Showing posts with label Your Wellness. Show all posts
Showing posts with label Your Wellness. Show all posts

7 May 2026

நோய் நாடி… நோய் முதல் நாடி…

நோய் நாடி… நோய் முதல் நாடி…

அறிவியல் வளர வளர நோய்கள் பற்றிய அறிவு மக்களுக்கு ஜாஸ்தியாகிவிட்டது. முன்னெல்லாம் கொத்துக் கொத்தாக செத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது புதுப் புது மருந்துகள், தடுப்பூசிகள் என மருத்துவத் தொழில்நுட்பம் வந்து நம்மை சாக விடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

விளைவு?

மனிதனின் சராசரி ஆயுட்காலம் எகிறிக்கொண்டே போகிறது.

கடந்த நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை நாற்பது, ஐம்பது வயதிலேயே கிளம்பிப் போய்க்கொண்டிருந்த மனிதன், இப்போது 72 வயது வரைக்கும் விக்கெட் விழாமல் தாக்குப் பிடிக்கிறான். வெறும் உடம்பை மட்டும் பார்த்துக் கொண்டால் போதாது, மனசையும் கொஞ்சம் சர்வீஸ் செய்ய வேண்டும் என்கிறது முதுமை பற்றிய ஆய்வுகள்.

நவீன மருத்துவ ஆய்வுகள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. நீ நன்றாகச் சாப்பிடுவது, எக்சர்சைஸ் செய்வது, தம் அடிக்காமல் இருப்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நீ எவ்வளவு காலம் ஓடுவாய் என்பதை உன்னுடைய ரத்தத்தில் ஓடும் மரபணுக்கள் தான் முடிவு செய்கின்றன என்கிறது. அதாவது, உன் தாத்தா-பாட்டி கொடுத்த கிப்ட் அது என்கிறது.

மனிதன் செத்துப் போவதற்கு வெளிக்காரணிகள், உள்காரணிகள் என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. மனிதர்கள் மேலே போவது எந்த வழியில்வேண்டுமானாலும் நடக்கலாம்.

விபத்துகளில் சாகாமல் தப்பிப்பவர்களில் 55 சதவீத பேர், அவர்கள் உடம்பில் இருக்கும் அந்த ஜீன்களால் தான் நீண்ட நாள் வாழ்கிறார்களாம். டென்மார்க், ஸ்வீடன் பக்கம் போய் ஆராய்ச்சி பண்ணியதில் இது கன்பார்ம் ஆகியிருக்கிறது.

எண்பது வயதைத் தாண்டியும், இருபது வயதுப் பையன்களை விட சுறுசுறுப்பாக, ஷார்ப்பாக இருப்பவர்களை சூப்பர் ஏஜர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களுடைய மூளையில் ஹிப்போகேம்பஸ் என்ற பகுதி, ஆற்றுத் தண்ணீர் மாதிரி புதுப் புது நியூரான்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறதாம். சும்மா சொல்லக்கூடாது, இவர்களுடைய மூளை ஒரு நெகிழ்வுத் தன்மையோடு அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது.

இந்த சூப்பர் பவர் உங்களுக்கும் வேண்டும் என்றால், நல்ல தூக்கம் முக்கியம், உடற்பயிற்சி அவசியம், சத்தான உணவு வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.

நம் ஊர் பெரிய மனுஷர்கள் சொல்வது போல, மனுஷன் உழைச்சுச் சாகுறது இல்ல, கவலையாலயும் மன உளைச்சலாலயும் தான் சாகுறான் என்பது நவீன ஆய்வுகள் மூலமாக உண்மை என வெளிச்சமாகியிருக்கிறது.

மனம் உடம்புக்கு அடிமையாக இருக்கிறது. நீங்கள் எதை நினைக்கிறீர்களோ, அதுவாகவே உங்கள் உடம்பு மாறுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் பொறாமை, கோபம், ஸ்ட்ரெஸ் எல்லாம் அழைக்காத விருந்தாளியாக வந்து நம்மை அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், திடீர் மரணங்கள் சாதாரணமாகிவிட்டன.

ஆக, நோயில்லாத வாழ்க்கை என்பது இப்போதைக்கு ஒரு அழகான ஸ்டேட்டஸ் மட்டும்தான். ஆனால், அந்த கனவை நோக்கித்தான் நம் மரபணுக்கள் போராடிக்கொண்டிருக்கின்றன.

*****