31 Dec 2016

குணாதிசயம்


விளக்கம்
குழந்தைகள் அடிபடும் போது
பாவம் குழந்தைகள் என
பரிதாபப்படுபவர்கள்
இதெல்லாம் குழந்தைங்க
பண்ற வேலையா?
என்ற விளக்கத்தோடுதான்
அடிக்கத் தொடங்குகிறார்கள்.
*****

குணாதிசயம்
ரீபிள் கரைந்து விடும் என
சிக்கனமாக எழுதும்
தம்புசாமி வாத்தியார்
ஒரு நாளைக்குப் பிடிப்பது
எட்டு சிகரெட்டுகள்!
*****

லாபலன்
தினம் ரெண்டு மூட்டை
குப்பைப் பொறுக்கி
சிறுபலன் அடைந்த
சின்னான்
ஊருக்கு டாஸ்மாக் வந்த பின்
நான்கு மூட்டை
பாட்டில் பொறுக்கி
அடைவது பெரும்பலன்!
*****

வீடுகளின் கதைகள்


கனவுகளின் பறத்தல்
கனவுகள் எப்படியும் பறக்கும்
பட்டங்களாய்
பலூன்களாய்
வண்ணத்துப் பூச்சிகளாய்!
*****

வீடுகளின் கதைகள்
பெயர் தாங்கி நிற்கும்
வீடுகளின் கீழ்தளம்
உரிமையாளர்களுக்கானது
மேல்தளம்
வாடகைக்கானது.
பெயரில்லாத வீடுகள்
பெரும்பாலும் வாடகை வீடுகள்.
பூட்டிக் கிடக்கும் வீடுகளோ
உரிமையாளர்களுமின்றி
வாடகைக்காரர்களுமின்றி
ஒரு குருவியோ
வண்ணத்துப்பூச்சியோ
அமர்ந்து விட்டுப் போகும் போது
அர்த்தப்பட்டுப் போகும்
தனிமையை
மொழிபெயர்க்கும் கதைகளுக்கானது!
*****

சண்டக் கோழி


ஓட்டு
ஜெயிக்கிறது கஷ்டம்தான் என்று தெரிந்ததும், தன்னுடைய ஓட்டை மாற்றிப் போட்டார் எம்.எல்.ஏ. வேட்பாளர் தங்கச்சாமி.
*****

சண்டக் கோழி
சண்டைக் கோழி குறிப்பு வரைக என்ற கேள்விக்குப் பதில் எழுதினான் ஆதிக், "அம்மா - அப்பா"
*****

ஆகாரம்
"ஆகாரத்துக்கு முன்னாடியா? பின்னாடியா? என்று கேட்டதும், "ஆகாரமே இதுதான்!" என்றார் உடல் இளைக்க மாத்திரை தந்த மருத்துவர்.
*****

1100
ஆப்பிள் போனை டெலிவரி செய்தவன் கையில் 1100 நோக்கியா போன்.
*****

விளையும் பயிர்


விளையும் பயிர்
"உன்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்றேன்!" என்றார் பிரின்சிபால், பிற்காலத்தில் அவன் அரசியல்வாதியாகி எம்.எல்.ஏ.வாக ஆகப் போகிறவன் என்பது தெரியாமல்.
*****

பதில்
"நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டவனிடம் பதில் சொன்னான், "டாக்டரைப் பார்க்க போயிட்டு இருக்கேன்!"
*****

மறதி
மறந்து வைத்து விட்டுப் போன ஹெல்மெட்டை போன் போட்டு சொல்வதற்குள் வந்தது அந்த விபத்துச் செய்தி.
*****

மாதிரி
"அப்படியே எங்க அப்பா மாதிரியே இருக்கீங்க!" என்றான் அந்த முதியோர் இல்லக் காப்பாளன்.
*****

கேஷ்லெஸ்க்கு மாறினார் சம்புலிங்கம்


கேஷ்லெஸ்க்கு மாறினார் சம்புலிங்கம்
            சம்புலிங்கம் சூப்பர்‍ மேனைப் போல பறந்து சூப்பர் மார்கெட்டுக்குச் சென்றார். அவர் மனதில் கேஷ்லெஸ் எகானமிக்கு மாறப் போகிறோம் என்ற மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.
            பாய்ந்து, பறந்து சென்று நூறு ரூபாய்க்கு தேவையே இல்லாத சில பல பொருள்களை எடுத்துக் கொண்டு பில்லிங் செக்சனுக்கு வந்தார்.
            பில்லிங்க முடிந்ததும், தன் கார்டை எடுத்து நீட்டினார்.
            அவர்கள் 100 ரூபாய்க்கு 1.50 சேர்த்து 101.50 க்கு ஸ்வைப் செய்ய, ஆவேசமானார் சம்புலிங்கம்.
            "சர்வீஸ் சார்ஜூங்க!" என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினர் சூப்பர் மார்கெட் பணியாளர்கள்.
            "ஓ! இதுதான் அட்டையை வெச்சு ஆட்டையைப் போடுறதா?" பரிதாபத்தோடு வெளியே வந்தார் சம்புலிங்கம்.
*****

தானா சேர்ந்த கூட்டம் - சம்புலிங்கத்தின் பஞ்ச்


தானா சேர்ந்த கூட்டம் - சம்புலிங்கத்தின் பஞ்ச்
            சமத்து சம்புலிங்கத்துக்கு க.ச.மு.ச. கட்சியிலிருந்து தலைவர் பதவி தேடி வந்தது.
            தலைவர் பதவியை தன்னடக்கத்தோடு ஏற்றுக் கொண்டார் சம்புலிங்கம்.
            அவர் பதவியேற்ற பத்தாம் நாளே ஒரு மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.
            சம்புலிங்கம் துவண்டு போனார்.
            பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பணம் புரளாத இந்த நேரத்தில் எப்படி கூட்டத்தைக் கூட்டுவது என்று முழி பிதுங்கியது. சம்புலிங்கம் ஒரு முடிவுக்கு வந்தவராய், ஆவேசமாக எழுந்து சென்றார். நின்றார். பிறகு, பேசினார், "இது நானா சேர்த்த கூட்டமில்ல. தானா சேர்ந்த கூட்டம்!"
            அவர் சென்று, நின்று, பேசிய இடம் ஏ.டி.எம். வாயில். செம கூட்டம்!
*****

இந்தப் படை போதுமா?


இந்தப் படை போதுமா?
            சமத்து சம்புலிங்கம் கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் புரோக்கராக இருந்தார்.
            பணமாற்ற மதிப்பிற்குப் பிறகு கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது சிரமமாகி விட்டது.
            தலைக்கு ரெண்டாயிரம் தருவதாகச் சொன்னாலும் கூட்டம் சேர்ப்பது பிரம பிரயத்தனமாக இருந்தது.
            இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சமத்து சம்புலிங்கம் ஒரு கட்சிக்காக ரெண்டாயிரம் தொண்டர்களைச் சேர்த்துக் கொடுத்தார்.
            எப்படி இது சம்புலிங்கத்தால் மட்டும் சாத்தியமானது? என்று சகலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது, சம்புலிங்கம் கூலாகச் சொன்னார், "ரெண்டாயிரத்துக்கு சில்லரை தர்றேன்னு சொன்னேன்! அவ்வளவுதான், திரண்டு வந்த கூட்டத்தை என்னாலேயே கன்ட்ரோல் பண்ண முடியல!"
*****

ஏ.டி.எம்.முன் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்


ஏ.டி.எம்.முன் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்
            சமத்து சம்புலிங்கம் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். முன் நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்தார் என்றால், நெடுநேரம் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பணம் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை போய் விட்டது.
            அப்போதுதான் அவரின் நினைவுக்கு யாரோ ஒருவர் சொல்லிய ஒரு வாசகம் நினைவுக்கு வந்தது, "தோல்வியாளன் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒரு பிரச்சனையைப் பார்க்கிறான். வெற்றியாளன் ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒரு வாய்ப்பினைப் பார்க்கிறான்!"
            உடனடியாக ஏ.டி.எம். வாயில் முன் ஒரு பஜ்ஜி கடையை ஆரம்பித்தார் சம்புலிங்கம்.
            ஏ.டி.எம்.லிருந்து எடுக்க வேண்டிய பணத்தை விட அதிக பணத்தை ஈட்டி விட்டார் சம்புலிங்கம்.
*****

2016 ஆம் ஆண்டு விருதுகள்


2016 ஆம் ஆண்டு விருதுகள்
சிறந்த திரைப்படம் - தாரை தப்பட்டை (கிழித்துத் தொங்க விட்டார்கள் ரசிகர்களை)
சிறந்த நடிகர் - பணமாற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நடிகர்களும்
சிறந்த நடிகை - பேய்ப் படங்களில் நடித்த அனைத்து நடிகைகளும்
சிறந்த நகைச்சுவை - 2000 ரூபாய் நோட்டுகளை 100 அடி ஆழத்துக்குப் புதை்து                         வைத்தாலும் அதிலிருக்கும் மைக்ரோ சிப் காட்டிக் கொடுத்து விடும்
சிறந்த புத்தகம் - சைவ சமையல் குறிப்புகள்
சிறந்த மொபைல் - நோக்கியா 1100 (வாட்ஸ் அப் பிரச்சனை இருக்காது & பேட்டரி                வெடிக்காது)
சிறந்த மனிதர் - பண சாட்சியாக வாக்களிக்காமல் மன சாட்சியாக வாக்களித்த அனைவரும்
*****

30 Dec 2016

வரங்கள்


வாழ் இடம்
கோயில் வாழ்
யானைகள்!
தொட்டி வாழ்
மீன்கள்!
கூண்டு வாழ்
கிளிகள்!
முதியோல் இல்லம் வாழ்
பெற்றோர்கள்!
*****

வரங்கள்
‍அதிர்ஷ்ட கல்லோ
மந்திரத் தகடோ
தாயத்தோ
காப்பாற்றி விடாதோ என
கடைசி வரை நம்பி
காத்திருக்க வைக்கிறது மனசு!
பாவம்
அவைகள்
விற்பவர்களை
விட்டு விடாமல்
கடைசி வரை
வைக்கின்றன
தரித்திரத்தல்!
*****

இருக்கட்டும்
மேகங்கள் வரும்
குளங்கள்
இருக்க வேண்டும்!
*****

ரெளடித்தனம்


வாசகம்
முந்தத் தோன்றவில்லை, வாகனத்தில் பின்னால், "இதுவும் கடந்து போகும்!" என்று எழுதியிருந்தவனை.
*****

ரெளடித்தனம்
தேர்தலில் சீட் இல்லை என்றதும், தலைவரிடமே தன்னுடைய ரெளடித்தனத்தைக் காட்ட ஆரம்பித்தான் கைகுண்டு மாரியப்பன்.
*****

பாடம்
மொழிப்போர் தியாகியின் பேரன் படித்துக் கொண்டிருந்தான் பாலமந்திர் வித்யாலயாவில்.
*****

நல்வழி
"இது பொதுவழி அல்ல!" என்று அறிவிப்பு வைக்கப்பட்டிருந்த வழி குண்டு, குழிகள் இல்லாமல் நன்றாக இருந்தது.
*****

மறதிக்குள்


மறதிக்குள்
மரணம் ஒரு
மாபெரும் திருவிழாவாகட்டும்!
மறந்து விடுவார்கள்
மனிதர்கள்
அதற்கு முன் நிகழ்த்தப்பட்ட
அத்தனை துரோகங்களையும்!
*****

பலி
பாதுகாப்பாக வளர்க்கப்பட்டே
கொடுக்கப்படும்
பலி ஆடுகள்!
*****

பேச்சு
பேரம் பேசுகிறோம்
எனலாம்
அங்கேயாவது பேசுகிறோமே
என்பதாக இருக்கின்றன
பேச்சுகள்!
*****

உண்டியல் பணம்


தர்மம்
ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் அந்த சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான், "தர்மம் பண்ணுங்க சாமி! தர்மம் தலைகாக்கும்!"
*****

உண்டியல் பணம்
"காரியம் நல்லபடியா நடக்கணும்னு ஆளுக்கு ஒரு ரூபா போட்டு வேண்டிக்குங்க!" என்றான் அந்த உண்டியல் திருடர்களின் தலைவன்.
*****

ஆகாது
மோர் குடித்த தலைவர் சொன்னார், "என்ன இருந்தாலும் பீர் போல ஆகாது!"
*****

எவிடென்ஸ்
"எவிடென்ஸ் எதையும் விட்டு வைக்கல! கொன்னது யாருன்னே தெரியாது பாஸ்!" என்று செல்பேசியவனின் வாட்ஸ் அப்பில் சற்று நேரத்துக்கெல்லாம் வந்தது அவன் செய்த கொலை அப்படியே வீடியோவாக.
*****

தொழில் ரகசியம்
"பொது இடத்துல போட்டுத் தள்ளுறது ஆபத்து!" என்று எச்சரிக்கை செய்த செயின் ஜெயபாலிடம், "ம்ஹூம்! இதுதான் பெஸ்ட்! கண்காணிப்பு கேமிரா இல்ல பாரு!" என்றான் ஆதிகேசவன்.
*****

சாதிகள்


சாதிகள்
சமத்துவத்தை விரும்பும்
தலைவர் வீட்டில்
உயர்சாதி நாய்கள்!
*****

ஹம்மிங்
அந்தப் பாடலை உருவாக்கிய
இசை மேதை
மனநலக் காப்பகத்தில்
சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கிறார்
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது
அந்த பாடலை
ஹம்மிங் செய்யும் போது
விலகிப் போகும்
மனஇறுக்கம்.
*****

குப்பை
குப்பைகளை உருவாக்குவார்கள்
பின் பெயரிடுவார்கள்
அவைகளை மட்க வைக்கும்
‍வேலை மட்டும் மனிதனுக்கு.
மக்காமல் போகின்றவைகளைப் பற்றி
கவலை ஏதுமின்றி
விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வார்கள்
முடிந்தவரை
மனிதன் போன்ற
குப்பைகளை
மட்க வைக்கப் பார்க்கும் மண் மேல்
பிறந்து கொண்டே இருப்பார்கள்
மனிதர்கள்!
*****

தலைவர்


கனவு
"ரொம்ப நாள் ஏக்கம் சார் இது!" என்றார் ஒரு நாள் முழுவதும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்த மார்கெட்டிங் மேனேஜர் முருகராஜ்.
*****

தீர்வு
"தனி ஈழம் தீர்வாகாது" பரபரப்பு பேட்டியளித்தார், பத்து நாள்களுக்கு முன் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்ற அன்டன் பால்.
*****

தலைவர்
"என் இனம்! என் மக்கள்! என் கலாச்சாரம்!" ஜூன்ஸ் பேண்டும், டீ-சர்ட்டும் போட்டுக் கொண்டு உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டு இருந்தார் தமிழினத் தலைவர்.
*****

டிபரெண்ட்
"இன்னும் டிபரெண்டா..." என்ற தயாரிப்பாளரிடம், இயக்குனர் சொன்னார், "இந்த மசாலா படத்தை உலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைக்கிறோம்!"
*****

பத்துக்கு மேல போனா குத்தம்!


பத்துக்கு மேல போனா குத்தம்!
            மார்ச் 2017 - க்குப் பின் பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பத்துக்கு மேல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
            பழைய நோட்டுகள் செல்லுபடியான அந்த நாள்களிலே ஒன்றிரண்டு நோட்டுகளுக்கு மேல் கையில் இருந்ததில்லை. இப்போது அந்த செல்லாத நோட்டுகளை பத்துக்கு மேல் வைத்திருப்பது என்பதெல்லாம் வாய்ப்பே இல்லை.
            அம்மாவின் மறைவுக்குப் பின் அம்மா படம் இருந்த சட்டைப் பைகளில் சின்னம்மாவின் படம் வந்து விட்டது போல, சட்டைப் பையில் இப்போது இருப்பதெல்லாம் புதிய ரூபாய் நோட்டுதான்.
            பழைய நோட்டுகளை பத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது சரி. புதிய நோட்டுகளும் பத்துக்கு மேல் கையில் இருக்கக் கூடாத அளவுக்கு நிலைமை இருப்பது சரியா? என்பதுதான் சரியா? தவறா? என்று தெரியவில்லை.
*****

ரத்தத்தின் ரத்தங்கள்


ரத்தத்தின் ரத்தங்கள்
            அம்மா அவர்களின் மறைவுக்குக் கூட உணர்ச்சி வசப்பட்டு வன்முறையில் இறங்காத ரத்தத்தின் ரத்தங்கள் சின்னம்மாவுக்கு எதிராக சசிகலா புஷ்பா அவர்கள் பொதுச்செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்த போது வன்முறையில் இறங்கிய போதுதான் அவர்கள் சின்னம்மா மேல் வைத்துள்ள அக்கறை தெரிய வந்தது.
            சசிகலா புஷ்பாவுக்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் கணவரை வெளுத்து எடுத்து விட்டார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அவரை ரத்தம் சொட்ட சொட்ட காவலர்கள் அழைத்து வந்த காட்சி பார்க்க பார்க்க பாவமாக இருந்தது. ரத்தத்தின் ரத்தங்கள் என்பதன் உண்மையான பொருள் அப்போதுதான் புரிய வந்தது.
            அது சரி! சசிகலா புஷ்பா அவர்கள் ஏன் வேட்புமனு தாக்கல் செய்தார்? அவர் பெயரிலும் சசிகலா என்று இருப்பதனாலா?
*****

மண்ணின் மரன்


மண்ணின் மரன்
நம் மண்ணுக்கு என்று சில உணவு வகைகள் இருக்கின்றன.
நம் மண்ணுக்கு என்று சில உடை வகைகள் இருக்கின்றன.
நம் மண்ணுக்கு என்று சில வீடு வகைகள் இருக்கின்றன.
நம் மண்ணுக்கு என்று சில வாழ்க்கை முறைகள் இருக்கின்றன.
இவைகளோடு வாழ்வது எளிது. இனிது. சிக்கனமானது. பாதுகாப்பானது.
கலாச்சாரத் தொடர்புகளால் உணவில், உடையில், வீட்டு அமைப்பில், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாறுதல் நல்ல பரிமாற்ற முயற்சி.
வணிகத்தின் அடிப்படையில் திட்டமிட்டு செய்யும் பரிமாற்ற முயற்சி ஆபத்தானது. ஒரு கலாச்சாரத்தை மட்டம் தட்டி, இன்னொரு காலச்சாரத்தைத் தூக்கிப் பிடிப்பது அராஜகமானது.
நம் மண்ணில் வெளிநாட்டு விதைகள் விதைக்கப்படுவது இப்படித்தான்.
நம் மண்ணில் வெளிநாட்டு உணவு வகைகள் விற்கப்படுவது இப்படித்தான்.
நம் மண்ணில் வெளிநாட்டு வாழ்க்கை முறைகள் தூண்டப்படுவது இப்படித்தான்.
நம் மண்ணில் வெளிநாட்டு மரங்கள் வளர்க்கப்படுவதும் இப்படித்தான். எந்த மண்ணில் எந்த மரங்கள் வைத்தால் என்ன என்று கேட்கிறீர்களா? ஒரு புயலில் ஒட்டுமொத்தமாக மரங்கள் வீழ்ந்து விடும் போது அது குறித்து கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
அந்தந்த நிலத்திற்கேற்ற மரங்கள் அந்தந்த மண்ணில் இருந்தால் அது இயற்கை மட்டுமல்ல, வலிமையும் கூட அல்லவா!
*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...