ஏன்
கடவுள் நம்பிக்கை வரவில்லை?
எனக்குக் கடவுள் மீது எப்போதும் பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை.
அது நாளாக நாளாக மற்றும் இயற்கையாக அறிவு வளர வளர கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது
என்ற முடிவுக்கு வந்து விட்டது. ஈ.வெ.ராமசாமியைப் பற்றி அறிந்த பிறகு சாமி மீதான நம்பிக்கை
சுத்தமாகப் போய் விட்டது. திருமணம் ஆகும் வரை கடவுள் இல்லை என்றால் இல்லைதான். இப்போதும்
அப்படித்தான் என்றாலும் மனைவி வந்த பிறகு கோயிலுக்குச் செல்வதைத் தவிர்க்க முடியுமா
என்ன?
திருமணம்
ஆனதிலிருந்து நெடுநாள் வரை மனைவியைக் கோயிலுக்கு அனுப்பி விட்டு வெளியில் நின்று பிச்சைக்காரர்களை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அநேகமாகக் கடவுளுக்கு அருகில் அதிக நேரம் இருப்பவர்கள்
அவர்கள்தான். பூசாரிகள் கூட பூசை முடிந்த பிறகு வீட்டுக்கு நடையைக் கட்டி விடுவார்கள்.
பிச்சைக்காரர்களுக்கு கோயிலே வீடு. ஆனால் கடவுளின் பார்வை படாத பாவிகளில் முதல் வரிசை
கொடுத்தால் அவர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
“கோயிலுக்கு உள்ளே வருவதால் கடவுள் நம்பிக்கை வந்து விடும் என்றால்
உள்ளே வர வேண்டாம்!” என்று ஒரு நாள் மனைவி சொன்னதைக் கேட்டு கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தவன்தான்
நான். பின் கோயில் மேல் கோயிலாக அலைய வேண்டியதாகி விட்டது. மேலே சொன்னதை வைத்தே மனைவி
பல கோயில்களுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டாள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் என் துரதிர்ஷ்டம் பாருங்கள் கோயிலுக்கு உள்ளே சென்றும் கடவுள் மேல் நம்பிக்கை
வராமல் போய் விட்டது.
கோயிலுக்குள் நுழையும் போது எனக்கும் மனைவிக்கும் நடக்கும் உரையாடலில்
தானாகவே ஒரு சுவாரசியம் வந்து சேர்ந்து கொள்ளும். சான்றுக்கு ஒன்று,
“பார்த்தீங்களா? கடவுள் நம்பிக்கெ இல்லாத ஒங்களையும் கடவுள்
காக்க வைச்சுட்டார்!” என்பாள் மனைவி.
“கடவுள் நம்பிக்கெ உள்ள உன்னையும்தான் கடவுள் காக்க வைச்சுட்டார்!”
என்பேன் நான்.
“ஐம்பது ரூவா கொடுத்தா சிறப்பு தரிசனத்தில காத்திருக்காம சீக்கிரமே
பாத்துடலாம்!” என்பாள்.
“காசு கொடுத்தா சீக்கிரமாவும் காசு கொடுக்காட்டிக் காக்க வைச்சும்
தரிசனம் கொடுப்பவர் பேர்தான் கடவுளா?” என்பேன்.
“அதெல்லாம் மனுஷன் பண்ற வேலை!” என்பாள்.
“அதாம்ப்பா நானும் சொல்றேன். கடவுள்ங்றது மனுஷன் பண்ற வேலை!”
என்பேன்.
“இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கக் கூடாது. கோயிலுக்கு வந்ததுக்கு
உருப்படியா கடவுள்கிட்டெ எதையாவது வேண்டிக்குங்க!” என்பாள்.
“சரிப்பா!” என்று வேண்டிக் கொள்வேன்.
வேண்டுதல் முடிந்ததும், “என்னத்தெ வேண்டிக்கிட்டீங்க?” என்பாள்.
“கடவுளே! எனக்கு எப்படியாவது கடவுள் நம்பிக்கையைக் கொடுன்னுத்தாம்
ஒவ்வொரு முறையும் வேண்டிக்கிறேன். ஆனா வர மாட்டேங்குது. என்ன பண்றது? கடவுள் அந்த வரத்தை
மட்டும் தர மாட்டேன்கிறார்!” என்பேன்.
“வேண்டுதலை வெளியில சொன்னா எப்படிப் பலிக்கும்? அதாங் பலிக்க
மாட்டேங்குது!” என்று சிரித்து விடுவாள்.
எனக்கும்
சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்காது. “உங்கள் கடவுள் உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு
சமத்காரம் இருக்கிறது!” என்று சிரித்துக் கொண்டே சொல்வதுண்டு.
*****
No comments:
Post a Comment