என்ன ஆயிற்று வெள்ளிக்கு?
கொஞ்ச
நினைத்தால் தங்கக்கட்டி, தங்கக்குட்டி, சின்னத் தங்கம், செல்லத் தங்கம் இப்படித்தான்
கொஞ்சுவார்கள். யாரும் வெள்ளிக்கட்டி, வெள்ளிக்குட்டி, சின்ன வெள்ளி, செல்லவெள்ளி என்று
கொஞ்ச மாட்டார்கள். ஆனால், அப்படிக் கொஞ்ச வைக்கும் அளவுக்கு விலையேறி நிற்கிறது வெள்ளி.
கடந்த
ஓராண்டில் 100 சதவீதத்துக்கு மேல் விலை ஏறியிருக்கிறது வெள்ளி. தங்கமோ 60 சதவீதத்தைத்
தாண்டவில்லை. அதாவது, வெள்ளியில் 100 ரூபாய் முதல் போட்டிருந்தால் அது 200 ரூபாய் ஆகியிருக்கும்.
அதையே தங்கத்தில் போட்டிருந்தால் 165 ரூபாய்தான் ஆகியிருக்கும்.
அப்படி
என்னதான் ஆயிற்று இந்த வெள்ளிக்கு?
வெள்ளியின்
இந்த விலையேற்றம் சட்டென நிகழ்ந்து விடவில்லை. இதற்கென வெள்ளி 14 வருடங்கள் காத்திருந்தது.
இப்போது ஒரே அடியாக ஓராண்டில் எகிறி அடித்து உச்சம் ஆகியிருக்கிறது.
வெள்ளியின்
பயன்பாடு அதிகரித்துக் கொண்டு வருவது வெள்ளியின் விலையேற்றத்துக்குக் காரணம். அதைப்
பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஊகச் சந்தை அதை விட முக்கிய காரணம்.
ஆபரணங்கள்,
பாத்திரங்கள், சிலைகள் என்பதைத் தாண்டி மின்னணு துறையிலும் வெள்ளியின் பயன்பாடு அதிகம்.
தற்போது மின்னணு துறை வளர்ந்து வரும் வேகத்திற்கேற்ப வெள்ளியின் இருப்பு கடும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது. முன்னேறிய நாடுகள் தங்களின் தொழில்துறை வளர்ச்சிக்கு வெள்ளியை அசுரத்
தனமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றன.
இது
உலக அளவில் முக்கிய காரணம் என்றாலும், இந்தியாவில் தங்கத்துக்கு நிகராக வெள்ளிக்கு
தனி மதிப்பு எப்போதும் உண்டு. முன்பு கொலுசுகள், காப்புகள் என்ற அளவில் இருந்த வெள்ளி
இன்று சங்கிலிகள், தோடுகள் என்று பலவித ஆபரண அவதாரங்கள் எடுத்து விட்டது. அது தவிர
பாத்திரங்கள், சிலைகள், பரிசுப் பொருட்கள் என்று வெள்ளிக்கு தனி கௌரவமும் அந்தஸ்தும்
இருக்கிறது. எல்லாம் சேர்ந்து வெள்ளியை விலையேற்றத்தில் கொண்டு பொய் விட்டு விட்டன.
என்றாலும்
இந்த திடீர் விலை உயர்வு நிலையானதா?
நிச்சயமாக
இல்லை. திடீரென விலை ஏறிய எதுவும் விலை இறங்கித்தான் ஆக வேண்டும். வெள்ளிக்கும் அப்படி
நேரலாம். அப்படி நேராமல் கூட போகலாம். ஆனால், வரலாற்றில் முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அது
1979 ஆம் வருடம். நெல்சன் பங்கர் ஹன்ட், வில்லியம் ஹெர்பர்ட் ஹன்ட் ஆகியோர், நாம் சுருக்கமாக
ஹன்ட் சகோதரர்கள் எனக் குறிப்பிடுவோம், அவர்கள் வெள்ளியை வாங்கிக் குவித்தார்கள். விலை
அபரிமிதமாக ஏறியது. ஓர் அவுன்ஸ் வெள்ளி 11 டாலரிலிருந்து அட்டகாசமாக 50 டாலர் வரை ஏறியது.
முழுமையாக வெள்ளிச் சந்தையைக் கைப்பற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் துரதிர்ஷ்டம் அவர்களைப்
பின்தொடர்ந்தது.
அமெரிக்க
அரசாங்கம் வெள்ளியின் ஏகபோக கைமாறுதலை விரும்பவில்லை. வெள்ளி தொடர்பான சட்டதிட்டம்
மற்றும் நெறிமுறைகளைக் கடுமையாக்கியது. விளைவு, 1980, மார்ச் 27 வியாழன் அன்று வெள்ளி
தடாலடியாகச் சரிந்தது. அந்த வியாழன் ‘வெள்ளி வியாழன்’ என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
அந்த வெள்ளி வியாழனுக்குப் பிறகு ஹன்ட் சகோதரர்கள் நெருக்கடியில் சிக்கினர், திவாலாகினர்.
வெள்ளி
விலை ஏறுகிறது என்று அதில் முதலீடு செய்ய நினைத்துக் கையைச் சுட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கு
இந்த வரலாற்றுச் சம்பவம் உங்களுக்கு ஒரு படிப்பினையைத் தரலாம். படிப்பினையை ஏற்றுக்
கொள்வதும் மறுதலிப்பதும் உங்கள் விருப்பம். ஏனென்றால், வரலாறும் அப்படியே மீண்டும்
திரும்பலாம், திரும்பாமலும் போகலாம். வரலாறோ, எதிர்காலமோ யார் கைகளிலும் இல்லை, ஆனால்
முடிவுகள் எப்போதும் உங்கள் கையில்.
*****

No comments:
Post a Comment