Showing posts with label A Scan Report of Mind. Show all posts
Showing posts with label A Scan Report of Mind. Show all posts

4 Feb 2026

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

மனசு ஒரு குரங்கா என்றால், இல்லை, அதைவிட மோசம். ஒரு சேனலில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் ரிமோட் இல்லாத டிவி போன்றது. கவனச் சிதறல் அதன் செல்லக் குழந்தை. ஒரு புள்ளியில் நிற்க மறுக்கும். ஆழி சூழ் உலகு மாதிரி இது ஒரு மாதிரி நிறைவின்மை சூழ் வாழ்க்கை. இது தன்னைத் தானே பிய்த்துப் போட்டுக் கொள்ளும் ஒரு சைக்காலஜிக்கல் அரக்கன். கடைசியில் ஐயோ, வலிக்கிறதே, ரத்தம் வருகிறதே என அழும். அதற்கு ஆபரேஷன் செய்தால் வலிக்குமா என்று நம்மையே கேட்கும்.

இதிலிருந்து தப்பிப்பதற்கான கொள்கை ரொம்ப எளிமையானது.  அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. பிறகு, சுவாசிப்பதற்கு நமக்கு மூக்கு இல்லாமல் போய் விடும். அது ஆபத்து மட்டுமல்ல, அநாகரிகம். மற்றவர் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பது ஒரு தியேட்டர் அனுபவம் போல. அவர் நெருப்பில் குதிக்கும்போது, நாமும் கூடவே குதிப்பது முட்டாள்தனம். ஏற்கனவே வாழ்க்கை ஏகப்பட்ட பிரச்சனைகளை இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்போது, நாமாகப் போய் பெய்ட் சர்வீஸ் எடுத்துக் கொண்டு நாசமாகத் தேவையில்லை. வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்போதும் பை ஒன், கெட் டூ அல்லது பைன் ஒன் கெட் ஒன் ப்ரீ ஆபர்தான். அதனால் எச்சரிக்கை ரொம்பவே அவசியம்.

அடுத்தது, மகிழ்ச்சி. அது ஒரு தனிநபர் சொத்து. மற்றவர்களிடம் போய் பிச்சை கேட்பதில் அர்த்தமில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சும். சுய மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு அதுதான் ஒரு தற்காப்பு கலை. என் மகிழ்ச்சிக்கு நான் தான் ஸ்பான்சர். அது மற்றவன் தருவதை விடக் குறைவாக இருக்கலாம், ஆனால் அது சுத்தமானது. கலப்படமில்லாதது. எனது தேவை, எனது விருப்பம். இதில் மற்றவர்களின் தீர்ப்புகளுக்கு வேலையே இல்லை.

உழைப்பது பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே நேற்று கொஞ்சம் சொல்லி விட்டேன். இன்னும் கொஞ்சம் சொல்லவும் இடம் இருக்கிறது. மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்வது தவிர்க்க முடியாது. செருப்பு கொழுப்பதற்கா பிறந்திருக்கிறது, தேய்வதற்குத்தானே. அப்படித்தான். இப்படி படாத பாடு படுவதற்காக யாரும் வந்து பொன்னாடை போர்த்த போவதில்லை, கை தூக்கி விடவும் போவதில்லை. அவரவர் வீடு, அவரவர் பாடு. அதனால் யாருக்காகவும் எதையும் பாலிஷ் செய்ய வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக உழைப்பது என்பது கமர்ஷியல் சினிமா போல. நமக்கு எதார்த்த சினிமாவே போதுமானது. பட்ஜெட்டும் கம்மி, சென்சார் பிரச்சனைகளும் இருக்காது. யாரோ ஒருத்தர் எப்போதாவது பார்த்து அடடா என்பார். அது போதும் நமக்கு.

சுருக்கமாகச் சொன்னால்… இதைச் சொல்ல ஒரு மாதிரியாகவும் இருக்கிறது, எல்லாரும் சொல்லி விட்டார்கள், இருந்தாலும் வேறு வழியில்லை,  எண்ணங்களை வேடிக்கை பாருங்கள். புரிந்துகொள்ள முயலுங்கள். மனநிறைவு என்பது வெளியே இல்லை, அது உங்களின் சொந்த ப்ரைவேட் ஏரியா. இது எங்க ஏரியா, உள்ளே வராதே என்பது இதற்கு மட்டும் நூறு சதவீதமென்ன, இருநூறு சதவீதம் கூட பொருந்தும். நீங்கள் உங்கள் மனதை ஸ்கேன் செய்யும் போது, வேறு எதாவது தோன்றினால், அதையும் சொல்லுங்கள். சேர்த்துக் கொள்வோம்.

*****