14 Dec 2025

தேநீர் வடிவில் திரும்பும் வங்கிக் கணக்கின் வரலாறு!

தேநீர் வடிவில் திரும்பும் வங்கிக் கணக்கின் வரலாறு!

வரலாறு ஒரே மாதிரியானை கதைகளையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறது.

தேநீர் மக்களிடையே பிரபலமானதற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு சொல்லப்படுகிறது. வசதி படைத்தவர்கள் பருகி வந்த தேநீரை மக்களிடையே பிரபலபடுத்துவதற்காக அதை முதலில் இலவசமாக வழங்கியிருக்கிறார்கள். தேநீர் புத்துணர்ச்சி தரும், சுறுசுறுப்பு ஊட்டும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார்கள்.

மக்களும் குடிக்கப் பழக ஆரம்பித்து விட்ட பிறகு, அதற்கு விலை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். பழக்கத்திலிருந்து விடுபட முடியாத மக்கள் தேநீரை விலை கொடுக்க வாங்க பருக ஆரம்பித்து விட்டார்கள். வீதிக்கு வீதி தேநீர் கடைகளும் முளை விடத் தொடங்கி விட்டன.

இன்று வீதிகள் இல்லாத ஊர்கள் கூட இருக்கலாம். தேநீர் கடைகள் இல்லாத வீதிகளைப் பார்க்க முடியாது. மக்கள் சந்திரனிலோ, செவ்வாயிலோ குடியேற நேர்ந்தால் அங்கு உருவாகும் முதல் கடையாகத் தேநீர்க் கடையே இருக்கும்.

இந்தத் தேநீர்க் கடைக்கும் வங்கிக் கணக்குக்கும் இடையே ஒரு சுவாரசியமான தொடர்பு இருக்கிறது. பண வசதி உள்ளவர்கள் மட்டுமே வங்கிக் கணக்குகளைப் புழங்கிக் கொண்டிருந்த நாட்டில், அனைவருக்கும் இலவசமாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகள் தொடங்கினால்தான் அரசின் உதவித்தொகைளைப் பெற முடியும் என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

மக்களும் தங்களுக்கும் ஒரு வங்கி கணக்கு இருக்கட்டுமே, அதில் அரசின் உதவித்தொகைகள் வந்து கொட்டட்டுமே என்று வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தார்கள்.

பிறகுதான் ஆட்டம் ஆரம்பம் ஆனது. இலவசமாக வழங்கப்பட்ட தேநீருக்கு விலை வைக்கப்பட்டதைப் போல, வங்கிக் கணக்குக்குக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு, அப்படி இல்லாவிட்டால் அபராதமும் வசூலிக்கப்பட்டன. வசூலிக்கப்பட்ட அபாரதம் கொஞ்சம் நஞ்சமல்ல. பொதுத்துறை வங்கிகள் மட்டுமே ஐந்தாண்டுகளில் 8500 கோடியை அபராதமாக வசூலித்துள்ளன.

அரசின் உதவித்தொகைகளோ வங்கிகள் குறிப்பிடும் குறைந்தபட்ச இருப்புத்தொகைக்குக் குறைவாகவே வங்கிக் கணக்குகளில் வந்து விழுகின்றன. அந்தத் தொகை அப்படியே அபராதமாக வசூலிக்கப்பட்டு விடுகின்றன. இந்த உதவித்தொகை ஏழை மக்களுக்கான உதவித்தொகையா? அபராதம் என்ற பெயரில் வங்கிகள் வசூலித்துக் கொள்வதற்கான லாபத் தொகையா?

தேநீரைக் குடித்துப் பழகியவர்கள் அதன் பழக்கத்திலிருந்து விடபட முடியாமல், ஒருவேளை விடுபட நினைத்தால் தலைவலிக்கு ஆளாவதைப் போல, வங்கிக் கணக்கை ஆரம்பித்தவர்கள் அதை முடித்துக் கொள்ள முடியாமலும், அபராதம் என்ற சாபத்திலிருந்தும் விடுபட முடியாமலும் தவிக்கிறார்கள்.

இதில் சில தனியார் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ஐம்பதாயிரமாக உயரத்தி, பின்பு அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து பதினைந்தாயிரமாகக் குறைக்கின்றன. இதற்கெல்லாம் கடிவாளம் போட வேண்டிய நாட்டின் மத்திய வங்கியோ அதெல்லாம் வங்கியின் சுதந்திரம் என்கின்றது. ஓ! இதுதான் நாம் 1947 ஆகஸ்ட் 15 இல் பெற்ற சுதந்திரத்திற்கான அர்த்தமோ என்னவோ! அந்தச் சுதந்திரம் என்பது பெரிய நிறுவனங்களுக்கே அன்றி எளிய மக்களுக்கு இல்லை போலும்!

*****

No comments:

Post a Comment