விழித்துக் கொண்டோரெல்லாம் தூக்க மாத்திரைகள் விற்றுக் கொண்டிருக்கிறார்!
எங்கள் தெருவின் சித்திரத்தைத்
தீட்ட வேண்டும் என்ற ரொம்ப நாளாக ஆசை. இப்போதுதான் காந்தியடிகள் தவற விட்ட பென்சில்
ஒன்றும், ரவிவர்மா மிச்சம் வைத்த வண்ணங்கள் கொஞ்சமும் கிடைத்தன. ஐன்ஸ்டீன் தவற விட்ட
நேரமும் கொஞ்சம் சிக்க வரைய உட்கார்ந்து விட்டேன்.
மாடர்னா, அல்ட்ரா மாடர்னா,
வின்டேஜா, நாஸ்டாலாஜியாவா என்று புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு வித இசத்தில் அமைந்து
விட்ட ஓவியத்தை நீங்களே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
“என்னவோ வாயதாகி விட்டது
என்கிறார்கள், ஹாஸ்பிட்டல் போகும் பாக்கியம் கிட்டவில்லை” என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்
தெக்குடு தெரு தாத்தா.
“எனக்கு ரெண்டு மாத்திரை
தந்தா கொறைஞ்சாப் போயிடப் போவுது” என்று வடக்குப்பட்டி ஆத்தா உரிமையோடு சுகர் மாத்திரைகளைக்
கேட்டு விட்டுப் போகிறது.
“பக்கத்தில்தான் மெடிக்கல்
ஷாப், ஐந்து நிமிஷத்தில் வயிற்று வலிக்கு மாத்திரை வாங்கி வருகிறேன்” என்று புறப்படுகிறான்
எட்டு வயது பெயரன்.
அப்பாவுக்குத் தைலம், அம்மாவுக்கு
ஆயின்மென்ட், அக்காவுக்கு பிம்பிள் கிரீம், அண்ணனுக்கு மெமரி பில்ஸ், தம்பிக்கும் தங்கைக்கும்
விக்ஸ் சாக்லேட் என்று என்னென்னவோ கிடைக்கின்றன.
இப்போதே பெட்டிக்கடை போல
மெடிக்கல் ஷாப் முளைத்துக் கொண்டிருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது.
ஆத்திர அவசரத்துக்கு ஜிஞ்சர்
பீர் என்று எத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். சிரப், டானிக், டேப்லட் என்று
போக வேண்டிய காலம் நிறைய இருக்கிறது.
தூங்குவதற்கான மாத்திரைகளும்
இருக்கின்றன மெடிக்கல் ஷாப்களில். பாவம் விழித்துக் கொண்டு விற்றுக் கொண்டு இருக்கிறார்
மெடிக்கல் ஷாப்காரர்.
*****
படிப்பவர்கள் எங்கே பறந்து போனார்களோ?!
நூலகம் சென்று கொண்டிருந்த
என்னை அதிசய பிறவியைப் போலப் பார்த்தார் நண்பர் லகுடுபாண்டி. இன்னமுமா நீ மாறவில்லை
என்ற ஏளனப் பார்வை அதில் விஷம் தோய்ந்த கத்தியைப் போல பளபளத்தது.
நூலகத்தில் நான் எதிர்பார்த்தபடி
கூட்டமில்லை. புத்தகங்கள் தனிமையில் இருந்தன. “இப்போல்லாம் யாரும் வருவதில்லை” என்று
கவலைப்பட்ட நூலகரைப் பார்த்து “நீங்கள் வந்திருக்கிறீர்களே” என்றதும் என்னவோ கேட்காத
ஜோக்கைக் கேட்டது போல பகபகவெனச் சிரித்தார்.
நான் தினத்தந்தியை எடுத்து
சில எழுத்துகளைப் படித்துப் பார்த்தேன். நூலகர் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் வேகமாக எழுந்து சென்று “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றேன். அவர்
திடுக்கிட்டவராக “பார்க்கவில்லை, வாட்ஸாப்புல படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
எனக்கு நூலகத்திற்குப் படிப்பவர்கள்
வராமல் போனதற்கான காரணம் புரிந்து போனது.
“நீங்கள் ஏன் வாட்ஸாப்பில்
ஒரு நூலகம் ஆரம்பிக்கக் கூடாது” என்று அவரைப் பார்த்துக் கேட்டேன்.
“ஜி.ஓ. வரணும் சார். எதிர்பார்த்துக்கிட்டு
இருக்கேன்” என்றார் நூலகர்.
*****
No comments:
Post a Comment