Showing posts with label Money Frauds. Show all posts
Showing posts with label Money Frauds. Show all posts

30 Apr 2026

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பேராசை பெருநஷ்டம் – ஒரு சுருக்கமான ஆப்பு வரலாறு!

பரந்தாமன் நிலத்தை விற்றார். கையில் வந்தது இருபது லட்சம்.

பணம் கையில் இருந்தால் சில அரிப்புகளைத் தரும். கையை நனைக்காமல் ஏதாவது வங்கியில் போடுங்கள், என்றார் அர்ச்சுனன்.

பரந்தாமனுக்கு அறுபது வயது.

அஞ்சலகத்தில் சீனியர் சிட்டிசன் ஸ்கீம் இருக்கிறது. அரசாங்கப் பாதுகாப்பு. நிம்மதியாகத் தூங்கலாம், என்று சரியாக வழிகாட்டினார் அர்ச்சுனன். அத்தோடு நில்லாமல், அதற்குத் தேவையான படிவங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அடுத்த நாள் அவரைப் பார்க்கப் போனார்.

பரந்தாமன் முகத்தில் ஒரு மர்மப் புன்னகை. ஒரு தத்துவ ஞானியைப் போல அர்ச்சுனனைப் பார்த்தார்.

தம்பி, போஸ்ட் ஆபீஸில் என்ன வட்டி தருவார்கள்? எட்டணா, பத்தணா. நான் ஒருத்தரைப் பார்த்தேன். அஞ்சலக வட்டி மாதிரி ரெண்டு மடங்கு தர்றேன்னு சொல்லிட்டார். பணத்தைக் கொடுத்துட்டேன், என்றார்.

யார் அவர்? என்றார் அர்ச்சுனன்.

பெரிய மனிதர். நெற்றியில் பட்டை, கையில் ஜபமாலை. அவர் முகத்தைப் பார்த்தாலே திருட்டுத்தனம் தெரியாது, என்றார் பரந்தாமன்.

அர்ச்சுனன் கொண்டு போன படிவங்களைச் சுருட்டிப் பையில் வைத்தார். கவனமாக இருங்கள், என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பேராசைக்காரர்களுக்கு வழங்கப்படும் அறிவுரைகள் எப்போதும் கேட்கப்படாத வானொலி நிலையங்களைப் போன்றவை.

சில நாட்களில் அந்தச் சுவாரசியச் செய்தி வந்தது.

அந்த ஜபமாலை மனிதர் வீட்டைத் தூர்வாரத் தேவையில்லை என்று முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக வீட்டைக் காலி செய்துவிட்டு ஓடிவிட்டார். ஊரில் பாதிப் பேருக்கு இப்போதுதான் ரத்த அழுத்தம் எகிறியிருக்கிறது.

பரந்தாமன் இப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சூன்யத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஏமாத்திட்டுப் போயிட்டானே தம்பி, என்று அர்ச்சுனுனைப் பார்த்துப் புலம்பினார்.

அவர் ஏமாற்றவில்லை சார். நீங்கள் ஏமாறத் தயாராக இருந்தீர்கள், அவர் உங்களுக்கு உதவினார், என்று சொல்ல நினைத்தார் அர்ச்சுனன், ஆனால், சொல்லவில்லை.

இதிலிருந்து சகலமானவர்களும் அறிந்து கொள்ள சில நீதிகள் இருக்கின்றன. அவையாவன,

அரசாங்கத்தை விட ஒரு தனி நபர் அதிக வட்டி தருகிறார் என்றால், அவர் ஒன்று பணம் அச்சிடும் இயந்திரம் வைத்திருக்க வேண்டும் அல்லது அவருக்கு உங்கள் பணத்தை அமுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணத்தை இழப்பது எளிது. ஆனால் இழந்த பிறகு வரும் அறிவு இருக்கிறதே, அது மிகவும் விலை உயர்ந்தது.இந்தக் கதையில் சரியாக இருபது லட்சம் ரூபாய். இந்தத் தொகையானது கதைக்கு கதை மாறுபடும்.

வங்கி அல்லது அஞ்சலகம் தரும் வட்டி என்பது ஒரு கணக்கு. யாராவது அதற்கு மேல் டபுள் தருகிறேன் என்று சொன்னால், அது கணக்கல்ல, அது ஒரு தூண்டில். தூண்டிலில் சிக்கினால் செத்தான் சேகரு மொமன்ட்தான்.

பரந்தாமன் போன்றோர் அறுபது வயதில் முதலீடு செய்ய வேண்டியது பணத்தை மட்டுமல்ல, கொஞ்சம் நிதானத்தையும்தான். கொஞ்சம் ஆசைப்பட்டாலும் லபக்தான். அதிகம் ஆசைப்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத நபரிடம் பணத்தைக் கொடுப்பது, பசித்திருக்கும் ஓநாயிடம் ஆட்டுக்குட்டியை வாக்கிங் கூட்டிச் செல்லச் சொல்வதற்குச் சமம். அது மாதிரியான ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிடும் பழக்கங்கள் வேண்டவே வேண்டாம்.

ஸோ, இதிலிருந்து அறியப்பட வேண்டிய நீதி என்னவென்றால், அதிக வட்டிக்கு ஆசைப்படுபவன், ஒருநாள் தன் அசலையே வட்டியாகக் கொடுத்துவிட்டுத் தெருவில் நிற்பான்.

அதிக வட்டி தரும் ஆசாமி எங்கே இருக்கிறார் என்று தேடுவதை விட, உங்கள் பணம் எங்கே பாதுகாப்பாக இருக்கும் என்று தேடுவதே புத்திசாலித்தனம். இல்லையெனில், வட்டியும் வராது, வாங்கியவனும் திரும்புவதில்லை.

முதலீடு என்பது முட்டையிடும் கோழியை வாங்குவது போல. யாராவது, உன் கோழி தங்க முட்டை போடும், என்று சொன்னால், கோழியையும் தூக்கிக்கொண்டு அவர் ஓடப்போகிறார் என்று அர்த்தம். புரிந்து கொள்ளுங்கள். உடனே விழித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் விசயம்.

*****

12 Apr 2026

தங்கம் தழுதழுத்த கதை!

ஒரு தோழியும் ஓர் அழுகையும்!

அகிலா வீடு தேடி வந்து அழைத்த போது குரலில் அத்தனை ஈரம். அவசர மருத்துவச் செலவு, என்றாள். பணம் இல்லாவிட்டால் எல்லாம் பணால் ஆகி விடும் என்றாள். கண்ணீரில் நனைந்த அந்தச் சொற்களைக் கேட்டதும் இனியாவின் இதயம் மெழுகாக உருகியது.

ஆனால் இனியாவின் வங்கிச் சேமிப்போ பாறையாகக் கல்லாய்க் கிடந்தது. கையில் பணமில்லை, ஆனால் கையில் அதாவது மணிக்கட்டில் தங்கம் இருந்தது. அது வளையல்.

அடுத்த மாசமே மீட்டுத் தந்துடுவேன்டி, என்று அகிலா சொன்னபோது, அகிலாவின் கண்களை விட இனியாவின் வளையல்கள் பிரகாசமாக மின்னின.

கணவரிடம் சொன்னால் லாஜிக் பேசுவார் என்று பயந்து, ரகசியமாக அந்தத் தங்கத்தை அகிலாவின் கையில் தாரை வார்த்தாள் இனியா.

நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி. அதை ஒருமுறை அடகு வைத்தால், திரும்பக் கிடைக்கும்போது விரிசலோடுதான் கிடைக்கும் என்பது அப்போது இனியாவுக்குத் தெரியவில்லை.

மாதங்கள் ஓடின. அகிலாவும் எங்கே ஓடினாள் என்று தெரியவில்லை.

இனியா போன் செய்யும்போதெல்லாம் அந்த நண்பி அகிலா ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக மாறினாள்.

இந்தா நாளைகேக் ஒரு செக் கிளியர் ஆகப்போகுது, என்றாள்.

செக் கதை சொல்லி அலுத்துப் போன பிறகு, நாளைக்குச் சாயங்காலம் நாலு மணிக்கு உன் கைக்குத் தங்கம் வந்துடும், என்றாள்.

இப்படி அகிலா சொன்ன நாளை என்பது, விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் போல மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில், அகிலாவின் போன் சுவிட்ச் ஆஃப் மோடுக்குச் சென்றது. அதுவரை தழுதழுத்த அவள் குரல், இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது.

இனியா விசாரித்தபோதுதான் தெரிந்தது, அந்தப் புண்ணியவதி வளையல்களை வைத்து மருத்துவச் செலவு ஏதும் செய்யவில்லை. ஏதோ ஒரு ஆன்லைன் பிசினஸில் போட்டு, அதை அம்பானி ரேஞ்சுக்கு வளர்க்கப் பார்த்து, கடைசியில் ஆப்பனியாகி நஷ்டமடைந்திருக்கிறாள்.

வேறு வழியின்றி, கணவரிடம் சொல்லவும் முடியாமல், சொல்லி மெள்ளவும் முடியாமல் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாக, எப்படியோ வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பணத்தைச் சேர்த்து நகையை மீட்டெடுத்தாள் இனியா.

எப்படியோ நகையை மீட்டெடுக்க முடிந்த இனியாவுக்கு, அதன் பிறகு அகிலாவின் நட்பை மீட்டெடுக்க முடியாமலேயே போய் விட்டது.

நீதி என்னவென்றால், கொடுப்பது கடன். அதை வாங்கும் அவர்கள் நினைப்பது அது தானம். கடைசியில் கொடுத்தவருக்கு மிஞ்சுவது தியானம்!

*****