Showing posts with label டெல்டா விவசாயம். Show all posts
Showing posts with label டெல்டா விவசாயம். Show all posts

22 Nov 2024

உலகின் ஒன்பதாவது அதிசயம்!

உலகின் ஒன்பதாவது அதிசயம்!

இந்த நேரத்தில் அதாவது இந்த நவம்பர் மாதத்தில் டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் வயல்களைப் பார்ப்பது எவ்வளவு மகோன்னதமான காட்சியாக இருக்கும் தெரியுமா?

பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் காற்றில் அசைந்தாடுவது கடல் அலைகளைப் பச்சை நிறத்தில் பார்ப்பது போல இருக்கும். நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தியிருப்பது போல என்று சொல்வது எவ்வளவு உண்மை என்பது அந்தக் காட்சியைக் காணும் போது புரிய வரும்.

உங்கள் கிராமங்களில் அப்படித்தான் வயல்கள் தற்போது காட்சி அளிக்கின்றனவா? டெல்டாவின் கடைமடைப் பகுதி கிராமங்களில் ஒன்றான எங்கள் கிராமத்தில் அப்படிப்பட்ட காட்சியை இந்த ஆண்டு ஏனோ காண கிடைக்கவில்லை.

ஆங்காங்கே இடையிடையே நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. ஒவ்வொரு வயலிலும் முன்னே பின்னே நெற்பயிர் வளர்ந்திருப்பதில் பச்சைக் கடலலையைப் பார்ப்பது போன்ற காட்சியையோ, நிலமகள் பச்சைப் பட்டாடை உடுத்தியது போன்ற நேர்த்தியையோ காண முடியவில்லை. இது டெல்டாவில் நேர்ந்திருக்கும் உல்டா. டெல்டாவுக்கு வந்த சோதனை.

நாற்றாங்கால் அமைத்து நாற்று பறித்து நடவு நட்ட காலம் மலையேறி எங்கேயோ போய் விட்டது. தெளிவிதை முறையிலான விவசாயத்தில் வயல்களில் காடுகள் போல களை மண்டிக் கிடக்கின்றன. கையில் பணம் இருப்போர் ஆட்களை வைத்துக் களை எடுக்கின்றனர். முடியாதோர் களையோடு களையாக நெற்பயிர் வளரும் வரை வளரட்டும், வளராவிட்டால் போகட்டும் என்று விட்டு விட்டனர்.

இதற்கிடையே ஆங்காங்கே நடவு இயந்திரம் மூலம் நட்டு வைத்திருப்பவர்களின் வயல்களும் இருக்கின்றன. அந்த வயல்களில் களைகள் அவ்வளவாக இல்லை. அந்த வயல்கள்தான் நாற்று தூர் கட்டி பார்ப்பதற்கு கொஞ்சம் நேர்த்தியாக இருக்கின்றன. ஆனாலும் நாற்று பறித்து நடவு நடும் வயல்களின் அழகுக்கு அதுவும் ஈடாகாது.

முன்பெல்லாம் வயல்களைத் தரிசு போட முடியாதபடிக்கு விவசாயிகளிடம் அது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. யாருடைய வயலையும் தரிசு போட யாரும் அனுமதிக்க மாட்டார்கள். இப்போது வயல்களைத் தரிசு போடுவதைக் கடனில் சிக்காமல் கௌரவமாக இருப்பதற்கு ஒரு வழிமுறையாக விவசாயிகள் பார்க்கத் தொடங்கி விட்டனர். இப்படி ஒரு புதிய மனநிலைக்குப் பல சிறு குறு விவசாயிகள் வந்து விட்டனர்.

ஏன் டெல்டாவின் கடைமடைப் பகுதிகளில் விவசாயம் இப்படி ஆனது?

சம்பா பருவத்தில் ஒரே நேரத்தில் நாற்று விடுவதும், நாற்று பறிப்பதும், நாற்று நடுவதும் எல்லாம் ஒரே சீராக இருக்கும் காலம் ஒன்றிருந்தது. அப்போது பாசனமும் சரியாக இருந்தது. விவசாயிகளிடம் ஒற்றுமையான மனப்பாங்கும் இருந்தது. இப்போது ஆற்றில் தண்ணீர் வருவதிலிருந்து, ஆற்றிலிருந்து வாய்க்கால்களுக்குத் தண்ணீர் வந்து, வாய்க்கால்களிலிருந்து வயலுக்குத் தண்ணீர் செல்வது வரை எல்லாவற்றிலும் சீரற்ற தன்மை காணப்படுகிறது.

ஆற்றில் முறை வைத்து சரியாகத் தண்ணீர் வருவதில் முதல் சிக்கல் உண்டாகிறது. இது தண்ணீர் திறந்து விடும் அரசு நிர்வாக தரப்பில் உண்டாகும் பிரச்சனை. ஆற்றில் வந்த தண்ணீர் வாய்க்காலில் வருவது அடுத்த பிரச்சனை.  இதற்கு வருடா வருடம் தூர் வாராமல் கிடக்கும் வாய்க்கால்கள் ஒரு காரணம் என்றால், வருடா வருடம் ஒப்பந்தக்காரர்கள் செழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆழம் புரியாமல் தூர் வாரி விடுவது மற்றொரு காரணம்.

வாய்க்கால்களிலிருந்து வயல்களுக்குத் தண்ணீர் பாய்வதில் நிலவும் பிரச்சனை விவசாயிகளால் ஏற்பட்டவை. இது விவசாயிகளே விவசாயத்துக்கு வைத்துக் கொண்ட சூன்யம். வடிகால் வாய்க்கால்களை அழித்து விட்ட அவர்கள் பாசன வாய்க்கால்களையும் சுருக்கி விட்டார்கள். ஏன் இப்படி செய்தார்கள் இந்த விவசாயிகள்? வாய்க்கால்களைத் தூர்த்து வயல்களை விரிவுபடுத்தினால் கூடுதலாக கிடைக்கும் அந்த நிலப்பரப்பில் ஒரு மூட்டையோ, இரண்டு மூட்டையோ கூடுதலாக நெல் விளைந்து, அதன் மூலம் நாட்டின் நெல் உற்பத்தி அதிகரித்து விடாதோ என்ற சிந்தனைதான் காரணமோ என்னவோ?

இப்படி விவசாயத்திற்கு எதிராக பாசன நிர்வாகம், விவசாயப் பணிகளின் மேலாண்மை மற்றும் விவசாயிகள் எல்லாரும் இருந்தும் விவசாயம் எப்படியோ இந்தக் கடைமடைப் பகுதிகளில் நடந்து கொண்டிருக்கிறது என்பதே உலகின் ஒன்பதாவது அதிசயம்தான். இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரை எல்லாருக்கும் சோறு கிடைக்கும். இந்த அதிசயம் எப்போதும் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் உங்களைப் போன்று என்னுடைய பிரார்த்தனையும்.

*****