திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் - 48
காதலின் தெர்மோ டைனமிக்ஸ்!
அந்த அலுவலகத்தில் எப்போதும் இருக்கும் அந்தக் காப்பி தயாரிக்கும் இயந்திரம்.
எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சுடச்சுட போட்டுக் குடித்துக் கொள்ளலாம்.
அவள் அவனுக்கும் அவளுக்குமாக இரண்டு கோப்பை காப்பி தயார் செய்து கொண்டிருந்தாள்.
சரியாகச் சுடச்சுடக் காய்ச்சப்பட்ட காபி.
அவள் அவன் முன் வைத்தாள்.
அவன் அதைத் தூக்கப் போனான்.
திடீரென அவனது கை பாதியிலேயே நின்றது.
உதடுகள் லேசாகப் புன்னகைத்தன.
"என்ன மிஸ்டர் சிரிக்கிறீங்க? வேலை ஜாஸ்தியா இருக்கு. சீக்கிரம் குடிங்க.
வேலைகள முடிங்க." என்றாள் அவள் புரியாமல்.
அவன் காபியை எடுக்காமல் லேசாகச் சாய்ந்து உட்கார்ந்தான்.
"ஒண்ணுமில்ல. இந்த காபி ரொம்ப சூடா இருக்கு."
"இருக்கத்தான் செய்யும், இப்பதான் போட்டது. குடிங்க, இல்லன்னா ஆறிப் போகப்
போகுது."
அவன் தலையை அசைத்தான். "இல்லை. குடிக்க பயமா இருக்கு."
"என்ன மிஸ்டர் புது உளறல் இது? காபி குடிக்கிறதுக்கு என்ன பயம்? நாக்க
சுட்டுடுமா?"
"நாக்கு சுட்டாலும் பரவாயில்லை. மனசு சுட்டுடுமோன்னுதான் பயம்."
அவள் புருவங்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். "என்ன பேசறீங்க நீங்க?"
அவன் அமைதியாகச் சொன்னான், "இப்ப நான் இந்தச் சூடான காபியைக் குடிச்சேன்னா,
அந்தச் சூடு என் தொண்டையைக் கடந்து உள்ள போகும். ஆனா, என் நெஞ்சுக்குள்ளே இப்ப யார்
இருக்கான்னு தெரியுமா?"
அவள் யோசித்துப் பார்த்தாள். "எனக்கென்ன தெரியும்? நான் என்ன எக்ஸ்ரே மெஷினா?
மனசுக்குள்ள இருக்குறத ஊடுருவி கண்டுபிடிக்க?"
அவன் சிரித்தான். "நக்கல். பரவாயில்ல. என் நெஞ்சே அவங்களாலதான் துடிக்குது.
அவங்க என் மனசுல அவ்வளவு பத்திரமா, ஆழமா உட்கார்ந்திருக்காங்க. நான் இந்தச் சூடான காபியைக்
குடிச்சா, என் நெஞ்சுக்குள்ள இருக்கிற அவங்களுக்கும் அந்தச் சூடு பட்டுடுமே!"
"அப்படின்னா ஊதிச் சாப்பிட வேண்டியதுதானே?"
"ஊதிச் சாப்பிடுற அளவுக்கு எனக்குப் பொறுமை எங்கே இருக்கு?
"நெஞ்சத்தார்
காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும்
வேபாக்கு அறிந்து." (குறள், 1128)
நெஞ்சத்தார் காதலவர். அவங்களோட சூடு தாங்காம ஏற்கனவே என் நெஞ்சு வெந்துகிட்டு
இருக்கு. இதோட இந்த வெய்துண்டல் வேற சேர்ந்தா,
அப்புறம் என் நிலைமை என்னாகுறது? அஞ்சுதும் வேபாக் அறிந்து!"
"வள்ளுவரைப் போய் காபி ஷாப்ல உக்கார வச்ச மாதிரி இருக்கு உங்க லூட்டி.
ஒரு காபியோட சூட்டைப் பத்தித் திருவள்ளுவர் சொன்ன குறளுக்கு, நீங்க இப்படி ஓவர் பில்டப்
கொடுப்பீங்கன்னு நினைக்கல."
"இது லூட்டி இல்ல, பீலிங். காதலிக்கிறவங்களுக்குத்தான் தெரியும், பிரிஞ்சிருக்கும்போது
அவங்க நம்ம கூடவே இருக்கிற மாதிரி ஒரு பிரமை எப்பவும் இருக்கும். அவங்களுக்கு வலிச்சா
நமக்கு வலிக்கும்னு தோணும்."
அவள் "முடியல மிஸ்டர்! உங்களோட மல்லுகட்ட. தயவுபண்ணி அந்த நெஞ்சத்தார்
காதலவர்கிட்ட கொஞ்சம் சொல்லிச் சூட்டைப் பொறுத்துக்கச் சொல்லி, இப்போதைக்குக் குடிச்சிட்டு
வேலையை ஆரம்பிக்கிறீங்களா?"
"சொன்னா கேட்பாங்களா?"
"சொன்னாதான் கேட்பாங்க. சொல்லாம எப்படிக் கேட்பாங்க?"
"அப்படின்னா சொல்லிடுறேன். தயவுபண்ணி கொஞ்சம் சூட்டைப் பொறுத்துக்குங்க."
அவள் ஒரு நொடி திகைத்துப் போனாள். மனதுக்குள் ஒரு வெட்கம், தயக்கம், துடிப்பு,
வெடிப்பு எல்லாம் அந்த ஒற்றை நொடியில் அவளைச் சுழற்றி எடுத்தது. அடுத்த நொடியே சுதாரித்துக்
கொண்டவளாய், "ஓஹோ! இந்தப் பில்டப்பெல்லாம் எனக்குத்தானா? இது தெரிஞ்சிருந்தா எரிமலைக்
குழம்பையே அள்ளி கப்ல போட்டுக் கொடுத்திருப்பேனே!"
"எனக்கென்ன குடிச்சிடுவேன். நெஞ்சுக்குள்ள இருக்குற உங்களை நினைச்சாத்தான்…?"
"எனக்கென்ன, நெஞ்சுக்குள்ளேயிருந்து டக்குன்னு வெளியில குதிச்சிடுவேன்."
"நீங்க என் நெஞ்சிலேர்ந்து வெளியே குதிச்ச அடுத்த நொடியே, நான் உடனே உங்க
நெஞ்சுக்குள்ள குதிச்சிடுவேன்."
"அப்புறம் எனக்கும் வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்தா?"
"ஆமா! நேத்து சாயுங்காலம் நடந்த மீட்டிங்ல சூப்பைச் சூடா குடிக்காம இருந்ததுக்கு
அதுதானே காரணம்?"
அவள் பாசாங்காகத் தலையில் அடித்துக் கொண்டாள். "கடவுளே! நேத்து நெஞ்சு
எரிச்சலா இருந்துச்சு, அதான் குடிக்கல. அதுக்கு போயிட்டு இப்படி ஒரு விளக்கம். அப்படித்தானே?"
அவள் சிரிக்க அவனும் சிரித்தான்.
அங்கே காபி மெல்ல ஆறிக்கொண்டிருந்தது, காதலவரைச் சூடாக்கக் கூடாதென்று. ஆனால்,
அவர்களின் நெஞ்சத்தில் இருந்த காதலோ, இன்னும் பன்மடங்கு சூடேறிக்கொண்டிருந்தது.
- சூத்திரங்கள் தொடரும்!
*****
