்லா உள்ளே போங்கம்மா என்று கத்திக் கொண்டிருந்தார்.

எங்க ஏறி எங்க உள்ள போறது? இதுக்கும்தாம்டா ஒங்க அம்மா கூட வர்றதுக்கு எனக்குப் பிடிக்கவே மாட்டேங்குது. சரியான கருமிடா ஒங்க அம்மா என்று சாந்தா சித்தி என் காதுக்கு மட்டும்கேட்கும்படி சொன்னது. நான் சிரித்துக் கொண்டேன்.

அதற்குள் தங்கையிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. நான் எடுக்காமல் விட்டுவிட்டேன். மீண்டும் ஒரு முறை அடித்தாள். மறுபடியும் நான் எடுக்கவில்லை. கல்யாணத்துக்குப் போயி நீங்க திட்டுதான் வாங்கப் போறீங்க. எடுத்தப் பேசிடுங்க என்றாள் மனைவி.

எப்போ இந்த பஸ்ஸ எடுப்பான்னு தெரியலீயே. அதாங் நாலு பஸ் கொள்ளுற அளவுக்கு கூட்டத்தெ ஏத்திட்டான்னே. இன்னும் எடுக்காம போட்டு வெச்சிருக்கான் பாவி என்றது அம்மா.

கூட்டம் ஆண்களை விட பெண்களால் நிரம்பி வழிந்தது. அதுவும் திருவாரூரிலிருந்து கும்பகோணத்துக்குக் கல்லூரி செல்லும் பெண்கள். நின்று கொண்டிருந்த பெண்கள் தங்கள் பைகளை அருகில் அமர்ந்திருப்போரிடம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

சாந்தா சித்தியிடம் ஒரு பெண் தன்னுடைய பையைக் கொடுத்தாள். எந் தாயி நீயி எந்த ஏரியாடே என்றது சித்தி.

கல்லுபாலம் என்றது அந்தப் பெண்.

என்னா படிக்குறாப்புல?

பிகாம்.

இங்க இருக்குற காலேஜ்ல பிகாம் இல்லியா? இதெ கும்பகோணம் போயித்தான் படிக்கணுமா என்றது சித்தி. சித்தப்பா சித்தியைப் பார்த்து முறைத்தார்.

வீட்ல அங்கதான் சேர்த்து விட்டாங்க. நான் என்னத்தெ பண்ணுறது என்றது அந்தப் பெண்.

இந்தப் பிள்ளைங்க அந்தந்த ஊர்ல இருக்குற பள்ளியோடத்துல படிச்சாலே பாதிக் கூட்டம் பஸ்ல கொறைஞ்சிடும் என்றது அம்மா.

அது பள்ளியோடம் இல்லத்தா. காலேஜ் என்றாள் மகள் சிரித்துக் கொண்டே. சாந்தா சித்திக்கும் சிரிப்பு வந்து.

எல்லாம் எனக்குத் தெரியும்டி. காலேஜ்ன்னா என்னா பெரிய பள்ளிக்கூடம்தானே என்றது அம்மா. இப்போது அந்தக் காலேஜ் பெண்ணும் சிரித்தது.

பஸ் நகர ஆரம்பித்த போது மணி ஏழரை மணியாகிருந்தது. இந்நேரம் கல்யாணமே முடிஞ்சிருக்கும் என்றாள் மனைவி. அதுக்குத்தான் நான் என்று வாயெடுத்த சாந்தா சித்தி நிறுத்திக் கொண்டது.

புது பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறிய பேருந்து ஓரமாக நின்று கொண்டது.

எலே பஸ்ஸ கௌப்பிக் கொண்டு போற வழியப் பாருங்கடே. மணி இப்பவே ஏழே முக்கால நெருங்குது. இங்கேய எட்டு மணியாயிடும் போலருக்கு. பெறவு எப்போடா கும்போணம் போறது என்று பஸ்ஸிலிருந்து சத்தங்கள் எழ ஆரம்பித்தன.

நடத்துநர் அலைபேசியில்பேசிக் கொண்டிருந்தார். மடப்புரத்துலேந்து ஒருத்தரு வர்றாங்க. வந்துடுவாங்க. கொஞ்சம் பொறுங்க என்றார்.

ஏதோ பொண்ணத்தான் இருக்கும் பாரேன். அதுக்குத்தான் இந்தப் பயலுங்க இவ்ளோ ஜவாப்தாரிய பண்ணிகிட்டு நிக்குறானுங்க என்று ஒரு பயணி சொன்னார். அவர் சொன்னது உண்மை என்பது போல கல்லூரி படிக்கும் ஒரு பெண் அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து ஏற பேருந்து கிளம்பத் துவங்கியது.

இந்தப் பொண்ணுக்காக எம்மாம் நேரம் நிக்குறதாம் என்று ஒரு கிழவி சத்தம் போட்டது. நாங்கன்னா மட்டும் வண்டிய கௌப்பிட்டுப் போறானுங்க. கொமரிகள கண்டா மட்டும் வண்டிய நிப்பாட்டிக்கிட்டு ஏத்திட்டுப் போறானுங்க என்றது.

ஏ கெழவி ஒழுங்கா பேசாம வர்றதுன்னா வா. இல்லன்னா எறக்கி விட்டுட்டுப் போயிட்டே இருப்பேன் என்றார் நடத்துநர்.

போடா போ. போயி டிக்கெட்டப் போடு. நீயி யாருடா என்னய எறக்குறது? இருடா ஒம் ஓனருக்குப் போன போடுறேன். ஒஞ் சீட்டெ கிழிக்கிறேன் என்றது கிழவி.

பஸ் பவித்திரமாணிக்கம், காட்டூர், வடகண்டம், புதுக்குடி, மஞ்சள்குடி, குடவாசல் என்று நிறுத்தி நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டும் இறக்கிக் கொண்டும் போய்க் கொண்டிருந்தது.

உள்ளே போங்க, உள்ளே போங்க. ஏறுறவங்களுக்கு வழிய விடுங்க என்று நடத்துநர் கத்திக் கொண்டே இருந்தார். அவர் தொண்டை கிழிந்து தொங்காத குறையாக அவர் கத்துவது அவர் மன உளைச்சலின் உச்சத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஏம்மா யாராச்சும் சொன்னத்தெ கேக்குறீங்களா? உள்ள போங்கம்மா. வழிய விடுங்க. என்று தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தார்.

வழி இருந்தா விட மாட்டோமா? விடுற பஸ்ஸ நீதான் கொஞ்சம் பெரிய பஸ்ஸா வுட வேண்டித்தானே? வழிய விடுன்னா எதெ விடுறது? என்றது அந்தக் கிழவி.

ஒம் வாயெ கிழிக்கிறேன்னா இல்லையா பாரு என்றார் நடத்துநர்.

ஒஞ் சீட்டெ கிழிக்கிறேன்னா இல்லையா பாரு என்றது கிழவி.

எல்லாத்தையும் கேமராவுல ஓனர் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரு. நீ ஒண்ணும் எஞ் சீட்டெ கிழிக்க முடியாது என்றார் நடந்துநர் பஸ்ஸில் இருக்கும் கேமிராவைக் காட்டி.

இவ்ளோ கூட்டத்தை ஏத்துனதெப் பாத்தும், மனசாட்சி இல்லாம இன்னும் பாத்துக்கிட்டே இருக்குறானே அவனெல்லாம் மனுஷனா? என்று கிழவிஇப்போது ஓனரையும் திட்டியது.

அதானே பாத்தேன். மொதல்ல ஒன்னய ஏத்தாம வந்திருக்கணும். நீயி ஏறிப்புட்டு இப்போ ஏறுறவங்கள ஏன் ஏத்துறன்னு கேக்குறே பாத்தியா? என்றார் நடத்துநர்.

பஸ் குடவாசலைத் தாண்டித் திருச்சேறையை நோக்கிப்போய்க் கொண்டிருந்தது. டே பாருடா. இந்தப் பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திடுச்சு என்றது சாந்தா சித்தி.

அந்தக் கூட்டத்தில் யார் யாரைப் பார்ப்பது, அந்தப் பெண்ணுக்காக இப்போது என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. சாந்தா சித்தி சட்டென்று எழுந்து அந்த இடத்தில் அந்தப் பெண்ணை அப்படியே அணைத்து உட்கார வைத்தது. பக்கத்தில் இருந்த நான் எழுந்து கொண்டு அந்த இடத்தில் சாந்தா சித்தியை உட்கார வைத்தேன். சீட்டை விட்டு எழுந்து விட்டேனே தவிர நானும் சீட்டைத் தாண்டி வெளியே போக முடியாத நிலை. சீட்டுக்கு இடையில் என்னுடைய இடத்தில் சித்தியை உட்கார வைத்து விட்டு நான் நிற்பது சிரமாக இருந்தது. அம்மா உடடினயாகத் தண்ணீர் பாட்டிலைத் தந்து முகத்தில் தெளிக்க சொன்னது. கொஞ்சம் காத்தோட்டாமா இருந்தா நல்லா இருக்கும் என்றது என்னைப் பார்த்து சாந்தா சித்தி.

நான் எங்கே சித்தி நகர்றது என்றேன். நான் ஒன்னய சொல்லலடா. பஸ்ஸோட நெலமையைச்  சொன்னேன் என்றது.

கொஞ்சம் அப்படியே கைத்தாங்கலா பிடிச்சுக்கோங்க. இந்தோ கும்போணம் வந்துடும் என்றார் ஒருவர்.

யோவ் அதுக்கு இன்னும் அரை மணி நேரம் ஆவும்யா. பஸ் போற வேகத்தெ பாத்தியா? யாரு மயக்கம் அடிச்சா என்னா? யாரு செத்தா என்ன? அவனுக்குக் கூட்டத்தெ ஏத்தணும். காசப் பாக்கணும். இனுமேலாவது எந்த ஸ்டாப்பிங்கலாவது நிறுத்தாம போறான்னான்னு பாரேன். இவனுங்க எல்லாம் அடங்க மாட்டானுங்கய்யா. இன்னிக்கு சம்பாதிச்சாத்தான் சம்பாத்தியம்ன்னு யாரப் பத்தியும் கவலைப்படாம போவானுங்க கட்டையில போறவனுங்க என்றார் இன்னொருவர்.

எல்லாரும் ஆளாளுக்கு அந்தப் பெண்ணுக்காகப் பரிதாபப் பட்டபடியே பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, யாருக்கும் பஸ்ஸை நிறுத்த வேண்டும், எங்கேயாவது ஆஸ்பிட்டலில் நிறுத்தி அந்தப் பெண்ணுக்கு முதலுதவி பண்ண வேண்டும் என்ற தோன்றவில்லை. நான் அதைச் சொன்ன போது, அதெல்லாம் அப்படித்தான். ஒங்களுக்கு இது புதுசு சார். ஒரு டிரிப்புக்கு நாலு பொண்ணுங்க மயக்கம் அடிக்கும்ங்க. அதெல்லாம் பார்த்து ஆஸ்பிட்டல்ல நிறுத்துனா கும்போணம் போயி சேர்ந்த மாதிரிதான். பேசாம இருங்க சார். கும்போணம் வந்ததும் அதுவா எறங்கிப் போயிடும் என்றார் நடத்துநர்.

நெரிசலில் மக்கள் மயங்கி விழுவது இவ்வளவு வாடிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதே என்பதை நினைத்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுவே கிராமத்துப் பேருந்து என்றால் பேருந்தை நிறுத்தி விடுவார்கள். வழியில் ஆஸ்பிட்டேலே இல்லையென்றாலும் பெட்டிக் கடையில் சோடாவோ பன்னீரோ அல்லது டீக்கடையில் டீயையோ வாங்கி வந்து அந்தப் பெண்ணை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துதான் பேருந்தை எடுப்பார்கள். டவுன்தான் மனிதர்களை எவ்வளவு மாற்றிவிட்டது என்று தோன்றியது. சித்தி அடிக்கடி அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே இருந்தது. தலையில் கையை வைத்து தடவிக் கொண்டிருந்தது.

எல்லா சனமும் படிப்பு படிப்புன்னு கண்மூடித்தனமாவே இருக்குதுடா என்றது சித்தி.

ஆமா. நீயி இல்ல. நீயும் ஒம் புள்ளைகள அப்படித்தானே படிக்க வெச்சே என்றது அம்மா.

ஒங்கம்மாவுக்கு எதுக்கெடுத்தாலும் எம் மேல கோவம்டா என்றது சித்தி.

கோவமெல்லாம் ஒண்ணுமில்லே. ஒலகமே அப்படித்தானே இருக்குது. படிப்புக்காக கயித்துல தொங்குனாலும் சரின்னுத்தானே சொல்லுது என்றது அம்மா.

ஒரு வழியாக கும்பகோணம் வந்து பேருந்து நின்றது. கூட்டம் திமுதிமுவென்று இறங்குவதும், திருவாரூர் செல்லும் கூட்டம் ஏறுவதுமாக மீண்டும் ஒரு பிரயளத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

மயக்கடைந்து இருக்கும் பெண்ணைப் பற்றிப் பேசியவர்களெல்லாம் எதுவுமே நடக்காது போல அவரவர் திசையில் நகர்ந்து சென்று கொண்டிருந்தனர். சித்தி கைத்தாங்கலாக அந்தப் பெண்ணை இறக்கிக் கொண்டு கீழே இறங்கியது. அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரக்ஞை திரும்பிக் கொண்டிருந்தது.

கும்பகோணம் வந்துட்டோமா என்றது.

ஆமாம் என்றது சித்தி.

நான் சாக்கோட்டையில எறங்கணும். அங்கதான் காலேஜ் என்றது.

எனக்கு எப்படிம்மா தெரியும் நீ எங்க எறங்கணும்ன்னு என்றது சித்தி.

காலேஜ்க்கு நேரமாயிடுச்சு. லேட்டா போனா திட்டுவாங்க என்று அழ ஆரம்பித்தது அந்தப் பெண்.

நீ மயக்கமாயிட்டே. அது புரியலியா ஒனக்கு என்றது சித்தி.

லேட்டா போனா வீட்டுக்கு மெசேஜ் போயிடும். வீட்டுல வேற திட்டுவாங்க என்றது அந்தப் பெண்.

தங்கை விடாமல் போன் அடித்துக் கொண்டிருந்தாள்.

எடுத்துப் பேசுடா என்றது சித்தி.

எடுத்ததும் எங்கண்ணே இருக்கே? காரை அனுப்புறேன் வந்து சேரு என்றது தங்கச்சி.

சித்தி போனைப் பிடுங்கி, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டு வந்தாச்சு. திருவாரூர் பஸ் நிக்குற எடத்துக்குக் காரை அனுப்பு என்றது.

சித்தி பக்கத்துல டவுன் பஸ் ஸ்டாண்டுக்குப் போயி மினி பஸ்ல ஏறி மகாமக குளத்து ஸ்டாப்பிங்ல எறங்குனா நடந்து போற தூரம்தான் சித்தி கல்யாண மண்டம். அதுக்கு எதுக்கு சித்தி காரு என்றேன்.

பேசாம இருடா. ஒங்கம்மா மாரியே பேசிக்கிட்டு. இப்போ கூட ஒரு ஆட்டோ பிடிச்சி போவணும்ங்ற புத்தி வரல பாத்தியா ஒனக்கு என்றது சித்தி.

அவனெ ஒண்ணும் சொல்லாத. அவனே பாவம். விவசாயம் பண்ணிக்கிட்டு குடும்பத்தெ நடத்தணும்ன்னா அவன் என்ன பண்ணுவான் என்றார் சித்தப்பா.

கார் வந்தது. சித்தி அந்தப் பெண்ணையும் காரில் ஏற்றியது. எல்லோரும் ஏறிக் கொண்டோம்.

இந்தப் பொண்ணுமா கல்யாணத்துக்கு என்றாள் மனைவி.

வண்டிய சாக்கோட்டையில காலேஜ் இருக்காம்ல அங்க விடு என்றது சித்தி.

இன்னும் லேட்டான்னா தங்கச்சி திட்டாதா என்றேன் நான்.

நீ சும்மா இருடா என்றது அம்மா.

சாந்தா சித்தி இப்போது அந்த பெண்ணிடமிருந்து திரும்பி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதது.

*****

15 Jan 2025

அப்பாவின் பரிவு! (சிறுகதை) - விகடபாரதி

அப்பாவின் பரிவு! (சிறுகதை)

-         விகடபாரதி

நாமஞ்சேரிப் பண்ணையப் போயிப் பாத்துட்டு வந்தா தேவலாம்ப்பா என்றார் அப்பா.

இத்தோடு பத்தாவது முறையோ, பதினொன்றாவது முறையோ அப்பா சொல்லி விட்டார்.

போகலாம் என்று நினைக்கும் போது ஏதாவது ஒரு வேலை வந்து தடைபட்டு விடுகிறது. இந்தத் தடையைப் பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். என்ன வேலையாக இருந்தாலும் நாளை கிளம்பி விட வேண்டும் என்ற தோன்றியது.

நாளைக்குக் காத்தால சாப்பாட்ட முடிச்சிட்டுக் கிளம்பிரலாம்ப்பா என்றேன்.

அவர் முகத்தில் ஆச்சரியம். இந்தப் பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டார் போல. வழக்கமாகப் போயிட்டு வந்திடலாம்ப்பா என்ற பதிலை எதிர்பார்த்திருப்பார். நாளைக்குக் காலை என்று குறிப்பாகச் சொல்லி விட்டதால் ஆகட்டும்ப்பா என்றார்.

அப்பாவுக்கு அதில் ஓர் ஆர்வம். யாராவது இயற்கை முறையில் வெள்ளாமை பண்ணுவதாகச் சொல்லி விட்டால் போதும், அதைப் பார்த்து விட்டு வந்தால்தான் மனசு அடங்கும். இல்லையென்றால் சதா அதையே பேசிக் கொண்டிருப்பார். அதையே என்றால் அதை மட்டும்தான்  பேசிக் கொண்டிருப்பார். பேச்சுக்கு இடையில் எங்கே இடம் கிடைத்தாலும் அங்கே போயிட்டு வரணுமேப்பா என்று கோடிட்டுக் காட்டாமல் விட மாட்டார்.

என்னவோ அப்பாவுக்கு இந்த வயதில் இப்படியொரு ஆசை. வேறு எதற்கும் ஆசைப்பட மாட்டார். வாயிக்கு ருசியாகச் சமையல் இல்லையென்றாலும் கவலைப்பட மாட்டார். நேரத்துக்குச் சாப்பாடு வராவிட்டாலும் கவலைப்பட மாட்டார். வெள்ளாமைப் பண்ணையம் என்றால் ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விட வேண்டும்.

காலைச் சாப்பாடு எட்டு மணிக்கு எல்லாம் ஆகி விடும். அப்பா தயாராகி விட்டார். எனக்குத்தான் தாமதமாகி விட்டது. நான் அங்கங்கே இருக்கும் சில்லுண்டி வேலைகளை முடித்து விட்டுக் குளித்த போது மணி பத்து ஆகி விட்டது. சாப்பிட்டு விட்டுச் சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பிய போது மணி சரியாக பதினொன்றே கால்.

அப்பா ரொம்ப நேரமாகத்தான் காத்துக் கிடந்திருக்கிறார். அது குறித்த சலிப்போ, அலுப்போ எதுவுமில்லை அவரிடம். நாமஞ்சேரி பண்ணையைப் பார்க்கப் போக வேண்டும் என்ற ஆசையில் இன்னும் காத்திருக்க நேர்ந்தாலும் சந்தோசமாகத்தான் உட்கார்ந்திருப்பார்.

என்னப்பா கௌம்பலாமா என்ற போது, நான்தான் தயாரா இருக்கேன்னே என்றார். எனக்குச் சுருக்கென்று இருந்தது. இவ்ளோ நேரமா காக்க வைப்பது? இங்கே நேரத்தைப் பார்த்தால் ஆங்கே ஆகியிருக்க வேண்டிய நாலைந்து வேலை ஆகியிருக்காது. நாளைக்கு அது பெரிய லந்தாக இருக்கும். எதற்காக எதை விடுவது? எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது? சம்சாரியின் வாழ்க்கையில் எல்லாம் அப்படி இப்படித்தான். ரொம்ப சுருதி சுத்தம் பார்த்தால், பிறகு எல்லாம் சுருதி பேதமாகி விடும்.

நான் வண்டியை எடுத்தேன். அந்த வண்டி கூட அப்பா வாங்கியதுதான். ரொம்ப பழைய ஆக்டிவா ஹோண்டா வண்டி அது. எப்படி வாழ்க்கைப் போய்க் கொண்டிருக்கிறது என்றால், ஏதோ வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பதில் சொல்வோம் இல்லையா? இங்கு நிஜமாகவே அந்த வண்டி அப்படித்தான் வாழ்க்கையைப் போல ஓடிக் கொண்டிருந்தது.

மெதுவாக ஓடும் போது ஒரு வித தடக் தடக் சத்தம் வந்து வண்டி ஓடுமா என்பது போலிருக்கும். வேகமெடுத்து விட்டால் அப்படி முனகிய வண்டியா இப்படி ஜெகஜோதியாகப் போகிறது என்பது போலிருக்கும்.

அப்பா வண்டியில் ஏறி ரெண்டு பக்கமும் காலைப் போட்டு உட்கார்ந்து கொண்டார். என்னவோ ஒனக்கும் இன்னிக்குத்தான் நேரம் அமைஞ்சிருக்கு. நீயும் என்னத்தான்டா பண்ணுவே? எதாவது வேலைக்குப் போயிருந்தாலாவது பொழைப்பு நல்லா இருந்திருக்கும். விவசாயியா வாழ்றதுன்னா ரொம்ப பாடுதான் போ. அப்பா எப்போதும் இப்படித்தான், எனக்காகப் பரிந்து பரிந்து பேசுவார்.

விவசாயம் பண்ணுற நீயி நாலு பண்ணையங்களப் போயி பாக்கணும்டா. இப்படியா குட்டிப் போட்ட பூனைய மாதிரி வீட்டுக்கும் வயலுக்கும்மா கெடந்து அல்லாடறது? என்னவோ எனக்கும் இதுல ஓர் ஆர்வம். அப்படியே நீயி வந்துப் பார்த்தா ஒனக்கு ஏதாச்சும் கதவு தொறக்காதாங்ற நெனைப்புத்தான். தொறக்கும் தொறக்கும் வா என்று நம்பிக்கையோடு பேசிக் கொண்டு வந்தார்.

அது சரி இங்கேயிருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர் இருக்குமா என்றார்.

தெரியலப்பா. திருப்பூண்டி ரோட்டுலப் போயி சாம்பல்குடிக்குக் கெழக்கால செஞ்ஞாயிறு போற வழியில போகணும்ன்னு சொன்னாங்க. நீங்க சொல்றாப்பல இருபத்து அஞ்சு இருக்கும். கூடவும் இருக்கும் என்றேன்.

கொஞ்சம் காத்தால கௌம்பியிருந்தா வெயிலு போட்டு இப்படி பொசுக்காதுடா என்றார்.

காத்து நல்லா சிலுசிலுன்னு அடிக்குதேப்பா என்றேன்.

அடிக்குதுதான். இருந்தாலும் காத்தால போறப்ப நெலத்துல ஆசையோட எறங்கி வேலையைப் பாக்குற சனங்கள பாக்குற சந்தோசம் இருக்கே. அதுக்காகச் சொன்னேன் என்றார்.

இப்போது யார் காலையில் வயலில் இறங்கி வேலை பார்க்கிறார்கள்? எல்லாவற்றுக்கும் எந்திரம் வந்த பிறகு வயலில் மேம்பார்வைத்தான் பார்க்கிறார்கள். இது அப்பாவுக்கும் தெரியும்தான். இருந்தாலும் பல விசயங்களை அவ்வபோது மறந்து விடுகிறார். சில விசயங்களைச் சம்பந்தம் இல்லாமல் போட்டு இணைத்துக் கொண்டு எதையாவது பேசி விடுகிறார்.

இந்த வருஷம் ஆடிப் பெருக்குக்குத் தண்ணீர் வந்து விட்டாலும் பாசனம் சரியில்லை. ஆற்றில் தண்ணீர் வந்தும் வயலுக்குத் தண்ணீர் வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. வாய்க்காலில் வரும் தண்ணீர் வயலுக்கு வர வேண்டுமே என்று யார் காத்திருக்கிறார்கள்? எல்லாரிடமும் தூக்கிச் செல்லும் அளவுக்கு மோட்டார் பம்புசெட்டு இருக்கிறது. வாய்க்காலில் தண்ணீர் வந்த அடுத்த நிமிஷமே டீசலைப் போட்டு வாய்க்காலிலிருந்து வயலுக்கு பம்புசெட்டு பாசனத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். கவணை போடுவது, மடை திறந்து வைப்பது என்று எந்த வேலையும் இல்லை. இப்படி விவசாயம் மாறும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் நான் கூட நம்பியிருக்க மாட்டேன். நான் மட்டும் ஒழுங்கா என்ன? ஒன்றுக்கு இரண்டாகக் கூட அல்ல, நான்கு அடக்கமான மோட்டார் பம்பு செட்டுகளை வாங்கி வைத்திருக்கிறேன்.

அப்பா இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். காலத்துக்கு ஏத்தாப்புல மாறிகிட்டே இருந்ததாத்தான் விவசாயமும் பண்ண முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார். எப்போதவாது கேட்பார், இப்படி விவசாயம் பண்ணா, இதுல என்னத்தெடா மிச்சம் பண்ணுவே என்று. என்னத்தை மிச்சம் பண்ணுவது?

விவசாயம் பண்ணாமலும் நிலத்தைப் போட முடியாது. கையைக் கடிக்கிறது என்று கை விடவும் முடியாது. செலவைப் பார்த்து செய்யாமல் விட்டால் அவ்வளவுதான். ஒரு வருஷம் தரிசு போட்டு அடுத்த வருஷம் விவசாயம் பண்ண வரலாறு இங்கே சுத்துபட்டு எந்தக் கிராமத்திலும் இல்லவே இல்லை. அது என்ன சோதனையோ, விவசாயம் பண்ணாமல் போட்டால் போட்டதுதான். எப்படியோ விவசாயம் கை நழுவித்தான் போய் விடுகிறது. சாமிக்குத்தம் போல இதுல விவசாயக் குத்தம் ஏதும் இருக்குமோ என்னவோ.

ஆறுமுகத்து அண்ணன் அப்படித்தான் இந்த ஒரு வருஷம் கிடக்கட்டும்டா என்று போட்டார். கட்டாயம் அடுத்த வருஷம் பண்ணுவேன்டா என்றார். அதுவும் சத்தியம் பண்ணாத குறை. அடுத்த வருஷம் பண்ண முடிந்ததா என்றால் அவ்ளோதான். விவசாயத்தை விட்ட ஒரு வருஷம், சோப்பு விற்கப் போகிறேன் என்று கிளம்பினார். டாடா மேஜிக் வண்டியை வாங்கிக் கொண்டு கனிஷ்கா சோப்பு கனிஷ்கா சோப்பு பவுடர், நூறு ரூபாய்தான். நூறு ரூபாய்க்கு ஆறு சோப்பு, நாலு பவுடர் பாக்கெட் என்று குரலைப் பதிவு பண்ணி வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று விற்க ஆரம்பித்தார். என்னவோ அது நேரம் வியாபாரம் சூடு பிடிச்சு விவசாயப் பக்கமே தலை வைத்துப் படுக்கவில்லை. நான்கைந்து வருஷம் தரிசாகவே கிடந்த நிலத்தை கிடைத்த விலைக்குத் தட்டி விட்டு தற்போது கனிஷ்கா சோப்போடு காய்கறி வியாபாரத்தையும் டாடா மேஜிக்கில் வைத்துச் செய்து கொண்டிருக்கிறார். இப்போது மாடி மேல மாடி வைத்து வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்.

மாவூர் வந்து திரும்பியதும், டேய் யப்பா கொஞ்சம் கேரா இருக்குறாப்புல இருக்குதுடா. டீக்கடையில கொஞ்சம் உக்காந்து ஒரு டீயை அடிச்சிட்டுக் கௌம்புலாமா என்றார் அப்பா.

டீக்கடை ஒரமாக வண்டியை ஒதுக்கினேன். இறங்கும் போது கேட்டேன், ஏம்ப்பா வண்டியில உக்காந்துட்டு தூங்கிடலேயே?

அதான் பேசிக்கிட்டுத்தானே வர்றேன். அடிக்கிற காத்துக்குத் தூக்கம் வரத்தான் செய்யுது. வயசும் ஆவுதுல்ல. வண்டியில உக்காந்து தூங்குனா பெறவு என்னாவுறது? வயசான ஆளுன்னு நெனைச்சு சர்க்கரைய கம்மியா போட்டுடப் போறான். சொல்றப்பவே தூக்கலா போடச் சொல்லு, டபரா செட்டுல போடச் சொல்லு என்றார்.

நெறையத்தாம்லா போட்டுருக்கு சர்க்கரைய என்று ஒரு மிடறு ருசி பார்த்து விட்டுக் குடித்தவர் டபரா செட்டைக் கையில் கொடுத்ததும், இன்னொண்ணு சொல்லட்டுமா என்றேன். ஒரு சிரிப்பு சிரித்தார். நான் இன்னொன்று போடச் சொல்லி டபார செட்டில் வாங்கிக் கொடுத்ததும் ஆசையோடு உறிஞ்சினார்.

நான் கடையில் குடிப்பது, சாப்பிடுவது என்ற பழக்கத்தை விட்டு ஒரு மாமாங்கம் ஆகி விட்டது. கடையில் குடிக்கக் கூடாது என்றோ, சாப்பிடக் கூடாது என்றோ விரதம் ஏதுமில்லை என்றாலும் வருகின்ற வருமானத்துக்கு அப்படி இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தால்தான் குடும்பம் ஓடுகிறது. அதற்காக எல்லாரையும் அப்படிப் போட்டு வதைத்து விட முடியுமா?  என்னமோ கடைச் சமாச்சாரங்க நமக்கு ஒத்துக்க மாட்டேங்குதுன்னு ஒரு புளுகுனியை வைத்துக் கொண்டு கடையில் சாப்பிடாமல் இருந்து கொண்டிருக்கிறேன்.

வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஒனக்குத்தாம் கடைச் சமாச்சாரமெல்லாம் ஆவாதுல்ல என்று குறும்புச் சிரிப்பு சிரித்தார் அப்பா. ஒரு வேள, ஒரு நாளு சாப்பிடுறதால்ல கஜானா ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடாதுடா என்றார் அப்பா மைக்கில் சத்தமாகப் பேசுவதைப் போல.

அப்பா என்றேன் நான் கடிந்து கொள்வது போல.

ரோட்டுல போறதுல கேக்குறவன் கேட்டா கேட்டுட்டுப் போறான் போ. பைத்தியக்கார பயலுவோன்னு நெனைச்சாலும் நெனைச்சிட்டுப் போறான் போ என்றார்.

எங்கேயாவது ஒரு விடியல் கிடைத்து விடாதா என்றுதான் நாமஞ்சேரி பண்ணைக்கு அப்பா கேள்விப்பட்டு அழைத்து வருகிறார். இப்படி எத்தனையோ பண்ணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். விடியல்தான் வந்த பாடில்லை. வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அவருக்கு இது போன்ற பயணங்கள் ஒரு விடுவிப்பு. வயசு ஆனாலென்ன ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லாமல் இருக்கும்? எனக்கும் கூட இப்படி வெளியே வந்தால்தான் உண்டு. காலைச் சுற்றிய பாம்பு போல விவசாயம் இருப்பதால் அங்கே இங்கே நகருவது என்பதெல்லாம் நடவாத காரியம்தான்.

ஆத்துல தண்ணி நெறையப் போவுது, வயலெல்லாம் காய்ஞ்சிக் கெடக்குதே என்றார் அப்பா.

வருஷா வருஷம் கட்சிக்காரங்க பொழைக்கணும்ன்னு ஆத்தைத் தோண்டுறதுக்குக் கான்ட்ராக்ட் வுடுறது, எதுக்குத் தோண்டுறோம், ஏன் தோண்டுறோம்ன்னு தெரியாமலே ஆத்தைத் தோண்டுறது, கரையில இருக்குற அத்தனை மர மட்டைகளையும் மொட்டையடிக்கிறது, இப்படி பண்ணிப் பண்ணியே ஆறு ஆழமா போச்சு, வாய்க்காலுங்க மேடாப் போச்சு. பெறவு வாய்க்காலுங்கள ஆழம் பண்ணுறதுன்னு அடுத்த கான்ட்ராக்ட். அதுல வாய்க்காலுங்க ஆழமாப் போச்சு. வயலுங்க மோடாப் போச்சு. இனுமே வயலுங்களத் தோண்டி ஆழம் பண்ணினாத்தான் வயல்ல தண்ணிப் பாயும். நாமளே நம்ம வூட்டுல நாலு மோட்டார் பம்பு செட்டுகள வாங்கி வெச்சில்லையா? அடுத்ததா வயலுங்கள ஆழம் பண்ணப் போறோம்ன்னு அடுத்த கான்ட்ராக்ட் வுட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல என்றேன்.

எல்லாம் சேர்ந்து கூத்துக் கட்டித்தான்டா அடிக்கிறீங்க? என்னத்தெ அமாவாசைக் கூட்டம் போடுறீங்களோ? என்னத்தெ பேசுறீங்களோ? எல்லாத்துக்கும் கவர்மென்டுகாரனெ நம்பிக்கிட்டு இருந்தா காரியம் நடக்குமாடா? ஆத்தைத் தோண்டுறப்ப ஊர்ல நாலு பேரு நின்னு எப்படி என்னா பண்ணணும்ன்னு போயிப் பேசணும். விவசாயம் பண்ணுற எவனாச்சும் ஒத்துமையா போயி எதையாச்சும் கேட்டு இருக்கீங்களா? எங்க காலத்துல எல்லாம் இப்படியா? கலெக்டர் வரைக்கும் மனு போட்டுப் போவோம் தெரியுமா? என்றார்.

எல்லாம் ஒங்க காலத்தோட முடிஞ்சிப் போயிடுச்சுப்பா. இப்போல்லாம் என்னத்தெ மனுவக் கொடுத்தாலும் வாங்கிக் கக்கத்துல செருகிகிட்டு போயிக்கிட்டே இருக்கானுங்க. எத்தனை பேரு ஒண்ணாப் போயி சொன்னாலும் இதாங் இஞ்சினியரு பிளானுங்கறானுவோ. இப்படி தோண்டுனாத்தாம் தம்பி கவர்மென்டு ஆபீசருங்க வந்துப் பார்த்து பணத்தை சேங்சன் பண்ணுவாங்கங்றானுவோ. எல்லாத்துக்கும் ஒரு காரணம். எல்லாத்துக்கு ஒரு பதிலு. எதுவும் பொதுசனம் பிரயோசனப்படுறாப்புல இல்லப்பா. அதுக்கு மேல பேசுனா ஆளுங்கள வெச்சு அடிக்கிறானுவோப்பா. ஒங்க காலம் மாரில்லாம் இல்லப்பா. பெரிய பெரிய ரௌடி பயலுங்கத்தாம்ப்பா கான்ட்ராக்டே எடுக்குறானுவோ. சமயத்துல போலீச வெச்சே அடிக்கவும் வுடுறானுவோப்பா. உசுர கையில பிடிச்சிக்கிட்டு வாழ வேண்டியதா இருக்கு. அவனுவோகிட்டெ போயி மொத்து படுறதுக்குக் கொஞ்சம் காசைப் போட்டோமா, பம்பு செட்ட வாங்கி வெச்சிக்கிட்டோமான்னு பொழைப்ப பாத்துட்டுப் போயிட்டு இருக்கணும்ப்பா என்றேன்.

இப்படியோ போனா பெறவு எல்லாம் அப்படியே போவத்தாம்டா வேணும் என்றார்.

திருப்பூண்டி சாலையிலிருந்து சாம்பல்குடி கிழக்காகப் போகும் கிராமத்துச் சாலையில் வண்டியைத் திருப்பினேன். திருப்பூண்டி முக்கிய சாலை வழியாக வந்த போது வயல்கள் வெடித்துக் கிடக்கிறதென்றால் அதில் சில காரணங்கள் இருக்கின்றன. முக்கிய சாலை அநியாயத்துக்கு உயர்ந்ததன் காரணமாக தரைமட்டம் என்பது தாறுமாறாகி சாலையின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் தண்ணீர் செல்வது பாதிக்கப்பட்டிருந்தது. கிராமத்திற்கு உள்ளே செல்லும் போதும் வயல்கள் அப்படித்தான் இருந்தன. விவசாயிகள் விதை விட்டு நாற்று நடும் முறையிலிருந்து தெளி விதைக்கு மாறியிருந்தனர். தெளித்து வைத்த வயல்களில் நெய்பயிர் நான்கு அங்குலம், ஐந்து அங்கலத்திற்கு வளர்ந்திருந்தது. வயல்கள் ஈரப்பதத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்தன.

நாட்டுல நடக்குறது ரொம்ப அநியாயம்டா. பாவம்டா அந்தப் பயிருங்க. வள்ளலார் பாத்தாருன்னு வெச்சுக்கோ, உசுரையே விட்டுடுவார்டா. தண்ணி இல்லாம வாடலாம்டா. இருந்தும் வாடக் கூடாதுடா. சுத்தமாவே ஒங்க காலத்து நிருவாகம் கொஞ்சம் கூட சரியா இல்லடா. இப்படியெல்லாம் போராடி விவசாயம் பண்ணணும்ன்னா எத்தனைப் பேருடா பண்ணுவாங்க? ரொம்ப தப்புடா நாட்டுல நடக்குது என்றார்.

அது முக்காலடி குழாயாக இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய வெளியேற்றும் குழாய்க்குக் கிட்டதட்ட அது ராட்சச பம்புசெட். அதை வைத்துக் கொண்டு வாய்க்காலிலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் ஒரு விவசாயி. இவன் என்னடா ஒன்னயத் தாண்டி தீவிர விவசாயியா இருப்பாம் போலிருக்கே. இம்மாம் பெரிய பம்பு செட்ட நாம்ம பாத்ததில்லடா என்றார் அப்பா.

நாம்ம நாலு வெச்சிருக்கோம். அவரு நாலுக்கும் சேத்தியா ஒண்ணா வெச்சிருக்கார். நம்ம குஞ்சிதபாதம் வெச்சில்லையா. அவர்ர மாரின்னு நெனைச்சுக்கோங்க என்றேன்.

ரொம்ப தூரம் போயிட்டே இருக்குற மாரி இருக்குடா. கொஞ்சம் விசாரிச்சுக்கோ. பெறவு பெட்ரோல் போச்சுன்னு பொலம்பிக்கிட்டு இருப்பே என்றார் அப்பா.

ஒரு கூரை வீட்டுக்கு முன்னாடி பிளாஸ்டிக் நாற்காலியைப் போட்டு அதில் உட்கார்ந்திருந்தார் ஒரு பெண்மணி. அவருக்குக் கை உடைந்திருக்க வேண்டும். சிம்புகள் வைத்துக் கட்டுப்போடப்பட்டிருந்தது. கூரை வீடு திறந்து கிடந்தது. அதனுள்ளே அவருடைய மகளாக இருக்க வேண்டும். தரையில் உட்கார்ந்து புத்தகத்தைப் பார்த்துப் பார்த்துத் தாளில் எழுதிக் கொண்டிருந்தாள். நாமஞ்சேரிக்கு இப்படித்தானே போகணும் என்றேன்.

இதாஞ் நாமஞ்சேரி. நீங்க யார்ரப் பாக்கணும் என்றார். செஞ்சோலை பண்ணையம்ன்னு சொன்னாங்க என்றேன். பண்ணையமா என்றார் அவர் புரியாதபடிக்கு.

இயற்கை வேளாண்மை பண்ணுறதா சொன்னாங்க. செஞ்சோலை பண்ணையம்ன்னு சொன்னாக்கா தெரியும்னாங்க என்றேன்.

ஓ ஒன்றியத்தோட பண்ணையச் சொல்றீங்களா என்றார்.

அது தெரியலைங்களே. ஆனா இயற்கை விவசாயம் பண்ணுறதா சொன்னாங்க. பேரு முடிகொண்டநாதன்னு சொன்னாங்க என்றேன்.

சரிதாம் போங்க. இப்படியே போனீங்கன்னா ஒரு ரயில்வே கிராசிங் வரும். அதெ தாண்டிப் போனீங்கன்னா எடது பக்கமா ஒரு பாதை பிரியும். அதுல போங்க. அது நேரா போயி அங்கத்தான் நிப்பாட்டும். பண்ணைன்னு சொல்லுங்க புரியும். பண்ணையம்ன்னா யாரு கண்டாக்கா என்றார் அந்தப் பெண்மணி.

ரொம்ப நல்லதுங்க. சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

என்னடா இந்த ஊர்ல ஒரு மனுஷன் இயற்கை விவசாயம் பண்ணுறான்னா அது யாருக்குமே தெரிய மாட்டேங்குது. நாட்டுல ஒண்ணு அப்படி இல்லையா என்ன? என்றார் அப்பா.

இதெல்லாம் நாட்டுல வசதி இருக்குறவன்தாம்பா பண்ணலாம். சாதாரண ஆளு பண்ணான்னா வெச்சுக்கோங்க டவுசரு கழன்றுடும் என்றேன்.

ஏன்டா நீ பண்ணலையா? நீயென்ன வசதியில சேத்தி? என்றார் அப்பா.

நான் பண்ணுறேன்னா விசயம் வேறப்பா. ஒரு வைராக்கியத்துல பண்ணிக்கிட்டு இருக்கேன். அதாங் இப்படி இருக்கேன். நம்மாழ்வர்ரப் பாக்காம இருந்திருந்தேன்னா இந்தப் பக்கம் வந்திருக்க மாட்டேன். அதெல்லாம் இனுமே நடக்காதுப்பா.

ஏன்டா அந்த மனுஷனப் போயி கொறை சொல்றே? ஒனக்கு வேணும்ன்னா பொருளாதாரம் இல்லாம இருக்கலாம். நோயி நொடி இல்லாம குடும்பமே நல்லாத்தான்டா இருக்கே. என்னய எடுத்துக்கோ இந்த வயசுக்கு எப்படி இருக்கேன்? ஒங்க அம்மாவ எடுத்துக்கோ சுகரு உண்டா, பிரசர் உண்டா? செலவு பண்ணுறவனுக்குத்தான்டா காசு வேணும். ஒனக்குத்தான் செலவே இல்லையே. பெறவு ஒனக்கு எதுக்குடா காசு என்றார் அப்பா.

அப்புறம் எதுக்குப்பா இங்கே வரணும்? வீட்டிலேய இருந்திருக்கலாமே என்றேன்.

ஏதோ ரெண்டு காசு வந்தா புள்ளைங்களுக்கு நகை நட்டு வாங்கிச் சேத்து வைக்கலாம் பாரு. நாளைக்கு படிப்புச் செலவு, கல்யாணச் செலவுன்னு வந்தாக்கா என்னத்தெ பண்ணுவே?

இருக்குற நெலத்தை வித்துடுவேம்ப்பா என்றேன்.

வித்துப்புட்டு… சோத்துக்கு என்னத்தெ பண்ணுவே? என்றார் அப்பா இழுவையாக.

சோத்துக்கு ஒரு ஏக்கரா நெலம் போதும். ஏழு ஏக்கரா நெலம் தேவையில்லப்பா என்றேன்.

தெளிவாத்தான் இருக்கே. இருக்குற நெலத்துல இயற்கையா விவசாயம் பண்ணி நாலு பேத்துக்கு நல்லதெ பண்ணலாம்னுத்தான் நானும் யோசிக்கிறேன். நீ வித்தீன்னா வாங்குறவன் ரசாயனத்தைப் போட்டுத்தான் விவசாயம் பண்ணுவான். இப்போ இருக்குற நெலமைக்கு வீட்டு மனையா போட்டாலும் போடுவான். அதாம்டா பாக்குறேன். விக்குறது பெரிய விசயமே இல்ல. ஆனா பின்னாடி நீயே நெனைச்சாலும் கையில லட்சம் லட்சமா பணத்தெ கையில வெச்சிருந்தாலும் நெலத்தை வாங்க முடியாது. அப்படி ஒரு காலம் வரப்  போவுது பாரு என்றார்.

அது வரைக்கும் எப்படி சமாளிக்கிறதுன்னு புரியலையேப்பா என்றேன்.

நாமாஞ்சேரி வந்திருக்கோம். முடிகொண்டநாதரு ஒரு வழியக் காட்டாமலா விடப் போறாரு என்றார் அப்பா.

இப்படி எத்தனையோ பண்ணையத்துக்குப் போயாச்சுப்பா. வழிதான் கெடைக்கல. நாலு மூட்டையும் அஞ்சு மூட்டையும் வெளைஞ்சா கிலோ அரிசிய நூறு ரூபாய்க்கு விக்காம எப்படிக் கொறைச்சு விக்க முடியும்? என்றேன்.

கடையில நல்ல அரிசி அறுவது ரூபாய்க்கு விக்குறப்போ எப்படிடா நூறு ரூபாய் கொடுத்து வாங்குவான்?

நூறு ரூபாய்க்குக் கம்மியா வித்தா கட்டுபடி ஆகாதுப்பா? கூடுதலா லாவம் வேணாம். போட்ட காசு கைக்கு வந்ததாத்தான் அடுத்தடுத்த வருஷம் உழவு பண்ண, களை எடுக்க, அறுவடை பண்ண காசு இருக்கும் என்றேன்.

சரி பாக்கலாம் வா என்றார் அப்பா.

நாமஞ்சேரி பண்ணையத்துக்கு முன்னாடியே பெரிய பெயர்ப்பலகை வைத்திருந்தார்கள். நாதன் இயற்கை வேளாண் பண்ணையம் என்ற பெரிய எழுத்துகள் வரவேற்றன.

நாங்கள் போன நேரம் முடிகொண்டநாதர் பண்ணையத்தில் இல்லை. அவருக்கு நான்கைந்து இடங்களில் பண்ணையம் இருந்தது. தவிரவும் அவருடைய பிள்ளைகள் பெங்களூரு, ஓசூர் என்று பெரிய வேலைகளில் இருந்தார்கள். பிரதான அரசியல் கட்சியில் ஒன்றிய பொறுப்பாளராக இருந்தார். அவரைப் பார்ப்பது சாமானியம் இல்லை என்பது புரிந்தது. அங்கிருந்த வேலையாட்கள் பண்ணையத்தைச் சுற்றிக் காண்பிப்பதில் எந்தக் குறையையும் வைக்கவில்லை.

இருபது அடிக்கு ஆழமான குளங்களை அங்கங்கே வெட்டி வைத்திருந்தார். காட்டுயாணம், ஆத்தூர் கிச்சடி சம்பா, பூங்கார், மாப்பிள்ளை சம்பா என்று பயிர் பண்ணியிருந்தார். இதெல்லாம் சிறிய அளவில். பெரிய அளவில் கோ 55 என்கிற ரகத்தைப் போட்டிருந்தார். அந்த நிலத்தைப் பார்த்ததுமே புரிந்தது அவர் களைக்கொல்லி, ரசாயன உரம் வரை அத்தனையையும் அதில் பயன்படுத்தியிருப்பது. அப்பாவும் அதைப் பார்த்தார். நான் என்ன கேட்கப் போகிறேன் என்பது அவருக்குப் புரிந்து விட்டது.

நான் பண்ணையத்து வேலையாட்களைப் பார்த்துக் கேட்டேன், கோ 55 பயிரிட்டிருந்ததைப் பார்த்து விட்டு, ஏன் இதை இயற்கை முறையில பண்ணலையா என்று.

அந்தக் கதைய ஏன் சார் கேக்குறீங்க? போன வருஷம் கருப்புக் கவுணியப் போட்டு பருவம் தப்புச்சோ, கணக்கு தப்புச்சோ எது தப்புச்சோன்னு தெரியல. பதினைஞ்சு ஏக்கராவுல போட்டு பதினைஞ்சு ஏக்கராவுலயும் கதிர் வராமப் போயி டிராக்டர்ர விட்டு அழிக்குறாப்புல போயிடுச்சு. அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ நஷ்டம்ன்னு சொல்லுவாரு ஒன்றியம். அதான் இந்த வருஷம் செஞ்ஞாயிறு வேளாண் விரிவாக்க மையத்துலேந்து இந்த ரகத்தை வௌவிச்சுக் கேட்டாங்க. அதாங் செஞ்சுக் கொடுக்குறாப்புல. போன வருஷம் டிராக்டர்ர விட்டு அடிக்கிறப்போ அவுங்களும் வந்துப் பார்த்தாங்க. ரொம்ப நஷ்டப்பட்டுப் போயிட்டாருன்னு இதெ கொடுத்திருக்காங்க என்றனர்.

பண்ணையத்தை நன்றாகத்தான் வைத்திருந்தார் முடிகொண்ட நாதர். ஒரு பக்கம் பல வகை மரங்களைக் கொண்ட தோப்பு இருந்தது. பழங்காலத்துப் பண்ணை வீட்டைச் சுற்றி நான்கு மாடுகள் அவற்றின் கன்றுகள் இருந்தன. ஏகப்பட்ட கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன. சாண எரிவாயு அடுப்பு, எருக்குழி எல்லாம் அருமையாகத்தான் வைத்திருந்தார். எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்.

இதுக்கெல்லாம் ரொம்ப செலவு ஆவுமே என்றேன். அரசியல்ல ஒரு பக்கம் வருது. இன்னொரு பக்கம் இப்படிப் போவுது. புள்ளைங்க எல்லாம் பெரிய பெரிய வேலையில இருக்குதுங்க. பணம் அவருக்கு ஒரு பெரிய விசயம் இல்ல. ஏதோ பொழுதுபோக்கா இதெ பண்ணிக்கிட்டு இருக்காருங்க. ஊருல இவரு ஒருத்தர்தான் இப்படி. வேற யாரும் இந்தப் பக்கம் எட்டிப் பாக்குறதில்ல.

ஐயாவ்வ இன்னிக்குப் பாக்க முடியாதா என்றேன்.

கொஞ்சம் கஷ்டந்தான். எப்போயும் சுத்துப் பயணத்துலத்தான் இருப்பாங்க. நான் வேணும்னா போன் போட்டுத் தரட்டா என்றார் பணியாட்களில் ஒருவர்.

சரி போடுங்க என்றார் அப்பா.

முடிகொண்டநாதர் பேசினார். விவரங்களை ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டார்.

ரொம்ப சந்தோஷ்ம்ன்னேன். பாருங்க. பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமிலம் இன்ன என்ன வேணுமோ நம்மகிட்டெ எல்லாம் கொறைஞ்ச விலையில வாங்கிக்கலாம். ஒங்கள மாரி இளைஞர்களெல்லாம் இயற்கை விவசாயத்துக்கு வந்தாத்தான் நாடு உருப்படும்னேன். வேற என்னத்தெ எங்கிட்டெ எதிர்பாக்குறீங்க? வெத நெல்லு? டிரெய்னிங்? என்னத்தெ வேணும்? என்றார்.

நானும் இயற்கை முறையிலத்தான் பண்ணுறேங்கய்யா. நான் தயார் பண்ணுற நெல்லை வித்துத் தர முடியுமா? என்று நான் நேரடியாகவே விசயத்துக்கு வந்தேன்.

அது வந்து தம்பி, அதே நீங்கத்தான் பாக்கணும். நீங்க எப்படி வெளைவிக்குறீங்கன்னு எனக்குத் தெரியாது. இயற்கை விவசாயம்ன்னு சொல்லிட்டு நீங்க ரசாயனத்தைப் போட்டு வெளைவிச்சுக் கொடுக்கலாம். அதெ நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஒருவேளை நீங்க நேர்மையாவும் பண்ணலாம். இங்கேயிருந்து நீங்க இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருளை வாங்கிக்கலாம். வெதை நெல்லை வாங்கிக்கலாம். நான் வித்துல்லாம் தர முடியாது. அதுக்கு வாய்ப்பு இல்லீங்க ராஜா என்றார்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. சரிங்க நாங்க கௌம்புறோம் என்றேன்.

தம்பி இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. இருந்து ஆத்தூர் கிச்சடி சம்பாவுல பண்ணுன சாப்பாட்டைச் சாப்பிட்டுப் போங்க. பெறவு நம்ம பாரம்பரிய நெல்லை விட மாட்டீங்க என்றார்.

ரொம்ப நன்றிங்க. எங்க வூட்டுல மூணு வேளை சாப்பாடே அந்த நெல்லுதாங்க. நாங்க கௌம்புறோம் என்றேன்.

பரவாயில்ல தம்பி. அடிக்கடி வந்துகிட்டுப் போயிட்டு இருங்க என்றார்.

நான் போனைக் கொடுத்து விட்டுக் கிளம்ப ஆயத்தமானேன்.

என்னப்பா இங்கேயும் ஒனக்கு விடியல் கெடைக்கலையா என்றார் அப்பா.

உங்களுக்குப் பண்ணையத்தைப் பார்த்த திருப்தி கெடைச்சுதுல்ல. அது போதும்பா என்றேன் நான்.

என்னத்தெ திருப்தி? களைக்கொல்லிய அடிச்சு வெச்சிருக்கான் பாவி. வௌங்குவானா அவன்? பேரு மட்டும் என்னவோ இயற்கை வேளாண் பண்ணையம்ன்னு எழுதி வெச்சருக்கான். இயற்கைன்னா அவனுக்கு என்னான்னு தெரியுமா என்று பொரிந்து தள்ளினார்.

இப்படித்தாம்பா நாட்டுல இயற்கை வெவசாயம்ங்றது நடக்குது. கேட்டாக்கா அங்கக வேளாண்மைம்பாங்க. ஆர்கானிக்ங்ற பேர்ல இவனுங்க பண்ணுறது இயற்கை வேளாண்மையே கிடையாதுப்பா. நாம்ம பண்ணுறதுதான் இயற்கை வேளாண்மை. இயற்கையா விளைவிச்சுக் கொடுக்குறதெ அப்படியே ஏத்துக்கிறோம். வருமானம் இல்லாட்டியும் நெறைவு இருக்குப்பா. அதெ ஏம்ப்பா காசுக்குக் கொடுத்துக்கிட்டு. இயற்கையா வெளைவிச்சு சாப்புடணும்ன்னு நெனைச்சா அவனவனும் நெலத்தை வாங்கி விவசாயத்தைப் பண்ணிக்கிடட்டும்ப்பா. நாம்ம ஒண்ணும் இவனுங்களுக்கு இயற்கையா வெளைவிச்சு கொடுக்குணும்ங்ற அவசியம் இல்லப்பா என்றேன்.

பெறவு என்ன பண்ணுறதா உத்தேசம் என்றார்.

இது வரைக்கு என்ன பண்ணிகிட்டு இருக்குறோமா அதுதாம்ப்பா. உழவு பாக்குறவனும் களை எடுக்குற சனங்களும் அறுவடை பண்ணுறவனும் சோலி முடிஞ்சதும் தானியமா எடுத்துக்குறாங்க இல்ல. அப்படியே எடுத்துக்கிடட்டும். காசு செலவு பண்ணி என்னால பண்ண முடியாது. ஆட்டுக்கிடை போடுற கீதாரியும்தான் இந்த அரிசிக்காக எத்தனெ நாளு வேணாம்னாலும் போட்டுத் தர்றாரு. பெறவு என்னப்பா? வேலை பாக்குற அத்தனெ பேரும் இந்த அரிசிக்கு அப்படி ஏங்குறாங்க. வேலையப் பாக்கட்டும். அவங்கவங்க கூலிய அவங்கவங்க பிரிச்சுக்கிடட்டும். நமக்குக் கிடைக்குறது கெடைக்கட்டும். பாத்துப்போம்ப்பா என்றேன்.

செலவுக்கு என்னத்தெ பண்ணுவே?

அதாங் ஒங்களுக்கும் அம்மாவுக்கும் முதியோர் உதவித்தொகை, எம் பொண்டாட்டிக்கு மகளிர் உரிமைத் தொகை, இருக்கவே இருக்கு நூறு நாளு வேலைச் சம்பளம். உளுந்து பயிறுல கெடைக்குறது மிச்சம்தானேப்பா. வெதை நெல்லு கையில இருக்கு. அதைத் தாண்டி செலவுக்கென்னப்பா? நான் என்ன புள்ளைங்கள பிரைவேட்டுப் பள்ளிக்கூடத்துலயா படிக்க வைக்குறேன் செலவுக்குப் பத்தாம போக? அரசாங்க பள்ளிக்கூடத்துலத்தாத்தானே படிக்க வைக்கிறேன். போதும்ப்பா. இனுமே என்னைய இந்த மாதிரி பண்ணையப் பாக்க மட்டும் கூப்புடாதீங்கப்பா. பெட்ரோல் காசு இருநூறு ரூவாய் தண்டம்ப்பா. இப்போ இருக்குற நெலமைக்கு எனக்கு இருநூறு ரூவா காசுங்றது பெரிய காசுப்பா என்றேன்.

நீ நல்லா வருவடா மவனே என்றுஅப்பா கட்டிக் கொண்டார். அவர் அழுவது என் சட்டையை நனைத்து மார்பைத் தொட்ட கண்ணீர் துளிகளின் ஈரத்தில் தெரிந்தது. அப்பா எனக்காக எப்போதும் ரொம்ப பரிந்துதான் போகிறார்.

*****