11 May 2021

ஒரு செயலராய்ச்சி கருத்தரங்கம்

ஒரு செயலராய்ச்சி கருத்தரங்கம்

            பேராசிரியர் பெருவிழியம்மை சொன்ன கருத்துகளில் எனக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. முதன்மையாக அவர் சொன்னார் பிள்ளைகளுக்குக் கேள்விக் கேட்கும் திறன் குறைந்து விட்டது என்று. இதை எந்த விதத்தில் ஏற்றுக் கொள்வது? உண்மையில் பிள்ளைகள் நிறைய கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்குத்தான் பதில் சொல்லும் திறன் குறைந்து விட்டது.

            பேரா. பெருவிழியம்மை கேள்விக் கேட்கும் திறனைக் காட்சி ஊடகங்கள் மூலம் அதிகம் செய்ய முடியும் என்ற ஒரு கருதுகோளை முன் வைத்து தன் ஆய்வைத் தொடர்ந்திருப்பதாகச் சொன்னார். இது ஒரு வகை கற்பனை ஊகமாகவும் இருக்கலாம். காட்சி ஊடகங்கள் அதிகமாகிப் போன பின் பிள்ளைகளின் பேசும் திறன் குறைந்துப் போய் விட்டது. அவர்கள் எந்நேரமும் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், கணிப்பொறியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அலைபேசி செயலிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் பேச நெருங்கினால் எரிச்சல் படுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜந்து ஒன்றைப் பார்ப்பதைப் போல அப்போது பேச விழைவோரை மிக விநோதமாகப் பார்க்கிறார்கள்.

            கள நிலவரம் தெரியாமல் அதிக ஆய்வுகள் செய்வதில் உலகளவில் தமிழகம் முதலிடம் பெறும் என்று நினைக்கிறேன். யார் ஆய்வு செய்யலாம் என்று பார்த்தால் ஆய்வு குறித்து எதுவும் தெரியாதவர்கள் ஆய்வு செய்யலாம் என்ற நிலைமையும் அநேகமாக இங்குதான் மிக அதிக அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக இந்த ஆய்வாளர்கள் ஆய்வுத் தலைப்புக்கும் அது குறித்த கருத்துருக்களுக்கும் பொருத்தமில்லாமல் பேசுகிறார்கள். பேச ஆரம்பித்து எதை விளக்கினாலும் அது ஆய்வுக்குரிய விளக்கம் என்று நினைத்து மிக கம்பீரமாக வேறு பேசுகிறார்கள். ஆய்வு செய்பவர்களுக்கு எதற்கு அத்தகைய உணர்ச்சிகரமான பேச்சு என்று பல நேரங்களில் நினைப்பதுண்டு. பேச்சாளர்களாக இருக்க வேண்டிய பலர் ஆய்வாளர்களாக இருக்கும் நிலையின் விளைவு இது.

            இருபது ஆண்டுகளுக்கு முன்பாக எதை ஆய்வு செய்து பேசினார்களோ அதையே இப்போதும் ஆய்வு செய்து பேசும் நிலைமையும் இங்கு இருக்கிறது. ஓர் ஆய்வாளர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு ஆய்வு செய்தால் போதுமானது. அந்த ஆய்வை அப்படியே வைத்துக் கொண்டு வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டால் போதுமானது, புதிய ஆய்வு உண்டாகி விடுகிறது. சான்றாக உபயோகப்படுகிறது என்ற வார்த்தையைப் பயன்படுகிறது என்று மாற்றி விட்டால் புதியதோர் ஆய்வு தயார். பயன்படுகிறது என்ற வார்த்தையை துணை நிற்கிறது என்று மாற்றி விட்டால் மற்றுமோர் ஆய்வு தயார். இப்படிப்பட்ட ஆய்வு கருத்தரங்களுக்கு அழைப்புக் கொடுத்து விட்டு கேள்வி கேட்கவில்லை என்று கோபித்துக் கொள்கிறார்கள். கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருப்பதா என்ன? என்னுடைய அழுத்தமான ஒரே கேள்வி, இது போன்று அழைத்துக் கொடுமைப்படுத்துவதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று சிறுநீரை அடக்கிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது தெரியுமா?

உண்மையான கள நிலவரத்தை ஆராய விழையும் ஒருவருக்குத் தற்போதுள்ள நிலையில் ஏற்ற ஆய்வுத்தலைப்பு என்னவென்றால் நம்முடைய பொதுக் கழிவறைகள் ஏன் தூய்மையற்று இருக்கின்றன என்பதுதாக இருக்கலாம்.

*****

10 May 2021

ஏன் கடவுள் நம்பிக்கை வரவில்லை?

ஏன் கடவுள் நம்பிக்கை வரவில்லை?

            எனக்குக் கடவுள் மீது எப்போதும் பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. அது நாளாக நாளாக மற்றும் இயற்கையாக அறிவு வளர வளர கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டது. ஈ.வெ.ராமசாமியைப் பற்றி அறிந்த பிறகு சாமி மீதான நம்பிக்கை சுத்தமாகப் போய் விட்டது. திருமணம் ஆகும் வரை கடவுள் இல்லை என்றால் இல்லைதான். இப்போதும் அப்படித்தான் என்றாலும் மனைவி வந்த பிறகு கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்க முடியுமா என்ன?

திருமணம் ஆனதிலிருந்து நெடுநாள் வரை மனைவியைக் கோயிலுக்கு அனுப்பி விட்டு வெளியில் நின்று பிச்சைக்காரர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அநேகமாகக் கடவுளுக்கு அருகில் அதிக நேரம் இருப்பவர்கள் அவர்கள்தான். பூசாரிகள் கூட பூசை முடிந்த பிறகு வீட்டுக்கு நடையைக் கட்டி விடுவார்கள். பிச்சைக்காரர்களுக்கு கோயிலே வீடு. ஆனால் கடவுளின் பார்வை படாத பாவிகளில் முதல் வரிசை கொடுத்தால் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.

            “கோயிலுக்கு உள்ளே வருவதால் கடவுள் நம்பிக்கை வந்து விடும் என்றால் உள்ளே வர வேண்டாம்!” என்று ஒரு நாள் மனைவி சொன்னதைக் கேட்டு கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தவன்தான் நான். பின் கோயில் மேல் கோயிலாக அலைய வேண்டியதாகி விட்டது. மேலே சொன்னதை வைத்தே மனைவி பல கோயில்களுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டாள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால் என் துரதிர்ஷ்டம் பாருங்கள் கோயிலுக்கு உள்ளே சென்றும் கடவுள் மேல் நம்பிக்கை வராமல் போய் விட்டது.

            கோயிலுக்குள் நுழையும் போது எனக்கும் மனைவிக்கும் நடக்கும் உரையாடலில் தானாகவே ஒரு சுவாரசியம் வந்து சேர்ந்து கொள்ளும். சான்றுக்கு ஒன்று,

            “பார்த்தீங்களா? கடவுள் நம்பிக்கெ இல்லாத ஒங்களையும் கடவுள் காக்க வைச்சுட்டார்!” என்பாள் மனைவி.

            “கடவுள் நம்பிக்கெ உள்ள உன்னையும்தான் கடவுள் காக்க வைச்சுட்டார்!” என்பேன் நான்.

            “ஐம்பது ரூவா கொடுத்தா சிறப்பு தரிசனத்தில காத்திருக்காம சீக்கிரமே பாத்துடலாம்!” என்பாள்.

            “காசு கொடுத்தா சீக்கிரமாவும் காசு கொடுக்காட்டிக் காக்க வைச்சும் தரிசனம் கொடுப்பவர் பேர்தான் கடவுளா?” என்பேன்.

            “அதெல்லாம் மனுஷன் பண்ற வேலை!” என்பாள்.

            “அதாம்ப்பா நானும் சொல்றேன். கடவுள்ங்றது மனுஷன் பண்ற வேலை!” என்பேன்.

            “இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கக் கூடாது. கோயிலுக்கு வந்ததுக்கு உருப்படியா கடவுள்கிட்டெ எதையாவது வேண்டிக்குங்க!” என்பாள்.

            “சரிப்பா!” என்று வேண்டிக் கொள்வேன்.

            வேண்டுதல் முடிந்ததும், “என்னத்தெ வேண்டிக்கிட்டீங்க?” என்பாள்.

            “கடவுளே! எனக்கு எப்படியாவது கடவுள் நம்பிக்கையைக் கொடுன்னுத்தாம் ஒவ்வொரு முறையும் வேண்டிக்கிறேன். ஆனா வர மாட்டேங்குது. என்ன பண்றது? கடவுள் அந்த வரத்தை மட்டும் தர மாட்டேன்கிறார்!” என்பேன்.

            “வேண்டுதலை வெளியில சொன்னா எப்படிப் பலிக்கும்? அதாங் பலிக்க மாட்டேங்குது!” என்று சிரித்து விடுவாள்.

எனக்கும் சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. “உங்கள் கடவுள் உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு சமத்காரம் இருக்கிறது!” என்று சிரித்துக் கொண்டே சொல்வதுண்டு.

*****

9 May 2021

அலைபேசியில் அலையும் மனித பிம்பங்கள்

அலைபேசியில் அலையும் மனித பிம்பங்கள்

            பொத்தான் கைபேசி எனப்படும் கீபேட் செல்போனிலிருந்து தொடுதிரை கைபேசி எனப்படும் டச் செல்போனுக்கு மாறும் காலத்தில் பலருக்கும் பலவித தயக்கம் இருந்தது. பொத்தான் கைபேசியைப் போல தொடுதிரை கைபேசி திறன்மிகுந்ததாக இருக்காது என்பது தயக்கத்துக்கு முதன்மையான காரணம். வெகு சீக்கிரமே தொடுதிரை கைபேசியின் தொடுதிறன் செயலிழந்து விடும் என்ற அச்சம் பலருக்கும் இருந்தது. அந்த அச்சம் எவ்வளவு நியாயமானது என்பதை அப்போது நான் செல்கான் நிறுவன கைபேசியை வாங்கி அனுபவப்பட்டேன். இப்போது நிலைமை எவ்வளவு மாறி விட்டது. பொத்தான் கைபேசியை வைத்திருப்போரை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது.

            இப்போதும் பொத்தான் கைபேசிக்கு இருக்கும் மதிப்பு ஒன்றும் அப்படி குறைந்து விடவில்லை. நான்காயிரம், ஐயாயிரத்துக்குக் கிடைக்கும் தொடுதிரை கைபேசிக்கு இணையாக பொத்தான் கைபேசிகளும் கிடைக்கின்றன. அடிக்கடி மின்கலனில் மின்சாரம் குறைந்து போகும் பிரச்சனை பொத்தான் கைபேசிகளில் இல்லை. ஒரு முறை மின்சாரம் ஏற்றிக் கொண்டால் ஒரு வார காலம் வரை தாக்குப்பிடிக்கிறது. தொடுதிரை கைபேசியை நாளுக்கு நாள் மின்சாரம் ஏற்றி உயிர்ப்பிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒருநாள் அளவுக்குத் தாக்குப்பிடிக்காத அளவுக்கு தொடுதிரை கைபேசியைப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதற்காகவே பலர் கையோடு தொடுதிரை கைபேசி அளவுக்கு மின்கல வங்கி எனப்படும் பவர் பேங்கோடு அலைவதைப் பார்க்க முடிகிறது.

            அழைப்பும் குறுஞ்செய்தியும் போதுமென்றால் பொத்தான் கைபேசியே போதும். கையடக்கமாகக் கையில் பையில் பதுங்கிக் கொள்வதோடு அடிக்கடி மின்சாரம் ஏற்று என்று எந்தத் தொந்தரவையும் செய்யாது. இன்னொரு மூளையாக, தகவல் பெட்டகமாக, தனி உதவியாளராக கைபேசியை மாற்றிக் கொண்டவர்களுக்குத் தொடுதிரை கைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது போன்ற பலரும் பயணங்களில் தாக்குப் பிடிக்கும் அலைபேசியே அலைபேசியாக இருப்பதாகவும் மற்றவையெல்லாம் கொலைபேசியாக இருப்பதாகவும் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. தொடர்வண்டிப் பயணமோ, பேருந்து பயணமோ முதலில் மின்சாரம் ஏற்றும் பொத்தானைத் தேடி அவர்கள் சதா நேரமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அநேக நேரங்களில் அவர்களால் மூச்சு விடாமல் கூட இருந்து விட முடியும் போலிருக்கிறது. ஆனால் அலைபேசியில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாமல் போய் விடுகிறது. தங்கள் உயிரைக் கொடுத்தாலாவது அலைபேசிக்கு மின்சாரம் ஏற்றினால்தான் அவர்களுக்குப் போன நிம்மதி திரும்ப வந்ததைப் போல இருக்கிறது. இது போன்ற நிலையை அடைந்து விட்டவர்கள் குடும்பத்தோடு இருக்கும் நேரத்தை விடவும், நண்பர்கள் மற்றும் சுற்றத்தோடு இருக்கும் நேரத்தை விடவும், செல்லப் பிராணிகளோடு இருக்கும் நேரத்தை விடவும் அலைபேசியோடு இருக்கும் நேரம் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட அலைபேசியில் அலையும் மனித பிம்பங்களாக அவர்கள் மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

            இப்போது இதைப் படிக்கும் உங்களுக்கு அலைபேசியில் அலையும் மனித பிம்பமாக நான் இருக்கிறேனா, இல்லையா என்ற ஐயம் எழுந்தால் அதை அறிந்த கொள்வதற்கு ஓர் எளிய சோதனை இருக்கிறது. ஒரு பத்து நிமிடம் அலைபேசி இல்லாமல் உங்களால் பதற்றமில்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். இருக்க முடிகிறது என்றால் ஓர் அரை மணி நேரத்துக்கு அலைபேசி இல்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். அடுத்து ஒரு மணி நேரத்துக்கு என ஆரம்பித்து ஒரு நாள் வரை அலைபேசி இல்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். ஒரு நாள் வரை உங்களால் அலைபேசி இல்லாமல் இயல்பாக இருக்க முடிகிறது என்றால் நீங்கள் அலைபேசியில் அலையும் மனித பிம்பம் இல்லை எனலாம். பத்து நிமிடத்துக்குக் கூட அலைபேசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் அலைபேசியில் அலையும் மனித பிம்பம் மட்டுமல்ல, அலைபேசியில் உறைந்து விட்ட மனித பிம்பம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

            அலைபேசியில் அலையும் மனித பிம்பங்களாக மாறி விட்டவர்கள் அதிலிருந்து மீள நினைத்தால் உடனடியாக தொடுதிரை கைபேசியிலிருந்து பொத்தான் கைபேசிக்கு மாறிக் கொள்ளலாம். பொத்தான் கைபேசியில் இருக்கும் நன்மை அதுதான். இந்த நன்மையைக் கருத்தில் கொண்டு பொத்தான் கைபேசியிலிருந்து தொடுதிரை கைபேசிக்கு ஒட்டுமொத்த உலகமும் திடீரென்று மாறியதைப் போல தொடுதிரை கைபேசியிலிருந்து பொத்தான் கைபேசிக்கும் உலகம் ஒருநாள் திடீரென்று மாறும் என்று நினைக்கிறேன்.

            தொடுதிரை கைபேசியை வைத்துக் கொண்டே பிம்ப மனிதர்களாக மாறுவதிலிருந்து மீட்சி கிட்டாதா என்றால் அதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தன்னைப் பயன்படுத்தும் மனிதர் பிம்ப மனிதராக மாறி விட்டதை அறிந்து அலைபேசியே தானாக செயலிழந்து விடும் ஒரு செயலியைக் (ஆப்) கண்டுபிடித்து வெளியிடலாம். அதில் இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் மனிதர்கள் அந்தச் செயலியை விரும்பிப் பதிவிறக்கம் செய்வார்களா என்பதுதான்.

*****

8 May 2021

தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்து

தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்து

            கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் மேற்கே மறையும் சூரியன் கிழக்கே மறைந்தாலும் தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்து மாறாது. காலந்தோறும் தமிழர்கள் தங்களது பொழுதுபோக்குப் பித்தை இடைவிடாது தொடர்ந்து கொண்டு வருகின்றனர். இனியும் யுகங்கள் மாறினாலும் தொடர்ந்து கொண்டு வருவர்.

            பரிபாடலின் வையைப் பாடல்களில் தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்தைக் காணலாம். சிலப்பதிகார இந்திரவிழாவிலும் அதைக் காணலாம். நாடகக்கலை தோன்றிய வரலாற்றில், சிற்றிலக்கியங்களின் சிருங்கார ரசங்களில் என்று வரலாற்று ரீதியிலும் இடைவெளியின்றித் தமிழர்களின் பொழுதுபோக்கு நீள்வதை அறியலாம்.

            திரைக்கலையின் தோற்றத்திற்குப் பிறகு தமிழர்களின் பொழுதுபோக்கு பித்து அதன் உச்சத்தை எட்டி திரைநாயகர்களைத் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்குப் போனது சமீபத்திய வரலாறு.

            தமிழர்களின் கலைத்தன்மையை நான் பொழுதுபோக்குப் பித்தாகத் திரித்துக் கூறுவாக நீங்கள் நினைக்கலாம். இதில் எவ்வித திரிபும் இல்லை என்பதை மிக எளிதாக நிரூபிக்கலாம். சான்றுக்கு ஒன்று சொல்லலாம். தமிழ்நாட்டில் எந்த திரைநட்சத்திரமும் நிம்மதியாகப் போய் ஓட்டளிக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்து விட முடியாது. கட்டம் கூட்டிக் கூட்டத்தைக் கூட்டி அதைத் திருவிழாவாக்கி விடுவார்கள். தமிழகத்தில் நிலவும் இந்தப் பித்துத் தன்மை கேரளத்தில் கிடையாது எனும் போது தமிழகத்தில் நிலவுவது கலைத்தன்மையா, பித்துக்குளித் தன்மையா என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளலாம்.

            தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்தை வைத்துக் கல்லா கட்டும் வணிகமாகத் தமிழகத் திரைத்துறை இருக்கிறது என்றால் அதில் என்ன மிகை இருக்கிறது என்பதையும் தமிழர்கள்தான் சிந்தித்து விடை கூற வேண்டும். ஏனென்றால் தமிழகத் திரைத்துறை தமிழர்களின் பித்துக்குளித்தனம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதைச் சரியாகத் தெரிந்து வைத்துக் கொண்டு சாமிப் படங்களாகவோ, பேய்ப் படங்களாகவோ, நாயக பிம்பப் படங்களையோ, அபத்த ஆபாச படங்களாகவோ எடுத்துத் தள்ளும்.

            சமூக அக்கறையோடு எடுக்கப்படும் திரைப்படங்களில் எதற்கு இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச குத்துப்பாடல்கள், நாயக அதிபிம்ப கட்டுமானம் என்று கேட்டுப் பாருங்கள். தமிழர்களின் பித்துக்குளித்தனம் குறித்த விடை மிக எளிதாகக் கிடைத்து விடும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதாகப் பதிலைக் கொடுப்பார்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் என்றால் திரைத்துறையின் சமூக அக்கறையை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

            கோடி கோடியாகக் கொட்டி வேலைவாய்ப்பை உருவாக்க எத்தனையோ நல்ல துறைகள் இருந்தாலும் திரைத்துறையில் கொட்டப்படும் கோடானு கோடிகள் அதிகம். கேட்டால் அதையும் தொழிற்துறை என்பார்கள். மதுபான தொழிற்சாலைகளைக் கோடிகளைக் கொட்டி நடத்துவதும் தொழிற்துறை அல்லாமல் வேறென்ன? அதனால் விளையும் நன்மை என்னவென்பதைச் சொல்லத் தேவையில்லை. போதை மயக்கத்தை விரும்புவோர்கள் இருக்கும் வரை மதுபான விற்பனையில் கல்லா கட்டுபவர்களைத் தடுக்க முடியாது. அதுபோலத்தான் பொழுதுபோக்குப் பித்துக்குளித் தனத்தில் இருப்போர்கள் உள்ளவரை திரையில் கொட்டப்படும் கோடிகளையும் தடுக்க முடியாது. பித்துக்குளிகள் திருந்தாத வரை கலைத்தன்மை பித்துக்குளித் தனமாக திரிவதையும் தடுக்க முடியாது.

*****

7 May 2021

ஐயோ Tamil பாவம்!

ஐயோ Tamil பாவம்!

            அலைபேசிக்குள் கணினி வரும் என்று சொல்லியிருந்தால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். இன்று அலைபேசிக்குள் அலாவுதீன் அற்புத விளக்கே வந்து விட்டது. தொட்டால் போதும் எல்லாம் திறந்து கொள்கிறது. இவ்வகை அலைபேசிகளைத் திறன்பேசி என்கிறார்கள்.

ஆங்கிலத்தில் Smart Phone என்று சொன்னால் தமிழில் திறன்பேசி என்று சொல்லப்படுவதற்கான பொருள் புரியும் என்று நினைக்கிறேன். தமிழில் பெரும்பான்மையான சொற்களுக்கான பொருளை இன்று ஆங்கிலத்தின் துணை கொண்டுதான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.

            பேருந்து என்பதற்கான பொருள் Bus

            தேநீர் என்பதற்கான பொருள் tea

            குளம்பி என்பதற்கான பொருள் Coffee

            சோறு என்பதற்கான பொருள் Rice

            அம்மா என்பதற்கான பொருள் Mummy

தமிழ் அகராதி போடுபவர்கள் இப்படி ஒரு முயற்சியை Tryக்கலாம். Futureகாலத்தில் அநேகமாக இது போன்ற அகராதிகள் வருவதற்கான Chanceகள் இருக்கின்றன.

            சமீப காலத்தில் தமிழில் பேசி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லி நெருக்கடியான நிலைமையைச் சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. வட்டார வழக்கைப் போல தற்போது ஆங்கிலம் கலந்த தமிழ் மாறி விட்டது.

தூய தமிழில் பேசுபவர்களை அதிசய உலகிலிருந்து தப்பி வந்த புது வகை உயிரினத்தைப் பார்ப்பதைப் போல அதாவது ஏலியனைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள். பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்ததன் பலன் என்று இதனைக் கூறலாம். முதல் வகுப்பிலிருந்தோ அல்லது மழலையர் வகுப்பிலிருந்தோ ஆங்கிலம் தொடங்கியதன் பலன் என்றும் கூறலாம். தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டுங்கெட்டான் பிள்ளைகளாய் இன்றைய பிள்ளைகள் வளர்கிறார்கள்.

இந்தக் காலத்துப் பிள்ளைகள் இதே வகைமையில் போனால் ர-ற, ல-ழ-ள, ன-ண வேறுபாடுகளை ஒன்றிணைத்து விடுவார்கள். மெய்யெழுத்தில் நான்கு குறைந்து விடும்.

எங்கள் காலத்தில் ஒற்றுப்பிழை என்பதை இல்லாமல் அடித்து விட்டோம். எங்கே வல்லெழுத்து மிகும், எங்கே மிகாது என்பதெல்லாம் இல்லாது சமச்சீராக எழுதிக் கொண்டிருக்கிறோம்.

செய்தி அலைவரிசைகளில் எந்த அலைவரிசையை எடுத்துக் கொண்டாலும் கீழே ஓடிக் கொண்டிருக்கும் செய்தியிலோ அல்லது முதன்மைச் செய்திகள் என்று நொடிக்கு நொடி பதற்றத்தை உண்டாக்கும் செய்திகளிலோ ஒரு ஒற்றுப்பிழையையாவது காணலாம்.

எங்கள் காலத்தில் மற்றுமொரு சாதனை என்றால் உச்சரிப்பில் ர-ற, ல-ழ-ள, ன-ண வேறுபாடுகளைக் காணாமல் அடித்து விட்டோம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் அந்த வேறுபாடுகளை எழுத்தில் காணாமல் அடித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். இப்படியே போனால் தமிழ் எழுத்துகளின் தொகையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கும். தமிழ்ச் சொற்களையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கலாம்.

எழுத்து சொல்லைப் பாதிக்கும். சொல் பொருளைப் பாதிக்கும். பொருள் எல்லாவற்றையும் பாதிக்கும். பொருள் என்பதற்கு Money என்ற பொருளும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் பாதிக்கிறது. ஆங்கிலத்தில் படிக்க விழைவதற்கு அது ஒரு காரணம். அதாவது தமிழில் படித்தால் Meaning கிடைக்கும், ஆங்கிலத்தில் படித்தால் Money கிடைக்கும் என்பதாக இந்த உலகம் புரிந்து வைத்திருக்கிறது.

*****

6 May 2021

சொல்வதில் ஏதுமில்லை


மறித்து நிற்றல்

மழை பெய்யட்டும்

புயல் வரட்டும்

வெள்ளம் உண்டாகட்டும்

எனக்கு முன் கணிப்புகளில் விருப்பமில்லை

பெய்யும் மழைக்கு

நடந்து போகப் பாதை வகுத்தோமா

வீசும் புயல்

கடந்து போக நெகிழ்ந்து கொடுத்தோமா

ஓடும் வெள்ளம்

வழிந்தோட தடைகளை எடுத்தோமா

வெறு வழியில்லை

நம் வழியில் குறுக்கிடாது இருக்க

அவைகளின் வழியில்

மறித்து நிற்பதற்கில்லை

*****

சொல்வதில் ஏதுமில்லை

நிச்சயமாகச் சொல்கிறேன்

அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்

அதுவாக வருகிறது

அப்புறம் போகிறது

அதை இறை என்று சொன்னால்

மதவெறியர்கள் ஆவீர்கள்

ஞானம் என்று சொன்னால்

பைத்தியம் பிடித்தவர்கள் ஆவீர்கள்

பிரபஞ்சத்தில் ஒரு பூ ஏன் உதிர்கிறது சருகாகிறது

உங்களால் கண்டுபிடிக்க முடியுமா

ஒரு பூ அதையெல்லாம் யோசித்துக் கொண்டிராது

மலர்கிறது உதிர்கிறது சருகாகிறது

*****

1 May 2021

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

            கணிப்புகள் சூழ்ந்த வாழ்க்கை நம்முடையது. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ ஏதோ ஒன்றைக் கணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கணிப்பின் அடிப்படை கணிதத்திலிருந்து வருகிறது. கணிதத்தின் ஒரு பிரிவான புள்ளியியல் கணிப்புகளைப் பற்றி ஆராய்கிறது. ஊடகக் கணிப்புகள் அனைத்தும் அப்புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டே வெளியாகிறது.

கணிப்பு ஏன் வருகிறதென்றால் அதன் அடிப்படை உளவியலிலிருந்து வருகிறது. மனித மனதின் எதிர்பார்ப்பே கணிப்பின் பிரதானம். கனவுகள் ஒவ்வொன்றும் கணிப்பின் விளைவுகள்தான். எதிர்ப்பார்ப்புகள் இல்லா விட்டால் அங்கே கணிப்புகளுக்கு வேலை இல்லை.

அன்றாட வாழ்வில் சகுனம் பார்ப்பது தொடங்கி சோதிடம் பார்ப்பதில் தொடர்ந்து சாமியாடிகள் வரை மனிதர்கள் போய் நிற்பதற்கான காரணம் கணிப்பது கணித்த படியே நடக்க வேண்டுமே என்ற ஆவல்தான்.

பங்குச்சந்தை, குதிரைப் பந்தயம், சூதாட்டம் என்று பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் ஒத்தையா? ரெட்டையா? போட்டு விளையாடும் விளையாட்டு வரை கணிப்புகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது அபூர்வம். முற்றும் துறந்தோர்க்கும் கடவுளின் காட்சி கிட்டுமா? கிட்டாதா? என்ற கணிப்பு ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

தேர்வு வந்து விட்டால் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமா? என்பதில் தொடங்கி எவ்வளவு மதிப்பெண்கள் வரை வரும் என்று மாணவர்கள் கணிக்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் கணிப்பு மெய்ப்பிக்க வேண்டுமே என்று அதற்கான காரணங்களைத் தேடி அலையத் தொடங்கி விடுகிறார்கள்.

தேர்தல் என்றால் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்று இதழ்களும் அலைவரிசைகளும் கணிக்கும் கணிப்புகளுக்கு அளவு இருக்காது. இது தவிர கட்சிக்காரர்களுக்கு தனி கணிப்பு இருக்கும். அரசியல் நோக்கர்களுக்குத் தனியான கணிப்பு இருக்கும். பொது மக்களுக்கு தனியான கணிப்பு இருக்கும். இந்தக் காலத்துக் குழந்தைகள் உட்பட எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று கணிப்பதில் மிகவும் ஆவலாதிகளாக இருக்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளிவர இருக்கும் நிலையில் நாளைக்குள் முடிவை முன்கூட்டி கணித்து விட முடியாதா என்ற அபரிதமான அசாத்திய முயற்சிகளின் வெளிப்பாட்டை ஒவ்வொருவர் முகத்திலும் காண முடிகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை தங்கள் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்ன ஒரு கட்சிக்காரரை நேற்று பார்த்த போது அவர் என்னைப் பார்த்துக் கேட்டார், “தம்பி! எந்தக் கட்சி வரும்ன்னு நினைக்குறீங்க?” என்று. தேர்தலுக்கு முன்பு வரை தங்கள் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாகச் சொன்ன ஒருவர் என்னைப் பார்த்து இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும்? நான் சிரிக்காமல் இருக்க கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்து கொண்டதும், “எங்கக் கட்சிதான் வரும் தம்பீ! இருந்தாலும் உங்களைப் போலப் பொதுவான ஆளுங்க நெனைப்பு எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு நெனைக்கிறேன். வேறொண்ணும் விசaமில்ல!” என்று சமாளிக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் கணிப்பின் குழப்ப ரேகைகள் தாண்டவமாடுவதைக் கணிக்க முடிந்தது.

யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்குப் பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வுக்கும் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வுக்கும் கணிப்புகள் சரிபாதியாகச் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதே தவிர பிற கட்சிகளான அ.ம.மு.க., நா.த.க., ம.நீ.மை. போன்றவற்றிற்கு அவ்வாய்ப்புகள் இல்லை என்பதைப் பொதுவாக அனைத்து ஊடகங்களும், கணிப்புக் கில்லாடிகளும் கணிக்கின்றனர்.

தேர்தல் கணிப்பைப் பொருத்த வரையில் போட்டி என்பது களத்தில் உள்ளது போலவே தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்குத்தான் என்பதைத் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தையும் ஒப்புக் கொள்ளும். இந்த இடத்தில் குழந்தைகளின் விளையாட்டு வழி கணிப்பது என்றால் ஒத்தையா? ரெட்டையா? முறையில் கணிக்கலாம். இரண்டுக்கும் சம அளவு வாய்ப்புகள் இருக்கின்றன. புள்ளியியல் வழி நோக்கினால் ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால் தலை விழுவதற்கும் பூ விழுவதற்கும் ஐம்பது சதவீத வாய்ப்புகள் இருப்பது போலவே இரு கட்சிகளுக்கும் ஐம்பது சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன.  நிச்சயம் சுண்டி விடப் பட்ட நாணயம் செங்குத்தாக நிற்காது என்றால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை என்றும் கொள்ளலாம்.

அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வின் நுழைவு, முக்கிய கேந்திரங்கள் வரை நிகழ்ந்த சோதனைகள், ஊழலுக்காகச் சிறை சென்ற கட்சித் தலைவர்கள் ஆகிய காரணிகள் அக்கட்சிக்குப் பின்னடைவைத் தரலாம்.

ஆட்சியை இழந்த பத்தாண்டு காலத்தில் தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக தனது பங்கை ஆற்றியுள்ளது. எனினும் அக்கட்சி தனது மிகப் பெரிய தலைமையை கலைஞர் வடிவில் இழந்திருக்கிறது. இதே போன்ற இழப்பு அ.தி.மு.க.வுக்கும் அம்மாவின் இழப்பின் வடிவில் நேர்ந்திருக்கிறது. எனினும் இரு கட்சிகளும் தங்களது அடுத்தடுத்த தலைமை மூலம் அந்த இழப்பைச் சரிகட்ட முயன்றிருக்கின்றன என்பதைத் தேர்தல் பிரச்சாரம் காட்டியிருக்கிறது.

ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இரு கட்சிகளும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தொகை தரும் திட்டத்தை ம.நீ.மைய கமலஹாசனிடமிருந்து உருவி வெளியிட்டிருக்கின்றன. இதன் சாத்தியத்தையும் தாக்கத்தையும் அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகள் மட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்துக் காட்சிகளும் தமிழகத்தின் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

பிரச்சாரத்தில் பொதுவெளிப் பிரச்சாரத்தில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைக் களமாடிக் காட்டியிருக்கின்றன. ஊடக வழியிலான பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளும் எட்டிய நிலை அபரிமிதான வேறு வகைமையிலானது. இரு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரச்சாரத்தில் ஊடகப் பிம்பத்தை நிலைநாட்டும் மிகப் பெரிய பெருநிறுவன மூளைகளின் பின்புலம் இருந்தது. இது கலைஞரும் அம்மாவும் இருந்து உருவாக்கி வளர்த்த பிரச்சார முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. கலைஞரின் தனித்துவமும் அம்மாவின் தனித்துவம் இணைந்த பிரச்சார முறைகளுக்கு மாறாக பெருநிறுவன மூளைகளின் பிரச்சார முறைகளுக்கான தடத்தை இந்தத் தேர்தல் இரு கட்சிகளுக்கும் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

வெளியாகியிருக்கும் பெரும்பாலான ஊடகக் கணிப்புகளை ஒட்டிப் பார்க்கையில் தி.மு.க.(+) 150 க்கும் அதிகமான இடங்களைப் பெறலாம் என்றும் அ.தி.மு.க. (+) 50 க்கும் அதிகமான இடங்களைப் பெறலாம் என்றும் அ.ம.மு.க., நா.த.க., ம.நீ.மை. உள்ளிட்ட கட்சிகள் தலா பத்து அல்லது பத்துக்கும் குறைவான இடங்களைப் பெறலாம் என்ற கணிப்பு நிலவுகிறது.

நான் பெரிதும் நம்பும் எஸ்.கே. பல நேரங்களில் குந்தாங்கூறாகவோ அல்லது மிகச் சரியாகவோ கணிப்புகளைக் கணித்து விடுவதில் வல்லவர். அவரது கணிப்பின்படி தி.மு.க. மொத்தமுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெல்லும் என்கிறார். ஒருவேளை அதில் தொகுதிகள் குறைந்தாலும் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என்கிறார். என்ன நடக்கும் என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன செய்வது? எல்லாவற்றுக்கும் காலம் தரப் போகும் கணிப்புதான் நிரந்தரமானது. ஆக்கப் பொறுத்த பின் ஆறப் பொறுப்பதும் அவசியமாகத்தான் இருக்கிறது!

*****