ஓர் இளைஞரின் குளோபல் வில்லேஜ் கனவுகள்
வாழ்வியல் தொடர்பான நூல்கள் நிறைய வெளிவரும்
காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எப்படி நட்பு கொள்வது? எப்படி காதல் செய்வது?
பொது இடங்களில் நாகரிகமாக நடந்து கொள்வது எப்படி? என்பது குறித்து எல்லாம் நூல்கள்
இருக்கின்றன. பரபரப்பான வாழ்வில் பல விசயங்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. மறைந்து
வரும் அந்த விசயங்களை வாழ்வியல் நூல்கள் மீட்டுருவாக்கம் செய்ய விழைகின்றன.
எழுத்தாளர் பா.வெ. அவர்களின் 'பரபரப்பாய்...
பக்குவமாய்...' எனும் நூல் பரபரப்பான வாழ்விலிருந்து பக்குவமான வாழ்வை நோக்கி நகர்வது
எப்படி என்பதைப் பற்றி பேசும் ஒரு நூல் ஆகும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்
பவணந்தி. பழைய பக்குவம் கழிந்து புதிய பரபரப்பு வாழ்வில் புகுந்திருக்கிறது.
ஒவ்வொரு காலகட்டத்துக்கும் அப்போதைய
நிலை பரபரப்பே. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இப்போது வாழ்ந்த வாழ்வு
பக்குவம் என்பது போலும் அப்போது வாழும் வாழ்வு பரபரப்பாய்த் தோன்றும்.
பரபரப்பைத் தவிர்க்க முடியாது. பரபரப்பு
குறித்து பார்வையை மாற்றிக் கொள்ள முடியும். பக்குவமான நிலையை நோக்கி நகர முடியும்
என்பதுதான் பா.வெ.வின் சிந்தனையாக்கம்.
பா.வெ. இந்த நூலில் பரபரப்பு என்று குறிப்பிடுவதை
ஐந்து வகைமைக்குள் அடக்கலாம்.
1. அலுவலகம் சார்ந்த பரபரப்பு,
2. வேகமான பயணங்கள் மற்றும் போக்குவரத்து
உருவாக்கிய பரபரப்பு,
3. நகர்மயமாதலால் உண்டான பரபரப்பு,
4. நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கத்தால்
ஏற்பட்ட பரபரப்பு,
5. கல்வி மோகம் வளர்த்தெடுத்த பரபரப்பு.
இதற்கானத் தீர்வுகளை அவர் தன் பால்யத்திலிருந்தும்,
தன் அனுபவத்திலிருந்தும் முன்வைக்கிறார். அப்படி அவர் முன்வைக்கும் தீர்வுகளை ஐந்து
வகைமைக்குள் அடங்கலாம்.
1. கிராம வாழ்வை நோக்கிய மீட்டுருவாக்கம்,
2. கூட்டுக்குடும்ப வாழ்வை மீண்டும் கட்டமைத்தல்,
3. அளவளாவுதலுக்கு அக்கறையோடு நேரம் ஒதுக்குதல்,
4. அளவான எதிர்பார்ப்போடு கூடிய முறையான
திட்டமிடல்,
5. மனதை அவ்வபோது பகுப்பாய்வு செய்தல்.
நூலில் தன்னுடைய பால்யத்தையும், கிராமத்தையும்
சொற்களைச் சுழற்றி சித்திரமாய்ப் படைத்து கிராம வாழ்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற
ஆர்வத்தை உண்டு பண்ணுகிறார் பா.வெ. விவசாயத்தை வாழ்வியல் முறையாகக் கொள்ளும் வாழ்க்கை
முறைக்கு அழைப்பு விடுகிறார். இந்த விவசாய தேசத்தில் விவசாயத்தை நோக்கி வாருங்கள்
என்று அழைப்பு விடுப்பது என்ன ஓர் ஆச்சரிய முரண்! அந்த முரணுக்கு பழக்கப்பட்டுப் போய்
விட்டதே இந்த வாழ்க்கை.
நாட்டு மாடு, குளம், கிணறு, முடக்கத்தான்
தோசை, நீர் உருண்டை என்று நூலில் காட்சிப்படும் கிராமம் மனதுக்குள் எச்சில் ஊற வைக்கிறது.
பஞ்சாரத்தில் அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சுகளாய்க் கீச்சிடுகிறது.
தொலைக்காட்சிகளும், செல்பேசிகளும் அளவளாவுதலுக்கான
நேரத்தை அபகரித்து விட்டதாக, ஒட்டு மொத்த வாழ்வையும் பொழுதுபோக்கு அம்சங்கள் போதையாக்கி
விட்டதாக நீட்டோலை நீட்டும் நூலாசிரியர்,
பழக்கத்தை மாற்றிக் கொள்ள நான் ஏன் பழகக் கூடாது என்று அதற்குக் குறிப்போலையையும்
நீட்டுகிறார்.
நூலின் கட்டுரைகள் அன்றும் இன்றும் என்று
ப்ளாஷ்பேக்குக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறி பயணித்துக் கொண்டே பரபரப்பிலிருந்து
பக்குவமான ஒரு பாதையை நோக்கி நகர்த்துகின்றன.
பா.வெ. முன் வைக்கும் பரபரப்பின் பட்டியல்கள்
அதிகம். அப்பட்டியல்களில் உள்ள ஒவ்வொன்றும் புரிந்து கொள்ளாமையால் நேர்பவைகள் என்பதையும்
அவரே சுட்டுகிறார்.
புரிந்து கொள்ளாமல் கத்துவது கோபம்,
புரிந்து கொள்ளாமல் மனதுக்குள் கதறுவது
கவலை,
புரிந்து கொள்ளாமல் வெளியில் பதறுவது
டென்ஷன் என்று அவர் தரும் விளக்கம் அவர் சுட்டிக் காட்டும் பட்டியல் பிரச்சனைகளுக்கு
ஒட்டுமொத்தத் தீர்வைத் தருகிறது.
நகரம் பரபரப்பாய்த் தோற்றம் தருகிறது.
கிராமம் பக்குவமாய்த் தோற்றம் தருகிறது. நகரத்து உடலுக்குள் ஒரு கிராமத்து மனதை ஏன்
பொருத்தி வைக்கக் கூடாது? கிராமங்கள் நகர்மயமாகி ஒரு பரபரப்பைச் சந்திப்பதை மாற்றி
நகர்மயம் கிராம மயமாகி ஏன் ஒரு பக்குவத்தை அடையக் கூடாது என்பதே இந்நூல் முன்வைக்கும்
வாதம்.
அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ள விரும்புபவர்கள்
இந்த நூலை கலந்தாலோசிக்கலாம். இந்நூலில் உள்ள கருத்தாக்கங்களை முயன்று பார்க்கலாம்.
இன்று இளைஞர்கள் அதிகம் இல்லாத கிராமங்களில்...
ஓர் இளைஞராய் கிராமத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற பா.வெ. அவர்களின் துடிப்பு ஒவ்வோர்
இளைஞருக்கும் ஏற்படும் போது பக்குவமான ஒரு மாற்றம் ஏற்படும். உலகமே ஒரு குளோபல் வில்லேஜ்
எனும் போது அந்த வில்லேஜ்தானே இனிவரும் உலகைக் கட்டமைக்க முடியும்.
பா.வெ.வின் இக்கனவைத் தொடர விரும்புபவர்களுக்கும்,
'பரபரப்பாய் பக்குமாய்' என்ற இந்த நூலை வாசிக்க விரும்புபவர்களுக்கான நூல் தொடர்புக்கான
முகவரி -
அகரம்,
மனை எண் 1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் - 613 007
தொடர்பு எண்கள் - 04362 239289,
75983 06030
மின்னஞ்சல் - annamakaram@gmail.com
வலைதளம் - www.annamakaram.com
*****
பாவே நூல் மிகவும் அருமை. அனைவரும் படிக்க வேண்டியது.
ReplyDeleteதங்களது மேலான கருத்துக்கு நன்றி ஐயா!
Deleteபா.வெ என்பது பா.வெங்கடேசன் தானே?
ReplyDeleteஅவரேதான்!
Deleteபா.வெங்கடேசன் என்ற பெயரில் தமிழ் எழுத்தாளர்கள் இருவர் இருக்கிறார்கள். இருவரும் முன்னெழுத்தும் பெயரும் ஒன்றுபட்ட அபூர்வமானவர்கள்.
Deleteஒருவர் வாரணாசி எனும் புதினம் எழுதியுள்ள பா.வெங்கடேசன்.
இன்னொருவர் விற்பனைக்கு வராத கற்பனைகள் என்ற கவிதை நூலும், பரபரப்பாய் பக்குவமாய் என்ற கட்டுரை நூலும் எழுதியுள்ள பா.வெங்கடேசன்.
இந்நூல் விமர்சனத்தில் இடம்பெற்றுள்ள பா.வெ. எனும் பா.வெங்கடேசன் விற்பனைக்கு வராத கற்பனைகள், பரபரப்பாய் பக்குவமாய் ஆகிய நூல்களின் ஆசிரியர் ஆவார்.
படியுங்கள் பயன் பெறுங்கள்
ReplyDeleteதங்களது மேலான கருத்துக்கு நன்றி ஐயா!
Delete