8 May 2021

தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்து

தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்து

            கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் மேற்கே மறையும் சூரியன் கிழக்கே மறைந்தாலும் தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்து மாறாது. காலந்தோறும் தமிழர்கள் தங்களது பொழுதுபோக்குப் பித்தை இடைவிடாது தொடர்ந்து கொண்டு வருகின்றனர். இனியும் யுகங்கள் மாறினாலும் தொடர்ந்து கொண்டு வருவர்.

            பரிபாடலின் வையைப் பாடல்களில் தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்தைக் காணலாம். சிலப்பதிகார இந்திரவிழாவிலும் அதைக் காணலாம். நாடகக்கலை தோன்றிய வரலாற்றில், சிற்றிலக்கியங்களின் சிருங்கார ரசங்களில் என்று வரலாற்று ரீதியிலும் இடைவெளியின்றித் தமிழர்களின் பொழுதுபோக்கு நீள்வதை அறியலாம்.

            திரைக்கலையின் தோற்றத்திற்குப் பிறகு தமிழர்களின் பொழுதுபோக்கு பித்து அதன் உச்சத்தை எட்டி திரைநாயகர்களைத் தங்களின் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அளவுக்குப் போனது சமீபத்திய வரலாறு.

            தமிழர்களின் கலைத்தன்மையை நான் பொழுதுபோக்குப் பித்தாகத் திரித்துக் கூறுவாக நீங்கள் நினைக்கலாம். இதில் எவ்வித திரிபும் இல்லை என்பதை மிக எளிதாக நிரூபிக்கலாம். சான்றுக்கு ஒன்று சொல்லலாம். தமிழ்நாட்டில் எந்த திரைநட்சத்திரமும் நிம்மதியாகப் போய் ஓட்டளிக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்து விட முடியாது. கட்டம் கூட்டிக் கூட்டத்தைக் கூட்டி அதைத் திருவிழாவாக்கி விடுவார்கள். தமிழகத்தில் நிலவும் இந்தப் பித்துத் தன்மை கேரளத்தில் கிடையாது எனும் போது தமிழகத்தில் நிலவுவது கலைத்தன்மையா, பித்துக்குளித் தன்மையா என்பதை நீங்களே சிந்தித்து முடிவு செய்து கொள்ளலாம்.

            தமிழர்களின் பொழுதுபோக்குப் பித்தை வைத்துக் கல்லா கட்டும் வணிகமாகத் தமிழகத் திரைத்துறை இருக்கிறது என்றால் அதில் என்ன மிகை இருக்கிறது என்பதையும் தமிழர்கள்தான் சிந்தித்து விடை கூற வேண்டும். ஏனென்றால் தமிழகத் திரைத்துறை தமிழர்களின் பித்துக்குளித்தனம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதைச் சரியாகத் தெரிந்து வைத்துக் கொண்டு சாமிப் படங்களாகவோ, பேய்ப் படங்களாகவோ, நாயக பிம்பப் படங்களையோ, அபத்த ஆபாச படங்களாகவோ எடுத்துத் தள்ளும்.

            சமூக அக்கறையோடு எடுக்கப்படும் திரைப்படங்களில் எதற்கு இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச குத்துப்பாடல்கள், நாயக அதிபிம்ப கட்டுமானம் என்று கேட்டுப் பாருங்கள். தமிழர்களின் பித்துக்குளித்தனம் குறித்த விடை மிக எளிதாகக் கிடைத்து விடும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதாகப் பதிலைக் கொடுப்பார்கள் திரைத்துறை சார்ந்தவர்கள் என்றால் திரைத்துறையின் சமூக அக்கறையை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

            கோடி கோடியாகக் கொட்டி வேலைவாய்ப்பை உருவாக்க எத்தனையோ நல்ல துறைகள் இருந்தாலும் திரைத்துறையில் கொட்டப்படும் கோடானு கோடிகள் அதிகம். கேட்டால் அதையும் தொழிற்துறை என்பார்கள். மதுபான தொழிற்சாலைகளைக் கோடிகளைக் கொட்டி நடத்துவதும் தொழிற்துறை அல்லாமல் வேறென்ன? அதனால் விளையும் நன்மை என்னவென்பதைச் சொல்லத் தேவையில்லை. போதை மயக்கத்தை விரும்புவோர்கள் இருக்கும் வரை மதுபான விற்பனையில் கல்லா கட்டுபவர்களைத் தடுக்க முடியாது. அதுபோலத்தான் பொழுதுபோக்குப் பித்துக்குளித் தனத்தில் இருப்போர்கள் உள்ளவரை திரையில் கொட்டப்படும் கோடிகளையும் தடுக்க முடியாது. பித்துக்குளிகள் திருந்தாத வரை கலைத்தன்மை பித்துக்குளித் தனமாக திரிவதையும் தடுக்க முடியாது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...