23 Nov 2017

சவட்டுச் சிந்தனைகள்

சவட்டுச் சிந்தனைகள்
            தமிழ் எழுத்தாளன் எஸ்.கே(!) தன் சிந்தனைகளை எழுத ஆரம்பித்தான்.
            "எழுத்தைப் பொறுத்த வரையில் எது எனக்கு அனுபவப் பட்டதோ அதைத்தான் நான் எழுத முடியும். அதுதான் எளிதாக இருக்கும்.
            எனக்குத் தெரியாத, அனுபவப்படாத ஒன்றை ஆசைக்காக எழுத முற்படுவது எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை விட அது மிகவும் சிரமமாக இருக்கும் என்பது எனக்குதான் தெரியும்."
***
            "நாம் மனிதர்களை நம்பிச் செய்வதற்கு எதுவுமில்லை. அந்த அளவுக்கு விலைவாசி அவர்களை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
            விலைவாசியைச் சமாளிப்பதற்கு அதை ஈடுகட்டுவதற்கு சக மனிதனை ஏமாற்றிப் பிழைக்க மனிதன் தயாராகி விட்டான்."
***
            "உனக்குள் எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டால் அன்றிலிருந்து உன் பிரச்சனைகள் தூர ஓடி விடும்."
***
            "நான் எழுதுவது சாதாரணமாக இருக்கலாம். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு என்னோடு பேச வேண்டும். என் எழுத்துகள் என்னோடு நான் பேசுவதற்கு எழுதப்பட்டது. யாருடைய நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்காகவோ, அதன் மூலம் ஆதாயம் பெறுவதற்காகவோ எழுதப்படவில்லை. ஒரு காலத்தில் பிரசுர நோக்கம் கொண்ட என் எழுத்துகள் அதிலும் அவநம்பிக்கை அடைந்து எந்த நம்பிக்கைக்காகவும் தற்போது எழுதப்படவில்லை. அது எழுதப்படுகிறது எனது தனிப்பட்ட ஆறுதலுக்காக மட்டும். அதை உங்கள் முன் பார்வைக்காக வைப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்."
***
            இவைகளை எழுதிய பின் எஸ்.கே. மிகவும் களைத்துப் போனவன் ஆனான். தன்னை நானூறு பேர்கள் ஒன்று சேர்ந்து அடித்துப் போட்டது போல இருப்பதாகப் புலம்பினான். இதைப் படிப்பவர்கள் பாவந்தான் என்றபடியே கொட்டாவி விட்டவாறு ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்று விட்டவனை இப்போது எழுப்ப முடியாது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...