10 Mar 2023

அம்மாவைப் போல மழை

பார்க்கவும் பேசவும் நினைத்தவர்கள்

நீதானா என்று கேட்டவரிடம்

ஆம் நான்தான் என்றதும்

படபடக்க ஆரம்பித்துவிட்டார்

இத்தனை நாளாய்ப் பார்க்க வேண்டும்

பேச வேண்டும் என்றிருந்த

ஆசைகள் அத்தனையையும்

அவசர அவசரமாகப் பகிர்ந்து விட்டு

அவசர அவசரமாகக் கிளம்புவதற்கு

வருத்தம் தெரிவித்து விட்டுக் கிளம்பி விட்டார்

இனி அடுத்து நீதானா என்று கேட்பவரிடமும்

நான்தான் என்று சொல்ல வேண்டும்

அவரும் பார்க்க நினைத்த பேச நினைத்த

ஆசைகளைச் சொல்லி

அவசர அவசரமாகக் கிளம்பி விடுவார்

பேச நினைக்கும் ஒரு வார்த்தையைக் கூட

அவர்களைப் போல பார்க்க பேச நினைத்த

நான் பேசவில்லை என்பதில் யாருக்கென்ன கவலை

*****

கடவுளே உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள்

கோயிலுக்கு வந்ததும்

கடவுளிடம் கவலைகளைக் கொட்டித் தீர்க்கிறார்கள்

அவர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்

கிளம்பட்டுமா எனும் போது

சரி கிளம்பு என்கிறார்

பார்த்த நாளிலிருந்து அங்கிருக்கும்

கடவுளிடம் சொல்ல

ஏகப்பட்ட கவலைகள் நமக்கு இருக்கின்றன

அவரது கவலைகளைச் சொல்ல

அவருக்கு யார் இருக்கிறார்கள்

ஒரு நாளாவது கேட்டுப் பார்க்க வேண்டும்

உங்கள் கவலைகளை என்னிடமாவது சொல்லுங்கள் என்று

*****

அம்மாவைப் போல மழை

ஒரு நாளாவது வீடடைந்து கிட என

மழை பெய்கிறது

நான் குடையைப் பிடித்துக் கொண்டு

வெளியில் கிளம்புகிறேன்

எனக்கென்ன எக்கேடு கெட்டாவது போ

என அப்போதும் பெய்து கொண்டே இருக்கிறது மழை

அம்மாவைப் போல

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...