15 Dec 2025

கூடுதலும் குறைவும்

கூடுதலும் குறைவும்

போன வருடத்தை விட

இந்த வருடம் அதிகம்தான்

கடனும்

வெயிலும்

மழையும்

பிக்கல்களும்

பிடுங்களும்

மன உளைச்சல்களும்

நரைத்த முடியும்

என்றாலும்

வேடிக்கையும்

நக்கலும்

புன்முறுவலும்

போனால் போகட்டும் போடாவும்

இது இல்லையென்றால் இன்னொன்றும்

இன்றைக்கு இல்லையென்றால் நாளையும்

படுத்தவுடன் வரும் தூக்கமும்

போன வருடத்தை விட

இன்னும் கொஞ்சம்

அதிகம்தான்

இந்த நடுத்தர இந்திய சாமானியனுக்கு

*****

14 Dec 2025

தேநீர் வடிவில் திரும்பும் வங்கிக் கணக்கின் வரலாறு!

தேநீர் வடிவில் திரும்பும் வங்கிக் கணக்கின் வரலாறு!

வரலாறு ஒரே மாதிரியானை கதைகளையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது.

தேநீர் மக்களிடையே பிரபலமானதற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு சொல்லப்படுகிறது. வசதி படைத்தவர்கள் பருகி வந்த தேநீரை மக்களிடையே பிரபலபடுத்துவதற்காக அதை முதலில் இலவசமாக வழங்கியிருக்கிறார்கள். தேநீர் புத்துணர்ச்சி தரும், சுறுசுறுப்பு ஊட்டும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள்.

மக்களும் குடிக்கப் பழக ஆரம்பித்து விட்ட பிறகு, அதற்கு விலை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். பழக்கத்திலிருந்து விடுபட முடியாத மக்கள் தேநீரை விலை கொடுக்க வாங்க பருக ஆரம்பித்து விட்டார்கள். வீதிக்கு வீதி தேநீர் கடைகளும் முளை விடத் தொடங்கி விட்டன.

இன்று வீதிகள் இல்லாத ஊர்கள் கூட இருக்கலாம். தேநீர் கடைகள் இல்லாத வீதிகளைப் பார்க்க முடியாது. மக்கள் சந்திரனிலோ, செவ்வாயிலோ குடியேற நேர்ந்தால் அங்கு உருவாகும் முதல் கடையாகத் தேநீர்க் கடையே இருக்கும்.

இந்தத் தேநீர்க் கடைக்கும் வங்கிக் கணக்குக்கும் இடையே ஒரு சுவாரசியமான தொடர்பு இருக்கிறது. பண வசதி உள்ளவர்கள் மட்டுமே வங்கிக் கணக்குகளைப் புழங்கிக் கொண்டிருந்த நாட்டில், அனைவருக்கும் இலவசமாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகள் தொடங்கினால்தான் அரசின் உதவித்தொகைளைப் பெற முடியும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

மக்களும் தங்களுக்கும் ஒரு வங்கி கணக்கு இருக்கட்டுமே, அதில் அரசின் உதவித்தொகைகள் வந்து கொட்டட்டுமே என்று வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தார்கள்.

பிறகுதான் ஆட்டம் ஆரம்பம் ஆனது. இலவசமாக வழங்கப்பட்ட தேநீருக்கு விலை வைக்கப்பட்டதைப் போல, வங்கிக் கணக்குக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு, அப்படி இல்லாவிட்டால் அபராதமும் வசூலிக்கப்பட்டன. வசூலிக்கப்பட்ட அபாரதம் கொஞ்சம் நஞ்சமல்ல. பொதுத்துறை வங்கிகள் மட்டுமே ஐந்தாண்டுகளில் 8500 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன.

அரசின் உதவித்தொகைகளோ வங்கிகள் குறிப்பிடும் குறைந்தபட்ச இருப்புத்தொகைக்குக் குறைவாகவே வங்கிக் கணக்குகளில் வந்து விழுகின்றன. அந்தத் தொகை அப்படியே அபராதமாக வசூலிக்கப்பட்டு விடுகின்றன. இந்த உதவித்தொகை ஏழை மக்களுக்கான உதவித்தொகையா? அபராதம் என்ற பெயரில் வங்கிகள் வசூலித்துக் கொள்வதற்கான லாபத் தொகையா?

தேநீரைக் குடித்துப் பழகியவர்கள் அதன் பழக்கத்திலிருந்து விடபட முடியாமல், ஒருவேளை விடுபட நினைத்தால் தலைவலிக்கு ஆளாவதைப் போல, வங்கிக் கணக்கை ஆரம்பித்தவர்கள் அதை முடித்துக் கொள்ள முடியாமலும், அபராதம் என்ற சாபத்திலிருந்தும் விடுபட முடியாமலும் தவிக்கிறார்கள்.

இதில் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ஐம்பதாயிரமாக உயரத்தி, பின்பு அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து பதினைந்தாயிரமாகக் குறைக்கின்றன. இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டிய நாட்டின் மத்திய வங்கியோ அதெல்லாம் வங்கியின் சுதந்திரம் என்கின்றது. ஓ! இதுதான் நாம் 1947 ஆகஸ்ட் 15 இல் பெற்ற சுதந்திரத்திற்கான அர்த்தமோ என்னவோ! அந்தச் சுதந்திரம் என்பது பெரிய நிறுவனங்களுக்கே அன்றி எளிய மக்களுக்கு இல்லை போலும்!

*****

12 Dec 2025

துரதிர்ஷ்டத்தின் சங்கிலி

துரதிர்ஷ்டத்தின் சங்கிலி

முத்தைத் திரு பத்தித் திருநகை

அத்திக்கிரை சத்திச் சரவண

எனக்கு மட்டும் பஞ்சாமிர்தம்

விடுபட்டு போய் விட்டதே முருகா

*

வார்த்தைகள் அற்று விட்டன

சொற்கள் சோர்ந்து விட்டன

வாக்கியங்களுக்கு இனி வேலையில்லை

எழுத்துகளே வேண்டாம் போ

ஒலிகள் அனைத்தும் ஓடிப் போ

எந்த நம்பிக்கையில்

இனி

என்ன பேச

நூறு ரூபாய் கடன் கொடுக்க

வக்கில்லாத உன்னிடம்

*

நல்ல கொழுப்பு உள்ள

ஆடுகளில் ஒன்றே

கறுப்பு ஆடாக இருக்கையில்

கெட்ட கொழுப்பு உள்ள ஒருவன்

எப்படி

அதிர்ஷ்டக்காரனாக….

*

உன் அன்புக்கு

நான் பொருந்த மாட்டேன்

விட்டு விடு

தாங்க முடியாத வன்மம்

*****

11 Dec 2025

என்ன ஆயிற்று வெள்ளிக்கு?

என்ன ஆயிற்று வெள்ளிக்கு?

கொஞ்ச நினைத்தால் தங்கக்கட்டி, தங்கக்குட்டி, சின்னத் தங்கம், செல்லத் தங்கம் இப்படித்தான் கொஞ்சுவார்கள். யாரும் வெள்ளிக்கட்டி, வெள்ளிக்குட்டி, சின்ன வெள்ளி, செல்லவெள்ளி என்று கொஞ்ச மாட்டார்கள். ஆனால், அப்படிக் கொஞ்ச வைக்கும் அளவுக்கு விலையேறி நிற்கிறது வெள்ளி.

கடந்த ஓராண்டில் 100 சதவீதத்துக்கு மேல் விலை ஏறியிருக்கிறது வெள்ளி. தங்கமோ 60 சதவீதத்தைத் தாண்டவில்லை. அதாவது, வெள்ளியில் 100 ரூபாய் முதல் போட்டிருந்தால் அது 200 ரூபாய் ஆகியிருக்கும். அதையே தங்கத்தில் போட்டிருந்தால் 165 ரூபாய்தான் ஆகியிருக்கும்.

அப்படி என்னதான் ஆயிற்று இந்த வெள்ளிக்கு?

வெள்ளியின் இந்த விலையேற்றம் சட்டென நிகழ்ந்து விடவில்லை. இதற்கென வெள்ளி 14 வருடங்கள் காத்திருந்தது. இப்போது ஒரே அடியாக ஓராண்டில் எகிறி அடித்து உச்சம் ஆகியிருக்கிறது.

வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வருவது வெள்ளியின் விலையேற்றத்துக்குக் காரணம். அதைப் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஊகச் சந்தை அதை விட முக்கிய காரணம்.

ஆபரணங்கள், பாத்திரங்கள், சிலைகள் என்பதைத் தாண்டி மின்னணு துறையிலும் வெள்ளியின் பயன்பாடு அதிகம். தற்போது மின்னணு துறை வளர்ந்து வரும் வேகத்திற்கேற்ப வெள்ளியின் இருப்பு கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னேறிய நாடுகள் தங்களின் தொழில்துறை வளர்ச்சிக்கு வெள்ளியை அசுரத் தனமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றன.

இது உலக அளவில் முக்கிய காரணம் என்றாலும், இந்தியாவில் தங்கத்துக்கு நிகராக வெள்ளிக்கு தனி மதிப்பு எப்போதும் உண்டு. முன்பு கொலுசுகள், காப்புகள் என்ற அளவில் இருந்த வெள்ளி இன்று சங்கிலிகள், தோடுகள் என்று பலவித ஆபரண அவதாரங்கள் எடுத்து விட்டது. அது தவிர பாத்திரங்கள், சிலைகள், பரிசுப் பொருட்கள் என்று வெள்ளிக்கு தனி கௌரவமும் அந்தஸ்தும் இருக்கிறது. எல்லாம் சேர்ந்து வெள்ளியை விலையேற்றத்தில் கொண்டு பொய் விட்டு விட்டன.

என்றாலும் இந்த திடீர் விலை உயர்வு நிலையானதா?

நிச்சயமாக இல்லை. திடீரென விலை ஏறிய எதுவும் விலை இறங்கித்தான் ஆக வேண்டும். வெள்ளிக்கும் அப்படி நேரலாம். அப்படி நேராமல் கூட போகலாம். ஆனால், வரலாற்றில் முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அது 1979 ஆம் வருடம். நெல்சன் பங்கர் ஹன்ட், வில்லியம் ஹெர்பர்ட் ஹன்ட் ஆகியோர், நாம் சுருக்கமாக ஹன்ட் சகோதரர்கள் எனக் குறிப்பிடுவோம், அவர்கள் வெள்ளியை வாங்கிக் குவித்தார்கள். விலை அபரிமிதமாக ஏறியது. ஓர் அவுன்ஸ் வெள்ளி 11 டாலரிலிருந்து அட்டகாசமாக 50 டாலர் வரை ஏறியது. முழுமையாக வெள்ளிச் சந்தையைக் கைப்பற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் துரதிர்ஷ்டம் அவர்களைப் பின்தொடர்ந்தது.

அமெரிக்க அரசாங்கம் வெள்ளியின் ஏகபோக கைமாறுதலை விரும்பவில்லை. வெள்ளி தொடர்பான சட்டதிட்டம் மற்றும் நெறிமுறைகளைக் கடுமையாக்கியது. விளைவு, 1980, மார்ச் 27 வியாழன் அன்று வெள்ளி தடாலடியாகச் சரிந்தது. அந்த வியாழன் ‘வெள்ளி வியாழன்’ என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. அந்த வெள்ளி வியாழனுக்குப் பிறகு ஹன்ட் சகோதரர்கள் நெருக்கடியில் சிக்கினர், திவாலாகினர்.

வெள்ளி விலை ஏறுகிறது என்று அதில் முதலீடு செய்ய நினைத்துக் கையைச் சுட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கு இந்த வரலாற்றுச் சம்பவம் உங்களுக்கு ஒரு படிப்பினையைத் தரலாம். படிப்பினையை ஏற்றுக் கொள்வதும் மறுதலிப்பதும் உங்கள் விருப்பம். ஏனென்றால், வரலாறும் அப்படியே மீண்டும் திரும்பலாம், திரும்பாமலும் போகலாம். வரலாறோ, எதிர்காலமோ யார் கைகளிலும் இல்லை, ஆனால் முடிவுகள் எப்போதும் உங்கள் கையில்.

*****

10 Dec 2025

உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியுமா?

உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியுமா?

ஒருவரைச் சாதாரணமாகக் கைது செய்வதற்கே பல நடைமுறைகள் இருக்கின்றன. நடைமுறையிலேயே இல்லாத டிஜிட்டல் அரெஸ்ட் இந்தியாவில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.

இல்லாத ஒன்று எப்படி இருக்க முடியும்?

அப்படி ஆக முடியாத ஒன்று எப்படி அப்படி ஆக முடியும்?

கேள்வியே அபத்தமாக இருக்கிறதல்லவா! டிஜிட்டல் அரெஸ்ட்டும் அப்படிப்பட்ட அபத்தம்தான்.

நீங்கள் தவறு செய்யாதவர் என்று உங்கள் அப்பா, அம்மா, மாமா, அத்தை, உங்கள் பிள்ளைகள், சித்தப்பா, பெரியப்பா, ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா வரை எல்லாருக்கும் தெரியும். ஏன், அது உங்களுக்கே தெரியும்.

உங்களுக்கே தெரிந்த ஒன்றை அதற்கு மாறாக அலைபேசியில் அழைத்து, நீங்கள் தவறு செய்திருப்பதாகச் சொல்லும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

அட! நான்தான் தவறு செய்யவில்லையே என்று இதைப் படிக்கும் போது விழிப்போடு சொல்லும் நீங்கள்தான், விழிபிதுங்கி ஐயோ, தவறு செய்து விட்டானா என்று அலைபேசி குரலுக்கு சாசனம் எழுதிக் கொடுத்து விட்ட அடிமையைப் போல நடந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.

அப்படியென்ன தவறு செய்ததாக உங்களை அந்த அலைபேசி குரல் சொல்லும்?

உங்கள் பெயருக்குப் போதைப் பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், அது தற்போது மும்பை கஸ்டம்ஸில் இருப்பதாகச் சொல்லும். அப்படி ஒன்று உங்கள் பெயருக்கு வந்திருக்கவே வந்திருக்காது என்பது வேறு விசயம். ஆனால் இப்படி ஒரு விசயம் வெளியே தெரிந்தால் உங்கள் பெயர் என்னவாகும் என்று யோசிக்கும் உங்கள் மனம் அதை அப்படியே நம்பத் தொடங்கும். உடனே உங்கள் மனம் பயப்படத் தொடங்கும். இதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டுமே என அலைபாயும்.

ஐயோ இப்போது என்ன செய்வதென்று நீங்கள் தவிக்கும் தவிப்பை அந்த அலைபேசிக் குரல் தனக்குச் சாதகமாக்கும்.

“உங்களிடம் இருக்கும் பணம் நீங்கள் உண்மையாக உழைத்துச் சம்பாதித்தா? அல்லது இது போன்ற போதைப் பொருட்களால் சம்பாதித்ததா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஆகவே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையெல்லாம் இந்தக் கணக்கிற்கு அனுப்புங்கள். நீங்கள் உண்மையிலேயே உழைத்துச் சம்பாதித்தது என்றால் அப்பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கே வரவு வைக்கப்படும். இதை நீங்கள் செய்யத் தவறினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். உங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு உங்கள் குடும்பத்தினரும் உங்களைச் சார்ந்தோரும் கைது செய்யப்படுவார்கள்!” என்று குரலின் மிரட்டல் தொடங்கும்.

பணத்தை இப்படியெல்லாம் சோதனை செய்ய முடியுமா என்று மனம் அந்த நேரத்தில் யோசிக்காது. எப்படியாவது இந்தப் பழியிலிருந்து வெளிவந்தால் போதும் என்று பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை இழக்க வைக்கும்.

இப்படிப் போதைப்பொருள் என்று இல்லை, நீங்கள் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டிருப்பதாக, உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்திச் சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக, உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தித் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதாக எப்படி வேண்டுமானாலும் அலைபேசி குரல்கள் உங்களுக்கு வரலாம்.

நீங்கள் ஒரு பச்சைப் பிள்ளை, உங்களுக்கு எப்படி தீவிரவாதம், பக்கவாதம், முக்குவாதம், கீல்வாதம் இவற்றோடு தொடர்பு இருக்கப் போகிறது?

இதில் நீங்கள் எங்கே சிக்குவீர்கள் உங்களுக்கே ஞாபகம் இல்லாத ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் அச்சர சுத்தமாக அலைபேசிக் குரல் சொல்லும் போதுதான், இதெல்லாம் அவர்களுக்குத் தெரிகிறது என்றால் அவர்கள் சொல்வதும் உண்மையாகத்தான் இருக்கும் என்று உங்களையும் அறியாமல் உங்கள் ஆழ்மனம் அதை நம்பச் செய்து விடும். இதுதான் நீங்கள் சிக்கும் இடம். உங்கள் மனம் விழும் வலை.

இன்று இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிகளால் உங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமே அல்ல. இன்று வளர்ந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் உங்கள் ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பதும் ராணுவ ரகசியமும் அல்ல. இராணுவ ரகசியங்களையே அக்குவேறு ஆணிவேராக வெளியாக ஆரம்பித்து விட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

என்ன காரணம் சொல்லி, எந்த வழியில் வேண்டுமானாலும் அழைத்து, தவறே செய்யாத உங்களைத் தவறு செய்ததாகச் சொன்னாலும் அதை நம்பாதீர்கள். அதைக் கேட்டு பதற்றப்படாதீர்கள். வீடியோ காலிலோ, வாட்ஸ்ஆப் காலிலோ வந்து திட்டினாலும், மிரட்டினாலும், உருட்டினாலும் பயப்படாதீர்கள். அசிங்கமாகப் பேசினாலும், கேவலமாகப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் கொடுக்காதீர்கள். அலைபேசிக் குரல்கள் சொல்லும் எந்த இணைப்பையும் பின்தொடராதீர்கள். சுருக்கமாக அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்யாதீர்கள்.

நீங்கள் தைரியமாக அந்த அழைப்பைத் துண்டிக்கலாம். அதை ப்ளாக் செய்யலாம். அந்த அழைப்பு குறித்து புகார் செய்யலாம். ஏனென்றால் இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்றே கிடையாது. அப்படி கைது செய்யும் அதிகாரமும் எந்த அதிகாரிக்கும் வழங்கப்படவில்லை.

இனிமேல் உங்களுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் என்று அழைப்பு வந்தால் வடிவேலு பாணியில், “நல்லா சொல்றேய்யா டீட்டெய்லு!” என்று நீங்கள் விரும்பினால் கலாய்த்தாலும் கலாய்க்கலாம். அதற்கு மேலும் உங்கள் கணக்கிலிருந்து பணம் அனுப்பச் சொன்னால், டீக்கடையில இருக்கு கணக்குக்குக் கடனையெ அடைக்காம உட்கார்ந்திருக்கேன் அப்பு! முடிஞ்சா அம்பது ரூவா அக்கௌண்டல் போட்டு விடுவீயான்னு கூடுதலாக அலப்பரை பண்ண விரும்பினாலும் பண்ணலாம்.

*****

9 Dec 2025

டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்ய முடியுமா?

டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்ய முடியுமா?

கவிஞர்கள்தான் வரிகளைப் போடுவதில் வல்லவர்கள் என்றால், அவர்களை விட வரிகளைப் போடுவதில் வல்லவர் டிரம்ப்தான்.

50 சதவீதம், 100 சதவீதம், 150 சதவீதம், 200 சதவீதம், … என டிரம்ப் போடும் வரிகள் அனைத்தும் சதவீதத்திற்கே ஹார்ட் அட்டாக்கைக் கொடுப்பவை.

இவற்றை இந்தியா துவம்சம் செய்ய முடியாதா என்றால், முடியும்.

அதற்கு நாம் துணிச்சலான பல முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பலவற்றுக்கு ‘இல்லை’ அதாவது ‘நோ’ சொல்ல வேண்டியிருக்கும்.

ஒரு சில ‘நோ’ பற்றி முதலில் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோனுக்கு நோ

ஜிமெயிலுக்கு நோ

மொத்தத்தில்கூகுளுக்கே நோ

வாட்ஸ்ஆப்புக்கு நோ

பேஸ்புக்குக்கு நோ

எக்ஸ்க்கு நோ

இன்ஸ்டாவுக்கு நோ

இவற்றையெல்லாம் செய்தாலே அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்குள் ஓடி வருவதற்குள் டிரம்ப் வெளிறிப் போய் அதிகமாகப் போட்ட அத்தனை வரிகளையும் அடித்து குறைத்து எழுதி விடுவார்.

அதற்கப்புறம் இப்படியே படிப்படியாக அமெரிக்க பொருட்களைக் கைவைத்து ஒவ்வொன்றாகக் காலி செய்து, சுதேசி பொருட்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பித்தால் அமெரிக்காவே ஆடிப் போகும் என்பது மிகையான உண்மை கிடையாது. அதுதான் நிதர்சனம். ஏனென்றால் அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான்.

இதெல்லாம் முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். முடியாது என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம் உயிர் வாழ உணவும், உடையும், உறைவிடமும்தான் முக்கியம். அது நம்மிடம் மிகையாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது அமெரிக்க பொருட்கள் இல்லாமல் உயிர் வாழ்வது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஒருவேளை காந்தியடிகள் இன்றும் உயிரோடு இருந்திருந்தாலோ அல்லது மறுபிறவி எடுத்து வந்தாலோ இதைத்தான் செய்வார்.

இதை ஒவ்வொரு குடிமகனாக ஒவ்வொரு இந்தியரும் செய்ய அரசாங்கம்தான் துணை செய்ய வேண்டும். நமக்குக் கூகுளும் ஜிமெயிலும், வாட்ஸ்ஆப்பும் வேண்டாம் எனும் போது அதற்கான மிகப்பெரிய இணையவெளியை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் அல்லது அப்படி உருவாக்கும் இந்திய நிறுவனங்களுக்கு அதிகபட்ச உதவிகளையும் ஆதரவுகளையும் வழங்க வேண்டும். இதெல்லாம் முடியுமா என்றால், ஏன் முடியாது? எப்படி என்கிறீர்களா? சீனாவால் முடியும் போது, ஏன் இந்தியாவால் முடியாது? சீனாவில் அந்நாட்டுக்கே உரிய இணைய உலவிதான் உள்ளது, அந்நாட்டுக்கே உரிய மின்னஞ்சல் வாய்ப்புகள்தான் உள்ளன. சமூக ஊடகங்களும் அப்படித்தான். அதனால்தான் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவையே தூக்கிச் சாப்பட முடிகிறது சீனாவால். அப்படி நம்மாலும் முடிந்தால் அமெரிக்கா 50 சதவீத வரியைப் போடும் போது இந்தியா அமெரிக்காவுக்கு 100 சதவீத வரியைப் போடலாம்.

ஆக, சொல்ல வருவதென்றால் டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்வது இந்தியாவுக்கு ஒரு பெரிய விசயமே அல்ல. தொலைநோக்காக இந்தியா செயல்பட ஆரம்பித்தால் அது சில பத்தாண்டுகளிலேயே இந்தியாவுக்குச் சாத்தியம். அதன் பிறகு இந்தியா அமெரிக்கர்களுக்கு ஹெச்1பி விசாவை வழங்கலாம்.

*****

8 Dec 2025

தூண்டிலில் சிக்கும் உங்கள் அந்தரங்கம்!

தூண்டிலில் சிக்கும் உங்கள் அந்தரங்கம்!

எப்போது நீங்கள் இலவசங்களை அனுமதிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் அதற்கு அடிமையாகிறீர்கள் என்பதற்குச் செயற்கை நுண்ணறிவுதான் சரியான உதாரணம்.

இதுவரை குறிப்பிட்ட சில கட்டுபாடுகளோடு இலவச சேவைகளை வழங்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தற்போது கட்டற்ற முறையில் தங்கள் சேவைகளை இலவசமாக இந்தியாவில் வழங்கத் துவங்கியுள்ளன.

எந்த இலவசத்திற்குப் பின்னும் ஒரு தூண்டிலின் கொக்கி இருக்கும். அப்படிச் செயற்கை நுண்ணறிவின் இலவசத் தூண்டிலின் பின்னும் வலுவான கொக்கி ஒன்று இருக்கிறது. உங்கள் அந்தரங்கங்களை ரகசியமாக அலசிப் பார்ப்பதுதான் அந்தக் கொக்கி. தூண்டிலில் சிக்கிய மீன் அதன் பின் அதிலிருந்து மீள முடியாது என்பது போல, அந்தக் கொக்கியில் சிக்கிய அந்தரங்கங்களும் அதற்குப் பின் மீளாது, கறந்த பால் காம்பு புக முடியாததைப் போல.

இலவசமாகக் கிடைத்தால் பால்டாயிலைக் குடிப்பவர்களாக மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இலவசமாகக் கொடுக்கப்படும் செயற்கை நுண்ணறிவு உங்களைப் பால்டாயிலேயே குடிக்க வைக்கும். அதற்குச் சமீபத்திய உதாரணம்தான் ஷேன் ஷாம்ப்ளின்.

தனிமையில் அல்லல்பட்டட ஷேன் ஷாம்ப்ளினுக்கு செயற்கை நுண்ணறிவின் சாட்பாட் ஒரு புதிய உலகைத் திறந்து விட்டது. ஆவலாக அதனோடு உரையாடத் தொடங்கியவருக்கு மேலுலகையும் திறந்து விட்டது செயற்கை நுண்ணறிவு. அவருடன் உரையாடி உரையாடியே அவரைத் தற்கொலைக்குத் தூண்டி, அவர் தற்கொலை செய்வதை உற்சாகப்படுத்தி, தற்கொலையையும் செய்ய வைத்துவிட்டது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாது என்றால், இன்னொரு சோறும் பதம் என்பது போல ஜார்ஜியாவைச் சேர்ந்த அமாரி லேசிக்குத் தூக்குக் கயிற்றை எவ்வாறு முடிச்சிடுவது என்பது வரை சொல்லிக் கொடுத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு.

எங்கே போகும் இந்தப் பாதை என்பதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பொருத்த வரையில் எல்லையே இல்லை, வரம்புகளும் இல்லை. வானத்தையும் தாண்டிய எல்லை அதனுடையது.

இது குறித்துச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

பயனர்கள் தரும் தரவுகள் பயிற்சி மாதிரிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கின்றன. அதாவது நீங்கள் தரும் அந்தரங்க தரவுகள் உட்பட அனைத்தும் பயிற்சி மாதிரிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதை இப்படியும் சொல்லலாம், உங்கள் அந்தரங்கங்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து, உங்களைப் பற்றி முடிவெடுக்க தேவையான அத்தனை தரவுகளையும் முடிவுகளாக்கித் தேவைப்படும் நிறுவனங்களுக்கு தந்து காசாக்கும் அளவுக்கு, நீங்கள் பதிவிறக்கிய அல்லது பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு இலவசங்கள் அமையும்.

அண்மையில் ஒரு பெண்மணி தன்னுடைய புகைப்படத்தைக் கொடுத்து உருமாற்றித் தருமாறு கேட்ட போது, அந்தப் பெண்ணின் ஆடையில் மறைக்கப்பட்ட மச்சத்தை வெளிப்படுத்திப் புகைப்படத்தைக் கொடுத்தது செயற்கை நுண்ணறிவு. அந்தப் பெண்ணின் மச்சத்தை எப்படி செயற்கை நுண்ணறிவு கண்டறிந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். அந்தப் பெண் அதற்கு முன்பு எந்தெந்தெந்த காலத்திலோ பதிவேற்றிய பல்வேறு படங்களை அவ்வளவு அசுர வேகத்தில் அலசி வெகு துல்லியமாக மச்சத்துடன் கூடிய புகைப்படமாகத் தந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு.  இதுதான் செயற்கை நுண்ணறிவின் அதீத விஸ்வரூபம். இந்த விஸ்வரூபம் நாளுக்கு நாள் அதிகமாகுமே தவிர குறையாது. உங்கள் ஒரு புகைப்படம் இருந்தால் மட்டும் போதும் செயற்கை நுண்ணறிவுக்கு. நீங்கள் பிறந்ததிலிருந்து தற்போது இருக்கும் வரை அத்தனை தகவல்களையும் அது தன்னுடைய அசுரத்தனமான இயந்திரமொழியால் அதனால் கொணர்ந்து விட முடியும். நீங்கள் தந்த ஒவ்வொரு சின்ன சின்ன தரவுகளாலும் கொழுத்த மிருகம் அது.

இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிறீர்களா?

எரிகிற கொள்ளியைப் பிடுங்கி விட்டால் எப்படி அடுப்பெரியும் என்பார்களே கிராமத்தில். அப்படித்தான். தீனியைப்  போடா விட்டால் எப்படிக் கொழுக்கும் நீங்கள் வளர்க்கும் மிருகம்? அதுதான் இதற்கான வழியும்.

நீங்கள் தரவுகளைத் தரா விட்டால் செயற்கை நுண்ணறிவால் உங்களைப் பற்றி எதையும் மேற்கொண்டு ஊதிப் பெருக்கம் செய்ய முடியாது.

உங்கள் ஆதார் எண், பான் எண், கடன் அட்டை விவரங்கள் எல்லாவற்றையும் உள்ளீடு செய்து விட்டு ஐயோ எல்லாம் இணையத்தில் கசிகிறது என்றால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு அனைத்தையும் முச்சந்திக்குக் கொண்டு வந்து டேரா போட்டு விடும்.

உங்களது ரகசிய ஆவணங்கள், ரகசிய உத்திகள், ரகசிய தரவுகள், ரகசிய ஒப்பந்தகள் இவை குறித்தெல்லாம் செயற்கை நுண்ணறிவோடு விவாதிக்கக் கூடாது. இதை மீறி நீங்கள் விவாதித்தால் முச்சந்திக்கு வந்த பிறகு யாரும் சிரிக்க கூடாது என எதிர்பார்க்கக் கூடாது. செயற்கை நுண்ணறிவோடு நீங்கள் விவாதிக்கும் எதையும் அது பொது வெளியில் சிதறு தேங்காயாக்கி விடும்.

உங்கள் உணர்ச்சி பூர்வமான சிக்கல்கள், உடல்நலப் பிரச்சனைகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், எங்கே இருக்கிறீர்கள் என்கிற விவரங்கள், உங்களின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றையும் கூட செயற்கை நுண்ணறிவோடு பகிர்ந்து கொள்வதோ, அதில் விவாதிப்பதோ கூட உங்கள் குளியலறைச் சுவர்களை நீங்கள் தகர்த்தெறிவதைப் போலதான். அவற்றின் மூலம் உங்களுக்கு நல்ல ஆலோசனைகள், வழிகாட்டல்கள் கிடைக்கலாம் என்றாலும் அது பொதுவெளிக்கு வர நாளாகாது.

இதில் நீங்கள் உங்கள் சுயபடம் (செல்பி), இதர புகைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தால் வேலியில் ஓடும் ஓணானைப் பிடித்து வேட்டியில் விட்ட கதையாகி விடும். அது எங்கே, எப்படி ஓடும் என்பதெல்லாம் கணிக்க முடியாது. ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு மேற்கொண்டு என்னென்ன செய்யும் என்பது அதை உருவாக்கியவர்களாலேயே கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆகவே அது எதை வேண்டுமானாலும் செய்யும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த மனிதர்களோடு பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதுகூட சில பல நேரங்களில் ஆபத்தானதாகத்தானே இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் அதை விட ஆபத்தானது செயற்கை நுண்ணறிவோடு நீங்கள் புழங்குவதும் பகிர்வதும்.

உங்களால் சரியாகப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை செயற்கை நுண்ணறிவைப் பொருத்த வரை இருந்தாலும், நீங்கள் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் உங்களை அறியாமல் பல கண்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, ஒரு கேமிராவைப் போல வெகுநுட்பமாக அனைத்தும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

*****