29 Feb 2020

நடைமுறைச் சடவுகள்

செய்யு - 373

            பொண்ணு பாக்குறது, மாப்பிள்ள பாக்குறதுன்னு அதுக்கான முறைக ரொம்பவே மாறிட்டு. மின்ன மாதிரியா விஷேசத்துல, சாவுல, கருமாதியில சந்திக்கிறப்ப இந்த வூட்டுல கல்யாண வயசுல பொண்ணு இருக்கு, அந்த வூட்டுல மாப்புள்ள இருக்காம்னு காதுக்குக் காது சேதி போயி, விசாரிச்சிக்கிட்டு வந்து பொண்ணு பாக்குறதும், மாப்புள்ள பாக்குறதும் மாறிப் போச்சு. எந்தெந்த வூட்டுல பொண்ணு, புள்ளைக இருக்குன்னு பெரிசுகளுக்கு நல்லாவே ஞாபவத்துல இருக்கும் அப்போ. கல்யாண வயசு வந்துப்புட்டா, இந்தப் பொண்ணுக்கு ஏத்த மாதிரி அந்த ஊர்ல ஒரு பையேம் இருப்பானே, அந்தப் பையனுக்கு ஏத்தாப்புல இந்த ஊர்ல ஒரு பொண்ணு இருப்பாளேன்னு புட்டு புட்டு வைக்கும் அந்தப் பெரிசுங்க. அங்ஙனப் போயி பாத்தாக்க அந்த மேனிக்கி சரியா அமைஞ்சிப் போயிடும்.
            இப்போ பொண்ணு பாக்கணுமா, மாப்புள்ள பாக்குணுமா இதுக்குன்னே தரகுக்கார ஆளுங்க அந்தந்த வகையறாவுல உண்டாயிட்டாங்க. அவுங்க இதெ ஒரு யேவாரிக் கணக்கா நின்னு செய்யுறாங்க. அவுங்களுக்குத் திருமண அமைப்பாளருன்னு பேரும் உண்டாயிப் போச்சு. பொண்ணுக்கேத்த மாப்புள்ள சாதகம் வேணுமா, மாப்பிள்ளைக்கேத்த பொண்ணோட சாதகம் வேணுமா அதுக்கு ஒரு ரேட்டு, பொண்ணு வூட்டுலயும், மாப்புள வூட்டுலயும் பேசி வுடணுமா அதுக்கு ஒரு ரேட்டு, கலியாணம் நிச்சயம் ஆயி பண்ணுற சீர் சனத்தியெ கணக்கு வெச்சி அதுக்கு ஒரு ரேட்டுன்னு வாங்கிக்கிறாங்க அந்தத் தரகுக்கார ஆளுங்க. சொந்தத்துலயோ, சுத்துப்பட்டுலயோ அப்பிடி பொண்ணோ, மாப்பிள்ளையோ அமையுறாப்புல இருந்தா அவுங்களோட அவசியம் இல்லே. இப்போ அந்த மாதிரிக்கி யாரும் ‍அமைச்சுக்கிறதும் இல்ல.
            பொதுவா பொண்ணுன்னா கவர்மெண்டு மாப்புள்ளையா எதிர்பாக்குறாங்க. கவர்மெண்டு வேலை பாக்கற மாப்புள்ளைன்னா கவர்மெண்டு வேலை பாக்குற பொண்ணா எதிர்பாக்குறாங்க. அப்பிடி சொந்தத்துலயோ, சுத்துப்பட்டுலயோ அமையுறது ரொம்ப அபூர்வம். அப்பிடி அமைஞ்சிட்டா தரகுக்கார ஆளுங்களோட தேவையில்ல. அப்பிடி அமைச்சிக்கத்தாம் தரகுக்கார ஆளுங்களோட அவசியம் உண்டாவுது. அவுங்களுக்கு கவர்மெண்டு வேலை பாக்குற மாப்பிள்ளையோட சாதகமோ, பொண்ணோட சாதகமோ கெடைச்சிட்டா ஜாக்பாட் அடிச்ச மாதிரித்தாம். எப்பிடியும் அதுக்கு ஏத்த மாதிரிக்கி அலைஞ்சி திரிஞ்சி ஜோடிய சேத்து வெச்சிட்டுத்தாம் மறுவேல பாப்பாங்க.
            இந்தத் தரகுக்கார ஆளுகளத் தாண்டி தினசரி பேப்பர்ல மணமகன் தேவைன்னோ, மணமகள் தேவைன்னோ விளம்பரம் கொடுக்குற அளவுக்கு இப்போ நெலமை வந்து, டி.வி பொட்டி வரைக்கும் போயி இந்த மாதிரிக்கி இன்ன மாதிரிக்கிப் பொண்ணு வேணும்னோ, மாப்புள்ள வேணும்னோ சொல்லிக் கேக்குற அளவுக்கு நெலமை போயிருக்கிறது வேற கதெ. கல்யாண தரகு ஆளுகளோட தயவுத் தாண்டி அதோட அத்தனெ நெலமைகளையும் இந்த வகையறாவுல மொதல்ல முயற்சிப் பண்ணிப் பாத்தவரு லாலு மாமாதாம். அவரு ஒரு விசயத்தெ முடிக்கிறதுக்கு பத்து வெதமான முறைக இருக்குன்னா, பன்னெண்டு வெதமான முறைகள்ல மல்லுகட்டிப் பாப்பாரு. அதென்ன இருக்குறதே பத்து மொறைகள்ங்றப்போ, பன்னெண்டு வெதமான மொறைகள்ன்னா, மிச்ச ரண்டு முறைகள் அவரா கண்டுபிடிச்சதா இருக்கும். அப்பிடி ஒரு ஆளு அவரு.
            சுப்பு வாத்தியாரு சொந்தப் பந்தத்துல மொதல்ல விசாரிச்சுப் பாத்தாரு. மவன் கவர்மெண்டு சம்பளத்துக்கு வாத்தியார்ரா இருக்காங்றது தெரிஞ்சி நான் நீயின்னு பொண்ணு கொடுக்க தயாரா இருந்துச்சுங்க. அப்பிடி விசாரிச்சிக்கிட்டு வந்த பொண்ணுகளோட படிப்பும் நெறையத்தாம் இருந்துச்சுங்க. அது சரி! இப்போ படிக்காத பொண்ணுங்களோட சாதகமே இல்லேங்ற அளவுக்கு ஒரு மாத்தம்தாம். பசங்களுக்குத்தாம் அந்த அளவுக்குப் படிப்பு இல்லாம தவிக்குறாப்புல இருக்குறதால, படிச்சி வேலையிலயும் இருக்குறதால மவனுக்குப் பொண்ண பிடிச்சிக் கட்டி வைக்குறதல சுப்பு வாத்தியாருக்கு செரமம் அதிகமா இல்ல. சொந்தப் பந்தத்துலேந்து சாதகம் வந்து குவிஞ்சிக் கெடக்குது. பவுனு, சீர் சனத்தியும் கேக்குறதெ விட நெறைய செய்யுறதா வேற சொல்றாங்க. சுப்பு வாத்தியாரோட மனகணக்கு வேற வெதமா இருந்துச்சு.
            "நாம்மத்தாம் ஒத்த ஆள சம்பாதிச்சி கடன ஒடன வாங்கி ரொம்ப செரமப்பட்டு வாழுறாப்புல ஆயிடுச்சி. ஆயுசுக்கும் கடனாப் போயி மவ்வேன் தலைபட்டு சரி பண்ணுறாப்புல போயிடுச்சி. மவனுக்கும் அந்த நெலையா வாரணும்? மவனுக்காவது படிச்சி வேலையில இருக்குற வாத்திச்சிப் பொண்ணா கட்டி வெச்சிப்புடணும். ரண்டு சம்பாத்தியமா இருந்தா அவ்வேம் வாழ்க்கெ நல்ல வெதமா ஓடும். இப்போ அதாம் அங்கங்கயும் நடக்குது. வாத்தியாரெல்லாம் வாத்திச்சிப் பொண்ணா கல்யாணத்தெ பண்றாம், வாத்திச்சிப் பொண்ணுக எல்லாம் வாத்தியாரு மாப்புள்ளையா கல்யாணத்தெ பண்ணுதுங்க. ஊரு ஒலகமே அந்தத் தெசையில ஓடுறப்போ நாமளும் நம்ம மவனுக்கு அப்பிடித்தாம் பண்ணி வைக்கணும்"ன்னு மனசுக்குள்ள ஒரு கணக்கெ போட்டுக்கிட்டாரு.

            கொத்தூரு சோசியரு, நாட்டியத்தாங்குடி சோசியரு சொன்ன வகையில பொண்ணு தஞ்சாரூ பக்கமோ, கும்பகோணத்துப் பக்கமா இருக்குறங்றதால அந்தத் தெசையிலத்தாம் போயி பொண்ண தேடணும்னு முடிவெ பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. மின்னாடி காலத்துல சாதகப் பொருத்தத்துக்காக நோட்டெ வெச்சிப் பாப்பாங்க. இப்போல்லாம் ஒண்ணுக்கு நாலு பொண்ணோ, மாப்புள்ளையோ பாக்குறதால சாதகத்தெ காயிதத்துல கையால எழுதி அதெ நகலு பண்ணி நாலு எடத்துக்கு அனுப்புறாப்புல இருக்கு. அதுலயும் அது மாறி கையால எல்லாம் எழுதப்படாது சாதகத்தன்னு, அதெ கம்ப்யூட்டருல கொடுத்து டைப்படிச்சி அச்செடுத்து அதெ நகலு பண்ணி, அத்தோட மாப்புள்ளையோ, பொண்ணோ அதோட போட்டோவ ஒண்ணு எடுத்துல்லா இணைச்சிக் கொடுக்குறாங்க.
            வடவாதியில இதுக்குன்னே நாலஞ்சு ஸ்டூடியோ கடைக இருக்குங்க. அந்தக் கடைக்காரவுகளே போட்டோவையும் பிடிச்சி, சாதகத்‍தையும் டைப்படிச்சி, அதெ பத்து பாஞ்சு நகலையும் பண்ணி கையில கொடுத்து காசிய அலுங்காம நலுங்கமா வாங்கிக்கிடுறாங்க. பையனுக்கோ, பொண்ணுக்கோ இத்து முக்கியமான மங்கல காரியமா இருக்குறதால கடன உடன சொல்லாம கேக்குற காசிய கொடுத்து இந்த வேலைய முடிச்சிக்கிறதால ஸ்டூடியோ கடைக இந்த வேலைய மட்டும் எந்த வேல எப்பிடி கெடந்தாலும், அதெ போட்டுப்புட்டு மொத வேலையா முடிச்சிக் கொடுத்துடுறாங்க. அப்பிடி வேலைய முடிச்சிக் கொடுக்குறதுல வடவாதியில கார்த்தி ஸ்டூடியோ பிரசித்தம்.
            ஒரு நாளு மவ்வேன் விகடுகிட்ட அவசர அவரமா, நல்லா அலங்காரமா பண்ணிட்டு வாடான்னு கெளப்பிக்கிட்டு டிவியெஸ்ல பிடிச்சிப் போட்டுக் கொண்டு போனாரு சுப்பு வாத்தியாரு. வண்டி டர் டர்ன்னு போயிட்டு இருக்கு ரண்டு பேரையும் இழுத்துக்கிட்டு. இவரு இப்பிடிப் பண்றது விகடுவுக்குச் சுத்தமா பிடிக்கல. வண்டியில போறப்பவே ரண்டு பேருக்கும் பேச்சு வளருது.
            "நீஞ்ஞளா பாத்து எந்தப் பொண்ண காட்டி வுட்டாலும் தாலியக் கட்டி வுடுறேம்! இப்பிடில்லாம் பண்ண வாணாமே!"ங்றாம் விகடு.
            "ஆமாம்டா! ஒம்மட மூஞ்சியையும் மொகரையும் பாக்காம, சாதகத்துல பொருத்தத்தப் பாக்காம பொண்ண தூக்கிக் கொடுப்பாம் நெனைச்சிக்கிட்டு இரு. நாம்ம சரிதாம்னு பொண்ண கட்டிக்கிறதுக்குச் சம்மதத்தெ சொன்னாலும், பொண்ணக் கொடுக்குறவேம் அம்மாம் சீக்கிரத்துக்குச் சம்மதிக்க மாட்டாம். அவ்வேம் ஆயிரம் வெதமா இதெல்லாம் பாத்து, விசாரிச்சித்தாம் கொடுப்பாம். பொண்ணு கட்டுறதுன்னா சாமானியம்னு நெனைச்சிக்கிட்டீயால்லா! ஒலகம் கெடக்குற கெடப்புத் தெரியாம பேசுறாம்! நீயி பாட்டுக்கு பேயாம யிரு. பொண்ண பாத்துக் கட்டி வைக்கிறது எஞ்ஞ பொறுப்பு. நீயி பாட்டுக்கு நகெ வாணாம், நட்டு வாணாம், சீரு சனத்தி வாணாம்னு ஒளறிக்கிட்டுக் கெடந்தெ மாப்புள்ள பயலுக்கு ஏத்தோ கோளாறு! அத்தாம் இப்பிடிக்கின்னு ஒரு கணக்கெ போட்டு வெச்சி ஊரு ஒலகத்துல பரப்பிப்புட்டானுவோன்னு வெச்சிக்க பெறவு பொண்ணு கெடைக்கிறது கஷ்டங் ஆங் பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ண பெரிய எடத்துலல்லாம் பாக்க வாணாம். எழுதப் படிக்கத் தெரிஞ்சி கொணமா குடும்பத்தெ பாத்துக்கிட்டா போதும். அதுக்கு ஏம் இதெல்லாம்?"ன்னாம் இப்போ விகடு.
            "நீயி கேக்குறாப்புல கடையில செஞ்சி வெச்சிருக்காம் பாரு! வாங்கியாந்து கொடுக்க. எலே வெவரம் தெரியாம, ஒலகம் புரியாம பேசிக்கிட்டு கெடக்கே! இப்பிடில்லாம் பேசிக்கிட்டுக் கெடந்தே நீயி வாத்தியாரு வேலயே பாக்கலே! வாத்தியாரு வேல பாக்காமாலே ஏமாத்திக் கல்யாணத்தெ கட்டிக்க நிக்குறேன்னு புதுக்கதெயல்லோ கட்டி விட்டுப்புடுவானுங்கோ! காரியத்தெ முடிக்கிற வரைக்கிம் சித்தே ச்சும்மா கெட!"ன்னு அவரு சொல்லிட்டு வாரப்பவே கார்த்தி ஸ்டூடீயோ வந்திடுச்சி.
            மவனெ எறக்கிக் கொண்டு போயி பொண்ணு பாக்குறதுக்கு ஏத்தாப்புல போட்டோவெ புடிச்சிக் கொடுக்கச் சொல்றாரு சுப்பு வாத்தியாரு. அப்பிடியே சாதகத்தையும் கொடுத்து டைப்படிச்சி காரியத்தெ சட்டுப்புட்டுன்னு முடிச்சித் தர சொல்றாரு. கார்த்தி ஸ்டூடியோவுல நாலு பேத்துக்கு மேல வேல பாக்கறாங்க. வெசயத்தெ சொன்னதும் விகடுவெ கண்ணாடி முன்னாடி உக்கார வெச்சி அவனுங்க வேற அலங்காரத்தெ பண்ணுறாங்க. ஏற்கனவே அவ்வேம் வூட்டுல தலைக்கு எண்ணெய வெச்சி, புட்டா மாவ்வ மூஞ்சிக்குத் தேச்சி நல்ல வெதமாத்தாம் வந்திருக்காம். அதுல ஸ்டூடியோகார ஆளுக இன்னும் காலு இஞ்சி கனத்துக்குப் புட்டா மாவ அப்பி வெச்சி, சீவுன தலையெ வேற மாதிரிக்கி சீவி, ஒழுங்க போட்டிருந்த பட்டனெ அவுனுங்க ஒரு மொறைக் கழட்டி மாட்டி என்னென்னவோ பண்ணி கடெசியா மொகமும், மார்பும் தெரியுறாப்புல விகடுவெ பிடிச்சி காமிராக்குள்ள போட்டுக்கிட்டானுங்க. ஒரு வழியா அந்த வேலை முடிய இருவது நிமிஷத்துக்கு மேல ஆயிருக்கும்.
            "நாளைக்கி இந்த நேரத்துக்கு வந்துப்புடுங்க வாத்தியார்ரே! பக்காவா எல்லாத்தியும் தயாரு பண்ணி முடிச்சிப்புடறேம்!"ன்னு சொல்லி அனுப்ப நெனைக்குறாரு கார்த்தி ஸ்டூடியோ மொதலாளி கார்த்தீஸ்வரன்.
            "இன்னிக்கே கதெ ஆயிடும்னு பாத்தேம். நாளைக்கித்தாம் ஆவும் போலருக்கே!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "கொஞ்சம் நல்லா ஒர்க் பண்ணித் தர்ரேம் வாத்தியார்ரே. ஒர்க் பண்ணாத்தாம் வேல நல்லா இருக்கும். இப்பவே சித்த நேரம் உக்காந்தாலும் முடிச்சித் தந்திடுவேம். வேல அந்த அளவுக்கு இருக்கா. ன்னா சொல்றீங்க வாத்தியார்ரே!"ங்றாரு கார்த்திஸ்வரன்.
            "செரி! மொல்லமாவே நல்ல வெதமாவே ஆவட்டும்!"ன்னு சொல்லிட்டு மவனெ அழைச்சிக்கிட்டுக் கெளம்புறாரு சுப்பு வாத்தியாரு.
            மறுநாளு சொன்ன நேரத்துக்குப் போயி நின்னா சொன்ன மாதிரிக்கி வேலய முடிச்சி வெச்சிருக்காரு கார்த்தீஸ்வரன். அதெ வாங்கிட்டு வந்து வூட்டுல பாத்தாக்கா சுமார இருக்குற விகடுவோட மூஞ்சியெ போட்டோஷாப்புல கொடுத்து சூப்பரா ஆக்கி வெச்சிருக்காருங்க கார்த்தி ஸ்டூடியோகாரவுக, அந்தப் போட்டோவுக்கே பொண்ண கொடுத்துப்புடுற அளவுக்கு. அது செரி இந்த மாதிரி போட்டோஷாப்புன்னு ஒண்ணு ஒலகத்துல கண்டுபுடிக்கப்படலன்னா பல பேத்துக்குக் கல்யாணமே ஆவதுதாம். அந்தப் போட்டோஷாப் போட்டோவுல மயங்கி கல்யாணத்துக்குச் சம்மதஞ் சொல்லி கட்டிக்கிட்டு, கல்யாணத்துக்குப் பெறவு அந்தப் போட்டோவுல தெரிஞ்ச மொகத்தெ தேடிக்கிட்டுக் கெடக்குறவங்க நாட்டுல நெறைய பேரு இருக்காங்கத்தாம்.
*****


28 Feb 2020

துணிஞ்ச பின்‍னே ஜாதகம் தேவையில்லே!

செய்யு - 372        

            "இந்த நாட்டுல பல பேத்தோட தலைவிதிய சாதகம்தான் எழுதுது. அப்படிச் சாதகத்துல எழுதுன தலைவிதியையும் மாத்தி எழுதலாம்னு இந்த நாட்டுல நிரூபிச்சிட்டுப் போனவருதாம் சிலப்பதிகாரத்தெ எழுதுன இளங்கோவடிகளு. மனசுல வைராக்கியமா இருக்குறவனுக்கு சாதகம் செல்லுபடியாகாது. அப்படிப்பட்ட ஆளுகளுக்கு அவ்வேம் மனசு சொல்றதுதாங் சாதகம். சித்தம் போக்கு சிவம் போக்குன்னு போறவனுக்கு சாதகத்தெ என்னத்த கணிக்கிறது? அப்பிடிக் கணிச்சாலும் அந்தக் கணிப்புக்கு அர்த்தமிருக்காது. காந்தியடிகளுக்குக் கணிச்ச சாதகத்துல அவருக்கு அல்பாயுசு. அவரு செத்தது தொண்டு கெழமாயி துப்பாக்கிக் குண்டுலாயில்லா!"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
            முப்பது வருஷ அனுபவத்துல சங்கு சுப்பிரமணியெத்துக்கிட்டயே நெறைய மாறுதலு. அவரு கணிச்சிச் சொன்ன சாதகத்துல எத்தனையோ அப்படியே நடந்ததையும், எத்தனையோ அப்படி நடக்காமப் போனதையும் அனுபவத்துல பாத்திருப்பாரு. அப்படியே அவரு சொன்ன மேனிக்கி நடந்த சாதகத்துல இருந்த கட்டத்துக்கும், சொன்ன மேனிக்கி நடக்காத சாதகத்துல இருந்த கட்டத்துக்கு என்ன வித்தியாசம் இருந்திருக்கப் போவுது? ஒண்ணும் கெடையாது. ரெண்டு கட்டமும் வெவ்வேறு வெதமா திசை மாறுதுன்னா, மனுஷம் மனசால நெனைச்சா சாதகத்தெ மாத்தி எழுது முடியும்ங்றதுதாங் விசயம். மனசால மாத்தி எழுது முடியும்னா பெறவு எதுக்கு சாதகத்தெ எழுதணும்? அதானே சரியான கேள்வி. அப்பிடி ஒரு கேள்விய இப்போ சுப்பு வாத்தியாரு அவருகிட்ட கேட்டாக்கா, அதுக்கும் சங்கு வெளக்கத்த சொல்றாரு.
            "மனசால துணிஞ்சிட்டவனுக்குச் சாதகம் கெடையா. மனசால துணியுறதுக்கு மின்னாடி உள்ள கால கட்டம் வரைக்கும்தாம் சாதகம் வேலை செய்யும். அதுக்குப் பின்னாடி அதுக்குப் பவரு கெடையா. துணியுறதுன்னா அது தப்பா துணிஞ்சாலும் சரித்தாம், சரியா துணிஞ்சாலும் சரித்தாம். அதுக்கு அம்மாம் பவரு இருக்கும். நல்லவனா இருக்கணும்னு சாதகம் இருக்கு. ஆனா அவ்வேம் திருடணும்னு துணிஞ்சிட்டா சாதகம் பொய்ச்சுப் போயிடும். அதெ திருடணும்னு சாதகம் இருக்கு. அவ்வேம் திருந்தி வாழணும்னு துணிஞ்சிட்டா சாதகம் பொய்ச்சிப் போயிடும். மனசு நெனைச்சி துணிஞ்சி எறங்கிட்டா சாதகத்துக்குப் பவரே கெடையாது. மனசு பொறாதவனுக்குத்தாம்லா சாதகம். அந்த மனசையே தூக்கி எறியத் தெரிஞ்சவனுக்கு எதுக்குச் சாதகம்ங்றதுதாம் சரி!"ங்றாரு சங்கு. அப்பிடிச் சொல்லிப்புட்டு மேல மேல சொல்றாரு.
            "வாழ்க்கையில ஒரு கஷ்டம், ரண்டு கஷ்டம் இருக்கிறவம்தாம் சாதகத்தப் பார்ப்பாம். அது போல வாழ்க்கையில ஒரு சந்தோஷம், ரெண்டு சந்தோஷம் இருக்கிறவம்தாம் சாதகத்தப் பார்ப்பாம். வாழ்க்கையில எல்லாமும் கஷ்டமா இருக்கிறவனும் சாதகத்தப் பார்க்க மாட்டாம், எல்லாமும் சந்தோஷமா இருக்கிறவனும் சாதகத்தப் பார்க்க மாட்டாம். ஊருல சில பேத்து இருக்காம். என்ன நடந்தாலும் எனக்கென்னென்னு? அவனுக்கும் சாதகம் செல்லுபடியாகாதுல்லா. மனசால நெனைச்சா எதை வேணாலும் மாத்திக் காட்ட முடியும், சாதகக் கட்டம் உட்படங்றதுதாம் நம்மட கருத்து. அப்படி மனசு நெனைக்கணுங்றதுதாம் அதுல உள்ள விசயம்."ங்றாரு சங்கு.
            "இதாம் விசயம்னு தெரிஞ்ச பிற்பாடும் மனுஷன் ஏம் சாதகத்தெ பாக்கறாம்?"ன்னு சுப்பு வாத்தியாரு கேட்டாக்கா அதுக்குச் சங்கு சொல்றாரு, "மனுஷன் ஒரு கோட்டிக்கார பயெ. அவனுக்கு இத்துஇத்து இந்த மாதிரிக்கி நடக்குணும்னு ஒரு மனகணக்கு இருக்கு. அப்பிடி நடக்குமா நடக்காதான்னு தெரிஞ்சிக்கவும், அப்பிடி நடக்குறப்ப எடையில எடைஞ்சல எதுவும் இல்லாம இருக்குமான்னு தெரிஞ்சிக்கவும் ஒரு ஆசெ இருக்கும். அதெ தெரிஞ்சிக்கித்தாம் அவ்வேம் சாதகத்தெ பாக்குறாம். அப்ப‍டி மனுஷன் போடுற மனகணக்குல எது எப்பிடி நடந்தாலும் அதெ ஏத்துக்க தயாருன்னா பெறவு சாதகத்தெ எதுக்குப் பாக்கணும். அதெ பாக்கவே தேவையில்ல. மனுஷனோட மனக்கணக்குக்குத்தாம் சாதகக் கணக்கு. மனுஷனுக்கு மனக்கணக்கு இல்லன்னா சாதகக் கணக்கு யில்ல.

            "நம்ம கதையெ எடுத்துக்குங்களேம். அந்தக் காலத்துல கட்டுனது ஓடிப் போனது பெருத்த அவமானமா இருந்துப் போச்சு. ஒஞ்ஞளுக்குக் கதை தெரியுமோ என்னவோ? மொத பொண்டாட்டி ஓடிப் போயிட்டா. தங்குனது ரண்டாவதுதாங். ஆனா இப்பிடி ஆயிருக்கக் கூடாதேன்னு ஒரு நெனைப்பு. அவ்வே மனசு. அவ்வே ஆசெ. அவளுக்குப் பிடிச்சவனோட போயிட்டா. ஒருவேள நாம்ம அப்பிடி ஒருத்தியோட போயிருந்தா... அவ்வே இந்த மாதிரித்தாம் நம்மள மாதிரிக்கி ஊரு ஊரா நாடோடியா திரிஞ்சி சாதகம் பாக்கறதெ கத்துக்கிட்டு இன்னொரு கலியாணத்தெ பண்ணியிருக்கப் போறாளா? நெனைச்சிப் பாருங்க! அந்த நேரத்துல அத்து ஒரு மனசு. அதுக்கு அப்பிடி செஞ்சியாச்சி. நெனைச்சிப் பாத்தா இப்போ எல்லாமும் சிரிப்புத்தாம். மித்தபடி எது நடக்குறதா இருந்தாலும் அத்து நடந்துத்தாம் தீரும். அதெ கொஞ்சம் முங்கூட்டி சாதவத்துல கணிச்சிப் பாக்கலாம். அவ்வளவுதாங். அதெ சாதகத்தாலயும் தடுக்க முடியா.
            "எது நடந்தாலும் அதெ நீஞ்ஞ சந்தோஷமா எதிர்கொண்டுட்டா ஒஞ்ஞளுக்குச் சாதகமே பாக்கத் தேவையில்ல. எத்து நடந்தா நமக்கென்ன அதெ பாத்துப்பேம்னுட்டா சாதகம் சத்தியமா தேவையில்ல. இதாங் இந்த மாதிரிக்கி நடக்கணும்னா அஞ்ஞ சாதவம் தேவையாயிருக்கு. இதாங் விசயம். ஒஞ்ஞ கதையே எடுத்துக்குங்க. நீஞ்ஞ எதுக்கு ஒங்க புள்ளையாண்டாம், பொண்ணோட சாதவத்தெ பாக்க எடுத்து வர்றீக? புள்ள பொண்ணுக்குத் தப்பா எதுவும் நடந்துடப்படாதுங்ற ஒரு முன்சாக்கிரதெதாம் இல்லியா. அப்பிடி எதுவும் தப்பா நடக்குற மாதிரிக்கி கணிப்புத் தெரிஞ்சா அதுக்குத் தகுந்தாப்புல எதாச்சிம் செஞ்சி நல்ல வெதமா நடக்குற மாதிரிக்கி பண்ணிக்கலாமுன்னுத்தானே.
            "ஆனா பாருங்க வாழ்க்கையில ரண்டுமே நடக்கும். அதெ எதிர்க்கொண்டுத்தாம் ஆவணும். அதெ தடுக்கறதுக்கு சாதகத்துலயும் வழியில்ல. சாதகத்தெ தாண்டியும் நெறைய நடக்கத்தாம் செய்யும். கலியாணம் பண்ணி வைக்கிறோம். ரண்டுக்கும் பொருத்தமா இல்லன்னா நமக்குல்லா வருத்தமா போயிடும்னு சாதகத்தெ வெச்சி பாக்குறேம். இப்பிடிச் சிந்தனெ பண்ணிப் பாருங்களேம். பொருத்தம் இல்லாட்டியும் அதெ பொருத்தமா பண்ணிக்கிற மனப்பக்குவம் ரண்டு பேத்துக்கும் இருந்துப்புட்டா பொருந்தாத சாதவமும் பொருந்தில்லா போவும். இதெ நெறைய சோசியக்கார்ரேம் சொல்ல மாட்டாங். சொன்னா தம்புடி போயிடுமில்லா. ஆனா அதாம்லா உண்மெ. சாதவத்துலயே முப்பதுக்கு மேல ஒண்ணுமில்லங்றதுதாங் கணக்கு. அதாச்சி முப்பது வயசுக்கு மேலல்லாம் சாதவத்தெ பாத்து கலியாணத்துக்குப் பொருத்தம் பாக்க வேண்டியில்லா. முப்பது வயசு ஆச்சுன்னாலே பலவெதமான அனுபவத்துல மனசுக்கு ஒரு நெதானமும், பக்குவமும் வந்துப்புடும் பாருங்க. அதாங் இஞ்ஞ கணக்கு. இப்போ ஒஞ்ஞளுக்குப் புரியதுல்லா!"ங்றாரு.
            "மவள வெச்சிக்கிட்டு மவனுக்குக் கலியாணம்னா... அதாங் கொஞ்சம் யோஜனெ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞ ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க. இருந்தாலும் கேக்குதீயேன்னுத்தாம் நாம்ம நெனைக்கிறேம். வயசு வித்தியாசம் மவனுக்கும் மவளுக்கு அதிகெம். அதால தாராளமா மவனுக்குப் பண்ணலாம். யில்லே மவளுக்குத்தாம் பண்ணணுமா துணிஞ்சிப் பண்ணலாம். அதது நடக்குறப்போ அததெ சந்திக்குற எதிர்கொள்ளுற தெகிரியம் வரத்தாம் போவுது. நாம்ம இதெ மொதல்ல பண்ணுங்கோ, அதெ மொதல்ல பண்ணுங்கோன்னு அழுத்தம்லாம் பண்ண மாட்டேம். இதெ மொதல்ல பண்ணா நல்லா இருக்கும்னுத்தாம் சொல்லுவேம். வலியுறுத்தலு, வற்புறுத்தலு நம்மகிட்ட கெடையா."ங்றாரு சங்கு.
            "வர்ற மருமவ்வே பொண்ணுக்கும் மவளுக்கும் ஒத்துக்கிடுமா? ஒத்துக்கிடாதா? அப்பிடி இப்பிடின்னு பலவிதமான யோஜனைங்க. அதாங்! வயசுக்கு வந்தப் பொண்ண வெச்சிக்கிட்டு மவனுக்குக் கலியாணம் பண்றதுல சில நடைமுறைகளும் இருக்குங்களே!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்துச் செரி! ஒண்ணுக்கு ஒண்ணு இடிக்கத்தாங் செய்யும். அத்து எப்பிடி போனாலும் இடிக்கிறது இடிக்கத்தாம் செய்யும். அதுக்குன்னு போவாமலா இருக்க முடியும்? அததெ அப்பைக்கப்போ சமாளிச்சிக்க வேண்டியதாங். ஒட்டுமொத்தமா சமாளிக்கணும்னு நெனைச்சா எதையும் சமாளிக்கவும் முடியா, எதையும் பண்ணவும் முடியா. எழுதுனப்படித்தாம் நடக்கணும்னு இல்லா. எழுதாதபடியும் நடக்கலாம். கணிச்சபடித்தாம் நடக்கணும்னு இல்லா. கணிப்பெ தாண்டியும் நடக்கலாம். நெறைய யோஜிச்சா தப்பாப் போயிடும். கொஞ்சமா யோஜிச்சு சரியாப் பண்ணுறதுதாங் செரி. கொழப்பிக்க ஒண்ணுமில்ல. மவனுக்கு முடிங்களேம். பொண்ணுக்கு ஆர அமரப் பாத்து முடிக்கலாம்."ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "ரொம்ப நல்லதுங். மவனுக்குப் பொண்ணு பாத்தா பொருத்தமும் நீஞ்ஞதாங் பாத்துச் சொல்லணுங்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "சொல்லிப்புட்டா போச்சு! பாத்துட்டு வாஞ்ஞ பாத்துக்கிடலாம்! செரி கெளம்புங்க!"ன்னு சங்கு சுப்பிரமணியெம் சொல்றாரு சுப்பு வாத்தியாரு மனசுல உண்டான நெறைவை முகத்துல பாத்துட்டு. சுப்பு வாத்தியாரு கெளம்புறாரு. இன்னும் நாலு பேரு அப்பத்தாம் சாதகம் பாக்கணும்னு கேட்டைத் தொறந்துகிட்டு உள்ளார வாராங்க. இனுமே வர வர கூட்டம் அதிமாயிட்டே போவும் அவரு வூட்டுக்கு மின்னாடி.
*****


27 Feb 2020

மவனுக்கு முன்னாடி! மவளுக்குப் பின்னாடி!

செய்யு - 371

            நாட்டியத்தாங்குடி சோசியரு சொன்னதெ வெச்சி மவ்வேம், மவளோட சாதவத்தெப் பத்தி ஒரு கருத்து உண்டாயிருந்திச்சு சுப்பு வாத்தியாருக்கு. அதெ மனசுல அசை போட்டுக்கிட்டே அவரோட டிவியெஸ் வண்டி அந்த கருக்கலான பொழுதுல கொத்தூரை நோக்கிப் போவுது. வடவாதியிலேந்து கொத்தூருக்குப் போறதுன்னா ஒரு அத்துவான தீவுக்குள்ள போறாப்புலத்தாம். ரண்டு பக்கமும் வயலுவெளிகளா இருக்குற பொட்டலுத்தாம் ஊரு. அங்கங்க கொஞ்சம் வூடுக. போயிட்டு இருக்குற ரோடே பல நேரத்துல அநாதியாத்தாம் கெடக்கும் பாவப்பட்ட சென்மத்தப் போல. அதுவும் இந்தக் காலைக் கருக்கல்லன்னா சொல்லவா வேணும்? அங்கங்க மரத்துல இருக்குற குருவிகளோட சத்தமும், வாய்க்கால வரப்புல கெடக்குற தவளையோட சத்தமும், வண்டுபூச்சிகளோட ரீங்கார சத்தமும் அதுக்கு இடையில சுப்பு வாத்தியாரு போற வண்டியோட டர் டுர் சத்தமும்தாம் கேக்குது. இன்னும் கொஞ்சம் பொழுது விடியணும் அந்த ரோட்டுக்கு ஆளு நடமாட்டம் வர. அந்த ரோடே படுத்துத் தூங்கிட்டுக் கெடக்குறாப்புலத்தாம் இருக்கு.
            சங்கு சுப்பிரமணியெம் வூட்ட நெருங்குறப்போ அங்கங்க வூடுகள்ல வாசல் தெளிக்குற பொம்மனாட்டிகள் மட்டும் எழுந்திரிச்சி சாணிய தெளிச்சி கூட்டிட்டு இருக்காங்க. சோசியரு வூட்டுக்கு மின்னாடி லைட் எரியுது. சுப்பு வாத்தியாரு அங்க வண்டிய நிறுத்திச் சுத்திலும் ஒரு பார்வைப் பாக்குறாரு. அங்க கூட்டிக்கிட்டு இருக்குற ஒரு பொம்மனாட்டிச் சொல்றாங்க, "வாத்தியாரய்யாவத்தாம்னா பாக்க வந்திருக்கீங்க! கேட்டைத் தொறந்துகிட்டு உள்ளார போங்க. யோகம் பண்ணிட்டு உக்காந்திருப்பாக."
            அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "கூட்டமா இருக்கும்னு நெனைச்சேம். ஒருத்தருங் காங்கலியே?" அப்பிடின்னு.
            "ஒரு நாளு அப்பிடியும் இருக்கி. சில நாளு இப்பிடியும் இருக்கி. இதாங் நல்லது. ஒங்களுக்கு யோகம். வெலாவாரியா நல்லா‍ கேட்டுக்கிடலாம். ஒத்த ஆளா அவர்ர பாக்குறது கெடைக்காது. வெரசா போங்க உள்ளார. யாரு வாணாலும் எப்ப வாணாலும் வரலாங்!" அப்பிடின்னு சொல்றாங்க அந்தப் பொம்மனாட்டி.
            டக்குன்னு மஞ்சப் பையில போட்டு வெச்சிருக்கிற சாதக நோட்ட எடுத்துக்கிட்டு உள்ளார நொழையுறாரு சுப்பு வாத்தியாரு. அந்தப் பொம்மனாட்டிச் சொன்னது சரித்தாம். ஒரு மர நாற்காலியில சம்மணத்தெ போட்டு கட்டிக்கிட்டு, கண்ணெ மூடிட்டு, கையி ரண்டையும் ஏதோ முத்திரையில வெச்சிக்கிட்டு உக்காந்திருந்தவரு, காலடிச் சத்தத்தெ கேட்டுகிட்டதும் கண்ணெ தொறந்து பாக்குறாரு. பாத்துப்புட்டு, "வாஞ்ஞ! எந்த ஊரு?"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "நாம்ம சுப்பு வாத்தியாரு. திட்டெ."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "திட்டெயில ஆரு நமக்குத் தெரியாமா வாத்தியாரு? அப்பம் பேரு சொல்லுங்க பாப்பேம்."ங்றாரு சங்கு.  
            "நமக்கு பூர்வீகம் குடவாசலு பக்கத்துல விருத்தியூரு. அப்பா சாமிநாதெம். இஞ்ஞ வாத்தியாரு பொழைப்புக்காக வந்தது!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "சமூகம் ன்னவாம்?"ங்றாரு சங்கு.
            "தச்சுச் சமூகமுங்க"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னா விஷேசம்?"
            "ந்நல்ல விஷேசம்தாம்! மவ்வேம், மவ்வே யாருக்கு முந்திக் கலியாணத்தெ பண்ணலாம்னு பாத்துச் சொல்லணும்!"
            "மவளுக்கு மிந்திக்கிட்டா நல்லது. கட்டத்தத்தாம் பாக்கணும். யாருக்கு மிந்தி யோகமிருக்குமின்னு?"

            மவ்வேன், மவ ரண்டு பேத்தோட சாதக நோட்டையும் மஞ்சப் பையிலேந்து எடுத்து நீட்டுறாரு சுப்பு வாத்தியாரு. அதுல மொத சாதகமா மவனோட நோட்டு இருக்கு. அதெ எடுத்து நொட்டாங்கையில வெச்சிக்கிட்டு, மவ சாதகத்தெ எடுத்து தொடையில வெச்சிக்கிட்டு, சோத்தாங் கையில கட்டெ வெரலா மித்த நாலு வெரல்களயும் தொட்டு தொட்டு அழுத்திக்கிட்டு கணக்கெப் போடுறாரு. ஒவ்வொரு சோசியரும் ஒவ்வொரு கையில கணக்கெப் போடுறாங்க. அவுங்கவங்களுக்குத் தோதுபட்ட கையில போடுவாங்க போல. எழுதுறதுல சோத்தாங்கையில எழுதுற ஆளும் இருக்கு, நொட்டாங்கையில எழுதுற ஆளும் இருக்குல்லா, அந்த மாதிரிக்கிப் போல. சங்குகிட்ட எதுவும் தாளு கணக்குக் கெடையாது. எல்லாம் மனக்கணக்குத்தாம். சட்டுபுட்டுன்னுப் போட்டுப் பாத்தவரு. "இந்நேரத்துக்குக் கலியாணம் முடிஞ்சிருக்கணும்ங்றது கட்டம். பொண்ணு பாக்கலியோ? இன்னிக்குப் பாக்க ஆரம்பிச்சாலும் நாளைக்கிக் கல்யாணத்தெ முடிச்சிடலாம்!"ங்றாரு சங்கு.
            "எந்தத் தெசையிலன்னு சொன்னாக்கா நல்லாருக்கும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "தஞ்சாரூக்குக் தெற்கால. இல்லாட்டி கும்பகோணத்துக்கு வடக்கால. தஞ்சாருக்கு தெற்கால பவரு சாஸ்தியா இருக்கு. அஞ்ஞப் பக்கம் போனீங்கன்னா சட்டுபுட்டுன்னு முடிச்சிடலாங். கும்பகோணமும் தோதுபடும்தாம். தஞ்சாரூ தெக்கால பொண்ணா, கும்பகோணத்து வடக்காலப் பொண்ணாங்றது ஒஞ்ஞ முடிவு!"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "வேற சாதவத்துல..."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "தோஷம் கெடையா. அம்சமான சாதவெம். வேற?"ங்றாரு சங்கு.
            "வேற... அதாங்..."ன்னு சுப்பு வாத்தியாரு கேக்குறப்பவே, "கொழந்தைக் குட்டிகளப் பத்தித்தானே கேக்குறீங்க! அதுவும் இருக்குத்தாம். பொண்ணா போறந்தா நல்லது. பயலா பொறக்குறதெ பத்திக் கேக்க வாணாம். அதெ சொல்றதுக்கில்ல. அத்து செரி பொண்ணு பொறக்குமா? பய பொறப்பானா?ங்றது நம்ம கையிலயா இருக்கு. பொண்ணாவே பொறக்கட்டும்!"ங்றாரு சங்கு.
            "நமக்கு ஆம்பளெ புள்ளே, பொம்பளெ புள்ள ரண்டும் ஒண்ணுதாங்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அட்றா சக்கெ. பெறவென்ன? கவலைய விடுங்க. பாத்துக்கிடலாம். அதாஞ் செரி!"ன்னு சொல்லிட்டு ஒரு வெடிச் சிரிப்ப சிரிக்கிறாரு சங்கு.
            "அப்பிடியே பொண்ணோட சாதகத்தயும்..."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பாருங்க சாதவெம் கையில வர்றதெ? பயலோட சாதவெம் மொதல்ல வருது. பொண்ணோட சாதவெம் ரண்டாவதா வருது. அதுலயே வெசயம் இருக்குன்னுத்தாம் நெனைக்கிறேம். பாத்துட்டாப் போச்சி"ன்னு மறுக்கா அப்படியே இப்போ சுப்பு வாத்தியாரோட மவ்வேன் சாதவத்த தொடைக்கி மாத்திக்கிட்டு, நொட்டாங்கையில மடியில வெச்சிருந்த அவரோட போண்ணோட சாதகத்தெ வெச்சிக்கிட்டு சோத்தாங்கையில வெரலால அமுக்கி அமுக்கிக் கணக்கெப் போடுறாரு. போட்டுப் பாத்துப்புட்டு சாதக நோட்ட அப்படியே சுப்பு வாத்தியார்கிட்ட நீட்டிட்டாரு. ஒண்ணுஞ் சொல்லல.
            "பொண்ணோட சாதகத்தெப் பத்தி..." சுப்பு வாத்தியாரு இழுக்க வேண்டியதாப் போவுது.
            "மவ்வேம் கலியாணத்தெ மொதல்ல முடிங்கப் பாக்கலாம். அஞ்சாறு வருஷம் கழிச்சிப் பாத்துக்கிடலாம் இதெ. அவசரம் வாணாம். தாமசமா பண்ண வேண்டிய சாதகம். குறிப்பா சொந்தத்துல பண்ணாம பாத்துக்கிடணும். மாப்புள்ள தானா வருவாம். நீஞ்ஞளா அவசரம் பண்ண வாணாம். அதுவா எல்லாமும் நடக்கும். நீஞ்ஞளா நடத்திட வாணாம்!"ங்றாரு சங்கு.
            "தோஷம் எதாச்சியும் மவ சாதவத்துல?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெல்லாம் இல்லா. அம்சமான சாதவெம். கலியாணத்துல அவசரம் பண்ண வாணாம். அதாங் சொல்லலாம். குறிப்பா சொல்றப்பவே புரிஞ்சிக்கிடணும். மேல நோண்டக் கூடாது. அத்து நமக்குப் பிடிக்காது"ங்றாரு சங்கு சுப்பிரமணியெம். அவரோட முகம் இப்போ மாறிப் போச்சு. அதெ கவனிச்சிட்ட சுப்பு வாத்தியாரு மொகத்துல கொஞ்சம் வெசனமாப் போவுது. அதெயும் கவனிக்கிறாரு சங்கு சுப்பிரமணியெம். இருந்தாலும் ஒண்ணுஞ் சொல்லல. மடியில இருந்த சுப்பு வாத்தியாரோட மவனோட சாதகத்தெ எடுத்து நீட்டுறாரு. அதெ வாங்கிகிட்டுச் சுப்பு வாத்தியாரு, "ரூவா?"ன்னுகிட்டு சட்டைப் பையில கைய வுடுறாரு. சங்கு சுப்பிரமணியெம் கண்ணாலயே சுவத்து ஓரமா ஒரு ஸ்டூலு மேல வெச்சிருக்கிற எவருசில்வருல இருக்குற சின்னப் பெட்டியைக் காட்டுறாரு. சுப்பு வாத்தியாரு அதுக்குப் பக்கத்துலப் போயி ரண்டு நூறு ரூவா நோட்டெ எடுத்து அந்தச் சின்னபெட்டியோட ஓட்டைக்குள்ள போறாப்புல மடிச்சி போடுறாரு. போட்டுட்டு ஒண்ணுஞ் சொல்ல முடியாம கெளம்ப எத்தனிக்கிறாரு.
            இப்போ சங்கு சுப்பிரமணியெம் கொரலக் கொடுக்குறாரு. "நெறைவில்லாம போறாப்புல தெர்யுது. மேக்கொண்டு அதெ தவிர வேற எதாச்சியும் கேக்கணும்னா கேட்டுக்கிடலாம்!"ங்றாரு. சுப்பு வாத்தியாரு சாதகத்தைப் பாக்க வந்துட்டு, அப்போ ஒரு கேள்வியக் கேக்கறாரு பாருங்க. "எல்லாம் சாதகப்படித்தாம் நடக்குமா?"ன்னு. சங்கு சுப்பிரமணியெத்தோட முகம் இப்போ மாறிப் போயி அவரு சிரிக்கிறாரு பாருங்க. மறுக்கா ஒரு வெடிச்சிரிப்பா சிரிக்கிறாரு.
*****


கி.ரா.வின் கரிசல்காட்டுக் கடுதாசி - ஓர் எளிய அறிமுகம்

கி.ரா.வின் கரிசல்காட்டுக் கடுதாசி - ஓர் எளிய அறிமுகம்

            கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர், கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றெல்லாம் போற்றப்படும் கி.ராஜநாராயணன் எனும் கி.ரா.வின் புத்தகம் 'கரிசல்காட்டுக் கடுதாசி'
            கட்டுரை போன்ற தோற்ற மயக்கத்தை, சிறுகதை போன்ற மாயா ஜாலத்தை, சுயசரிதை போன்ற எழுத்துத் தன்மையைக் கொண்டிருக்கும் 'கரிசல்காட்டுக் கடுதாசி' புத்தகம் பத்தி வகை எழுத்தைச் சார்ந்தது. பத்திப் பத்தியாக கி.ரா. கரிசலைச் சுற்றிய நிலவியலையும், வாழ்வியலையும் கட்டுரையாகவும், சிறுகதையாகவும், சுய புனைவாகவும் புட்டு புட்டு வைக்கிறார்.
            'கரிசல்காட்டுக் கடுதாசி' என்று புத்தகத்தின் பெயர் இருந்தாலும், இந்தப் புத்தகம் தமிழில் சொல்லப்படும் 'மடல்' போன்ற இலக்கிய வகையறாவைச் சேர்ந்தது கிடையாது. ஆனால் புத்தகத்தில் சில கடுதாசிகள் காணக் கிடைக்கின்றன. அந்தக் கடுதாசிகள் கி.ரா. வனச்சரக அதிகாரிக்கு எழுதிய கடுதாசிகள். அந்தக் கடுதாசிகளை வைத்து இந்தப் புத்தகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். அதாகப்பட்டது கி.ரா. அந்தக் கடுதாசிகளை வனச்சரக அதிகாரிக்கு எழுதுவதற்கு முன்பாக கோவில்பட்டியைச் சுற்றியிருந்த கரிசல் நிலம் எப்படி இருந்தது, அந்தக் கடுதாசிகளை எழுதிய பிற்பாடு கரிசல் நிலம் எப்படி இருக்கிறது என்பதாக இந்தப் புத்தகம் கரிசல் நிலவியல் பற்றிய ஒரு வரலாற்றைச் சொல்வதைக் காணலாம்.
            பொதுவாக பசுமைப் புரட்சி வந்த பிற்பாடுதாம் விவசாயம் அழிந்ததா? கால்நடை இலாக்கா வந்த பிற்பாடுதாம் நாட்டு வகை மாடுகள் அழிந்ததா? காட்டிலாக்கா வந்த பிற்பாடுதாம் காடுகள் அழிந்ததா? என்ற ஒரு கேள்வி மனதில் தொக்கி நிற்பதுண்டு. அதற்கான ஒரு வரலாற்று சாட்சியத்தை இந்தப் புத்தகத்தில் கி.ரா. தர முயன்றிருக்கிறார். காட்டிலாக்காவின் சட்ட திட்ட நியமங்களுக்குள் புகுந்து மரங்கள் வளரவோ, அல்லது மரங்களை வளர்க்கவோ முடியாத சங்கதி இந்தப் புத்தகம் பேசும் நுட்பமான சங்கதிகளுள் ஒன்று.
            கரிசல்காட்டுக் கடுதாசி எனும் புத்தகம் ரெண்டு பகுதிகளாக ஒரு புத்தகமாக இருக்கிறது. முதல் பகுதிக்கும், இரண்டாவது பகுதிக்கும் ஒரு சினிமாவுக்கான குதூகல உத்தி இருக்கிறது. முதல் பகுதியில் ததும்பும் குறும்பும், நகைச்சுவையும் ரெண்டாம் பகுதிக்கான ஒரு சோகமான முடிவுக்காகவா என்பது போல இருக்கிறது. முதல் பகுதியில் இருக்கும் எள்ளலும், கேலியும் இரண்டாம் பகுதியில் எந்த வித குறைவு இல்லாமல் தொடர்கிறது என்றாலும் இரண்டாம் பகுதியில் கி.ரா. சொல்லும் அண்ணாச்சியின் கதையில் சோக வாடை நிழலாடச் செய்து விடுகிறது. இயக்கங்களின் தோல்வி, கூட்டம் போட்டு பேசும் பேச்சுகளின் தோல்வியைக் காட்டுகிறது அண்ணாச்சிக் குடும்பத்தின் கையறு நிலை குறித்தான நிஜக் கதை.
            'கரிசல்காட்டுக் கடுதாசி'  எனும் இந்தப் புத்தகத்தில் வந்துள்ள பத்திகள்  அத்துணையும் ஜூனியர் விகடனில் கட்டுரைத் தொடராக வெளிவந்தவை. கி.ரா.வே குறிப்பிடுவது போல ஜூனியர் விகடன் ஒரு சாதாரண வணிகப் பத்திரிகை என்றாலும், அதில் வெளிவந்த அத்தனை கட்டுரைகளிலும் ஓர் இலக்கிய தரத்தையும், உண்மைத் தன்மையையும் பேணியிருக்கிறார் கி.ரா. வாய்மொழிச் சொல்லலின் வடிவத்திலேயே ஒரு நாட்டாறு இலக்கியம் போன்ற பதிவாக அதைச் செய்திருக்கிறார் கி.ரா.
            எளிய மக்களின் வரலாறு எவ்வாறெல்லாம் சிதைக்கப்படுகிறது என்பதை ஒரு வரலாறாக கட்டபொம்மனுக்கு மக்கள் போட்டு வைத்த கற்குவியல் அழிக்கப்பட்டதையும், அதே கட்டபொம்மனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டிய மணிமண்டபம் நிலைத்து நிற்பதையும் கொண்டு வருத்தத்தோடு சொல்லிச் செல்கிறார். வரலாறு என்பது சாமானியர்களின் அத்தனை சாட்சியங்களையும் அழித்து, வலுவானவர்களின் சாட்சியங்களோடு முன்னகரும் பேத முரணை கி.ரா. அப்பட்டமாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
            இன்னொரு சேதி, கேரளாவுக்கான வண்ணப் புத்தகங்களும், தமிழ் நாட்டுக்கான கருப்பு வெள்ளைப் புத்தகங்களும் தமிழ்நாட்டில் இருக்கின்ற சிவகாசியில் அச்சாகிறது என்கிற சேதி. கேரளாவுக்கான சிறுவர் நூல் களஞ்சியங்கள் இங்கே வண்ணத்தில் அச்சாக, ஒரு பல்கலைக்கழகத்தின் களஞ்சியமே இங்கே கருப்பு வெள்ளையில் 'கழுமரம்' என்ற சொல்லாடல் இல்லாமல் அச்சாகும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும். நம்முடைய அக்கறையும், பொறுப்பும் அவ்வளவுதான் என்பதை அவ்வளவு அக்கறையோடும், பொறுப்போடும் பொட்டில் அடித்தாற் போல நேர்த்தியாகச் சொல்கிறார் கி.ரா. இப்படி எவ்வளவோ சேதிகள் புத்தகம் முழுமைக்கும்.
            கரிசல் மண்ணின் எவ்வளவோ சங்கதிகளை, சிடுக்குகளை, முடிச்சுகளை, பிரச்சனைகளை இந்தப் புத்தகம் நெடுக்கச் சொல்லிச் செல்கிறார் கி.ரா. அதில் மின்சார வரவால் பட்ட அவதிகளையும், சிரமங்களையும் சொல்கிறார். மின்சார வரவு - அதில் காட்டப்படும் அலட்சியம், அக்கறையற்ற தன்மை ஆகியவற்றையும் வேதனையோடு பதிவு செய்கிறார். ஒளி வரவாக இருக்க வேண்டிய மின்சாரம் இருள் வரவாக மாறி அண்ணாச்சியின் உயிரை பலி வாங்கியதைச் சொல்லி நூலுக்கான ஒரு பின்னுரையோடு இந்தப் புத்தகத்தை நிறைவு செய்கிறார் கி.ரா. அதைப் படிக்கும் போது நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது.
            என்ன செய்வது? இதே புத்தகத்தில்தான், "துக்கத்தை, துயரத்தைச் சிரிச்சுத்தாம் போக்கியாவணும்!" என்று கி.ரா.வே ஒரு எள்ளல் தொனியோடு சொல்கிறார். நம்மைச் சுற்றிய இழிவுகளைப் பார்த்து மனம் உளைந்துப் போயி பைத்தியக்காரராக ஆவதை விட, அப்படிச் சிரித்துச் சிரித்துப் பைத்தியக்காரராக ஆகாமல் தப்பித்துக் கொள்வது கூட ஒரு வகையில் நல்லததுதாம். காந்தி மகாத்மா கூட அதைத்தானே சொல்கிறார், "நகைச்சுவை என்ற உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான் என்றோ தற்கொலை பண்ணியிருப்பேன்!" என்று. அத்தோடு வள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார், "இடுக்கண் வருங்கால் நகுக!" என்று. நகுதலை விட வேறென்ன வழியிருக்கிறது நமக்கு? கி.ரா.வும் அதைத்தான் சொல்கிறார். அநேக கேலிகள், எள்ளல்கள் இருக்கிறது இந்தப் புத்தகத்தில். அதற்குக் காரணமாக இருப்பவர்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் இதற்கு மேல் நாகரிகமாக அசிங்கப்படுத்த முடியாது என்ற எல்லை அது. ஓர் எழுத்தின் மாபெரும் வெற்றி அது. அதை இந்தப் புத்தகத்தில் சாதித்திருக்கிறார் கி.ரா. நீங்களும் அவசியம் ஒரு முறை வாசித்துப் பாருங்கள் கி.ரா.வின் கரிசல்காட்டுக் கடுதாசியை. கரிசல் காட்டிலிருந்து அவர் புத்தக வடிவத்தில் ஒரு கடுதாசி போட்டது போலவே இருக்கிறது அந்தப் புத்தகம்.
*****


26 Feb 2020

கட்டம் சரியில்லாம காலம் தள்ள முடியாது!

செய்யு - 370

            வாத்தியாரு சாதகெம் கணிச்சா சரியா இருக்கும்னு கொத்தூரைத் தாண்டியும் பேச்சு உண்டாச்சு. சாதகெம் கணிக்குற சோசியக்காரரா எதுக்கா ஆனாரோ அதெ சோதிச்சுப் பாக்குற மாதிரிக்கி தன்னோட சாதவெத்தையும், ஓடிப் பொன பொண்டாட்டியோட சாதகெத்தையும் எடுத்து வெச்சிப் பாத்தாரு சங்கு சுப்பிரமணியெம். சாதகெக் கட்டம் அதத்தாம் சொன்னிச்சி. "அடப் பாவியோளே! இதெ பாக்காம பத்துக்கு எட்டுப் பொருத்தம் இருக்குன்னு பாத்துக் கட்டி வெச்சிப்புட்டானுவோளே!"ன்னு ஆதங்கப்பட்டுக்கிட்டாரு அவரு. மொத பொண்டாட்டி ஓடிப் போவாங்ற மாதிரிக்கி இவருக்குக் கட்டம் இருக்குறதாவும், அதுக்குத் தோதா ஆவுறாப்புல இவருக்குப் பொண்டாட்டியா வர்றவளோட சாதகெம் அச்சு அசலா பொருந்திப் போனதெ பாத்துப் பாத்து ஆச்சரியப்பட்டாரு. "அத்து சரித்தாம் சாதவெம் சரியில்லன்னா மாதவனும் காடாளப் போவணும். சாதவெம் சரியா இருந்தா செருப்பு ஏறியும் ஆட்சிப் பண்ணும்! கஷ்டப்பட்டுக் கூட காலத்தெ தள்ளலாம். கட்டம் சரியில்லாம காலத்தெ தள்ள முடியா"ன்னு அவரு அடிக்கடிச் சொல்லுவாரு.
            மனுசனுக்கு ஒரு கொணம் உண்டாவும் பாருங்க, தனக்கு நேந்தது போல இனிக்கா இன்னொருத்தருக்கு நேந்துப்புடக் கூடாதுன்னு. அப்பிடி ஒரு கொணம் உண்டாயிப் போச்சு சங்குவுக்கு. ஆரம்பத்துலயே இந்த மாதிரிக்கி இந்த மாதிரிக்கி சாதவெம் இருக்குன்னு கணிச்சிப்புட்டா, அதுக்குத் தகுந்தாப்புல சில போக்குகள மாத்திக்கிடலாம் பாருன்னு அன்னிலேந்து சோசியத்தெ பாக்க ஆரம்பிச்சிட்டாரு. காலாங்காத்தால குளிச்சி முடிச்சி அஞ்சு அஞ்சரைக்கெல்லாம் அரைக்கு ஒரு வேட்டி, தோளுக்கு ஒரு வேட்டி, நெஞ்சுக்கும், நெத்திக்கும் திருநீத்தப் பூசி உக்காந்தார்ன்னா யாரு வந்து வேணாலும் சாதவத்தக் காட்டி சோசியத்தெ கேக்கலாம். அதிலேந்து பத்து பதினோரு மணிக்கி வரையிலும் சாதவம்தாம். எடையில எட்டு மணி வாக்கில பாலைத் தனியா காய்ச்சி பனங்கற்கண்ட பொடிச்சுப் போட்டு ஆத்திக் கொடுக்கணும். அதெ குடிச்சிப்புட்டு பத்து பதினோரு மணிக்கி வரைக்கும் வந்து நிக்குற சனங்களுக்குச் சாதவெத்தப் பாத்து முடிச்சிட்டு அதுக்கு மேலத்தாம் காலைச் சாப்பாடு. 
            சாதவெம் பாக்க ஆரம்பிச்சதுல கம்பு, சுருளு, மான்கொம்பு, குஸ்தின்னு அத்தனையையும் விட்டுப்புட்டாரு சங்கு. ஊருல அவனவனும் தனித்தனியா கொஞ்ச நாளைக்கி கம்பைச் சுத்திக்கிட்டு, குஸ்தியைப் போட்டுக்கிட்டு, நஞ்சாக்கெ சுத்திக்கிட்டு கெடந்தாம். தெருவுக்கு ஒருத்தெம் தலைமையில பெரியகொத்தூரு, சின்னகொத்தூரு, அகரக்கொத்தூரு, மன்னஞ்சின்னு நடந்துகிட்டு இருந்தாலும் இதுக்கு வாத்தியாரு முக்கியம். வாத்தியாரு இல்லாத வித்தெ ஆத்தோட போவும்பாங்க. அப்பிடியாயிடுச்சி நெலமெ. தொடர்ச்சியா கம்புச் சுத்துறது நின்னுப் போயி, குஸ்திப் போடுறது நின்னுப் போயி, நஞ்சாக்கு சுத்துறதும் நின்னுப் போயி அவனவெம் வூட்டுலயும் கம்பு மூலையில நின்னுகிட்டு இருக்க, நஞ்சாக்கு ஆணியில மாட்டியிருந்துச்சு. ரெண்டுலயும் தூசியும் தும்பட்டையுமா ஒட்டடை அப்பிக் கெடந்துச்சுங்க. ஊர்ல கோயில்ல திருவிழான்னு வந்தா மட்டும் அந்த நேரத்துக்கு அதெ சுத்தம் பண்ணி கழுவி தொடைச்சி அந்த வார காலத்துக்கு மட்டும் சுத்துறது நடந்திச்சி.
            சங்கு சுப்பிரமணியெமும் மனசுக்குக் கொஞ்சம் அலுப்பா இருந்தாக்கா வூட்டுக்கு நொட்டாகையிப் பக்கமா இருக்குற தெடல் மாதிரிக்கி கெடக்குற கொல்லையில நின்னுகிட்டு சுருளச் சுத்துவாரு. அதுல அவருக்கு அம்புட்டு இஷ்டம். அவரு சுத்துறதெ வெளியிலேந்து பாக்குற ஆளுக கூடி உள்ள வந்திடுவாங்க. சுருளச் சுத்துறதுல ரொம்ப கவனெம் வேணும். கொஞ்சம் கவனெம் பெசகுனா போச்சு. சுத்துறவனெ ரத்தக் களறியில குளிப்பாட்டிப்புடும் சுருளு. அதெ சுத்திக்கிட்டு மான்கொம்பெ கையில வெச்சிக்கிட்டு வரிசையெ போட்டுப் பாப்பாரு. பெறவு கம்பெ சுத்துவாரு. எல்லாம் மனசுல இருக்குற அலுப்பு போற வரைக்கும். அது போச்சுன்னா மறுக்கா மனசுக்கு ஒரு அலுப்பு வாரணும் அவருக்கு அதையெல்லாம் சுத்துறதுக்கு. ஆனா எப்போ சுத்துனாலும் அதெ பழைய வேகமோ, நுட்பமோ கொஞ்சம் கொறைஞ்சபாடில்லா. இதென்ன பள்ளியோடத்துல மனசுல கத்துக்குற பாடமா என்னா? ஒடம்பும், மனசும் இணைஞ்சு கத்துக்குற பாடமுல்லா. எப்பிடிக்கி மறக்கும்? என்னத்தாம் கம்பையும், குஸ்தியையும் விட்டுப்புட்டாலும் அவரு இன்னிக்கும் ஊருக்கு வாத்தியாருதாம்.

            எப்பவாச்சியும் இளவெட்டுக அவருக்கு வெத்தலெ பாக்கு, பழம், பத்தி, அவலு பொரி சர்க்கரெ, பத்து ரூவா தட்சணைன்னு வெச்சி கம்பு கத்துக்க கேட்டாலும் சொல்லிக் கொடுக்க மாட்டேன்னு அடம்லாம் பிடிக்க மாட்டாரு. ரகளையா சொல்லிக் கொடுக்குறாரு. ஆனா இளவட்டங்க அதெ கத்துக்கணுமே. நாலு நாளைக்கு ரொம்ப ஆர்வத்தோட வந்து அஞ்சாவது நாளு காணாமாப் போயிடுறானுவோ. அதுக்குக் காரணம் ரெண்டு மூணு நாளைக்கி ஆசைக்கி கம்பெ சுத்த விட்டுப்புட்டு, அதுக்குப் பிற்பாடு ஒடம்ப பலம் பண்ணுற ஒடம்புக்கான பயிற்சிகள பண்ணணுதுக்குப் பெறவுதாம் கம்பெ கையில எடுக்கணும்னு சொல்லுவாரு சங்கு. அதெ கண்ணு மின்னாடி நின்னு அவரு சொல்றாப்புல எல்லாம் செஞ்சிக் காட்டணும். அதெ அப்போ செய்யுறதுக்குச் சொகமாத்தாம் இருக்கும். அவரு பத்து தபா செய்யச் சொன்னா இருவது தபா செய்யத் தோணும். ராத்திரிக்கிப் படுத்துக் காலையில எழுந்தாத்தாம் ஒடம்பு வலி தாங்க முடியா. அதெ ஒரு பத்து நாளு கணக்குக்குத் தாங்கியாவணும். அப்பிடிக்கித் தாங்குனாத்தாம் ஒடம்புக்கு அது ஒத்துக்கும். மொத நாளு வலியத் தாங்காம சொல்லாம கொள்ளாம பம்மிப் போற எளவட்டங்கத்தாம் அதுக்குப் பெறவு கம்புன்னோ, குஸ்தின்னோ வாயெ தொறக்க மாட்டானுவோ. அவரு கண்ணுல பட மாட்டானுவோ. ஊரை வுட்டு ஒதுக்கி வெச்ச பயலுக மாதிரி ஊருக்குள்ள பம்மி பம்மி வந்துப் போயிட்டுக் கெடப்பானுவோ. சங்குவும் அதெ கண்டுக்கிடாத மாதிரிக்கி விட்டுப்புடுவாரு.
            சங்கு சுப்பிரமணியெம் மித்த சோசியக்காரவுக மாதிரிக்கி கெடையாது. யாரு வந்து வேணாலும் அவருகிட்ட சோசியத்தெ பாத்துக்கிடலாம். நேரம்தாம் முக்கியம். காலையில சாப்பாடு கொள்ளுறதுக்கு மின்னாடி வந்துப் பாத்துக்கணும். காலைச் சாப்பாடு எறங்கிட்டுன்னா மறுக்கா சோசியத்தெ பாக்கணும்னா மறுநாளு வரைக்கும் காத்திருந்தாவணும். கூட்டம் அதிகமா இருந்திச்சுன்னா மதியானத்து வரைக்கும் கூட காலைச் சாப்பாட்ட எடுத்துக்கிட மாட்டாரு. எல்லாத்தையும் அனுப்பிச்சிட்டு மதியானத்துக்கு ரண்டு மணியாலும் அப்பத்தாம் சாப்பிடுவாரு. காலச் சாப்பாட்டுக்கு மின்னாடி சொல்றதுதாங் சரியான சோசியங்றது அவருக்கு ஒரு கணக்கு. மித்தமித்தபடி காசுல்லாம் கறாரா கேக்க மாட்டாரு. காசிய கொடுக்காம போனாலும் ஒண்ணுத்தையும் சொல்ல மாட்டாரு. கொடுக்குற காசிய கையால வாங்க மாட்டாரு. ஒரு எவரு சில்வரு பொட்டி ஒண்ணு இருக்கும். அதுக்கு மேல காசிப் பணத்தெ போடுறாப்புல ஒரு தொளை இருக்கும். அதுல சாதவெத்தப் பாக்க வர்றவங்க போட்டுட்டுப் போவ வேண்டியதுதாம். போடாம போனாலும் அதுப் பத்தி ஒண்ணும் அட்டியில்லெ. இவ்வளவுதாம் சாதவத்தெப் பாக்க கணக்குன்னு எதுவுமில்ல. அது போடுறவங்களோட விருப்பத்தோட சம்பந்தப்பட்டது. அதுல போடுற காசிப் பணத்தையெல்லாம் அவரு பாத்துக்கிட்டு இருக்க மாட்டாரு.
            சங்கு சுப்பிரமணயெம் ரெண்டவதா வர்ற பொண்டாட்டிய அவரே அவரோட வகையறாவுல பாத்து, அவரே அந்தப் பொண்ணோட சாதவத்தையும் பாத்து கலியாணத்தெ கட்டிக்கிட்டாரு. ஊரு ஒலகத்துல தனக்கு வர்றப் போற பொண்டாட்டியோட சாதவத்தெ தானே பாத்து கலியாணம் கட்டிகிட்ட கோடியில ஒருத்தரு இவரத்தாம் இருக்கும். சரியான பொண்ண சாதவத்தெப் பாத்துக் கட்டிக்கிட்டார்னு ஊர்ல ஒலகத்துல பேர்ர சொல்றாப்புல புள்ள ஒண்ணையும், பொண்ணு ஒண்ணையும் பெத்துக்கிட்டு ரொம்ப சிறப்பா தன்னோட வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாரு. அது வேற அவருக்கு ராசியான சோசியருங்றெ பேர்ர வாங்கிக் கொடுக்க ஆளாளுக்கு பலபல ஊர்லேர்ந்து அவருகிட்ட சோசியம் பாக்க வந்துகிட்டுக் கெடக்கறாங்க.
            அத்தோட மங்கல வாயிக்காரர்னு பேரும் உண்டாயிப் போயிடுச்சு. சாதவெம் சரியில்லன்னா வருஷ கணக்கெ சொல்லி வந்து பாக்கச் சொல்லுவாரு. அதாச்சி, ஒரு வருஷம் கழிச்சி வந்துப் பாக்கணும், ரண்டு வருஷம் கழிச்சி வந்துப் பாக்கணும்பாரு. அதுல புரிஞ்சிக்கிடணும், இப்போ சாதவெம் சரியில்லன்னு. சாதவத்துல என்னா சரியில்ல, ஏது சரியில்லன்னுல்லாம் சொல்ல மாட்டாரு. அத்தோட பரிகாரம் பண்றதெப் பத்தியெல்லாம் சொல்ல மாட்டாரு. பரிகாரங்றது சோசியத்துல தப்புங்றது அவரோட கணக்கு. பரிகாரம்னா ஒரே பரிகாரம் சாதவக் கட்டம் சரியாவுற வரைக்கும் தள்ளிப் போடுறதாங் பரிகாரம்பாரு அவரு. மாப்பிள்ள பொண்ணு சாதவெம் சரியில்லன்னா ஒண்ணுஞ் சொல்லாம கையில கொடுக்காம தரையில வெச்சிப்புடுவாரு. அந்தச் சோடியெ கல்யாணம் பண்ணிச் சேக்கவே கூடாதுங்றது அதுக்கு அர்த்தம். மீறிச் சேர்த்தா ஒண்ணு பொண்ணு ஓடிப் போவும், இல்லே பையன் பொண்ண விட்டுப்புட்டு ஓடிப் போயிடுவாம். இல்லாட்டி ரண்டுல ஒண்ணு அற்பாயுசல போயிடும். அதுவும் இல்லாட்டி கட்டையில போற வரைக்கும் ரண்டும் ஒண்ணுக்கொண்ணு சண்டைய போட்டுக்கிட்டு நிம்மதியில்லாம வாழ்ந்துகிட்டு கெடக்கும்.
            மூலங்கட்டளெ வாத்தியாரோட பொண்ணுக்கு தள்ளிப் போயிட்டிருந்த கல்யாண தெசய சரியா கணிச்சி எந்தப் பக்கத்துல பாத்தா மாப்புள்ளப் பயெ கெடைப்பாங்றதெயும் கணிச்சிச் சொல்லி அந்தப் பக்கத்துக்கு அனுப்புனாரு சங்கு. அந்த தெசையிலத்தாம் வாத்தியாரு பொண்ணுக்கு மாப்பிள்ளெ அமைஞ்சி கலியாணம் சட்டுபுட்டுன்னு நடந்திச்சி. அத்தோட ரகுநாதெம் பெரசிடெண்டுக்கு தேர்தல்ல மொத ரெண்டு தடவையும் நின்னாக்கா செயிக்க முடியுமா? முடியாதாங்றதயும் கட்டத்தெ பாத்து சரியா கணக்குப் பண்ணி நின்னா ஜெயிக்கலாம், ஜெயிச்ச பிற்பாடு உசுரே போற அளவுக்குப் பெரச்சனெ வரும், ஆனா உசுரு போவாதுன்னு சொன்னாரு. அப்பிடித்தாம் ஆனுச்சி. மூணாவது தடவெ ரகுநாதெம் பிரசிடெண்டுக்கு நின்னப்போ, இந்தத் தபாவும் செயம்தான்னாலும், உசுரு போற அளவுக்குப் பெரச்சனை வராட்டியும்ன்னு சொல்லிப்புட்டு அதுக்கு மேல சொல்லாம சாதவத்தெ கையில கொடுத்துட்டாரு சங்கு. மூணாவது தடவையும் சங்கு சொன்னபடிக்கி பெரசிடெண்டு ஆயி நாலாவது வருஷத்துல மாரடைப்பு வந்து போயிச் சேந்தாப்புல ரகுநாதெம்.
            ஊரு ஒலகத்துல எங்க எவ்வேம் சாதகத்தப் பாத்தாலும் சங்குகிட்டயும் ஒரு தபா சாதவத்தெ பாக்குறது இங்க ஒரு வழக்கமா போயிடுச்சி. அவரு ஒருத்தருகிட்டயே பாத்தாலே போதும்னாலும், அமங்கமலமான வெசயத்தையோ, கட்டம் சரியில்லாத சாதவத்தையோ பத்தி எதுவும் சொல்லாம கையில கொடுத்துடுவாருல்லா அவரு. அந்த ஒரு கொணம் பிடிக்காம மித்த சோசியக்காரவங்ககிட்ட போறவங்க உண்டு.
            சுப்பு வாத்தியாரு மவ்வேம், மவளோட சாதவத்தெ நாட்டியத்தாங்குடி சோசியருகிட்டெ கேட்ட பிற்பாடு சங்கு சுப்பிரமணியெத்துக்கிட்டயும் ஒரு தபா கேட்டுப்புடுவோம்னு கருக்கலோட கருக்கலா டிவியெஸ்ஸ கெளப்பிக்கிட்டு டுர்ரு டுர்ரு டர் டர்ன்னு கெளம்புறாரு.
*****


25 Feb 2020

உருவானாரு ஒரு சோசியக்காரரு!

செய்யு - 369

            ஊருல அவனவனும் தன்னோட வூட்டுக் கல்யாணத்த போல முன்ன நின்னு செஞ்சி வெச்சாம் சங்கு சுப்பிரமணியத்தோட கல்யாணம். அத்தோட ஊருக்கே கம்பு வாத்தியாரு வேறயா? சொல்லவா வேணும். கல்யாணம் ஏக தடபுடலா நடந்திச்சி. மூலங்கட்டளை வாத்தியாருத்தாம் வந்து தாலி எடுத்துக் கொடுத்து கல்யாணத்தெ பண்ணி வெச்சதெல்லாம். சங்குவுக்குக் கல்யாணம் பண்ணி வெச்ச பொண்ணு அழகுன்னா அழகு அப்பிடி ஒரு அழகு. வாத்தியாருக்கு ஏத்த பொண்ணுன்னு ஊரே பேசுச்சு. கொணமும் அப்படி ஒரு கொணம் அந்தப் பொண்ணுக்கு. வாத்தியாருக்கு ஏத்த ஜோடின்னு ஊரே கண்ணுபட்டுப் போச்சு. வாத்தியார்ர அந்தப் பொண்ணும் கவனிச்ச கவனிப்பு அப்பிடி. எல்லா சந்தோஷமும் மூணு மாசத்துக்குள்ள முடிஞ்சிப் போவும்ணு யாராச்சிம் கனா கினா கண்டாங்களோ என்னவோ! விருந்தும் மருந்து மூணு நாளிக்கி, சந்தோஷமும், துக்கமும் மூணு மாசத்திக்கின்னு சொல்லுவாங்களே அப்பிடியோ என்னவோ!
            அப்படி கவனிச்ச பொண்ணு நாலு நாளா காணும்னா சங்குவுக்கு எப்பிடி இருந்திருக்கும்? ஊருல ஒரு பயலுக்கும், ஒரு பொண்டுக்கும் பச்சத் தண்ணி தொண்டைக்குள்ள எறங்கல. ஊரே வலை போட்டு அங்க இங்கன்னு தேடுது. ஊருல இருந்த அத்தென கிணத்துலயும் மொத தேடுதலு நடக்குது. அதுக்கு அடுத்தாப்புல சிவம் கோயிலுக்கு எதுத்தாப்புல இருந்த கொளத்துல வுழுந்துப் பத்து பாஞ்சு பேரு தேடுறானுவோ தேடுறானுவோ அப்பிடித் தேடுறானுவோ. வண்ணாங்கொளம், பரியாரிக் கொளம், குடியானத் தெரு கொளம், பள்ளத்தெரு கொளம்னு ஒரு கொளம் பாக்கி விடல. வடவாதியில ஓடுற வெண்ணாத்துக்கும் கொத்தூருக்கும் மூணு மைலு தூரம்னாலும் அதுல எதுனாச்சும் பொண்ணு விழுந்திருக்குமோன்னு வடவாதியில ஆரம்பிச்சி அருவாமணி வரைக்கும் கரையோட ஆறு போற தெச அத்தனையும் தேடியாச்சி.
            பொண்ணோட பொறந்த ஊரு இருக்குற வூட்டுக்கு ஆளனுப்பிப் பாத்து அங்கயும் தேடியாச்சி. ஒரு வேளை மனசுக்குள்ள எதாச்சிம் கோப தாபம் இருந்து ஒறவுக்காரவுங்க வூட்டுப்பக்கமா எங்கனாச்சும் போயிருக்குமான்னு அங்கங்கயும் ஆளு வுட்டுப் பாத்தாச்சி. அங்கங்க வெவரம் கேள்விப்பட்டு ஆளுங்க வேற சங்கு சுப்பிரமணியெம் வூட்டுக்குப் படையெடுத்து வாராங்க. அப்பிடி வந்துத் தங்குன ஆளுங்களுக்கு வேற சமையல்கார ஆளெ வெச்சி சோறு பொங்கிப் போடுறாப்புல ஆகிப் போச்சு நெலமெ. தங்குன ஆளுக இந்தத் துக்கத்துக்கு மத்தில கொழம்புல காரம் பத்தல, கறியில உப்பு பத்தல, எத்தனெ நாளிக்கி சோறாவே பொங்கித் தின்னுறது, ஒரு மாத்தலா பூரியோ, பரோட்டாவோ போட்டுத் தொலைங்கப்பான்னு சொல்றானுவோ. எங்கங்கயோ தேடியும் பொண்ணு எங்கனயும் தட்டுப்படுறாப்புல இல்ல.
            ஒரு வேள வடவாதிக்குப் போயி பொண்ணு அங்கயிருந்து பஸ்ஸ பிடிச்சி எங்கினாச்சும் போயிருக்குமான்னு பஸ்காரவுகளயும் விசாரிச்சுச்சு. அப்பயும் சரி, இப்பயும் சரி ஓடுறதெ மொத்தமே மூணு நாலு பஸ்ஸூங்றதால எட்டாம் நம்பரு பஸ்ஸூ, ரண்டாம் நம்பரு பஸ்ஸூ, எம்.எல்.ஏ. பஸ்ஸூ, கும்பகோணத்து மெயிலு பஸ்ஸூன்னு எல்லாத்திலயும் விசாரிச்சாச்சு. அதுல வாடிக்கையா போறவங்களுக்கும், வண்டியோட்டுற ஓட்டுநரு, நடத்துநரு வரைக்கும் ஒரு பழக்கம் என்னான்னா பஸ்ஸூல வர்றவங்க, போறவங்களோட சாதகத்தெ விசாரிச்சி தெரிஞ்சிகிட்டாதாம் அவுகளுக்குத் திருப்திபடும். அதால அவுங்களுக்குத் தெரியாம இந்த ஊருக்கு பஸ்ஸூல போயி, யாரும் ஊரு திரும்பிட முடியாது. அவுங்களும் வெலா வாரியா பொண்ணு பஸ்ஸூ வழியா எங்கனயும் போவலன்னு அடிச்சிச் சொல்லுறாங்க.
            எங்கப் போச்சு பொண்ணுன்னு ஊரே தவிச்சிப் போயிடுச்சு. சங்கு சுப்பிரமணியெம் அதெ விட தவிச்சுப் போயிட்டாரு. கம்பு சுத்துனார்ன்னா எட்டு ஊரு நின்னாலும் வெல வெலத்துப் போயிடும். இப்போ அவரு வெலவெலத்துப் போயிக் கெடக்குறாரு. ஒடம்பெல்லாம் நடுங்குது அவருக்கு. ஒரு வம்பு, சண்டே, கோவம்னாலும் அதுல கோவிச்சுகிட்டுப் பொண்ணு எங்கனாச்சும் போயிருக்கும்னோ, ஆத்துலயோ, கொளத்துலயோ வுழுந்து செத்திருக்கும்னு ஒரு ஆறுதலாவது பட்டுக்கிடலாம். வம்பு சண்டென்னு ஒண்ணு கெடையாது. ஒரு சின்ன மனத்தாபம் கெடையாது. ரொம்ப பெலசாலி, கம்பு சுத்துறதுல கோதாவான ஆளுன்னாலும் சங்கு சுப்பிரமணியெத்துக்கு சின்ன வாய்ச்சண்டைன்னாலும் ஒத்துக்காது. ஒடனே ஒத்துப் போயி நீயி சொல்றதுதாங் சரின்னு அவரு பாட்டுக்குப் போயிட்டே இருப்பாரு. எதிரு பேச்சுல்லாம் பேச மாட்டாரு. அப்பிடி ஒரு ஆளு பொண்டாட்டிக்கிட்ட எப்பிடி நடந்துப்பாருன்னு சொல்லவா வேணும்?
            இங்க ஆளு தளந்துப் போயி உக்காந்ததெ கேள்விப்புட்டு மூலங்கட்டளை கம்பு வாத்தியாரே வந்துப்புட்டாரு. தன்னோட சிஷ்யப்புள்ளைக்கு இப்பிடி ஆயிப் போச்சேன்னு அவரு ரொம்ப தளும்பிப் போயி உக்காந்திருக்காரு. ஒரு வாரம் வரைக்கும் திருவாரூ, ஆர்குடி, கூத்தாநல்லூருன்னு அங்க இங்க அலைஞ்சிம் ஒரு சேதியும் தெரியல. கடைசியலத்தாம் விவரம் தெரிய வந்துச்சி. அது யாராலயும் எதிர்பாத்து யோசிக்க முடியாத ஒண்ணா வேற இருந்துச்சு. அது செரி பொண்ணு தெருவுக்குப் பால் எடுக்க வந்த பால்க்காரேனோட ஓடிப் போவான்னு யாருத்தாம் எதிர்பார்க்க முடியும்? மூணு நாலு நாளா ஊருல பால் எடுக்க வர்ற பால்க்காரன காணுமேன்னு நூலு பிடிச்சிப் போயி அவ்வேம் ஊருக்குள்ள விசாரிச்சா அவ்வேம் அங்க ஆளக் காணும். அப்பிடியே விடாம நூலு பிடிச்சிப் போயித்தாம் அதெயும் கண்டுபிடிக்க முடிஞ்சிது.

            சங்கு சுப்பிரமணியெம் ஒடைஞ்சுப் போயிட்டாரு. ஊருல அவனவனும் பொண்ணப் பாத்தா கண்டம் துண்டமா வெட்டிப் போட்டுப் போடணும்னு வெறி கொண்டு நிக்குறாம். வாத்தியாரோட வாத்தியாரே பேசுனதுக்கே கொதிச்சுப் போன பயலுவோ, வாத்தியாருக்கே ஒண்ணுன்னா ச்சும்மா இருப்பானுவோளா? அவனவனும் கடலு கொந்தளிக்குறாப்புல கொந்தளிக்கிறாம். கடைசியா மூலங்கட்டளெ வாத்தியாரு சொல்றதுதாங் முடிவுன்னு எல்லாரும் அவரோட மொகத்தப் பாக்குறானுவோ. இந்த நெலையில எதாச்சிம் ஒரு முடிவ எடுத்துத்தான ஆவணும். மூலங்கட்டளெ வாத்தியாரு சொல்றாரு, "ஒரு பொண்ணோட மனசெ யாரும் ஒண்ணும் பண்ண முடியா. அத்து யாரோட வாழணும்னு பிரியப்படுதோ அத்தோடத்தாம் அத்து வாழும். அத்தெப் பிரிச்சிக் கொண்டாந்து மறுக்கா எஞ் சிஷ்யப் புள்ளயோட வாழ வெச்சாலும், மறுக்கா அத்து ஒடிப் போவாதுன்னு ன்னா நிச்சயம். பொண்ணோட வூட்டுக்காரவுங்க இத்த அத்து வுடச் சம்மதிச்சாவணும். எஞ் சிஷ்யப்புள்ளே மறுக்கா வேற ஒரு நல்லப் பொண்ணா பாத்துக் கல்யாணத்த பண்ண சம்மதத்தெ கொடுத்தாவணும்!"ன்னாரு.
            அவரு அப்பிடிச் சொன்னதுதாம் தாமசம், பொண்ணு வூட்டுக்கார சனங்க ஓடியாந்து மூலங்கட்டளெ வாத்தியாரோட காலுல வுழுவுறாங்க. அவரோட கால பிடிச்சிக்கிட்டு, "யய்யா! எஞ்ஞ வூட்டுல இன்னொரு பொண்ணு இருந்தா ஒஞ்ஞ சிஷ்யப் புள்ளைக்கி எஞ்ஞ மாப்புள புள்ளைக்கியே கட்டிக் கொடுத்திடுவேம். அப்பிடி ஒரு பாக்கியம் இல்லைங்களே. எஞ்ஞ ஊர்ல, எஞ்ஞ வகையறாவுல எந்தப் பொண்ண ஒஞ்ஞ சிஷ்யப் புள்ளெ வெரல நீட்டிச் சொல்றாரோ அந்தப் பொண்ண கொண்டாந்து கட்டி வெச்சாத்தாங்கய்யா எஞ்ஞ குடும்பத்தெ பிடிச்ச பாவம் போவும்!"ன்னு கதறி அழுவுறாங்க.
            "யேய் சங்கய்யா! ஒம் மனசுல உள்ளதெச் சொல்லு!"ங்றாரு இப்போ மூலங்கட்டளெ வாத்தியாரு.
            "அத்து வந்து... அத்து மேல உசுரையே வெச்சுப்புட்டேம்யா! வாத்தியாரய்யா!"ன்னு தளும்புனாரு பாருங்க சங்கு சுப்பிரமணியெம் ஊரே கொந்தளிச்சிப் போயிடுச்சி. "ஓடுகாலிச் சிறுக்கி! இந்த மவராசனெ வுட்டுப்புட்டா எச்சக்கார பயலோட ஓடிப் போயி..."ன்னு ஆளாளுக்குக் கெட்ட கெட்ட காது கூசுறாப்புல வசவுகள அள்ளி வீசுதுங்க சனங்க.
            "த்தா... நிறுத்துங்க எல்லாம்!"ன்னு ஒரு அதட்டல போட்டாரு மூலங்கட்டளெ வாத்தியாரு. சத்தம் சர்வமும் அடங்கிப் போச்சு.
            "நடந்தது நடந்துப் போச்சி. ஆரும் ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல. ஆத்திரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு ஆவப் போறது ஒண்ணுமில்ல. உண்மையான கம்புக்காரவங்கறவெம் இந்த மாதிரிச் சந்தர்ப்பத்துல நெதானமா இருக்கிறவேம்தாம். எஞ் சிஷ்யப்புள்ளே அப்பிடி இருக்காம். நமக்கு ரொம்ப பெருமைத்தாம். இந்தாருய்யா சங்கய்யா மனசு வுட்டு அழுவணுமா அழுதுப்புடு. ஊரு ஒலகத்துல நடக்காத சங்கதி ஒண்ணும் நடந்துப்புடல. ஒங் கூட குடும்பம் நடத்த வக்கில்ல அந்தக் கொசகெட்ட சிறுக்கிக்கு. பாவிப் பய மவள கொண்டாந்து ஒந் தலையில கட்டியாச்சி. அதெ வுடு. இன்னிலேந்து ஒரு வாரத்துக்குள்ள ஒங் கலியாணத்தெ முடிச்சாவணும் இந்த வாத்தியாரு. ஒஞ் சம்மதத்தெ சொல்லு!"ங்றாரு மூலங்கட்டளை வாத்தியாரு.
            "அத்தெ நம்மால மறக்க முடியா. இப்பிடியே நம்மள வுட்டுப்புடுங்க வாத்தியாரய்யா!"ன்னு சின்னப் புள்ள கணக்கா குலுங்கிக் குலுங்கி அழுவுறாரு சங்கு சுப்பிரமணியெம்.
            "அடச்சீ! அவ்வே ஒரு பொம்பளென்னு அவளெ மறக்க முடியான்னுகிட்டு? அவளெ விட ராஜாத்தியெ, அழகியெ கொண்டாந்து கட்டி வைக்கிறேம் பாரு ஒமக்கு! எம் மவராசம்டா நீயி! மவராணிய கொண்டாராம்டா சங்கய்யா!"ங்றாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
            "மனசு போறல்லயோ! மனசு சம்மதம் சொல்ல மாட்டேங்குதய்யா! வாத்தியாரு கேட்டும் மறுக்குதேய்யா!"ன்னு ஓலமிடுறாரு சங்கு.
            "ஜாதவெம் அப்பிடி இருக்கே! ஜாதவெத்தெ ஆரு ன்னா பண்றதுக்கு?"ன்னு சொன்னாரு பாருங்க மூலங்கட்டளெ வாத்தியாரு, அங்கப் பிடிச்சிக்கிட்டாரு சங்கு சுப்பிரமணியெம். "ஜாதவெம்! ஜாதவெம்!"ன்னு சொல்லிக்கிட்டு பைத்தியம் பிடிச்சவரு மாதிரி அன்னிக்குச் சிரிச்சாரு பாருங்க ஒரு சிரிப்பு. சுத்தி நின்ன சனமெல்லாம் அவருக்குப் பைத்தியம்தாம் பிடிச்சிக்கிட்டுன்னு நெனைச்சிகிட்டு. மூலங்கட்டளெ வாத்தியாரும் அவர்ர பிடிச்சிக்கிட்டு, "யேய் சங்கய்யா! என்னம்மடா ஆச்சு ஒமக்கு! யேய் சங்கய்யா!"ன்னு தோளப் போட்டு உலுக்கறாரு.
            "ஜாதவெம்! ஜாதவெம்!"ன்னு சொல்லி மறுக்கா மறுக்கா சிரிச்சிக்கிட்டே இருக்காரு சங்கு சுப்பிரமணியெம்.
            அன்னிக்கு ஊர விட்டுக் கெளம்பி ஊரு ஊரா அலஞ்சி அங்கங்க இருக்குற சாதகம் பாக்குறவங்க, சோசியம் பாக்குறவங்கிட்டயெல்லாம் காலடியில கெடந்து அதெ கத்துக்கிட்டு அவரு ஊரு திரும்புனப்போ முடியெல்லாம் வெச்சிகிட்டு, கொண்டையெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம வளத்துக்கிட்டு சாமியார்ரப் போல சோசியக்காரரா திரும்புனாரு சங்கு சுப்புரமணியெம்.
*****


தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...