10 Mar 2023

அம்மாவைப் போல மழை

பார்க்கவும் பேசவும் நினைத்தவர்கள்

நீதானா என்று கேட்டவரிடம்

ஆம் நான்தான் என்றதும்

படபடக்க ஆரம்பித்துவிட்டார்

இத்தனை நாளாய்ப் பார்க்க வேண்டும்

பேச வேண்டும் என்றிருந்த

ஆசைகள் அத்தனையையும்

அவசர அவசரமாகப் பகிர்ந்து விட்டு

அவசர அவசரமாகக் கிளம்புவதற்கு

வருத்தம் தெரிவித்து விட்டுக் கிளம்பி விட்டார்

இனி அடுத்து நீதானா என்று கேட்பவரிடமும்

நான்தான் என்று சொல்ல வேண்டும்

அவரும் பார்க்க நினைத்த பேச நினைத்த

ஆசைகளைச் சொல்லி

அவசர அவசரமாகக் கிளம்பி விடுவார்

பேச நினைக்கும் ஒரு வார்த்தையைக் கூட

அவர்களைப் போல பார்க்க பேச நினைத்த

நான் பேசவில்லை என்பதில் யாருக்கென்ன கவலை

*****

கடவுளே உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள்

கோயிலுக்கு வந்ததும்

கடவுளிடம் கவலைகளைக் கொட்டித் தீர்க்கிறார்கள்

அவர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்

கிளம்பட்டுமா எனும் போது

சரி கிளம்பு என்கிறார்

பார்த்த நாளிலிருந்து அங்கிருக்கும்

கடவுளிடம் சொல்ல

ஏகப்பட்ட கவலைகள் நமக்கு இருக்கின்றன

அவரது கவலைகளைச் சொல்ல

அவருக்கு யார் இருக்கிறார்கள்

ஒரு நாளாவது கேட்டுப் பார்க்க வேண்டும்

உங்கள் கவலைகளை என்னிடமாவது சொல்லுங்கள் என்று

*****

அம்மாவைப் போல மழை

ஒரு நாளாவது வீடடைந்து கிட என

மழை பெய்கிறது

நான் குடையைப் பிடித்துக் கொண்டு

வெளியில் கிளம்புகிறேன்

எனக்கென்ன எக்கேடு கெட்டாவது போ

என அப்போதும் பெய்து கொண்டே இருக்கிறது மழை

அம்மாவைப் போல

*****

9 Mar 2023

திருப்தியின் இருக்கைகள்

நண்பர்களின் வருகை

நண்பர் இறந்து நாளாகி விட்டது

இன்னும்

என்னனென்னவோ

கனவில் தினம் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்

என்றாவது ஒரு நாள்

கனவிலும் வந்து போகாமல் இறந்து போவார்

அப்போது இன்னொரு நண்பர் இறந்து

கனவில் வந்து போகத் தொடங்குவார்

கனவில் வந்துப் போவதற்காகவா

என் நண்பர்களே இறந்து போகிறீர்கள்

என்று கேட்டால்

கனவில் வந்துப் போகும் நண்பர்கள்

சிரித்துக் கொள்கிறார்கள்

நண்பர்கள் இறந்தால் அழுவது நின்று

நானும் சிரித்துக் கொள்கிறேன்

*****

திருப்தியின் இருக்கைகள்

வரிசையாக ஒவ்வொரு இருக்கையாக

அமர்ந்து பார்க்கிறார்

எந்த இருக்கையும் திருப்திபடுவதாகத் தோன்றாமல் போக

திபுதிபுவென வந்துப் புகும் கூட்டம்

திருப்திபடா இருக்கை ஒன்றில்

அமர வைக்கிறது

நல்லவேளை நடுவில் ஒரு இருக்கை கிடைத்ததென

இப்போது திருப்தி பட்டுக் கொள்கிறார்

மேலும் மேலும் கூட்டம் வர

அமர்ந்திருக்கும் இருக்கையின் திருப்தி

அதிகமாகிக் கொண்டே போகிறது

இறங்கும் நிறுத்தம் வரும் போது

திருப்தி தந்த இருக்கையை விட்டு

திரும்பிப் பாராமல் கூட

இறங்கிப் போகிறார்

இன்னொருவர் திருப்தியுடன் அமர்ந்து கொள்கிறார்

இறங்கும் வரை திருப்தியை அனுபவித்துக் கொள்ளும் ஆசையில்

*****

8 Mar 2023

அடைத்து வைக்கும் கதவுகள்

பிரக்ஞையற்றதன் இயக்கம்

ஏறுகிறார்கள்

இறங்குகிறார்கள்

ஏறுவதோ இறங்குவதோ

எந்த நோக்கமில்லாமல்

மாடிப்படி அங்கேயே இருக்கிறது

நோக்கத்தை வரிந்து கட்டிக் கொள்பவர்கள்

ஏறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் இருக்கிறார்கள்

*****

எறிதலின் ரத்தம்

தம் மகள்களின் கால்களில்

குத்தப் போவது தெரியாது

குவார்ட்டர் பாட்டில்களை

வீசி எறிகிறார்கள்

குடிகார தகப்பன்மார்கள்

*****

அடைத்து வைக்கும் கதவுகள்

கதவு எவ்வளவு விசயங்களை

அடைத்து வைத்திருக்கிறது என

ஆச்சரியப்படுபவர்

கதவுக்கு வெளியே இருக்கும்

ஆச்சரியங்களைக் கவனிக்காமல்

கதவுக்குள் அடைந்து கிடக்கும்

ஆச்சரியங்களைக் கவனிக்கிறார்

கதவுக்குள் அடைந்து

விட்டு விடுதலையாகும் பொழுதில்

ஆச்சரியங்கள் அடைந்து கிடப்பது

உள்ளேயல்ல வெளியே என்பது

புலப்படக் கூடும்

எல்லாரும் நினைப்பது போல

எல்லாரையும் அப்படி விடுதலை செய்து விடுவதில்லை

கதவுகள்

*****

7 Mar 2023

விரைவில் விஷ ஜந்துகளின் பட்டியலில் மனிதர்கள்

எழுதுவதில் இது கதையா? கட்டுரையா?

கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தமோ?

கட்டுரைகள் எழுதத் துவங்கினால் கதைகள் தலை தெறிக்க ஓடி விடுகின்றன. பிறகு கதைகள் எழுத நாளாகி விடுகிறது. பேசாமல் கட்டுரை எழுதுவதையே கதையாக எழுதி விட்டால் என்ன என்று பார்த்தால் அதுவும் கட்டுரையைப் போலத்தான் வருகிறது.

வீட்டிலே இருந்து பழக்கப்பட்ட ஒருவர் ஹாஸ்டலில் தங்கும் போது ஏற்படும் ஹோம்சிக் பிரச்சனை போன்றது இது. கட்டுரையே எழுதி விட்டு கதைகளுக்குத் தாவுவது என்றால் பாதி தாவும் போதே தவறி விழ நேரிடுகிறது. அடியும் பலமாகப் படுகிறது, 108க்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு.

கிராமத்தில் இருந்து பழக்கப்பட்டவர்கள் ஏன் நகரங்களுக்குச் சென்றால் தடுமாற வேண்டும் என்று நானே கேட்டிருக்கிறேன். நகரத்தில் இருப்பவர்கள் கிராமங்களில் வந்து தங்குவதை ஏன் அசௌகரியமாகப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டிக்கிறேன். இனிமேல் அப்படிக் கேட்பதாக இல்லை. எல்லாவற்றுக்கும் கட்டுரை – கதை அனுபவம்தான் காரணம். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மாறுவது இவ்வளவு சிக்கலாக இருக்கும் எனும் போது நகர – கிராம இடமாற்றங்களைப் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நகரத்தில் இருப்பவர்கள் நகரத்திலும் கிராமத்தில் இருப்பவர்கள் கிராமத்திலும் இருக்கட்டும். அங்கிருந்து இங்கு இடம் மாறி, இங்கிருந்து அங்கு இடம் மாறி டோல்கேட்டுகளில் கொட்டி அழுவதாவது கொஞ்சம் குறையட்டும்.

நிச்சயமாக கதையிலே இருந்து விட்டு கட்டுரை எழுதுவது ஹோம்சிக் பிரச்சனைக்குள் சிக்குவதைப் போலத்தான். பிறகு கட்டுரை எழுதி விட்டு கதைக்கு மாற நினைப்பது நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வதைப் போலத்தான்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வசதி இருக்கிறது. ஏதோ ஒன்றிற்காக இன்னொன்றின் வசதியை விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது.

சென்ற மாதத்தை எடுத்துக் கொண்டால் இருபது நாட்களுக்கு மேல் கட்டுரை எழுதுவதில் கழிந்து விட்டது. அந்த நாட்களில் ஒரு கதையைக் கூட எழுதவில்லை. வறண்ட பாலைவனத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து நீச்சலடிப்பதைப் போல இருந்தது அந்த அனுபவம். இப்போது நீரால் நிறைந்து கிடக்கும் கிராமத்துக் குளங்களைப் பார்க்கும் போது எப்படி நீச்சல் மறந்து போனதோ? இப்படியும் நடக்குமா என்கிறார்களா? அப்படித்தான் நடக்கிறது. இரு சக்கர வாகனத்திலே போய் விட்டு ஒரு நாள் மிதிவண்டியில் ஏறி மிதிக்க மறந்து கியர் போடுவதாக நினைத்து பெடலை லேசாக ஓர் அழுத்து அழுத்தி, ஹேண்டில்பாரை ஆக்சிலேட்டராக திருக நினைத்த போது என் மேல் ஏறி விட்டது மிதி வண்டி. படித்த நீங்களே இப்படி லைசன்ஸ் வாங்காமல் மிதிவண்டி ஓட்ட நினைத்தால் எப்படி சார் என்று பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருந்து பத்து பேராவது வந்து நியாயவாதம் பண்ண ஆரம்பித்து விட்டடார்கள். ரொம்ப சங்கடமாகப் போய் விட்டது.

என்ன இப்படியெல்லாம் பயமுறுத்துகிறீர்களே என்கிறீர்களா? நிலைமை அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் கேட்கலாம், கட்டுரையில் என்ன இருக்கிறது, கதையில் என்ன இருக்கிறது என்று? இரண்டிலும் எழுத்துகளும் எழுத்துகள் சேர்ந்த சொற்களும் சொற்கள் சேர்ந்த வாக்கியங்களும்தான் இருக்கின்றன. பிறகு நிறுத்தற்குறிகள், காற்புள்ளிகள், வினாக்குறிகள், ஆச்சரியக்குறிகள் இத்தியாதிகள் இருக்கின்றன.

ஆனால் இது வந்தால் அது ஏன் வர மாட்டேன்கிறது? அது வந்தால் இது ஏன் வர மாட்டேன்கிறது? என்பது புரியாமல் போய் விடுவதால் எழுதுவது எதுவாக இருந்தாலும் அதை எது என்று தீர்மானிப்பதை இப்போதெல்லாம் வாசகர்களின் கையில் விடுவதே உசிதமென நினைக்கிறேன்.

எழுதுவது மட்டும் என் வேலையாக இருக்கட்டும். அது கட்டுரையா? கதையா? என்பதைத் தீர்மானித்து வாசகர்களாகிய நீங்களே ஒரு போஸ்ட் கார்டு போட்டாலும் சரிதான், மின்னஞ்சல் அனுப்பினாலும் சரிதான். இரண்டுக்கும் என் சந்தோஷத்தை உங்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

*****

விரைவில் விஷ ஜந்துகளின் பட்டியலில் மனிதர்கள்

கட்டுபடி ஆக வில்லை என்றால் என்ன நடக்கும் என்று யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இது குறித்துத் தெரியாவிட்டால் அவசியம் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுபடி ஆகாமல் போகும் போது உங்களுக்கு விஷத்தைக் கொடுப்பார்கள், சாக்ரடீசுக்குக் கொடுத்ததைப் போல. அதைத் தண்டனையைப் போல விசாரித்துத் தீர்ப்பிட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

விசாரணையே இல்லாமல் உங்களால் விசாரிக்க முடியாமலும் அந்தத் தீர்ப்புக்குள் நீங்கள் கொண்டு வரப் படுகிறீர்கள் என்பது தெரியாமலும் அவ்வளவும் நடந்து முடியும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விற்பனை விலை இருக்கிறது. அந்த விற்பனை விலை உற்பத்தி செய்பவருக்குக் கட்டுபடியாக வேண்டும்.

விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் விற்பனை விலை கட்டுபடி ஆகாது, கொசுறுக்குக் காசைக் கொடுத்து விட்டு மொத்தத்தை உருவுவதைப் போல.

அவர்கள் என்ன செய்வார்கள்? உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்று பார்க்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு விற்பனை விலை கட்டுபடியாகும். எங்கெல்லாம் செலவாகிறது என்று பார்த்து அங்கெல்லாம் செலவைக் குறைப்பதற்கான அத்தனை  வேலைகளையும் செய்கிறார்கள்.

களை எடுக்க பத்து ஆட்கள் வேண்டுமா? அதை எப்படி இரண்டு ஆட்களாக ஆக்குவது என்று பார்க்கிறார்கள். களைக்கொல்லியை அடித்து விட்டால் அந்த இரண்டு ஆட்களும் இல்லாமல் ஒற்றையாக நின்று களைகளைப் பொறுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு சரக்கை வழங்கும் டாஸ்மாக்குகளும், பயிர்களுக்கு விதவிதமான களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகளை வழங்கும் கடைகளும் குக்கிராமங்கள் தோறும் 333 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கின்றன.

வளரும் பயிர்களுக்கு வேதி உரங்கள் கொடுப்பதும், பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லிகளை அடிப்பதும் பயிர்கள் ஓரளவு வளர்ந்த பிறகு நடப்பவை. இப்போது விதைக்கத் தொடங்கும் முன்பே களைக்கொல்லியிலிருந்து துவங்குகிறார்கள். உடன் வேதி உரத்தைத் தெளிக்கிறார்கள். வளர வளர பூச்சிக்கொல்லிகளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பிறகு உங்கள் கைகளில் உணவுப்பொருளாக விற்று விடுகிறார்கள்.

டிராக்டர்கள், நடவு எந்திரம், அறுவடை எந்திரம் என்று பயன்படுத்தி மனித உழைப்புக்கு இடமில்லாமல் போன விவசாயத்தில் களையெடுக்க பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் டிரோனுக்கு மாறி விட்டது.

விஷத்தைத் தாய்ப்பாலாக உண்டு, விஷத்தை ஊட்டச்சத்தாகப் போஷித்து, விஷத்தைக் கொண்டு தற்காத்துக் கொண்டு வளர்கின்றன பயிர்கள். நாமும் அந்த விஷத்தை உண்டு அந்த விஷத்தைச் செரித்து விஷத்திலே வாழப் பழகி விட்டோம்.

நோய்கள் வந்தால் மருத்துவமனைகள் இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்ய ரோபோட்டுகளோடு மருத்துவர்கள் இருக்கிறார்கள். பிறகென்ன உண்ணும் உணவுப் பொருளில் ரசாயனம் இருந்தால் என்ன? விஷம் இருந்தால் என்ன? என்று நினைப்பவர்கள் உலக மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியே போனால்… பாம்பு, பல்லி என விஷ ஜந்துகளுக்கு இருந்த விஷம் கூடிய விரைவில் மனிதர்களுக்கும் வந்து மனிதர்களும் விஷ ஜந்துகளின் பட்டியலில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு சீறி வரும் பாம்பும் சிரித்து வரும் மனிதரும் ஒன்றுதான். இப்போதே சிலபல மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

*****

6 Mar 2023

ராக்கெட் எந்திரங்களாகி விட்ட சமையல் எரிவாயு உருளைகள்

ராக்கெட் எந்திரங்களாகி விட்ட சமையல் எரிவாயு உருளைகள்

நான் சிறுவயதாக இருந்த போது 1990களின் வாக்கில், பெண்மணிகள் சமையல் எரிவாயு அடுப்பைப் (கேஸ் அடுப்பு) பயன்படுத்த அவ்வளவு பயந்தார்கள். திடீரென தீப்பற்றி விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. சமையல் எரிவாயு அடுப்பு வெடிக்குமாமே என்று பேசிக் கொள்வார்கள். அந்தப் பயம் போன இடம் தெரியவில்லை. இப்போது சமையல் எரிவாயு அடுப்பைக் குறித்த பயம் யாருக்கும் இல்லை. சமையல் எரிவாயு உருளையின் (எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்) விலையைப் பார்த்து பயப்பட வேண்டியதாக இருக்கிறது.

அதன் விலையேற்றத்தை 2018 இல் தொடங்கி தற்போதைய 2023 வரைப் பார்ப்போமே. 2018 ஆம் ஆண்டில் அறுநூறு சொச்சம் விலைக்கு இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ஆயிரத்து இருநூறு சொச்சத்துக்கு வந்து விட்டது. கிட்டதட்ட ஒரு மடங்கு விலை இருமடங்காக விலையேறி விட்டது. முன்பை விட 100 சதவீதம் விலை அதிகம்.

15 சதவீத கூட்டு வட்டியில் வளரும் தொகைதான் ஐந்து ஆண்டுகளில் இப்படி இரட்டிப்பாகும். சரியாகச் சொல்வதென்றால் சமையல் எரிவாயு உருளையின் விலை வருடத்துக்கு 15 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இன்னும் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் அந்த விலை உயர்வு 15 சதவீதத்தையும் தாண்டிப் போகலாம்.

இப்படி விலையேறிக் கொண்டிருக்கும் சமையல் எரிவாயு உருளைகளை நாம் ஏன் ராக்கெட் கிரையோஜெனிக் எந்திரங்களாகப் பயன்படுத்தக் கூடாது? கிரையோஜெனிக் எந்திரங்களை மிஞ்சும் அளவுக்கு அதன் விலையேற்றம் இருக்கும் போது இனி நாம் இந்திய சமையல் எரிவாயு உருளைகளை இந்திய சமையல் உலகின் விலையேற்ற கிரையோஜெனிக் எந்திரங்கள் என்று கூட அழைக்கலாம்.

சமையல் எரிவாயு உருளையின் விலையைப் பொருத்த வரையில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஐம்பது ரூபாய் வரை விலையேற்றப்படுகிறது. அதுவும் மாதத்திற்கு மாதம் என்று சீரான இடைவெளி கூட இல்லாமல்.

விலை ஏறிக் கொண்டிருக்கும் ஒரு பொருளை விலை குறைத்து விற்க முடியாது என்பது வியாபார தர்மம். ஆனால் விலை குறைந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை விலை ஏற்றி விற்றுக் கொண்டிருப்பது என்ன வகை தர்மமோ?

 உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு செல்கிறது. சமையல் எரிவாயுவுக்கு அடிப்படை கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கும் போது சமையல் எரிவாயு உருளையின் விலைகுறைந்த கொண்டு போக வேண்டும். இந்தியாவில் ஏன் அது விலை அதிகமாகிக் கொண்டு போகிறது?

என்ன விலை வைத்தாலும் சாமான்ய மக்கள் அதை வாங்கிப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பதால் அப்படி விலையேறிக் கொண்டு போகிறதோ என்னவோ? வேறு வகை தேவைகளைத் தள்ளிப் போடலாம், உண்பதைத் தள்ளிப் போட முடியாது என்ற அடிப்படை நெருக்கடியைப் பின்புலமாகக் கொண்டு விலையேற்றப்படுகிறதோ என்னவோ?

விலை உயர்வின் பக்கவாட்டு அதிர்வுகள் மோசமான பின் விளைவுகளை உருவாக்கக் கூடியவை. சமையஸ் எரிவாயு உருளையின் தொடர்ச்சியான விலை உயர்வு குடும்பச் செலவை உயர்த்தும். அதை வாங்கிப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவுப் பொருட்களில் விலை உயர்வை உண்டு பண்ணும். காலை, மாலை சிற்றுண்டி, மதிய உணவு, இனிப்பு கார வகைகள், இன்ன பிற உண்பண்டங்கள் என்று அனைத்தையும் விலை ஏற்றச் செய்யும்.

மிக முக்கிய அதிர்வாகச் சாமானிய மனிதர்கள் பசி போக்கக் குடிக்கும் தேநீரையும் விலை உயர்த்தும். தொடர்ந்தும் கடினமாகவும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒரு வேளை உணவில் சிக்கனம் பார்க்கலாம், ஒரு கோப்பைத் தேநீரிலா சிக்கனம் பார்க்க முடியும்? சமையல் எரிவாயு உருளையின் ஒவ்வொரு முறை விலையேற்றமும் இப்படி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதத்தில் விலையை உயர்த்திக் கொண்டு போகும். முடிவில் சில்லரை வர்த்தகப் பொருட்களின் விலை உயர்விலும் சாமானிய நுகர்வுப் பொருட்களின் விலை வீக்கத்திலும் போய் முடியும். முடிவாக இத்தகைய அதிர்வுகள் சாமானிய மக்களின் வயிற்றில் மரண அடியைக் கொடுக்கும்.

சில நேரங்களில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் விலையை ஏற்ற யோசித்துக் கொண்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை ஏற்றலாம். அல்லது சமையல் எரிவாயு உருளையின் விலையை ஏற்ற யோசித்துக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை ஏற்றலாம். எங்கே எப்படி ஏற்றினாலும் அந்த அடி சாமனியர்களின் வயிற்றோடு தலையிலும் விழுவது வாடிக்கையாகி விட்டது.

தற்போது இந்தியாவில் ஆள்கூலி அதிகமாகிக் கொண்டுப் போவதாக அதிகம் பேசப்படுகிறது. ஆள்கூலி உயர்வுக்கு கச்சா எண்ணெய் பொருள்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை முக்கிய காரணியாக இருக்கிறது. எல்லாம் விலை ஏறும் போது வாழ்வாதாரத்திற்கான கூலி உயர்வின்றி வாழ முடியாது.

கச்சா எண்ணெய் பொருட்களில் விலையேற்றும் போது கரிசனத்தோடு அதை அணுகிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். கரிசனமின்றி முடிவெடுக்கும் போது அது சாமனியர்களை வாட்டி வதைக்கிறது.

சாமனியர்கள்தானே, அவர்களை வாட்டி வதைத்தால் என்னவாகி விடப் போகிறது என நினைத்து விடக் கூடாது. சாமானியர்களின் பலத்தில்தான் இந்தியா வலுவாக நின்று கொண்டிருக்கிறது. சாமானியர்களை வலுவிழக்கச் செய்து தன்னுடைய வலுவை இந்தியா குறைத்துக் கொள்ளக் கூடாது.

*****

விழித்துக் கொண்டோரெல்லாம் தூக்க மாத்திரைகள் விற்றுக் கொண்டிருக்கிறார்!

விழித்துக் கொண்டோரெல்லாம் தூக்க மாத்திரைகள் விற்றுக் கொண்டிருக்கிறார்!

எங்கள் தெருவின் சித்திரத்தைத் தீட்ட வேண்டும் என்ற ரொம்ப நாளாக ஆசை. இப்போதுதான் காந்தியடிகள் தவற விட்ட பென்சில் ஒன்றும், ரவிவர்மா மிச்சம் வைத்த வண்ணங்கள் கொஞ்சமும் கிடைத்தன. ஐன்ஸ்டீன் தவற விட்ட நேரமும் கொஞ்சம் சிக்க வரைய உட்கார்ந்து விட்டேன்.

மாடர்னா, அல்ட்ரா மாடர்னா, வின்டேஜா, நாஸ்டாலாஜியாவா என்று புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு வித இசத்தில் அமைந்து விட்ட ஓவியத்தை நீங்களே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

“என்னவோ வாயதாகி விட்டது என்கிறார்கள், ஹாஸ்பிட்டல் போகும் பாக்கியம் கிட்டவில்லை” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் தெக்குடு தெரு தாத்தா.

“எனக்கு ரெண்டு மாத்திரை தந்தா கொறைஞ்சாப் போயிடப் போவுது” என்று வடக்குப்பட்டி ஆத்தா உரிமையோடு சுகர் மாத்திரைகளைக் கேட்டு விட்டுப் போகிறது.

“பக்கத்தில்தான் மெடிக்கல் ஷாப், ஐந்து நிமிஷத்தில் வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி வருகிறேன்” என்று புறப்படுகிறான் எட்டு வயது பெயரன்.

அப்பாவுக்குத் தைலம், அம்மாவுக்கு ஆயின்மென்ட், அக்காவுக்கு பிம்பிள் கிரீம், அண்ணனுக்கு மெமரி பில்ஸ், தம்பிக்கும் தங்கைக்கும் விக்ஸ் சாக்லேட் என்று என்னென்னவோ கிடைக்கின்றன.

இப்போதே பெட்டிக்கடை போல மெடிக்கல் ஷாப் முளைத்துக் கொண்டிருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.

ஆத்திர அவசரத்துக்கு ஜிஞ்சர் பீர் என்று எத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். சிரப், டானிக், டேப்லட் என்று போக வேண்டிய காலம் நிறைய இருக்கிறது.

தூங்குவதற்கான மாத்திரைகளும் இருக்கின்றன மெடிக்கல் ஷாப்களில். பாவம் விழித்துக் கொண்டு விற்றுக் கொண்டு இருக்கிறார் மெடிக்கல் ஷாப்காரர்.

*****

படிப்பவர்கள் எங்கே பறந்து போனார்களோ?!

நூலகம் சென்று கொண்டிருந்த என்னை அதிசய பிறவியைப் போலப் பார்த்தார் நண்பர் லகுடுபாண்டி. இன்னமுமா நீ மாறவில்லை என்ற ஏளனப் பார்வை அதில் விஷம் தோய்ந்த கத்தியைப் போல பளபளத்தது.

நூலகத்தில் நான் எதிர்பார்த்தபடி கூட்டமில்லை. புத்தகங்கள் தனிமையில் இருந்தன. “இப்போல்லாம் யாரும் வருவதில்லை” என்று கவலைப்பட்ட நூலகரைப் பார்த்து “நீங்கள் வந்திருக்கிறீர்களே” என்றதும் என்னவோ கேட்காத ஜோக்கைக் கேட்டது போல பகபகவெனச் சிரித்தார்.

நான் தினத்தந்தியை எடுத்து சில எழுத்துகளைப் படித்துப் பார்த்தேன். நூலகர் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். நான் வேகமாக எழுந்து சென்று “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன். அவர் திடுக்கிட்டவராக “பார்க்கவில்லை, வாட்ஸாப்புல படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

எனக்கு நூலகத்திற்குப் படிப்பவர்கள் வராமல் போனதற்கான காரணம் புரிந்து போனது.

“நீங்கள் ஏன் வாட்ஸாப்பில் ஒரு நூலகம் ஆரம்பிக்கக் கூடாது” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்.

“ஜி.ஓ. வரணும் சார். எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்” என்றார் நூலகர்.

*****

5 Mar 2023

என்னை என்ன செய்யப் போகிறாய்? கூகுளும் சாட் ஜிபிடியும் (Google & Chat GPT)

என்னை என்ன செய்யப் போகிறாய்?

கூகுளும் சாட் ஜிபிடியும் (Google & Chat GPT)

செயற்கை நுண்ணறிவை ஆங்கிலத்தில் Artificial Intelligence என்கிறார்கள். சுருக்கமாக AI. இனி வரப் போகும் உலகை அதுதான் ஆட்கொள்ளப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள்.

எப்படி பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயந்திரங்களும் இருபதாம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பமும் உலகை ஆட்கொண்டதோ அப்படி இனி வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றையும் ஆட்கொள்ளப் போகிறது.

இது குறித்து யோசிக்கும் போது எனக்கு திருக்குறள் ஒன்று ஞாபகம் வருகிறது.

“செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.”                       (குறள், 637)

நமக்கு நிறைய சந்தேகங்கள் உருவாகும் இடம் இதுதான். செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவை மிஞ்சி சென்று விடுமா என்ற சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படி மிஞ்சிப் போய் அது என்ன சாதிக்கும் என்ற கேள்வியும் அப்போது அங்கே தொக்கி நிற்கும்.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் தரவுகளிலிருந்து தகவல்களை ஒருங்கிணைத்து தேவைப்படுவதை நிரல்படுத்தி முடிவுகளை;j தர்க்க ஒழுங்கோடு செயற்கை நுண்ணறிவு தருகிறது. அவ்வளவு விரைவாக நம்மால் தரவுகளை விரைவாகவும் வேகமாகவும் ஒழுங்கப்படுத்த முடியாது. ஒழுங்குப்படுத்திய விவரங்களை தர்க்க ரீதியாக நிரல்படுத்த முடியாது. நிரல்படுத்திய விவரங்களிலிருந்து முரண்பாடுகளின்றி முடிவு காண முடியாது. இந்த வேலையைத்தான் செயற்கை நுண்ணறிவு தற்போது எடுத்துக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒரு மனிதர் ஆயிரமோ லட்சமோ கோடியோ அல்லது அந்த எண்ணிக்கையைத் தாண்டிய எண்ணிக்கையில் தனி உதவியாட்களை வைத்து செய்யும் வேலையைச் செயற்கை நுண்ணறிவு தனி ஒருவராகச் செய்கிறது.

இன்னும் அணுக்கமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், ஒரு கணிப்பொறியில் அல்லது இணையத்தில் இவற்றையெல்லாம் தேடித் தொகுத்து நிரல்படுத்தி முடிவு கண்டு கொண்டிருந்ததைத் தற்போது ஓர் இயந்திர மென்பொருளே செய்கிறது. ஒரு வேலையாளாக இருக்கும் வகையில்தான் அது உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இப்போது செயற்கை நுண்ணறிவு மனித அறிவை ஆட்கொண்டு விடுமா என்ற கேள்விக்கான தீர்வைக் கொஞ்சம் பகுதி பகுதியாக உடைத்துப் பார்க்கலாம்.

செயற்றை நுண்ணறிவுக்கு அதனுடைய சுய ஆளுகைக்கு நம்மைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதற்கான தேவையும் அதற்கு இல்லை. அதைத் திறம்பட உருவாக்கி உலவ விடும் மனிதர் வேண்டுமானால் அப்படிச் செய்ய செயற்கை நுண்ணறிவைத் தூண்டலாம். அப்படி உருவாக்கிய மனிதரின் கட்டளைகளுக்கேற்ப செயற்கை நுண்ணறிவு அப்படிச் செயல்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. சுயமாக அது அப்படிச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட தர்க்க ஒழுங்குடன்தான் அதற்கான நிரல்கள் மனிதரால் வழங்கப்படும்.

செலவில்லாத உதவியாளை யார் வேண்டாம் என்று சொல்லப் போகிறார்கள்? அதுவும் மாதா மாதம் ஊதியம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் செயற்கை நுண்ணறிவு மனித அறிவை விஞ்சி விடும் என்ற பயமிருந்தாலும் அந்தரங்க உதவியாளாக அதை வைத்துக் கொள்ள விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.

பொழுதுபோக்காக மெய்நிகர் உரையாடலை விரும்பும் தற்காலத்தில் விருப்பு வெறுப்பின்றி மணிக்கணக்கில் உரையாடும் செயற்கை நுண்ணறிவோடு உரையாடுவதை ஒருவர் தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாமல் போகும்.

இப்படிப்பட்ட காரணங்களால் தன்னை அறியாமல் ஒருவர் செயற்கை நுண்ணறிவு குறித்த எதிர் கருத்தியல் நிலையில் இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு தரும் வசதிகளில் வசமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

எதற்காக இவற்றைக் குறிப்பிடுகிறேன் என்றால் செயற்கை நுண்ணறிவை தனி உதவியாளாராக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அப்படி ஒரு வாய்ப்பை ஓப்பன் ஏஐ இணையதளம் வழங்குகிறது.

இப்போது பரவலாகி வரும் Chat GPT ஐ வழங்கும் அதனுடைய இணையதளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. நீங்களும் அந்த இணையதளத்திற்குச் சென்று பாருங்கள். இணைப்புக்குக் கீழே சொடுக்கவும்.

https://openai.com/

அல்லது கூகுளில் open ai என்று தேடினாலும் அந்தத் தளத்தை அடையலாம்.

அதில் உள்ள Chat GPT இல் உசாத்தி உலாவிய போது அசந்து போய் விட்டேன். என்ன வேகத்தோடு அது தகவல்களைப் பெற்றுக் கொண்டு என்ன வேகத்தில் பதிலுரையைத் தந்து கொண்டிருக்கிறது தெரியுமா? இதன் இருப்புக்கு முன் கூகுள் இனி எத்தனை நாள் இருக்கும் என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது.

இப்போது நீங்களே சொல்லுங்கள்.

என்ன வேண்டும் உங்களுக்கு?

ஒரு கணிதத்திற்கான விடையா?

ஒரு கவிதை எழுத வேண்டுமா?

ஒரு சிறுகதை எழுத வேண்டுமா?

எந்தப் பொருளை வாங்க வேண்டும் என முடிவு எடுக்க வேண்டுமா?

சென்னைக்குச் செல்லும் பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டுமா?

வேலைக்கு ஒரு விண்ணப்பம் எழுத வேண்டுமா?

விடுப்பு விண்ணப்பம் எழுத வேண்டுமா?

கணினி மொழியொன்றில் நிரல்களை எழுத வேண்டுமா?

சாம்பார் எப்படி வைப்பது என்பதற்கான குறிப்புகள் வேண்டுமா?

ஒரு கட்டுரை எழுத வேண்டுமா?

என்ன வேண்டும் உங்களுக்கு?

அத்தனையையும் நொடி நேரத்திற்குள் உலாவுவதில் தர்க்க ஒழுங்கோடு உசாத்துணையாக சிநேகபாவ உரையாடலோடு அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறது.

உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயனீட்டுச் சொல்லாகக் கொண்டு கடவுச்சொல்லை உருவாக்கிக் கொண்டு நீங்கள் ஓர் இயந்திர மனிதர் இல்லை என்பதை நிறுவிக் கொண்டு உங்களுக்கு அனுப்பப்படும் குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து நீங்கள் இதனோடு உரையாடலாம்.

உங்களுக்கு இனி தனிப்பட்ட ஆலோசகர் வேண்டும் என்றில்லை. உங்கள் மனநல, உடல்நல பிரச்சனைகள் வரை அடுத்தடுத்து நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது வரை நீங்கள் அதனை அந்தரங்க உதவியாளராகக் கொண்டு நீங்கள் அதனுடைன் உரையாடலாம்.

அந்த chat GPT தளத்திற்குச் செல்ல மேலே உள்ள தளத்தின் மூலமாகவும் செல்லலாம். அல்லது கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கியும் செல்லலாம்.

https://chat.openai.com/auth/login

என்னைக் கேட்டால் அவசியம் ஒருமுறை இந்தத் தளத்திற்குள் போய் பாருங்கள். கூகுளை விழுங்கி விடும் அளவுக்கு இதன் செயல்திறன் இருக்கிறது. இதன் பிறகு கூகுள் எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என்ற யோசனைகள் மற்றும் கேள்விகள்  எனக்குள் எழுந்து கொண்டிருந்தன. இதற்காக நான் என்னுடைய கடந்த கால இணைய அனுபவங்களைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தேன்.

இணையத்தில் இணைய ஆரம்பித்த காலத்தில் Reddifmail இல் எனக்கு ஒரு பயனர் கணக்கு இருந்தது. பல நாட்கள் அதில் நான் ஆர்வமாக இயங்கி வந்தேன். பிறகு என் பயனர் கணக்கு யாகூவிற்கு மாறியது. பல மாதங்கள் அதிலும் இயங்கியிருக்கிறேன். பிறகு கூகுளின் ஜிமெயிலுக்கு மாறினேன். என்னுடைய பழைய ரெட்டிப்பும், யாகூவும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் என்னுடைய கூகுள் கணக்கு என்னவாகும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. தொழில்நுட்ப முறைகள் மாறிக் கொண்டே இருக்கும் போது எப்படி மாறுகிறோம் என்று தெரியாத அளவுக்கு நாம் மாறிக் கொண்டே போகிறோம்.

எப்படி எது மாறப் போகிறது, எப்படி நான் மாறப் போகிறேன் என்பதை வருங்காலமே நமக்குக் காட்டும் என்று நினைக்கிறேன். அதற்காக வருங்காலத்தைப் பார்த்தபடி இருக்கிறேன். அதற்கு முன் நீங்கள் இந்தத் தளத்தை ஒருமுறை சென்று பார்த்து விடுங்கள்.

*****