6 Mar 2023

ராக்கெட் எந்திரங்களாகி விட்ட சமையல் எரிவாயு உருளைகள்

ராக்கெட் எந்திரங்களாகி விட்ட சமையல் எரிவாயு உருளைகள்

நான் சிறுவயதாக இருந்த போது 1990களின் வாக்கில், பெண்மணிகள் சமையல் எரிவாயு அடுப்பைப் (கேஸ் அடுப்பு) பயன்படுத்த அவ்வளவு பயந்தார்கள். திடீரென தீப்பற்றி விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. சமையல் எரிவாயு அடுப்பு வெடிக்குமாமே என்று பேசிக் கொள்வார்கள். அந்தப் பயம் போன இடம் தெரியவில்லை. இப்போது சமையல் எரிவாயு அடுப்பைக் குறித்த பயம் யாருக்கும் இல்லை. சமையல் எரிவாயு உருளையின் (எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர்) விலையைப் பார்த்து பயப்பட வேண்டியதாக இருக்கிறது.

அதன் விலையேற்றத்தை 2018 இல் தொடங்கி தற்போதைய 2023 வரைப் பார்ப்போமே. 2018 ஆம் ஆண்டில் அறுநூறு சொச்சம் விலைக்கு இருந்த எரிவாயு உருளையின் விலை இப்போது ஆயிரத்து இருநூறு சொச்சத்துக்கு வந்து விட்டது. கிட்டதட்ட ஒரு மடங்கு விலை இருமடங்காக விலையேறி விட்டது. முன்பை விட 100 சதவீதம் விலை அதிகம்.

15 சதவீத கூட்டு வட்டியில் வளரும் தொகைதான் ஐந்து ஆண்டுகளில் இப்படி இரட்டிப்பாகும். சரியாகச் சொல்வதென்றால் சமையல் எரிவாயு உருளையின் விலை வருடத்துக்கு 15 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. இன்னும் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியே போனால் அந்த விலை உயர்வு 15 சதவீதத்தையும் தாண்டிப் போகலாம்.

இப்படி விலையேறிக் கொண்டிருக்கும் சமையல் எரிவாயு உருளைகளை நாம் ஏன் ராக்கெட் கிரையோஜெனிக் எந்திரங்களாகப் பயன்படுத்தக் கூடாது? கிரையோஜெனிக் எந்திரங்களை மிஞ்சும் அளவுக்கு அதன் விலையேற்றம் இருக்கும் போது இனி நாம் இந்திய சமையல் எரிவாயு உருளைகளை இந்திய சமையல் உலகின் விலையேற்ற கிரையோஜெனிக் எந்திரங்கள் என்று கூட அழைக்கலாம்.

சமையல் எரிவாயு உருளையின் விலையைப் பொருத்த வரையில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஐம்பது ரூபாய் வரை விலையேற்றப்படுகிறது. அதுவும் மாதத்திற்கு மாதம் என்று சீரான இடைவெளி கூட இல்லாமல்.

விலை ஏறிக் கொண்டிருக்கும் ஒரு பொருளை விலை குறைத்து விற்க முடியாது என்பது வியாபார தர்மம். ஆனால் விலை குறைந்து கொண்டிருக்கும் ஒரு பொருளை விலை ஏற்றி விற்றுக் கொண்டிருப்பது என்ன வகை தர்மமோ?

 உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு செல்கிறது. சமையல் எரிவாயுவுக்கு அடிப்படை கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கும் போது சமையல் எரிவாயு உருளையின் விலைகுறைந்த கொண்டு போக வேண்டும். இந்தியாவில் ஏன் அது விலை அதிகமாகிக் கொண்டு போகிறது?

என்ன விலை வைத்தாலும் சாமான்ய மக்கள் அதை வாங்கிப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்பதால் அப்படி விலையேறிக் கொண்டு போகிறதோ என்னவோ? வேறு வகை தேவைகளைத் தள்ளிப் போடலாம், உண்பதைத் தள்ளிப் போட முடியாது என்ற அடிப்படை நெருக்கடியைப் பின்புலமாகக் கொண்டு விலையேற்றப்படுகிறதோ என்னவோ?

விலை உயர்வின் பக்கவாட்டு அதிர்வுகள் மோசமான பின் விளைவுகளை உருவாக்கக் கூடியவை. சமையஸ் எரிவாயு உருளையின் தொடர்ச்சியான விலை உயர்வு குடும்பச் செலவை உயர்த்தும். அதை வாங்கிப் பயன்படுத்தும் உணவகங்களில் உணவுப் பொருட்களில் விலை உயர்வை உண்டு பண்ணும். காலை, மாலை சிற்றுண்டி, மதிய உணவு, இனிப்பு கார வகைகள், இன்ன பிற உண்பண்டங்கள் என்று அனைத்தையும் விலை ஏற்றச் செய்யும்.

மிக முக்கிய அதிர்வாகச் சாமானிய மனிதர்கள் பசி போக்கக் குடிக்கும் தேநீரையும் விலை உயர்த்தும். தொடர்ந்தும் கடினமாகவும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒரு வேளை உணவில் சிக்கனம் பார்க்கலாம், ஒரு கோப்பைத் தேநீரிலா சிக்கனம் பார்க்க முடியும்? சமையல் எரிவாயு உருளையின் ஒவ்வொரு முறை விலையேற்றமும் இப்படி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதத்தில் விலையை உயர்த்திக் கொண்டு போகும். முடிவில் சில்லரை வர்த்தகப் பொருட்களின் விலை உயர்விலும் சாமானிய நுகர்வுப் பொருட்களின் விலை வீக்கத்திலும் போய் முடியும். முடிவாக இத்தகைய அதிர்வுகள் சாமானிய மக்களின் வயிற்றில் மரண அடியைக் கொடுக்கும்.

சில நேரங்களில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளின் விலையை ஏற்ற யோசித்துக் கொண்டு சமையல் எரிவாயு உருளையின் விலையை ஏற்றலாம். அல்லது சமையல் எரிவாயு உருளையின் விலையை ஏற்ற யோசித்துக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை ஏற்றலாம். எங்கே எப்படி ஏற்றினாலும் அந்த அடி சாமனியர்களின் வயிற்றோடு தலையிலும் விழுவது வாடிக்கையாகி விட்டது.

தற்போது இந்தியாவில் ஆள்கூலி அதிகமாகிக் கொண்டுப் போவதாக அதிகம் பேசப்படுகிறது. ஆள்கூலி உயர்வுக்கு கச்சா எண்ணெய் பொருள்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை முக்கிய காரணியாக இருக்கிறது. எல்லாம் விலை ஏறும் போது வாழ்வாதாரத்திற்கான கூலி உயர்வின்றி வாழ முடியாது.

கச்சா எண்ணெய் பொருட்களில் விலையேற்றும் போது கரிசனத்தோடு அதை அணுகிப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். கரிசனமின்றி முடிவெடுக்கும் போது அது சாமனியர்களை வாட்டி வதைக்கிறது.

சாமனியர்கள்தானே, அவர்களை வாட்டி வதைத்தால் என்னவாகி விடப் போகிறது என நினைத்து விடக் கூடாது. சாமானியர்களின் பலத்தில்தான் இந்தியா வலுவாக நின்று கொண்டிருக்கிறது. சாமானியர்களை வலுவிழக்கச் செய்து தன்னுடைய வலுவை இந்தியா குறைத்துக் கொள்ளக் கூடாது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...