உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியுமா?
ஒருவரைச்
சாதாரணமாகக் கைது செய்வதற்கே பல நடைமுறைகள் இருக்கின்றன. நடைமுறையிலேயே இல்லாத டிஜிட்டல்
அரெஸ்ட் இந்தியாவில் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது.
இல்லாத
ஒன்று எப்படி இருக்க முடியும்?
அப்படி
ஆக முடியாத ஒன்று எப்படி அப்படி ஆக முடியும்?
கேள்வியே
அபத்தமாக இருக்கிறதல்லவா! டிஜிட்டல் அரெஸ்ட்டும் அப்படிப்பட்ட அபத்தம்தான்.
நீங்கள்
தவறு செய்யாதவர் என்று உங்கள் அப்பா, அம்மா, மாமா, அத்தை, உங்கள் பிள்ளைகள், சித்தப்பா,
பெரியப்பா, ஒன்று விட்ட பெரியப்பா, சித்தப்பா வரை எல்லாருக்கும் தெரியும். ஏன், அது
உங்களுக்கே தெரியும்.
உங்களுக்கே
தெரிந்த ஒன்றை அதற்கு மாறாக அலைபேசியில் அழைத்து, நீங்கள் தவறு செய்திருப்பதாகச் சொல்லும்
போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
அட!
நான்தான் தவறு செய்யவில்லையே என்று இதைப் படிக்கும் போது விழிப்போடு சொல்லும் நீங்கள்தான்,
விழிபிதுங்கி ஐயோ, தவறு செய்து விட்டானா என்று அலைபேசி குரலுக்கு சாசனம் எழுதிக் கொடுத்து
விட்ட அடிமையைப் போல நடந்து கொள்ள ஆரம்பிப்பீர்கள்.
அப்படியென்ன
தவறு செய்ததாக உங்களை அந்த அலைபேசி குரல் சொல்லும்?
உங்கள்
பெயருக்குப் போதைப் பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், அது தற்போது மும்பை கஸ்டம்ஸில்
இருப்பதாகச் சொல்லும். அப்படி ஒன்று உங்கள் பெயருக்கு வந்திருக்கவே வந்திருக்காது என்பது
வேறு விசயம். ஆனால் இப்படி ஒரு விசயம் வெளியே தெரிந்தால் உங்கள் பெயர் என்னவாகும் என்று
யோசிக்கும் உங்கள் மனம் அதை அப்படியே நம்பத் தொடங்கும். உடனே உங்கள் மனம் பயப்படத்
தொடங்கும். இதிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டுமே என அலைபாயும்.
ஐயோ
இப்போது என்ன செய்வதென்று நீங்கள் தவிக்கும் தவிப்பை அந்த அலைபேசிக் குரல் தனக்குச்
சாதகமாக்கும்.
“உங்களிடம்
இருக்கும் பணம் நீங்கள் உண்மையாக உழைத்துச் சம்பாதித்தா? அல்லது இது போன்ற போதைப் பொருட்களால்
சம்பாதித்ததா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஆகவே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையெல்லாம்
இந்தக் கணக்கிற்கு அனுப்புங்கள். நீங்கள் உண்மையிலேயே உழைத்துச் சம்பாதித்தது என்றால்
அப்பணம் மீண்டும் உங்கள் கணக்கிற்கே வரவு வைக்கப்படும். இதை நீங்கள் செய்யத் தவறினால்
நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். உங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு உங்கள் குடும்பத்தினரும்
உங்களைச் சார்ந்தோரும் கைது செய்யப்படுவார்கள்!” என்று குரலின் மிரட்டல் தொடங்கும்.
பணத்தை
இப்படியெல்லாம் சோதனை செய்ய முடியுமா என்று மனம் அந்த நேரத்தில் யோசிக்காது. எப்படியாவது
இந்தப் பழியிலிருந்து வெளிவந்தால் போதும் என்று பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை இழக்க
வைக்கும்.
இப்படிப்
போதைப்பொருள் என்று இல்லை, நீங்கள் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டிருப்பதாக, உங்கள் ஆதார்
எண்ணைப் பயன்படுத்திச் சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக, உங்கள் பான் எண்ணைப்
பயன்படுத்தித் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதாக எப்படி வேண்டுமானாலும்
அலைபேசி குரல்கள் உங்களுக்கு வரலாம்.
நீங்கள்
ஒரு பச்சைப் பிள்ளை, உங்களுக்கு எப்படி தீவிரவாதம், பக்கவாதம், முக்குவாதம், கீல்வாதம்
இவற்றோடு தொடர்பு இருக்கப் போகிறது?
இதில்
நீங்கள் எங்கே சிக்குவீர்கள் உங்களுக்கே ஞாபகம் இல்லாத ஆதார் எண்ணையும், பான் எண்ணையும்
அச்சர சுத்தமாக அலைபேசிக் குரல் சொல்லும் போதுதான், இதெல்லாம் அவர்களுக்குத் தெரிகிறது
என்றால் அவர்கள் சொல்வதும் உண்மையாகத்தான் இருக்கும் என்று உங்களையும் அறியாமல் உங்கள்
ஆழ்மனம் அதை நம்பச் செய்து விடும். இதுதான் நீங்கள் சிக்கும் இடம். உங்கள் மனம் விழும்
வலை.
இன்று
இருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதிகளால் உங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் கண்டுபிடிப்பது
ஒன்றும் கம்ப சூத்திரமே அல்ல. இன்று வளர்ந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு யுகத்தில்
உங்கள் ஜாதகத்தையே புட்டு புட்டு வைப்பதும் ராணுவ ரகசியமும் அல்ல. இராணுவ ரகசியங்களையே
அக்குவேறு ஆணிவேராக வெளியாக ஆரம்பித்து விட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என்ன
காரணம் சொல்லி, எந்த வழியில் வேண்டுமானாலும் அழைத்து, தவறே செய்யாத உங்களைத் தவறு செய்ததாகச்
சொன்னாலும் அதை நம்பாதீர்கள். அதைக் கேட்டு பதற்றப்படாதீர்கள். வீடியோ காலிலோ, வாட்ஸ்ஆப்
காலிலோ வந்து திட்டினாலும், மிரட்டினாலும், உருட்டினாலும் பயப்படாதீர்கள். அசிங்கமாகப்
பேசினாலும், கேவலமாகப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். உங்களைப் பற்றிய எந்தத்
தகவலையும் கொடுக்காதீர்கள். அலைபேசிக் குரல்கள் சொல்லும் எந்த இணைப்பையும் பின்தொடராதீர்கள்.
சுருக்கமாக அவர்கள் செய்யச் சொல்லும் எதையும் செய்யாதீர்கள்.
நீங்கள்
தைரியமாக அந்த அழைப்பைத் துண்டிக்கலாம். அதை ப்ளாக் செய்யலாம். அந்த அழைப்பு குறித்து
புகார் செய்யலாம். ஏனென்றால் இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்றே கிடையாது. அப்படி
கைது செய்யும் அதிகாரமும் எந்த அதிகாரிக்கும் வழங்கப்படவில்லை.
இனிமேல்
உங்களுக்கு டிஜிட்டல் அரெஸ்ட் என்று அழைப்பு வந்தால் வடிவேலு பாணியில், “நல்லா சொல்றேய்யா
டீட்டெய்லு!” என்று நீங்கள் விரும்பினால் கலாய்த்தாலும் கலாய்க்கலாம். அதற்கு மேலும்
உங்கள் கணக்கிலிருந்து பணம் அனுப்பச் சொன்னால், டீக்கடையில இருக்கு கணக்குக்குக் கடனையெ
அடைக்காம உட்கார்ந்திருக்கேன் அப்பு! முடிஞ்சா அம்பது ரூவா அக்கௌண்டல் போட்டு விடுவீயான்னு
கூடுதலாக அலப்பரை பண்ண விரும்பினாலும் பண்ணலாம்.
*****

No comments:
Post a Comment