23 Nov 2017

சவட்டுச் சிந்தனைகள்

சவட்டுச் சிந்தனைகள்
            தமிழ் எழுத்தாளன் எஸ்.கே(!) தன் சிந்தனைகளை எழுத ஆரம்பித்தான்.
            "எழுத்தைப் பொறுத்த வரையில் எது எனக்கு அனுபவப் பட்டதோ அதைத்தான் நான் எழுத முடியும். அதுதான் எளிதாக இருக்கும்.
            எனக்குத் தெரியாத, அனுபவப்படாத ஒன்றை ஆசைக்காக எழுத முற்படுவது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை விட அது மிகவும் சிரமமாக இருக்கும் என்பது எனக்குதான் தெரியும்."
***
            "நாம் மனிதர்களை நம்பிச் செய்வதற்கு எதுவுமில்லை. அந்த அளவுக்கு விலைவாசி அவர்களை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
            விலைவாசியைச் சமாளிப்பதற்கு அதை ஈடுகட்டுவதற்கு சக மனிதனை ஏமாற்றிப் பிழைக்க மனிதன் தயாராகி விட்டான்."
***
            "உனக்குள் எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டால் அன்றிலிருந்து உன் பிரச்சனைகள் தூர ஓடி விடும்."
***
            "நான் எழுதுவது சாதாரணமாக இருக்கலாம். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு என்னோடு பேச வேண்டும். என் எழுத்துகள் என்னோடு நான் பேசுவதற்கு எழுதப்பட்டது. யாருடைய நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்காகவோ, அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு காலத்தில் பிரசுர நோக்கம் கொண்ட என் எழுத்துகள் அதிலும் அவநம்பிக்கை அடைந்து எந்த நம்பிக்கைக்காகவும் தற்போது எழுதப்படவில்லை. அது எழுதப்படுகிறது எனது தனிப்பட்ட ஆறுதலுக்காக மட்டும். அதை உங்கள் முன் பார்வைக்காக வைப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்."
***
            இவைகளை எழுதிய பின் எஸ்.கே. மிகவும் களைத்துப் போனவன் ஆனான். தன்னை நானூறு பேர்கள் ஒன்று சேர்ந்து அடித்துப் போட்டது போல இருப்பதாகப் புலம்பினான். இதைப் படிப்பவர்கள் பாவந்தான் என்றபடியே கொட்டாவி விட்டவாறு ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்று விட்டவனை இப்போது எழுப்ப முடியாது.

*****

உண்மையில் தேவதை

உண்மையில் தேவதை
தங்கம்
வெள்ளி
இரும்பு
மூன்று கோடரிகளையும்
விறகு வெட்டியிடம் கொடுத்த
தேவதை
ஹைட்ரோ கார்பன் குழாயைப்
பிடுங்கிக் கொண்டது.

*****

அர்ப்பணம்

அர்ப்பணம்
வெயில் பிடித்து வளர்ந்து
இருளுக்கு அர்ப்பணமாகிறது
இரவின் குளிருக்கு
இதமாக கொளுத்தப்பட்ட
விறகு.

*****

22 Nov 2017

லஞ்சத்தில் நூறில் ஒரு பங்கே நிவாரணம்!

லஞ்சத்தில் நூறில் ஒரு பங்கே நிவாரணம்!
            எப்போதாவது சாலையில் பள்ளங்கள், குழிகள் இருக்கலாம்.
            எப்போதும் இருந்தால்...?
            நமக்கு ஏன் அதிகாரிகள்?
            நமக்கு ஏன் மக்கள் மன்ற உறுப்பினர்கள்?
            ஒரு முறை, இரு முறை, சில முறை நிகழும் தவறுகள் திருத்தப்பட வேண்டும் அல்லவா! மீண்டும் மீண்டும் அவைகளே பல முறைகள் நிகழ்ந்து கொண்டு இருந்தாலும், அத்தவறுகளோடேயே வாழப் பழகுங்கள் என்று பழக்குவதற்குப் பெயர்தான் ஜனநாயகமா என்ன?
            வெள்ளத்தை எடுத்துக் கொண்டால்... அரிதாக, விபத்தாக, அபரிமிதமான மழைப்பொழிவால் நேர்ந்தால் பரவாயில்லை. சாதாரண மழைக்கே வரும் என்றால்... என்ன சொல்வது? என்ன செய்வது?
            நம் குடிமைச் சமூகத்தில் சாமான்யன் ஒருவன் அவ்வளவு எளிதில் அனுமதி வாங்கி வீடு கட்டுவது சாத்தியமா என்ன? அதற்கான அலைச்சல், மன உளைச்சல் அதிகம்.
            கட்டுவதை விட பணத்தைக் கொட்டி அனுமதி வாங்குவது கடினம். அப்படித்தானே மனைகள், வளாகங்கள், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவைகள் எல்லாம் வெள்ளம் வடிவதற்கு எதிராக இருக்கின்றன என்றால்... என்ன சொல்வது?
            வருங்காலத்தைக் கெடுக்கும் என்று தெரிந்தும் லஞ்சத்தைக் கொடுத்து, ஒரு நேரத்தில் நம்மையேப் பாழடிக்கும் என்று புரிந்தும் ஊழலை அனுமதித்து, நம்மை அறியாமலே நாம் நிவாரணத்திற்குத் தயாராகி விட்டோம் என்பதுதான் உண்மை.
            கொடுத்த லஞ்சத்தில் நூறில் ஒரு பங்கு தேறுமா இந்த நிவாரணம்? அல்லது செய்யப்பட்ட ஊழல்களில் கோடியில் ஒரு பங்கு தேறுமா இந்த நிவாரணம்?

*****

உபயோகமற்ற மழையும் வெயிலும்

உபயோகமற்ற மழையும் வெயிலும்
எந்தக் காட்டில்
பொழிவதென்று தெரியாமல்
இந்தக் கட்டிடக் காட்டில்
வெள்ளமெனப் பொழிந்து கொண்டிருக்கிறது
உபயோகமற்ற மழை.
எந்தப் பிரதேசத்தில்
அடிப்பதென அறியாமல்
இந்தக் காங்க்ரீட் பிரதேசத்தில்
அடித்துக் கொண்டு இருக்கிறது
தாவர முலைகளிலிருந்து
நீர் பால் குடிக்க இயலா
உபயோகமற்ற வெயில்.

*****

மெய் அறிக்கைகள்

மெய் அறிக்கைகள்
இந்த வெயிலுக்கு
ஒரு மழை அடித்தால்  தேவலாம் என
கோடை மேகத்தின் காதுகளுக்கு
கேட்காது என்பது அறிந்தும்
வறண்ட உதடுகள் புலம்பும்.
இப்படி பெய்யுற மழைக்கு
ஒரு வெயில் அடித்தால் தேவலாம் என
டிசம்பர் வானின் காதுகளுக்கு
கேட்காது என்பது புரிந்தும்
ஈர உதடுகள் புலம்பும்.
இந்தக் கோடைக்கு
ஒரு குட நீரும்
இந்த மழைக்கு
ஒரு கேன் வாட்டர்
கிடைத்தால் போதும் என
அடைபட்ட ஆட்சியாளர்களின் காதுகளுக்கு
கேட்காது என்பது தெரிந்தும்
தவிக்கும் உதடுகள் புலம்பும்.
காதுகளின் கேட்காத தன்மையும்
வாய்களின் புலம்பும் தன்மையும்
இந்நூற்றாண்டின் மரபியல் புலம்புகள் என
அதைப் பின்தொடர்ந்து வரும்
மருத்துவ அறிக்கைகள் புலம்பும்.

*****

21 Nov 2017

கடின உழைப்பார்களே நிறுத்துங்கள்!

கடின உழைப்பார்களே நிறுத்துங்கள்!
            நீங்கள் கடினமாக உழைத்ததெல்லாம் போதும்!
            பத்து தலைமுறைக்கு நீங்கள் சொத்து சேர்த்து விட்டது எங்களுக்குத் தெரியும்.
            இன்னும் பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பதற்காகவும், பிரபல்யம் தேடிக் கொள்வதற்காகவும் நடிப்பதை கடின உழைப்பு என்ற பெயரில் கொச்சைப் படுத்தாதீர்கள்.
            கடின உழைப்பு என்ற பெயரில் நீங்கள் தரும் மசாலா படங்களால் கலையுலகம் மொக்கையாகப் பல்லிளிக்கிறது.
            நீங்கள் நடிப்பதன் மூலம் பல தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதாக தயவுசெய்து சொல்லவே சொல்லாதீர்கள்.
            உங்களின் ஊதியத்துக்கும், அவர்களின் ஊதியத்துக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. அவர்களின் வயிற்றில் அடித்து உழைப்பை உறிஞ்சி அதிலும்தான் லாபம் பார்க்கிறீர்கள்.
            பிரபல்யத்தை, விளம்பரத்தை நீங்கள் காசாக்குவது போல் எத்தனை தொழிலாளிகள் காசாக்க முடியும் சொல்லுங்கள்?
*****