7 Mar 2023

விரைவில் விஷ ஜந்துகளின் பட்டியலில் மனிதர்கள்

எழுதுவதில் இது கதையா? கட்டுரையா?

கட்டுரைகளுக்கும் கதைகளுக்கும் அப்படி என்ன ஏழாம் பொருத்தமோ?

கட்டுரைகள் எழுதத் துவங்கினால் கதைகள் தலை தெறிக்க ஓடி விடுகின்றன. பிறகு கதைகள் எழுத நாளாகி விடுகிறது. பேசாமல் கட்டுரை எழுதுவதையே கதையாக எழுதி விட்டால் என்ன என்று பார்த்தால் அதுவும் கட்டுரையைப் போலத்தான் வருகிறது.

வீட்டிலே இருந்து பழக்கப்பட்ட ஒருவர் ஹாஸ்டலில் தங்கும் போது ஏற்படும் ஹோம்சிக் பிரச்சனை போன்றது இது. கட்டுரையே எழுதி விட்டு கதைகளுக்குத் தாவுவது என்றால் பாதி தாவும் போதே தவறி விழ நேரிடுகிறது. அடியும் பலமாகப் படுகிறது, 108க்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு.

கிராமத்தில் இருந்து பழக்கப்பட்டவர்கள் ஏன் நகரங்களுக்குச் சென்றால் தடுமாற வேண்டும் என்று நானே கேட்டிருக்கிறேன். நகரத்தில் இருப்பவர்கள் கிராமங்களில் வந்து தங்குவதை ஏன் அசௌகரியமாகப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டிக்கிறேன். இனிமேல் அப்படிக் கேட்பதாக இல்லை. எல்லாவற்றுக்கும் கட்டுரை – கதை அனுபவம்தான் காரணம். இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மாறுவது இவ்வளவு சிக்கலாக இருக்கும் எனும் போது நகர – கிராம இடமாற்றங்களைப் பற்றிப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.

நகரத்தில் இருப்பவர்கள் நகரத்திலும் கிராமத்தில் இருப்பவர்கள் கிராமத்திலும் இருக்கட்டும். அங்கிருந்து இங்கு இடம் மாறி, இங்கிருந்து அங்கு இடம் மாறி டோல்கேட்டுகளில் கொட்டி அழுவதாவது கொஞ்சம் குறையட்டும்.

நிச்சயமாக கதையிலே இருந்து விட்டு கட்டுரை எழுதுவது ஹோம்சிக் பிரச்சனைக்குள் சிக்குவதைப் போலத்தான். பிறகு கட்டுரை எழுதி விட்டு கதைக்கு மாற நினைப்பது நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வதைப் போலத்தான்.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வசதி இருக்கிறது. ஏதோ ஒன்றிற்காக இன்னொன்றின் வசதியை விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது.

சென்ற மாதத்தை எடுத்துக் கொண்டால் இருபது நாட்களுக்கு மேல் கட்டுரை எழுதுவதில் கழிந்து விட்டது. அந்த நாட்களில் ஒரு கதையைக் கூட எழுதவில்லை. வறண்ட பாலைவனத்தில் தண்ணீரைக் கண்டுபிடித்து நீச்சலடிப்பதைப் போல இருந்தது அந்த அனுபவம். இப்போது நீரால் நிறைந்து கிடக்கும் கிராமத்துக் குளங்களைப் பார்க்கும் போது எப்படி நீச்சல் மறந்து போனதோ? இப்படியும் நடக்குமா என்கிறார்களா? அப்படித்தான் நடக்கிறது. இரு சக்கர வாகனத்திலே போய் விட்டு ஒரு நாள் மிதிவண்டியில் ஏறி மிதிக்க மறந்து கியர் போடுவதாக நினைத்து பெடலை லேசாக ஓர் அழுத்து அழுத்தி, ஹேண்டில்பாரை ஆக்சிலேட்டராக திருக நினைத்த போது என் மேல் ஏறி விட்டது மிதி வண்டி. படித்த நீங்களே இப்படி லைசன்ஸ் வாங்காமல் மிதிவண்டி ஓட்ட நினைத்தால் எப்படி சார் என்று பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருந்து பத்து பேராவது வந்து நியாயவாதம் பண்ண ஆரம்பித்து விட்டடார்கள். ரொம்ப சங்கடமாகப் போய் விட்டது.

என்ன இப்படியெல்லாம் பயமுறுத்துகிறீர்களே என்கிறீர்களா? நிலைமை அப்படித்தான் இருக்கிறது. நீங்கள் கேட்கலாம், கட்டுரையில் என்ன இருக்கிறது, கதையில் என்ன இருக்கிறது என்று? இரண்டிலும் எழுத்துகளும் எழுத்துகள் சேர்ந்த சொற்களும் சொற்கள் சேர்ந்த வாக்கியங்களும்தான் இருக்கின்றன. பிறகு நிறுத்தற்குறிகள், காற்புள்ளிகள், வினாக்குறிகள், ஆச்சரியக்குறிகள் இத்தியாதிகள் இருக்கின்றன.

ஆனால் இது வந்தால் அது ஏன் வர மாட்டேன்கிறது? அது வந்தால் இது ஏன் வர மாட்டேன்கிறது? என்பது புரியாமல் போய் விடுவதால் எழுதுவது எதுவாக இருந்தாலும் அதை எது என்று தீர்மானிப்பதை இப்போதெல்லாம் வாசகர்களின் கையில் விடுவதே உசிதமென நினைக்கிறேன்.

எழுதுவது மட்டும் என் வேலையாக இருக்கட்டும். அது கட்டுரையா? கதையா? என்பதைத் தீர்மானித்து வாசகர்களாகிய நீங்களே ஒரு போஸ்ட் கார்டு போட்டாலும் சரிதான், மின்னஞ்சல் அனுப்பினாலும் சரிதான். இரண்டுக்கும் என் சந்தோஷத்தை உங்களுக்குத் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

*****

விரைவில் விஷ ஜந்துகளின் பட்டியலில் மனிதர்கள்

கட்டுபடி ஆக வில்லை என்றால் என்ன நடக்கும் என்று யாருக்காவது தெரியுமா? உங்களுக்கு இது குறித்துத் தெரியாவிட்டால் அவசியம் நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கட்டுபடி ஆகாமல் போகும் போது உங்களுக்கு விஷத்தைக் கொடுப்பார்கள், சாக்ரடீசுக்குக் கொடுத்ததைப் போல. அதைத் தண்டனையைப் போல விசாரித்துத் தீர்ப்பிட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

விசாரணையே இல்லாமல் உங்களால் விசாரிக்க முடியாமலும் அந்தத் தீர்ப்புக்குள் நீங்கள் கொண்டு வரப் படுகிறீர்கள் என்பது தெரியாமலும் அவ்வளவும் நடந்து முடியும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விற்பனை விலை இருக்கிறது. அந்த விற்பனை விலை உற்பத்தி செய்பவருக்குக் கட்டுபடியாக வேண்டும்.

விளைபொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் விற்பனை விலை கட்டுபடி ஆகாது, கொசுறுக்குக் காசைக் கொடுத்து விட்டு மொத்தத்தை உருவுவதைப் போல.

அவர்கள் என்ன செய்வார்கள்? உற்பத்திச் செலவை எப்படிக் குறைப்பது என்று பார்க்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு விற்பனை விலை கட்டுபடியாகும். எங்கெல்லாம் செலவாகிறது என்று பார்த்து அங்கெல்லாம் செலவைக் குறைப்பதற்கான அத்தனை  வேலைகளையும் செய்கிறார்கள்.

களை எடுக்க பத்து ஆட்கள் வேண்டுமா? அதை எப்படி இரண்டு ஆட்களாக ஆக்குவது என்று பார்க்கிறார்கள். களைக்கொல்லியை அடித்து விட்டால் அந்த இரண்டு ஆட்களும் இல்லாமல் ஒற்றையாக நின்று களைகளைப் பொறுக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர்களுக்கு சரக்கை வழங்கும் டாஸ்மாக்குகளும், பயிர்களுக்கு விதவிதமான களைக்கொல்லி, பூச்சிக்கொல்லிகளை வழங்கும் கடைகளும் குக்கிராமங்கள் தோறும் 333 சதவீதம் வளர்ச்சியடைந்திருக்கின்றன.

வளரும் பயிர்களுக்கு வேதி உரங்கள் கொடுப்பதும், பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லிகளை அடிப்பதும் பயிர்கள் ஓரளவு வளர்ந்த பிறகு நடப்பவை. இப்போது விதைக்கத் தொடங்கும் முன்பே களைக்கொல்லியிலிருந்து துவங்குகிறார்கள். உடன் வேதி உரத்தைத் தெளிக்கிறார்கள். வளர வளர பூச்சிக்கொல்லிகளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பிறகு உங்கள் கைகளில் உணவுப்பொருளாக விற்று விடுகிறார்கள்.

டிராக்டர்கள், நடவு எந்திரம், அறுவடை எந்திரம் என்று பயன்படுத்தி மனித உழைப்புக்கு இடமில்லாமல் போன விவசாயத்தில் களையெடுக்க பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் டிரோனுக்கு மாறி விட்டது.

விஷத்தைத் தாய்ப்பாலாக உண்டு, விஷத்தை ஊட்டச்சத்தாகப் போஷித்து, விஷத்தைக் கொண்டு தற்காத்துக் கொண்டு வளர்கின்றன பயிர்கள். நாமும் அந்த விஷத்தை உண்டு அந்த விஷத்தைச் செரித்து விஷத்திலே வாழப் பழகி விட்டோம்.

நோய்கள் வந்தால் மருத்துவமனைகள் இருக்கின்றன. அறுவை சிகிச்சை செய்ய ரோபோட்டுகளோடு மருத்துவர்கள் இருக்கிறார்கள். பிறகென்ன உண்ணும் உணவுப் பொருளில் ரசாயனம் இருந்தால் என்ன? விஷம் இருந்தால் என்ன? என்று நினைப்பவர்கள் உலக மக்கள்தொகையை விட அதிகமாக இருக்கிறார்கள்.

நிலைமை இப்படியே போனால்… பாம்பு, பல்லி என விஷ ஜந்துகளுக்கு இருந்த விஷம் கூடிய விரைவில் மனிதர்களுக்கும் வந்து மனிதர்களும் விஷ ஜந்துகளின் பட்டியலில் சேர்ந்து கொள்ள வேண்டியதுதான். பிறகு சீறி வரும் பாம்பும் சிரித்து வரும் மனிதரும் ஒன்றுதான். இப்போதே சிலபல மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...