9 May 2021

அலைபேசியில் அலையும் மனித பிம்பங்கள்

அலைபேசியில் அலையும் மனித பிம்பங்கள்

            பொத்தான் கைபேசி எனப்படும் கீபேட் செல்போனிலிருந்து தொடுதிரை கைபேசி எனப்படும் டச் செல்போனுக்கு மாறும் காலத்தில் பலருக்கும் பலவித தயக்கம் இருந்தது. பொத்தான் கைபேசியைப் போல தொடுதிரை கைபேசி திறன்மிகுந்ததாக இருக்காது என்பது தயக்கத்துக்கு முதன்மையான காரணம். வெகு சீக்கிரமே தொடுதிரை கைபேசியின் தொடுதிறன் செயலிழந்து விடும் என்ற அச்சம் பலருக்கும் இருந்தது. அந்த அச்சம் எவ்வளவு நியாயமானது என்பதை அப்போது நான் செல்கான் நிறுவன கைபேசியை வாங்கி அனுபவப்பட்டேன். இப்போது நிலைமை எவ்வளவு மாறி விட்டது. பொத்தான் கைபேசியை வைத்திருப்போரை அபூர்வமாகத்தான் பார்க்க முடிகிறது.

            இப்போதும் பொத்தான் கைபேசிக்கு இருக்கும் மதிப்பு ஒன்றும் அப்படி குறைந்து விடவில்லை. நான்காயிரம், ஐயாயிரத்துக்குக் கிடைக்கும் தொடுதிரை கைபேசிக்கு இணையாக பொத்தான் கைபேசிகளும் கிடைக்கின்றன. அடிக்கடி மின்கலனில் மின்சாரம் குறைந்து போகும் பிரச்சனை பொத்தான் கைபேசிகளில் இல்லை. ஒரு முறை மின்சாரம் ஏற்றிக் கொண்டால் ஒரு வார காலம் வரை தாக்குப்பிடிக்கிறது. தொடுதிரை கைபேசியை நாளுக்கு நாள் மின்சாரம் ஏற்றி உயிர்ப்பிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒருநாள் அளவுக்குத் தாக்குப்பிடிக்காத அளவுக்கு தொடுதிரை கைபேசியைப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். இதற்காகவே பலர் கையோடு தொடுதிரை கைபேசி அளவுக்கு மின்கல வங்கி எனப்படும் பவர் பேங்கோடு அலைவதைப் பார்க்க முடிகிறது.

            அழைப்பும் குறுஞ்செய்தியும் போதுமென்றால் பொத்தான் கைபேசியே போதும். கையடக்கமாகக் கையில் பையில் பதுங்கிக் கொள்வதோடு அடிக்கடி மின்சாரம் ஏற்று என்று எந்தத் தொந்தரவையும் செய்யாது. இன்னொரு மூளையாக, தகவல் பெட்டகமாக, தனி உதவியாளராக கைபேசியை மாற்றிக் கொண்டவர்களுக்குத் தொடுதிரை கைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது போன்ற பலரும் பயணங்களில் தாக்குப் பிடிக்கும் அலைபேசியே அலைபேசியாக இருப்பதாகவும் மற்றவையெல்லாம் கொலைபேசியாக இருப்பதாகவும் புலம்புவதைப் பார்க்க முடிகிறது. தொடர்வண்டிப் பயணமோ, பேருந்து பயணமோ முதலில் மின்சாரம் ஏற்றும் பொத்தானைத் தேடி அவர்கள் சதா நேரமும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அநேக நேரங்களில் அவர்களால் மூச்சு விடாமல் கூட இருந்து விட முடியும் போலிருக்கிறது. ஆனால் அலைபேசியில் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாமல் போய் விடுகிறது. தங்கள் உயிரைக் கொடுத்தாலாவது அலைபேசிக்கு மின்சாரம் ஏற்றினால்தான் அவர்களுக்குப் போன நிம்மதி திரும்ப வந்ததைப் போல இருக்கிறது. இது போன்ற நிலையை அடைந்து விட்டவர்கள் குடும்பத்தோடு இருக்கும் நேரத்தை விடவும், நண்பர்கள் மற்றும் சுற்றத்தோடு இருக்கும் நேரத்தை விடவும், செல்லப் பிராணிகளோடு இருக்கும் நேரத்தை விடவும் அலைபேசியோடு இருக்கும் நேரம் அதிகம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கிட்டத்தட்ட அலைபேசியில் அலையும் மனித பிம்பங்களாக அவர்கள் மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.

            இப்போது இதைப் படிக்கும் உங்களுக்கு அலைபேசியில் அலையும் மனித பிம்பமாக நான் இருக்கிறேனா, இல்லையா என்ற ஐயம் எழுந்தால் அதை அறிந்த கொள்வதற்கு ஓர் எளிய சோதனை இருக்கிறது. ஒரு பத்து நிமிடம் அலைபேசி இல்லாமல் உங்களால் பதற்றமில்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். இருக்க முடிகிறது என்றால் ஓர் அரை மணி நேரத்துக்கு அலைபேசி இல்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். அடுத்து ஒரு மணி நேரத்துக்கு என ஆரம்பித்து ஒரு நாள் வரை அலைபேசி இல்லாமல் இருக்க முடிகிறதா என்று பாருங்கள். ஒரு நாள் வரை உங்களால் அலைபேசி இல்லாமல் இயல்பாக இருக்க முடிகிறது என்றால் நீங்கள் அலைபேசியில் அலையும் மனித பிம்பம் இல்லை எனலாம். பத்து நிமிடத்துக்குக் கூட அலைபேசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையில் நீங்கள் இருந்தால் நீங்கள் அலைபேசியில் அலையும் மனித பிம்பம் மட்டுமல்ல, அலைபேசியில் உறைந்து விட்ட மனித பிம்பம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

            அலைபேசியில் அலையும் மனித பிம்பங்களாக மாறி விட்டவர்கள் அதிலிருந்து மீள நினைத்தால் உடனடியாக தொடுதிரை கைபேசியிலிருந்து பொத்தான் கைபேசிக்கு மாறிக் கொள்ளலாம். பொத்தான் கைபேசியில் இருக்கும் நன்மை அதுதான். இந்த நன்மையைக் கருத்தில் கொண்டு பொத்தான் கைபேசியிலிருந்து தொடுதிரை கைபேசிக்கு ஒட்டுமொத்த உலகமும் திடீரென்று மாறியதைப் போல தொடுதிரை கைபேசியிலிருந்து பொத்தான் கைபேசிக்கும் உலகம் ஒருநாள் திடீரென்று மாறும் என்று நினைக்கிறேன்.

            தொடுதிரை கைபேசியை வைத்துக் கொண்டே பிம்ப மனிதர்களாக மாறுவதிலிருந்து மீட்சி கிட்டாதா என்றால் அதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. தன்னைப் பயன்படுத்தும் மனிதர் பிம்ப மனிதராக மாறி விட்டதை அறிந்து அலைபேசியே தானாக செயலிழந்து விடும் ஒரு செயலியைக் (ஆப்) கண்டுபிடித்து வெளியிடலாம். அதில் இருக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் மனிதர்கள் அந்தச் செயலியை விரும்பிப் பதிவிறக்கம் செய்வார்களா என்பதுதான்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...