24 Feb 2019

மஞ்சப்பையும் ஒரு தூக்கு வாளியும் ஒரு கூஜாவும்



செய்யு - 6
            ஒரு நரம்புப் பைக்குள்தான் தன் புத்தகங்கள் அனைத்தையும் வைத்திருந்தான் விகடு. பையைத் தூக்கிக் கொண்டு ரெண்டு வீடுகள் தள்ளி இருக்கும் சின்னுவின் வீட்டிற்கு ஓடினான். சின்னுவின் வீடும் கூரை வீடுதான். இரட்டைஇலை வீடு என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும். தேர்தலுக்கு வரையப்பட்ட இரட்டைஇலை அப்படியே இருக்கும். இடையில் தேர்தல் வந்தாலும் அதன் மேலே அப்படியே வரைந்து விட்டுப் போவார்கள்.
            சின்னு கிளம்பித் தயாராக இருந்தான். விகடுவைப் பார்த்ததில் அவனுக்கு ஆச்சரியம். "உங்க அப்பா கூட போகலியா?" என்றான் சின்னு.
            "இல்ல. லாலு வாத்தியார் வரச் சொன்னார்! சீக்கிரமா வரச் சொன்னார். பரமுவை அழைச்சுகிட்டுப் போவோமா?" என்றான்.
            சின்னு குஷியாகி விட்டான். சின்னு ஜவுளிக்கடை மஞ்சள் பையில் புத்தகங்களை வைத்திருந்தான். சின்னு பையைத் தூக்கிக் கொண்டதும் ஓட்டமும் நடையுமாக ரெண்டு பேரும் ஓடினார்கள்.
            சின்னுவின் வீட்டிலிருந்து இடப்பக்கத் தெரு வழியாகச் சென்றால் பத்து வீடுகள் தள்ளி பண்ணைத்திடல். பண்ணைத்திடலில் ஓர் ஒற்றையடிப் பாதை. ஒற்றையடிப் பாதையில் ஒரு பர்லாங் தூரம் நடந்தால் மாரியம்மன் கோயில் வரும். கோயிலைச் சுற்றிலும் ஒரு பெருந்திடல்.
            மாரியம்மன் கோயிலுக்கு வந்ததும் மூச்சிரைப்பது போல இருந்தது. இருவரும் நின்றார்கள். மெயின்ரோட்டைக் கடந்தால் வெண்ணாற்றுப்பாலம். மெயின்ரோட்டிலிருந்து மூன்றடி உயரத்தில் இருக்கும். அதில் ஏறி அதே போல இறங்கும் போதும் மூன்றடி உயரத்திலிருந்து இறங்க வேண்டும். சிமெண்ட் பாலம்தான் என்றாலும் குறுகியப் பாலம். வண்டி வகையறாக்கள் செல்ல முடியாது சைக்கிளைத் தவிர. ஓரளவு அகலமான நடைபாலம். அந்த உயரத்திற்கு சைக்கிளில் மிதித்தபடியே ஏற முடியாது. சைக்கிளில் வருபவர்கள் சைக்கிளை நிறுத்திதான் தள்ளிக் கொண்டு ஏறுவார்கள்.
            விகடுவும் சின்னுவும் பாலத்தில் ஏறாமல் வலப்பக்கமாய்த் திரும்பிப் பரமுவின் வீட்டை நோக்கி மெயின்ரோட்டில் நடந்தார்கள். பரமுவின் வீட்டுக்கு முன்னே காம்பெளண்ட் சுவரும் கேட்டும் இருக்கும். காம்பெளண்ட் சுவர் முழுவதும் உதயசூரியன் படங்களாக இருக்கும். சின்னுவுக்கும் பரமுவுக்கும் இந்தப் படங்களை ஒட்டி எப்போதும் சண்டை நடக்கும்.
            சின்னு இரட்டைஇலைதான் பெரிசு என்பான். பரமு உதயசூரியன்தான் பெரிசு என்பான். "கலைஞர் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?" என்பான் பரமு. "அவர்தான் தோத்துப் போயிட்டார்ல. ‍ஜெயலலிதாதான் ‍பெரிய ஆள்!" என்பான் சின்னு. அவர்களின் சண்டைக்கு ஒரு முடிவு இருக்காது. சில நாட்கள் முன் நடந்த இந்தச் சண்டையில் இருவரும் கட்டிப் பிடித்துப் புரண்டு பேசாமலே இருந்தார்கள். இப்போது சின்னுவே வீட்டுக்கு வந்ததைப் பார்த்ததும் பரமுவுக்குச் சந்தோசமாக இருந்தது. பரமு தலைசீவிக் கொண்டிருந்தான்.
            சின்னு பரமுவைப் பார்த்ததும் ஒரு கண்ணைத் திருப்பிக் கண்ணடித்தான். பரமுவும் அதைப் போலவே செய்தான். "கலைஞரு, ஜெயலலிதா ரெண்டு பேருமே பெரிய ஆள்தான்டா!" என்றான் பரமு. "ஆமாண்டா!" என்றான் சின்னு.
            "லாலு வாத்தியார் வரச் சொல்லியிருக்கார்! சாப்பிட்டுட்டியா?" என்றான் விகடு.
            "ம்! உங்க வூட்டு பாப்பா எப்படிடா இருக்கு?" என்றவன் நரம்புப் பையைத் தூக்கிக் கொண்டு இவர்களுக்கு முன் ஓட ஆரம்பித்தான்.
            "அது எப்பப் பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்குடா! ராத்திரியும் அழுவுதாம். அதனால் ராத்திரியெல்லாம் தூங்க முடியலியாம். நான் நல்லா தூங்கிடுவேன்!" என்றான் விகடுவும் ஓடிக் கொண்டே.
            ஒண்ணாம் பெல் அடிக்கும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. சரியாக எட்டரை மணி வாக்கில் ஒண்ணாம் பெல் விட்டு விட்டு அடிப்பார்கள். ஒன்பது மணி வாக்கில் ரெண்டாம் பெல் விட்டு விட்டு அடிப்பார்கள். ஒன்பதரைக்கு பிரேயர் பெல் கடகடவென்று அடிப்பார்கள்.
            மூவரும் ஓட்டமாக பாலத்தின் மேல் ஏறி இறங்கினார்கள். பாலத்திலிருந்து இறங்கி பத்தடி வைத்தால் பள்ளிக்கூட மைதானம்.
            ஐந்தாம் வகுப்பு வரை இருந்த திட்டைப் பள்ளிக் கூடத்தில் மூன்று கட்டிடங்கள் இருந்தன. பாலத்திலிருந்து இருநூறு அடி தள்ளி ஓர் ஓட்டுக் கட்டிடம் வடக்குத் தெற்காக இருந்தது. அதை ஓட்டு பில்டிங் என்பார்கள் ஆசிரியர்களும் பிள்ளைகளும். அதில் வடவண்டைப் பக்கம் மூன்றாம் வகுப்பும், தென்னண்டைப் பக்கம் ஐந்தாம் வகுப்பும் இருந்தது. ஐந்தாம் வகுப்புதான் தலைமையாசிரியர் அறையும் கூட. இரண்டு வகுப்புக்கும் இடையில் தட்டி மறைப்பு இருக்கும்.
            ஓட்டு பில்டிங்கின் இடப்பக்கமாக ஐம்பது அடி தள்ளி மாடிக் கட்டிடம். அதை பக்கா பில்டிங் என்பார்கள். அதில் கீழண்டைப் பக்கம் இரண்டாம் வகுப்பும், மேலண்டைப் பக்கம் விகடு, பரமு, சின்னு, மன்னு ஆகியோர் படிக்கும் நான்காம் வகுப்பும் இருந்தது. பக்கா பில்டிங்கின் கிழக்குச் சுவரை ஒட்டி ஒரு சாய்ப்பு இருக்கும். அதில் ஓடு வேய்ந்திருந்தார்கள். அதுதான் சத்துணவுக்கான சமையலறை. பெரும்பாலான நேரங்களில் பிள்ளைகள் அங்குதான் நிற்பார்கள். சமைக்கும் ஆயா  ஒரு பிடி அரிசியை அள்ளிக் கொடுத்தால் அதை வாயில் போட்டுக் கொண்டு ஓடுவார்கள்.
            ஓட்டு பில்டிங்கின் வலப்பக்கமாக இருபதடி தூரத்தில் கிழக்கு மேற்காக அஸ்பெஸ்டாஸ் கட்டிடம் இருந்தது. அதை அஸ்பெஸ்டெஸ் கொட்டாய் என்பார்கள். அதன் மேலண்டைப் பக்கம் ஒண்ணாம் வகுப்பும், ஒரு மறைப்பு வைத்து கீழண்டைப் பக்கத்தில் பால்வாடியும் இருந்தது.
            மைதானத்திலிருந்து பார்த்தால் இந்த மூன்று பில்டிங்குகளும் 'ப' வடிவில் இருக்கும். பக்கா பில்டிங்கும், அஸ்பெஸ்டாய் கொட்டாயும் எதிரெதிராக இருக்கும். ஓட்டு பில்டிங் பாலத்தைப் பார்த்தாற் போல இருக்கும்.
            ஓட்டுப் பில்டிங்கிற்கும், பக்கா பில்டிங்கிற்கும் வராண்டா இருந்தது. அஸ்பெஸ்டாய் கொட்டாய்க்கு வரண்டா கிடையாது. காலையில் பள்ளிக்கு சீக்கிரமாய் வரும் பிள்ளைகள் வராண்டாவில் ஓடியாடி விளையாடிபடியே இருப்பார்கள். ஒண்ணாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வராண்டா இல்லாவிட்டாலும் அந்தப் பிள்ளைகள் ஓட்டுப் பில்டிங் வராண்டாவிலோ, பக்கா பில்டிங் வராண்டாவிலோ வந்து ஓடிக் கொண்டிருப்பார்கள்.
            விகடு, பரமு, சின்னு மூன்று பேரும் நான்காம் வகுப்பை நோக்கி ஓடினார்கள். அங்கே அதற்கு முன்னே வந்து லாலு வாத்தியார் உட்கார்ந்திருந்தார். இவர்களைப் பார்த்ததும் எழுந்து வராண்டாவுக்கு வந்தவர், "பையைக் கொண்டு போய் உள்ள வெச்சுகிட்டு வாங்கடா!" என்றார்.
            லாலு வாத்தியார் சட்டைப் பைக்குள் கையை விட்டு காசை எடுத்து எண்ணிப் பார்த்துக் கொண்டே ஒரு தாளில் வைத்து பொட்டலமாய்க் கட்டினார். சைக்கிள் ஹேண்டில்பாரில் மாட்டியிருந்த மஞ்சள் பையை எடுத்துக் கொடுத்து பொட்டலத்தை நீட்டினார். பரமு பையை வாங்கிக் கொண்டான். விகடு காசு பொட்டலத்தை வாங்கிக் கொண்டான். "ஈச்சமண்டை வீட்டுக்குப் போயிட்டு சீக்கிரமா வாங்க! வழியுல எங்கயும் நிக்கக் கூடாது!" என்றார் வாத்தியார்.
            மூவரும் பாலத்தைக் கடந்துப் போய் மஞ்சள் பையைப் பிரித்து பார்த்தார்கள். குறுகலான ஒரு தூக்கு வாளியும் ஒரு கூஜாவும் இருந்தது.
            "ரொம்ப நாளைக்கு அப்புறமா எதுக்குடா வாத்தியார் ஈச்சமண்டை வூட்டுக்கு அனுப்புறார்?" என்றான் பரமு.
            "விகடு வூட்டுல பாப்பா போறந்திருக்குல்ல. அதுக்காகத்தான் இருக்கும்!" என்றான் சின்னு.
            "பொட்டலத்தைப் பிரிச்சுப் பார்ப்போமோ?" என்றான் விகடு.
            "வாத்தியார் கண்டுபிடிச்சார்னா அடிப்பார்டா! அதுவும் ஒத்தக் கையைப் பிடிச்சு மேலே தூக்கிப் போட்டுல அடிப்பாரு!" என்றான் சின்னு.
            "எப்படிக் கண்டுபிடிப்பாரு?" என்றான் பரமு.
            "இந்தோ பாரு பிள்ளைங்க போயிகிட்டு இருக்கு. இந்தப் புள்ளைங்க பள்ளியோடத்துக்குப் போனதுமே லாலு வாத்தியார் நம்ம மூணு பேரையும் பத்திதான் முதல்ல விசாரிப்பாரு பாத்துக்கோ. அவரு ரொம்ப சூதானமாக இருப்பாருடா!" என்றான் சின்னு.
            மெயின்ரோட்டிலேயே ஐந்து நிமிடம் ஓடினால் ஈச்சமண்டை வீடு வந்து விடும். அவர்கள் ஓடி வந்த ஓட்டத்தில் ஈச்சமண்டையின் வீடு வந்து விட்டிருந்தது. மூவரும் தட்டிப் படலைத் திறந்து வீட்டின் முன் நின்றார்கள். ஈச்சமண்டையின் வீடு ஒரு சிறிய குடிசை வீடு. அந்த சிறிய வீட்டுக்குள் ஈச்சமண்டை ஒரு பழந்துணியைப் போட்டு படுத்துக் கிடந்தார். ஈச்சமண்டை குட்டையாகத்தான் இருப்பார். உடம்பு கரணை கரணையாக இருக்கும். எங்களைப் பார்த்ததும் "பிள்ளைங்க வந்திருக்குப் பாரு!" என்று ஈச்சமண்டை சத்தம் கொடுத்தார். ஏதோ அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த ஈச்சமண்டையின் பெண்டாட்டி எழுந்து வெளியே வந்தார்.
            "வாத்தியாரு அனுப்பிச்சாரு!" என்று மஞ்சப்பையை நீட்டினான் பரமு. காசு போட்டலத்தை நீட்டினான் விகடு. அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் போனார்.
            "இன்னைக்கு என்னா காலையிலயே பசங்கள அனுப்பி வுட்டுருக்காரு?" என்றார் ஈச்சமண்டையின் பொண்டாட்டி.
            "சீக்கிரம் கொடுத்து வுடு! புள்ளைங்க நிக்குது பாரு!" என்றார் ஈச்சமண்டை.
            "ஊத்திதானே கொடுக்கணும்! இப்படி அவுசரப்படுத்துனா எப்படி?"
            "ம்! ம்! சீக்கிரமா ஊத்திக் கொடு!"
            "ஊத்திகிட்டுதான் இருக்கேன்!"
            ஈச்சமண்டையின் பொண்டாட்டி மஞ்சப்பையை வெளியே கொண்டு வந்து கொடுத்தார். பரமு அதை பவ்வியமாய் வாங்கிக் கொண்டான். மேலே வாழை நார் சுற்றி பை கட்டப்பட்டிருந்தது. பையின் மேல் முனைகள் நனைந்திருந்தன.
            "கிளம்புங்கடா புள்ளைகளா! சீக்கிரம்!" என்று உள்ளேயிருந்து சத்தம் போட்டார் ஈச்சமண்டை.
            படலைத் திறந்து கொண்டு மூன்று பேரும் வெளியே வந்தார்கள்.
            "சுடுகாட்டைத் தாண்டுனதுக்கு அப்புறம் நாந்தான் தூக்கியாருவேன்!" என்றான் சின்னு.
            "அதுக்கு அப்புறம் பள்ளியோடம் வரைக்கும் நாந்தான்!" என்றான் விகடு.
            "வாத்தியாரு எங்கிட்டதான் பையைக் கொடுத்தாரு. அதனால நாந்தான் கடைசி வரைக்குந் தூக்கியாருவேன்!" என்றான் பரமு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...