புத்தகக் கண்காட்சிக்கு வந்தும்
புத்தகங்களை வாங்குவதை விட பஜ்ஜி, போன்டா, சமோசா, பப்ஸ், பர்க்கர் என வாங்குபவர்களைப்
பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?
அறிவுப்பசியை
எப்போதும் வயிற்றுப் பசி ஜெயித்து விடும் என்றுதான் தோன்றுகிறது. அத்துடன்,
“பசிக்கு உணவில்லாத போது சிறிது
படிப்புக்கும் ஈயப் படும்”
குறளை
மாற்றி எழுதவும் தோன்றுகிறது.
*****
ஆன்லைன், கிண்டில், பிடிஎப், ஆப்
என்று எவ்வளவோ வந்துவிட்ட பிறகும், இன்னும் புத்தகக் கண்காட்சி என்பது தேவையா?
ஓடிடி
வந்த பிறகு திரையரங்கங்கள் இல்லையா! ஸ்விக்கி, சொமாட்டோ வந்த பிறகும் வீட்டில் சமைப்பது
இல்லையா! ஆன்லைனில் ஆயிரம் படிப்புகள் வந்தாலும் பள்ளிக்கூடம் சென்ற படிக்கவில்லையா!
எத்தனை பாராசிட்டாமல்கள் வந்தாலும் நிலவேம்புக் குடிநீர் இல்லையா! ஆயிரம் தொலைக்காட்சித்
தொடர்கள் வந்தாலும் இன்னும் அக்கம் பக்கத்துக் கதைகளைப் புரளி பேசுவது இல்லையா! ஆக,
எவ்வளவு வந்தாலும், செல்பி எடுப்பதற்காகவே புத்தகங்கள் வாங்கினாலும் சரி, வாங்கி வைத்த
புத்தகங்களைப் படிக்காமல் வீட்டில் அடுக்கி வைத்து ஆன்லைனில் படித்தாலும் சரி, இந்த
ஆண்டு பத்து புத்தங்களாகவது படிப்பேன் என்று சபதம் எடுத்து அது நிறைவேறாமல் போனாலும்
சரி, புத்தகக் கண்காட்சி என்பது எல்லா காலத்துககும் தேவைதான்.
*****
கத்திரிக்கோல் எத்தனையாவது வகை
நெம்புகோல் தெரியுமா?
அரசியல்
ஆதாரப்புள்ளி மையத்தில் இருந்தால் அது சென்சார் போர்டின் முதல் வகை நெம்புகோல். மற்றபடி,
அது இயல்பாகவே முதல் வகை நெம்புகோல்தான் என்பதை அறியும் போது அது அறிவியல் அதிசயமாகத்
தெரிகிறதா அல்லது அரசியல் அதிசயமாகத் தெரிகிறது என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு
விடுவதுதான் நல்லது இல்லையா?
*****
இன்னும் எத்தனைத் தேர்தலில்தான்
ஓட்டுக்கு ஐநூறு, ஆயிரம் என்றே கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். இவர்கள் அப்டேட் ஆகவே
மாட்டார்களா?
விரைவில்
ஐநூறு டாலர், ஆயிரம் டாலர் என்று அப்டேட் ஆகி, வெகுவிரைவிலேயே ஐநூறு பிட்காய்ன், ஆயிரம்
பிட்காய்ன் என்று அப்டேட் ஆகியே தீருவார்கள். இதில் ஒரு விசயம் பாருங்கள்! ஆம் நீங்கள்
நினைப்பது சரிதான், பட்டுவாடா சுலபம் பாருங்கள்.
*****
தமிழகத்தில் தேனாறும் பாலாறும்
ஓட என்ன செய்ய வேண்டும்?
அந்த
அளவுக்குத் தமிழகத்தில் தேனையோ, பாலையோ உற்பத்தி செய்ய முடியாது என்பது முதல் விசயம்.
அப்படியே உற்பத்தி செய்தாலும் பாலாறு ஓடுவது கூட சாத்தியம், தேனாறு ஓடுவது சாத்தியமில்லை,
ஏனென்றால் தேனின் பாகுத்தன்மை அதிகம் என்பதால் பாலைப் போல ஓட வாய்ப்பில்லை என்பது இரண்டாவது
விசயம். ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய் விற்கும் தமிழகத்தில் பாலாறு ஓடினால் பாலின்
நிலைமை என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டியிருப்பது மூன்றாவதுவிசயம். சரிதான் ஆகிற செலவு
ஆகட்டும் என்று பாலாறை ஓட விட்டால், இங்கிருக்கும் ஆறுகளில் அடைத்திருக்கும் பிளாஸ்டிக்,
பாலிதீன் கழிவுகள் பாலை ஓட விடுமா என்பது நான்காவது விசயம். இவை எல்லாவற்றையும் கடந்து
பாலாறு ஓடினால் பால் விற்பனையாளர்களின் கதி அதோ கதியாகும் என்பது ஐந்தாவது விசயம்.
இப்போது ஐந்து விசயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு சொல்லுங்கள், தமிழத்தில் பாலாறும்
தேனாறும் ஓட வேண்டுமா, ஒழுங்காகக் காவிரியில் கர்நாடகம் தரும் தண்ணீர் ஓடினால் மட்டும்
போதுமா என்று?
*****
