1 May 2021

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

            கணிப்புகள் சூழ்ந்த வாழ்க்கை நம்முடையது. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ ஏதோ ஒன்றைக் கணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கணிப்பின் அடிப்படை கணிதத்திலிருந்து வருகிறது. கணிதத்தின் ஒரு பிரிவான புள்ளியியல் கணிப்புகளைப் பற்றி ஆராய்கிறது. ஊடகக் கணிப்புகள் அனைத்தும் அப்புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டே வெளியாகிறது.

கணிப்பு ஏன் வருகிறதென்றால் அதன் அடிப்படை உளவியலிலிருந்து வருகிறது. மனித மனதின் எதிர்பார்ப்பே கணிப்பின் பிரதானம். கனவுகள் ஒவ்வொன்றும் கணிப்பின் விளைவுகள்தான். எதிர்ப்பார்ப்புகள் இல்லா விட்டால் அங்கே கணிப்புகளுக்கு வேலை இல்லை.

அன்றாட வாழ்வில் சகுனம் பார்ப்பது தொடங்கி சோதிடம் பார்ப்பதில் தொடர்ந்து சாமியாடிகள் வரை மனிதர்கள் போய் நிற்பதற்கான காரணம் கணிப்பது கணித்த படியே நடக்க வேண்டுமே என்ற ஆவல்தான்.

பங்குச்சந்தை, குதிரைப் பந்தயம், சூதாட்டம் என்று பெரியவர்கள் தொடங்கி குழந்தைகள் ஒத்தையா? ரெட்டையா? போட்டு விளையாடும் விளையாட்டு வரை கணிப்புகள் இல்லாத மனிதரைப் பார்ப்பது அபூர்வம். முற்றும் துறந்தோர்க்கும் கடவுளின் காட்சி கிட்டுமா? கிட்டாதா? என்ற கணிப்பு ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

தேர்வு வந்து விட்டால் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமா? என்பதில் தொடங்கி எவ்வளவு மதிப்பெண்கள் வரை வரும் என்று மாணவர்கள் கணிக்கத் தொடங்கி விடுகிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளின் கணிப்பு மெய்ப்பிக்க வேண்டுமே என்று அதற்கான காரணங்களைத் தேடி அலையத் தொடங்கி விடுகிறார்கள்.

தேர்தல் என்றால் தேர்தலுக்கு முந்தைய கணிப்பு, தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்று இதழ்களும் அலைவரிசைகளும் கணிக்கும் கணிப்புகளுக்கு அளவு இருக்காது. இது தவிர கட்சிக்காரர்களுக்கு தனி கணிப்பு இருக்கும். அரசியல் நோக்கர்களுக்குத் தனியான கணிப்பு இருக்கும். பொது மக்களுக்கு தனியான கணிப்பு இருக்கும். இந்தக் காலத்துக் குழந்தைகள் உட்பட எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்று கணிப்பதில் மிகவும் ஆவலாதிகளாக இருக்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளிவர இருக்கும் நிலையில் நாளைக்குள் முடிவை முன்கூட்டி கணித்து விட முடியாதா என்ற அபரிதமான அசாத்திய முயற்சிகளின் வெளிப்பாட்டை ஒவ்வொருவர் முகத்திலும் காண முடிகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை தங்கள் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்ன ஒரு கட்சிக்காரரை நேற்று பார்த்த போது அவர் என்னைப் பார்த்துக் கேட்டார், “தம்பி! எந்தக் கட்சி வரும்ன்னு நினைக்குறீங்க?” என்று. தேர்தலுக்கு முன்பு வரை தங்கள் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாகச் சொன்ன ஒருவர் என்னைப் பார்த்து இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும்? நான் சிரிக்காமல் இருக்க கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்து கொண்டதும், “எங்கக் கட்சிதான் வரும் தம்பீ! இருந்தாலும் உங்களைப் போலப் பொதுவான ஆளுங்க நெனைப்பு எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு நெனைக்கிறேன். வேறொண்ணும் விசaமில்ல!” என்று சமாளிக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் கணிப்பின் குழப்ப ரேகைகள் தாண்டவமாடுவதைக் கணிக்க முடிந்தது.

யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்குப் பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வுக்கும் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வுக்கும் கணிப்புகள் சரிபாதியாகச் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறதே தவிர பிற கட்சிகளான அ.ம.மு.க., நா.த.க., ம.நீ.மை. போன்றவற்றிற்கு அவ்வாய்ப்புகள் இல்லை என்பதைப் பொதுவாக அனைத்து ஊடகங்களும், கணிப்புக் கில்லாடிகளும் கணிக்கின்றனர்.

தேர்தல் கணிப்பைப் பொருத்த வரையில் போட்டி என்பது களத்தில் உள்ளது போலவே தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்குத்தான் என்பதைத் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தையும் ஒப்புக் கொள்ளும். இந்த இடத்தில் குழந்தைகளின் விளையாட்டு வழி கணிப்பது என்றால் ஒத்தையா? ரெட்டையா? முறையில் கணிக்கலாம். இரண்டுக்கும் சம அளவு வாய்ப்புகள் இருக்கின்றன. புள்ளியியல் வழி நோக்கினால் ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால் தலை விழுவதற்கும் பூ விழுவதற்கும் ஐம்பது சதவீத வாய்ப்புகள் இருப்பது போலவே இரு கட்சிகளுக்கும் ஐம்பது சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன.  நிச்சயம் சுண்டி விடப் பட்ட நாணயம் செங்குத்தாக நிற்காது என்றால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பில்லை என்றும் கொள்ளலாம்.

அ.தி.மு.க.வின் பத்தாண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு, நீட் தேர்வின் நுழைவு, முக்கிய கேந்திரங்கள் வரை நிகழ்ந்த சோதனைகள், ஊழலுக்காகச் சிறை சென்ற கட்சித் தலைவர்கள் ஆகிய காரணிகள் அக்கட்சிக்குப் பின்னடைவைத் தரலாம்.

ஆட்சியை இழந்த பத்தாண்டு காலத்தில் தி.மு.க. ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக தனது பங்கை ஆற்றியுள்ளது. எனினும் அக்கட்சி தனது மிகப் பெரிய தலைமையை கலைஞர் வடிவில் இழந்திருக்கிறது. இதே போன்ற இழப்பு அ.தி.மு.க.வுக்கும் அம்மாவின் இழப்பின் வடிவில் நேர்ந்திருக்கிறது. எனினும் இரு கட்சிகளும் தங்களது அடுத்தடுத்த தலைமை மூலம் அந்த இழப்பைச் சரிகட்ட முயன்றிருக்கின்றன என்பதைத் தேர்தல் பிரச்சாரம் காட்டியிருக்கிறது.

ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இரு கட்சிகளும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தொகை தரும் திட்டத்தை ம.நீ.மைய கமலஹாசனிடமிருந்து உருவி வெளியிட்டிருக்கின்றன. இதன் சாத்தியத்தையும் தாக்கத்தையும் அறிந்து கொள்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகள் மட்டுமின்றி உலகத்திலுள்ள அனைத்துக் காட்சிகளும் தமிழகத்தின் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

பிரச்சாரத்தில் பொதுவெளிப் பிரச்சாரத்தில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைக் களமாடிக் காட்டியிருக்கின்றன. ஊடக வழியிலான பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளும் எட்டிய நிலை அபரிமிதான வேறு வகைமையிலானது. இரு கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரச்சாரத்தில் ஊடகப் பிம்பத்தை நிலைநாட்டும் மிகப் பெரிய பெருநிறுவன மூளைகளின் பின்புலம் இருந்தது. இது கலைஞரும் அம்மாவும் இருந்து உருவாக்கி வளர்த்த பிரச்சார முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது. கலைஞரின் தனித்துவமும் அம்மாவின் தனித்துவம் இணைந்த பிரச்சார முறைகளுக்கு மாறாக பெருநிறுவன மூளைகளின் பிரச்சார முறைகளுக்கான தடத்தை இந்தத் தேர்தல் இரு கட்சிகளுக்கும் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

வெளியாகியிருக்கும் பெரும்பாலான ஊடகக் கணிப்புகளை ஒட்டிப் பார்க்கையில் தி.மு.க.(+) 150 க்கும் அதிகமான இடங்களைப் பெறலாம் என்றும் அ.தி.மு.க. (+) 50 க்கும் அதிகமான இடங்களைப் பெறலாம் என்றும் அ.ம.மு.க., நா.த.க., ம.நீ.மை. உள்ளிட்ட கட்சிகள் தலா பத்து அல்லது பத்துக்கும் குறைவான இடங்களைப் பெறலாம் என்ற கணிப்பு நிலவுகிறது.

நான் பெரிதும் நம்பும் எஸ்.கே. பல நேரங்களில் குந்தாங்கூறாகவோ அல்லது மிகச் சரியாகவோ கணிப்புகளைக் கணித்து விடுவதில் வல்லவர். அவரது கணிப்பின்படி தி.மு.க. மொத்தமுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெல்லும் என்கிறார். ஒருவேளை அதில் தொகுதிகள் குறைந்தாலும் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என்கிறார். என்ன நடக்கும் என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்ன செய்வது? எல்லாவற்றுக்கும் காலம் தரப் போகும் கணிப்புதான் நிரந்தரமானது. ஆக்கப் பொறுத்த பின் ஆறப் பொறுப்பதும் அவசியமாகத்தான் இருக்கிறது!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...