26 Feb 2019

சிட்டிசன் ஆப் இந்தியா



செய்யு - 8
            விகடு, சின்னுவும் இடமும் வலமாய் பரமு நடுநாயகமாய் மஞ்சள் பையைத் தூக்க மூவரும் வேகநடையில் போய்க் கொண்டு இருந்தனர். பையின் காது கையை இறுக்குவது போலிருந்ததது பரமுவுக்கு. பையைக் கை மாற்றி விடலாமா என்று யோசித்தான். மனசு வரவில்லை. பரமு லஸ்கர் வீடு வந்ததும் சின்னுவை அனுப்பி எருமை கொய்யாக்கா வாங்கி வரச் சொன்னான். இப்படி அவர்கள் மஞ்சப் பையைத் தூக்கிக் கொண்டு வரும் போது லஸ்கர் வீட்டில எருமைக் கொய்யாக்காய் வாங்கிக் கொள்ள வேண்டும். வாத்தியார் வாங்கி வரச் சொன்னார் என்றால் தாராளமாகக் கொடுப்பார்கள் லஸ்கர் வீட்டில்.
            இரண்டு கைகளிலும் ஏழு கொய்யாக்காய்களோடு வந்தான் சின்னு. விகடு இரண்டு கொய்யாக்காய்களை வாங்கிப் பக்கத்துக்கு ஒன்றாக கால்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டான். கொய்யாக்காய் பெரிசாக இருந்தது. திணித்த பின் கால்சட்டை தொடையை இறுக்குவது போலிருந்து. பரமுவும் கால்சட்டைப் பையின் இரண்டு பக்கமும் திணித்துக் கொண்டான். சின்னுவும் அவ்வாறு திணித்துக் கொண்ட பிறகு அவன் கால்சட்டையின் பின்பக்கம் இருந்த கிழிசல் அகற்றிக் கொண்டு நன்றாகத் தெரிந்தது. எஞ்சியிருந்த ஒரு கொய்யாக்காவை சின்னுவே கையில் வைத்துக் கொண்டான்.
            மூவரும் ஓட ஆரம்பித்தார்கள். கால்சட்டைப் பையில் புடைத்துக் கொண்டிந்த கொய்யாக்காய் ஓட ஓட உறுத்துவது போலிருந்தது. "கொய்யாக்கா கிச்சுகிச்சு மூட்டுற மாதிரி இருக்குடா!" என்றான் சின்னு. அவர்கள் ஓடியதில் பரமுவின் கையில் இருந்த பையில் ஏற்பட்ட குலுங்கலில் சலக்கு சலக்கு என்ற சத்தம் கேட்க ஆரம்பித்தது. உள்ளே தூக்கு வாளியிலும், கூஜாவிலும் இருந்த கள்ளு பையை நனைக்க ஆரம்பித்தது.
            பரமு அதில் விரலைத் தொட்டு வாயில் வைத்துப் பார்த்தான். "இன்னிக்கு கொஞ்சம் இனிக்குது. அப்படியே கொஞ்சம் புளிக்குது!" என்றான்.
            தொடப் போன சின்னுவின் கையைத் தட்டி விட்டு அவனே தன் விரலைத் தொட்டு சின்னுவின் நாக்கில் வைத்தான். "போடா! நல்லா இனிக்குது!" என்றான் சின்னு.
            அப்புறம் விகடுவின் வாயில் வைத்து விட்டு, "உனக்கு எப்படிடா இருக்கு?" என்றான்.
            "எனக்கு ஒண்ணும் தெர்யல! ஆனா நல்லால்ல!" என்றான் விகடு.
            "டுர்... டுர்... டுர்..." என்று இழுவைச் சத்தத்தோடு வண்டி மேலேற முடியாத பாவனையில் அவர்கள் சத்தமிட்டுக் கொண்டே பாலத்தின் மீது ஏறினார்கள்.
            "ர்ர்ர்ர்ர்ர்..." என்ற சத்தத்தோடு லாவகமாக வண்டி இறங்குவது போன்ற பாவனைச் சத்தத்தோடு பாலத்திலிருந்து இறங்கி ஓடினார்கள்.
            லாலு வாத்தியார் பக்கா பில்டிங்கின் வராண்டாவில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார். அங்கே ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த ஒரு சில பிள்ளைகளையும் ஓட்டு பில்டிங் வராண்டாவிற்கு அடித்து விரட்டியிருப்பார் போல. வந்திருந்த பிள்ளைகள் ஓட்டு பில்டிங் வராண்டாவில் அங்கும் இங்குமா ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் கையை ஆட்டிவிட்டு பக்கா பில்டிங்கின் கீழண்டைப் பக்கம் சாய்ப்பாகப் போடப்பட்டிருந்த சமையல்கட்டின் பின்பக்கம் போனார். மூவரும் அவரைத் தொடர்ந்து பின்பக்கம் போனார்கள்.
            "வழியில எங்கேயும் நிக்கலல்ல?" என்றார் வாத்தியார்.
            "லஸ்கர் வீட்டுல மட்டும் எரும கொய்யாக்கா வாங்க நின்னோம்!" என்றான் விகடு.
            "கொய்யாக்கா இருந்துச்சா?" என்றார்.
            மூவரும் தங்கள் கால்சட்டைப் பையைக் காட்டினார்கள். சின்னு அவன் கையில் இருந்த கொய்யாக்காவை நீட்டினான். "கையிலேயே வெச்சுக்க!" என்று சொல்லிவிட்டு பரமுவின் கையில் இருந்த மஞ்சள் பையை வாங்கி வாழை நாரை அவிழ்த்தார்.
            கூஜாவையும் தூக்கு வாளியையும் எடுத்தவர் ஒரு நொடி மூன்று பேரையும் பார்த்தார்.
            "சுடுகாட்டுப் பக்கம் ஒதுங்கலல்ல?" என்றார் உதட்டை முன்னே கொண்டு வந்து விழிகளைப் பிதுக்கியவாறே.
            ஒருமுறை மூவரும் இதுபோல கள்ளு வாங்கப் போய் சுடுகாட்டுப் பக்கம் ஒதுங்கி ஆளுக்கு நான்கு மடக்கு கள்ளு குடித்ததைப் பார்த்த, அங்கே இயற்கை உபாதைக்காக ஒதுங்கியிருந்த இடும்பன், வாத்தியாரின் காதில் போட்டு விட்டு விட்டார். லாலு வாத்தியார் மூன்று பேரையும் குப்புறப்படுக்கச் சொல்லி காலை மேலே மடக்கி நீட்டச் சொல்லி லாடம் கட்டினார். அதற்குப் பிறகுதான் மஞ்சள் பை ஏற்பாடும், மஞ்சள் பையின் மேல் வாழை நாரைக் கட்டும் ஏற்பாடும் வாத்தியாரால் கண்டுபிடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
            கூஜாவைத் தூக்கி மடக் மடக் என்று குடிக்க ஆரம்பித்தார் வாத்தியார். தொண்டையில் இருந்த கெண்டை முன்னும் பின்னுமாக சென்று வந்து கொண்டிருந்தது. கள்ளு வாயிலிருந்து வழிந்து அவர் கழுத்து வழியாக வழிந்து கொண்டிருந்தது. உடனே அதைக் கையால் துடைத்துக் கொண்டார்.
            காலி கூஜாவை நங்கென்று கீழே வைத்தார். கால்சட்டைப் பைக்குள் கையை விட்டார். வெள்ளை நிறத்தில் இருந்த லக்ஷ்மி சீவல் பாக்கெட்டை எடுத்தார். அதற்குள் சீவல் இல்லை. நிறைய நாரத்தங்காய் ஊறுகாயைப் போட்டு வைத்திருந்தார். அதிலிருந்து ஒன்றை எடுத்து கடித்துக் கொண்டார்.
            தூக்குவாளியைத் திறந்து அதிலிருந்து இரண்டு டம்பளர் அளவுக்கு எடுத்து கூஜாவில் ஊற்றினார். அதை மூன்று பேரிடம் நீட்டி, "சிந்தாம வழியாம குடிக்கணும். தூக்கிக் குடிக்கணும்." என்றவர் என்ன நினைத்தாரோ மூன்று பேரையும் ஒவ்வொருவராக வாயை அகலமாக திறக்கச் சொன்னார். அவரே வாயில் ஊற்றினார். ஒவ்வொரு வாய்க்கும் மூன்று மடக்கு ஊற்றினார். ஊற்றி விட்டு கூஜாவில் எஞ்சியிருந்ததை அவரே குடித்தார். மூன்று பேரின் வாயிலும் நாரத்தங்காய் துண்டைப் பிய்த்துப் போட்டார்.
            குடித்து முடித்ததும் மூன்று பேரின் வாயிலிருந்தும் புளித்த ஏப்பமாய் வந்தது. "காலம்பர சாப்பிட்டீங்களா இல்லியா? வெறும் வவுத்துல குடிச்சா அப்புறம் தோப்புல குத்தவெச்சிகிட்டுக் கிடக்கணும்டா!" என்று சொல்லிவிட்டுச் சிரித்துக் கொண்டே தூக்குவாளியைத் தூக்கி ஒரே கல்ப்பில் அடித்து முடித்தார். அவருக்கும் புளித்த ஏப்பம் வந்தது. வாத்தியாரின் வயிறு புளிப்பானையைப் போல உப்பியிருந்தது. சின்னு அதை ஓரக் கண்ணால் காட்டி விட்டு எங்களுக்கு மட்டும் தெரியும்படி நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
            "சீக்கிரம் எல்லாரும் கொய்யாக்காயைத் தின்னுங்க!" என்று சொல்லி விட்டு அவர் சின்னுவின் கையிலிருந்த கொய்யாவை வாங்கித் தின்ன ஆரம்பித்தார். அவசர அவரமாக கொய்யாக்காவைத் தின்று முடித்ததும் வாயை ஊதச் சொன்னார். "பரவால்ல கொய்யாக்கா வாசந்தான் வர்ருது! போங்க போய் கிளாஸ்க்குள்ள உக்காந்து நல்ல பிள்ளையா படிங்க!" என்று சொல்லி விட்டு மஞ்சப்பைக்குள் காலி கூஜாவையும், தூக்குவாளியையும் போட்டு விடுவிடுவென வகுப்பறைக்குள் வந்து தேக்கு மரப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைத்துக் கொண்டார். வழுவழுவென்று இருந்த அந்த தேக்கு மரப்பெட்டிதான் வாத்தியாருக்கு நாற்காலி. அதன் பக்கத்தில் மரமேசை ஒன்று இருக்கும். அதன் மேல் நோட்டுகள் அடுக்கியிருக்கும். வாத்தியாரின் பையும் அதன் மேல்தான் இருக்கும். அத்துடன் நான்கைந்து கம்புகளும் இருக்கும்.
            "நேத்தி எழுதிப் போட்ட இன்டியா இஸ் மை கன்ட்ரி. வி ஆர் ஆல் சிட்டிசன்ஸ் ஆப் இன்டியா. படிச்சிட்டீங்களாடா?" என்றார்.
            "ம்! படிச்சிட்டோம்!" என்று அவர்கள் தலையாட்டிக் கொண்டிருந்த போது ஒவ்வொரு பிள்ளையாய் வர ஆரம்பித்தார்கள். ரெண்டாம் பெல் விட்டு விட்டு அடிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...