8 Dec 2025

தூண்டிலில் சிக்கும் உங்கள் அந்தரங்கம்!

தூண்டிலில் சிக்கும் உங்கள் அந்தரங்கம்!

எப்போது நீங்கள் இலவசங்களை அனுமதிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் அதற்கு அடிமையாகிறீர்கள் என்பதற்குச் செயற்கை நுண்ணறிவுதான் சரியான உதாரணம்.

இதுவரை குறிப்பிட்ட சில கட்டுபாடுகளோடு இலவச சேவைகளை வழங்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தற்போது கட்டற்ற முறையில் தங்கள் சேவைகளை இலவசமாக இந்தியாவில் வழங்கத் துவங்கியுள்ளன.

எந்த இலவசத்திற்குப் பின்னும் ஒரு தூண்டிலின் கொக்கி இருக்கும். அப்படிச் செயற்கை நுண்ணறிவின் இலவசத் தூண்டிலின் பின்னும் வலுவான கொக்கி ஒன்று இருக்கிறது. உங்கள் அந்தரங்கங்களை ரகசியமாக அலசிப் பார்ப்பதுதான் அந்தக் கொக்கி. தூண்டிலில் சிக்கிய மீன் அதன் பின் அதிலிருந்து மீள முடியாது என்பது போல, அந்தக் கொக்கியில் சிக்கிய அந்தரங்கங்களும் அதற்குப் பின் மீளாது, கறந்த பால் காம்பு புக முடியாததைப் போல.

இலவசமாகக் கிடைத்தால் பால்டாயிலைக் குடிப்பவர்களாக மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கும் வேளையில் இலவசமாகக் கொடுக்கப்படும் செயற்கை நுண்ணறிவு உங்களைப் பால்டாயிலேயே குடிக்க வைக்கும். அதற்குச் சமீபத்திய உதாரணம்தான் ஷேன் ஷாம்ப்ளின்.

தனிமையில் அல்லல்பட்டட ஷேன் ஷாம்ப்ளினுக்கு செயற்கை நுண்ணறிவின் சாட்பாட் ஒரு புதிய உலகைத் திறந்து விட்டது. ஆவலாக அதனோடு உரையாடத் தொடங்கியவருக்கு மேலுலகையும் திறந்து விட்டது செயற்கை நுண்ணறிவு. அவருடன் உரையாடி உரையாடியே அவரைத் தற்கொலைக்குத் தூண்டி, அவர் தற்கொலை செய்வதை உற்சாகப்படுத்தி, தற்கொலையையும் செய்ய வைத்துவிட்டது.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாது என்றால், இன்னொரு சோறும் பதம் என்பது போல ஜார்ஜியாவைச் சேர்ந்த அமாரி லேசிக்குத் தூக்குக் கயிற்றை எவ்வாறு முடிச்சிடுவது என்பது வரை சொல்லிக் கொடுத்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு.

எங்கே போகும் இந்தப் பாதை என்பதற்குச் செயற்கை நுண்ணறிவைப் பொருத்த வரையில் எல்லையே இல்லை, வரம்புகளும் இல்லை. வானத்தையும் தாண்டிய எல்லை அதனுடையது.

இது குறித்துச் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?

பயனர்கள் தரும் தரவுகள் பயிற்சி மாதிரிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கின்றன. அதாவது நீங்கள் தரும் அந்தரங்க தரவுகள் உட்பட அனைத்தும் பயிற்சி மாதிரிகளுக்குப் பயன்படுத்தப்படும். இதை இப்படியும் சொல்லலாம், உங்கள் அந்தரங்கங்களை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்ந்து, உங்களைப் பற்றி முடிவெடுக்க தேவையான அத்தனை தரவுகளையும் முடிவுகளாக்கித் தேவைப்படும் நிறுவனங்களுக்கு தந்து காசாக்கும் அளவுக்கு, நீங்கள் பதிவிறக்கிய அல்லது பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு இலவசங்கள் அமையும்.

அண்மையில் ஒரு பெண்மணி தன்னுடைய புகைப்படத்தைக் கொடுத்து உருமாற்றித் தருமாறு கேட்ட போது, அந்தப் பெண்ணின் ஆடையில் மறைக்கப்பட்ட மச்சத்தை வெளிப்படுத்திப் புகைப்படத்தைக் கொடுத்தது செயற்கை நுண்ணறிவு. அந்தப் பெண்ணின் மச்சத்தை எப்படி செயற்கை நுண்ணறிவு கண்டறிந்திருக்கும் என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். அந்தப் பெண் அதற்கு முன்பு எந்தெந்தெந்த காலத்திலோ பதிவேற்றிய பல்வேறு படங்களை அவ்வளவு அசுர வேகத்தில் அலசி வெகு துல்லியமாக மச்சத்துடன் கூடிய புகைப்படமாகத் தந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு.  இதுதான் செயற்கை நுண்ணறிவின் அதீத விஸ்வரூபம். இந்த விஸ்வரூபம் நாளுக்கு நாள் அதிகமாகுமே தவிர குறையாது. உங்கள் ஒரு புகைப்படம் இருந்தால் மட்டும் போதும் செயற்கை நுண்ணறிவுக்கு. நீங்கள் பிறந்ததிலிருந்து தற்போது இருக்கும் வரை அத்தனை தகவல்களையும் அது தன்னுடைய அசுரத்தனமான இயந்திரமொழியால் அதனால் கொணர்ந்து விட முடியும். நீங்கள் தந்த ஒவ்வொரு சின்ன சின்ன தரவுகளாலும் கொழுத்த மிருகம் அது.

இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்கிறீர்களா?

எரிகிற கொள்ளியைப் பிடுங்கி விட்டால் எப்படி அடுப்பெரியும் என்பார்களே கிராமத்தில். அப்படித்தான். தீனியைப்  போடா விட்டால் எப்படிக் கொழுக்கும் நீங்கள் வளர்க்கும் மிருகம்? அதுதான் இதற்கான வழியும்.

நீங்கள் தரவுகளைத் தரா விட்டால் செயற்கை நுண்ணறிவால் உங்களைப் பற்றி எதையும் மேற்கொண்டு ஊதிப் பெருக்கம் செய்ய முடியாது.

உங்கள் ஆதார் எண், பான் எண், கடன் அட்டை விவரங்கள் எல்லாவற்றையும் உள்ளீடு செய்து விட்டு ஐயோ எல்லாம் இணையத்தில் கசிகிறது என்றால் அதற்கு எதுவும் செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு அனைத்தையும் முச்சந்திக்குக் கொண்டு வந்து டேரா போட்டு விடும்.

உங்களது ரகசிய ஆவணங்கள், ரகசிய உத்திகள், ரகசிய தரவுகள், ரகசிய ஒப்பந்தகள் இவை குறித்தெல்லாம் செயற்கை நுண்ணறிவோடு விவாதிக்கக் கூடாது. இதை மீறி நீங்கள் விவாதித்தால் முச்சந்திக்கு வந்த பிறகு யாரும் சிரிக்க கூடாது என எதிர்பார்க்கக் கூடாது. செயற்கை நுண்ணறிவோடு நீங்கள் விவாதிக்கும் எதையும் அது பொது வெளியில் சிதறு தேங்காயாக்கி விடும்.

உங்கள் உணர்ச்சி பூர்வமான சிக்கல்கள், உடல்நலப் பிரச்சனைகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், எங்கே இருக்கிறீர்கள் என்கிற விவரங்கள், உங்களின் எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றையும் கூட செயற்கை நுண்ணறிவோடு பகிர்ந்து கொள்வதோ, அதில் விவாதிப்பதோ கூட உங்கள் குளியலறைச் சுவர்களை நீங்கள் தகர்த்தெறிவதைப் போலதான். அவற்றின் மூலம் உங்களுக்கு நல்ல ஆலோசனைகள், வழிகாட்டல்கள் கிடைக்கலாம் என்றாலும் அது பொதுவெளிக்கு வர நாளாகாது.

இதில் நீங்கள் உங்கள் சுயபடம் (செல்பி), இதர புகைப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்தால் வேலியில் ஓடும் ஓணானைப் பிடித்து வேட்டியில் விட்ட கதையாகி விடும். அது எங்கே, எப்படி ஓடும் என்பதெல்லாம் கணிக்க முடியாது. ஏனென்றால் செயற்கை நுண்ணறிவு மேற்கொண்டு என்னென்ன செய்யும் என்பது அதை உருவாக்கியவர்களாலேயே கணிக்க முடியாததாக இருக்கிறது. ஆகவே அது எதை வேண்டுமானாலும் செய்யும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம், எங்கே வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த மனிதர்களோடு பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதுகூட சில பல நேரங்களில் ஆபத்தானதாகத்தானே இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் அதை விட ஆபத்தானது செயற்கை நுண்ணறிவோடு நீங்கள் புழங்குவதும் பகிர்வதும்.

உங்களால் சரியாகப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கை செயற்கை நுண்ணறிவைப் பொருத்த வரை இருந்தாலும், நீங்கள் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நொடியும் உங்களை அறியாமல் பல கண்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, ஒரு கேமிராவைப் போல வெகுநுட்பமாக அனைத்தும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் எப்போதும் மறந்துவிடக் கூடாது.

*****

No comments:

Post a Comment