ஐயோ Tamil பாவம்!
அலைபேசிக்குள்
கணினி வரும் என்று சொல்லியிருந்தால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் நம்பியிருக்க
மாட்டார்கள். இன்று அலைபேசிக்குள் அலாவுதீன் அற்புத விளக்கே வந்து விட்டது. தொட்டால்
போதும் எல்லாம் திறந்து கொள்கிறது. இவ்வகை அலைபேசிகளைத் திறன்பேசி என்கிறார்கள்.
ஆங்கிலத்தில் Smart Phone என்று சொன்னால் தமிழில் திறன்பேசி
என்று சொல்லப்படுவதற்கான பொருள் புரியும் என்று நினைக்கிறேன். தமிழில் பெரும்பான்மையான
சொற்களுக்கான பொருளை இன்று ஆங்கிலத்தின் துணை கொண்டுதான் விளக்க வேண்டியதாக இருக்கிறது.
பேருந்து
என்பதற்கான பொருள் Bus
தேநீர் என்பதற்கான
பொருள் tea
குளம்பி
என்பதற்கான பொருள் Coffee
சோறு என்பதற்கான
பொருள் Rice
அம்மா என்பதற்கான
பொருள் Mummy
தமிழ் அகராதி போடுபவர்கள் இப்படி ஒரு முயற்சியை Tryக்கலாம்.
Futureகாலத்தில் அநேகமாக இது போன்ற அகராதிகள் வருவதற்கான Chanceகள் இருக்கின்றன.
சமீப காலத்தில்
தமிழில் பேசி அதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லி நெருக்கடியான நிலைமையைச் சமாளிக்க
வேண்டியதாக இருக்கிறது. வட்டார வழக்கைப் போல தற்போது ஆங்கிலம் கலந்த தமிழ் மாறி விட்டது.
தூய தமிழில் பேசுபவர்களை அதிசய உலகிலிருந்து தப்பி வந்த புது
வகை உயிரினத்தைப் பார்ப்பதைப் போல அதாவது ஏலியனைப் பார்ப்பதைப் போல பார்க்கிறார்கள்.
பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்ததன் பலன் என்று இதனைக் கூறலாம். முதல் வகுப்பிலிருந்தோ
அல்லது மழலையர் வகுப்பிலிருந்தோ ஆங்கிலம் தொடங்கியதன் பலன் என்றும் கூறலாம். தமிழும்
தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டுங்கெட்டான் பிள்ளைகளாய் இன்றைய பிள்ளைகள் வளர்கிறார்கள்.
இந்தக் காலத்துப் பிள்ளைகள் இதே வகைமையில் போனால் ர-ற, ல-ழ-ள,
ன-ண வேறுபாடுகளை ஒன்றிணைத்து விடுவார்கள். மெய்யெழுத்தில் நான்கு குறைந்து விடும்.
எங்கள் காலத்தில் ஒற்றுப்பிழை என்பதை இல்லாமல் அடித்து விட்டோம்.
எங்கே வல்லெழுத்து மிகும், எங்கே மிகாது என்பதெல்லாம் இல்லாது சமச்சீராக எழுதிக் கொண்டிருக்கிறோம்.
செய்தி அலைவரிசைகளில் எந்த அலைவரிசையை எடுத்துக் கொண்டாலும்
கீழே ஓடிக் கொண்டிருக்கும் செய்தியிலோ அல்லது முதன்மைச் செய்திகள் என்று நொடிக்கு நொடி
பதற்றத்தை உண்டாக்கும் செய்திகளிலோ ஒரு ஒற்றுப்பிழையையாவது காணலாம்.
எங்கள் காலத்தில் மற்றுமொரு சாதனை என்றால் உச்சரிப்பில் ர-ற,
ல-ழ-ள, ன-ண வேறுபாடுகளைக் காணாமல் அடித்து விட்டோம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் அந்த
வேறுபாடுகளை எழுத்தில் காணாமல் அடித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். இப்படியே போனால்
தமிழ் எழுத்துகளின் தொகையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கும். தமிழ்ச் சொற்களையும்
மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கலாம்.
எழுத்து சொல்லைப் பாதிக்கும். சொல் பொருளைப் பாதிக்கும். பொருள்
எல்லாவற்றையும் பாதிக்கும். பொருள் என்பதற்கு Money என்ற பொருளும் இருக்கிறது. அதுதான்
எல்லாவற்றையும் பாதிக்கிறது. ஆங்கிலத்தில் படிக்க விழைவதற்கு அது ஒரு காரணம். அதாவது
தமிழில் படித்தால் Meaning கிடைக்கும், ஆங்கிலத்தில் படித்தால் Money கிடைக்கும் என்பதாக
இந்த உலகம் புரிந்து வைத்திருக்கிறது.
*****
No comments:
Post a Comment