டிரம்பின் வரிகளைத் துவம்சம் செய்ய முடியுமா?
கவிஞர்கள்தான் வரிகளைப் போடுவதில்
வல்லவர்கள் என்றால், அவர்களை விட வரிகளைப் போடுவதில் வல்லவர் டிரம்ப்தான்.
50 சதவீதம், 100 சதவீதம்,
150 சதவீதம், 200 சதவீதம், … என டிரம்ப் போடும் வரிகள் அனைத்தும் சதவீதத்திற்கே ஹார்ட்
அட்டாக்கைக் கொடுப்பவை.
இவற்றை இந்தியா துவம்சம்
செய்ய முடியாதா என்றால், முடியும்.
அதற்கு நாம் துணிச்சலான பல
முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். பலவற்றுக்கு ‘இல்லை’ அதாவது ‘நோ’ சொல்ல வேண்டியிருக்கும்.
ஒரு சில ‘நோ’ பற்றி முதலில்
பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோனுக்கு நோ
ஜிமெயிலுக்கு நோ
மொத்தத்தில்கூகுளுக்கே நோ
வாட்ஸ்ஆப்புக்கு நோ
பேஸ்புக்குக்கு நோ
எக்ஸ்க்கு நோ
இன்ஸ்டாவுக்கு நோ
இவற்றையெல்லாம் செய்தாலே
அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வெள்ளை மாளிகைக்குள் ஓடி வருவதற்குள் டிரம்ப் வெளிறிப்
போய் அதிகமாகப் போட்ட அத்தனை வரிகளையும் அடித்து குறைத்து எழுதி விடுவார்.
அதற்கப்புறம் இப்படியே படிப்படியாக
அமெரிக்க பொருட்களைக் கைவைத்து ஒவ்வொன்றாகக் காலி செய்து, சுதேசி பொருட்களைத் தேர்ந்தெடுக்க
ஆரம்பித்தால் அமெரிக்காவே ஆடிப் போகும் என்பது மிகையான உண்மை கிடையாது. அதுதான் நிதர்சனம்.
ஏனென்றால் அமெரிக்காவின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான்.
இதெல்லாம் முடியுமா என்று
நீங்கள் கேட்கலாம். முடியாது என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம் உயிர் வாழ உணவும், உடையும்,
உறைவிடமும்தான் முக்கியம். அது நம்மிடம் மிகையாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது
அமெரிக்க பொருட்கள் இல்லாமல் உயிர் வாழ்வது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஒருவேளை
காந்தியடிகள் இன்றும் உயிரோடு இருந்திருந்தாலோ அல்லது மறுபிறவி எடுத்து வந்தாலோ இதைத்தான்
செய்வார்.
இதை ஒவ்வொரு குடிமகனாக ஒவ்வொரு
இந்தியரும் செய்ய அரசாங்கம்தான் துணை செய்ய வேண்டும். நமக்குக் கூகுளும் ஜிமெயிலும்,
வாட்ஸ்ஆப்பும் வேண்டாம் எனும் போது அதற்கான மிகப்பெரிய இணையவெளியை அரசாங்கம் உருவாக்கிக்
கொடுக்க வேண்டும் அல்லது அப்படி உருவாக்கும் இந்திய நிறுவனங்களுக்கு அதிகபட்ச உதவிகளையும்
ஆதரவுகளையும் வழங்க வேண்டும். இதெல்லாம் முடியுமா என்றால், ஏன் முடியாது? எப்படி என்கிறீர்களா?
சீனாவால் முடியும் போது, ஏன் இந்தியாவால் முடியாது? சீனாவில் அந்நாட்டுக்கே உரிய இணைய
உலவிதான் உள்ளது, அந்நாட்டுக்கே உரிய மின்னஞ்சல் வாய்ப்புகள்தான் உள்ளன. சமூக ஊடகங்களும்
அப்படித்தான். அதனால்தான் செயற்கை நுண்ணறிவில் அமெரிக்காவையே தூக்கிச் சாப்பட முடிகிறது
சீனாவால். அப்படி நம்மாலும் முடிந்தால் அமெரிக்கா 50 சதவீத வரியைப் போடும் போது இந்தியா
அமெரிக்காவுக்கு 100 சதவீத வரியைப் போடலாம்.
ஆக, சொல்ல வருவதென்றால் டிரம்பின்
வரிகளைத் துவம்சம் செய்வது இந்தியாவுக்கு ஒரு பெரிய விசயமே அல்ல. தொலைநோக்காக இந்தியா
செயல்பட ஆரம்பித்தால் அது சில பத்தாண்டுகளிலேயே இந்தியாவுக்குச் சாத்தியம். அதன் பிறகு
இந்தியா அமெரிக்கர்களுக்கு ஹெச்1பி விசாவை வழங்கலாம்.
*****

No comments:
Post a Comment