லஞ்சத்தில் நூறில் ஒரு பங்கே நிவாரணம்!
எப்போதாவது சாலையில் பள்ளங்கள், குழிகள்
இருக்கலாம்.
எப்போதும் இருந்தால்...?
நமக்கு ஏன் அதிகாரிகள்?
நமக்கு ஏன் மக்கள் மன்ற உறுப்பினர்கள்?
ஒரு முறை, இரு முறை, சில முறை நிகழும்
தவறுகள் திருத்தப்பட வேண்டும் அல்லவா! மீண்டும் மீண்டும் அவைகளே பல முறைகள் நிகழ்ந்து
கொண்டு இருந்தாலும், அத்தவறுகளோடேயே வாழப் பழகுங்கள் என்று பழக்குவதற்குப் பெயர்தான்
ஜனநாயகமா என்ன?
வெள்ளத்தை எடுத்துக் கொண்டால்... அரிதாக,
விபத்தாக, அபரிமிதமான மழைப்பொழிவால் நேர்ந்தால் பரவாயில்லை. சாதாரண மழைக்கே வரும்
என்றால்... என்ன சொல்வது? என்ன செய்வது?
நம் குடிமைச் சமூகத்தில் சாமான்யன் ஒருவன்
அவ்வளவு எளிதில் அனுமதி வாங்கி வீடு கட்டுவது சாத்தியமா என்ன? அதற்கான அலைச்சல், மன
உளைச்சல் அதிகம்.
கட்டுவதை விட பணத்தைக் கொட்டி அனுமதி
வாங்குவது கடினம். அப்படித்தானே மனைகள், வளாகங்கள், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவைகள்
எல்லாம் வெள்ளம் வடிவதற்கு எதிராக இருக்கின்றன என்றால்... என்ன சொல்வது?
வருங்காலத்தைக் கெடுக்கும் என்று தெரிந்தும்
லஞ்சத்தைக் கொடுத்து, ஒரு நேரத்தில் நம்மையேப் பாழடிக்கும் என்று புரிந்தும் ஊழலை
அனுமதித்து, நம்மை அறியாமலே நாம் நிவாரணத்திற்குத் தயாராகி விட்டோம் என்பதுதான் உண்மை.
கொடுத்த லஞ்சத்தில் நூறில் ஒரு பங்கு
தேறுமா இந்த நிவாரணம்? அல்லது செய்யப்பட்ட ஊழல்களில் கோடியில் ஒரு பங்கு தேறுமா இந்த
நிவாரணம்?
*****
No comments:
Post a Comment