Showing posts with label Operation Silent. Show all posts
Showing posts with label Operation Silent. Show all posts

2 Feb 2026

ஆபரேஷன் சைலண்ட் – ரகசியம் காத்தல் & காரியம் முடித்தல் பற்றியது!

ஆபரேஷன் சைலண்ட் – ரகசியம் காத்தல் & காரியம் முடித்தல் பற்றியது!

தன்னம்பிக்கை புத்தகங்களில் ‘உன்னால் முடியும் தம்பி’ ரகக் கட்டுரைகளைப் படிக்கும்போது ஒரு சந்தேகம் வரும். ஒரு தனி மனிதன் நினைத்தால் இமயமலையை இடமாற்றி விடலாம் என்று எழுதுகிறார்கள். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறை வேறு. ஏதேனும் பூமி அதிர்வோ, கடற்கோளோ நடந்து இமயமலை நகர்ந்தால்தான் உண்டு.

அப்படியிருக்க ஏன் இப்படி எழுதுகிறார்கள்? தமிழ்ப்படங்களில் நடக்கும் நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்கின்ற இவை போன்ற சம்பவங்கள் நடைமுறையில் வாழ்க்கையில் பக்காகி விடும். இதிலும் ஒரு விடயம் இருக்கிறது. இது ஒரு கும்பல் உளவியலை உருவாக்க நினைக்கும் முயற்சி. தனியாக இருக்கும் போது மனிதர்கள் சிறு கல்லை நகர்த்த கூடசோம்பல் படுவார்கள். அதுவே, ஆயிரக்கணக்கில் சேரும் போது இமயமலையைக் கொத்தி அப்படியே கொத்து பரோட்டா போட்டு சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.

மனிதர்கள் தனித்தனியாக இருக்கும்போது புத்திசாலிகள். ஆனால் ஒரு கூட்டமாகச் சேரும்போது அவர்களுக்கு ஒரு விசித்திரமான மனநிலை வந்துவிடுகிறது. கூட்டமாகச் செயல்படும்போது அவர்கள் எதற்குப் பிரதிவினை செய்வார்கள், எதற்கு மவுனமாக இருப்பார்கள் என்பதைக் கணிக்க ஒரு தனி அல்காரிதம் தேவை. அது தெரியாமல் நீங்கள் களத்தில் இறங்கினால், தர்ம அடிதான் கிடைக்கும்.

இந்தக் கும்பல் உளவியலைத் தூண்டி விடும் புத்தகங்கள், பஞ்சாங்கத்தைப் போலவும், சமையல் புத்தகங்களைப் போலவும் அமோகமாக விற்பனை ஆகும். அப்படி ஒரு புத்தகத்தை எழுத ஆசைப்படும் கனவான்கள் தமிழ்நாட்டில் நிறைய பேர். அவர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே மாஸ்டர் பீஸ் மனநிலைதான்.

பலர், நான் எழுதினால் பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்குத்தான் எழுதுவேன், என்று பேனாவைத் திறக்காமலேயே காலத்தைக் கடத்துகிறார்கள். இது தப்பு. நீங்கள் பாட்டுக்கு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி எழுதிக் குவிக்கும் குப்பைகளுக்கு நடுவில்தான் எங்காவது ஒரு பொக்கிஷம் ஒளிந்து கொண்டிருக்கும். வைரத்தைத் தேடிப் போவதை விட, மணலைத் தோண்டிக் கொண்டே இருங்கள், வைரம் தானாகச் சிக்கட்டும். அந்தப் பொக்கிஷத்தை மட்டும் எடுத்து மெருகேற்றிப் பதிப்பிக்க வேண்டும்.

கடைசியாக ஒரு குறிப்பு,

நம் ஊரில் எதையும் சாதிப்பவர்களை விட, சாதிக்க விடாமல் தடுப்பவர்களுக்குத்தான் யூனியன் அதிகம். நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அதை எப்படி முடக்கலாம் என்று ஒரு கோஷ்டியே கிளம்பும். ஆகவே, மற்றவர்களைச் சாதிக்க வைக்க புத்தகம் எழுத நினைக்கும் நீங்கள் முதலில், உங்கள் சாதனைப் புத்தகத்தை எழுதும் வரை வாயைத் திறக்கக் கூடாது, பேனாவையோ, லேப்டாப்பையோ மட்டும்தான் திறக்க வேண்டும். இல்லையென்றால் வெறும் சத்தம்தான் மிஞ்சும்.

*****