1 Jun 2026

நவீன மிக்ஸிகளின் வீழ்ச்சியும் மனித மண்டையின் எழுச்சியும்

நவீன மிக்ஸிகளின் வீழ்ச்சியும் மனித மண்டையின் எழுச்சியும்

இன்று சந்தைக்குப் போனால் 750 வாட்ஸ், 1000 வாட்ஸ் எனப் பலத்த சத்தத்துடன் ஓடும் மிக்ஸிகள் கிடைக்கின்றன. சுவிட்சைப் போட்டால் இரண்டு நிமிடத்தில் பாறாங்கல்லைக் கூட பவுடராக மாற்றிவிடும் தகுதி அவற்றுக்கு உண்டு. கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்களோ உளுந்தை பஞ்சு போல ஆக்கித் தருகின்றன.

ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும், இந்த உலகம் தன் அன்றாட மசாலா தேவைகளுக்கு, அதாவது ஏமாற்று வேலைகளுக்கு, உங்கள் தலையைத்தான் மிகச் சிறந்த அரைக்கும் கல்லாகத் தேர்ந்தெடுக்கிறது. தட் மீன்ஸ், உங்கள் தலையில்தான் மிளகாய் அரைக்கிறது.

இதற்கான காரணம் மிக எளிதானது. மிக்ஸியில் அரைத்தால் மின்சாரக் கட்டணம் வரும், வாரண்டி முடிந்துவிட்டால் ரிப்பேர் செய்ய காசு கொடுக்க வேண்டும். ஆனால், உங்கள் தலையில் மிளகாய் அரைத்தால், இவையெல்லாம் தேவையில்லை பாருங்கள்.

அதுமட்டுமல்லாமல், அரைத்து முடித்ததும் காரம் உங்களுக்குத்தான் ஏறும், அரைத்தவருக்கு ருசியான சட்னி கிடைத்துவிடும்.

இந்த உலகத்தில் உங்கள் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் யாரும் திடீரென்று கையில் அம்மிக் கல்லோடு வருவதில்லை. அவர்கள் மிகவும் அன்பானவர்கள், உங்களின் நலம் விரும்பிகள், சில சமயம் உங்களுக்கு மட்டும் தான் இந்தச் சலுகை என்று வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்கள்.

மச்சி, உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா? என்று ஒருவர் தோளில் கை போடுகிறார் என்றால், அவர் தன் கையில் காஷ்மீரி மிளகாயை மறைத்து வைத்திருக்கிறார் என்று அர்த்தம்.

உங்கள் தலை எவ்வளவு ப்ளெய்ன் ஆக, அதாவது வழுக்கையாகவோ அல்லது கூந்தலோடோ இருக்கிறதோ, அவ்வளவு நைஸாக மிளகாய் அரையும். நீங்கள் நான் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்த உன்னத கணத்தில்தான், பின்மண்டையில் காரம் இறங்கத் தொடங்கியிருக்கும்.

பங்குச் சந்தையில் டபுள் டிரிபிள் பிராபிட், பிரெண்ட் கேட்ட பர்சனல் லோன், இன்னும் இரண்டே வருடத்தில் டபுள் மடங்கு லாபம் தரும் ரியல் எஸ்டேட் பிசினஸ் என எல்லாமே மிக்ஸியை விட அதிவேகமாக உங்கள் தலையில் அற்புதமாக மிளகாய் அரைத்து விடுகின்றன.

கடைகளில் விற்கும் மிக்ஸிகளுக்குக் கூட ஓவர்லோடு பிரொடெக்சன்  என்றொரு சுவிட்ச் கீழே இருக்கும். மிளகாய் அதிகமாகிவிட்டால், அது தானாக டக் என்று ஆப் ஆகிவிடும். ஆனால், பிரபஞ்சம் மனித மண்டையைப் படைக்கும்போது அந்த சுவிட்சை வைக்க மறந்துவிட்டது.

நீங்கள் எப்போது அடுத்தவருக்கு உதவப் போகிறேன் என்று தியாகச் செம்மலாக மாறுகிறீர்களோ, அப்போதே உங்கள் தலை ஒரு உலகத்தரம் வாய்ந்த மிக்ஸி ஜாராக உருமாறிவிடுகிறது. உலகம் உங்களை ஒரு நல்லவன் என்று பாராட்டுவது, நீங்கள் காரத்தைத் தாங்கிக் கொண்டு சத்தமில்லாமல் அரைபடுவதற்காக மட்டும்தான்.

எனவே, அடுத்த முறை யாராவது உங்களிடம் வந்து, உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், என்று இழுத்தால், உடனே உங்கள் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கே ஏற்கனவே போன வாரம் அரைத்த மிளகாயின் வாசம் இன்னும் மிச்சமிருக்கக் கூடும்!

*****