ஒரு
செயலராய்ச்சி கருத்தரங்கம்
பேராசிரியர் பெருவிழியம்மை சொன்ன கருத்துகளில் எனக்குள் நிறைய
கருத்து வேறுபாடுகள் இருந்தன. முதன்மையாக அவர் சொன்னார் பிள்ளைகளுக்குக் கேள்விக் கேட்கும்
திறன் குறைந்து விட்டது என்று. இதை எந்த விதத்தில் ஏற்றுக் கொள்வது? உண்மையில் பிள்ளைகள்
நிறைய கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்குத்தான் பதில் சொல்லும்
திறன் குறைந்து விட்டது.
பேரா. பெருவிழியம்மை கேள்விக் கேட்கும் திறனைக் காட்சி ஊடகங்கள்
மூலம் அதிகம் செய்ய முடியும் என்ற ஒரு கருதுகோளை முன் வைத்து தன் ஆய்வைத் தொடர்ந்திருப்பதாகச்
சொன்னார். இது ஒரு வகை கற்பனை ஊகமாகவும் இருக்கலாம். காட்சி ஊடகங்கள் அதிகமாகிப் போன
பின் பிள்ளைகளின் பேசும் திறன் குறைந்துப் போய் விட்டது. அவர்கள் எந்நேரமும் தொலைக்காட்சிப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், கணிப்பொறியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், அலைபேசி
செயலிகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் பேச நெருங்கினால் எரிச்சல் படுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஜந்து ஒன்றைப் பார்ப்பதைப் போல அப்போது பேச விழைவோரை
மிக விநோதமாகப் பார்க்கிறார்கள்.
கள நிலவரம் தெரியாமல் அதிக ஆய்வுகள் செய்வதில் உலகளவில் தமிழகம்
முதலிடம் பெறும் என்று நினைக்கிறேன். யார் ஆய்வு செய்யலாம் என்று பார்த்தால் ஆய்வு
குறித்து எதுவும் தெரியாதவர்கள் ஆய்வு செய்யலாம் என்ற நிலைமையும் அநேகமாக இங்குதான்
மிக அதிக அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக இந்த ஆய்வாளர்கள் ஆய்வுத் தலைப்புக்கும்
அது குறித்த கருத்துருக்களுக்கும் பொருத்தமில்லாமல் பேசுகிறார்கள். பேச ஆரம்பித்து
எதை விளக்கினாலும் அது ஆய்வுக்குரிய விளக்கம் என்று நினைத்து மிக கம்பீரமாக வேறு பேசுகிறார்கள்.
ஆய்வு செய்பவர்களுக்கு எதற்கு அத்தகைய உணர்ச்சிகரமான பேச்சு என்று பல நேரங்களில் நினைப்பதுண்டு.
பேச்சாளர்களாக இருக்க வேண்டிய பலர் ஆய்வாளர்களாக இருக்கும் நிலையின் விளைவு இது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பாக எதை ஆய்வு செய்து பேசினார்களோ அதையே
இப்போதும் ஆய்வு செய்து பேசும் நிலைமையும் இங்கு இருக்கிறது. ஓர் ஆய்வாளர் தன் வாழ்நாளில்
ஒரே ஒரு ஆய்வு செய்தால் போதுமானது. அந்த ஆய்வை அப்படியே வைத்துக் கொண்டு வார்த்தைகளை
மாற்றி மாற்றிப் போட்டால் போதுமானது, புதிய ஆய்வு உண்டாகி விடுகிறது. சான்றாக உபயோகப்படுகிறது
என்ற வார்த்தையைப் பயன்படுகிறது என்று மாற்றி விட்டால் புதியதோர் ஆய்வு தயார். பயன்படுகிறது
என்ற வார்த்தையை துணை நிற்கிறது என்று மாற்றி விட்டால் மற்றுமோர் ஆய்வு தயார். இப்படிப்பட்ட
ஆய்வு கருத்தரங்களுக்கு அழைப்புக் கொடுத்து விட்டு கேள்வி கேட்கவில்லை என்று கோபித்துக்
கொள்கிறார்கள். கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருப்பதா என்ன? என்னுடைய
அழுத்தமான ஒரே கேள்வி, இது போன்று அழைத்துக் கொடுமைப்படுத்துவதை எப்போது நிறுத்தப்
போகிறீர்கள்? மூன்று மணி நேரம், நான்கு மணி நேரம் என்று சிறுநீரை அடக்கிக் கொண்டு உட்கார்ந்து
கொண்டிருப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது தெரியுமா?
உண்மையான
கள நிலவரத்தை ஆராய விழையும் ஒருவருக்குத் தற்போதுள்ள நிலையில் ஏற்ற ஆய்வுத்தலைப்பு
என்னவென்றால் நம்முடைய பொதுக் கழிவறைகள் ஏன் தூய்மையற்று இருக்கின்றன என்பதுதாக இருக்கலாம்.
*****
No comments:
Post a Comment