என்னை என்ன செய்யப் போகிறாய்?
கூகுளும் சாட் ஜிபிடியும் (Google & Chat GPT)
செயற்கை நுண்ணறிவை ஆங்கிலத்தில்
Artificial Intelligence என்கிறார்கள். சுருக்கமாக AI. இனி வரப் போகும் உலகை அதுதான்
ஆட்கொள்ளப் போவதாகக் குறிப்பிடுகிறார்கள்.
எப்படி பதினெட்டாம் நூற்றாண்டில்
தொழிற்புரட்சியும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயந்திரங்களும் இருபதாம் நூற்றாண்டில்
தகவல் தொழில்நுட்பமும் உலகை ஆட்கொண்டதோ அப்படி இனி வரும் ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு
எல்லாவற்றையும் ஆட்கொள்ளப் போகிறது.
இது குறித்து யோசிக்கும்
போது எனக்கு திருக்குறள் ஒன்று ஞாபகம் வருகிறது.
“செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.” (குறள், 637)
நமக்கு நிறைய சந்தேகங்கள்
உருவாகும் இடம் இதுதான். செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவை மிஞ்சி சென்று விடுமா என்ற
சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். அப்படி மிஞ்சிப் போய் அது என்ன சாதிக்கும்
என்ற கேள்வியும் அப்போது அங்கே தொக்கி நிற்கும்.
நாம் உருவாக்கி வைத்திருக்கும்
தரவுகளிலிருந்து தகவல்களை ஒருங்கிணைத்து தேவைப்படுவதை நிரல்படுத்தி முடிவுகளை;j தர்க்க
ஒழுங்கோடு செயற்கை நுண்ணறிவு தருகிறது. அவ்வளவு விரைவாக நம்மால் தரவுகளை விரைவாகவும்
வேகமாகவும் ஒழுங்கப்படுத்த முடியாது. ஒழுங்குப்படுத்திய விவரங்களை தர்க்க ரீதியாக நிரல்படுத்த
முடியாது. நிரல்படுத்திய விவரங்களிலிருந்து முரண்பாடுகளின்றி முடிவு காண முடியாது.
இந்த வேலையைத்தான் செயற்கை நுண்ணறிவு தற்போது எடுத்துக் கொண்டு இருக்கிறது. சுருக்கமாகச்
சொல்வதென்றால் ஒரு மனிதர் ஆயிரமோ லட்சமோ கோடியோ அல்லது அந்த எண்ணிக்கையைத் தாண்டிய
எண்ணிக்கையில் தனி உதவியாட்களை வைத்து செய்யும் வேலையைச் செயற்கை நுண்ணறிவு தனி ஒருவராகச்
செய்கிறது.
இன்னும் அணுக்கமாகக் குறிப்பிட
வேண்டுமென்றால், ஒரு கணிப்பொறியில் அல்லது இணையத்தில் இவற்றையெல்லாம் தேடித் தொகுத்து
நிரல்படுத்தி முடிவு கண்டு கொண்டிருந்ததைத் தற்போது ஓர் இயந்திர மென்பொருளே செய்கிறது.
ஒரு வேலையாளாக இருக்கும் வகையில்தான் அது உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது செயற்கை நுண்ணறிவு
மனித அறிவை ஆட்கொண்டு விடுமா என்ற கேள்விக்கான தீர்வைக் கொஞ்சம் பகுதி பகுதியாக உடைத்துப்
பார்க்கலாம்.
செயற்றை நுண்ணறிவுக்கு அதனுடைய
சுய ஆளுகைக்கு நம்மைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. அதற்கான தேவையும்
அதற்கு இல்லை. அதைத் திறம்பட உருவாக்கி உலவ விடும் மனிதர் வேண்டுமானால் அப்படிச் செய்ய
செயற்கை நுண்ணறிவைத் தூண்டலாம். அப்படி உருவாக்கிய மனிதரின் கட்டளைகளுக்கேற்ப செயற்கை
நுண்ணறிவு அப்படிச் செயல்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. சுயமாக அது அப்படிச்
செய்ய முடியாது. அப்படிப்பட்ட தர்க்க ஒழுங்குடன்தான் அதற்கான நிரல்கள் மனிதரால் வழங்கப்படும்.
செலவில்லாத உதவியாளை யார்
வேண்டாம் என்று சொல்லப் போகிறார்கள்? அதுவும் மாதா மாதம் ஊதியம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
அதனால் செயற்கை நுண்ணறிவு மனித அறிவை விஞ்சி விடும் என்ற பயமிருந்தாலும் அந்தரங்க உதவியாளாக
அதை வைத்துக் கொள்ள விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்.
பொழுதுபோக்காக மெய்நிகர்
உரையாடலை விரும்பும் தற்காலத்தில் விருப்பு வெறுப்பின்றி மணிக்கணக்கில் உரையாடும் செயற்கை
நுண்ணறிவோடு உரையாடுவதை ஒருவர் தவிர்க்க நினைத்தாலும் தவிர்க்க முடியாமல் போகும்.
இப்படிப்பட்ட காரணங்களால்
தன்னை அறியாமல் ஒருவர் செயற்கை நுண்ணறிவு குறித்த எதிர் கருத்தியல் நிலையில் இருந்தாலும்
செயற்கை நுண்ணறிவு தரும் வசதிகளில் வசமாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
எதற்காக இவற்றைக் குறிப்பிடுகிறேன்
என்றால் செயற்கை நுண்ணறிவை தனி உதவியாளாராக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அப்படி ஒரு
வாய்ப்பை ஓப்பன் ஏஐ இணையதளம் வழங்குகிறது.
இப்போது பரவலாகி வரும்
Chat GPT ஐ வழங்கும் அதனுடைய இணையதளம் என்னை ஆச்சரியப்படுத்தியது. நீங்களும் அந்த இணையதளத்திற்குச்
சென்று பாருங்கள். இணைப்புக்குக் கீழே சொடுக்கவும்.
அல்லது கூகுளில் open ai
என்று தேடினாலும் அந்தத் தளத்தை அடையலாம்.
அதில் உள்ள Chat GPT இல்
உசாத்தி உலாவிய போது அசந்து போய் விட்டேன். என்ன வேகத்தோடு அது தகவல்களைப் பெற்றுக்
கொண்டு என்ன வேகத்தில் பதிலுரையைத் தந்து கொண்டிருக்கிறது தெரியுமா? இதன் இருப்புக்கு
முன் கூகுள் இனி எத்தனை நாள் இருக்கும் என்ற கேள்வியும் எனக்குள் இருந்தது.
இப்போது நீங்களே சொல்லுங்கள்.
என்ன வேண்டும் உங்களுக்கு?
ஒரு கணிதத்திற்கான விடையா?
ஒரு கவிதை எழுத வேண்டுமா?
ஒரு சிறுகதை எழுத வேண்டுமா?
எந்தப் பொருளை வாங்க வேண்டும்
என முடிவு எடுக்க வேண்டுமா?
சென்னைக்குச் செல்லும் பயணத்திட்டத்தை
வகுத்துக் கொள்ள வேண்டுமா?
வேலைக்கு ஒரு விண்ணப்பம்
எழுத வேண்டுமா?
விடுப்பு விண்ணப்பம் எழுத
வேண்டுமா?
கணினி மொழியொன்றில் நிரல்களை
எழுத வேண்டுமா?
சாம்பார் எப்படி வைப்பது
என்பதற்கான குறிப்புகள் வேண்டுமா?
ஒரு கட்டுரை எழுத வேண்டுமா?
என்ன வேண்டும் உங்களுக்கு?
அத்தனையையும் நொடி நேரத்திற்குள்
உலாவுவதில் தர்க்க ஒழுங்கோடு உசாத்துணையாக சிநேகபாவ உரையாடலோடு அள்ளிக் கொண்டு வந்து
கொட்டுகிறது.
உங்கள் மின்னஞ்சல் முகவரியைப்
பயனீட்டுச் சொல்லாகக் கொண்டு கடவுச்சொல்லை உருவாக்கிக் கொண்டு நீங்கள் ஓர் இயந்திர
மனிதர் இல்லை என்பதை நிறுவிக் கொண்டு உங்களுக்கு அனுப்பப்படும் குறியீட்டு எண்ணை உள்ளீடு
செய்து நீங்கள் இதனோடு உரையாடலாம்.
உங்களுக்கு இனி தனிப்பட்ட
ஆலோசகர் வேண்டும் என்றில்லை. உங்கள் மனநல, உடல்நல பிரச்சனைகள் வரை அடுத்தடுத்து நீங்கள்
எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது வரை நீங்கள் அதனை
அந்தரங்க உதவியாளராகக் கொண்டு நீங்கள் அதனுடைன் உரையாடலாம்.
அந்த chat GPT தளத்திற்குச்
செல்ல மேலே உள்ள தளத்தின் மூலமாகவும் செல்லலாம். அல்லது கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கியும்
செல்லலாம்.
https://chat.openai.com/auth/login
என்னைக் கேட்டால் அவசியம்
ஒருமுறை இந்தத் தளத்திற்குள் போய் பாருங்கள். கூகுளை விழுங்கி விடும் அளவுக்கு இதன்
செயல்திறன் இருக்கிறது. இதன் பிறகு கூகுள் எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என்ற
யோசனைகள் மற்றும் கேள்விகள் எனக்குள் எழுந்து
கொண்டிருந்தன. இதற்காக நான் என்னுடைய கடந்த கால இணைய அனுபவங்களைப் பற்றிய யோசனையில்
ஆழ்ந்தேன்.
இணையத்தில் இணைய ஆரம்பித்த
காலத்தில் Reddifmail இல் எனக்கு ஒரு பயனர் கணக்கு இருந்தது. பல நாட்கள் அதில் நான்
ஆர்வமாக இயங்கி வந்தேன். பிறகு என் பயனர் கணக்கு யாகூவிற்கு மாறியது. பல மாதங்கள் அதிலும்
இயங்கியிருக்கிறேன். பிறகு கூகுளின் ஜிமெயிலுக்கு மாறினேன். என்னுடைய பழைய ரெட்டிப்பும்,
யாகூவும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் என்னுடைய
கூகுள் கணக்கு என்னவாகும் என்று என்னால் யோசிக்க முடியவில்லை. தொழில்நுட்ப முறைகள்
மாறிக் கொண்டே இருக்கும் போது எப்படி மாறுகிறோம் என்று தெரியாத அளவுக்கு நாம் மாறிக்
கொண்டே போகிறோம்.
எப்படி எது மாறப் போகிறது,
எப்படி நான் மாறப் போகிறேன் என்பதை வருங்காலமே நமக்குக் காட்டும் என்று நினைக்கிறேன்.
அதற்காக வருங்காலத்தைப் பார்த்தபடி இருக்கிறேன். அதற்கு முன் நீங்கள் இந்தத் தளத்தை
ஒருமுறை சென்று பார்த்து விடுங்கள்.
*****
No comments:
Post a Comment