Showing posts with label ஆதி அந்தம். Show all posts
Showing posts with label ஆதி அந்தம். Show all posts

30 Dec 2024

ஆதி ஏன் அந்தமாகிறது?

ஆதி ஏன் அந்தமாகிறது?

அப்படித்தான் வாழ்க்கையைத் துவங்கினேன்

ஆபாசமானவராக அசிங்கமானவராக

எல்லா எச்சிலையும் துப்பிய பிறகு

சகல மலங்களையும் கழித்த பிறகு

மொத்த பிராணனும் போன பிறகு

உன் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல்

தோற்பதுதானே என் வாழ்க்கை

கடைசியில் உனக்கும் எனக்கும் எதற்கும்

மனம் நிறைவடையாமல் சாவதுதானே வாழ்க்கை

வாழ்க்கைக்கு என்ன பொருள் இருக்கிறது

எந்தப் பொருளும் இல்லாது முடியும் வாழ்வில்

எத்தனைப் பொருட்களைச் சேர்த்தாயிற்று

உபயோகமான பொருள் ஏதுமில்லை

உபயோகமற்ற வாழ்க்கையில்

சேர்த்துக் கொண்ட அர்த்தங்கள் எதற்கும்

முடிவில் எந்தப் பொருளுமில்லை

நிறைவற்ற வாழ்வில் நிறைய வேண்டும் என்ற

பொருளாவது இருந்தது

நிறைந்து வழியும் வாழ்வில் அந்தப் பொருளும் இல்லை

எந்தப் பொருளும் இல்லாத வாழ்வுக்கு

ஆயிரம் அர்த்தங்கள் கண்டாயிற்று

அர்த்தமிழந்து போவதொன்றே வாழ்வின் பொருள் என்ற

பொருண்மையும் விளங்கியாயிற்று

மரணத்தின் மூச்சைத் தொடும் மூர்ச்சைப் பொழுதில்

அசமந்தமாய்த் தெளிவாகிறது

பொருளற்றதொரு பொருள் வாழ்வு

இப்போது சத்தமிடத் தோன்றுகிறது

மரணம் மன்னித்து விடும் எனில்

எல்லாவற்றையும் முடித்து வைத்துவிடும் எனில்

அதுவே முதலாவதாக இருக்கட்டும்

அதைக் கடைசிக்குப் போக விடாதீர்கள்

*****